Skip to content
Post Views: 4,437
அத்தியாயம் – 28
இரண்டு நாள் கழித்து, வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்திலிருந்து பெர்மிஷன் வாங்கி, அவர்கள் எப்பொழுதும் சந்திக்கும் மாலின் ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தாள் மஞ்சரி. சற்று நேரத்திற்கெல்லாம் ராஜேந்திரன் வரவும், இருவரும் காபி, சமோசா வாங்கி வந்து அமர்ந்தார்கள்.
“ மீட்டிங் எப்படி போச்சுபா ? காண்டாக்ட்ஸ் கிடைச்சுதா ?”, மஞ்சரி அவன் கோயம்பத்தூர் சென்று வந்ததைப்பற்றி விசாரித்தாள்.
சுருக்காமாக அதைப்பற்றிச் சொன்னவன், “அந்த மாமாகிட்ட பேசினேன். லிங்க் எடுத்தாச்சு.”, பெருமையாகச் சொன்னான்.
Advertisement
“ஐய்… என்ன லிங்க் சொல்லுங்க. எங்கம்மா கிட்ட ரெண்டு நாள் வாய்தா வாங்கிருக்கேன்.”
சிரித்தவன், “உங்க அப்பாவோட கசின் ஒரு பெரியப்பா சண்முகனாதன்னு போட்டிருந்தயே, உன் லிஸ்ட்ல ?”
“ஆமாம், கனரா பாங்க்ல ரீஜனல் மானேஜரா இருக்கார். “
Advertisement
“அவரொட தம்பி பிள்ளைக்கு, எங்கம்மாவோட கசின் சிஸ்டர் பொண்ணத்தான் கட்டிக்குடுத்திருக்காங்க.”
Advertisement
“பே பே “, என்று முழித்துக்கொண்டிருந்தாள் மஞ்சரி.
அவள் முகத்தைப் பார்த்தவன், நாப்கின்னில் சில கோடுகள் வரைந்து, எதுவோ எழுதினான்.
“ படம் போட்டு விளக்கறேன். நல்லா புரிஞ்சிக்கோ. உன் பெரியப்பாவோட தம்பி ரங்கனாதன். அவரு உங்கப்பாக்கும் தம்பி. ஒகேவா ?”
Advertisement
“சரி”, மண்டையாட்டினாள் மஞ்சரி.
“எங்கம்மாவோட, ஓண்ணுவிட்ட சித்தியோட பொண்ணு பத்மினி, எங்கம்மாக்கு அக்கா முறை. அவங்க பொண்ணை, உங்கப்பாவோட தம்பி பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிருக்காங்க. அப்ப, ரங்கனாதனுக்கு பத்மினி தங்கை முறை வருது. இதுவரைக்கும் புரியுதா ?”, அவள் முகமிருந்த லட்சணம் அவனை சந்தேகப்பட வைத்தது.
[the_ad id=”6605″]
“ம்ம்…ஒரு ரெண்டுவாட்டி ரிவைஸ் பண்ணா சொல்லிடுவேன். நீங்க மேல சொல்லுங்க.”
அவள் பதிலில் வந்த சிரிப்பை அடக்கி, “ அவ்ளதான். ரங்கனாதனுக்கு பத்மினி தங்கைன்னா, உங்க அப்பாக்கும் தங்கை. அப்ப, பத்மினிக்கு எங்கம்மா தங்கச்சின்னா, உங்கப்பாக்கும் தங்கைதானே ?”
கன்னத்தில் கைவைத்து “என்னப்பா, நம்ம ரெண்டு பேரும் அண்ணன் தங்கையானது பத்தாதுன்னு, இப்ப எங்கப்பாவும் உங்கம்மாவும் அண்ணன் தங்கைங்கறீங்க ?”, கவலையாய்க்கேட்டாள்.
அடக்கமாட்டாமல் சிரித்தவன், “அறிவுக்கொழுந்தே ! எங்கம்மா உங்கப்பாவுக்குத் தங்கைன்னா, எனக்கு நீ மாமா மக .”
