Skip to content
Post Views: 131
ஓம் ஸ்ரீ சாய்ராம்
அறிவிப்பே இல்லாமல் வந்திருப்பது ஏன் என மருமகளின் முகத்தில் தாண்டவமாடும் கேள்வியை நமுட்டுச் சிரிப்புடன் ரசித்தார் திலகா.
“வாங்க! வாங்க!” என வாய்கொள்ளா புன்னகையுடன் திலகாவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்த சாருலதா,
“இப்பதான் இங்க வரணும்னு தோணிச்சாடா,” தருணிடம் செல்லச்சண்டையிட்டார்.
Advertisement
“எனக்கு வரதுக்கு என்ன! வரேன்னு சொல்லும் போதெல்லாம், குழந்தைய பாத்துக்க, ஆபீஸ் வேலையை கவனின்னு உங்க பொண்ணுதான் ஏதாவது காரணம் சொல்லி தடுத்துடுறா,” வஞ்சனையே இல்லாமல் தோழியைப் போட்டுக்கொடுத்தான் தருண்.
“ஏன்டி அப்படிச் சொன்ன,” சாருலதா மகளைக் கண்டிக்க,
“அவளைச் சீண்டுறான் சாரு,” இடைபுகுந்த திலகா,
Advertisement
“அப்படியே அவ பேச்சைக் கேக்குற நல்லபிள்ள மாதிரி நடிக்காதேடா,” செல்லமாய் மகன் தோளில் தட்டி, தோள்பையிலிருந்து ஒரு நகைப்பெட்டியை எடுத்து மருமகளிடம் நீட்டியவர்,
Advertisement
“லாக்கர்லேந்து உன் வைர நெக்லேஸ் ஜிமிக்கி எடுத்துட்டு வந்திருக்கேன். குருமூர்த்தி மகள் கல்யாணத்துக்குப் போட்டுட்டு வர,” என்றார் புன்னகை முகமாக.
அந்தத் திருமண வைபவத்தைப் பற்றி அவளுக்கு நினைவில்லாமல் இல்லை. அன்று அவர் பத்திரிக்கை தர வந்ததால் தானே தங்கள் விலகல் நாடகத்தை அரங்கேற்ற முடிந்தது.
விலகியிருக்க வேண்டுமென்ற முடிவெடுத்த பிறகு, பொது இடத்தில் சந்திக்கலாம், விழாவில் கலந்துகொள்ளலாம் என விதிமுறைகளைத் தளர்த்தி, தன்னவனைக் குழப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
Advertisement
“உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் ‘ம்மா,” என நழுவப் பார்த்தாள்.
“நீங்க பேசிட்டு இருங்க. நான் போடுறேன்,” சாருலதா கூற,
“என் மருமக கையால காபி குடிச்சு எத்தனை நாளாச்சு. அவளே போட்டு எடுத்துட்டு வரட்டும் சாரு,” தடுத்தார் திலகா.
“எனக்கு காபி மட்டும் போதாது. காரமா சாப்பிட ஸ்னேக்ஸ் என்ன இருக்கு,” கூக்குரலுடன் நாசுக்காய் தோழியைப் பின்தொடர்ந்தான் தருண்.
அவளுமே அவனிடம் தனிமையில் பேச வேண்டுமென… இல்லை இல்லை… திட்ட வேண்டுமென தவியாய் தவித்துக்கொண்டிருந்தாள்.
எலி அதுவாக வலிய வந்து வலையில் சிக்கிக்கொண்டதும்,
“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படிப்பண்ணா என்ன அர்த்தம்?” கோபாக்கினியாக டம்ளரை ஓங்கி மேடையில் வைத்தாள்.
“என்ன பண்ணேன்,” நொறுக்குத் தீனியைத் தேடுவதில் மட்டும்தான் மும்முரமாக இருந்தான் அவன்.
முறுக்கு டப்பாவை அவனிடமிருந்து பிடுங்கியவள், “நாங்க பிரிஞ்சு இருக்கோம்னு தெரிஞ்சும் அம்மாவை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க?” கடிந்தாள்.
சூடுசுரணை ஏதுமில்லாமல் டப்பாவிலிருந்து முறுக்குகளை எடுத்துத் தின்னும் நண்பனின் அலட்சியப் போக்கில் எரிச்சல் மேலோங்க, விருட்டெனத் திரும்பியவள்,
“நான்தான் அழைச்சிட்டு வரச்சொன்னேன்,” என்ற மாமியாரின் மேல் மோதினாள்.
“அம்மா…” உதறியது பேதைக்கு.
