Skip to content
Post Views: 35
அத்தியாயம்: 10
Playing the victim அதாவது தானே தவறு செய்து விட்டு, தானே பாதிக்கப்பட்டவன் போல் நடிக்கும் ஒரு மனநிலை. அதைக் கையாளும் இணையுடன் வாழ்வது என்பது நித்தமும் போர்களத்தில் நிராயுதபாணியாக நிற்பதற்கு சமம். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும். பேதம், குணநலன்களுக்குக் கிடையாது.
Advertisement
சுமத்தும் ஒவ்வொரு குற்றங்களுக்கும் காரணம் சொல்லி, விளக்கம் தந்து திருமணம் என்ற உறவைப் பிடித்து வைத்தால் அந்த உறவு எப்படி நீடிக்கும்?
விக்ரம், இயல்பிலேயே நல்ல நடிகன். பிறரின் அனுதாபத்தைச் சம்பாதிக்கும் சாதுர்யம் தெரிந்தவன். காரியவாதி. பொறுப்பற்றவனும் கூட. இதுவரை ஒரு பைசா கூட வீட்டிற்கு செலவு செய்து பழக்கம் இல்லாதவன். அன்னையை ஏமாற்றி கூடா நட்புகளுடன் சுற்றுபவன்.
Advertisement
Advertisement
நட்புகள் அவனுக்குத் துபாம் போட, அவர்களின் புகழ் போதைக்கு மயங்கி, நண்பர்களுக்காக உயிரையைக் கொடுப்பேன் என்று சினிமா வசனம் பேசும் அடி முட்டாள்.
மகனின் குணங்கள் நன்கு தெரிந்தே ஒரு கடையை வைத்துக் கொடுத்து, சம்பாதிக்கிறான் என்று பசப்புக் காட்டி திருமணத்தை முடித்து விட்டார் நந்தினி.
Advertisement
அண்ணாமலை மகளுக்காக பணத்தை இறைக்கத் தயாராக இருந்திருந்தால் ரிதன்யாவிற்கு விக்ரம் அன்னையிடம் மதிப்பிருந்திருக்குமோ! என்னவோ!
கிடைக்கவில்லை.
இருபத்தி எட்டு ஆண்டுகள் விக்ரமைத் தூக்கிச் சுமந்த குடும்பம், இனி அவனின் மனைவி மக்களையும் சுமக்க நேர்ந்திடுமோ என்ற பயத்தால் தான் ஒதுக்கியே வைத்தது.
விக்ரமிற்கு ரிதன்யாவின் மீது எந்த ஈடுபாடும் கிடையாது. சொல்லப் போனால் குடும்ப வாழ்க்கைக்கு அவன் தகுதி இல்லாதவன். ஆண் என்பது மட்டுமே குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானது இல்லை.
குடும்பத்தில் மனைவி, மக்கள் உண்டு. அவர்களின் தேவைகள், ஆசைகள், விருப்பங்கள் அனைத்தையும் காதலோடு நிறைவேற்றும் கடமை, கணவனுக்கு உண்டு என்று யாரும் அவனுக்குச் சொல்லித் தரவில்லை. சொன்னாலும் அவன் கேட்கும் ரகமும் இல்லை.
எப்படி வீட்டின் தேவைக்காக டிவி ஃப்ரிட்ஜி சேர் உள்ளிட்டவை வாங்கி வைக்கப்படுகிறதோ! அதே போன்று மனைவி என்பவள் தன் ஆண்மைக்கும் தேவை என்று தாலி கட்டி அழைத்து வந்து விட்டான்.
என்னேரமும் வெளியில் அதைத் தேட முடியாதே. தேடினால் உடல் சுகத்தோடு சேர்த்து பலான வியாதியும் வந்து சேரும் என்ற பயம் வேறு அவனுக்கு. அந்த விடயத்தில் அவன் ஒழுக்க சீலன்.
தேவையென்றால் அவளை அனுகுவான். மற்ற நேரங்களில் கண்டுகொள்ளவே மாட்டான். அவளாக ஆசையுடன் அவனின் அருகில் சென்றால் வேசி பட்டம் கட்டி விரட்டி விட்டான்.
சொல்லப் போனால் எதையாவது பேசிக் கொண்டே இருந்த ரிதன்யா, அவனுக்குப் பாரமாகவே தெரிந்தாள்.
கணவனுக்கு மனைவியின் உடல் மீது மட்டுமல்ல உள்ளத்தின் மீதும் அக்கறையும் அன்பும் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள அவன் தயாராக இல்லை.