“அஹ்…மாமா !”, முகத்தில் ஒரு ஓளி வந்து ஒட்டிக்கொண்டது மஞ்சரியிடம்.
“இப்பதான் முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது !”, அவள் தலையில் எட்டி கொட்டினான்.
“ஹே…நான் உங்க மாமா மக ரதி, சீனி சக்கர கிளி. அடிக்கல்லாம் கூடாது !”
“அப்படியா பச்சக்கிளி ? உங்கம்மா எப்படி வளைச்சுக் கேட்டாலும், நான் சொல்லிக்குடுத்ததை கிளி மாதிரியே போய் கரெக்டா சொல்லுவியா ?”
“சொல்லிடுவேன், ஆனா, ரெஃப்ரென்ஸ்க்கு அந்த நாப்கின்ன நான் ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா ?”, போட்டோ எடுத்தவள், “எப்படியோ, எங்கம்மாவை டைவ்ர்ஸ்லர்ந்து காப்பாத்திட்டீங்க ! இதுக்கே எங்கம்மா உங்களுக்கு என்னை கட்டி வெக்கணும்.”, என்று வாயடித்தாள் மஞ்சரி.
“அதெல்லாம், ஒபாமா கூட எனக்கு சொந்தம்தான்னு சொல்லி ஒரு உறவு முறை பிடிக்கலாம் இந்த காலத்துல.”, பெருமையாக மீசையை நீவினான் ராஜேந்திரன்.
பிடித்துக்கொண்டாள் மஞ்சரி. “ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது. எப்படி ஒபாமாவை சொந்தம் கொண்டாடுவீங்க ? சொல்லுங்க பார்க்கலாம் ? சும்மா அடிச்சிவிடக்கூடாது.”
ஒரு நிமிடம் யோசித்தவன், “சரி கேட்டுக்கோ. ஒபாமாவோட அப்பா கென்யா நாட்டுக்காரர். “
“கரெக்ட். அதனாலதான் கேட்டேன். எப்படி சொந்தமாக முடியும் ?”
“ஷ்… குறுக்க பேசாத. ஃப்ளோ கெட்டுடும். இந்தியா சுதந்திரம் வாங்கறதுக்கு முன்ன, 1850 கால கட்டத்துல இங்கிருந்து நிறைய பேர, வெள்ளக்காரன் கென்யாக்கு அனுப்பிவெச்சான். அங்க இருக்கற பிரிட்டிஷ் அரசாங்கத்துல வேலை பார்க்க. குஜராத்தி, பஞ்சாபிங்க அதிகமா போனாங்க. நெறைய இல்லைன்னால்லும், நம்ம ஆளுங்களும் கூட போனாங்க, அதுல ஒருத்தர் எங்க தாத்தாவோட பெரியப்பாவோட மச்சான். அவர் அங்கயே செட்டிலாகி, அந்த ஊர் பொண்ணையே கட்டினார். அந்தம்மா வழி சொந்தம்தான் ஒபாமாவோட அப்பா. புரியுதா ?”
“தெய்வமே… என்னா ஒரு ஃப்ளோவா அடிச்சி விடறீங்க ? நம்பறமாதிரியே எப்படிப்பா சொல்றீங்க ?”, பரவசத்துடன் கேட்டாள் மஞ்சரி.
“இன்னும் முடியலை கேளு. அந்த மனுஷன் அல்பாயிசுல போயிட்டார். ஒபாமா அம்மா, கொஞ்சம் வருஷம் கழிச்சு ஒரு இந்தோனீசியக்காரர மறு கல்யாணம் பண்ணாங்க. அவரும் எனக்கு சொந்தம்.”, கண்ணடித்தான்.
“அவருமா ? சொல்லுங்க தலைவா கேட்டுக்கறேன்.”, கன்னத்தில் கை வைத்து கதை கேட்க ரெடியானாள்.
