Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 09.01

ஓம் ஸ்ரீ சாய்ராம்

தலைகால் புரியாத சந்தோஷத்துடன் மனையாளைக் கட்டியணத்து ஓயாமல் நன்றி கூறி அவள் முகமெல்லாம் முத்தமிட்டான் தருண்.

“என்னடா ஆச்சு உனக்கு? எதுக்கு தாங்க்ஸ்?” அவன் முகத்தை இரு கரங்களிலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆசுவாசப்படுத்தினாள் உத்ரா.

“அம்மணியோட பிடிவாதம் மலையேறினதே உன்னால தானே,” அவன் துப்பு கொடுக்க,



Advertisement

நொடியில் புன்னகைத்தவள், “மலை ஏறல; மாடி ஏறிருக்காங்க,” குறும்பாகக் கண்சிமிட்டி, “அதுவும் என்னால இல்ல; உன் மாமியாரும் நம்மளோட வரதுக்குச் சம்மதிச்சதுனால தான்,” நமுட்டாகச் சிரித்தாள்.

காலையில் உத்ரா செய்த குளறுபிடிகளில் சுபாஷினியின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது நினைவுக்கு வர, “எல்லாம் சரியானதும் நீ அவங்களோட நிறைய நாள் தங்கிட்டு வா உத்ரா,” என்றான் மானசீகமாக.

“பார்த்துக்கலாம் தருண். அண்ணா குணமாகுறது தான் நம்மளோட ஃப்ர்ஸ்ட் ப்ரையாரிடி,” அவன் கன்னத்தை வருடி நினைவூட்டினாள்.

Advertisement

“ம்ம்!” எனத் தலையசைத்தவன், தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த தன் தேவதையின் உச்சந்தலை முகர்ந்து,

Advertisement

“பெரியம்மா பெரியப்பா கண்டதையும் யோசிச்சுக் குழம்பாத அளவுக்கு அவங்கள பிஸியா வச்சுக்கப் போகுறது உன் பொறுப்பு விருகுட்டி,” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.


தந்தை சொல் தட்டாத பிள்ளையாக மறுநாளே களத்தினால் இறங்கினாள் அவர்கள் குட்டித் தேவதை. அன்னையின் வாசம், தூளி, தொட்டில், பாட்டிகளின் மடி என எதற்கும் மசியாதவள், மார்போடு சேர்த்து அரவணைத்துத் தட்டிக்கொடுத்த பெரியப்பாவின் கைச்சூட்டில் இமைக்கும் நொடியில் கண் அசர்ந்தாள்.

குளிப்பது, சீவி சிங்காரித்துக் கொள்வது என அனைத்தையும் பெரியம்மாவிடம் சொகுசாய் செய்துகொண்டாள்.

Advertisement

பகலில் குழந்தையும் கையுமாக; இரவில் குறுக்கெழுத்தும் பேனாவுமாக என நாட்கள் நகர, இல்லறம் தாண்டி பேசிப்பழகிய அவர்களுக்கு இடையில் தயக்கங்கள் மறைந்து நட்பு மலரத் தொடங்கியிருந்தது.

“யாரோட பேசிட்டு இருக்க ரம்யா? இந்த க்ராஸ்வர்ட் முடிய இன்னும் இருபது நிமிஷம்தான் இருக்கு,” இருப்புக்கொள்ளாதவனாக ஐபேட் திரையை மேலும் கீழுமாகத் தள்ளி, கண்டுபிடிக்க வேண்டிய புதிர்களை எண்ணிக்கொண்டிருந்தான்.

ஆம்! உத்ராவின் உபயத்தால், அலைபேசியில் படம்பிடிக்கக் கற்றுக்கொண்டவன், இலவச இணைப்பாக, ஐபேடையும் திறம்பட இயக்கக் கற்றுக்கொண்டிருந்தான். அதன் விளைவாக, தினம் ஒரு க்ராஸ்வர்ட் இலவசமாக விளையாடக்கூடிய ஆப்ப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளக் கூடிய அளவிற்குத் தேறியிருந்தான்.