கணவனாக மனைவியிடம் உரிமையை எடுத்துக் கொண்டவன், கடமையைச் சரிவர செய்தானா என்றால் இல்லை என்ற பதிலை நொடிக்கும் குறைவான நேரத்தில் சொல்லிவிடலாம்.
கடமைக்குக் கல்யாணம் செய்து கொண்டவனிடம் காதலை எதிர்பார்த்து முட்டாளானாள் ரிதன்யா.
மனைவியுடன் ஊரைச் சுற்றி வர வேண்டாம், அருகில் இருக்கும் கோயிலுக்குக் கூட கூட்டிச் சென்றது இல்லை. ஏன் ரிதன்யா அவனின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற சமயங்கள் மிகவும் சொற்பம். உண்டு, உறங்க மட்டுமே வீடு. கூடிக் களிக்க மட்டுமே மனைவி என்ற நிலைப்பாட்டில் இருப்பவனுக்கு பெண்ணவளின் மெல்லிய உணர்வுகள் எங்கிருந்து புரியும்.
சின்னச் சின்ன சந்தோஷங்கள் தான் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்ற உண்மையை முழுமையாக நம்பும் ரிதன்யாவும் அவனின் பாரா முகத்தைப் புறம் தள்ளிவிட்டு, அவனைக் குறை சொல்லாது அவனுடன் வாழத் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் கிடைத்தது என்னவோ நிராகரிப்பும் ஏச்சுப் பேச்சும் தான்.
அவளும் விடாது அவனின் அன்பைப் பெற போராடத்தான் செய்தாள். ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் மன்றாடும் போது அவளின் உணர்வுகள் பாடை ஏற்றப்பட்டுக் கொண்டே இருந்தது.
ஒரே ஊர் என்பதாலும், சொந்தங்கள் அநோகம் என்பதாலும் கல்யாணம், காது குத்து, வளைகாப்பு போன்ற பல விசேஷ நாள்கள் மாதங்களில் வரிசை கட்டி நிற்கும். அத்தருணங்களில் எல்லாம் அவள் மட்டும் தான் செல்வாள். அவன் உடன் வரவோ, அழைத்துச் செல்லவோ மாட்டான்.
வா என்று அழைத்தாலும், எதாவது காரணம் சொல்லி ஓடிவிடுவான்.
ஜோடி ஜோடியாக வளம் வரும் தம்பதியரைப் பார்க்க பார்க்க, திருமணம் முடிந்தும் தனியாகவே நிற்கும் ரிதன்யாவின் உள்ளத்தின் ஏக்கம் கூடிக் கொண்டே போனது.
தள்ளாடும் கிழவன் கூட மனைவியை பைக்கில் ஏற்றிக் கொண்டு, கரம் பற்றி, புன்னகை முகத்துடன் வந்து இறங்குவதையும், ஜோடியாக புகைப்படங்கள் எடுப்பதையும், உணவு ஊட்டி விட்டு மகிழ்வதையும் காண்கையில், தன் பக்கத்தில் இருந்து இதையெல்லாம் செய்ய வேண்டிய கணவன், இருந்தும் இல்லாததை நினைத்து உள்ளம் உடைந்து அழும்.
அதை மறையாது கணவனிடம் சொல்லி, பேராசைக்காரி என்ற புதுப்பெயரை வாங்கிக் கொள்வாள்.
கணவன், மனைவிக்குப் பூ வாங்கி வருவது, புடவை வாங்கித் தருவது, கரம் கோர்த்து நடப்பது, அவளின் பேச்சிற்கு காது கொடுப்பது எல்லாம் பெண்ணின் பேராசைகளாக யார் சித்தரித்தார்களோ?
அதெல்லாம் மனையாளின் மனத்தில் இடம் பெற, கொண்டவன் கொடுக்கும் பேரன்பு. மனையாட்டி மீதிருக்கும் ஆசை…
அன்பா? ஆசையா? அதெல்லாம் விக்ரமிற்கு கிடையாதே.
வெற்றிடம் மட்டும் தான் இருந்தது இருவருக்குள்ளும். யாராலும் நிரப்ப முடியாத என்னவென்று கூட புரிந்து கொள்ள முடியாத வெற்றிடம்.
