மறப்பதில்லை மதிமுகம்-16

அத்தியாயம்16
“ஶ்ரீநிதி அப்படியே பார் பக்கம் போய் பார்க்கலாமா..?” என்று நவீன் அழைக்க,
“ம்ம் போலாம்.. ஆதி நீங்க வர்றீங்களா?”
Advertisement
“அவன் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் கூட ஹெல்துக்கு நல்லதில்லைன்னு தொட மாட்டான். அப்படி ஒரு மியூசியம் பீஸ்..” என்று நவீன் கிண்டல் செய்ய, ஶ்ரீநிதி சிரித்தாள். பின் இருவரும் பாரை(bar) நோக்கிச் சென்றனர்.
ஆதித்யாவும் தண்மதியும் மட்டும் தனித்துவிடப்பட்டனர்.
“நீங்க ட்ரிங்க் பண்ண மாட்டீங்களா?”
Advertisement
“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு..? எனக்கு அதுல விருப்பம் இல்லை அவ்வளவுதான்.”
Advertisement
“ஆனா இந்த காலத்துல இது ரொம்ப பெரிய விஷயம்..” என்றவளின் குரலில் கொஞ்சம் மெச்சுதல் தெரிந்தது.
“நான் இந்த மாதிரி பார்ட்டிக்கு இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் வர்றேன்.. ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு.”
அவன் இதழில் குறு நகையுடன் அவளது ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையில் நவீனும் ஶ்ரீயும் திரும்பி வந்தனர்.
Advertisement
ஶ்ரீநிதி கையில் ஒயின் கிளாசுடன் இருப்பதைப் பார்த்து மதி அவளது காதில் ரகசியமாக,
“ஹே ஶ்ரீ.. என்ன நீ ட்ரிங்க் பண்ற? ரொம்பத் தப்பு..” என்றாள் கண்டிக்கும் குரலில்,
“மதி.. இதுவெறும் ஒயின் தான். என்னைக்காவது ஒருநாள் குடிக்கறதுல தப்பில்லை. நீயும் ட்ரை பண்றியா?”
“சிவ சிவா.. நான் இதையெல்லாம் தொடவே மாட்டேன்..”
“வேஸ்ட்டி நீ.. உன்னோட ஆளும் உன்னை மாதிரி தான் போல.. உங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகிடும்..” என்று ஶ்ரீ கிண்டல் செய்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு, ஶ்ரீநிதி மதியை இழுத்துக்கொண்டு டான்ஸ் ஃபுளோருக்குச் சென்றாள். இருவரும் உற்சாகமாக ஆடத் தொடங்கினர்.
நவீன் மதுவில் மூழ்கியிருக்க, ஆதி நடனமாடிக்கொண்டிருந்த மதியையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
டான்ஸ் ஃப்ளோரில் கூட்டம் அதிகமாக இருந்தது. சில இடிமாடுகள் ஆடும் சாக்கில் பெண்களை உரசிக்கொண்டிருந்தனர்.
மதி தன் முதுகில் யாரோ தொடுவதை உணர்ந்தாள். முதலில் அது தற்செயலாக இருக்கும் என்று நினைத்து நகர்ந்து சென்றாள். ஆனால் மீண்டும் மீண்டும் அது தொடர்ந்தபோது, அது திட்டமிட்ட செயல் என்று அவளுக்குப் புரிந்தது. அவள் கோபத்துடன் திரும்பி இடித்தவனை முறைத்தாள். ஆனால் அவன் ஒரு கேவலமான சிரிப்பை உதிர்த்துவிட்டு,
“சாரி பேப்(babe).. கூட்டமா இருக்கிற இடத்துல இதெல்லாம் சகஜம்தான்..” என்று கூறி கண்ணடிக்க,
அவனை அறைய மதி கையை ஓங்குவதற்குள், ஒரு வலிமையான கரம் அவளைப்பற்றி இழுத்தது. அடுத்த நொடி அவள் ஆதியின் மார்பில் மோதி அவன் இரும்புப்பிடியில் இருந்தாள். முதலில் திகைத்தவள் அது யார் என்று தெரிந்ததும் பிடிமானத்திற்கு அவனது தோள்களைப் பிடித்துக்கொண்டு அவனை கேள்வியுடன் ஏறிட்டுப்பார்த்தாள்.
