Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-30

அத்தியாயம் 30

ஆள் அரவமற்ற கேண்டீனின் ஒரு மூலையில் சுற்றுப்புறத்தை மறந்தவளாய், எங்கோ வெறித்தபடி ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கியிருந்தாள் தண்மதி.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பிற்குப் பிறகு, தர்ஷா எனும் சூறாவளியால் அவள் நம்பிக்கை அனைத்தும் சுக்கு நூறாக உடைந்த பின்னர், களையிழந்த முகமும், சிரிப்பிழந்த கண்களுமே அவளது நிரந்தர அடையாளங்களாயின.



Advertisement

தர்ஷாவும் ஆதியும் ஒன்றாகச் சுற்றித் திரிவது இப்போது அவளைப் பெரிதாக பாதிப்பதில்லை, அவள் அதற்குப் பழகிப்போனாள். ஆனாலும், அடிமனதில் ஒரு மெல்லிய வலி அவளை மெல்லக் கொல்லும் விஷமாக அரித்துக்கொண்டே இருந்தது. துக்கத்தை விட, ஆதியின் மேல் அவளுக்கு ஆத்திரம்தான் வந்தது.

“அந்த சூனியக்காரியின் வார்த்தைகளை அவன் எப்படி நம்பலாம்? அவனுக்கு நினைவாற்றல் தான் போனது என்றால், அறிவும் கூடவா போய்விட்டது? அவனுக்காக மட்டுமே துடிக்கும் என் இதயத்தை அவனால் பார்க்க முடியவில்லையா? அந்த ஏமாற்றுகாரியின்  முதலைக்கண்ணீரை நம்பி என்னை எப்படி ஒதுக்கலாம்?”

இதை நினைக்க நினைக்க அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எல்லாவற்றையும் ஆதியிடம் விளக்கிச் சொல்லுமாறு ஶ்ரீநிதி சொன்னது அவளுக்கு இன்னும் எரிச்சலைத் தந்தது.

Advertisement

“நான் ஏன்  விளக்க வேண்டும்? இதெல்லாம் வார்த்தைகளால் விளக்கும் விஷயமா? என் கண்கள் வழியே என் காதலை அவனால் புரிந்து கொள்ள முடியாதா? அவனாக எதையும் உணரவில்லை என்றால் அது எப்படி காதலாகும்? என் மௌனமான வார்த்தைகளை அவனால் படிக்க முடியாவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் மௌனமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.”

Advertisement

மனதின் ஒரு பக்கம் இப்படி வீராப்பாக பேசினாலும், மறுபக்கம் காதலில் விழுந்த அவளது இதயம் அவனது அன்பின் கதகதப்பிற்காக ஏங்கியது.

“பூம்ம்ம்!”

திடீரென்று கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு துள்ளிக் குதித்து நிஜ உலகிற்கு வந்தவள், சிரித்துக் கொண்டே நின்ற விக்கியை வெறித்துப் பார்த்தாள்.

Advertisement

“மதி.. பயந்துட்டியா?”

“ப்ச்.. நான் விளையாடுற மூட்ல இல்ல விக்கி..” என்றாள் அலுப்புடன்,

“மதி.. பட்டப்பகல்ல இந்த இடம் ஏன் இவ்வளவு இருட்டா இருக்குன்னு உனக்குத் தெரியுமா?” என்று சீரியஸாகக் கேட்டான் விக்கி.

மதி அவனை அசுவாரஸ்யமாகப் பார்த்தாள்.

“ஏன்னா மதி முகத்துல இருக்குற அந்த ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஆஃப் ஆகிடுச்சு, அதான்!”  தனது வழக்கமான குறும்புடன் கூற.

அவனை முறைக்க முயன்று தோற்று புன்னகையில் முடித்தாள்..

“இப்போ பரவாயில்ல, முகம் ஒரு 100 வாட்ஸ்க்கு வந்துடுச்சு..”

தன்னைச் சிரிக்கவைக்க அவன் எடுக்கும் முயற்சியைப் பார்த்து மதி மனதாரச் சிரித்தாள்.

“பிங்கோ! பாரு உன் முகம் நிலவு மாதிரி எப்படிப் பிரகாசிக்குதுன்னு? ஒரே நேரத்துல சூரியனையும் நிலவையும் எப்படிப் பார்க்க முடியுதுன்னு ஆச்சரியமா இருக்கு!”

“போதும் விக்கி.. நான் சிரிச்சிட்டேன்ல. உன்னோட இந்த மொக்க ஜோக்ஸ்க்கு இதுக்குமேல கஷ்டப்பட்டு சிரிக்கமுடியாது..” என்றாள் தன் வழக்கமான குறும்புடன்.

“தட்ஸ் மை கேர்ள்.. இப்படிச் சிரிச்சிட்டு ஹாப்பியா இருக்கறதை விட்டுட்டு ஏன் இந்த ‘சோக தேவதை’ வேஷம்?”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. சரி நீ சொல்லு, இப்பல்லாம் உன்னை பார்க்கவே முடியறது இல்ல? ரொம்ப பிஸியா?” என்று பேச்சை மாற்ற முயன்றாள்.