“சரி! நாளைக்குப் பார்க்கலாம்,” என அழைப்பைத் துண்டித்தவள், அவனருகில் வந்தமர,

“டைம் அவுட்! புது பசில் வந்துடுச்சு,” முகம் சுருக்கினான் ஷ்ரவன்.

“நாளைக்கும் நம்மளுக்கு டைம் இருக்காது. அதனால இப்பவே சால்வ் பண்ணிடுவோம்,” என அவள் புதிய புதிரின் முதல் விடையைத் தட்ட,

தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு விளையாடக் கூடாது என விதிமுறைகள் இட்டவளே நள்ளிரவு தாண்டியும் விளையாடுவதைக் கண்டவன்,

“ஏன் நாளைக்கு டைம் இருக்காது,” என்றான் புருவங்களை வளைத்து.

“ஷர்மிலா நாளைக்கு ஆஸ்த்ரேலியாவுக்குக் கிளம்புறா. அவளுக்கு சென்ட் ஆஃப் தர ஏர்போர்ட் போகணும். வர லேட் ஆகிடும்,” என்றாள் திரையிலிருந்து விழிகள் அகலாமல்.

“அவ கிளம்பிட்டான்னுல நெனச்சேன்,” என்றான் யோசனையாக.

“ம்ஹூம்! நீங்க ஹாஸ்பிட்டலேந்து டிஸ்சார்ஜ் ஆனதும் கிளம்புறதா தான் இருந்தா. ஆனால் அதுக்குள்ள விசா எக்ஸ்பைர் ஆயிடுச்சு. அதை ரென்யூ பண்ணிட்டு டிக்கெட் ரீஸ்கெட்யூல் பண்ண இத்தனை நாளாயிடுத்து,” விளக்கினாள்.

தன்னால் தான் அவளுக்கு இத்தனை தொந்தரவுகள் என மனதளவில் வருந்தினாலும், இந்த நிலையில் அவளை நேரில் பார்த்துப் பேச திராணி இல்லை அவனுக்கு.

“நீ மட்டும் போயிட்டு வா ரம்யா,” என்றான்.

ஷர்மிலாவும் இதையேதான் சொல்லியிருந்தாள். ஏர்போர்ட் வருவதாக இருந்தால், ரம்யாவை மட்டுமே வரச்சொல்லியிருந்தாள்.

இருவரும் தயங்குவது எதற்காக எனப் புரிய, “பயப்பட வேண்டிய நானே தெளிவா இருக்கும்போது, உங்களுக்கு என்ன ஷ்ர்வன். நீங்களும் கண்டிப்பா வரீங்க!” கட்டளையாக உரைத்தாள்.

முன்னாள் காதலை ஏற்பதற்கும், முன்னாள் காதலியை ஏற்றுப் பழகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளேதே என ஆராய்ந்தவன்,

“எப்படி உங்களுக்குள்ள இவ்வளவு அன்டர்ஸ்டேண்டிங்க்? உனக்கு அவள முன்னாடியே தெரியுமா ரம்யா? இல்ல அவளைச் சந்திச்சே தீரணும்னு நான் உன்னைக் கட்டாயப்படுத்தினேனா? இல்ல அவளாவே நம்மள தேடி வந்தாளா?” கேள்விகளை அடுக்கினான்.

அவர்கள் முதல் சந்திப்பைப் பற்றி விவரித்தால், மற்ற ரகசியங்கள் அம்பலமாகுமே என வயிற்றைத் தடவிக்கொண்டவள்,

“எல்லாத்தையும் கதையா சொல்லமுடியாது. ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கும்போது ஏதாவது ஞாபகம் வருதான்னு பாருங்க,” மென்னகையுடன் சமாளித்தாள்.


“அம்மா! இன்னைக்கு ஈவினிங்க் என் ஃப்ரெண்ட் ஆஸ்திரேலியா கிளம்புறா ‘ம்மா. நானும் இவரும் ஏர்போர்ட் போயிட்டு வரலாம்னு இருக்கோம்,” காலை உணவு வேளையில் ரம்யா திலகாவிடம் கூற,

‘ஷர்மிலா வா?’ அண்ணனுக்கு வாயசைத்தான் தருண். அவனும் ஆமாம் எனத் தலையாட்ட, “ஈவினிங்க் தானே! நான் உங்கள அழைச்சிட்டுப் போகுறேன் ரம்யா,” என்றான்.

