Skip to content
Post Views: 200

அத்தியாயம்-10
“ஆன்ட்டி… சார் அனுபவிச்ச வேதனையை என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியல.. நீங்களும் அங்கிளும் ரொம்ப மோசமான சூழ்நிலையை கடந்து வந்திருக்கீங்க.. எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. யாருக்குமே இவ்வளவு கஷ்டம் வரக் கூடாது ஆன்ட்டி,” என்றாள் தண்மதி வேதனையோடு.
“ஆமா மா.. பாவம் இந்த சின்ன வயசுல.. இவனுக்கு எவ்வளவு பெரிய சோதனையை அந்த கடவுள் கொடுத்துட்டாரு.. இதையெல்லாம் நினைச்சா.. சாமி கும்பிடக் கூட எனக்கு மனசு வராது. ஆனாலும் என் மனகஷ்டத்தை வேற யார்கிட்ட சொல்றது? அந்த பெருமாளை விட்டா வேற யாரைத் தெரியும் எனக்கு.. அதனால இன்னமும் அவனை கும்பிட்டுட்டு இருக்கேன்..” என்றார் விரக்தியாக,
Advertisement
“ஆதி சார்.. கார் ஓட்டாததுக்கு ரீசன் இந்த ஆக்சிடெண்ட் தானா?”
“ஆமா.. இன்னமும் அவன் கார் ஓட்ட மாட்டான்.. அவனுக்கு ஆக்சிடெண்ட் பண்ணிடுவோமோன்னு பயம். முடிஞ்ச வரைக்கும் கார்ல கூட ஏறமாட்டான்.. அந்த ஒரு விஷயத்தை மட்டும் என்ன ட்ரை பண்ணினாலும் மாத்தமுடியல. அந்த அளவுக்கு ஆழமான காயம் பட்டிருக்கு அவன் மனசுல..”மாலா ஆன்ட்டி மிகுந்த வேதனையுடன் பெருமூச்சு விட்டார்.
‘இது தெரியாம நான் வேற ரெண்டு வாட்டி அந்த காயத்தைக் கிளறி விட்டுட்டேனே..’ என்று தன் முட்டாள்தனமான நடத்தைக்காக மனம் வருந்தினாள்.
Advertisement
“உன்னைப் பார்த்தது எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? நீ ஆதியை திரும்ப பழையபடி மாத்திடுவன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி..” – மாலா ஆன்ட்டியின் முகத்தில் ஒரு புதிய ஒளி தெரிந்தது.
Advertisement
“என்ன ஆன்ட்டி சொல்றீங்க..? நான் எப்படி..?” மதி குழப்பத்துடன் கேட்டாள்.
“ஆதிக்கு எப்பவுமே உன் மேல ஒரு தனி பாசம், தெரியுமா..? பெங்களூர்ல இருந்தப்ப.. எப்பவும் உன்னைப் பத்திதான் பேசிட்டு இருப்பான். ‘மதி இன்னைக்கு இப்படி பண்ணா.. அப்படி பேசினா’ன்னு.. ஏதாவது சொல்லுவான்… அங்கிருந்து வந்த பின்னாடியும் ஃபோன் பண்ணும் போதெல்லாம் உன்னைப் பத்தி கேட்காம ஃபோனை வைக்க மாட்டான்.”
“என்ன கேட்பாரு ஆன்ட்டி..?” அவள் ஆர்வத்துடன் கேட்டாள்.
Advertisement
“நீ எப்படி இருக்க? என்ன பண்ற? நல்லாப்படிக்கிறியா..?சந்தோஷமா இருக்கியா? இப்படி கேட்பான்… கடைசியா.. திருப்பதிக்கு போகும் போது ஃபோன் பண்ணும் போது கூட, ‘மதிக்கு ரிசல்ட் வந்துடுச்சா.. என்ன மார்க் வாங்கி இருக்காளோன்னு கேட்டான்.”
மதியின் கண்கள் கலங்கியது..
‘அவருக்கு என்மேல எப்பவும் அக்கறை உண்டுன்னு எனக்குத் தெரியும்..’
“என்னோட ஆதி சார்..” என்று அவளுடைய இதயம் பெருமிதத்தில் விம்மியது.
“ஆன்ட்டி நீங்க கவலைப்படாதீங்க.. இனிமேல் அவரை நான் பார்த்துக்கிறேன்…”
“அந்த நம்பிக்கை எனக்கு உன்னைப் பார்த்ததுமே வந்துடுச்சுடி கண்ணம்மா.. இனிமேல் எல்லாம் சரியாகிடும் பாரு..” என்று அன்புடன் அவளது கன்னத்தை வருடினார்.
