Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-22

அத்தியாயம்-22

நிகழ்காலம்



Advertisement

இடம்: சென்னை

மதி பதற்றத்தில் தன் நகங்களைக் கடித்துக் கொண்டு,  என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.

“அவங்கிட்ட எப்படிச் சொல்றது..?”

Advertisement

‘விக்கியுடன் சினிமாவுக்குப் போக எப்படிச் சம்மதித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆதி சார் அந்த தர்ஷாவுடன் வெளியே போனால், நானும் அதே தப்பைச் செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?’ அவருக்காவது ஞாபக மறதி என்ற ஒரு காரணம் இருக்கிறது.. நான் செய்வதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? எனக்கு புத்தி சுவாதீனம் முற்றிலும் போய்விட்டது என்று சொல்வதா..?’ என்று அவளது மனமே அவளை இடித்துரைத்தது.

Advertisement

அதே சமயம்

‘அவருக்கு நினைவு இல்லை என்றாலும், அவர் எப்படி இன்னொரு பெண்ணுடன் வெளியே செல்ல நினைக்கலாம்..’ என்று அவளது குட்டி இதயம் இன்னும் குமுறிக் கொண்டுதானிருந்தது.

‘ஒருவேளை இன்னொரு பெண்ணுடன் டேட்டிங் செல்வது அவருக்குப் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு அப்படி இல்லையே.. அது வெறும் ஒரு சாதாரண டேட்டாக இருந்தாலும் அவளால் ஜீரணிக்க முடியாதே.’

Advertisement

“என்னால் இது முடியாது..” முகத்தில் ஒரு உறுதியுடன் விக்கியை அழைத்தாள்

“ஹலோ மதி..” விக்கியின் உற்சாகமான குரல் அவளது நாவைக் கட்டியது.

“ஹாய் விக்கி..” என்றாள் மெதுவாக.

“மதி, மூவி பிளான் ஞாபகம் இருக்குல்ல? கரெக்டா ஒரு மணிக்கு ரெடியா இரு.. நான் வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்..” அவனது குரலில் இருந்த துள்ளலும் உற்சாகமும் அவளை இன்னும் தயங்க வைத்தது.

“அதைப் பத்திப் பேசத்தான் ஃபோன் பண்ணினேன் விக்கி..” மெதுவாக ஆரம்பித்தாள்.

“என்ன?” அவனது குரல் சற்றே தாழ்ந்தது.

“ஆக்சுவலி, எனக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை.. லேசா காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு..” மூச்சைப் பிடித்துக் கொண்டு பொய் சொன்னாள்.

“நான் வேணா வந்து டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகவா?”என்றான் நிஜ அக்கறையோடு,

“ஐயோ.. அதெல்லாம் வேணாம்..” அவசர அவசரமாக மறுத்தவள், பிறகு ‘ஏன் இவ்வளவு ஓவர் ஆக்டிங் பண்றோம்’ என்று தன்னைத்தானே குட்டிக்கொண்டாள்

“வீட்ல ரெஸ்ட் எடுத்தாலே போதும்னு நினைக்கிறேன் விக்கி..சோ..” என்று வாக்கியத்தை முடிக்காமல் இழுக்க,

“மூவி பிளான் கேன்சல், அதானே?” தன் ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டு, எவ்வளவு சாதாரணமாக முடியுமோ அவ்வளவு சாதாரணமாக கேட்டான் விக்கி.

அவனை வருத்தப்பட வைத்ததற்காக மதி மிகவும் சங்கடப்பட்டாள்.

 “நிஜமாவே ஸாரி விக்கி..” என்று மனதார மன்னிப்புக் கேட்டாள்.

“இட்ஸ் ஓகே.. ஓரளவுக்கு இது நான் எதிர்பார்த்ததுதான்.. அதனால எனக்குப் பெரிய சர்ப்ரைஸ் ஒன்னும் இல்லை.. டேக் கேர், பை..” என்று ஃபோனை வைத்தான்.

