Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 18 ( PART 01 )

 

செந்தாமரை சொன்னது சற்று ஏமாற்றம் தான். வெற்றிச்செல்வன் அப்படி ஒன்றும் கட்டாயப்படுத்தும் ரகமில்லை. ஆனால், அமைதியாக இருக்கும் ரகமும் இல்லையே! அவனுக்கும் காதல் மனைவி மீது நிறையப் பிரியம் இருக்கிறதே! ஆகவே அவள் இப்படி புறக்கணிப்பாகச் சொல்லவும் அவனுக்கு மிகுந்த ஏமாற்றம். அதோடு ‘என்ன கோபம்?’ என்று அவளிடம் கேட்டால், அதை மதித்து பதில் கூடச் சொல்ல மாட்டேன் என்கிறாள் என்பதில் வேறு அவனுக்குக் கோபம் எழுந்தது.

 



Advertisement

மேற்கொண்டு அதுகுறித்து எதுவும் பேசாமல், பால்கனி கதவைத் திறந்து அங்கிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவளது உண்மை மனநிலையைக் கூட பகிர்ந்து கொள்ள மறுக்கிறாளே என்ற எண்ணம் அவனை இலகுவாக இருக்கவிடவில்லை.

 

கோபத்தில் போகிறான். வந்துவிடுவான் என்று அலட்சியமாக நினைத்துப் படுத்துக் கொண்டாலும், செந்தாமரைக்கு உறக்கமே வரவில்லை. அவன் உள்ளே வருவானா, வருவானா என்று பார்த்துக் கொண்டே இருக்க அவனும் வருவதாய் இல்லை.

Advertisement

 

Advertisement

அதற்கு மேலும் அப்படியே படுத்துக் கிடக்க மனமில்லாமல், அவளே எழுந்து அவனிடம் சென்றாள்.

 

அவள் வந்தது தெரிந்தும் அவன் கண்டு கொள்ளவில்லை. தூரத்தில் தெரிந்த வெண்ணிலவையும், அதை தழுவி செல்லும் மேகக்கூட்டங்களையும், கண்சிமிட்டி சிரிக்கும் விண்மீன்களையும்… விழியசையாது பார்த்துக் கொண்டிருந்தான். சிறு அசைவு கூட அவனிடம் இல்லை.

Advertisement

 

‘அழுத்தக்காரன்’ என மனதில் கடிந்தவள், அவனாகப் பேசப் போவதில்லை என்பதையறிந்து, “நீங்க தூங்கலையா?” என்று கேட்டாள்.

 

அவள் புறம் திரும்பாமலேயே, “உனக்கு தூக்கம் வருதுன்னு சொன்னதா தான் ஞாபகம்” என்றான். அவனது குரலிலிருந்த வெறுமை, அவளை வெகுவாக அசைத்தது.

 

[the_ad id=”6605″]

 

 

 

அவனுக்குப் பதில் சொல்லும் வேகத்துடன், “அதை சொல்லிட்டு, தூங்குவோம்ன்னு சேர்த்துச் சொன்னதா எனக்கு ஞாபகம்” என்று அவள் சொல்ல,

 

“உனக்கு தூக்கம் வந்தா நீ தாராளமா தூங்கலாம். எனக்குத் தூக்கம் வரும்போது வந்துப்பேன்” என்று வேகமாகப் பதில் தந்தான். அவள் புறம் திரும்பும் எண்ணம் இன்னும் வரவில்லை.

 

மேற்கொண்டு என்ன பேச என அவளுக்கு புரியவில்லை. என் கோபம் எனக்கு? இப்பொழுது இவருக்கு என்னவாம்? முகத்தைக் கூட பாக்க மாட்டாரா? என நினைத்தவளுக்கு, அவனை அங்கே தனியே விட்டு செல்லவும் மனம் வரவில்லை.

 

“வாங்க வெற்றி…” என்றாள் மீண்டும். மெல்லிய கெஞ்சல் குரலில்.

