Skip to content
Post Views: 189
அத்தியாயம் 23
“இந்தாங்க அக்கா, அன்புக்கு பிடிக்கும்னு கொஞ்சம் அதிரசம் செஞ்சேன், இதையும் கொண்டு போற பைகளோட வச்சுக்கோங்க..” என்று ஒரு சம்படத்தை கொண்டு வந்து சாந்தியிடம் கொடுத்தார் மீனா.
Advertisement
“என்ன சித்தி, அதிரசத்தை அப்படியே அன்புக்கு பேக் பண்ணிட்டீங்களா? எங்களுக்கு” என்றான் அங்கே அமர்ந்திருந்த பாலு.
“உங்களுக்கு எல்லாம் அப்புறம் சுட்டு தரேன் பாலு. இன்னிக்கு நைட் அக்கா கிளம்புறாங்களா, அதான் அன்புக்கு கொண்டு போக மட்டும் சுட்டேன்”
Advertisement
Advertisement
“அக்கா.. அக்கா..” என்று அவசரமாக உள்ளே வந்தார் ரேவதி.
“இந்தாங்க அக்கா அன்புக்கு கொஞ்சமா மைசூர் பாகு செஞ்சேன்.. நீங்க கிளம்பறதுக்குள்ள நான் வந்துடுவேன்” என்று ஒரு டப்பாவை சாந்தியிடம் கொடுத்துவிட்டு அவசரமாக வேலைக்கு கிளம்பினார் ரேவதி.
Advertisement
“இருங்க சத்தி.. இன்னிக்கு நான் உங்களை வண்டியில கடைக்கு கொண்டுபோய் விடறேன், ஓடாதீங்க” என்றான் பாலு.
“சரி பாலு.. அப்ப ஒரு பத்து நிமிஷம் பேசிட்டே கிளம்பறேன்” என்று ரேவதியும் சாந்தி மீனாவுடன் அமர்ந்து கொண்டார்.
“எல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா அக்கா?”
“எல்லாம் ஆச்சு ரேவதி. எனக்கு தான் என்னமோ போல இருக்கு. எத்தனை நாளைக்கு அங்க போய் இருக்க முடியும்? இந்த அன்பு இங்க வந்தாதான் என்ன?” என்றார் சாந்தி வருத்தமாக.
“பாவம் அக்கா பிள்ளை. மாசமா இருக்கு, வீக்கா இருக்கறதால ட்ராவல் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்கதானே..” என்றார் மீனா.
“அதுவுமில்லாமல் வேலைக்கு இப்பவே லீவ் போட முடியாது இல்ல அக்கா, நம்ம தானே பார்த்துக்கணும்” என்றார் ரேவதி.
“அன்பு மாமியார் போய் இருக்க மாட்டாங்களா அக்கா?” என்றார் மீனா.
“இவ கொஞ்சம் ஓய்வா இருக்க தானே நம்மளை கூப்பிடறா மீனா.. மாமியார் போனா வேலை செய்யாம இருக்க முடியாது தானே?”
“அதை சொல்லுங்க அக்கா..” என்றார் ரேவதி உடனே.
“ உங்களுக்கு எல்லாம் போரே அடிக்காதா.. அம்மாவும் ஒரே விஷயத்தை நாலு நாளா சொல்றாங்க.. ஒவ்வொரு தடவை கேட்கிறப்பவும், புதுசா கேட்கிற மாதிரியே சித்திங்களும் கேட்கறீங்க. அதுக்கு புதுசா பதில் சொல்ற மாதிரி, அதே பதிலை தான் சொல்றீங்க.. எப்படி இப்படி?” என்றான் பாலு கடுப்பாக.
அவன் கூறிய எதையும் சட்டையே செய்யாமல் மூவரும் பேசி கொண்டிருந்தார்கள்.
பிறகு,”சரிக்கா நான் ஈவினிங் சீக்கிரமா வந்துடறேன்” என்று ரேவதி பாலுவுடன் கிளம்பினார்.
திருமணம் ஆகி வந்த நாளாக சாந்தி இரண்டு நாள் சேர்ந்தமாதிரி வீட்டை விட்டு எங்கயும் போனதே இல்லை. இப்பொழுது மகள் மாசமாக இருப்பதால் பார்த்துக்கொள்ள பெங்களூருக்கு அழைக்கவே, வேறு வழி இல்லாமல் தான் கிளம்பி கொண்டிருக்கிறார் சாந்தி.
இரவு பஸ்சுக்கு தான் புறப்படுவதாக இருந்தது.
