Skip to content
Post Views: 104
மறுநாள் காலையில் வேலைக்குச் செல்லக் கிளம்பி வந்தவன், உணவு மேசையில் காலை உணவு அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கசப்பான சிரிப்பை உதிர்த்தான்.
‘பணம் தான் இவ்வளவு வேலை பார்த்திருக்கிறதா?’ என்று நிதர்சனம் புரிந்து கொண்டவனால் ஒரு விஷயத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. தன் மகன் குடிகாரனாக இருந்தாலும் அவனை விட்டுக் கொடுக்காத தாய்மார்களை அவன் கண்டிருக்கிறான். ஆனால், இப்படி ஒரு சுயநலமிக்க தாயை இதுவரை அவன் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை…
பணம் கொடுத்ததும் வீட்டில் தனக்கான வேலைகள் நடக்கிறதென்றால், அவனுக்கு அது வீடாகவே தெரியவில்லை… மாறாக, சொந்த வீட்டிலேயே வாடகைக்குக் குடியிருப்பது போல இருந்தது.
இவையெல்லாம் நினைக்கையில் நெஞ்சை அடைக்க, ஏனோதானோவென்று சாப்பிட்டு விட்டுச் சென்றுவிட்டான்.
Advertisement
அவன் சென்றதும் வெளியே வந்த மதிவதனி தாயிடம், “என்னம்மா புதுசா உன் மகன் மேலே பாசம் சுரக்குது? என்ன, கத்தையாகப் பணத்தைப் பார்த்ததும் பாசம் பொங்கி வழியுதோ! அந்தப் பணத்தைக் காட்டியே அவன் அருணோட பழக வேணாம்னு சொல்லுவான்; நீயும் சரின்னு சொல்லிடுவியோ! அப்படி மட்டும் சொல்லிப் பார், நடப்பதே வேற!” என எகிறினாள்.
“அடியே! அம்மா அப்படிச் சொல்வேனா? நீ பிடிச்சது புளியங்கொம்புடி. இவன் கொடுக்குற பிஸ்கோத்து காசுக்காக உனக்கு அமைஞ்ச வரனை விட முடியுமா? அதேநேரம் இந்தப் பணத்தையும் விடக் கூடாது. இவன் இப்போ நல்லாச் சம்பாதிக்கிறான், இவன் சொல்றதை கொஞ்சம் கேட்டுத்தான் ஆகணும். இல்லேன்னா, ‘நான் சம்பாதிக்கிறேன், இனி நான் ஏன் இந்த வீட்டுல இருக்கணும்?’னு அவன் போயிட்டா காசு வராதுடி! அதேநேரம் அவனுக்குப் பிடிச்ச வாழ்க்கையை அவன் அமைச்சுக்கிட்டா, வந்தவளுக்குத்தாண்டி அந்தப் பணம் போகும்! வளர்த்தது நாம, வாழ்றது அவளா? அவன் இங்கதான் இருக்கணும், இந்தப் பணத்தை என்னால விட்டுக் கொடுக்க முடியாது! உனக்கு நகை சேர்த்து வைக்க வேணாமா? அவன் காசுல உனக்கும் எனக்கும் நகைச்சீட்டு போட்டு வச்சுப்போம்… கொஞ்சம் அவன் பேச்சைக் கேட்கிறது போல நடி, மீதியை நான் பார்த்துக்கிறேன். நமக்குப் பணம் தான் முக்கியம்,” எனச் சுயநலத்தின் மறுஉருவமாகப் பேசினார் கற்பகம்.
மதிவதனிக்கும் இது சரியெனப் பட்டதால் தலையை ஆட்டிக்கொண்டாள். ‘பணம் பிணத்தையே வாய் திறக்க வைக்கும்’ போது, இவர்கள் எம்மாத்திரம்.
Advertisement
அன்றிலிருந்து கற்பகம் அவனை முன்பு போலக் குத்திக்காட்டிப் பேசுவதுமில்லை, அதே நேரம் பாசத்தையும் பொழிந்துவிடவில்லை. அப்படியே பாசம் இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும் அவன் கண்டுபிடித்து விடுவான் என்பதால், இயல்பாக இருப்பது போலவே காட்டிக்கொண்டார். ஆனால், இதுவும் பணம் கொடுத்ததால்தான் தனக்குக் கிடைக்கிறது என்பது அவனுக்குத் தெரியும்.