விக்கியின் உணர்வுகளுடன் விளையாடிவிட்டதாக எண்ணி வருந்தியவளின்  சிந்தனையை வாசலில் கேட்ட காலிங் பெல் சத்தம் கலைத்தது. ‘இந்தக் காலை நேரத்துல யாரு?’குழப்பத்துடன் கதவைத் திறந்தபோது, அங்கே அவளது வீட்டு உரிமையாளர் பெண்மணி (Landlady) எப்போதுமே இருக்கும் அதே முகச்சுளிப்புடன் நின்றிருந்தார்.மதி ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தாள்

மதியின் ஆச்சரியத்திற்குப் காரணம் இருந்தது, அந்த அம்மாள் மாடிப் படிகள் ஏறி வருவதே கிடையாது. தன் பருமனான உடலையும், ஆர்த்தரைடிஸ் பாதித்த முழங்கால்களையும் வருத்தி மாடி ஏறுவது அவருக்குப் பிடிக்காது.

“என்னம்மா இன்னும் கிளம்பலையா?” என்று எரிச்சலுடன் கேட்டார். மூச்சு வாங்கிக் கொண்டே..

“எங்க கிளம்பணும்?”

“அது போச்சு போ.. நான் இன்னைக்கு ஊருக்குப் போகணும்.. நீங்க எல்லாரும் சனிக்கிழமை காலைல கிளம்புங்கன்னு போன வாரமே சொன்னேனே, மறந்துட்டியா?”

அவளது ஞாபக மறதியை நக்கல் செய்யும் விதமாக இருந்தது அவரது குரல்.

மதி அதிர்ச்சியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள்.

‘கடவுளே.. மனதில் ஆயிரம் விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்ததில் இது சுத்தமாக மறந்துவிட்டதே!’

“ஸாரி மேம், இதோ இப்பவே கிளம்புறேன்..”

“சீக்கிரம் பாரும்மா.. எனக்கு டிரெயினுக்கு டைம் ஆச்சு..” என்று சொல்லிவிட்டு, மூச்சு வாங்கியபடி அவர் கீழே இறங்கிச் சென்றார்.

மதி ஒரு பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்தாள். அந்த ஓனர் அம்மாள் இளம் வயதிலேயே கணவனை இழந்தவர், கவனித்துக் கொள்ளப் பிள்ளைகளும் இல்லை. தன் பிழைப்பிற்காக வீட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்து, மூன்றை வாடகைக்கு விட்டிருந்தார். அவர் ஒரு கண்டிப்பான பேர்வழி என்பதால் தான்  மதியின் அப்பா அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். அவரது அந்த முரட்டுத்தனமான சுபாவமே அங்கு தங்கியிருக்கும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக இருந்தது.

ஓனர் அம்மாள் தனது குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதால், ஞாயிறு மதியம் வரை அனைவரும் அறையைக் காலி செய்ய வேண்டும் என்பது நிபந்தனை. மற்ற பெண்கள் அனைவரும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர், மதி மட்டுமே எஞ்சியிருந்தாள்.

இப்போது அவள் தங்குவதற்கு ஒரு இடத்தைத் தேடியாக வேண்டும். ‘ஶ்ரீநிதியிடம் கேட்கலாமா? ஐயோ.. அவளும் இந்த வீக்கெண்ட் ஊருக்குப் போறேன்னு சொன்னாளே..’ மதி கவலைப்பட ஆரம்பித்தாள்.

திடீரென அவளது மனதில் ஒரு யோசனை மின்னியது. “மாலா ஆன்ட்டி..” அவளது இதயம் மகிழ்ச்சியில் துள்ளியது.

“ஆனா அந்த ஹிட்லர் (ஆதி) அங்க இருப்பாரே..?” அடுத்த கணமே அந்த எண்ணம் அவளது உற்சாகத்தைக் குறைத்தது.

“ஆனா அவர் அந்த பாராசைட்டோட (தர்ஷா) மகாபலிபுரத்துக்கு ஓவர் நைட் தங்குறதுக்காகப் போறேன்னு சொன்னாரே.. அப்போ அவர் வீட்ல இருக்க மாட்டார்..”

ஒரு முடிவுக்கு வந்தவள், ஒரு நாளுக்கான உடைகளை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு கதவைப் பூட்டினாள். மணி 10 ஆகி இருந்தது.

மாலா ஆண்டி வீட்டின் அருகே இருந்த ஒரு கோவிலில் அமர்ந்து நேரத்தைக் கடத்தினாள்.

‘அவர்கள் 10 மணிக்குக் கிளம்புவதாக அந்த தர்ஷா சொன்னா..’ ஒரு அரை மணி நேரம் கூடுதல் அவகாசம் கொடுத்துவிட்டு, மெதுவாக அவர் வீட்டை நோக்கி நடந்தாள்.