மாலையே அனைவரும் அவர்கள் வீட்டில் ஒன்று கூடி விட்டார்கள்.
“என்ன அண்ணா இது? பெரியம்மா என்ன ஊரை காலி பண்ணிட்டு போறாங்களா?” என்றான் குகன் பாலுவிடம்.
பின்னே பதினாறு லக்கேஜ்கள் எடுத்து வைத்திருந்தனர் பெண்கள்.
“நீங்க ஒழுங்கா சாப்பிட்டு மறக்காம பிபி மாத்திரையை போட்டுக்கோங்க” என்றார் சண்முகத்திடம். சொல்லுகையில் அவர் குரல் கரகரத்தது.
“ஏன்டி தமிழு, அடுத்து நம்ம பெரியப்பா பெரியம்மா லவ் ஸ்டோரியை கேட்போமா?” என்றாள் எழில் தங்கையிடம்.
“நீ வர வர லவ் ஸ்டோரி பைத்தியம் ஆகிட்ட எழில். உனக்கு தான் இப்ப ஆள் கிடைச்சிடுச்சு இல்ல. உன் லவ்வை டெவெலப் பண்ணு போ..” என்றாள்.
இருவரும் குசுகுசுவென தான் பேசினார்கள்.
இருந்தாலும் எழிலுக்கு ஒரு நிமிடம் யாராவது கேட்டிருப்பார்களோ என்று உடம்பெல்லாம் வேர்த்துவிட்டது,
“உன்னை என்ன பண்றேன் பாரு” என்று வேகமாக தமிழின் காலை மிதித்தாள்.
“ஆ.. அம்மா” என்று தமிழ் அலறவும், அனைவரது கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியது.
“என்னடீ இடம் பொருள் நேரம் காலம் எதையும் பார்க்கவே மாட்டீங்களா? இப்ப எதுக்கு சண்டை போடறீங்க?” என்று கோவமாக கேட்டார் ரேவதி மகள்களை பார்த்து.
“இங்க பாருங்க எழிலு தமிழு.. நீங்களும் தான் பாலு, குகன்.. நானும் ஊருக்கு போறேன்.. ரேவதி வேலையில இருந்து வர வரைக்கும் மீனா மட்டும் தான் வீட்ல இருப்பா.. இப்படி சண்டை பிடிச்சீங்கன்னா எப்படி அவ சமாளிப்பா? ஒரு ஆளா நாலு பிள்ளைகளையும் எப்படி பார்த்துக்க போறாளோ?” என்றார் சாந்தி சீரியசாக.
“ஆமா நாங்க எல்லாம் பால்வாடி பசங்க. எங்க அம்மா வந்து எங்களை தூக்கி வச்சு சோறு ஊட்டணும்” என்றான் குகன் கடுப்பாக.
“அது எல்லாம் நாங்க சமத்தா இருப்போம் பெரியம்மா.. நீங்க கவலை படாம போய்ட்டு வாங்க..” என்றாள் எழில் பெரிய மனுஷியாக.
“மீனா, முடிஞ்சதை மட்டும் செய்.. நிறைய வேலையை இழுத்து போட்டுக்காத..” என்றார் சாந்தி மீனாவிடம்.
“சரி அக்கா.. நான் பார்த்துகிறேன்” என்றார் அவரும் அழுவதற்கு நானும் தயார் என்ற குரலில்.
“நீயும் தான் ரேவதி, அவதி அவதியா வேலைக்கு ஓடாத.. முடியலைன்னா யாரையாவது வண்டியில கொண்டு போய் இறக்கி விட சொல்லு, சரியா?”
“சரி அக்கா..”
விஜயனிடம் திரும்பி, “இங்க பாருங்க அண்ணா.. உடம்புக்கு முடியலைன்னா யார் கிட்டயாவது சொல்லிடனும். நீங்களா கஷ்டப்படக்கூடாது.. நேரா நேரத்துக்கு சாப்பிடணும்” என்றார்.
“அம்மா தெய்வமே.. ஒரு மாசம் தானே போக போற? அதுக்கு எதுக்கு ம்மா இந்த அலப்பறையை கூட்டுற?” என்றான் பாலு.
“போடா.. உங்க அப்பாவுக்கு நான் இல்லாம ஒன்னும் செய்ய வராது.. எப்படி சமாளிப்பாரோ?”
சாந்திக்கு கணவரை விட்டு செல்லவே மனசில்லை. அனைவருக்கும் அது புரிந்தது தான். இருந்தாலும் அன்பரசிக்காக என்று அனைவரும் கூறி அவரை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.