ரிதன்யாவின் குடும்பம் வழக்கம் போல் ஆதரவு கரம் நீட்டி, கணவனுடன் வாழ் என்றது. பல சண்டை, மருந்திற்கும் சமாதானம் இல்லாது, வாக்கு வாதங்களுக்கு மத்தியில் மூன்று ஆண்டுகள் கழிந்தன ரிதன்யாவிற்கு.
அது மைதிலியின் மகனுக்கு முதல் பிறந்தநாள் விழா. ஆண் வாரிசு பெற்றுத் தந்து விட்டாள் என்ற குதுகலத்தில், கலா மருமகளுடன் நல்லுறவைப் பேண, மைதிலி கணவன் மாமியாரின் கவனிப்பில் பூரித்துப் போனாள்.
தமக்கையின் முகத்தில் உண்டாகியிருந்த சந்தோஷம், ரிதன்யாவிற்கும் சந்தோஷத்தைத் தரத்தான் செய்தது. கூடவே இவர்கள் போல் வாழ வேண்டும் என்ற அவளின் கனவு செல்லரித்துப் போனதில் மீளா துயரமும் வந்து சேர்ந்தது.
விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும் கணவனிடம் அதைச் சொல்ல, அக்காளின் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்படுகிறாள் என்று அவளின் மீதே பழி போட்டு சண்டை போட்டான்.
இம்முறை தன் நியாயமான ஆசைகளுக்காகச் சண்டையிட்ட தாய் வீட்டிற்கு வந்தமர்ந்தாள். அங்கு தான் ஒரு தினத்திற்கு மேல் இருக்க அனுமதி கிடையாதே… இவள் என்னவென்றால் ஒரு வாரத்திற்கு கூடாரமிட்டு விட்டாள்.
மாமியார் மருமள் பிரச்சனை என்றால் நான்கு பெரியவர்களை அழைத்துச் சென்று பேசி தீர்த்து வைக்கலாம். இது கணவன் மனைவி பிரச்சனை. ஒருவருக்கு ஒருவர் பிடித்தமும், புரிதலும் இல்லாது அது சமாதானம் ஆகாது.
அண்ணாமலையார் மகளிடம் எதுவும் கேட்காது, விக்ரமை அழைத்து பேசினார்.
“நான் சொந்தமாத் தான் தொழில் செய்றேன். கடைல வியாபாரம் நடந்தாத்தான் வருமானம் பாக்க முடியும். வருமானம் வந்தாத்தான் வீட்டுல அடுப்பெரியும். அப்பத்தான் உங்க மகள மகாராணி போல வாழ வைக்க முடியும். பொளப்பெல்லாத்தையும் விட்டுட்டு இவ கூடவே இருக்கணும்னு எதிர்பார்த்தா, எப்படி நாலு காசு பாக்குறதாம்?
ஆம்பளப்பிள்ளையா இருந்தாக் கூட பரவாயில்லை. தானா வளந்துக்கும்னு சொல்லலாம். ஆனா பொட்டப்பிள்ள பெத்து வச்சிருக்கா… அதுக்கு படிப்பு, நகை, சீருன்னு செலவு ஏராளமா இருக்கு. அதை நினைச்சு நானே தினம் தினம் நொந்திட்டு இருக்கேன். இதுல போன வாரம் மதினி மகன் பிறந்த நாளுக்கு, நான் வரலன்னு ஆட்டமா ஆடுறா.
அவங்களுக்கு ஆம்பளப் பிள்ள பிறந்திருக்கு. அதுனால சிறப்பா கொண்டாடுறாங்க. நீ பொம்பளப்பிள்ள பெத்து வச்சிட்டு பேசலாமான்னு கேட்டா? அந்தக் கத்து கத்தி ஒப்பேரி வைக்கிறா! இவ சத்தம், காலணியத் தாண்டி முக்கு ரோடு வர கேக்குது. பஜாரி நடந்துக்கிறா. கொஞ்சம் கூட அடக்கமே இல்லை. நாவடக்கமே கிடையாது. நான் என்ன சொன்னாலும் காதுல வாங்க மாட்டேங்கிறா. புருஷங்கிற மரியாதையையும் குடுக்க மாட்டேங்கிறா. இவளால அந்தத் தெருல என்னால தலை நிமிர்ந்து நடக்க முடியல.” என்றவன் மனைவியால் தான் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளேன் என்று அடுக்க,
“என்ன பாப்பா இதெல்லாம்? மாப்ள இவ்ளோ தூரம் வருத்தப்படுற அளவுக்கா நடந்துப்ப. உன்னை நான் அப்படித்தான் வளத்தேனா!” என்று பற்களைக் கடித்துக் கொண்டு அண்ணாமலை பேச, பதில் சொல்ல வாய்த் திறந்தவளை விழி உருட்டி,
“ஆம்பளைங்க பேசிட்டு இருக்கோம். ஊடால பேச வாய்த் திறக்க கூடாது.” என்று அடக்கி வைத்தார்.
