Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 17

ரிதம் 17

 

அந்த சிறிய அறை கதவின் மேலும் கௌதம் என்று எழுதியிருந்தது. ‘அது அவனுடைய ரெக்கார்டிங் ஸ்டூடியோ. அதைத் தான் எப்படி உபயோகிக்க முடியும்?’ பொதுவாக இல்லாமல் அவனுக்கென்று பிரத்தியேகமாக இருப்பது போல் தோன்றியது.

 



Advertisement

“சார், ஆர் யூ சூயர்? இந்த ரூம் தான் நான் யூஸ் பண்ணணுமா? இது உங்களுடையது போல இருக்கு. ப்ராக்டிஸ் தானே? நான் கீழ இருக்கிற ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் ப்ராக்டிஸ் பண்ணட்டுமா?” என்று தடுமாறியபடி கேட்டாள்.

 

அந்த கேபினைப் பார்த்தான். “இதுல என் பெயர் இருக்கிறது தான் பிரச்சனையா?” என்று கேட்டான்.

Advertisement

 

Advertisement

அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

 

“என்ன தான் கீழ ப்ராக்டிஸ் பண்ணாலும், அதுக்கப்புறம் எல்லாரும் இந்த ஸ்டூடியோவில் தான் பாடுவாங்க. நீ புதுசு. அதனால உனக்கு தெரியல. எல்லாத்துக்கும் இப்படி தயங்கிட்டே இருந்தா எப்படி நத்தாஷா? உனக்கு எப்ப தான் என் மேல நம்பிக்கை வரும்?”

Advertisement

 

“ஐயோ, அப்படியெல்லாம் இல்ல சார். பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. உங்க மேல நம்பிக்கை வந்ததுனாலதான் அன்னைக்கு உங்களுக்கு போன் பண்ணேன். இது உங்களோட பர்சனல் ரூம்னு நினைச்சு தான் கேட்கிறேன்,” என்றாள் தயக்கத்தோடு.

 

“நான் ப்ராக்டிஸ் இங்க தான் பண்ணுவேன். மத்தவங்க எல்லாம் கீழ பண்ணுவாங்க. அதுக்கப்புறம் ஃபைனல் ரெக்கார்டிங் இங்க தான் நடக்கும். அதோ அந்த கேபின்ல தான் மியூசிக் டைரக்டர், ப்ரொடியூசர், பிலிம் டைரக்டருன்னு, கம்போசிங்க கேட்க விரும்புறவங்க கேட்பாங்க. இது அதுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைச்சிருக்கேன். இந்த ஸ்டூடியோ என்னோட ரொம்ப நாள் கனவு. அதனால ஒவ்வொன்னத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைச்சிருக்கேன். இது நாம பாடப் போற டூயட். அதுவும் இன்னைக்கு மத்தியானம் டைரக்டர் வரதா சொல்லிட்டாரு. உன்னை கீழ ப்ராக்டிஸ் பண்ண வச்சுட்டு, அதுக்கப்புறம் நாம சேர்ந்து பாட முடியாது. அதுக்கான நேரமும் இல்லை. நான் ஏற்கனவே ரிகர்சல் பாத்துட்டேன். நீ பாட ஆரம்பிச்சேன்னா தவறுகள் இருந்ததினால் நான் அதை திருத்துவேன். முதல்ல கேளு. பாடி ப்ராக்டிஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல நானும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்,” என்று கூறிவிட்டு அகன்றுவிட்டான்.

 

அவன் முதுகைத் திரும்பிப் பார்த்தவள், அந்த அறையைத் திறந்து கொண்டு சென்றாள். மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அங்கிருக்கும் பொருட்களெல்லாம் உயர்தரமானது என்று பார்க்கும்போதே தெரிந்தது. இதுவரை அவள் பயிற்சி செய்த எந்த இடமும் அதுபோல இல்லை என்று சொல்லலாம். தொலைக்காட்சி சேனலுக்குப் பயிற்சி செய்த இடம் கூட இந்த அளவுக்கு நுட்பமாக இல்லை. இந்த இடத்தைப் பார்த்ததும் முதலில் பிரமிப்பு ஏற்பட்டது. பிறகு ரசிக்கத் தோன்றியது.

 

அவன் பாடிய பாடலை டிக்டாஃபோனில் ஒலிக்கவிட்டவள், ஹெட் போனை காதுகளுக்குக் கொடுத்தாள்.

 

அவனின் தேன் குரல் அவள் காதுகளினுள்ளே சென்று, நாடி நரம்புகளை ஆட்கொண்டு, மூளையைச் சென்றடைந்தது. இந்தக் குரலுக்கு சொந்தக்காரன் அவன் தான் என்பது, அவள் பேசும்போதே தெரியும்.