Advertisement
அவனது குரலில் ஈர்க்கப்பட்டு நிறைய விளம்பரங்களுக்கு டப்பிங் செய்ய வாய்ப்புகள் குவிந்தன. அதனால், அவனுக்கு இதையெல்லாம் எண்ணிக் கவலைப்பட நேரமும் இல்லை. வரும் வாய்ப்புகளுக்கெல்லாம் சரியென்று சொல்லி, தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டான்.
ஆனால் மதுராவோ, மதியூரனின் நினைப்பிலேயே இருக்கிறாள். இப்போது கதை ஆசிரியர்கள் அவளை அணுகினாலும், “மதியூரன் குரலையும் சேர்த்து வாசிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ள, இவளோ மறுத்துவிடுகிறாள்.
இப்போதெல்லாம் அவளுக்குக் கதை வாசிப்பதில் ஆர்வம் வருவதில்லை. அதில் வரும் காதல் வசனங்களும் சிணுங்கல்களும் அவளுக்கு அவனையே ஞாபகப்படுத்தின. இருவரும் சேர்ந்து வாசித்துச் சிரித்த நாட்களை நினைவூட்டியதால் கண்ணீர் சுரந்தது. அதைத் துடைக்க மனமில்லாமல் அப்படியே சில நேரம் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவளது தாயின் மனமும் கனத்துப் போனது. நாட்கள் செல்லச் செல்ல, மகளை இவ்வாறு பார்க்க அவரால் முடியவில்லை.
Advertisement
இவளது மாற்றத்திற்கான தீர்வு ஏனோ மதியூரன் கையில் இருப்பதாக எண்ணிக் கொண்டவர், அவனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அன்று கதைப் புத்தகமொன்றைக் கையில் வைத்தபடி எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மது. அவளைத் தேடி மெல்ல நடந்தபடி அருகில் வந்தார் மரகதம்.
“பாப்பா…” என்ற அழைப்புக்கு அவளிடம் பதில் இல்லை. மீண்டும் “பாப்பா” என்றார், அப்போதும் எந்தப் பதிலும் இல்லை. அவள் தோளைத் தொட்டு, “பாப்பா” என்றதும் திடுக்கிட்டாள்.
“அம்மா! என்னம்மா? ஏதாவது வேணுமா?” என்று எழுந்து, தாயைத் தாங்கிப் பிடித்து அருகே அமர வைத்தாள்.
“என்ன பாப்பா என்னாச்சு? ஏன் எதையோ வெறிச்சுப் பார்த்துட்டு அமர்ந்திருக்க?” என அவளது தலையை வருடிக்கொண்டே கேட்டார்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லைம்மா! சும்மா படிச்சிட்டு இருந்தேன், கவனம் எங்கோ போயிடுச்சு,” என்று புத்தகத்தை மூடியபடி சொன்னாள்.
“இப்பெல்லாம் நீ பழைய மாதிரி இல்லை மது! உன் அழகான சிரிப்புதான் அம்மாவுக்கு மருந்தே! அதை நீ இப்பெல்லாம் அம்மாவுக்குக் கொடுக்கிறதே இல்லை! எந்த நேரமும் இப்படியே இருந்தா என்ன பாப்பா? நான் வேணும்னா மதியூரன் தம்பிகிட்ட பேசவா?”
அவர் பேசப் பேசத் தலைகுனிந்து அமர்ந்திருந்தவள், கடைசி வாக்கியத்தைக் கேட்டதும் நிமிர்ந்து, அவரை லேசான கோபத்தோடு பார்த்தாள்.
“என்ன பேசப் போறீங்க?”
“உனக்காகப் பேசறேன், உன் காதலைப் புரிய வைக்கிறேன்… உன்னைகக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்கிறேன்,” என்றார்.