“ம்ம்க்கம்…”, குரலை செருமினவன், “ அந்த இந்தோனீசியாக்காரரு, ஜாவா தீவ சேர்ந்தவரு. உனக்கு தெரியுமா ?”
இல்லை என்று தலையாட்டினாள்.
“பேப்பரெல்லாம் படிச்சிடாதே ? ஒபாமா ஜனாதிபதி தேர்தல்ல நிக்கும்போது அவ்ளோ சர்ச்சையாச்சு அவர் பூர்வீகம். சரி. அந்த ஜாவா தீவு, சுமத்ரா மலேசியா எல்லாம் ஆயிரம் வருஷம் முன்னே, ராஜேந்திர சோழன் பெரிய கடல் படை அமைச்சு இங்கிருந்து போய் கைபத்தினான். அப்படி போன கப்பல்கள்ள, எங்க பாட்டன் முப்பாட்டன் பரம்பரையும் இருந்திச்சு. அவர் அங்க ஒரு இளவரசிய கட்டினதுபோல, என் சொந்தக்காரரும் அந்த ஊர் பொண்ணைக் கட்டினார். அவங்க வழியாத்தான், ஒபாமாவோட மாற்றாந் தந்தை எங்களுக்கு சொந்தம். “, ஒருவழியாய் ஆயிரம் வருஷத்து சொந்தத்தை விவரித்தான்.
நெற்றியில் தட்டி யோசித்தவள், “ இல்லையே லாஜிக் அடிவாங்குதே ?”, என்றாள்.
[the_ad id=”6605″]
அவளை வைத்து ஓட்டிக்கொண்டிருந்தவன், புன்னகையை மறைத்து, “சொல்லு, என்ன உன் சந்தேகம் ?”, என்றான்.
“ராஜாவோட போருக்கு போறவங்க எல்லாம் போர் வீரருங்களாத்தானே இருப்பாங்க. அவங்க எல்லாம் ஷத்ரியங்கதானே ? நம்ம அதில்லையே, அப்ப எப்படி சோழர் படையோட உங்க முப்பாட்டத் தாத்தா போயிருப்பார் ?”, தப்பைக் கண்டுபிடித்த பெருமிதத்துடன் பார்த்தாள்.
“ம்க்கும்…போருக்கு வெறும் ஷத்திரியருங்க மட்டும்தான் போவாங்கன்னு யாரு சொன்னது ? வீரர்களோட, பிராமணருங்கள்லேர்ந்து, தட்டான் கொல்லன், குயவன், வெள்ளாமை பாக்கறவன், குதிரை லாயம் பாக்கறவங்க, கட்டிடம் கட்றவங்கன்னு ஒரு எடத்தை ஜெயிச்சதும், இங்கேர்ந்து போய் அங்க செட்டிலாவாங்க. அப்பத்தான், அங்கிருந்து அடுத்த அடுத்த தீவப் பிடிக்க ஆயுதத்திலர்ந்து, சாப்பாடு வரை ஏற்பாடு பண்ண முடியும். நீ பாலகுமாரனோட உடையார், கங்கை கொண்ட சோழபுரம் எல்லாம் படிச்சதில்லையா ?”
அவனைப் பார்த்து நிஜமாகவே பிரமித்து இருந்தாள். “இல்லையே, நான் இங்கிலிஷ் புக்ஸ்தான் படிப்பேன்.”
“எது, மில்ஸ் அண்ட் பூன் தானே ?”, இளப்பமாய் அவளைப்பார்த்தவாறே கேட்டான்.
ஷாக்கானவள், “அதெப்படி உங்களுக்குத் தெரியும் ?”
“பத்தாங்களாஸ் லீவ்லர்ந்து காலேஜ் முடிய, முக்காவாசி பொண்ணுங்க அதத்தானே படிக்கறீங்க ? என் தங்கச்சியும் அதான் படிச்சா. நீயும் அதே குட்டையில ஊரின மட்டைதானே ?”
‘ஓஹ்…சரி, நீங்க பத்தாங்கிளாஸ் லீவ்ல எந்த குட்டையில சார் ஊரினீங்க ?”