“ஏன் பெரியம்மா, பேசாம நீங்க பெரியப்பாவையும் கூட்டிட்டு போயிடுங்களேன்” என்றாள் எழில்.
அவள் என்னமோ விளையாட்டுக்கு தான் கூறினாள்.
உடனே சாந்தி. “உங்க பெரியப்பா வருவாங்களா?” என்றார் பெருமூச்சு விட்டுக்கொண்டே.
“ஏன் பெரியப்பா? நீங்களும் பெரியம்மாவோட கிளம்புங்களேன்” என்றாள் இப்பொழுது பெரியப்பாவிடம்.
“இங்கன வேலை இருக்கு இல்ல எழிலு” என்றார் அவர் மெதுவாக. அவருக்கும் மனைவியை விட்டு எப்படி இருப்பது என்ற கவலை.
“என்ன பெரியப்பா வேலை எப்பவுமே தான் இருக்கும். இத்தனை வருஷத்துல நீங்களும் பெரியம்மாவும் எங்கேயுமே போய் நான் பார்த்ததே இல்லை.. பேசாம நீங்க இப்ப பெரியம்மா கூட கிளம்புங்க.. அப்படியே பெங்களூரை நல்லா சுத்தி பார்த்துட்டு வாங்க” என்றாள்.
“அது வந்து..” என்று அவர் இழுக்கவும்..
“வந்தும் இல்லை போயும் இல்லை.. சின்ன பெரியப்பா, அப்பா இருக்காங்க தானே அவங்க பார்த்துப்பாங்க.. பாலு அண்ணாவும் இருக்காங்க, அப்புறம் என்ன பெரியப்பா? அவங்க எல்லாம் ஒழுங்கா வேலை பார்க்குறாங்களானு வேணா நான் பார்த்துகிறேன் பெரியப்பா..” என்றாள் எழில் சற்று அதட்டலாகவே.
“எப்படி தமிழ்? இந்த எழில் மட்டும் எப்பவுமே நாட்டாமையா மாறிடறா? பஞ்சாயத்தே இல்லைனாலும் இவளா பஞ்சாயத்தை ஆரம்பிச்சு அதுக்கு தீர்ப்பும் சொல்லிடறா” என்றான் குகன் தமிழிடம்.
“அது டிசைன்னே அப்படி தான் குகன்”
அதன் பிறகு, சிங்காரம் சரவணன் விஜயன் என்று அனைவருமே சண்முகத்திற்கு விருப்பம் என்று தெரியவும் அவரையும் கிளம்பும்படி கூறினார்கள்.
நாங்க பார்த்துக்கிறோம் என்று ஆயிரம் தைரியம் கூறினார்கள்.
“பஸ்ல டிக்கெட் கிடைக்குமா?” என்று சாந்தி தயங்கவும்,
“அது எல்லாம் இப்ப இருக்கும் அம்மா.. இன்னிக்கு புதன் கிழமை தானே.. நான் டிக்கெட் ஏற்பாடு பண்ணிடறேன், சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க” என்றான் பாலு.
“பாலுண்ணா, பெரியம்மா இவ்வளவு நேரமா பெரியப்பாவை விட்டுட்டு போறேன்னு அவ்வளவு பீல் பண்ணாங்க. இப்ப உன்னை விட்டுட்டு போறோம்னு ஒரு வார்த்தைகூட சொல்லலையே அண்ணா?” என்றாள் எழில் பாலுவிடம் இப்பொழுது.
“அடுத்து நானா.. நான் எல்லாம் வரேன்னு சொன்னாலும் அம்மா என்னை கூட்டிட்டு போகாது எழிலு” என்றான் பாலு பதிலுக்கு.
“பெரியப்பா உங்க டிரஸ் எல்லாம் கொடுங்க, நான் பேக்ல அடுக்கி தர்றேன்” என்றான் குகன்.
“அவருக்கு தனியா எதுக்கு டா பேக் எல்லாம்.. எத்தனை லக்கேஜ் தூக்கறது? அவரோட ரெண்டு சட்டை ரெண்டு வேஷ்டியை அதோ அந்த பச்சை பேக்ல வச்சிருங்க” என்றார் சாந்தி இப்பொழுது உற்சாக குரலில்.
“ஏன் குகன்.. பதினாறு லக்கேஜ் பெரியம்மா தனியா போக கிளம்புன அப்பவே.. இப்ப பெரியப்பா கிளம்ப ஒரு பேக் தேவையான்னு கேக்குறாங்க?” என்றாள் தமிழ் ஆச்சர்யமாக.