விரக்தியாகச் சிரித்தவள், அவரை வெறித்துப் பார்த்து, “அவர் எதிர்பார்க்கிற நிறத்துல நான் இல்லைம்மா! இதுல எப்படி என்னைக்கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிப் கேட்பீங்க? நீங்கதானே சொன்னீங்க… அந்தத் தம்பியோட விருப்பத்துல தவறு சொல்லிட முடியாதுன்னு. அப்புறம் எப்படிம்மா கட்டாயப்படுத்துவீங்க?! வேண்டாம்மா, இதோட விட்ருங்க… இதப் பத்தி அவர்கிட்ட பேச வேண்டாம்…”
“சரி, இதப் பத்திப் பேச வேண்டாம்! ஆனா, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கண்ணீரும் கம்பலையுமா உட்கார்ந்து வெறிச்சுப் பார்த்துட்டே இருப்ப? உன்னை இப்படி என்னால பார்க்க முடியலம்மா! இருக்கிற நோய்தான் என்னை வாட்டுதுன்னா, நீயும் இப்படி இருந்து என்னை வாட்டாதே! இருக்கிற கொஞ்ச நாள் உன்னைச் சந்தோஷ முகத்தோட பார்த்திட்டுப் போகணும்னு நினைக்கிறேன் மது,” என்றதும் பதறிப்போனவள்,
“அம்மா என்ன பேசுற? அதெல்லாம் இன்னும் நிறைய நாள் என் கூட இருப்பம்மா நீ! இப்படிலாம் பேசாதே!” என்றாள்.
“இருந்து உனக்கு ஒரு நல்லது நடக்கவிடாமல் தடுக்கிறேனே!”
“ப்ச்!!! நீங்க ஒன்னும் தடுக்கலம்மா! எனக்கு எப்போ நல்லது நடக்கணும்னு இருக்கோ அப்போ நடக்கும். இதைச் சொல்லி உங்களையும் என்னையும் கஷ்டப்படுத்திக்காதீங்க ப்ளீஸ்!”
“சரி! ஆனா அம்மா ஒண்ணு கேட்பேன், என்னைத் திட்டக் கூடாது.”
“என்னம்மா?”
“எனக்கு மதி தம்பிகிட்ட பேசணும்! சும்மா தான் பேசணும். போன் போட்டுத் தர்றியா?” என கெஞ்சிக் கேட்டவரை வித்தியாசமாகப் பார்த்தாள்.
அவருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டுச் சிகிச்சை தொடர்ந்த நாளிலிருந்தே, அவர் யாரிடமும் அதிகமாகப் பேசிக் கொள்வதில்லை. வீட்டை விட்டு வெளியே வருவதும் இல்லை.வீடே கதியென்று இருந்தார். தொடர் சிகிச்சையால் முடிகளை இழந்து, மொட்டையடித்து, முகமே பொலிவிழந்து போனதிலிருந்து யாரையும் பார்க்க விருப்பமில்லாமல் இருந்தார். அவரைத் தேடி வந்து பேசச் சொந்தங்களும் வரவில்லை; அவருடன் வேலை பார்த்த ஆசிரியர்களும் வரவில்லை. நன்றாக இருக்கும்போது அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவரின் நிலை இதுதான்!
அவரது தங்கை கூட ஏதேனும் விஷயம் இருந்தால் மட்டுமே எட்டிப் பார்த்துவிட்டுப் போவார். அன்பாக அருகே அமர்ந்து பேசியது மதியூரன் மட்டும்தான். அவன் வந்த கொஞ்ச நாட்களிலேயே ஒரு மகனைப் போல, ஒரு நண்பனைப் போல அவருடன் பழகியிருக்க, அந்தப் பழக்கத்தில்தான் அவனுடன் பேச வேண்டும் என்று ஏக்கமாகக் கேட்டார்.