“இப்ப சொன்னேனே, உடையார், கங்கை கொண்ட சோழபுரம், கொஞ்சம் கல்கி, சாண்டில்யன்னு படிச்சேன்.”,
வாயில் கைவைத்தவள், “அவ்வளவு நல்லவனாப்பா நீ ? “, ஏதோ வினோத ஜந்துவைப்போல் பார்த்து வைத்தாள்.
“அப்பல்லாம் நல்ல புள்ளையாத்தான் இருந்தேன்.”, ரோஷமாகச் சொன்னான் ராஜேந்திரன்.
“எப்ப கெட்ட பையனானீங்க, அதைச் சொல்லுங்க !”, ஆர்வமாய் கேட்டாள்.
“ஹ ஹ… அது காலேஜ் படிக்க ஆரம்பிச்சப்போ ஒரு நல்லவன், அமெரிக்காவிலேர்ந்து அவன் அண்ணன் வெச்சிருந்தான்னு நாலஞ்சு ப்ளேபாய் மாதிரி மாகஸீன் கொண்டுவந்து காமிச்சு, எங்க செட்டையே கெடுத்துட்டான்.”
மேலே ஏதோ கேட்க வந்தவளை இடைமறித்து, “போறும், எல்லாம் அப்பறம் சொல்றேன். நீ கிளம்பு, நாழியாகுது பார். போயிட்டு உங்கம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டு சொல்லு எனக்கு.”, அவளை வம்படியாகக் கிளப்பி விட்டான்.
ஒரு வருடப் பிரிவு தந்த ஏக்கத்தையெல்லாம் துடைத்து எறியும் வகையில் அவர்களுக்கு மட்டுமென ஒரு சிறிய உலகத்தில் இருந்தனர் விக்ரம், வேதா மற்றும் அவர்கள் செல்லப்புதல்வன் விவேக்.
தன் பார்ட் டைம் வேலைகள் அனைத்தயும் விட்டிருந்தான் விக்ரம். காலையில் மனைவி குழந்தையுடன் அருகில் இருக்கும் பார்க்கில் விளையாடி, நடை பயின்று பொறுமையாகக் கிளம்புவான். அலுவலகம் அப்பார்ட்மெண்ட் அருகிலேயே என்பதால், மதியம் வீட்டிற்கு வந்து உணவருந்திச் செல்வான். இரவும் ஆறரைக்கெல்லாம் வந்துவிட்டால், வேதாவின் பின்னால் வால் பிடித்து சுற்றிக் கொண்டிருப்பான். அல்லது எல்லோருமாகக் கிளம்பி வெளியில் சுற்றி விட்டு வருவார்கள். சனி ஞாயிறு, சிங்கப்பூரின் சுற்றுலாத் தலங்கள் ஒன்று விடாமல் அலசிக்கொண்டிருந்தனர். அவள் வந்தபிந்தான் சென்று பார்க்கவேண்டும் என்று அவனுமே காத்திருந்ததால், இருவருக்குமே புதியதாய் இருந்தது. இரவுப் பொழுதுகளோ, இருவருக்கு மட்டுமேயானதாக, தனியொரு இன்பச் சுற்றுலாவாக இருந்தது.
வந்த ஒரு மாதத்தில் அவர்களின் வளாகத்தில் சில குடும்பங்களுடன் பழகியிருந்தாள் வேதா. விவேக்குடன் விளையாட மாலை வேளைகளில் இந்திய, சீனக் குழந்தைகள் நிறைய இருக்கவும், நான்கு மணிக்கெல்லாம் அம்மாவும் பிள்ளையும் இந்த ஜோதியில் கலந்துவிடுவார்கள். தவழும் குழந்தைகள் விளையாடவென ப்ரத்யேகமான நார் மெத்தை கொண்டு செய்யப்பட்ட சின்ன உருண்டைகள், டனல்கள், உருட்டி விளையாட கலர் கலரான பந்துகள், சிரிய அளவிலான சறுக்கு மரம், ஊஞ்சல், ஆடும் வண்ண குதிரை என்று கண்ணுக்கும் மூளைக்கும் உடலுக்கும் நல்ல பயிற்சி அளிக்கும் விதமாக இருக்கும். விக்ரம் பெரும்பாலும் அலுவலகத்திலிருந்து அங்கே வந்துதான், அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவான். அன்று விவேக் செய்த சேட்டைகள், அவன் எழுந்து நிற்க செய்யும் முயற்சிகள் என்று மனையாள் எடுத்த வீடியோ, போட்டோ எல்லாம் பார்த்துவிட்டுத்தான், விக்ரமிற்கு மறுவேலை.
