Skip to content
Post Views: 89
அத்தியாயம் 07
அடுத்த நாள் காலை, காக்கைகளும் குருவிகளும் கானம் இசைக்க, இலையில் விழுந்த பனித்துளி உருண்டு புல்லின் நுனியில் விழுந்து உறவாட, குளிர் வாடைக்காற்று மூங்கிலிடையே உரசி செல்ல அவற்றின் முனகல்களும், முத்துக்கள் தெரிய புன்னகைக்கும் குமரியின் சிரிப்பொலி போல் அருவியின் தாளமும், அனைவர் காதையும் சேர்ந்து பூபாளம் இசைக்க அழகாக இதமாக விடிந்தது .
Advertisement
துர்க்கா எப்போதும் போல் நேரத்திற்கு எழுந்து, தோட்டத்தில் பூக்களை பறித்து, சிரத்தையாக பூ மாலை கட்டி, கோயில் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க,
சாவகாசமாக எழுந்த சகுந்தலா, கோயிலுக்காக மட்டுமே தான் அணியும் சந்தன நிற புடவையை அணிந்து கொண்டு வெளியே வந்தார்.
Advertisement
Advertisement
துர்க்காவும் எப்போதும் போல் காவி நிற புடவையுடன் முடியை தளர பின்னலிட்டு நெற்றியில் விபூதியுடன் உற்றுப் பார்த்தால் தெரியக்கூடிய கருப்பு பொட்டு வைத்து வந்தாள்.
இவர்களுடன் தொற்றிக்கொண்டு போக வேண்டுமே என்று, அவசரத்திற்கு கிடைத்த சிவப்பு வண்ண புடவையை சுற்றிக்கொண்டு வேகமாக வந்தாள் நித்தியா.
Advertisement
“இருங்க.. இருங்க.. நானும் உங்க கூட கோயிலுக்கு வாரேன்…” என்று சொல்ல
“என்ன புதுசா?…” என்று சகுந்தலா கேட்க
“புதுசாலாம் ஒன்னும் இல்ல சித்தி.. எனக்கும் உங்கள பாத்து பக்தி ஓவர் ஃப்ளோ ஆயிடுச்சு அதான்…” என்று வாய்க்கு வந்ததை சொல்ல,
இவர்களை கோயில் அழைத்துச் செல்லும் சாக்கில் துர்க்காவை கண்களிலாயிலேயே துயிலுரிக்கலாம் என்று வந்த அகிலன் கண்கள், அங்கு பளிச்சென்று சிகப்பு வண்ணப் புடவையில், இளமையின் வனப்புடன் பொலிவாக நின்ற நித்தியாவில் ஆழமாக பதிந்தது.
தங்கை முறையான துர்க்காவையே விட்டு வைக்காதவன், தம்பி மனைவியையா கண்ணியமாக பார்க்க போகின்றான்.
ஆனால் இதுவரை நித்தியாவை நெருங்க நினைத்ததில்லை, ஏனென்றால் துர்க்கா போன்று இவள் புள்ள பூச்சி இல்லையே. கொஞ்சம் தவறினால் கண்டிப்பாக அவன் இடுப்பு எலும்பை உடைத்து விடுவாள் என்று தெரியும்.
ஆனால் ஒருநாள் சரி ருசி பார்த்து விடத்தான் வேறு வழி தேடிக் கொண்டிருக்கின்றான்.
“கிளம்பலாமா அத்தை?…” என்று அகிலன் கேட்க “போலாம் அகி…” என்ற சகுந்தலா மிடுக்காக முன் சென்று காரின் முன் சீட்டில் ஏறிக்கொள்ள,
பின் சீட்டில் நித்தியா முதலில் எறிய பின், துர்க்கா ஏறவும், வெளியே தெரிவது போல் இருந்த அவள் சேலை முந்தானையை எடுத்து மடியில் வைப்பது போல் அவள் தொடையில் கையை வைக்க, பதறி நித்தியாவுடன் ஒட்டிக்கொண்டாள் துர்க்கா.
