Skip to content
Post Views: 132
.ஆகாயமே என் ஆதாரமே 11
அடுத்தநாள் காலை உணவை மண்டபத்திலேயே முடித்துவிட்டு இரு வீட்டினரும் கிளம்பினார்கள். மாமாவும் அத்தையும் கொண்டுபோய் விடுவார்கள் என்றுவிட்டு ராதையும் கிருஷ்னனும் தங்கி விட்டார்கள். முதல்நாளே காலை முஹூர்த்தம் முடிந்தவுடன் ரமணியும் அவள் கணவரும் வேலை இருக்கிறது எண்டு மதிய விமானத்தில் தில்லிக்கு கிளம்பிவிட்டார்கள். அவளது இரண்டு பிள்ளைகளும் இப்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள்.ஒருவனுக்கு திருமணம் முடிந்து விட்டது.இன்னொருவன் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டானாம். இதை சொல்லும் பொழுது ரமணிக்கு அவ்வளவு பெருமை. திருமணம் ஆன பையன் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறான்.அவனது மனைவியின் அப்பா ஒரு ஐஏஎஸ் ஆபீசராம்.நல்ல சொத்தும் இருக்கிறது. அதனாலேயே ரமணியும் அவள் கணவரும் ஒப்புக் கொண்டார்கள்.
அவர்கள் முதல் நாள் மதியம் கிளம்பும் பொழுது அவர்களுக்கு என்று இனிப்புகளும் கார வகைகளும் நன்றாக பேக் செய்து கொடுத்தாள் ராதா. ரமணி மறந்து வைப்பது போல கிளம்பும் ஜோரில் தாங்கள் தங்கி இருந்த அறையிலே விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.அது மட்டும் அல்ல.கிருஷ்னன் எடுத்துக் கொடுத்திருந்த பட்டுப் புடவையும், அவள் கணவருக்கான வேட்டி சட்டையும் கூட கவர் பிரிக்காமல் அந்த அறையில் இருந்தது.
அவர்கள் கிளம்பிய பிறகு அந்த அறைக்கு சென்ற சுதாவின் மூத்த மகன்தான் பார்த்துவிட்டு வந்து தனது அம்மாவின் காதில் சொல்லி சென்றது.கேட்ட சுதாவுக்கே ஒருமாதிரியாக இருந்தது. ரமணி மீது அப்படி ஒரு கோவம். இதென்ன,இவர்கள் பெரிய இடம் என்றால் நம் வீட்டு விசேஷங்களுக்கு வராமல் இருக்கட்டும்.கொடுத்த மரியாதையை இப்படியா அவமதிப்பார்கள் என்று தனது கணவரிடம் சொல்லி புலம்பினாள். அவமதிக்கப் பட்டது அவரின் தங்கை ராதாவும் அல்லவா …அவருக்கும் கோவம் பொங்கியது. அதனால் என்ன ஆகப் போகிறது? அமைதியாக இருந்து விட்டார்கள்.
Advertisement
பெண்ணை புகுந்த வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக அவர்களுடன் சுதாவும்,அவளது கணவரும் வந்தார்கள்.கூடவே அவர்களது இரண்டு மகன்களும் ,மருமகள்களும்,மூத்த மகன் வயிற்று பேத்தியும் வந்திருக்க அந்த சிறு குழந்தை ராகவனின் தங்கை குழந்தையுடன் விளையாட ஆரம்பித்து விட்டது.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஜானகியை விளக்கேற்ற சொன்னார்கள்.அவளும் விளக்கு ஏற்றினாள் .இருவருக்கும் பால் பழம் கொடுத்தார்கள். அவளது சூட்கேசுகள் மூன்று வந்திருந்தது.அவை மூன்றும் ராகவனின் அறையில் வைக்கப் பட்டது. எல்லோருக்குமான காபியை கலந்து எடுத்து வந்தாள் ராகவனின் தங்கை. அவள் பேசவும் பழகவும் மிகவும் இனிமையானவளாக இருந்தாள் . தான் அழகு என்றோ, பணக்காரி என்றோ அவளிடம் கர்வம் இல்லை. சுதாவிடம் மரியாதையாக நடந்து கொண்டாள் . சுதாவின் இரு மருமகள்களிடமும் நன்றாக சிறிது பேசினாள் .
சுதாவின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அவளை நிரம்ப பிடித்துவிட்டது. அந்த பெண்ணின் மாமியார் ,மாமனார் ,கணவர் ,நாத்தனார் என்று எல்லோருமே அங்கே வந்திருந்தார்கள். எல்லோருக்குமே தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்த பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?