[the_ad id=”6605″]
“தேனு, அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை லீவ் வருதில்லை, நாம கோலாலம்பூர் போயிட்டு வரலாமா? உனக்கும் குட்டிக்கும் ரெசிடென்ட் கார்ட் வந்துடுச்சில்லை, இனிமே விசா ப்ரெச்சனையில்லை. போயிட்டு வரலாமா ?”
விவேக்கிற்கு இட்லியை நெய் சர்க்கரை தொட்டு ஊட்டிய வாறே கேட்டான் விக்ரம்.
“காசு நெறைய ஆகுமா வீரு. இங்கயே சென்டொசா, யுனிவெர்சல் ஸ்டுடியோ டிக்கெட் விலையெல்லாம் கண்ணைக் கட்டுச்சு ?”, பூரியைத் தேய்த்தவாறே கேட்டாள் வேதா.
“ஏன், நீ பேசும் போது அம்மா எதுவும் கேட்டாங்களா ?”, அவளை திரும்பிப் பார்த்துக் கேட்டான்.
“இல்லபா, காசு பத்தி எதுவுமே நாங்க பேசிக்கிறதில்லை. நானாத்தான் கேட்டேன்.”, ஜகா வாங்கினாள்.
“பெருசா ஓண்ணும் செலவில்லை. இங்கிருந்து பக்கம்தான். பஸ் இருக்கு. அஞ்சு மணி நேரம்தான். பத்ரிக்கு தெரிஞ்ச ஹோட்டல் சொல்லிருக்கான். அங்க தங்கி சுத்தி பார்த்துட்டு, திங்கள் விடியக்காலைல வந்துடலாம்.”
“உன் கோர்ஸ் புதன் கிழமைதான ஆரம்பிக்குது ? அதுக்குள்ள ஒரு ட்ரிப் அடிச்சிடலாம். அப்பறம் எப்பல்லாம் சேர்ந்தாப்பல லீவ் வருதோ அப்ப போகலாம். மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஹாங்காங், ஒரு எட்டு சைனா கூட போயிட்டு வரணும் நாம இந்தியா திரும்பறதுக்குள்ள.”
ஆச்சரியமாய் திரும்பினாள் வேதா. இது அவளுக்கு புது செய்தி. இந்தியா செல்வதல்ல, அண்டை நாடுகள் சுற்றுவது. “ஏன் வீரு, எல்லா நாட்டையும் பார்க்கணுமா என்ன ?”
“ம்ம்…நம்ம சொந்தத்திலேயே, அதிக ஊர் பார்த்தது நீயாத்தான் இருக்கணும். எல்லாரும் கல்யாணம் முடிஞ்சு தனியா இருக்கான்னு உன்னை பரிதாபமா பார்த்தாங்கன்னு ஒரு வாட்டி சொன்னியே , விவேக் பொறந்தப்போ, அப்ப முடிவு பண்ணேன். நீ வந்ததும் வருஷம் பூரா சுத்தி இருக்க நாட்டுக்கெல்லாம் போகணும். உன் வாட்ஸப் ஃபேஸ்புக்ல போட்டோஸ் பார்த்து, உன் மேல அவங்க எல்லாம் பொறாமைப் படணும்.”, மகனுக்கு ஊட்டியவாறே சீரியசாய் சொன்னான்.