“என்னாச்சு…?” என்று நிதித்யா கேட்க, அவளோ அகிலனை பார்க்க
“அது ஒன்னும் இல்ல.. முந்தானைய எடுத்து கொடுத்தேன்…” என்று அசடு வழிந்தவன், முன் வந்து வண்டியை எடுத்தான்.
கோயில் வரும் வரை அவன் பார்வை பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்களின் மீது தான் லஞ்சை இன்றி மேய்ந்தது.
ஒரு வழியாக கோயில் வந்து, பிரகாரம் சுற்றி விட்டு, பிரத்தியோக பூஜைக்காக சன்னிதானம் முன்பு அமர்ந்திருந்தனர். தன் திட்டத்திற்கு வாகாக துர்க்காவின் அருகில் அமர்ந்து கொண்டாள் நித்தியா.
‘அம்மா தாயே! போட்ட திட்டம் நல்ல முறையில நடந்து முடியனும்.. நீ தான் மாரியம்மா துணை இருக்கணும்…’ என்று அம்மனை கூட கூட்டு சதியில் இணைத்துக் கொண்டாள் மானசீகமாக.
*****
இங்கு பரணி வீட்டில் நேரமே எழுந்த அஞ்சனா வீட்டு வேலைகளை முடித்து, காஃபி போட்டு அண்ணனை எழுப்பினாள்.
பரணியும் கண்ணை கசக்கி விட்டு எழுந்தவன் “குட்மார்னிங் அஞ்சு.. நீயே காஃபி போட்டியா?.. என்ன எழுப்பி இருக்கலாமே…” என்று கேட்க
“ஏன் நான் நல்லாவே காஃபி போடுவேன்.. எல்லா வேலையும் செய்ய தெரியும் என்ற திமிர்ல என்ன வேலைய கூடாதுன்னு சொல்லாதீங்க…” என்று காலையிலேயே அண்ணனை வம்புக்கு இழுத்தாள் அஞ்சனா.
“அம்மா தாயே எனக்கு ஒன்னும் திமிரு இல்ல.. நீயே காலை சாப்பாட்டையும் செஞ்சிடு.. ஒருத்தங்க ஆக்கிப்போட்டு உட்கார்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு…” என்று காஃபியை உறிஞ்சியபடி அவன் சொல்ல,
அஞ்சனா கண்கள் கலங்கும் போல் இருந்தது. “இந்த அளவுக்கு ஏங்குங்குறீங்க.. ஒரு கல்யாணத்த பண்ணுனா என்ன…?” என்றாள் ஆற்றாமையுடன் .
“சரியா போச்சுடா.. ஒரு பேச்சுக்கு சொன்னேன், உடனே ஆரம்பிக்காத.. ஏன் நீ எனக்கு ஆக்கி போட்டா ஆகாதா.. அதுக்குன்னு பொண்டாட்டி தான் வரணுமா?…” என்று கேட்க
“எத்தனை நாளைக்கு.. ஆடிக்கும் அமாவாசைக்கும் தானே என்னால வர முடியும்…” என்று அவள் நொடித்துக் கொள்ள
“எனக்கு அதுவே போதும்.. சும்மா காலையிலேயே முகத்த தூக்காம, போ, போய் சமையல் வேலைய பாரு.. கோயிலுக்கு போகணும்னு சொன்னல…” என்று கேட்க
“ஹா, ஆமா அண்ணா.. கண்டிப்பா போகணும் குளிச்சிட்டு ரெடியா இருங்க…” என்று சொன்னவள் மளமளவென சமையல் வேலையை முடித்தாள்.
பரணியும் குளித்து முடித்து வந்தவன், கோயில் செல்ல வேண்டும் என்பதால் சிகப்பு வண்ணத்தில் வெள்ளை கோடு போட்ட கட்டம் போட்ட சட்டையும், வெள்ளை வேஷ்டியும் கட்டிக்கொண்டு தயாராகி வரவும். அஞ்சனாவும் நீல நிற புடவையில் கோயிலுக்கு செல்ல தயார் நிலையில் இருந்தாள்.