ஆதி மதியைத்தன் கையணைப்பில் நிறுத்திக்கொண்டு அந்த ஆளின் காலில் ஓங்கி ஒரு மிதி மிதிக்க,வலியில் துடித்தவன் இவனைப் பார்த்து முறைக்க,
“ஓ சாரி பட்டி(buddy).. கூட்டமா இருக்கிற இடத்துல இதெல்லாம் சகஜம் தான்..” என்று அதே வசனத்தை எளனத்துடன் கூறினாலும் அவன் பார்வை மட்டும் எதிராளியைக் கொன்றுவிடுவது போல இருந்தது.பயந்துபோன அந்த ஆள் கூட்டத்திற்குள் புகுந்து மறைந்தான்.
மதியைப் பாதுகாப்பாக அணைத்தபடி, அவள் காதோரம் குனிந்து கிசுகிசுப்பான குரலில்
“அவனை ஒரு அறை விட்டிருக்க வேண்டியதுதானே?”
“எங்க அதுக்குள்ள நீங்க முந்திகிட்டீங்க..”
இரைச்சலான இசைக்கு நடுவே இருவரும் காதோரம் நெருங்கிப் பேசிக்கொண்டனர். அவன் மெல்ல அவளுடன் இணைந்து ஆடத் தொடங்கினான்.
“உனக்கு இன்னும் இந்த மாதிரி பார்ட்டி பிடிச்சிருக்கா?”
“நிச்சயமா.. எவனோ ஒரு பொறுக்கிக்காக நான் ஏன் என் சந்தோஷத்தை இழக்கணும்?”
“டான்ஸ்னா உனக்கு அவ்ளோ பிடிக்குமா மதி?”
“ரொம்ப புடிக்கும்.. உங்களுக்கு?”
“எனக்கு அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை.. ஆனா உனக்கு நல்ல பார்ட்னரா இருப்பேன்..”
அவனது கரகரப்பான மயக்கும் குரல் அவளை மூச்சடைக்க செய்ய, பேசும் போது காதோரம் லேசாக உரசிய அவன் உதடுகள் அவள் ஹார்மோன்களில் ஹார்மோனியம் வாசித்து அவளது இதயத் துடிப்பு வகைதொகையில்லாமல் கூட்டியது. அவனது நெருக்கத்திலும் தீண்டலிலும் மதியின் மூளையில் வாணவேடிக்கை நடந்துகொண்டிருக்க,
ஆதித்யாவும் தனது இயல்பில் இல்லாமல் யாரோ மந்திரித்து விட்டது போல முற்றிலும் மாறிப் போயிருந்தான். அந்தப் புதிய சூழலும், அவர்களது இந்த நெருக்கமும் இருவரின் மனதிற்குள் வளர்ந்து வரும் தாபத்திற்கு தூபம் போட்டது.
அவன் அவளை மெதுவாக ஒரு சுற்று சுழற்றி, மீண்டும் தன் அணைப்பிற்குள் இழுத்துக் கொண்டான். அவள் ஆச்சரியத்துடன் அவனை ஏறிட்டு,
“என்ன பண்றீங்க நீங்க?”
“டான்ஸ் ஆடுறேன்.. அப்போதானே அந்த மாதிரி பொறுக்கிகளை எல்லாம் தள்ளி வைக்க முடியும்..”
அவனது குரலில் வெளிப்பட்ட அந்த உரிமை அவளை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
ஒருவருக்கொருவர் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில், இருவருமே நிலைகுலைந்துதான் போனார்கள்.
அப்போது இசை மெல்ல மாறி ஒரு மென்மையான தமிழ் காதல் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
சாமி சிலை போல பிறந்து பூமியில நடந்தாயே..
தூசியென கண்ணில் விழுந்து
ஆருயிர கலந்தாயே..
கால் மொளச்ச ரங்கோலியா,
நீ நடந்து வாரே புள்ள.
கல்லு பட்ட கண்ணாடியா,
நான் உடைஞ்சு போறேன் உள்ள!
ஆதி தன் நிதானத்தை முற்றிலும் இழந்தவனாக, அவளது கூந்தலோரம் குனிந்து,அவளின் மயக்கும் இனிய நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்துத் தன் நுரையீரலை நிரப்பிக் கொண்டான்.