“தருண்! எங்களை ஸ்டேஷன்ல விடுறதா சொன்னீங்களே,” சுபாஷினி இடைபுக, அப்போதுதான் மாமியாரும் மாமனாரும் ஊருக்குக் கிளம்புகிறார்கள் என்ற நினைவே வந்தது அவனுக்கு.

“நான்தான் உங்களோட வரேன்னே ‘ம்மா. அவர் அவங்கள அழைச்சிட்டுப் போகட்டும்,” சூழ்நிலை அறிந்து சமாளித்தாள் உத்ரா.

‘இவர்கள் பாசத்திற்கு அளவே இல்லை!’ என அசைபோட்ட ரம்யா,

“ஏர்ப்போர்ட் தானேடா. நாங்க போயிட்டு வந்துக்கறோம்,” கூறி, மறுத்துப்பேசாதே எனக் கண்களை உருட்டினாள்.

ஏர்ப்போர்ட், எக்மோர் என ஆளுக்கொரு திசையாகப் புறப்படவிருந்த ஜோடிகளுக்கு குங்குமம் இட்டுவிட்டு, சம்பந்திக்குத் தாம்பூலம் வழங்கினார் திலகா.

“பிரசாதம் கொண்டு வரச்சொன்னேனே! எடுத்துட்டு வந்திருக்கீங்களா,” கணவரிடம் வினவினார் சுபாஷினி.

“மறந்தே போயிட்டேன்!” என்றவர் தன் பெட்டியிலிருந்து இரண்டு டப்பாக்களை எடுத்துத்தந்தார்.

அவற்றை ரம்யாவின் கையில் திணித்த சுபாஷினி, “இது கர்பரக்ஷாம்பிகை குங்குமும் நெய் பிரசாதமும் ரம்யா,” தொடங்கியதுமே ரம்யாவின் முகம் மாறியது.

அடுத்து என்ன சொல்லப் போகிறார் என உணர்ந்த உத்ரா,

“அம்மா! அக்காக்கு நான் எல்லாத்தையும் விளக்கமா சொல்லிக்கிறேன். ட்ரெயின்க்கு நேரமாச்சு. கிளம்புங்க,” எனத் தடுத்தாள்.

“ட்ரெயின் ஏழு மணிக்குத்தான்,” சுபாஷினி எதிர்க்க,

“அதுக்கில்ல சம்பந்தி! பீக் ஹர் ட்ராஃபிக்குள்ள கிளம்புங்க,” சமாளித்தார் திலகா.

“ரெண்டு நிமிஷத்துல எதுவும் ஆகப்போகுறதில்ல,” அதற்கும் அவர் தடை விதிக்க,

“லேடீஸ் பேசுற இடத்துல நமக்கென்ன வேலை. வா நம்ம வாசல்ல வெயிட் பண்ணலாம்,” அண்ணனின் கவனத்தைத் திசைதிருப்பினான் தருண்.

குடும்பத்தினரின் விநோதமான பாவனையிலேயே ஏதோ விவகாரம் இருப்பதை உணர்ந்தவன்,

“இல்ல! எல்லாரும் ஒண்ணாவே கிளம்பலாம்,” என்றான் ஷ்ரவன் திடமாக.

வாஞ்சையாக ரம்யாவின் கன்னத்தை வருடிய சுபாஷினி, “கருக்கலைஞ்சத பத்தி வருத்தப்படாத ரம்யா. அந்த உசுருதான் உன் புருஷன மீட்டுத் தந்திருக்குன்னு நெனச்சுக்க.

நாற்பெத்தெட்டு நாளுக்கு இந்த குங்கமத்தை இட்டுட்டு, நெய் பிரசாதத்தைச் சாப்பிட்டிட்டு வா. அந்த அம்மன் அருளால அதே குழந்தை உன் வயிற்றில் ஜனிக்கும் பாரு,” என்றவர், ஷ்ரவன் பக்கம் திரும்பி,

“உங்களுக்கு முடிஞ்சபோது தஞ்சாவூர் வந்து கர்பரக்ஷாம்பிகையைத் தரிசனம் செய்ங்க,” வாழ்த்த வெளிர்ந்த முகமாகத் தலையசைத்தான் ஷ்ரவன்.