வீட்டு வாசலில் காலிங் பெல் அடித்துவிட்டு நின்றபோது, அவளது மனதில் மாலா ஆன்ட்டியின் சுவையான “குழிப்பணியாரம்” ஞாபகம் வந்தது; பசி வயிற்றைக் கிள்ளியது.

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும்,

“டா டான்ங்ங்ங்.. சர்ப்ரைஸ்!” என்று உற்சாகத்தில் கத்தினாள். அங்கே மாலா ஆன்ட்டியோ அல்லது குமார் அங்கிளோ தான் இருப்பார்கள் என்று நினைத்தாள், ஆனால்

கதவைத் திறந்தவனைப் பார்த்த மதியின் உற்சாகம் வடிந்தது,சிரிப்பு பாதியிலேயே உறைந்தது.

நேரம் செல்லச் செல்ல ஆதி மிகுந்த மனஉளைச்சலுக்கும் அமைதியற்ற நிலைக்கும் ஆளானான்.

‘மேட்னி ஷோ 2 மணிக்கு மேலதான் ஆரம்பிக்கும்.. அதுவரைக்கும் அவ வீட்லதான் இருப்பா..’ என்று தன் தவித்த மனதைத் தேற்ற முயன்றான்.

‘ஒருவேளை அதுக்கு முன்னாடியே கிளம்பி ஷாப்பிங் போயிருந்தா என்ன பண்றது?’ அவனது மனது ஒரு லாஜிக்கான கேள்வியை எழுப்ப, அவனுக்கு இருந்த அந்த சிறு நிம்மதியும் காற்றோடு போனது.

“கடவுளே, அவ வேற ஒருத்தன் கூட வெளிய போறாங்குறது என்னை ஏன் இவ்வளவு பாதிக்குது? அந்த  காட்சியை என்னால கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியலையே..”

தர்ஷாவுடன் பார்ட்டிக்குச் செல்லும் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அவளது கெஞ்சலையும் வருத்தத்தையும் துளியும் பொருட்படுத்தாமல் இருந்த அவனது மனம், இப்போது மதியும் விக்கியும் சினிமாவுக்குச் செல்லும் ‘டேட்டிங்’கையே சுற்றி சுழன்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், ‘அந்தப் பார்ட்டிக்கே போயிருக்கலாம் போல’ என்று கூட அவனுக்குத் தோன்றியது. அங்காவது பழைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், இந்தத் தேவையில்லாத சிந்தனைகளிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும்; இப்போது அவன் அனுபவிக்கும் இந்த நரக வேதனையாவது குறைந்திருக்கும்.

அவன் சோபாவில் அமர்ந்து தவித்துக் கொண்டிருந்தபோது, காலிங் பெல் ஒலித்தது.

கதவைத் திறந்தபோது, தன் வழக்கமான குறும்புத்தனமான முகத்துடன் அங்கே நின்றிருந்த மதியைப் பார்த்ததும் அவன் திகைத்துப் போனான்.

இந்த நேரத்தில் அவன் அங்கே இருப்பதை அவளும் எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. ‘எல்லா இடத்தையும் விட்டுட்டு இப்போ இங்க எதுக்கு வந்திருக்கா? இப்போ அந்த லூசுப்பய கூடல்ல இருக்கணும்?’ – அந்த நினைப்பே அவனுக்குக் கோபத்தை வரவழைக்க, கைகளை மார்பில் குறுக்கே கட்டிக்கொண்டு அவளைக் கடுமையாகப் பார்த்து,

“நீ எதுக்கு இங்க வந்த?” என்றான்.

தன்னுடைய அந்தக் குரலில் ஒலித்த அதிகாரமும் கடுமையும்  அவனுக்கு உறைத்தாலும், அவனால் அதை மாற்ற முடியவில்லை. அவனது தொனியில் காயப்பட்ட மதி, தன் வருத்தத்தைக் காட்டாமல் இருக்க உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

‘வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு என்ன ஒரு சிறப்பான வரவேற்பு!’என்று ஏளனமாக எண்ணியவள்,

“நான் மாலா ஆன்ட்டியைப் பார்க்க வந்தேன்..” என்றாள் விரைப்பாக..