ஜாடையில தேவதைய,
மிஞ்சிடுற அழகாக
பார்வையில வாசனைய,
தூவிடுற வசமாக!
அவளது முதுகு அவனது மார்பில் அழுந்தியிருக்க, அவளை பின்னாலிருந்து தழுவியபடி நின்றவன், அவளது கையை மென்மையாக பற்றி தன் இதழ்களுக்கு அருகே கொண்டு சென்று அவளது உள்ளங்கையில் ஒரு மென் முத்தத்தைப் பதித்தான். அந்தத் தீண்டலில் முதுகுத்தண்டில் மின்சாரம் பாய உயிர்வரை சிலிர்த்தது மதிக்கு. அதிர்ச்சியில் வாய் பிளந்து அவனைத் திரும்பிப்பார்த்தாள்; இருவர் பார்வையும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டன. உலகையே மறந்தார்கள்.
ஊரு அழகி, உலக அழகி,
யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி, பாப்போம் பழகி…
அவளது அகன்ற விழிகளில் தெரிந்த ஏக்கம் அவனது அத்தனை கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிய மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவன் போல, அதிர்ச்சியில் லேசாகத் திறந்திருந்த அவளது சிவந்த அதரங்களை சிறைசெய்ய மெல்லக் குனிந்தான்..
அப்போது, திடீரென பாடல் நின்று புதுவருடம் பிறக்கப்போகும் நள்ளிரவு கவுண்டவுன் தொடங்கியது,அவனது மயக்கம் முற்றிலும் கலைய சட்டென்று அவளிடமிருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டு தள்ளிநின்றான்.
“டென், நைன், எயிட், செவன்..”
பெருமூச்சுடன் தலை முடியைக்கோதி தன் கட்டுக்கடங்காத உணர்ச்சிவேகத்தைக் கட்டுப்படுத்த முயன்றான்.
”சிக்ஸ், ஃபைன், ஃபோர், த்ரீ, டூ, ஒன்..”
வாணவேடிக்கைகளின் சத்தத்தையும் தாண்டி “ஹேப்பி நியூ இயர்” என்ற கொண்டாட்டக் குரல்கள் அந்த இடமெங்கும் எதிரொலித்து வானைத் தொட்டது.
“என்னடா பண்ற நீ? உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?” என்று தன்னையே திட்டிக்கொண்டான் ஆதித்யா.
மதியும் மிகவும் சங்கடமாக உணர்ந்தாள். படபடக்கும் இதயத்துடனும்,நாணத்தில் சிவந்த முகத்துடனும் மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்ள,அவள் அவன் பக்கம் திரும்பி மெதுவாக,
“ஹேப்பி நியூ இயர் சார்..” என்றாள். தன் மெல்லிய குரல் அவனுக்குக் கேட்டிருக்குமா என்று அவள் சந்தேகப்பட்டாள்.
“ஹேப்பி நியூ இயர் தண்மி..” என்று அதே கரகரப்பான குரலில் பதிலளித்தான் ஆதி.
“என் வாழ்க்கையிலயே இதுதான் பெஸ்ட் நியூ இயர் விஷ்…” என்று ஒரு வெட்கப் புன்னகையுடன் தனக்குள் நினைத்துக் கொண்டாள் மதி.
மதியின் மீது தனக்கு ஏற்பட்ட அந்த விசித்திரமான எண்ணங்களுக்குப் பிறகு, ஆதி அவளிடமிருந்து இடைவெளியைப் பேணத் தொடங்கினான்
என்ன காரணத்திற்காக இருந்தாலும் இது தவறு என்று அவனது உள்மனம் எச்சரித்தது. ஏற்கனவே உருகுலைந்து போயிருக்கும் தன் வாழ்க்கைக்குள் பூப்போன்ற பெண் மதியை இழுத்து வர அவனுக்கு விருப்பமில்லை. அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவள். அவளைப் போன்ற ஒருத்திக்குத் தன்னைப்போன்ற ஒரு துரதிர்ஷ்டசாலி ஒருநாளும் தகுதியானவன் கிடையாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.
பார்ட்டி முடிந்து கிளம்புவதற்காக பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தபோது, நவீன் யாரிடமோ போனில் கத்திக் கொண்டிருப்பதைக் கண்டான் ஆதி. மதியும் ஶ்ரீநிதியும் கவலையுடன் அருகில் நின்றிருந்தனர்.