 

ஆனால் பாடல் என்று வந்துவிட்டால், எவ்வளவு ஸ்ருதி மாற்றங்களை (மாடுலேஷன்) காட்டுகிறான். அந்தப் பாடலைக் கேட்கும் போதே, அது கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற நம்பிக்கை அவளுக்குப் பிறந்தது. ஆனால் அந்தப் பாடலுக்கு இணையாகப் பாடும் தகுதி தனக்கு இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்தது.

 

ஸ்ருதி, நயம், நளினம் மட்டுமல்லாமல், காதலை வெளிப்படுத்தும் திறன் என்று எல்லாமே அந்தப் பாடலில் அடங்கியிருந்தது. அவன் அவ்வளவு அழகாகப் பாடியிருந்தான். இதில் பாடலின் ஆசிரியர் அவன் என்றுதான் போட்டிருந்தது. அவனும் அப்படித்தான் வெளியில் பேசும் போது கூறினான். அனுபவித்து எழுதியிருக்கிறார். அதேபோல அனுபவித்து பாடியிருக்கிறார் என்று தோன்றியது.

 

முழுவதுமாக பாடலைக் கேட்டாள். பிறகு அவன் பாடும் பாடலைப் பாடிவிட்டு, பெண் பாடுவதற்கான வெற்றிடத்தையும் ரெக்கார்ட் செய்திருந்தான். அதில் அவள் நிறுத்திப் பாட ஆரம்பித்தாள். மிகத் துல்லியமாக அவள் பாடி முடித்ததும், அவனுடைய குரல் எதிரொலித்தது. கால்குலேட் செய்து சரியாகப் பொருந்தியிருப்பது புரிந்தது.

 

அவன் பாட, அதன் பிறகு அவள் பாட, ராகம் இசைக்க என்று மிக நுணுக்கமாகப் பாடிக்கொண்டிருந்தாள்.

 

அழகான காதல் பாடல் தான். ஆனால் அதில் ஏதோ ஒரு சோகம் இழையோடியதாக அவளுக்குத் தோன்றியது. அதன் பொருளும் அந்தச் சோகத்தைப் பிரதிபலித்தது. ஆனால் பாடலில் அது வெளிப்படவில்லை. மிக நுணுக்கமாகக் கவனித்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு சோகம் இழையோடியது.

 

சிறிது நேர ரிகர்சலுக்குப் பிறகு அந்தப் பாடலோடு அவள் ஒன்றிவிட்டாள். அந்தக் குரலோடும் சேர்த்து என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஒரு இடத்தில் மட்டும் அவளுக்குத் தாளம் தப்பியது. அவன் முழுதாகப் பாடிய ரெக்கார்டரை மீண்டும் மீண்டும் கேட்டவள், அந்த வரிகளை மட்டும் கண்களை மூடிப் பாடிப் பார்த்தவள், அவன் குரலோடு சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்தாள்.

 

கேபின் தட்டும் சத்தம் கேட்டதும் கண்களைத் திறந்து பார்த்தாள். அவன் தான். “உள்ளே வரட்டுமா?” என்று கேட்டான். அவள் தலையாட்டினாள், ஆம் என்பது போல.

 

“உனக்கு பாட்டு பிடிச்சிருக்கா?” கேட்டபடி உள்ளே நுழைந்தான்.

 

“நல்ல பாட்டு சார். லிரிக்ஸ் பயங்கரமா எழுதி இருக்கீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் ரசிச்சு பாடினேன். உங்களுக்கு இவ்வளவு அழகா பாடல் எழுத வருமா? எனக்கு இன்னைக்கு தான் தெரியும். இந்தப் பாட்டு கண்டிப்பா சக்சஸ் ஆகும் சார்,” அவள் உணர்ந்து கூறினாள்.

 

“தேங்க்ஸ். இதுக்கு முன்னாடியும் நிறைய பாட்டு எழுதி இருக்கேன். இது எனக்காக எழுதுனது. அதே மாதிரி ஒரு ஃபீல் உன்கிட்ட எதிர்பார்க்கிறேன். உனக்கு லிரிக்ஸ் பிடிச்சிருந்துதா?” என்று கேட்டான்.

 

“அமேசிங் சார். வார்த்தைகள் எல்லாம் அவ்வளவு அழகா கோர்க்கப்பட்டிருக்கு. அதுவும் உங்க குரல் தேன் மாதிரி இருந்தது. நான் மெய் மறந்துட்டேன்,” என்று தன்னை மறந்து புகழ்ந்து தள்ளினாள் நத்தாஷா.

 

அவன் புருவம் ஏறி இறங்கியது.

 

‘தான் கூறுவதை அவர் தவறாக எடுத்துக் கொண்டாரோ?’ அவள் தடுமாறினாள். அவள் முகபாவனையை கவனித்து விட்டான் கௌதம்.