‘இவர் ஏன் இன்னும் இங்கேயே இருக்கார்? இந்நேரம் மகாபலிபுரம் போயிருக்கணும் இல்லையா?’ என்று மனதிற்குள் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“அம்மா வீட்ல இல்லை.. அப்பாவும் அம்மாவும் ஒரு விசேஷத்துக்காகக் கோயம்புத்தூர் போயிருக்காங்க..”

“எப்போ வருவாங்க..?” கவலையில் அவளது குரல் தாழ்ந்து ஒலித்தது.

“நாளைக்குத்தான் வருவாங்க.. ஏன்? ஏதும் முக்கியமான விஷயமா?” அவளது வாடிய முகத்தைப் பார்த்ததும் அவனுக்குச் சற்று கவலை ஏற்பட்டது.

“ஒன்னும் இல்லை சார்.. நான் கிளம்புறேன்..” என்று முணுமுணுத்துவிட்டு  திரும்பினாள்.

அப்போதுதான் அவளது தோளில் ஒரு பக்கமாகத் தொங்கிக் கொண்டிருந்த பேக்-பேக் (back pack) அவனது கவனத்தை ஈர்த்தது. அதன் அளவைப் பார்த்தாலே அதில் சில உடைகள் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

‘ஒருவேளை இங்க தங்கலாம்னு வந்திருப்பாளோ?’

“மதி நில்லு..” அவன் நினைக்கும் முன்னரே வாயிலிருந்து வார்த்தைகள் தானாக வெளிவந்தன.

“உள்ள வா..” என்றான் இறுக்கமான முகத்துடன். அவனது இந்த அழைப்பைப் பற்றி அவள் யோசிப்பதற்கு முன்னரே, அவளது கால்கள் அவனது அழைப்பிற்கு இணங்கி வீட்டிற்குள் நுழைந்திருந்தன.

“நீ இங்க ஸ்டே பண்ணலாம்ன்னு வந்தியா?”

சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் ஆதி. அவள் மெதுவாகத் தலையாட்டினாள்.

“ஏன்?”

அவள் தன் நிலைமையைச் சுருக்கமாக விளக்கினாள். “மாலா ஆன்ட்டி இருப்பாங்கன்னு நினைச்சேன்..”

“முதல்லயே ஃபோன் பண்ணிக் கேட்டிருக்கலாம்ல..” என்றான் அதட்டும் குரலில்

தன்னுடைய அதீத தன்னம்பிக்கையை நொந்துகொண்டு அவள் தலைகுனிந்து நின்றாள்.

“சரி..உனக்குச் சங்கடம் இல்லைன்னா, நீ இங்கேயே தங்கலாம்.. எனக்குப் பிரச்சனை இல்லை..” என்றான் வெகு சாதாரணமாக,

வந்து அரை மணிநேரம் ஆகியிருந்தது. வீட்டில் தங்க சொன்னவன்,அத்தோடு கடமை முடிந்தது என்று சென்றுவிட்டான் ஆளையே காணோம்.

மதியைப் பசி வாட்டியது; தன் வயிற்றைக் கட்டிக்கொண்டு சோபாவில் சுருண்டு கிடந்தாள்.

‘ஐயோ ரொம்ப பசிக்குதே.. ஆன்ட்டி பணியாரம் சுட்டுத் தருவாங்கன்னு கனவு கண்டுட்டு, ஹோட்டல்ல கூட சாப்பிடாம வந்துட்டேன்.. இப்போ இந்த கடூஸ்கிட்ட எப்படி கேக்குறது?’

திடீரென மாடியிலிருந்து இறங்கி வரும் காலடிச் சத்தம் கேட்க சட்டென்று சுதாரித்துக் கொண்டவள், ஒரு மேகஸினை எடுத்து முகத்தை மறைத்தபடி வாசிப்பது போலப் பாசாங்கு செய்தாள்.

சற்று பொறுத்து அவன் என்ன செய்கிறான் சத்ததையே காணோம் என்று யோசிக்கும் போது..

“புத்தகத்தைத் தலைகீழாக வச்சி வாசிக்கும் பழக்கம் உனக்கு இருக்குன்னு எனக்குத் தெரியாது.. உண்மையிலேயே இது ஒரு தனித் திறமைதான்!” என்று திடுமென கேட்ட அவன் குரலில் பதற்றமடைந்து புத்தகத்தைத் திருப்பி வைத்தாள்,ஆனால் இப்போதுதான் அது தலைகீழாக இருந்தது. குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்; அவளது முகத்தைப் பார்த்த ஆதி நக்கலாகச் சிரித்தான். அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதை அவள் உணர்வதற்குள் காலம் கடந்துவிட்டது.