“நவீன் என்னடா ஆச்சு?”
“ஆதி.. இந்த டிரைவர் கடைசி நேரத்துல கம்பி நீட்டிட்டாண்டா.. அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம். வேற டிரைவர் பார்த்துக்கச் சொல்றான்.. இந்த நேரத்துல எங்க போறது?”
“அதான் அப்பவே சொன்னேன்.. உன்னையெல்லாம் நம்ப முடியாதுன்னு..” என்று ஆதித்யா உச்சபட்ச ஆத்திரத்தில் கத்தினான்.
“சாரிடா.. நானே மெதுவா பார்த்து டிரைவ் பண்றேன்.. நீ பைக்ல பின்னாடியே வா..” என்றான் நவீன்.
“குடிச்சிட்டு வண்டி ஓட்டுவியா? கொன்னுடுவேன் ஜாக்கிரதை..” ஆதி எரிமலையாக பொங்கியிருந்தான்.
“அப்போ வேற என்ன பண்றது? நான் வேணா கால் டாக்ஸி புக் பண்ணட்டுமா?”
“கால் டாக்ஸி சேஃப் இல்லை..” என்று மறுத்துவிட்டு,
அவன் மதியைப் பார்த்தான். அவள் கண்களில் கலக்கத்துடன், தள்ளாடிக்கொண்டிருந்த ஶ்ரீநிதியைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
அவளை வேறொருவரின் பொறுப்பில் விட அவன் விரும்பவில்லை. பெருமூச்சை இழுத்து விட்டவன்,
“தேவை இல்லை.. நானே டிரைவ் பண்றேன்.”
“ஆதி.. நிஜமாவா? உன்னால முடியுமா?” என்று நவீன் ஆச்சரியமும் பரபரப்புமாகக் கேட்டான்.
அந்த கணம் தன் பயத்தை விட மதியின் பாதுகாப்புதான் அவனுக்கு முக்கியமாகத் தெரிந்தது.
“முடியாம என்ன..? எல்லாரும் ஏறுங்க..” என்றான் எரிச்சலாக,
நவீனும் ஶ்ரீநிதியும் பின் சீட்டில் அமர்ந்த உடனே தூங்கிவிட்டனர். மதி முன் சீட்டில் அமர்ந்தாள்.
வண்டியை எடுப்பதற்கு முன் ஆதி ஒரு நீண்ட மூச்சை இழுத்தான். கார் கதவை மூடியதும் அவனுக்கு மூச்சுத் திணறுவது போல இருந்தது. கைகள் நடுங்கின. சாவியைக் கீழே போட்டான். பழைய நினைவுகள் அவனை வாட்ட, அவனது உடல் நடுங்கியது.
தாளமுடியாமல் கண்ணை மூடியபோது அன்று நடந்த விபத்து கண்முன்னே வந்து நின்றது.
அவன் பெற்றோரின் சிரிப்பு சத்தம்.. திடீரென கேட்ட லாரியின் ஹாரன் சத்தம்.. டயர்கள் தேயும் சத்தம்..”ஆதி.. லாரி.. பார்த்து…” என்று அவன் பெற்றோரின் அலறல் சத்தம். எல்லாம் அவன் காதில் ஒலித்தது.
“அம்மா… அப்பா…” அவனது இதழ்கள் முணுமுணுத்தன. மூடிய இமைகளையும் மீறி கண்கள் தாரை தாரையாக நீர் வடித்தன. ஸ்டீயரிங் வீல் மீது இருந்த அவனது கைகள் உணர்ச்சியற்று மரத்துப் போயின; உடல் முழுவதும் ஒருவித நடுக்கம் பரவியது.
அவன் மனதளவில் முற்றிலும் உடைந்து போகும் தருவாயில், ஒரு மென்மையான கை அவனது கையைத் தொட்டு உறுதியாகப் பற்றிக்கொண்டது.
ஒரு தற்காப்பு உணர்வில், அதுவே தனது கடைசி உயிர்நாடி என்பது போல ஆதி தன் மற்றொரு கையால் அந்தப் பற்றை இறுக்கிக் கொண்டான்.