“சோ ஸ்வீட் வீரு”, கை வேலையைவிட்டு, அமர்திருந்தவனை வந்து வயிற்றோடு அணைத்துக்கொண்டாள்.
“அதுக்காக அவ்வளவு நாடும் போகணுமா என்ன ? கொஞ்சம் காசு சேர்க்கலாம், தப்பில்லை.”
அவன் தலையைக் கொண்டு அவளை முட்டியவாறே, “ கவலைப்படாதீங்க மேடம், அடுத்தவன் கணக்கை ஆடிட் பண்றவன், என் கணக்கை பார்க்க மாட்டேனா ? சேமிப்பு பாட்டு தனியா ஒரு பக்கம் போகுது. கூட, இந்த இடமெல்லாம் இங்கிருந்து பக்கம். இந்தியாலேர்ந்து வந்து போனாதான் ஜாஸ்தி. அதுனால இப்பவே பார்க்கறதும் ஒரு வகையில சேமிப்புதான்.”
“உங்க கிட்ட பேசி ஜெயிக்கமுடியுமா ? இப்படி பேசி பேசியேதான என்னை கவுத்திட்டீங்க !”, சிரித்தவாறே சென்று வேலையைத் தொடர்ந்தாள்.
“நீ மட்டும் என்னவாம் ? ஐபாக்கோவில எனக்கு கதை சொல்லியே ஃப்ளாட் ஆக்கினயே ? அன்னிக்கு விழுந்தவன், இன்னும் எந்திரிக்கவேயில்லை !”
“அச்சோ, நான் வேணா தூக்கிவிடட்டுமா ?”
“ம்ஹூம்…இந்த வியுவே நல்லாருக்கு.”, கண்ணடித்தான்.
“ஹே…நீ ட்ராக் மாறி பேசாத.. அதுவும் குட்டி முன்னாடி.”, மிரட்டினாலும் அவன் எதைப் பற்றிச் சொல்கிறான் என்று தெரிந்து சிவந்தவள் அடுக்களை சென்றாள்.
அவள் ரியாக்ஷன் பார்த்துச் சிரித்தவன், “எதுக்கும் இன்னைக்கும் பார்த்துட்டு முடிவு பண்றேன்.” என்றான், அவளை மேலும் வம்பு செய்யும் ஆசையில்.
பூரி மாவு உருண்டை ஒன்று பறந்து வந்து கன்னத்தைக் தாக்கியது. விவேக் கை கொட்டிச் சிரிக்க, “டேய், உங்கம்மா அடுத்து கரண்டிய வீசறத்துக்குள்ள, சாப்பிட்டு முடிடா செல்லம். என் வாயும் சும்மா இல்லாம அவளை சீண்டுது. தேனூ, அப்பறமா என் வாய பனிஷ் பண்ணலாம் சரியா ?”, கலாய்த்தான்.
கரண்டியோடே வந்தாள். “பழுக்கக் காய்ச்சி கொண்டுவந்து இப்பவே பனிஷ் பண்றேன் வீரு .”
மகனைக் ஒரு கையிலும், கிண்ணத்தை மறு கையிலும் தூக்கிக் கொண்டு, “நாங்க பால்கனியில் வேடிக்கை பார்த்துக்கிட்டே சாப்பிடறோம். நீ பூரிய கவனிமா, நோ வயலன்ஸ்.”, என்று ஓடினான்.
பார்த்து , பிடித்தம் என்று தெரிய வரும்போதே கல்யாணம், குழந்தை, பின் பிரிவு என்பதெல்லாம் போய், எந்த இடையூரும் இல்லாமல் இப்போதுதான் திகட்ட திகட்ட காதலித்துக்கொண்டிருந்தார்கள் இருவரும்.