“ஒரு வரி கூட நீ வாசிக்கலைங்கிறது இப்போ தெளிவாத் தெரியுது, அப்புறம் ஏன் இந்த நடிப்பு?”

அவளிடம் எந்தப் பதிலும் இல்லை; பசி அவளது மூளையின் செயல்பாட்டையே முடக்கியிருந்தது போல.

அவளது அந்தப் பேச்சற்ற நிலையை பார்த்ததும் அவனது முகம் சற்று கனிந்தது. “மதி.. ஏதும் பிரச்சனையா?”

அவள் வாயைத் திறப்பதற்கு முன்னரே, அவனது கேள்விக்குப் பதில் சொல்வது போல அவளது வயிறு ‘குர்ர்ர்’ என்று சத்தமிட, உடனே அந்தச் சத்தத்தை நிறுத்த வயிற்றைப் அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“பசிச்சா சொல்ல வேண்டியதுதானே..” என்று கடிந்துகொள்ள,

அவள் தன் இதழ்களைக் குவித்து ஒரு குழந்தையைப் போல அவனைப் பார்த்தாள்.

“வீட்ல சாப்பிடுறதுக்கு பெருசா ஒன்னும் இல்லை.. எனக்கும் சமையல் அவ்ளோவா தெரியாது.. தோசையும் பொடியும் ஓகேவா?”

உணவை மறுக்கும் நிலையிலா அவள் இருந்தாள்? உடனே சம்மதித்தாள்.

காம்பஸ் வைத்து அளந்தது போல் வட்ட வட்டமாக அவன் தோசை சுடுவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்காக அவன் செய்கிறான் என்ற எண்ணமே அவளுக்கு கிளர்ச்சியூட்டியது.

மாலா ஆன்ட்டி சமைக்கும்போது செய்வது போலவே, அவள் சமையலறை மேடை மீது ஏறி அமர்ந்து கொண்டு, அவன் தோசை சுடும் அழகை பார்த்து ரசித்தாள்.

தட்டைத் கையில் ஏந்தியபடி, அவன் சுட சுட அதே வேகத்தில் தோசைகளை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள்.

தட்டு காலியாகும் வேகத்தைப் பார்த்தவனுக்கு அவளுக்கு எவ்வளவு பசி இருந்திருக்கும் என்பது  புரிந்தது.

‘பைத்தியக்காரி.. இவ்வளவு பசிச்சிருக்கு, ஒரு வார்த்தை வாயைத் திறந்து சொன்னா என்ன?’

தோசைகளைச் சாப்பிடுவதில் அவள் மும்முரமாக இருந்தபோது, அவளது பின்னலில் இருந்து தப்பிய ஒரு முடிக்கற்றை முகத்தில் விழுந்து அவளுக்கு இடையூறு செய்தது. ஒரு கையில் தட்டை வைத்திருந்ததால், தன் வலது கையின் பின்புறத்தால் அதை ஒதுக்க முயன்றாள். ஆனால் அந்தப் பிடிவாதமான முடி மீண்டும் விழுந்து அவள் பார்வையை மறைக்க, அவளது கை மீண்டும் உயர்வதற்கு  முன்பே, அவனது கரம் தானாக முன்வந்து அந்த முடிக்கற்றையை அவள் காதுக்கு பின்னால் ஒதுக்கிவிட்டது. அவனது அந்த மென் தீண்டலில் அவளது தண்டுவடத்தில் தொடங்கி உச்சந்தலை வரை மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தது.

கையில் இருந்த தோசையுடன் அப்படியே சிலையானால் அவள்.

ஆதி அவளது அழகிய மதி முகத்தை ஒருவித மயக்கத்துடன்  பார்த்தான். இருவரது பார்வைகளும் ஒன்றையொன்று பிணைத்துக் கொண்டன.

அவனது பார்வையின் வெப்பத்தில் அவளது உடல் முழுதும் தகித்தது.

பெங்களூரில் இருந்தபோது அவன் அவளைப் பார்க்கும் அதே பார்வை. அன்று அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் அளவு அவளுக்குப் புத்திசாலித்தனம் இருந்திருக்கவில்லை. ஆனால் இன்று, அந்தப் பார்வையை ஒரு திறந்த புத்தகத்தைப் போல அவளால் வாசிக்க முடிந்தது. அந்தப் பார்வையில் இருந்த அன்பு, ஏக்கம், தாபம் அவனது இதயத்தின் மூலையில் ஒளிந்திருக்கும் காதலின் சாயல் என எல்லாம் அப்பட்டமாக தெரிந்தன.