Advertisement
சுதா தனது கணவரிடம் மெதுவாக சொல்லவே செய்தார்.”இந்த பொண்ணு ரும்பவே நல்ல விதமாக இருக்கா. கலகலபாவும் பழகுறா.பாக்கவும் ரொம்பவே அழகு. தன்மையானவளா இருக்கா. ஆனா,ஜானகிக்கு நிச்சயம் இவளை பிடிக்காம போயிரும். அவளுக்கு பழகவே தெரியாது. சுதா சொல்வதில் இருக்கும் பொருள் புரிந்து சுதாவின் கணவர் அமைதியாக நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தார்.
Advertisement
கொஞ்சநேரம் மணமக்கள் இருவரும் ஹாலில் இருந்தார்கள். பிறகு பெண்ணை விட வந்தவர்கள் ,”விருந்துக்கு நிச்சயம் வரவேண்டும் ” என்ற அழைப்புடன் கிளம்பிவிட்டார்கள். ஜானகியும் ராகவனும் அவர்களது அறைக்கு சென்றுவிட, ராகவனின் தங்கை குடும்பமும் அவர்களுக்கு சென்னையில் இருக்கும் வீட்டுக்கு கிளப்பிவிட்டார்கள்.
ராகவனின் அம்மா தானும் தனது அறைக்கு சென்றுவிட வீடு அமைதியாக இருந்தது. மாலை நேரம் ராகவனும் ஜானகியும் அருகில் இருந்த பிள்ளையார் கோவில் வரை சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்தார்கள்.இருவருக்குமான ஹனிமூன் என்று ராகவன் ஊட்டிக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட்டும்,ஊட்டியில் அறையும் பதிவு செய்திருந்தான்,இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பவேண்டும்.
அடுத்தநாள் காலையில் இருவரும் ஜானகியின் பிறந்த வீட்டுக்கு மறுவீடு அழைப்பிற்காக சென்று வந்தார்கள்.ராகவனின் அம்மா நிதானமாக ஒதுங்கி கொண்டார். அவருக்கு புரிந்தது.மகனது வாழ்க்கையில் இனி அவர்கள் வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று அவரது மனம் யோசித்தது. அவருக்கோ பென்சன் பணம் வருகிறது.இந்த வீட்டை கணவர் தனக்குப் பிறகு மனைவிக்கு என்றுதான் உயில் எழுதி வைத்திருந்தார்.
Advertisement
ஒருவேளை மகனும் மருமகளும் தன்னை தள்ளி வைத்தாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அவருக்கு தோன்றியது.
வீடு,பணத்துடன் கணவர் வைர மூக்குத்தி, தோடு என்றும் வாங்கி கொடுத்திருந்தார். ஏதேதோ குழப்பங்கள் அவரது மனதை ஆக்கிரமிப்பு செய்தது. வீட்டில் இருந்த அந்த இரண்டு நாட்களும் ராகவனும் ஜானகியும் சாப்பிடும் பொழுது தவிர வெளியே வரவே இல்லை.இருவரும் இன்னும் ஒரு வாரத்திற்கு அலுவலக விடுப்பு எடுத்து இருக்கிறார்கள்.
மூன்றாம் நாள் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பி,கோவை சென்றவர்கள் அங்கேயே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார்கள். அன்று ராகவன் தான் வேலைக்கு சேர்வதாக இருக்கும் கம்பெனிக்கு காலையில் கிளம்பி சென்று வந்தான். மாலை நேரம் இருவருமாக கோணியம்மனை தரிசித்துவிட்டு வந்தார்கள். அடுத்த நாள் காலையில் இருவருமாக பீளமேடு சென்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு அங்கே இருக்கும் பூசை செய்பவரிடம் ,” சாமி, எனக்கு இங்கேயே வேலை ஆகிருச்சு. இந்த கோவிலை சுற்றி ஏதாச்சும் டபுள் பெட்ரூம் வீடு கிடைக்குமா?” என்று கேட்டுப் பார்த்தான் ராகவன். அவர் கோவில் நிருவாகியின் வீடு ஒன்று காலியாக இருப்பதாக சொல்லி ,நிருவாகியின் அலைபேசி எண்ணை கொடுத்தார்.கோவிலில் நின்றபடிக்கே ராகவன் அவரை அழைத்து பேச அடுத்த அரை மணி நேரத்தில் காலியாக இருக்கும் வீட்டை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் ஜானகி ராகவன் இருவரும்.ஜானகிக்கு அந்த வீடு நிரம்ப பிடித்து இருந்தது. கொஞ்சம் அமைதியான பகுதி. அருகிலேயே ஆஞ்சநேயர் கோவிலும் இருந்தது.இவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் வீட்டிலிருந்து பேருந்து நிலையம் வெறும் ஐந்து நிமிஷ நடைதான்.