ஏனோ அவர் கேட்டதை அவளால் மறுக்க முடியவில்லை. நோய்வாய்ப்பட்டதிலிருந்து அவர் ஆசைப்பட்டுக் கேட்பதெல்லாம் மிகக் குறைவுதான். இன்று அவ்வாறு கேட்டதும் எப்படி மறுப்பது? அவருக்காகவே அவனிடம் பேச வேண்டும் என்று அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
முழுதாக ரிங் போய் கட் ஆனது. அவன் எடுக்கவில்லை. ஐந்து முறைக்கு மேல் அழைத்துப்பார்த்தாள், அப்போதும் எடுக்கவில்லை.
“எடுக்கலைம்மா, வேலையா இருப்பார் போல.”
“சரிம்மா… வேலை முடிச்சுட்டுப் பார்த்ததும் எடுத்துப் பேசுவான்,” என்று அவருக்குள்ளே சமாதானம் செய்து கொண்டார்.
ஆனால் அவனோ அழைக்கவே இல்லை. நாட்கள் நகர்ந்தன. மீண்டும் ஒரு முறை மரகதம் மதியூரனிடம் பேச வேண்டும் என்று மதுராவிடம் கேட்டுக்கொள்ள, அவளும் அழைத்தாள்.
அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது. “யூரன், அம்மா…!” எனத் தொடங்கியவளை, “நா… நான் கொஞ்சம் பி.. பிஸியா இருக்கேன்… அ… அப்புறம் பே பேசறேன் துரா,” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான். அவளுக்கு முகத்தில் அடித்தது போல இருந்தது.
தாயிடம், “டப்பிங்ல இருக்கார் போலம்மா, அப்புறம் கூப்பிடுறேன்னு சொல்றார்,” என்றவளுக்குத் தொடர்ந்து பொய்யுரைக்க மனமில்லை.
இப்படியே நாட்கள் செல்ல, மரகதத்தின் உடல்நிலை மிக மோசமடைந்தது. கடைசி கீமோ ஊசி போட்டு வந்த மறுநாள் அவருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எவ்வளவு முயன்றும் அது நிற்கவில்லை. மருத்துவர்கள் அவரை அழைத்து வரச் சொல்லிவிட்டனர். அவளுக்கோ மரகதம் இருந்த நிலையில் உதவி தேவைப்பட்டது. எதிர் வீட்டில் இருந்த இருவரும் வெளியூர் சென்றுவிட்டனர். சித்தி வீட்டில் அவசரத்திற்கு அழைத்தபோது யாரும் அலைபேசியை ஏற்கவில்லை. திண்டாடிப் போனவள், வேறு வழியில்லாமல் மதியூரனுக்கு அழைத்தாள்.
இரண்டு மூன்று முறைக்குப்பின் அழைப்பு ஏற்கப்பட்டது. “யூரன்…” என்று அவள் பதற்றமாகக் கூப்பிட்டதைக் கூட உணராதவன், “துரா! நா நா நான் கொ கொ கொஞ்சம் பி… பி . பிஸியா இருக்கேன். போ… போன் எ… எ… எடுக்காததுலயே தெ தெ தெரிஞ்சுக்க வே வே வேணாமா? ஏ… ஏன் தி.. தி… திரும்பத் திரும்ப அ… அடிச்சு எ… என்னைத் தொந்தரவு செய்ற? இ… இ… இப்போ உ.. உனக்கு எ… எ… என்ன வேணும்? சீக்கிரம் சொல்லு, எ… எ… எனக்கு வே.. வே… வேலை இருக்கு,” என்றான்.
“சாரி யூரன்! இனி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன், கால் பண்ண மாட்டேன். உங்களைத் தொந்தரவு செய்ததற்கு என்னை மன்னிச்சிடுங்க,” என்று கூறி அலைபேசியை அணைத்தவளுக்கு, அவன் ஒரு துரோகியாகத்தான் தெரிந்தான்.
கார் புக் பண்ணிருக்க வீட்டு வாசலில் வந்து நின்றது. யாருடைய உதவியும் இல்லாமல் அவள் தன் தாயைத் தூக்கிக் கொண்டு போய் உள்ளே அமர வைத்தவள், இதர பொருள்களோடு கிளம்பிவிட்டாள்.
மரகதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் மிகவும் மோசமாகிப் போனது. ஊசிகளும் மருந்துகளும் உடலைத் துளைத்து உள்ளே செலுத்தப்பட்டன. வலியில் கண்ணீரோடு அவர் அலற, இவளால் அதைப் பார்க்க முடியவில்லை.