“கோயிலுக்கு போயிட்டு வந்தே சாப்பிடுவோம் வா…” என்று தங்கையை அழைக்க
‘கோயில் போனா எப்ப திரும்பி வர முடியுமோ…’ என்று மனதில் நினைத்தவள் “இல்ல ண்ணா வேண்டுதல் நிறைய இருக்கு.. பூஜை எல்லாம் முடிஞ்சு வர நேரம் ஆகும் சாப்பிட்டே போகலாம்…” என்றவள் அண்ணனுக்கும் சாப்பாடு பரிமாறி,
தான் செய்யப்போகும் காரியத்திற்கு தெம்பு வேண்டுமே என்று, வயிறு நிரம்ப உண்டு முடித்து, பரணியுடன் கோயில் சென்றாள்.
கோயிலுக்குள் வந்ததும் பரணியை அழைத்துக்கொண்டு அஞ்சனா முதலில் சென்றது தல விருட்சமான வன்னி மரத்திற்கு தான். அதில் தாலியும், தொட்டிலும், சில காகிதமும் என அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப கட்டப்பட்டிருந்தது.
அதில் சில மாதங்களுக்கு முன்பு பரணி தன் கையினால் பார்வை குறைபாடு உள்ள, தன் இரண்டாவது உடன் பிறவா தங்கையின் திருமணம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று கட்டிய தாலிக்கயிறு இருக்க,
அஞ்சனா “அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க என்ன வேண்டிக்கிட்டு இதை கட்டுனீங்களோ அது நடந்துருச்சு.. நீங்களே அவளுக்கான வரன தேடி கல்யாணத்தையும் நல்லபடியா நடத்தி வச்சிட்டீங்க.. இப்போ இந்த தாலிய அவுத்து கோயில் உண்டியல்ல போடுங்க…” என்று சொல்ல
திருமண வயதில் இருந்த தர்ஷனாவின் பார்வை குறைபாட்டால், எந்த வரனும் அமையாமல் மன கலக்கத்தில் இருந்த சித்தியையும் தங்கையையும் அப்போதைக்கு தேற்ற அவன் செய்த செயல் அது.
“ஓ.. இதுக்கு தான் கூட்டி வந்தியா…” என்றவன் தன் ஊன்றுகோலுடன் சற்று தடுமாறி அந்த தாலியை கழட்டி எடுத்தான்.
அதை தன் கையில் வாங்கியவள், தன் பஸ்ஸிலிருந்து தங்கத் தாலி, மணிகள் என்பனவற்றை எடுத்தவள், அந்த மஞ்சள் கயிற்றில் இருந்த மஞ்சள் கிழங்கை கழட்டி விட்டு அவள் கொண்டு வந்த தாலியையும் மணியையும் கோர்த்தாள்.
“என்ன அஞ்சு இது…!”என்று பரணி கேட்க
“இது நான் வேண்டிக்கிட்டேன் ண்ணா.. இதே தாலியில தங்கம் சேர்த்து உண்டியல்ல போடுறதா…” என்றவள் அவன் இடது கை ஊன்றுகோலை பிடித்து இருக்க, வலது உள்ளங்கையில் குங்குமத்தை அள்ளி வைத்தவள், அதே கையில் நான்கு விரல்களிலும் தாலியை தொங்கப் போட்டாள்.
“என்ன அஞ்சு இது!.. இப்படி இருந்தா எப்படி நான் உண்டியல்ல தாலிய போட…?” என்று பரணி கேட்க
“அண்ணா இப்படியே ஒரு முறை பிரகாரத்த சுத்தி வந்து உண்டியல்ல தாலிய போடலாம்.. போடும்போது நான் குங்குமத்த வாங்கிக்கிறேன்.. அதை தொட்டு பொட்டு வச்சு நீங்க உண்டியல்ல தாலிய போட்டா சரி…” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்து சன்னிதானத்திற்கு வந்தாள்.