“வாரத்துல ஒரு நாள் தான் கடைக்கு லீவு மாமா. அன்னைக்கி நான் தூங்கி முழிக்க வேண்டாமா! பார்க்கு, சினிமான்னு இவளத் தூக்கி வச்சிட்டு திரிய, நான் விளம்பரப் படங்கள்ல வர்ற புருஷனா? சாதாரண மனுஷன். அன்னாடம் காட்சி. என்னையப் போட்டு தெனோமும் அது வாங்கிட்டு வரலயா! இது வாங்கிட்டு வரலயான்னு கேட்டு கொலையா கொல்றா.
உங்கப் பொண்ணோட பேராசைக்கு அளவே இல்லாம போகுது. அத நிறைவேத்தணும்னா எவெ சட்டப் பாக்கெட்டுக்குள்ளயாது கைய விட்டு கொல்லதே அடிக்கணும். காசு காசுன்னு பறக்குறா! இவள நினைச்சு நினைச்சே இப்பல்லாம் நான் குடிக்க ஆரம்பிச்சிட்டேன்.” என்றவன், நடுரோட்டில் விழுந்து கிடந்து ஃபோன், பைக், லட்சம் ரூபாய் காசை இழந்ததை லாபகரமான மறைத்து விட்டான்.
“வீடான வீட்டுல புருஷன் வந்தா சந்தோஷமா, அலங்காரம் பண்ணி, சிரிச்சா மேனிக்கே வந்து கதவத் திறக்குற பொண்டாட்டியத்தே எல்லாரும் எதிர்பார்பாப்பாங்க. ஆனா உங்க மக, அழுக்கு நைட்டிய போட்டுட்டு அலங்கோலமாத் தான் திரிவா. தலை வாராம, வீட்டுல வேலை செய்யாம! இப்படி மூதேவி மாதிரி இருந்தா எப்படி லட்சுமி கடாட்சம் வரும். தரித்திரம் தான் பிடிக்கும். இவ முகத்தப் பாத்திட்டு போறதுனால இப்பல்லாம் வியாபாரம் சரியா ஓட மாட்டேங்கிது. கூடிய சீக்கிரமே இழுத்து மூடுற நிலைமை வரும்.” என்று அவனின் பொறுப்பற்ற தன்மைக்கு ரிதன்யாவின் மீதே குற்றம் சுமத்தினான்.
பெண்ணவளின் உள்ளத்தைக் கொன்று விட்டு, உடலுக்கு அலங்காரம் செய்து வைத்தால் மகாலட்சுமி வாசம் செய்து விடுவாளா என்ன?
கண்டதைப் பிறக்கி, வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு தவளும் குழந்தை. அவள் உறங்கும் சமயம் கிடைக்கும் குறைந்த நேரங்களில் வீட்டு வேலை, நேரம் தவறி வரும் கணவனுக்குக் சூடாக, சுவையான உணவு. அத்தோடு தன் மன பாரத்தை இறங்கி வைக்க ஆள் இல்லாது, யாருமற்ற தனிமை. நான்கு சுவரில் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருப்பவளுக்கு எங்கிருந்து உற்சாகம் பிறக்கும். எங்கிருந்து தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆர்வம் வரும். அப்படி அலங்கரித்தால் மட்டும் இவன் என்ன முகம் கொடுத்து பேசவாப் போகிறான்?
வேலைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்து செய்யும் வேலைக்காரியாக மனைவியை நடத்துபவனின் மனைவி வேலைக்காரியாகத்தான் தன்னை உணர்வாள். வீட்டுக்காரியாக அல்ல…
அதெல்லாம் புரியாது மருமகனுடன் மகளைத் துடித்தியடித்தார் அண்ணாமலை.