 

“ஓகே, நம்ம ரெண்டு பேரோட காம்பினேஷன்ல இந்த சாங் கண்டிப்பா சக்சஸ் ஆகும்னு நினைக்கிறேன்.”

 

அவளையும் அந்த லிரிக்ஸ் பேப்பரையும் பார்த்துக் கொண்டே பேசினான். இவன் எதற்காக பார்வையை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு பேசுகிறான்? முதல் முறையாக அந்த எண்ணம் எழுந்தது.

 

பிறகு இருவரும் தத்தமது இடத்தில் நின்றார்கள். காதிற்கு ஹெட் போனை மாட்டிக் கொண்டார்கள். முதலில் பாடலை அவன் தொடங்க, பிறகு அவள் பெண்ணிற்கான வரிகளைப் பாடினாள்.

 

அதன் பிறகு இருவரும் மாறி மாறிப் பாடினார்கள். ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு காதில் இருந்த ஹெட் போனைக் கழட்டிவிட்டு அவளைப் பார்த்தவன்,

 

“இல்ல நத்தாஷா, இதோட தாளம் தப்புது. இதை அப்படி பாடக்கூடாது. இப்படி பாடணும்,” என்று அவன் ராகம் இழுத்துக்காட்டினான்.

 

அவள் சரி என்றாள். அவளுக்குமே அந்த இடத்தில் பிசகு ஏற்படுவது புரிந்தது. அந்த வரிகளை மட்டும் பாடச் சொன்னான். இம்முறை ஓரளவிற்கு அவர் சரியாகப் பாடியதாகத் தோன்றியது.

 

மீண்டும் மீண்டும் அதே வரிகளைப் பாடச் சொன்னான். ஓரளவிற்கு நன்றாக அவள் பாடிவிட, மீண்டும் முதலில் இருந்து பாடலைப் பாட ஆரம்பித்தார்கள்.

 

மீண்டும் மீண்டும் அவள் அதே இடத்தில் லயத்தைத் தப்பிப் போட்டிருந்தாள்.

 

“எல்லாம் நல்லா வருது. அந்த வரிகள்ல மட்டும் லயம் மாறுது. ஏன் அது மட்டும் மிஸ்ஸாகுது? பாடலுக்கேத்தபடி உணர்ச்சிகளைக் கொடுக்கணும் தானே நத்தாஷா? இது உனக்குத் தெரியாதது இல்லையே. அண்ட் இதுக்கு முன்னாடி இது போல வரிகளை நீ பாடியிருக்க தானே?” புரியாமல் கேட்டான் கௌதம்.

 

‘மஞ்சத்தின் மீது உன்னோடு நான் உருகி குலைந்திடவா?’ என்ற அந்த வரிகளை ஏனோ அதே நயத்துடன் பாட முடியவில்லை அவளால்.

 

அவள் சங்கடமாகத் தலை குனிந்தாள்.

 

“ஸ்டேஜ் மேல டூயட் பாடியிருக்க தானே? அப்பெல்லாம் அதுக்கு மீனிங் பாத்துட்டு இருந்தியா? பாட்டுன்னு வந்துட்டா அவங்க கொடுக்கிறதை நாம பாடித்தான் ஆகணும். நாம ஒன்னும் பக்தி பாடல் பாட வரல. கதைக்கேத்த வரிகளை பாடலில் போடுறது தானே நியதி? இதைவிட மோசமான வரிகள் கூட வரலாம். ஜானகி அம்மாவைப் பாத்திருக்கியா? மேக்சிமம் ரொமான்டிக் சாங்ஸ் பாடுவாங்க. ஏய்டீன் பிளஸ் பாடல்களும் பாடியிருக்காங்க. ஆனா அவங்களைப் பார்த்தா அப்படியே கை எடுத்து கும்பிடணும் போல இருக்கும். சோ, பாடலுக்கும் பாடுபவங்களுக்கும் வித்தியாசமிருக்கு.”

 

“பாடும் போது சரியான உணர்வுகளைக் கொடுக்கலேனா பாடல் லயம் மாறும். வரிகளுக்கு நாம கட்டுப்பாடு விதிக்க முடியாது. உனக்கு அது தான் பிரச்சனைனா, அந்த வரிகளை நான் மாத்தி அமைக்கிறேன். ஆனா இந்த வரிகள், ராகம் எல்லாத்தையுமே நான் டைரக்டர் அண்ட் ப்ரொடியூசர் கிட்ட காட்டிட்டேன். இப்ப எதனால மாத்தணும்னு கேட்டா என்ன பதில் சொல்றது?” கேட்டுவிட்டு நெற்றியைத் தேய்த்தபடி நின்றான்.

 

“இல்ல சார், எனக்காக நீங்க வரிகளை மாத்த வேண்டாம். இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ண சரியா பாடிடுவேன்னு நினைக்கிறேன்,” தலை தாழ்ந்தபடி கூறினாள் நத்தாஷா.