“மகன் புலி குகைக்குள்ள போயிருக்கான்னு தெரிஞ்சும் எத்தனை மெதுவா வரம்மா. கொஞ்சம் கூட தாய் பாசமே இல்ல உனக்கு,” பொய்கோபம் கொண்ட மகனின் தலையில் தட்டியவர்,
மருமகளிடன் “குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொடு ரம்யா,” என்றார்.
ஒரே மூச்சில் டம்ளர் தண்ணீரை பருகியவர், “நீங்க பிரிஞ்சு இருக்குற காரணத்தை வீட்டாளுங்க கிட்ட மறைக்கிறது மட்டும் முக்கியமில்ல. ஊரார் வாயிலும் விழுந்து புரளாம பாத்துக்கிறது அதைவிட முக்கியம். கல்யாணத்துக்கு நம்ம ஸ்டாஃப் அத்தனை பேரும் வருவாங்க. அவங்களுக்குப் பேச இடம் கொடுக்கணுமா வேண்டாமான்னு நீயே முடிவெடு ரம்யா,” கூறிவிட்டு,
“சீக்கிரம் காபி போட்டு எடுத்துட்டுவா. நாங்க வீட்டுக்குக் கிளம்பணும். உன் புருஷன் பசி தாங்கமாட்டான்,” எனக் கூறி அவள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தார்.
காபியை ருசித்துப் பருகும் திலகாவின் நெகிழ்ச்சியைக் கண்ட சாருலதாவிற்கு என்னமோபோல் இருந்தது. வாரக்கணக்காய் புகுந்த வீட்டிற்குச் செல்லாத மகளின் போக்கில் அவருக்குமே நெருடல்தான்.
மனையாளின் உடல் நலத்தில் அக்கறை கொண்டவராக மாப்பிள்ளையே அனுப்பவேண்டாம் எனச் சொன்னதால் அவர் பேச்சை மீற முடியாமல் அமைதிகாத்தார் சாருலதா. இன்று திலகாவின் பேச்சில் வழிந்தோடும் ஏக்கத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டவர்,
“நீங்க பார்த்துகிட்டா என்ன; நான் பார்த்துகிட்டா என்ன திலகா. இன்னைக்கே அவளை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க,” என்றார்.
அதைக்கேட்ட ரம்யாவிற்குத் தூக்கிவாரிப்போட்டது.
மருமகளின் உடல்மொழியினைக் கண்டு சிரித்தவர், “வம்பே வேண்டாம் சாரு; நகை கொடுக்கும் சாக்கில் உன் மருமகளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டியான்னு என் பையன் ருத்திர தாண்டவம் ஆடுவான்,” கூறி
“கல்யாணத்துல பார்க்கலாம்,” எனப் புறப்பட்டார்.
“அவ வாய்திறந்து ஓகே சொல்லவே இல்லையே ‘ம்மா,” காரில் ஏறிக்கொண்டதும் படபடத்தான் தருண்.
“நாம வீட்டுக்குப் போகுறதுக்குள்ள சம்மதம் சொல்றாளா இல்லையான்னு பாரு,” அதீத நம்பிக்கையுடன் நிமிர்ந்து அமர்ந்தார் திலகா.
வீட்டின் தரிப்பிடத்தில் வண்டி வந்து நிற்கவும், தருணின் அலைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது. தோழியின் அழைப்பு எனக் கண்டவனுக்குப் பேரானந்தம்.
“சொன்னேனா இல்லையா!” இல்லாத சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்ட திலகா,
“நீ பேசிட்டு வா. ஷ்ரவன் பசில காத்துட்டு இருப்பான்,” என வீட்டிற்குள் நுழைந்தார்.
“மண்டபத்துக்கு மட்டும்தான் வருவேன். இதுதான் சாக்குன்னு ஏதாவது கள்ளாட்டம் ஆடி என்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடலாம்னு ப்ளான் பண்ண நெனச்சீன்னா… அவ்வளவுதான் சொல்லிட்டேன்,” சம்மதத்துடன் எச்சரிக்கையும் தூள் பறந்தது.
அவள் மிரட்டல்களை எல்லாம் அவன் லட்சியம் செய்யவே இல்லை.
“கல்யாணத்துக்கு வா வான்னு வைர நெக்லேஸோட வந்தது உன் மாமியாரு. என்மேல ஏன் கோபப்படுற,” ஏட்டிக்குப் போட்டி வாயடித்தான்.
“நடிக்காத டா! நீ சொல்லாமலா விஷயம் அம்மா காதுக்குப் போயிருக்கும்,” கடிந்தாள்.