பரணியை விட்டு சற்று முன் வந்த அஞ்சனா நித்யாவிற்கு கண்ணை காட்ட,
அவளும் பரணி துர்க்காவை கடக்கும் சமயம் அவனின் ஊன்றுகோலை காலை நீட்டி மடக்குவது போல் தட்டி விட,
திடீரென நடந்த விபத்தால் பிடிமானம் இன்றி தடுமாறி விழப்போன பரணி, தன் வலது கரத்தை துர்க்காவின் தலையில் ஊன்ற,
அதே நேரம் கோயில் மணி அடிக்க, அவன் வலது கையில் இருந்த குங்குமத்தோடு தாலியும் அவள் தலைவலியாக கழுத்தில் இறங்கியது. நொடி நேரத்தில் நடந்து முடிந்திருந்தது அந்த அழகிய நிகழ்வு.
துர்க்காவின் தலையில் ஒரு கையும் தோளில் மறுகையும் என்று ஊன்றி விழாமல் இருந்தவனை, ஓடி வந்து அஞ்சனா தாங்கிக் கொள்ள,
துர்க்காவின் தலையில் குங்குமமும் கழுத்தில் தாலியுமாக அவள் அதிர்ச்சியில் உறைந்து இருக்க, அதை பார்த்த சகுந்தலா கொதித்து எழுந்து விட்டார்.
தங்கையை பிடித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றவனுக்கு காலை ஊன்றியதில் சற்று வலித்தது. ஆனால் தன் கையினால் துர்க்காவின் கழுத்தில் விழுந்த தாலியை பார்த்தவன் அதிர்ந்து அப்படியே நின்றான்.
“ஐயோ! ஐயோ! ஐயோ!.. இது எத்தன நாள் திட்டம் டி ஓடுகாலி…” என்று சகுந்தலா முதலில் துர்க்காவின் மீதுதான் பாய்ந்தார்.
நித்தியாவோ “என்ன சித்தி மடத்தனமாக பேசுறீங்க.. இவர்தானே சிவனேனு அம்மன வணங்கிட்டு இருந்தவ கழுத்துல தாலிய போட்டார்…” என்று சத்தம் போட
“நாங்க என்னமோ வேணும்னு பண்ண மாதிரி பேசுறீங்க.. தான் பாட்டுல நடந்து வந்தவர் வாக்கிங் ஸ்டிக்கர் தட்டி விட்டது நீதாமா…” என அஞ்சனா எகிற
“ரொம்ப நேரம் கால மடக்கி உட்கார முடியல.. கால கொஞ்சம் நீட்டி மடக்கலாம்னு பார்த்தேன்.. இவர் வந்தத நான் கவனிக்கவே இல்லையே…” என்று அவளும் பதிலுக்கு நிற்க
“அதைத்தான் நானும் சொல்றேன்.. யாருமே எதிர்பார்க்காம நடந்த ஒரு நிகழ்வுக்கு எதுக்கு எகிறிக்கிட்டு வாரிங்க…” என்று அஞ்சனா சொல்ல
இந்த முறை சகுந்தலா “எதிர்பார்க்காம நடந்ததா.. நடக்க முடியாத மொடவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான்னு வேணும்னே என் மருமக கழுத்துல தாலிய போட்டு இருக்கான்.. எல்லாமே திட்டம் போட்டு பண்ணிட்டு சப்ப கட்டு கட்டுவீங்களா?…” என்று வார்த்தையை வீச
“இங்க பாருங்க மொடவன் கிடவன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்.. உங்க கண்ணு முன்னாடி நல்லா தானே நிற்கிறாரு.. என் அண்ணன் மட்டும் சரின்னு சொன்னா ஆயிரம் பொண்ண என்னால கொண்டு வந்து நிறுத்த முடியும்…” என்று அஞ்சனா கோபத்தின் உச்சியில் கத்தினாள்.