 

“என்ன பிரச்சனை உனக்கு? தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தானே! என்னை எதுக்கு தொல்லை பண்ணற?” என்று எரிந்து விழுந்தான்.

 

அவள் மீது அதிக பிரியம் வைத்திருப்பவன். திருமணத்திற்கான அனைத்து எதிர்பார்ப்பும் காதல் கணவனாய் அவனுக்கும் இருக்கிறது. ஏதோ, வேறு விஷயங்கள் அழுத்திக் கொண்டிருக்க, இவளிடம் இரண்டு மாதங்களாகச் சரியாகப் பேச முடியவில்லை. இப்பொழுது அனைத்தும் முடிவுக்கு வந்திருக்க, காதலனாய், கணவனாய் இயல்புக்கு திரும்பியிருந்தான். இந்த சூழலில், அவளை அருகில் வைத்துக் கொண்டு அவனால் எப்படி விட்டு விலகி உறங்க முடியும்?

 

அதை அவளிடம் நேரடியாகவா சொல்ல முடியும்? அதுதான் ஒதுங்கி நிற்கிறான். இப்பொழுதும் வந்து தொல்லை தந்தால், அதனால் தான் கத்தி விட்டான்.

 

செந்தாமரையின் முகம் வாடிவிட்டது. “ஆமா, ரொம்ப தொல்லை பண்ணறேன். உங்களை?” என முணுமுணுப்பாகக் கூறிவிட்டு, உள்ளே போய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று பரிதாபம் எழுந்தது. இந்த சூழலில், அவளுக்குக் கோபத்தை இழுத்துப் பிடிக்கவும் தெரியவில்லை. சமாதானம் பேசவும் மனம் வரவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

 

அவளது வாடிய தோற்றத்திலும், கரகரத்த குரலிலும், ‘சரியான இம்சை!’ எனச் சலித்தபடி உள்ளே சென்றவன், விளக்கைப் போட்டான்.

 

“உனக்கு தூக்கம் வருதுன்னு சொன்ன, அப்பறம் எப்படி நான் இங்க இருக்க?” என்று அவள் முன் வந்து தோரணையாக நின்று, கையை கட்டிக் கொண்டு அவளிடம் கேட்டான்.

 

அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் எனப் புரியாமல் பார்த்தாள் அவனின் மனைவி.

 

அவனோ அவளது கையைப்பற்றி எழுப்பி அழைத்துக் கொண்டு போய், அங்கிருந்த கண்ணாடி முன்பு நிறுத்தி, “அழகா இருக்கியா?” என்று கேட்டான்.

 

‘எதற்கு இப்படிக் கேட்கிறான்?’ எனப் புரியாமல், கண்ணாடியையும் அவனையும் மாறி மாறி பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்ல எனத் தெரியவில்லை.

 

திருதிருவென விழித்தவளிடம், “உன்னைக் கல்யாணம் செய்யணும்ன்னு ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சிருக்கேன். என் வீட்டிலேயோ, உன் வீட்டிலேயோ நம்ம கல்யாணம் விஷயமா உன்னை எதுவும் பேசச் சொன்னேனா? இல்லை தானே! உன் வீட்டுல உன்னோட அம்மா, அப்பா, எங்க வீட்டுல என்னோட அம்மா, பாட்டி, தம்பி… என ஒருத்தர் விடாம எல்லார்கிட்டேயும் உன்னை கட்டிக்கணுன்னு சொல்லிக் கேட்டு, கன்வீன்ஸ் பண்ணி… அத்தனையும் நானே தனியா பண்ணி இருக்கேன். எனக்கு கல்யாணம்ன்னா எவ்வளவு ஆசை இருக்கும். உன்னை என்ன கடிச்சா திங்க போறேன். கிட்ட வந்தா தள்ளி போற, உள்ள வந்ததும் தூக்கம் வருதுன்னு சொல்லற? கல்யாணத்துல முகம் கொடுத்துக் கூட பேச மாட்டீங்கிற?” என அடுக்கிக் கொண்டே செல்ல, அவள் வாயைப் பிளந்தாள்.

