Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

75. இந்த்ரவாணி - நாயகியின் நாயகன்

நாயகியின் நாயகன் – 15.1

மழைச்சாரல் சற்று தூறல்களாக மாற ஆரம்பித்த தருணம். தெப்பக்குளத்தில் குமிழ்கள் தோன்றி தோன்றி மறைந்தன. ரதியின் மனநிலையும் அப்படித்தான் இருந்தது. படித்துறையில் மழையில் நனைந்தபடி அவள் அமர்ந்திருந்ததை பார்த்ததும் மாறன் ஓடிவந்து அவளின் தோளைத் தொட்டான். இரு நாட்களில் அவனின் ஸ்பரிசம் அவளின் உடலுக்கு பழக்கமான ஒன்றாய் மாறியிருந்தது. 

அசுவாரசியமாய் திரும்பி பார்த்தாள். 



Advertisement

“ரதி. குளத்துல பொரி போட்டுட்டு வரேன்னு வந்த..  இவ்ளோ நேரம் என்ன பண்ற. மழை அதிகமாகுது. வா போகலாம்.” 

“மாறன். மழையில் நான் என்ன கரைஞ்சா போகப் போறேன்.?”

Advertisement

Advertisement

“ உன்னை கரைக்க எனக்குத்தான் தெரியும். மழைக்கு தெரியாதில்ல..” கண்ணடித்து அவளது கைப்பிடித்து தூக்கிக் கொண்டே சொன்னான். 

மேலே எழுந்தவள் அவன் மேல் உரசிக் கொண்டு அவனது உயரத்துக்கு சமமாக வர, மெல்ல அவளை அணைத்துக் கொண்டு பிரசாத கடைக்குள் நுழைந்து மழைக்கு ஒதுங்கினார்கள். இருவரும் ஓரளவு முழுதாக நனைந்திருக்க, அவளுக்கு சூடாக ஒரு கருப்பட்டி காபியை வாங்கித் தந்தான். 

Advertisement

“யோசிச்சு யோசிச்சு ரெண்டே நாள்ல உன் நெத்தியில கோடுகள் வந்திருச்சு ரதி.” 

“எந்த தீர்வும் வரலையே? அதுக்கு இதாவது வந்ததே.”

“முயற்சி திருவினையாக்கும் ரதி..” 

“பெருசா சொல்லிட்டோம் மாறன். இயற்கை பட்டில நாம நெய்ய ஆரம்பிச்சிருவோம்னு. ஆனா சின்னாளபட்டிக்கு போய் தான் முழுசா கத்துட்டு வரணும். அவங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்களே.. சரி அவங்ககிட்ட நாரை வாங்கி நாமளே முயற்சி பண்ணா, ஒரு இழை கூட கோர்த்து வர மாட்டேங்குது. ஒவ்வொரு இழையும் அறும்போது என் உயிரே அறுந்து போற மாதிரி இருக்கு மாறன். ” 

“சின்னாளப்பட்டிக்காரங்க நெய்யறப்பவும் இதே போல சந்திச்சிருப்பாங்க இல்ல. அவங்க ஏதோ ஒரு உபாயம் கண்டுபிடிச்சிருக்கனும் இல்ல. நாம அங்கேயே நேர்ல போய் பாத்து கத்துக்கிட்டு வரலாம்  ரதி. நீ கவலைப்படாதே. எதையும் ப்ராப்பரா செஞ்சாதான் அந்த வேலை சரியா இருக்கும்.” 

கோவில் மணி ஒலித்தது, அவளது நெஞ்சிற்குள் ஒரு நம்பிக்கை அழுந்த பதிந்தது. 

“நெய்யறதைக் கூட கத்துக்கலாம். ஆனா வாழை நாரை பதப்படுத்தி நூலை மென்மையாக்கற வித்தையை கத்துக்கிட்டா தான் நமக்கு கட்டுப்படி ஆகும். வெளில வாங்கினா இப்போ நடைமுறைல இருக்க மாதிரி தான் எல்லா பிரச்சினையும் வரும்” 

“அதுக்கும் போவோம். திருச்சில இருக்க வாழை நார் ஆராய்ச்சி மையம்ல கத்து தராங்க இல்ல.” 