“இன்னைக்கு டிபன் உனக்கு பிடிச்ச குழிப்பணியாரம் பண்ணிடுறேன், சரியா..?”
“ஆன்ட்டி உங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா?”
“அதெப்படி என் செல்லத்தை நான் மறப்பேன்..?” என்றார் வாஞ்சையுடன்.
“மதி மா.. நீ குளிச்சிட்டு வா.. கொலுவுக்கு வச்சு கொடுக்க வாங்கின சுடிதார்ல ஒன்னு ரெண்டு மிச்சம் இருக்கு.. உனக்கு செட் ஆகுறதை எடுத்துக்கோ.”
மதி தலையாட்டினாள்.
“சரி மா, நான் போய் அங்கிளை எழுப்புறேன்.. இல்லாட்டி.. அவரு தூங்கிட்டே இருப்பாரு.. மனுஷன் ரிட்டையர்ட் ஆகி வேலை வெட்டி இல்லாம, நல்லா சோம்பேறி ஆகிட்டாரு..” அவர் அலுத்த குரலில் கூறிவிட்டு நகர முற்பட்டபோது, மதி கேட்டாள்…
“ஆன்ட்டி, சார் எப்போ ரெடியாவாரு..?”
“அவன் இப்போ வொர்க் அவுட் பண்ணிட்டு இருப்பான்.. ராத்திரி எப்ப தூங்கினாலும் சரி, காலையில 6 மணிக்கு எழுந்து எக்சர்சைஸ் பண்றத மட்டும் விடமாட்டான்.. அவங்க அம்மா பழக்கிவிட்ட பழக்கம், அதை இன்னும் விடாம பண்றான்.. காபி குடிச்சிட்டு, குளிச்சிட்டு, 8 மணிக்கெல்லாம் பிரேக்ஃபாஸ்ட் டேபிளுக்கு வந்துடுவான்.”
மாலா ஆன்ட்டி சென்ற பிறகு, மதி கண்ணாடி முன் போய் நின்றாள்.
“வொர்க் அவுட்… ஓ, இதுதான் அவரோட அந்த ‘வாஷ்போர்டு’ வயிறுக்கு (Washboard stomach) பின்னாடி இருக்கிற ரகசியமா..?”
அவள் பக்கவாட்டில் திரும்பி நின்று, தன் குட்டித் தொப்பையை தொட்டுப்பார்த்தாள்.மூச்சை உள்ளிழுத்து வயிற்றை எக்கியபடி உதட்டைப் பிதுக்கினாள்.
“நாளைல இருந்து நானும் ஜிம்முல சேரப்போறேன்..” என்று மனதிற்குள் உறுதியாக முடிவெடுத்தாள்.
ஆதித்யா அவனது ரூம் பால்கனியின் போட்டிருந்த சேரில் ஆசுவாசமாக சாய்ந்து அமர்ந்து அன்றைய செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தான்.
(இந்த காலத்தில் செய்தித்தாளா? இவன் தான் செய்தித்தாள் படிக்கும் கடைசி தலைமுறையாக இருப்பான் போலும்.)
மதி மெதுவாகக் கதவைத் தட்டினாள்.
“கம் இன்…” என்று கதவை நோக்கிச் சத்தமாக கூறினான்.
கையில் காஃபி கோப்பையுடன் தயங்கிய அடிகளுடன் மதி உள்ளே வந்தாள்.
அந்த அறைக்குள் நுழையும்போதே, நேற்றிரவு நடந்த சம்பவங்கள் அவள் நினைவில் மின்னல் போல வந்து சென்றன, கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாமல் அவன் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தது மட்டுமில்லாமல் அவன் மீது எருமை மாடு மாதிரி மோதியது, பின் கழுத்தைக்கட்டிக்கொண்டு தொங்கியது என அனைத்தும் நிழலாட, அவளது கால்கள் தானாகவே பின்வாங்கின.
அவளது மனவோட்டத்தைத் துல்லியமாகப் படித்துவிட்டவன்,அவளது தர்மசங்கடமான நிலையை கேலி செய்வது போல அவன் உதடு ஏளனத்தில் வளைந்தது.
“மதி..என்ன இன்னிக்கு கதவைத் தட்டி பர்மிஷன்லாம் கேட்டுட்டு வர, நேத்து இந்த ஃபார்மாலிட்டிலாம் பார்த்த மாதிரி தெரியலையே..?”