அட்வான்ஸ் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட,வீட்டின் சாவியை இங்கே வரும் பொழுது வாங்கிக் கொள்ளுமாறும்,அடுத்தநாள் வந்து வீட்டுக்கான அக்ரிமெண்ட் கையழுத்து விடுமாறும் அவர் சொல்லிவிட்டார். ராகவன் சேர்வதாக இருக்கும் நிறுவனத்தில் தான் அந்த வீட்டின் உரிமையாளர் வேலை செய்து ரிடையர் ஆகி இருந்தார். அதனாலேயே ராகவனுக்கு வீடு எளிதாக கிடைத்தது. அன்று மாலை கிளம்பி ஊட்டி சென்றவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கே தான்.
திகட்டாத ஒரு தேன் நிலவு.இருவருக்குள்ளும் புதியதாக ஒரு உரிமை உணர்வை கொடுத்தது. ஆசையை பரிமாறிக் கொண்டார்கள். ராகவன் மீது பித்தானாள் ஜானகி. மனைவியை கொண்டாடினான் ராகவன். இருவருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை.ஆனாலும் ஒரு அழகான புரிதல். எனக்காக,என் ஒருவனை மட்டுமே நம்பி எங்கே வரவும் தயாராக இருந்த பெண்ணை அவனுக்கு அவ்வளவு பிடித்தது.
தேன்நிலவு முடிந்து சென்னை வந்த அடுத்த நாளே இருவரும் வேலைக்கு கிளம்பிவிட்டார்கள். ஜானகி வீட்டுக்கு வந்தவுடன் கொஞ்சம் வேலைகள் செய்வாள்.அவளுக்கு இன்னமும் இது தனது வீடு என்ற எண்ணம் வரவில்லை. அடுக்களை மாமியாரின் அடுக்களையாகவே தெரிந்தது.அதனால், அதிகமாக வீட்டு விஷயங்களை கவனிக்க பிடிக்கவில்லை.அவள்மனம் கோவை செல்லும் நாளுக்காக காத்திருந்தது.அங்கே மாமியாரை அழைத்து செல்லும் எண்ணம் அவளுக்கு இல்லை.
ராகவன் அடுத்த பத்து நாளில் சென்னையில் வேலையை விட்டுவிட்டு ,கோவை கிளம்பினான்.அப்போதுதான் அவனது அம்மாவுக்கே அவன் வேறு வேலையில் சேர்வது தெரியும். ஜானகியும் தனது வேலையை கோவைக்கு மாற்றிக் கொண்டாள் .இருவரும் கிளம்பவேண்டும் எனும் பொழுதுதான் கிருஷ்னன் ராதாவுக்கு சொன்னார்கள். பெண்ணை பெற்றவர்கள் திகைத்தார்கள். திருமணம் முடிந்து முழுதாக இன்னமும் ஒரு மாதம் கூட ஆகவில்லை.அதற்குள் இப்படி ஒரு மாற்றமா…என்று அவர்களுக்கு இருந்தது. மகளுக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரிந்து இருக்கலாம் என்று புரிந்து கொண்டார் கிருஷ்ணன்.அவருக்குள் லேசாக ஒரு கசப்பு பரவியது. பெற்றவர்களுக்கு கூட சொல்லாமல்,இது என்ன அதிகபிரசங்கிதனம் என்று உள்ளுக்குள் நொந்து கொண்டாலும் இருவரையும் வாழ்த்தி அனுப்ப தவறவில்லை.
ராகவனின் அம்மாவோ,”நா இங்கே சென்னையில் இருக்கிறேன் ராகவா. நீங்க இப்போதான் புதுசா கல்யாணம் ஆனவங்க. ரெண்டுபேரும் கொஞ்ச நாள் தனியா இருங்க”என்று சொல்லி பார்த்தார்.ராகவன் மறுத்துவிட்டான்.