எந்த நேரமும் எரிமலையாக வெடிப்பான் என யூகித்த ரம்யா, சுபாஷினியிடம் மென்னகையுடன் நன்றி கூறி, “உங்களுக்கு நேரமாகுது உத்ரா நீங்க கிளம்புங்க,” எனக் கண்ணசைத்தாள்.

தருணும் உத்ராவும் அவர்களுடன் அரைமனதாகக் கிளம்ப, தப்பித்தால் போதுமென அவர்களை வழியனுப்பும் சாக்கில் வாசலுக்கு ஓடினார் திலகா.

மறதியின் வலியை முதல் முதலாக அனுபவித்தான் ஷ்ரவன். ஒளிவுமறைவின்றி பகிர வேண்டியவளே மௌனம் சாதிக்க, யாரைப்போய் கேட்பது என நொந்தவன் அமைதியாக மாடியை நோக்கி நடந்தான். உள்ளுக்குள் குமுறும் அவன் மனவேதனையை உணர்ந்த ரம்யா அவனருகே ஓடினாள்.

“மறைக்கணும்னு எண்ணமில்ல ஷ்ரவன். நீங்க இப்ப இருக்கும் நிலையில் அவசியமில்லன்னு தோணித்து. குணமானதும் சொல்லலாம்னு இருந்தேன்,” உண்மை காரணத்தைக் கண்பார்த்து உரைத்தாள்.

“நம்ம அந்தரங்கத்தைப் பற்றி மூணாவது மனுஷங்க சொல்லித் தெரிஞ்சுக்குற நிலைமைக்கு என்னைத் தள்ளிட்டீயே ரம்யா,” அவன் மனம்நொந்து கண்ணீர் வடிக்கவும் தான் அவன் பக்கத்து வலியை உணர்ந்தாள்.

“தப்புதான் ஷ்ரவன்! இந்தக் கேள்விக்குமட்டுமில்ல… நீங்க நேத்து கேட்ட கேள்விக்கும் சேர்த்துப் போகுற வழியில் பதில்சொல்றேன். ப்ளீஸ் கிளம்பலாம்,” என அவன் மணிக்கட்டை அழுந்த பிடித்தாள்.


முதலில் டாக்சியில் செல்வது எனத் திட்டமிட்டிருந்தாள். தனிமையில் பேச தங்கள் வண்டியில் செல்வதுதான் உத்தமம் என வண்டிச்சாவியை எடுத்தாள்.

சமரசமாகி புறப்படும் ஜோடிகளைக் கண்ட திலகாவின் மனம் குளிரவே செய்தது.

ஆனால் வெகுநாட்களுக்குப் பிறகு வண்டி ஓட்டப்போகும் மருமகளைக் கவலையுடன் பார்த்த திலகா, “ஜாக்கிரதை ரம்யா,” என அவள் அடிவயிற்றை வருடிக்கொடுத்தார்.

“ரணம் ஆறிடுத்தும்மா,” அவர் உடல்மொழியை அறிந்தவளாய் ரம்யா பதிலுரைக்க,

எதைப்பற்றி பேசுகிறார்கள் என உணர்ந்துகொண்ட ஷ்ரவன், “கார் ஓட்டுறத்துக்கோ ஏர்போர்ட்டுக்கு வழி மறக்கும் அளவுக்கோ எனக்கு மறதி இல்ல. நானே ஓட்டுறேன்,” இடைபுகுந்தான்.

“இல்ல ஷ்ரவன்… நிறைய ரோட் கன்ஸ்ட்ரக்ஷன்…” ரம்யா தொடங்க,

மகனின் முடிவில் பெருமூச்சுவிட்ட திலகா, “அவனே ஓட்டட்டும் ரம்யா. வழியில் ஏதாவது டைவர்ஷன் இருந்தா நீ சொல்ல சொல்ல ஓட்டப்போறான்,” படபடக்க,

மாமியாரின் பயத்தைக் கருத்தில் கொண்டவள் அமைதியாகப் பயண இருக்கையில் வந்தமர்ந்தாள்.