“ஆஹா.. ஆயிரம் பொண்ணு நீ பார்த்தாலும் பஞ்சாயத்து தலைவர் வீட்டு ஒத்த பொண்ணுக்கு ஈடாகுமா..அதான் தடுமாறும் போது சரியா இவ கழுத்துல தாலிய போட்டுட்டான்.. இதுதான் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுறது…” சகுந்தலா விடுவதாக இல்லை.
“இங்க பாருங்க திரும்பத் திரும்ப அதே வார்த்தைய சொல்லாதீங்க.. வார்த்தைய பார்த்து பேசுங்க…” என்று அஞ்சனா எச்சரிக்க,
“இந்தாம்மா உன்கிட்ட என்ன பேச்சு.. இறைவனுக்கு தொண்டு செய்வது தான் வாழ்க்கைனு இருந்தவ கழுத்துல தாலிய போட்டது மா பாவம்.. துர்க்கா இன்னும் ஏன் உட்கார்ந்து இருக்க.. அத அறுத்து வீசிட்டு கிளம்பு வீட்டுக்கு போக…” என்று அமர்ந்திருந்தவளின் புஜத்தை பற்றி தூக்க,
அதுவரை என்ன நடந்தது, நடக்கின்றது என்று எதுவும் புரியாமல் சமைந்து இருந்தவள் விழிகள் தட்டி முழித்தாள்.
அஞ்சனா தான் நிலைமை கை மீறி போய்விடுமோ என்று நித்யாவை ஒரு பார்வை பார்த்தவள், “பாவமா! என்ன பாவம்?.. தீட்சை எடுத்து துறவறம் பூண்டவ கழுத்துலயோ.. இல்ல இன்னொருத்தன் பொண்டாட்டி கழுத்துலயோ ஒன்னும் தாலிய போடலையே.. அவளும் கல்யாணம் ஆகாதவ தானே…” என்று அஞ்சனா உண்மையை கூற
சகுந்தலா ஏதோ கூற வர, அவரைப் பேச விடாமல் “ஓஹோ! இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?…” என்று நித்தியா கேட்க
“இங்க நடந்த இந்த கல்யாணம் விதியால அம்மன் சன்னிதானத்தில அவ அருளோட நடந்தது.. இதுல யாரையுமே குத்தம் சொல்ல முடியாது…” என்று அஞ்சனா சொல்ல
கல்யாணம் என்றதும் இவ்வளவு நேரம் என்ன நடக்கின்றது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்த பரணியின் கண்கள் துர்க்காவில் படிந்தது.
அவளின் ஒற்றை கை தாலியை இறுக பற்றி இருக்க, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளின் அந்தக் கோலம் கண்டு உடைந்தே போனான் பரணி.
அவள் தாலியை இறுக பற்றி இருந்த விதம் அதை யாருக்கும் காட்ட விரும்பவில்லை என்பதாக அவனுக்கு தோன்ற,
ஆனால் அவளோ ஜென்ம சாபல்யம் பெற்றது போல் கழுத்தில் விழுந்த தாலியை, சகுந்தலா அறுத்து வீச சொல்லவும் யாரேனும் அறுத்து விடுவார்களோ என்று பாதுகாக்க இறுக பற்றி இருந்தாள்.
மேலும் ஏதோ பேச வாய் எடுத்த அஞ்சனாவை “அஞ்சு!…” என்று அழைத்து எதுவும் பேச வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தவன்,
“இது.. க்கும்.. இது தெரியாம நடந்த ஒரு விபத்து.. நானே எதிர்பார்க்கல.. என்ன மன்னிச்சிடுங்க.. உங்களுக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ அத பண்ணுங்க…” என்று கையெடுத்து கும்பிட்டான் அனைவர் முன்பும் .