அவள் சங்கடத்தில் நெளிந்தபடி தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, அவனை முறைத்துப் பார்த்தாள்.
போனால் போகிறது என்று விட்டுவிட்டவன், “என்ன?” என்று கேட்டான்.
அவள் கோப்பையை அவனிடம் நீட்டினாள். அவளது முகத்தையே பார்த்தபடி அவன் கோப்பையை வாங்கினான்.
வாங்கும் போது அவனது கரம் ஒருகணம் தயங்க,அவனது தயக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட மதி,
“இன்னைக்கு நான் குடிச்சுப் பார்க்கவே இல்லை..”
என்று தான் என்ன சொல்கிறோம் என்று யோசிக்கும் முன்பே உளறிக் கொட்டினாள்.
அடுத்த கணமே நாக்கைக் கடித்துக்கொண்டு
‘இப்போ அவர் கேட்டாரா..? ஏண்டி இப்படி முந்திரி கொட்டை மாதிரி உளறி மாட்டிக்கிற…?’ என்று மனதுக்குள் தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
இம்முறை அவன் புன்னகை நன்றாகவே விரிந்தது.. பிறகு மெதுவாகக் காபியைப் பருகினான்.
இதன் சுவை வித்தியாசமாக இருந்தது.. நேற்று குடித்தது போல இல்லை.. மாலா அம்மா போட்டதாக இருக்கும் என்று நினைத்தபடி, சிறு ஏமாற்றத்துடன் அந்தக் காபியை குடித்தான்.
தண்மதி அளவற்ற பரிவுடனும் அனுதாபத்துடனும் தன்னைப் பார்ப்பதைக் கண்டு சட்டென்று பொங்கிய சினத்தில் தன் கண்களை மூடிக்கொண்டான்.
“எல்லாம் இந்த அம்மாவோட வேலையாதான் இருக்கும்.. கிடைச்சா ஒருத்தின்னு இவகிட்ட எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்காங்க…” என்று மனதுக்குள் புகைந்தான்.
“மதி, உட்காரு..” என்றான் பற்களைக் கடித்தபடி
அவள் மறு பேச்சின்றி அவனது சொல்லுக்குக் கீழ்ப்படிந்தாள்.
“என்ன, அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா? சீரியல் கதை மாதிரி ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்திருக்குமே..” என்று மறைமுகமான குத்தலுடன் கேட்டான்.
ஆனால் அவள் அமைதி காத்தாள்.
“ஏதாவது பேசு… சைலண்டா இருக்கறது உனக்கு செட் ஆகல..”
“ஸாரி..” என்று அவள் மிகுந்த அனுதாபத்துடன் சொல்ல.
“எதுக்கு ஸாரி..? இங்க பாரு.. மத்தவங்க என்னைப் பார்த்து பரிதாபப்படுறது எனக்கு சுத்தமா பிடிக்காது.. சோ அதை நீயும் பண்ணாத..சரியா..?”
இருப்பினும் அவனது துன்பங்களைக் கேட்டு அவள்அடைந்த அந்த வேதனை அவள் முகத்தில் இன்னும் குறையவில்லை.
“இப்போ என்ன, அழப்போறியா? ப்ளீஸ் என் கண்ணுல படாம எங்கையாவது போய் அழறியா? இந்த நான்சென்ஸ் எதையும் நான் பார்க்க விரும்பல..” என்று நெருப்பாய்க் கொதிக்கும் வார்த்தைகளைக் கொட்டினான்.
அவள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு சாதாரணமாக இருக்க முயன்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் கிளம்புறேன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.. அப்புறம் உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ்..”
கணநேர அமைதிக்குப்பின்,
“அப்போ உனக்கு என்னை முன்னாடியே தெரியும், இல்லையா? அதான் முதல்முறை பார்க்கும்போது என்னை ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி நடந்துக்கிட்ட..!!”
அவள் ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தாள்.
“ஆனா அதெல்லாம் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை.. தெரிஞ்சுக்க ஆசையும் இல்லை.. என்னை பொறுத்தவரை.. நீ என்னோட டீம் மேட், அவ்வளவுதான்.. நத்திங் மோர்..நத்திங் லெஸ்… கிளியரா…?”
“எஸ்.. சார்.”