“அப்போ நீங்க அங்க போங்க. நான் சின்னாளப்பட்டிக்கு போறேன்.” 

“தனியா உன்னை எப்படி அனுப்பறது.?” 

“பரவால்ல நான் சமாளிப்பேன்.” 

“மழை விட்டிருக்கு. வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” 

அவர்கள் வரும்போதே மருதனும், மாதவனும் எதிர்க்கொண்டு வந்தனர். 

“மாறா மழையில நல்லா நினைஞ்சிட்டீங்களா?” 

“இல்லண்ணே. ஓரளவு ஒதுங்கி நின்னுட்டு தான் வந்தோம்.” 

“ரதி.. உங்கப்பா தறிக்கு போனியா? அவங்க கொடுத்த நூலில் நெய்ய வந்துச்சா..?” 

“இல்ல அண்ணா.. நானும் இவரும் அதை பத்தி தான் இப்போ பேசிட்டு வந்தோம்.” விவரங்களை சொன்னாள். 

“தனியா நீ போறது சரியா வராதும்மா.. நாலு நாளாச்சும் இருக்கனும் இல்ல. நீ மாறனை கூட்டிட்டு போ. நான் வேணா திருச்சிக்கு போய்ட்டு வரேன். வந்ததும் நாம தொடங்கிடலாம் மா..” மருதன் சொன்னதும்,

“அண்ணா.. நீங்க போய்ட்டா அண்ணி மட்டும் கடையை பாத்துக்கறது கஷ்டம். நான் வேணா போறேன். வாழை நார்ல மதிப்பு கூட்டற விஷயத்தை கத்துக்கிட்டா நல்லது தானே.” மாதவன் சொல்ல,

“நீ ரம்பாவை விட்டு போறது சரியில்லடா. நான் போறேன்.” மருதனின் உறுதியான வார்த்தைகளை எதிர்த்து தம்பிகள் எதுவும் பேசவில்லை. 

இருவரும் அவர்கள் வீட்டிற்குள் உள்ளே நுழையும் போது கனத்த மௌனமே வரவேற்றது.

ராமச்சந்திரன் பிள்ளைகளிடம் பேசுவதை கூட தவிர்த்திருந்தார். அவர் மனம் முழுதும் வன்மம் தான் நிறைந்திருந்தது. அது பிள்ளை பாசத்தையோ, நட்பையோ, உறவையோ எதிராக பார்க்க வைத்தது.. 

இரவு உணவு அவரவர்கள் அறைக்குள் செல்ல, மகளோடும் மனைவிகளோடும் அவர் அதே வீட்டிற்குள் தனிக்குடித்தனம் நடத்த வேண்டியதாகியது. 

ரத்தப்பகை மெல்ல கொல்லும் நஞ்சு என்று அவருக்கு இப்போது தெரிய வாய்ப்பில்லை.

“ரேணு. நாளைக்கு நீ கடையை போய் பாத்துக்க. நான் இரண்டு மூணு நாள் திருச்சிக்கு போய்ட்டு வாழை நாரை நெசவுக்கு ஏத்த மாதிரி மாத்தற பயிற்சி கத்துக்கலாம்னு இருக்கேன். நம்ம வட மாவட்டங்கள்ல யாரும் இதை செய்யல.. அதனால் இது ஒரு நல்ல பிஸ்னஸ் வாய்ப்பா இருக்கும். நமக்கும் கைல இன்னொரு தொழில் இருக்கும்.” 

“ரெண்டு மூணு நாளா. நீங்க போய்ட்டா நான் எப்படி தனியா மேனேஜ் பண்றது. மாறன் அதுக்கு  போகலாமில்ல?”

“ரதிய கூட்டிட்டு அவன் சின்னாளப்பட்டி போறான் மா. அதான் நான் போகலாம்னு பாக்கறேன்.”