“எதுக்கு,கல்யாணம் ஆன கையோட ராகவன் அம்மாவை தனியா விட்டுட்டான்ன்னு எல்லோரும் பேசவா… கிளம்புற வழியை பாருங்கம்மா “என்றுவிட்டான்.நிச்சயம் ராகவனின் ந்த முடிவு ஜானகிக்கு அதிர்ச்சி தான் என்றாலும் காண்பித்துக் கொள்ளவில்லை. சிரித்த முகமாகவே காண்பித்துக் கொண்டாள் .
மருமகளுக்கு தான் அவர்களுடன் வருவது பிடிக்கவில்லை என்பது ராகவனின் அம்மாவுக்கு நன்றாகவே புரிந்தது. என்ன செய்வது என்றுதான் புரியவில்லை. மூவருமாக ஒரு நல்ல நாளில் கோவை மண்ணை மிதித்தார்கள். இங்கே வந்தவுடன் கணவன் மனைவி இருவரும் அலுவலகம் செல்வதற்கு தேவையான உணவை விடிகாலையில் எழுந்து ஜானகி தயார் செய்து விடுவாள்.அது நிச்சயம் அவர்கள் இருவருக்கும் டப்பாவில் அடைக்கவும்,வீட்டில் சாப்பிட்டு செல்லவும் தான் இருக்கும்.oru பிடி உணவு மாமியாருக்கென்று இராமல் பார்த்துக் கொண்டாள் ஜானகி.மகனிடம் இதை பற்றி பேச ராகவனின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை.
இத்தனைக்கும் ஜானகி நேரடியாக மாமியாரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதும்,பேசியதும் இல்லை. என்னவென்று மகனிடம் சொல்வது?எத்தனையோ வருஷங்கள் கழித்து திருமணம் நடந்திருக்கிறது.அதுவும் மகனுக்கு தான் தேடித் கொடுத்த மனைவிதான். அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருபப்தை விட வேறு எதுவுமே பெரியதாக ராகவனின் அம்மாவுக்கு தெரியவில்லை.
இந்த நிலைமையில் தான் பெண்ணின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து நிரந்தரமாக இந்தியா வந்து விட்டார்கள்.அதுவும் பெங்களூருவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் தான் மாப்பிள்ளைக்கு வேலை. உதவிக்கு வர முடியுமா என்று பெண் கேட்க,இதுதான் வசதி என்று ராகவனின் அம்மா பெங்களூரு புறப்பட்டுவிட்டார்.
ராகவன் பெரியதாக எதுவும் சொல்லவில்லை.தங்கைக்கு இப்போது அம்மாவின் உதவி தேவை எனும் அளவில்தான் அவனது எண்ணம். ராகவன் தினமும் இரவு வருவதற்க்கு தாமதம் ஆனது. வேலை பளு அதிகமாக இருந்தது. அலுவலகத்திலேயே அவனுக்காக கார் கொடுத்து இருந்தார்கள்.இதுவரை கார் ஓட்ட தெரியாது என்பதால் அதற்க்காக வேறு பயிற்சிக்கு சென்றான். ஆங்கில வகுப்பு வேறு இன்னொருபக்கம் ஓடிக்கொண்டுஇருந்தது.
ராகவன் ஜானகி இருவருக்குமான தனிப்பட்ட நேரம் குறைந்தது. ராகவன் வீட்டில் இருக்கும் நாட்களில் ஜானகிக்கு மருத்துவமனையில் ட்யூட்டி இருக்கும். அவள் சென்றுதான் ஆகவேண்டும்.மனைவியை வேலையை விட சொல்லி ராகவன் சொல்வதாக இல்லை.ஏதுவாக இருந்தாலும் அவளது விருப்பம் முக்கியம் என்று நினைத்தான். ஜானகிக்கும் மருத்துவமனையில் வேலை பிழிந்து எடுத்தது.வீடு வரும் பொழுது சக்கையாக உணர்வாள் .மாமியார் வீடாக இல்லாமல் தனது வீடாக இருக்க வேண்டும் என்று அதிகமாக பிரயர்த்தனப்பட்டாள் .
இருவருக்குமான தனிமையும், நேரமும் நிச்சயம் தேவை என்று உணர்ந்தவர்கள் இரண்டு நாட்களுக்கு அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊட்டி சென்று வந்தார்கள். காமத்தை தாண்டிய காதல் இருவருக்கும் இருக்கிறது. மனைவியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ராகவனின் மனதில் இருக்கிறது. கணவனை கொண்டாடும் நிலையில் ஜானகி.
error: Content is protected !!