 

‘அடப்பாவி இதெல்லாம் நான் சொல்லணும் டா’ என்று அவளின் மனம் கதறியது. கல்யாண ஆசை இவனுக்கு மட்டும் தானா? தனக்கில்லையா? என் ஆசைகளை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைத்து விட்டானா? நான் முதலில் சொல்லவில்லை என்றால் என் மீதே குற்றம் சொல்லி விடுவானா? இவன் முதலில் முந்திக்கொண்டு சொல்லிவிட்டதால், இப்பொழுது நான் குற்றவாளி விடுவேனா? என்பது போல அவனைப் பார்த்தாள்.

 

“என்ன என்ன பார்வை? போ போய் தூக்கம் வந்தா தூங்கு, கண்டிப்பா என்னால உன் கிட்ட சும்மா எல்லாம் தூங்க முடியாது. நான் இங்க இருந்தா, கண்டிப்பா உன்னால தூங்க முடியாது. நான் உன்னைத் தூங்க விட மாட்டேன். நான் பேசாம அங்க தூங்கிக்கறேன். கதவை சாத்திக்க” என பால்கனியை கை காட்டினான்.

 

“ஆமா, நீங்க அப்படியே நமக்கு கல்யாணம்ன்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சுட்டீங்க” என அவள் எரிச்சலில் முணுமுணுக்க,

 

“என்ன என்ன சொன்ன?”

 

“ஏன் இத்தனை நாளா என்னைக் கண்ணு தெரியலையா? இன்னைக்கு மட்டும் என்ன அக்கறை?”

 

“என்ன உளறுற?”

 

“ஆமாம் வேண்டுதல். அதான் உளறுறேன்… ரெண்டு மாசமா என்னைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை நீங்க? உண்மையை சொல்லுங்க என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டபொழுது அவளது குரல் உடைந்திருந்தது.

 

“பைத்தியமா நீ? இந்த கேள்விக்குப் பதில், உனக்குத் தெரியாதா?” என்று கடிந்து கொண்டான்.

 

“உங்களுக்கு என்னைப் பிடிக்கும் தான். அதுக்கு மூல காரணம், நான் உங்க அப்பா தேர்ந்தெடுத்த பொண்ணு அப்படிங்கிறதால…” மூக்கு விடைக்க, விழிகள் சிவக்க கூறியவளை ஆத்திரத்தில் வெறித்துப் பார்த்தான்.

 

செந்தாமரை சொல்லியதில் வெற்றிச்செல்வனுக்கு கோபம் தான் வந்தது. “எத்தனை முறை இதே சந்தேகம் உனக்கு வரும்? நீ நம்புனா நம்பு. நம்பாட்டி போ…” என எரிச்சலாக கூறியபடி அங்கிருந்து பால்கனிக்கு நகரப் போனவனை,

 

“ரெண்டு மாசமா என்னை ஏன் அலைக்கழிக்கணும்?” என்று கேட்டு நிறுத்தினாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“குழந்தை மாதிரி பேசாத மாஹி, நான் வேற பிரச்சனையில இருந்தேன். இப்ப தான் அதெல்லாம் சரியாச்சு. உன்னை பிடிக்கும்ன்னு தினமும் எல்லாம் என்னால உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. உன் பின்னாடியே எப்பவும் என்னால சுத்திட்டே இருக்க முடியாது. நான் இப்படி தான். இதெல்லாம் எங்கிட்ட எதிர்பார்க்காத… எனக்கு வரவும் வராது” அவளது மன முதிர்ச்சியின் அளவில் எழுந்த எரிச்சலை முயன்ற மட்டும் மறைத்து பல்லைக் கடித்தபடி கூறினான்.

 

“பாருங்க கோபம் எனக்கு… ஆனா, இங்க நான் உங்களைச் சமாதானம் பண்ண வேண்டியதா இருக்கு. எனக்கு மேல உங்களுக்குக் கோபம் வருது” என்றாள் கவலையான குரலில்.