இப்போது அவனை விழி உயர்த்தி ஒரு பார்வை பார்த்தாள் துர்க்கா. அப்போது சகுந்தலா ஆக்ரோஷமாக ஏதோ பேச வர, “இருங்க சித்தி…” என்று அவரை பின்தள்ளிய நித்தியா
“இது நல்ல கதையா இருக்கே.. தெரிஞ்சு நடந்ததோ தெரியாம நடந்ததோ.. விதியோ சதியோ கழுத்துல விழுந்த தாலி விழுந்தது தானே.. அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?…” என்று கேட்க
“யாரு இல்லன்னு சொன்னா.. கழுத்துல விழுந்த தாலிக்கு மதிப்பு கொடுத்து உங்க வீட்டு பொண்ண கட்டுன புடவையோட வர சொல்லுங்க.. வாக்கப்பட்டு வந்தவள சீரும் சிறப்புமா வாழ வைக்க என் அண்ணனால முடியும்…” என்று அஞ்சனா சொல்ல
“வாடியம்மா.. என் மருமகன் ஆசைப்பட்டானேனு ஒன்னும் இல்லாத உன்ன அவனுக்கு கட்டி வெச்சு வசதியான வாழ்க்கை தந்தா.. நீ உன் அண்ணன என் அண்ணன் குடும்பத்துக்குள்ள கொண்டுவந்து அவனையும் சொகுசா வாழ வைக்க பாக்கிறாயோ..! முதல்ல நீ எதுக்கு உன் அண்ணனுக்கு வக்காலத்து வாங்குற.. இந்த வீட்டு பொண்ணா இந்தப் பக்கம் வந்து நில்லு…”
“நான் என் அண்ணனுக்காக பேசுவேன்.. நீங்க துர்க்காவுக்கு அத்தை தானே அம்மா இல்லையே…” என்று அர்ச்சனாவும் நறுக்கு தெரிந்தால் போல் கேட்க
“சொத்துக்கு ஆசைப்பட்டு தானே இவள் கழுத்துல உன் அண்ணன் தாலிய போட்டான்.. அத கேட்க எனக்கு அத்தன உரிமையும் இருக்கு…” என்று சகுந்தலா ஏகத்தால பார்வையுடன் சொல்ல
“யார் கேட்டா உங்க வசதியும் வாழ்க்கையும்.. என்ன தேடி வந்தது நீங்கதான்.. என் அண்ணனுக்கும் யாரோட தயவும் தேவையில்ல.. இத்தன நாள் சுயமா அவரோட சொந்தக்கால்ல தான் நிற்குறாரு…” என்று அஞ்சனா சொல்ல
“இருக்கிறது நொண்டி காலு.. இதுல சொந்த கால்ல நிற்கிறானாக்கும்…” என்று வேண்டுமென்றே பரணியை காயப்படுத்த
நித்தியா தான் அவசரமாக இடையில் புகுந்து “நமக்கு எதுக்கு இந்த பேச்சு.. சொத்துக்கு ஆசைப்படலைன்னா இப்படியே பொண்ண அழைச்சிட்டு போக வேண்டியது தானே…” என்று சொல்ல
பரணி துர்க்காவைதான் பார்த்தான். பார்வை தரையில் இருக்க கண்ணீர் நின்ற பாடில்லை. இவர்கள் பேச்சுக்கு விருப்பு வெறுப்பு ஏதாவது ஒரு உணர்வை அவள் காட்டினால் தானே அவனும் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க.
ஒரு நிமிடம் அவள் முகத்தை ஊன்றி பார்த்தவன், விழிகளை மூடி எதையோ யோசித்து விட்டு, சரி வருவது வரட்டும் என்று ஒரு முடிவுக்கு வந்த சமயம், அங்கு புயலென நுழைந்த அகிலன், கிருபாகரன், பிரபாகரன் நிலைமையை வேறு விதமாக மாற்றினார்கள்.
error: Content is protected !!