“ஏன்! உன் புருஷன் போட்டுக்கொடுத்திருக்க மாட்டானா. எல்லாத்துக்கும் என்னையே சந்தேகப்படுற,” அவனும் விடுவதாக இல்லை.
“அவர் இதைப்பத்தி ஒரு வார்த்தைக் கூடப் பேசல தருண். நீயும் உத்ராவும்தான் மாத்தி மாத்தி நச்சரிச்சிட்டு இருந்தீங்க,” அவள் குத்திக்காட்ட,
அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அவன் கண்முன் நிழலாடியது.
“அவன் உன்கிட்ட பேசலத்தான் ரம்யா. ஆனால் ஆபீஸ்ல எத்தனை பேர்கிட்ட பேச்சு வாங்கிட்டு இருக்கான் தெரியுமா. அதான் நீ வந்தால் அவங்க சந்தேகம் எல்லாம் தீர்ந்திடும்னு நெனச்சேன்,” என்றான் கசந்த குரலில்.
“என்னடா சொல்ற?” பதறினாள் பேதை.
திடீரென அவள் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்தியதில் கவலைக்கொண்ட ஊழியர்கள் ஷ்ரவனிடம் கரிசனத்துடன் விசாரிக்கத் தொடங்கியிருந்தனர். மனையாளுக்கு உடல்நலை சரியில்லை, ஓய்வு தேவை என்ற காரணங்கள் எல்லாம் முதல் சில நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியானது.
அப்படியென்ன அவள் உடம்புக்கு எனத் துருவித் துருவிக் கேட்கத் தொடங்கினார்கள்; அக்கறை என்ற பெயரில் அளவுக்கு மீறி மூக்கை நுழைத்து அறிவுரைகளை வாரிவழங்கினார்கள்; அவர்களுள் சிலர், நம்பும்படி இல்லையே என அவன் முகத்திற்கு எதிரேயே நக்கலாகச் சிரிக்கவும் செய்தார்கள்;
அவற்றை எல்லாம் அவன் புன்னகை முகமாய் கடக்க, ஒருநாள் உத்ராவின் கீழ் பணியாற்றி வந்த ஊழியர்கள் சிலர் வீட்டிற்கு வர நேர்ந்தது.
அலுவலக விவகாரங்கள் பற்றி அறிந்திராத உத்ரா, பேச்சோடு பேச்சாக ரம்யா, தன் அம்மா வீட்டிற்குச் சென்றிருப்பதாகக் கூற, அது வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்ததுபோல ஆயிற்று.
ஒன்றுக்கு இரண்டாக கற்பனை செய்துகொண்டவர்கள் அலுவலகத்தில் அரசல்புரசலாகப் பேசிக்கொள்ள, அது காட்டுத் தீயென பரவிவிட்டது.
பெரும்பாலானவர்களின் ஜாடை பேச்சுகளையும், சிலரின் வெளிப்படையான குறுக்கீட்டுகளையும் கண்டும் காணாமல் சகித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான் ஷ்ரவன்.
அனைத்தையும் தருண் விவரித்து முடிக்க, “இத்தனை நடந்திருக்கு. அவர் ஒரு வார்த்தை கூட இதைப்பத்தி சொல்லலடா,” பேரதிர்ச்சி கொண்டவள்,
“இரு நான் அவர்கிட்ட பேசிட்டு உன்னைக் கூப்பிடுறேன்,” என அழைப்பைத் துண்டிக்கப் போக,
“இரு! இரு! அவன்கிட்ட எதையும் கேட்காத!” எனத் தடுத்தான்.
“ஏன்???”
“ஹான்…” என நீட்டி முழக்கியவன், “அண்ணன்னு பாவப்பட்டு ஆறுதலா நாலு வார்த்தை பேசினால், எனக்கு எந்த வருத்தமும் இல்லன்னு சாதிக்கிறான் அந்த ஃப்ராட். அதான் உன்னை சர்ப்ரைஸா அவன் முன்னாடி நிறுத்தி அவன் ரியாக்க்ஷன் பார்க்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்,” தருண் சிரிக்க,
‘சற்றுமுன் அவன் சொன்னது எல்லாம் கட்டுக்கதையோ!’ எனச் சந்தேகம் கொண்டாள் பெண்.
“மறுபடியும் சொல்றேன்! என்னை ஏமாத்த நெனச்ச… இனி உன்னோட பேசவே மாட்டேன்,” அழுத்தமாகத் தெளிவுபடுத்தினாள்.
“ஏமாருற மூஞ்சியப்பாரு!” கலகலத்தவனின் சிரிப்பில் அவள் மனமும் சரியவே செய்தது.
error: Content is protected !!