“இல்ல.. அப்பா பேசினாங்க” அவள் இழுக்கும் போதே மருதனின் முகம் மாறியது. 

“என்னவாம் ரேணு..” 

“இல்ல. தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் மாசம் தான் இருக்கு.. அப்பா நாளைக்கு தலைவரை போய் பாத்துட்டு வந்திடலாம்னு சொல்ல சொன்னாரு.” மருதன் முகம் இருண்டது. கேள்வியும், ஆச்சர்யமும் அவனின் இரு கண்களில் மிதந்தன. 

“ரேணு.. நீ என்ன சொன்ன?” 

“உங்ககிட்ட சொல்லி அனுப்பி வைக்கிறேன்னு..”

“முடிவை நீயே எடுத்திட்டியா? எனக்குன்னு ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்ல ரேணு. எனக்கு அரசியல்ல அரிச்சுவடி கூட தெரியாது. அதுக்கான ஆளும் நான் இல்ல.”

“எல்லாரும் எல்லாம் தெரிஞ்சிட்டா செய்யறாங்க. கத்துக்க வேண்டியது தான்”

“அப்படியில்ல ரேணு. உனக்கு சொன்னா புரியல. எனக்கு ஆர்வமே இல்லாத ஒரு விஷயத்தை கட்டாயப்படுத்தினா அதுல மனசு ஒன்றி நான் எப்படி செய்ய முடியும்? எனக்கு தெரிஞ்சதை, எனக்கு விருப்பமானதை நான் செய்யறதுல ஒரு அர்த்தம் இருக்கு..”

“இதே கடையை கட்டிட்டு நாம எத்தனை நாள் தான் இருக்கிறது. நாளைக்கு உங்கப்பா நம்மளை வெளிய அனுப்பினா கூட போறதுக்கு எங்கப்பா வீடு தான்‌ இருக்கு. அப்போ அவர் சொல்றதை கேட்டு வாழ்க்கைல முன்னேறறத்துக்கு ஒரு சான்ஸா எடுத்துக்கலாம் இல்ல.” 

“ரேணு. நீ புரிஞ்சுதான் பேசுறியா. யார் காசும் வேணாம்னு முடிவெடுத்து தானே நம்ம கடையை வச்சோம்.என் மேல நம்பிக்கை இல்லையா..? இந்த குடும்பத்தை விட்டுட்டு அப்படியே போய்ட முடியுமா?” 

“நேத்து வரைக்கும் நானும் அப்படித்தான் இருந்தேன். இன்னிக்கு சாப்பாடு வைக்க போனா உங்கப்பா, நானே போட்டுக்கறேன் இல்ல உங்கத்தை போடட்டும்னு சொல்றார். அப்ப இத்தனை நாள் நான் செஞ்சதுக்கு என்ன அர்த்தம்? உங்க மேல இருக்க கோவத்தை என்‌மேல காமிச்சா சரியா. என்னிக்காவது எங்க வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிருக்கனா? இல்ல எங்க வீட்டு பணத்திமிரை காமிச்சிருக்கனா? போன‌ தடவ மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு நிலத்தை நம்ம வீட்டு ஆளுங்க மேல எழுதுனாங்க.. அதை திருப்பி கொடுத்தாரா உங்கப்பா..? கேட்கனும்னா நானும் கேட்பேன்.. என் மனசிலயும் ஆயிரம் இருக்கு..” 

படபடவென பொரிபவளை மலைத்துப் போய் பார்த்தான். 

“ரேணு. உனக்கு இப்பிடிலாம் கூட கோபம் வருமா. பொறுமையா இரும்மா. நான் அப்பாட்ட பேசறேன்.” 

“வேணாம் பா. இவ்வளவு நடந்தும் உங்கம்மாங்க ரெண்டு பேரும் என்னை ஏன் அப்படி சொன்னாருன்னு கேட்கவே இல்ல.. அதான் என் மனசு ஆறல. அப்ப நாம மட்டும் ஏன் நம்ம வாழ்க்கைய நாமளே அமைச்சுக்க கூடாது.” 