காலையிலிருந்து மாலை வரை துடித்த உடம்பு அடங்கிவிட்டது. உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகத் துடித்துக் கொண்டிருந்த உயிர், மொத்தமாக உடலிலிருந்து பிரிந்துவிட்டது. கடைசியாகச் செலுத்தப்பட்ட கீமோவின் வீரியம் தாங்க முடியாமல், உடலின் சத்துக்கள் கழிவுகளாக வெளியேறியதோடு உயிரும் பிரிந்தது.
மருத்துவர்கள் சொன்ன செய்தியைக் கேட்டு மருத்துவமனையே அதிர, “அம்மா…” எனக் கத்தி அழுதாள் மதுரா!
மருத்துவமனைக்கு வந்த அனைவரும் அவளைப் பரிதாபமாகப் பார்த்துச் சென்றனர். சொந்தங்கள் யாரும் உடன் இல்லாமல், தாய் மட்டுமே அனைத்து உறவாக இருந்தவளுக்கு இன்று அதுவும் இல்லாமல் போனதை நினைத்துக் கதறி அழுதாள். இனி தாய் தன்னோடு இருக்கப் போவதில்லை என்ற எண்ணமே நெஞ்சில் மிகப்பெரிய வலியைத் தந்தது. அந்த வெற்று உடலின் மீது படுத்துக் கதறி கதறி அழுதாள். எதிர் வீட்டு ரம்யாவும் அவளது கணவனும் விஷயம் கேட்டு ஓடிவந்து, மரகதத்தின் நிலை கண்டு அதிர்ந்தனர். பின்னர் அவளது சித்திக்கு விஷயம் சொல்ல, அவர் குடும்பமே அடித்துப் பிடித்து வந்து அழுது தீர்த்தனர்.
மருத்துவமனையில் இதர வேலைகளை முடித்து உடலை எடுத்துப் போகச் சொல்லும்போது, “அண்ணா! அம்மாவை நேரா சுடுகாட்டுக்கே கூட்டிட்டுப் போயிடலாம், வீட்டுக்குக் கொண்டு போக வேணாம்,” என்றாள் மதுரா.
“என்ன பேசுற நீ? வீட்டுக்குக் கொண்டு போகணும், நிறையச் சடங்குகள் செய்யணும், சொந்தக்காரங்களுக்குச் சொல்ல வேணாமா? அவங்க வந்து பார்க்க வேணாமா? நாளைக்குச் சடங்குகளோடுதான் உன் அம்மாவை அனுப்பி வைக்கணும்,” என்று சித்தி சொல்ல,
“போதும் சித்தி, இதுக்கு மேல என் அம்மாவோட உடலைக் கஷ்டப்படுத்த வேண்டாம். கொண்டு போய் எரிச்சிடலாம். அப்புறம் சொந்தங்களுக்கு எதுக்குச் சொல்லணும்? நல்லா இருக்கும் போதோ, நோய் வந்து துடித்த போதோ பார்க்க வராதவங்க, பிணமாகக் கிடக்கும் போது எதுக்கு வரணும்? யாரும் வர வேணாம். நான் சொன்னப்படியே செய்யுங்க,” என்றாள்.
அவள் சொன்னபடியே நவீன முறையில் அவரது உடல் எரிக்கப்பட்டுச் சாம்பல் மட்டுமே மிஞ்சியது. அதை அழுதுகொண்டே வாங்கிக் கொண்டு தனியாக இல்லம் வந்து சேர்ந்தாள். தாயுடன் சென்றவள், திரும்பி வரும்போது வெறும் சாம்பலுடன் தனியாக உள்ளே வந்தாள். அவரது அறைக்குச் சென்று, கீழே அமர்ந்து, அவர் படுத்திருந்த கட்டிலிலேயே சாய்ந்து கதறி அழுதாள். அவளது நிலையைக் காண முடியாமல் ரம்யாவும் அவளது கணவனும் தவித்தனர்
error: Content is protected !!