“அப்புறம் முக்கியமான விஷயம்… எனக்கு பழைய கதையை ஞாபகப்படுத்துறேன்னு கோமாளித்தனமா ஏதாவது பண்றது.. நீங்க அப்போ அதை சொன்னீங்க, இதை சொன்னீங்கன்னு.. ஏதாவது ஆரம்பிச்ச, அப்புறம் நீ என்னோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்.. நான் எல்லா நேரமும் இப்படி நல்லவனா இருக்க மாட்டேன்…” என்று எச்சரித்தான்.
“ஆமா இப்ப அப்படியே ஏசுநாதர் மாதிரி பொறுமையா இருக்காரு பாரு..” என்று மனதிற்குள் நினைத்தாலும் அவள் வெளியே சொல்லவில்லை..
“இங்க பாரு.. எனக்கே தெரியாத என்னோட கடந்த காலத்தைப் பத்தி நான் விவாதிக்க விரும்பல.. அது எப்படி இருக்குன்னா.. எப்படின்னா…” அவன் பேசத் தடுமாறினான்.
“என்னால புரிஞ்சுக்க முடியுது…” அவன் சிரமப்படுவதைப் பார்த்த மதி மென்மையாகச் சொன்னாள்.
“இல்ல, உன்னால முடியாது.. உனக்கு புரியவும் செய்யாது.. என்னை பத்தி எனக்கே தெரியாம இருக்குற விஷயங்கள் எல்லாம்.. யாரோ சம்பந்தமே இல்லாத மூணாவது மனுஷங்களுக்குத் தெரியறது எவ்வளவு கொடுமை தெரியுமா? நான் ஏதோ முழுமை அடையாதவன் மாதிரி ஃபீல் பண்ண வைக்குது.. எனக்கு ஏதோ குறை இருக்கற மாதிரி, உடம்புல ஒரு உறுப்பு இல்லாத மாதிரி இருக்கு.. அது எந்த அளவுக்கு எரிச்சலா இருக்கும் தெரியுமா? உனக்கு அது புரியாது.. ஜஸ்ட் லீவ் இட்..” என்று தன் மொத்த, ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தவன் பிறகு தன்னைத் தானே நிதானப்படுத்திக் கொண்டான்.
தன்னைச் ‘சம்பந்தம் இல்லாத மூணாவது மனுஷி’ என்று அவன் சொன்னதைக் கேட்ட மதியின் இதயம் வலியால் துடித்தது.
‘நான் சம்பந்தம் இல்லாதவளா…?’ என்று கத்த வேண்டும் போல இருந்தது, ஆனால் அவனது தற்போதைய நிலையை நினைத்துத் தன்னைத்தானே தடுத்துக்கொண்டாள்.
“சரி நீகிளம்பு.. அப்புறம் இன்னொரு விஷயம், இத பத்தி யார்கிட்டயும் சொல்லாதே.. நான் உன்னை நம்பலாம்னு நினைக்கிறேன்…”
“நிச்சயமா சார்..” என்று உறுதியாகச் சொன்னாள்.
“சொன்னது ஞாபகம் இருக்குல்ல? என்னோட கடந்த காலத்தைப் பத்தி பேசக்கூடாது..”
அவள் தலையசைத்துவிட்டு நடக்கத் தொடங்கினாள்.
அவளிடம் எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டோம், அவள் தன் பேச்சைக் கேட்பாள் என்று ஆதித்யா நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான்.
ஆனால் அவ்வளவு எளிதாகப் பேச்சைக் கேட்டுவிட்டால் அவள் மதி அல்லவே?
போகும்முன் ஒரு கணம் நின்று, லேசாக அவன் பக்கம் திரும்பி,
“சார்.. நான் ட்வெல்த் மேத்ஸ்ல சென்டம் (Centum)..” என்று பளிச்சிடும் புன்னகையோடு சொல்லிவிட்டு,மறுகணம் சிட்டாக அங்கிருந்து பறந்துவிட்டாள்.
அவன், ‘வாட் த ஹெல்…’ என்பது போலப் புருவத்தைச் சுருக்கினான். பிறகுதான் அவள் அவர்களது கடந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
“கடவுளே, இந்தப் பைத்தியத்த வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ.. கடந்த காலத்தைப் பத்தி பேசாதேன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகல.. அதுக்குள்ள ஞாபகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.. இனி இந்த ஆர்வக்கோளாறு என்னென்ன கூத்து பண்ணப் போகுதோ…?” என்று பெருமூச்சு விட்டான் ஆதித்யா..
தொடரும்..
error: Content is protected !!