“ரேணு. வரட்டு பிடிவாதத்துல எதாவது செஞ்சு நம்ம குடும்பத்தை நாம இழந்திட முடியாது. அம்மாங்க என்னிக்கு அப்பாவை எதிர்த்து பேசிருக்காங்க.? பின்னாடி வந்து உன்கிட்ட பேசத்தான் போறாங்க. இத்தனை வருஷமா இதானே நடக்குது. அப்புறம் என்ன ரேணு..”

“ஏன்ப்பா நான் தானே எங்கப்பாக்கு இப்ப இருக்க ஒரே வாரிசு. அப்ப நான் ஏன் அவர் விருப்பத்தை நிறைவேத்தக் கூடாது. அதுவுமில்லாம நீங்க கஷ்டப்பறதை தாங்கிக்க முடியல. நம்ம கண்ணு எதிர்க்க ஒரு பிரகாசமான எதிர்காலம் தெரியறப்ப, எதுக்கு இந்த வாழ்க்கையை சிக்கலாக்கிட்டு வாழனும்? அதிகாரம் கைல இருந்தா யாராவது நம்மளை அசிங்கப்படுத்த முடியுமா?” 

“ரேணு எப்போ நீ இப்படி மாறின..? எப்பவும் இந்த வீட்ட நீ விட்டு கொடுக்க மாட்ட. அதுவுமில்லாம என் மனசுக்கு என்ன பிடிக்குதோ அதை மனசார செய்ய சொல்லுவ.. இப்போ ஏன்?” 

“என்னையவே எப்போ இந்த வீடு ஒதுக்க நினைச்சதோ அப்போ நான்‌ மாறறதுல என்ன தப்பு பா.. கொடுத்துட்டே இருக்க முடியாதில்ல. நம்ம கைல அப்ப எதுவும் நிக்காம போய்டும்.”

“சரிதான். ஆனா அரசியல்ல திடீர்னு என்ன போக சொன்னா? எனக்கு பிடிக்கல ரேணு.”

“அப்போ அன்னிக்கு அப்பா சொல்றப்ப ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க. எங்கப்பாக்கு அடுத்து அந்த இடத்துல உங்களை வைக்க நினைக்கிறார். அதுல என்ன தப்பு.”

“சில நேரங்கள்ல பேசாம இருக்கறது தப்பு தான் ரேணு. ஆனா அது மரியாதைக்காக தானே தவிர அதை நாம ஏத்துக்கறோம்னு அர்த்தம் இல்ல” 

“ஏத்துக்கறதுல என்ன பிரச்சினை ?  நமக்கு பின்னாடி லட்சக்கணக்கானவங்க நிக்கறப்ப வர சந்தோஷமும், பொறுப்பும் பெரிய விஷயமில்லையா.?”

“இவ்வளோ பேசற இல்ல. நீயே தேர்தல்ல நில்லேன்.?”

“எது.. நானா. அப்படி அப்பா நினைக்கலையே. அதுவுமில்லாம உங்க வீட்ல அப்படியெல்லாம் நடக்க விட்டிருவாங்களா என்ன?”

“நமக்கு வாய்ப்பு தானே முக்கியம் ரேணு. அதிகார போதை கொடுக்காத உறவா.. லட்சக்கணக்கான பேர் பின்னாடி நின்னா..இந்த குடும்பம் அந்த கூட்டத்தில் கரைஞ்சு போய்டும் ரேணு.”

“உடனே என்னை வில்லியாக்கிட்டீங்க இல்ல.. நான் ஒன்னும் இந்த குடும்பத்தை விட்டுட்டு வாங்கன்னு சொல்லல. உங்களுக்கு எப்படி இந்த குடும்பம் முக்கியமோ அதே மாதிரி என் குடும்பமும் எங்கப்பா கௌரவமும் முக்கியம். அதை விட என் புருஷன் ஒரு எம்எல்ஏ வா இருக்கறப்ப எனக்கு அது பெருமை தானே.”