இங்கே, ராஜேந்திரனிடம் விடை பெற்று வீட்டிற்கு வந்த மஞ்சரி, நேராக அவள் அறைக்குச் சென்றாள். அரை மணி நேரம் கழித்து ஒரு பெரிய தாளைக் கொண்டுவந்து சாப்பாட்டு மேஜையின் மீது வைத்தவள், “மா, அப்பா, இங்க வாங்க. எனக்கு இது ஒரு வாட்டிதான் சொல்ல வரும். வந்து கரெக்டா கேளுங்க.”, என்று அறிவித்தாள்.
என்னவோ என்று இருவரும் வந்தனர். பேப்பரில் கோடுகள் வரைந்து, பெயர்கள் எழுதியிருந்தது. “என்னம்மா ?”, என்றார் கைலாசம்.
“க்ககும்… “ என்று செறுமியவள், “ உங்க பக்கத்துலர்ந்து ஒரு சொந்தம் வருதுபா ராஜனோட அம்மாக்கு நீங்க அண்ணன் முறையாகணும். அதனால, அவரை கல்யாணம் பண்ற முறைதான் எனக்கு.”, என்றவாறே காஞ்சனாவை கர்வமாய் ஒரு பார்வை பார்த்தாள்.
கைலாசத்திற்குமே ஆச்சர்யம். “எப்படிடி, இன்னேரம் நமக்கு தெரிஞ்சிருக்கணுமே ?”, என்றார் காஞ்சனா.
“கேளு… சண்முகனாதன் பெரியப்பாவோட தம்பி… “ என்று கைலாசம் பக்கத்து சொந்தத்தை விவரிக்க… “ ஆமா, ராமனாதன் பிள்ளை கல்யாணத்துக்கு நாம் போனோமில்லை ?” என்று காஞ்சனா கேட்டார் கைலாசத்தை.
“ஷ்… நடுவுல பேசாத மறந்துடுவேன்..”, என்று அவரை மிரட்டியவள், “ ஒரே மூச்சில் ராஜேந்திரன் பக்கத்து சொந்தத்தை சொல்லி முடித்தாள். அதை கேட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார் கைலாசம். காஞ்சனா அவள் சொன்னதை ரீவைண்ட் செய்து கொண்டிருந்தார்.
“இப்படி ஒரு லிங்க் எப்படிமா பிடிச்ச ? ராமனாதன் பிள்ளை அமெரிக்காவுலதான பல வருஷமா இருக்கான் ?”
“அதெல்லாம் தெரியாது. ராஜன்தான் கண்டுபிடிச்சு சொன்னாரு.”, என்று காஞ்சனா பக்கம் திரும்பியவள், “என்ன யோசனை ? யாராச்சம் உன்னை மாதிரி லொள்ளு பிடிச்சவங்கதான் தங்கச்சி முறை வருதேன்னு கேப்பாங்க. அவங்ககிட்ட மனப்பாடம் பண்ணியாச்சம் சொல்லிடு. “, என்றாள்.
“இதென்னடி தலைய சுத்தி மூக்கை தொட்ற மாதிரி ஒரு சொந்தம் சொல்ற ?”
“சரி அப்ப வேணாம். நீ அப்பாவை டைவர்ஸ் பண்ணிடு. சொந்தமேயில்லை , அசல்னு சொல்லிக்கலாம்.”, தோளைக் குலுக்கினாள் மஞ்சரி.
“எடு கட்டைய…ஆனா ஊனா இதையே சொல்லிட்டு திரியுற ? நாலு சாத்துனாத்தான் சரி வருவ கழுத…”, பொங்கிவிட்டார் காஞ்சனா.
“அப்ப சிம்பிளா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு. பாவம் உனக்காகத்தான் ராஜன் ரெண்டு நாளா தேடி இப்படி ஒரு முறை வருதுன்னு கண்டுபிடிச்சிருக்கார்.”
“சரிம்மா… நீ அவரை என் ஆபிசுக்கு வர சொல்லு. கொஞ்சம் பேசணும். அவர் தோது கேட்டு சொல்லுமா. “, என கைலாசம் சொல்லவும் சந்தோஷமாய் தலையாட்டிச் சென்றாள்.
error: Content is protected !!