தோசைக்கல்லில் இருந்து வந்த கருகிய வாசனை இருவரது மோனத்தையும் கலைத்தது. சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டனர்.

“உப்..” என்று மூச்சை வெளிவிட்டபடி  அடுப்பை அணைத்தான் ஆதி.

“மதி.. சீக்கிரம் சாப்பிட்டுட்டு, கிச்சனை கிளீன் பண்ணிட்டு வெளிய வா..” என்று தனது வழக்கமான ‘பாஸ்’ தோரணையில் கட்டளையிட்டுவிட்டு வெளியேறினான்.

‘ஹிட்லர்.. ஹிட்லர்..’ என்று மனதிற்குள் அவனைத் திட்டிக்கொண்டே அவன் சொன்னபடி கிச்சனைச் சுத்தம் செய்துவிட்டு, வந்து சோபாவில் அமர்ந்தாள்.

அவன் நெட்ஃபிளிக்ஸில் ஏதோ டாக்குமெண்டரி பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளுக்கு மரண போர் (Bore) அடித்தது. கையை வாயில் வைத்து ஒரு நீண்ட கொட்டாவி விட்டவள்,

“எனக்கு ரொம்ப போர் அடிக்குது..” என்று அறிவிக்க, அவன் உதடு ஏளனத்தில் வளைந்தது,

“நிச்சயமா உனக்கு போர் அடிக்கத்தான் செய்யும்.. இந்நேரம்  ஒரு அருமையான ரொமான்டிக் மூவி பார்த்திருக்க வேண்டியது. மிஸ் ஆகிடுச்சி இல்ல..” அவனது நக்கல் பேச்சு அவளது ஈகோவைச் சீண்டியது.

“ஆனா அது ரிசார்ட்ல நடக்குற உங்க லேட் நைட் பார்ட்டியை விட ஒன்னும் ரொமாண்டிக்கா இருந்திருக்காது..” என்று பதிலடி கொடுத்தாள்.

“ஏன் இவ்வளவு குதிக்கிற? நான் சொன்னதுல என்ன தப்பு? எப்படியும் நீ சினிமாவுக்குப் போறதாத்தானே பிளான் இருந்தது?”

“எனக்கு ஆன்ட்டி கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு தோணுச்சு, அதான் அதை வேண்டான்னு சொல்லிட்டேன்.. ஆனா நீங்க இந்நேரம் மகாபலிபுரம் போயிருக்கணுமே.. ஏன் போகலை?”

“ஆமா, போகத்தான் இருந்தேன்.. ஆனா இன்னிக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்குன்னு கேள்விப்பட்டேன், அதான் போகலை..”

இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்ட அந்தப் பொய் காரணங்களை ரசித்தபடி, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர். அதாவது இருவருக்குமே வேறொருவருடன் வெளியே செல்ல விருப்பமில்லை என்பது புரிந்தது.

அதை நினைத்து இவ்வளவு நேரமும் தாங்கள் அனுபவித்த படபடப்பு, தவிப்பு, பாதுகாப்பற்ற உணர்வு, வயிற்றெரிச்சல் எல்லாம் இப்போது அர்த்தமற்றதாகத் தெரிந்தது.

மனதின் பாரம் நீங்கி இறகு போல இதயம் லேசானது.

“எங்கயாவது வெளிய போலாமா?” என்று அவள் எதிர்பார்ப்புடன் கேட்க,  அவனால் மறுக்க முடியவில்லை.

“எங்க?” என்று தனது சம்மதத்தை மறைமுகமாகத் தெரிவித்தான்.

“ஷாப்பிங் போலாமா..” ஒரு சிறுமியைப் போல கண்கள் மின்ன கேட்டாள்.

“ஷாப்பிங்கா? எங்க ஷாப்பிங் போகணும் உனக்கு?”

“டி.நகர்.. ரங்கநாதன் ஸ்ட்ரீட்!” என்று அவள் உற்சாகத்தில் கூவ..

“என்னது???” என்று அதிர்ச்சியில் விழிகள் பிதுங்கினான் ஆதித்யா.

                                     டேட்டிங் ஸ்டார்டஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!