“ரேணு. முதல் பையனா பொறந்தா அதுவும் ஒரு பெரிய குடும்பத்துல பொறந்திட்டு என்னை மாதிரி எல்லாத்துக்கும் சரின்னு போறது பெரிய தப்புன்னு எனக்கு இப்போதான் புரியுது. இப்போ நான் நியாயத்தை சொன்னாக்கூட உங்க எல்லாருக்கும் ஏதோ நான் சுயநலமா யோசிக்கிற மாதிரி இருக்கு.”

“நான் நம்ம எல்லாருடைய நல்லதை யோசித்து தான் சொல்றேன். சுயநலம் இல்ல இதுல”

“ரேணு. மத்தவங்களுக்கு வேணா என்னை தெரியாம இருக்கலாம். உனக்கு கூடவா. நான்‌ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன். எனக்கு இந்த குடும்பம், ஊரு, நம்ம ஜனங்க, பட்டு, தறி, சங்கம், வியாபாரம்.. இதான் உலகம். இதுக்குள்ள சுத்தி வர

கிணத்து தவளைன்னு வச்சிக்கோயேன். என்னை போய் ஒரு நாட்டுக்கு பிரதிநிதியாவுன்னு சொன்னா முடியுமா..அப்பாட்ட நீயே சொல்லிடு. என்னை விட தகுதியானவங்க நிறைய பேர் இருக்காங்க. ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்க தான் அடுத்தடுத்து வரணுமா என்ன?” 

“இந்த டையலாக்லாம் பேசாதீங்க. அப்பா உங்களை நல்லா வழிநடத்துவார்.‌ ஒரு தடவை நேர்ல போய் மக்களை பார்த்தா அந்த ‘வைப்’ உங்களுக்கே பிடிச்சிடும். அதுவுமில்லாம நீங்க எம்எல்ஏ ஆகிட்டா இன்னும் இந்த ஊருக்கு நல்லது செய்யலாம் இல்ல. “ 

“ரேணு. புரிஞ்சுக்க நான் நாளைக்கு திருச்சி போறேன். வா படுக்கலாம்.காலைல சீக்கிரம் போகனும்.” 

அவனையே அழுத்தமாக பார்த்தாள். 

“ப்ளீஸ் ரேணு. புரிஞ்சுக்க. பிடிவாதம் வேணாம்.” அவளது கையை மெல்ல பிடித்து அவன் அருகில் இழுத்தான். அவனது கெஞ்சும் கண்களை விட அவனது எதிர்கால வாழ்க்கையே ரேணுவுக்கு பெரிதாகப் பட்டது. 

“உங்களுக்கு மட்டும் தான் குடும்பம், அப்பா, கௌரவம் இதெல்லாம் முக்கியம். எனக்கு இருக்க கூடாதில்ல. எங்கப்பா கேட்டு நான் சரின்னு சொல்ல கூட எனக்கு உரிமையில்லை. ஏன்னா நான் இந்த வீட்டு மருமக. அப்படித்தானே.”

“ரேணு. எதுக்கு இவ்வளோ பேசற. நான் என்னிக்காச்சும் அப்படி சொல்லிருக்கனா. இது வாழ்க்கை பிரச்சினைமா..”

“சரி அப்போ நான் அப்பாக்கு கால் பண்றேன். நீங்களே வர மாட்டேன்னு சொல்லிடுங்க” 

என அவசரம் அவசரமாக அவளின் அப்பாக்கு அழைத்தாள். முதல் முறையாக சலிப்போடு ரேணுவை பார்த்தான் மருதன். 

அன்புச்செல்வம் மருதனோடு பேசி முடிக்கும் போது அவனின் சமாளிப்புகளும், விளக்கங்களும் பயனில்லாது போனது. 

அரை மணி நேரம் பேச்சில் அவனை ஒத்துக் கொள்ள வைத்திருந்தார். மருதனின் விட்டுக்கொடுக்கும் தன்மை இன்று அவனுக்கே எதிராய் வந்து நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!