பிச்சைக்காரர்களுக்குக் கூட, ‘நீ தரவில்லை என்றால், வேறு ஒரு தர்ம பிரபு காசு தரப் போகிறான்.’ என்று முடிவெடுத்து அடுத்தவனை நாடிச் செல்ல உரிமை உண்டு. ஆனால் கணவனிடம் காசுக்கும் அன்பிற்கும் கையேந்தி நிற்கும் மனைவிகளுக்கு அந்த ஆப்சன்களே கிடையாது. மீறி தேடினால் அவளுக்குக் கிடைக்கும் பெயர் வேறு. கணவனாய்ப் பார்த்து பரிதாபப்பட்டு தந்தால் தான் உண்டு காதலும் காசும்.
அதுவரை ஏந்திய கையை இறக்கவே கூடாது. கணவனை எதிர்பார்த்தே கடைசி வரை இருக்க வேண்டும். அதில் அவர்களுக்கு ஒரு குரூத திருப்தி கிடைக்கும். அவள் வடிக்கும் கண்ணீர் தான் அவனின் வக்கிர புத்திக்கு நெய்.
உண்டாகும் ஒவ்வொரு பிரச்சனைக்கும், “பொட்டப்பிள்ள பெத்திருக்க நீ! அனுசரிச்சுத் தான் ஆகணும்.”
“வச்ச கொள்ளி எரிஞ்சி தான் ஆகணும். இனி உன் வாழ்க்கை அவங்கூடத்தான்.” என்ற வார்த்தைகள், நயமாக, கோபமாக, மிரட்டலாக, பாசமாக என அன்னை, தந்தை, அக்கா என ஒவ்வொருவர் வாயில் இருந்தும் வந்தது. இப்படி ஒவ்வொரு விதமாய்ப் பேசும் போது அவளாலும் என்ன தான் செய்ய முடியும்?
அவ்வளவு தான் என்று விதியே என வாழத் தொடங்கினாள்.
ஆனாலும் திருமண வாழ்க்கைப் பொய்த்துப் போன இயலாமையின் ஆங்காரத்தை மகளிடம் காட்டாது இருக்க முடியவில்லை.
உன்னைப் பெற்றதால் தானே எனக்கு இந்நிலைமை என்ற எண்ணம் விக்ரமின் குத்தல் பேச்சில் அதிகமாகிக் கொண்டே வந்தது.
விளைவு இரண்டரை வயது பிஞ்சு, இவளிடம் அடி வாங்கி காய்ச்சல் காரணமாக படுத்து விட்டது.
சத் என்ற சத்தத்துடன் முத்து லெட்சுமி மகளின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தார்.
“மனுசியா டி நீ… பெத்த பிள்ளைய இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிச்சி வச்சிருக்க.” என்று பேத்தியின் வதனத்தைக் கண்ணீருடன் வருடியவர்,
“பத்து மாசம் தூக்கிச் சுமந்தவ எல்லாம் அம்மாவாகிட முடியாது. நல்லபடியா வளக்கணும். இந்த உலகத்த எப்படிப் பாக்கணும் எப்படி எதிர்கொள்ளணும்னு கத்துத் தந்து, பராமரிச்சு, வளக்கணும். அன்பு தான் டி தாய்மைக்கு அர்த்தம். இப்படி அரக்கி மாதிரி செஞ்சி வச்சிருக்க.
என்னடி உம்பிரச்சனை? நினைச்ச வாழ்க்க கிடைக்கல. அதான!! யாருக்குடி அது கிடைச்சிருக்கு? நினைச்ச புருஷந்தான் வேணும்னா ஊருல எவளும் வாழ மாட்டா. உன்னை மாதிரி நான் யோசிச்சிருந்தேன்னா… உங்கப்பெ படுத்துன பாட்டுக்கு உன்னைய உங்கக்காவ எல்லாம் கொலை தான் செஞ்சிருக்கணும்.
தனக்காக வாழ்றது வாழ்க்கை இல்லைடி. நமக்கு பிடிச்சவங்களுக்காக வாழணும். நான் வாழ்ந்த உங்களுக்காக. உன்னைய மாதிரி முறுக்கிக்கிட்டு நின்னா உடைஞ்சி தான் போயிருப்பேன்.
இனி அவன் தான் உன் வாழ்க்க முழுக்கங்கிறப்ப அவன அனுசரிச்சி, சரிக்கட்டி வாழுற திறமைய வளத்துக்க. உன்னால முடியாதுன்னா… சாவு தான் வழி. ஏன்னா வாழா வெட்டியா உன்னை உங்கப்பெ வீட்டுல வச்சி வாழ விடமாட்டான். நீ செத்ததுக்கு அப்றம் உம்பிள்ளைச் சீரழியுறதுக்குப் பதிலா நீயே அதைக் கொன்னிடு.” என்றவர் சரிகாவைத் தூக்கிக் காட்ட,
தாய்த் தன்னை வெறுக்கிறாள் என்பதை அறியாத அந்தப் பிஞ்சு அவளை நோக்கி இரு கரத்தையும் நீட்டி, தூக்கச் சொல்லி அழுதது.