 

“அதுக்கு முதல்ல உன் கோபம் என்னன்னு சொல்லணும். நான் என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்டீங்கற… அப்பறம் எப்படி எனக்குத் தெரியும்?”

 

“அதான் சொல்லிட்டேனே, ரெண்டு மாசமா நீங்க என்னைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை”

 

“என்ன உளறல் இது? உன்கிட்ட பேசலைன்னா உன் மேல அக்கறை இல்லைன்னு அர்த்தம் வந்திடுமா? இல்லை உன்னை நினைக்கலைன்னு அர்த்தம் வந்திடுமா?” என்றான் எரிச்சலை மறையாத குரலில்.

 

“சும்மா சமாளிக்காதீங்க. நான் எவ்வளவு எதிர்பார்த்திருப்பேன். உங்ககிட்ட பேசணும், உங்களை பார்க்கணும்ன்னு…, நமக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு இந்த எதிர்பார்ப்பு கூட எனக்கிருக்காதா?”

 

“நீ சொல்லியிருந்தா வந்திருக்க போறேன்” இதில் என்ன இருக்கிறது என்கிற பாவனையில் அவன் சொல்ல, இவனுக்கு எப்படி விளக்குவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

 

அவளது பேச்சற்ற மௌனத்தில், “என்ன பதிலையே காணோம்…” என வெற்றி மீண்டும் கேட்க,

 

“உங்களுக்கு தோணலை தானே என்னை பார்க்கணும்ன்னு…” உதடுகள் துடிக்க அவள் கேட்ட விதத்தில், அவனால் அவளிடம் கோபத்தைக் காட்ட முடியவில்லை. அவளது விழிகளுக்குள் தேங்கியிருந்த நீர் வேறு அவனை வெகுவாக பாதித்தது.

 

“எனக்கு வேற பிரச்சனை. அதைத் தவிர வேற எதையும் என்னால யோசிக்க முடியலை” என்றான் விளக்கம் தரும் விதத்தில். அவள் கலங்குவதால், தன்போல விளக்கம் சொல்ல தோன்றியது கணவனுக்கு.

 

“என்கிட்ட அதைச் சொல்லி இருக்கலாம் தானே! நான் எல்லாத்துக்கும் உங்களைத் தான் தேடுனேன். உங்களைத் தான் எதிர்பார்த்தேன்” தவிப்பும், ஏக்கமுமாகக் கேட்டவளின் விழிகள் இத்தனை நேரம் செய்த போராட்டத்தை மீறிக் கசிந்திருந்தது. அது மேலும் பெருகாமல் இருக்க, அவள் அதிக பிரயத்தனம் செய்தாள்.

 

அழுகையைச் சிரமப்பட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கும் பெண்ணை அருகில் இழுத்து அணைத்தவன், “என்ன மாஹி, நான் செஞ்ச வேலை… ம்ப்ச்… அது கொஞ்சம் பிரச்சனையானது டா… என்ன வரும், எப்ப வரும்ன்னு பார்த்துட்டே இருக்கணும். கொஞ்சமும் மிஸ் பண்ணிட கூடாது. அதான் இந்தமாதிரி சமயத்தில வேற எதிலேயும் என் கவனம் போகாது. நான் என்ன செய்யறேன்னு யாருக்கும் சொல்லவும் முடியாது. கொஞ்சம் கான்பிடென்ஷியலா செஞ்சு முடிக்க வேண்டிய வேலைகள்… புரிஞ்சுக்கவேன். என்கூட காலத்துக்கும் கூட இருக்கப்போறது நீ தான், நீ என்னை புரிஞ்சுக்கிட்டா மட்டும் தான் என்னால நிம்மதியா என்னோட வேலைகளைச் செய்ய முடியும்” என்றான் புரிய வைக்கும் நோக்கத்துடன்.

 

திருமண ஏக்கங்களைச் சுமந்த இரண்டு மாத தவிப்பும், அவன் மார்பில் கண்ணீராய் இறங்கியது. “ம்ப்ச்… அழாத மாஹி” என்று கூறியவன், ஆறுதலாக முதுகை வருடித் தந்தான்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!