“இதுதான் எல்லா ஆண்களின் நிலைமையும் தமிழு” என்றான் குகன் சோகமாக.
அட பாவமே!
ஒருவழியாக அனைவரும் சேர்ந்து இவர்கள் இருவரையும் அன்பரசி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அன்பரசியும் அருணும் மகிழ்ச்சியாகவே இவர்களை வரவேற்றார்கள்.
அவர்கள் இருந்தது ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்ஸ். நிறைய வீடுகள் ஒரு கம்யூனிட்டுக்குள் இருந்தது. அங்கேயே பார்க், கடை, ஸ்விம்மிங் பூல், வாக்கிங் செல்ல வசதியான ட்ராக் என்று எல்லாமே இருந்தது.
காலையிலே சாந்தி மகள் மாப்பிள்ளை இருவருக்கும் அனைத்தும் சமைத்து பேக் செய்து கொடுத்து அனுப்பி விடுவார். பின் இருவரும் இரவு ஏழு மணி போல தான் வீடு திரும்புவார்கள்.
“இதுக்கு எதுக்கு நம்மளை வர சொல்லணும்?” என்று இரண்டாம் நாளே நச்சரிக்க தொடங்கினார் சண்முகம்.
அவர் வாக்கிங் சென்ற நேரம் சாந்தி ரேவதி மீனாவிற்கு அழைத்து “உங்க மாமாவை இங்க வச்சு சமாளிக்கவே முடியலை. வேலைக்கு போற பிள்ளைங்கன்னு இங்க வரத்துக்கு முன்ன தெரியாதா?” என்று புலம்பினார்.
விஷயம் கேள்விப்பட்ட எழில் அடுத்து களத்தில் இறங்கி விட்டாள்.
சண்முகத்திற்கு அழைத்து, “வீட்ல சும்மா இருந்தா போர் அடிக்கும் இல்ல பெரியப்பா, அங்க பக்கத்துல இருக்கிற இடங்களை சுற்றி பார்த்திட்டு வாங்களேன்” என்று அவளாக கூறுவது போல ஆரம்பித்து, பின் தினமும் எங்கே செல்வது என்று பார்த்து கூறினாள்.
அருணும் தெரிந்த கேப் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தான். காலையில் அவர்களை வேலைக்கு அனுப்பிவிட்டு, இவர்கள் இருவரும் தினமும் ஒரு இடம் என சுற்றி பார்த்தனர்.
கோவில், பார்க், மால், கடைத்தெரு, ம்யூஸியம் என்று இருவருக்கும் நன்றாக பொழுது போனது. அதிலும் அங்கே லால் பார்க்கில் அப்போழுது நடந்து கொண்டிருந்த பிளவர் ஷோ சண்முகத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டு நாட்கள் திரும்ப திரும்ப சென்று பார்த்து வந்தனர்.
அவரும் பல வருடங்களாக வீடு ஹோட்டல் என்றே இருந்துவிட்டார். இந்த மாற்றம் அவரை உற்சாகப்படுத்தியது.
ஆசையாக மனைவியை அதன் பிறகு அவரே அழைத்து சென்றார்.
சாந்தி முகத்தில் எப்பொழுதும் இல்லாத ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. அது அவருக்கு ஒரு புது பொலிவை கொடுத்தது.
“இங்க பெங்களூருக்கு வந்ததும் நீ கொஞ்சம் கலராகிட்ட சாந்தி” என்றார் சண்முகம் மனைவியிடம்.
சாந்திக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது. இங்கே நடப்பவற்றை அவ்வப்போது மீனாவிடமும் ரேவதியிடமும் கூறி மகிழ்ந்தார்.
காலையில் வெளியே கிளம்புவதற்கு முன் சமையல் எல்லாம் சாந்தி ஒருவரே
செய்வதை பார்க்கவும், அவரும் எழுந்து உதவி செய்தார்.
அவர் காய்களை நறுக்கி கொடுக்க சாந்தி சமையலை விரைவாக முடித்தார்.
“அம்மா, அப்பா கட் பண்ணி கொடுக்கிற சாலட் எல்லாம் பார்த்து எங்க ஆபிஸ்ல, தனியா செஃப் வச்சிருக்கீங்களானு கேட்குறாங்க..” என்றாள் அன்பரசி பெருமையாக.