“நீ இத பாரமா பாக்குற. ஆனா அது உன்னை மட்டும் தான் உலகமாப் பாக்குது. சுயநலமா உன்னைப் பத்தி மட்டும் யோசிக்காத ரிது. உம்பொண்ணப் பத்தியும் கொஞ்சம் யோசி. உனக்கு புருஷன் மட்டும் தான் பிரச்சினை. ஆனா இந்தக் குட்டிக்கு, அப்பா அம்மான்னு எல்லாமே பிரச்சனை. பொம்பளப் பிள்ளையா பிறந்தது இதோட தப்பா?
புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஆகுதோ ஆகலயோ நிறைய குடும்பம், பிள்ளைங்கள மையமா வச்சித்தான் சுழலவே செய்து. குழந்தை வளர வளர சில ஆம்பளைங்க மனசும் மாறும். மாப்ளேயும் மாறுவாரு.” என்றவர் புத்திசாலித்தனமாக நடந்து கொள் என்று விட்டுச் செல்ல, ரிதன்யாவின் பார்வை மகளின் மதி முகத்திலேயே இருந்தது.
ரோஜா நிறத்தில் கருந்திராட்சை கண்களைத் துறுதுறுவென உருட்டியவாறு, தாயின் கழுத்தில் தொங்கிய தாலிச் சங்கிலியை, வெண்டைப் பிஞ்சு விரலில் எடுத்து சுருட்டி சுருட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.
தன் வாழ்க்கையை
வெளிச்சமாக்கும்
சின்னச் சூரியனை,
தன் கருவிலேயே சுமந்துள்ளேன் என்ற உண்மை அந்தக் கனம் உரைத்தது அவளுக்கு.
மகளுக்காகத் தான், தன் வாழ்க்கை என்று முழு அர்ப்பணிப்புடன் வாழத் தொடங்கினாள். விக்ரம் மாறாவான மாற மாட்டானா என்றெல்லாம் கவலைப்படாது, தனக்கும் தன் மகளுக்குமென தனி உலகை அமைத்துக் கொண்டாள்.
பெண் பிள்ளை என்ற காரணத்தால் விக்ரம் சரிகாவிற்கும் தகப்பனாக செய்யவேண்டிய கடமைகளை செய்யவில்லை. ஆதலால் மகளுக்காக ரிதன்யா வேலைக்குச் சென்றாள். முழு எதிர்ப்பு வந்த போதும் அவளுக்குக் கிடைத்த முதல் வெற்றி அந்த வேலை தான். மகளைப் படிக்க வைத்தது அவள் தான்.
அதன் பின்னும் பிரச்சனைகளுக்குக் குறைவே இல்லை. ஆனால் ரிதன்யாவிடம் நிமிர்வு பிறந்தது. எது வந்தாலும் மகளுக்காகத் துணிந்து எதிர்கொள்ளும் தைரியம் இருந்தது.
பிறவி குணம் மாறாது என்பது போல், விக்ரம் மாறவே இல்லை. அம்மா மகள் இருவருக்கும் இடைஞ்சலாக பல செய்தான்.
அவன் ஆண் என்ற கர்வத்தை வெளிப்படுத்தினான் என்றால் ரிதன்யா, பெண் என்ற திமிருடன் அவனை எதிர் கொண்டாள். அது கணவன் மனைவிக்கு இடையை யுத்தமாக மாறியது.
யுத்தத்தில் வெற்றி தோல்வியெல்லாம் கணக்கே இல்லை. யாருக்கு அதிக இழப்பு என்பதே கணக்கு. அந்த வகையில் ரிதன்யாவிற்கு இழப்புகள் ஏராளம்.
எங்கே மகளையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் விக்ரமை விவாகரத்து செய்தாள். இதோ! அதே பயத்தால் தான் பிறந்த வீட்டையும் விட்டு விட்டு எங்கோ செல்கிறாள்.
புயல் வீசிக் கொண்டிருக்கும் அவளின் வாழ்க்கையில் குழல் இசைக்கும் நேரம் காத்துக் கொண்டிருப்பது தெரியாது.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!