“இதே மாதிரிதான் அன்னைக்கும் வெவ்வேறு மனநிலையோட ஷர்மிலாவைச் சந்திக்கப் புறப்பட்டோம் ஷ்ரவன்,” தொடங்கியவளை விழி அகலப் பார்த்தான்.

“ஒரேவொரு வித்தியாசம்! அன்னைக்கு நான் வேண்டாவெறுப்பா கிளம்பினேன். நீங்க சந்திச்சே ஆகணும்னு என்னை இழுத்துட்டுப் போனீங்க,” ரம்யா கூறவும்,

“கட்டாயப்படுத்தீனேனா ரம்யா,” நம்ப முடியாத பார்வை பார்த்தான்.

“கண்ணியத்திற்குப் பெயர் போனவர் ஷ்ரவன் நீங்க,” அவள் மென்னகைக்க,

இதுவரை அவர்களுக்குள் நடந்த வாக்குவாதங்களை அசைபோட்டவன், வழக்கமான ஊடலாக இருக்கும் என யூகித்து,

“ஷர்மிலாவை சந்திச்ச கதையை விடு ரம்யா. நான் இருந்த நிலைமையில் நமக்கு எப்படிக் குழந்தை….பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு ரம்யா. அதைமட்டும் சொல்லு,” கசந்த குரலில் கெஞ்சினான்.

“’நான்’ இருந்த நிலைமையில் ‘உனக்கு’ எப்படி குழந்தைன்னு சந்தேகப்படாமல், ‘நமக்கு’ எப்படின்னு கேக்குறீங்களே ஷ்ரவன்… உங்களுடைய இந்த காதலுக்காகவாவது எனக்கு கருக்கலையாம இருந்திருக்கலாமே,” துக்கம் தொண்டையை அடைக்க, அடிவயிறே கிழியும் அளவிற்கு அழுந்தபிடித்து கதறினாள்.

உணர்ச்சிவசப்படும் இவளை வண்டி ஓட்ட விடாதது நல்லது எனப் பெருமூச்சுவிட்டவன், கண்ணுக்குத் தென்பட்ட மால் ஒன்றின் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தினான்.

அதைக் கண்டுகொண்டவள், மடமடவெனக் கண்களைத் துடைத்துக்கொண்டு, “ஐ ஏம் ஆல்ரைட். போகலாம். லேட் ஆகுது,” என்றாள்.

அரை மணி நேரம் தாமதமாகப் போனால் எதுவும் ஆகப்போவதில்லை என மறுத்துப் பேசியவன், அவள் முகம் பார்க்க உடம்பை வளைத்தான்.

“நான் செஞ்சது அத்தனையும் முட்டாள்தனம்னு தெரிஞ்சியிருந்தும் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம…” எனத் தன் இரு கரங்களையும் அவள் முன்னே படர விரித்தவன்,

“இந்த ஒன்பது விரல் போதும் உங்களோட குடும்பம் நடத்தன்னு என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்ட உன் காதலை விட என் காதல் எந்தவிதத்திலும் பெருசில்ல ரம்யா,”

என அவள் குற்றவுணர்ச்சியைக் களைந்து, “கடவுள் ஏதோ பேரதிசயம் செஞ்சு பிள்ளைவரம் கொடுத்திருக்காருன்னு புரியுது” இடைநிறுத்தி, “கொடுத்த வேகத்தில் பிடுங்கவும் செஞ்சிருக்காரு,” எனப் பெருமூச்சுவிட்டவன்,
“என்ன நடந்துதுன்னு சொல்லு,” என்றான்.

சுற்றிமுற்றிப் பார்த்தவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

“நாமளே ரீக்ரியேட் பண்ண வேண்டாம்னு நெனச்சாலும், விதி விடுறதா இல்ல,” என்றாள்.

“என்ன சொல்ற ரம்யா?”

“இங்க…இதே மால்லதான் ஷர்மிலாவைப் பாக்குறத்துக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது,” என்றவள், இறங்கி இரண்டாம் தலத்திலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் செல்லலாம் என்றாள்.

Click here for Episode 09.02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!