சட்டென்று கண் திறந்து பார்த்தவனின் கண்கள் தண்மதியின் ஆழ்ந்த கண்களைச் சந்தித்தன. அந்தப் பார்வையில் இருந்த அளவற்ற கருணை, சிதைந்து போயிருந்த அவனது மனதிற்கு விவரிக்க முடியாத ஆறுதலைத் தந்தது.
அவளது பார்வையில் தெரிந்த அன்பின் முன்பு அவனது ஈகோ தவிடுபொடியானது. அவளைத் தன்னுடன் இழுத்து அணைத்து அந்த அணைப்பில் தனக்குத் தேவையான அமைதியைத் தேடிக் கொண்டான்.
அவனது உடல் நடுங்குவதையும், அவன் முகம் புதைத்திருந்த தன் தோள்பட்டை அவனது கண்ணீரால் நனைவதையும் அவள் உணர்ந்தாள். அவனது முதுகை மென்மையாகத் தடவிக் கொடுத்தபடி, அவனுக்குள் தேங்கிக் கிடக்கும் அத்தனை வலியும் கண்ணீராய் வெளியேறும் வரை பொறுமையாகக் காத்திருந்தாள் மதி.
கீழே விழுந்து அடிபட்ட குழந்தை, தாயின் மடியில் விழுந்து அழுவதைப் போல அவன் விம்மி அழுதான். அவனது நடுக்கம் நின்று, அவளது உடல் சூடு அவனுக்குப் பரவும்வரை அவர்கள் அப்படியே இருந்தார்கள். மெல்ல அழுகை நின்றதும்,ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அவளது அணைப்பில் இருந்து விலகினான்.
மனதின் பாரங்களும் ரணங்களும் அந்த அழுகையிலேயே கரைந்து வழிந்து போயிருக்க,
அந்த கணத்தில் தனக்குள் ஏதோ ஒன்று மாறிவிட்டதை அவன் உணர்ந்தான். அவளது தீண்டலில் ஏதோ ஒரு மேஜிக் நிகழ்ந்திருக்கிறது.
காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர்த்தி, சாலையில் சென்றுகொண்டிருந்த மற்ற வாகனங்களின் கூட்டத்தோடு கலக்கவிட்டான்.
ஆரம்பத்தில் அவனது தசைகள் அனைத்தும் ஒருவித பதற்றத்திலேயே இருந்தன. மற்ற வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்டாலே இதயம் படபடக்கத் தொடங்கியது. மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டினான்.
அப்போது மதி ஸ்டீரியோவில் ஒரு மென்மையான பாடலை ஒலிக்கவிட்டு சீட்டின் தலைப்பகுதியில் சாய்ந்து கொண்டு, கண்களை மூடி அமைதியான முகத்துடன் அந்தப் பாடலை ரசிக்கத் தொடங்கினாள்.
அவள் அவன் மீது வைத்திருக்கும் அந்த அசைக்க முடியாத நம்பிக்கையைப் பார்த்ததும் மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச பயமும் விட்டுப்பறந்தது. சிறிது நேரத்தில் பழக்கப்பட்ட லாவகத்துடன் வண்டியை ஓட்டத் தொடங்கியிருந்தான்.
‘தேங்க்யூ மதி… நீ எனக்கு என்ன செஞ்சிருக்கன்னு உனக்கே தெரியாது..அஞ்சு வருஷமா என்னைத் துரத்தும் கொடுங்கனவிலிருந்து என்னை நீ காப்பாத்தியிருக்க. நீ யாரு? ஏன் என் மேல இவ்வளவு அன்பு காட்டுற? நீ என் கூட இருந்தா எந்தப் பிரச்சினையையும் சுலபமா கடந்துடலாம்னு ஏன் தோணுது.. நீதான் என்னோட கார்டியன் ஏஞ்சலா? என் அம்மா உன்னை அனுப்பி வச்சாங்களா?”
உள்ளுக்குள் இத்தனை கேள்விகள் அலைகழித்தாலும், ஒரு இனம் புரியாத அமைதி அவனுக்குள் பரவுவதை உணர்ந்தான். அந்தப் பனிமூட்டமான காற்றைக் கிழித்துக்கொண்டு, இசையின் தாளத்திற்கு ஏற்ப அந்த நெடுஞ்சாலையில் கார் விரைந்தது.
தொடரும்..