சாந்தி ஒரு மணி நேரம் நறுக்கும் காய்கறிகளை சண்முகம் பத்தே நிமிடங்களில் நறுக்கி முடித்துவிடுவார். மீதி நேரத்தில் மகளுக்கு ஆசையாக டிசைன் டிசைனாக சாலட் எல்லாம் நறுக்கி கொடுத்தார்.
“நான் சமைச்சு கொடுக்கிறதை எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்களே.. உங்க அப்பா கட் பண்றதை மட்டும் பாராட்டுவாங்க..” என்று நொடித்து கொண்டார் சாந்தி.
“பொறாமை டா உங்க அம்மாக்கு” என்றார் சண்முகம் மகளிடம் சிரித்து கொண்டே.
“நீங்க கொஞ்சம் சுமாராவே சமைக்கலாம் அத்தை. ரொம்ப டேஸ்டா இருக்குன்னு எனக்கு கொடுக்காம என் பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் சாப்பிடறாங்க” என்றான் அருண் உடனே.
“அப்படியா மாப்பிள்ளை.. இனிமே ரெண்டு டப்பா வச்சிடறேன். ஒன்னு கொடுத்திட்டு ஒன்னை நீங்க வச்சுக்கோங்க.. பாலுக்கு அப்படி தான் கொடுப்பேன்” என்றார் ஆசையாக.
சாந்திக்கு வாழ்க்கையே வசந்தமாக மாறியது போல இருந்தது.
“லவ்ல செகண்ட் இன்னிங்ஸ் ரொம்ப இன்டெரெஸ்டிங்கா போகுது போலவே” என்று பிள்ளைகள் சாந்திக்கு அழைத்து வம்பு வளர்த்தார்கள்.
——————–
கார்த்திக்கு எக்ஸாம் சமயம் என்பதால், எழில் அவனிடம் இரண்டு வாரங்களாக பேசுவது கூட இல்லை. அவன் இலக்குக்கு காதல் தடையாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கொஞ்ச நாட்களுக்கு பிறகு வீட்டில் அனைவருக்கும் சொல்லிக்கொள்ளலாம் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்ந்திருந்தார்கள்.
“அக்காடீ நீ நிஜமாலுமே லவ் பண்றியா? நீ போன்ல கூட பேசறதே இல்லையே” என்றாள் தமிழ் இரவு தனிமையில்.
“கார்த்திக்கு எக்ஸாம் இல்ல தமிழு? அவர் நம்மளை மாதிரி இல்லைடி. உனக்கு தான் தெரியுமே, கார்த்தி பயங்கர பொறுப்ஸ், படிப்ஸ்.. இந்த வருஷம் கோல்ட் மெடல் கிடைக்கும் போல. அதுக்கு ஹார்ட் ஒர்க் அவசியமாம்”
“அதான் நீ இப்ப பெரியப்பா பெரியம்மா காதலுக்கு எல்லாம் தண்ணீ ஊத்தி வளர்த்திட்டு இருக்கியா?”
“ஆமா, ஊரான் காதலை ஊட்டி வளர்த்தா என் காதல் தானா வளரும்னு”
“வளரும் வளரும்.. அப்ப அடுத்து யார் காதலோ?”
“அடுத்து லவ்ஸ் இல்லை தமிழு.. அடுத்து செண்டிமெண்ட்.. நான் ரத்னா ஆன்ட்டியை அவங்க அம்மா வீட்டோட சேர்த்து வைக்கலாம்ன்னு யோசிச்சிருக்கேன்”
“எதுக்கு எழில் இந்த வேலை உனக்கு? எப்படி இருந்தாலும் அவங்க தான் உனக்கு மாமியார். அங்க போய் தேவை இல்லாமல் பிரச்சனை ஆனா நாளைக்கு உங்க உறவுல சிக்கல் வந்துடும் டீ”
“எனக்கு செய்யணும்னு தோணுதே?”
“என்னமோ செய்.. சொன்னா கேட்கவா போற?”
இதை பற்றி பேசுகையில் “அம்மாவை யாரும் எதுவும் சொல்லிட போறாங்க. இவ்வளவு நாளா அவங்க இல்லாம தானே இருந்தோம், அப்படியே விட்றுவோமே?” என்று கார்த்தி கூறி இருந்ததால், கார்த்தியை இந்தவிஷயத்தில் கழட்டி விட்டுவிட்டாள்.
விக்கியிடம் இதை பற்றி பேசி இருந்தாள். அவனும் எழிலுக்கு உதவுவதாக கூறி இருந்தான்.
எப்படி இதை செயலாற்றுவது என்ற யோசனையுடன் தூங்க சென்றாள் எழிலரசி.
———————–
error: Content is protected !!