 

“சரி, எத்தனை நாள் டைம் வேணும்?”

 

ஒரு விரலை உயர்த்திக் காட்டினாள். கண்களை மூடித் திறந்தவன், “வாயைத் திறந்து சொல்லு நத்தாஷா,” என்றான்.

 

“ஒரு நாள் போதும்னு நினைக்கிறேன் சார். இந்த இடத்துல மட்டும் தானே லயம் மாறுது. மத்ததெல்லாம் ஓகேவா சார்?” என்று கேட்டாள்.

 

“இங்க தான் ரொம்ப மாறுது. இன்னொரு இடத்துலயும் கொஞ்சம் மிஸ்ஸாகுது. ஆனா அந்த இடத்துல ஹை பிச்சுல மியூசிக் வரதுனால அது பெருசா தெரியாது. மத்தபடி இது ஓகே தான். சூயரா ஒரு நாள் டைம் போதுமா? நான் இப்ப டைரக்டருக்கு போன் பண்ணி, எனக்கு உடம்பு சரியில்ல, அதனால ரிகர்சல் நாளைக்கு வச்சுக்கலாம்னு சொல்லிடுவேன். நீ சொல்றத பொறுத்து ரெண்டு நாள் தள்ளிக் கூட வச்சுப்பேன். ஆனா நாளைக்குன்னு சொல்லிட்டு திரும்பவும் மாற்றி அமைச்சா சரி வராது. நான் வார்த்தை மாறுற மாதிரி இருக்கும். நான் சொல்ல வரது உனக்கு புரியுது தானே?” என்று கேட்டான் கௌதம்.

 

“புரியுது சார்,” என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். “கண்டிப்பா நாளைக்கு நான் உணர்ச்சிகளோட பாடியிருப்பேன் சார். அந்த நம்பிக்கை இருக்கு,” என்று அவனைப் பார்த்தபடியே கூறினாள்.

 

“தட்ஸ் குட். இந்த கான்ஃபிடன்ட் தான் நம்மள உயர்த்தும். சரி, நீ வீட்ல நல்லா ப்ராக்டீஸ் பண்ணிட்டு வா. சரியா பாடணும். ஓகேவா?” என்று கேட்டான்.

 

அவளும் சரி என்று தலையாட்டினாள். அதன் பிறகு அந்த கேபினை விட்டு வெளியில் வந்துவிட்டாள். அப்போதுதான் அவளால் மூச்சைச் சீராக விட முடிந்தது. என்னவென்று சொல்ல முடியாமல் அந்த அறையின் உள்ளே அவளுக்கு மூச்சடைத்தது. ஏதோ அந்த அறை முழுவதும் அவனுடைய வாசம் வீசுவது போலத் தோன்றியது.

 

காரணம் தெரியவில்லை. தனிமையா அல்லது இளமையா? அவனுடைய வாசமா, அல்லது அந்த அறை முழுவதும் சூழ்ந்திருக்கும் நிசப்தமா?? என்று தெரியவில்லை. ரெக்கார்டிங் அறை என்பதால் அவ்வளவு நிசப்தம் இருந்தது அந்த அறையில். அவர்களின் பேச்சு, பாடல் எல்லாமே எதிரொலிப்பது போலத் தோன்றியது. அப்படிப்பட்ட சிறிய அறையில் அவனுக்கு மிக நெருக்கத்தில் நிற்கும்போது மூச்சு முட்டுவதாகத் தோன்றியது.

 

கீழே இறங்கி வந்தவள், பொதுவாக இருந்த ரெக்கார்டிங் அறைக்குச் சென்றாள். அங்கே ஏற்கனவே நால்வர் நின்று ரிகர்சல் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டு அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் பாடிப் பார்த்தாள்.

 

குளிக்கச் செல்லும் போது, படுக்கும் போது, சாப்பிடும்போது என்று அந்தப் பாடல் வரிகளை அவள் பாடிக்கொண்டே இருந்தாள். தாயும் தந்தையும் அவளிடம் பேசும் போது கூட, அவள் மனதிற்குள் பாடல் பாடிக் கொண்டே இருந்தாள். இரவு உணவிற்குப் பிறகு மொட்டை மாடிக்குச் சென்றாள். அதே ரெக்கார்டரை காதிற்குப் பொருத்தி அவன் பாடியதைக் கேட்டு, அவன் பாடலுடனே மொத்தப் பாடலையும் பாடிக்கொண்டே இருந்தாள். ஆண், பெண் என்று பேதம் வரும்போதும், அவளே மாற்றி மாற்றிப் பாடினாள். இரவு படுத்த பிறகும் அதே பாடல் அவன் குரலில் கேட்டுக் கொண்டே, இவள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!