“இதை நான் தான் கேட்கணும்.. உன்னைதான் பிடிக்கவே முடியலை. எப்போ வந்து பார்த்தாலும் நீ உன் சீட்ல இருக்கிறது இல்ல. நான் கூட மிஸ்ஸிங் நோட்டீஸ் போடணுமோன்னு பயந்துட்டேன். ஏன்மா.. ஆபீஸ், வேலைன்னு இருக்கிறது கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா? பாவம் நம்ம ஓனர் நல்ல மனுஷன்  அவன் கொடுக்கற காசுக்கு கொஞ்சமாவது வேலை செய்மா..”

“ஓ.. அப்போ உன் வேலையை விட்டுட்டு என்னை வேவு பார்க்கிறது தான் உன் மெயின் வேலையா? இதுல நீ எனக்கு சின்சியாரிட்டி பத்தி கிளாஸ் எடுக்கிற? காலக் கொடுமைடா..”

“இதுக்குப் பேரு தான் வாண்டடா  வந்து வாங்கிக்கட்டிக்கறதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க..”

அவனது பாவனையில் கலகலவென்று சிரித்தாள் மதி. கடைசியாக எப்போது சிரித்தோம் என்று நினைவில்லை, அதனால் அந்தச் சிரிப்பு அவளுக்கே விசித்திரமாகத் தெரிந்தது.

விக்கி அவளையே சிறிது நேரம் ஆழ்ந்துப்பார்த்து,

“இப்போ சொல்லு, என்ன ஆச்சு?” என்று தீவிரமான குரலில் கேட்டான்.

உள்ளுக்குள் திடுக்கிட்டாலும், அதை மறைக்கச் சிரித்துக் கொண்டே,

“இந்த சீரியஸ் லுக் எல்லாம் உனக்கு செட் ஆகல விக்கி..” என்று மழுப்பினாள்.

ஆனால் விக்கி அசையவில்லை. கைகளைக் கட்டிக் கொண்டு,அவளை ஊடுருவிப் பார்த்தபடி அமைதியாக இருந்தான்..

மதி ஒரு பெருமூச்சுடன்,

“லவ் பண்றது தப்பா விக்கி?ஏன் காதல் சந்தோஷத்தவிட வலியை அதிகமா கொடுக்குது?”

“காதல்னாலே வலிதானே.. பெருசா எதையும் எதிர்பார்க்காம இருந்தா வலியும் கம்மியா இருக்கும்..”

“நம்முடைய முழு இதயத்தையும் ஒருத்தர் காலடியில சமர்ப்பிக்கும் போது, அதை அவங்க கொஞ்சமாவது அங்கீகரிக்கனும்னு நினைக்கறது கூட பேராசையா..?”

“எதிர்பார்ப்பு எவ்வளவு சின்னதா இருந்தாலும், அது காயப்படுத்தும் மதி. அதனால் மகிழ்ச்சியா இருக்கணும்னா எதையும் எதிர்பார்க்காதே.”

“அது எப்படி முடியும்? நானும் ஒரு மனுஷி தானே, ஒரு சின்ன துளி அன்புக்காக ஏங்குற மனுஷி தானே?”

“அப்போ மனுஷியா இருக்கிறதை விட்டுட்டு சன்யாசியா போயிடு..”

“விக்கி ப்ளீஸ்.. என் உணர்வுகளை விளையாட்டா நினைக்காதே..”

“நான் விளையாடல, சீரியஸா தான் சொல்றேன். உன்னோட பக்கத்துல இருந்து மட்டும் யோசிக்காதே, அடுத்தவங்க பக்கமும் யோசி. ஒருத்தர் உன் உணர்வுகளை ஏத்துக்கலன்னா, அவங்களுக்கு அது தெரியலன்னு அர்த்தம் இல்ல. ஒருவேளை அதை ஏத்துக்கிட்டா உனக்கோ இல்ல அவங்களுக்கோ இன்னும் பெரிய பிரச்சனை வரும்னு அவங்க அதைத் தவிர்க்கலாம்.”

“நீ என் ஃப்ரண்டா இல்ல அவருக்கு ஃப்ரண்டா எதுக்கு இப்ப அவர டிஃபெண்ட் பண்ணி பேசுற..?

“நான் யாரையும் டிஃபெண்ட் பண்ணி பேசல. நீ யார மனசுல வச்சி பேசுறன்னு சொல்லு அதுக்கு தகுந்த மாதிரி உனக்கு நான் அட்வைஸ் பண்றேன்..”

மதி பதில் சொல்லத் தடுமாறினாள். “அது.. அது வந்து…”

அவள் தவிப்பதைப் பார்த்த விக்கி அமைதியான குரலில்

“ஆதித்யா தானே? தி மோஸ்ட் ஈகோயிஸ்டிக்,இன்சென்சிடிவ்,கோல்ட் ப்ரின்ஸ் ஆஃப் நெக்சஸ்..”

“உனக்கு எப்படி தெரியும்?”

விக்கி சத்தமாக சிரித்தான்,

“நீ மறுக்கக்கூட இல்லை. அப்போ நான் நினைச்சது சரி தான். அது அவன்தான் இல்லையா?.”

“விக்கி, நான் கேட்டது உனக்கு எப்படித் தெரியும்னு?”

“நாம முதன்முதல்ல பார்த்த  அன்னைக்கே எனக்குத் தெரியும்.”

“ஓ..”

“அவன் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்துறான், இல்லையா?”

அவள் மெல்லத் தலையசைத்தாள். “சில நேரம் அவர் என்னைப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிறார், ஆனா அடுத்த நிமிஷமே ஒரு அந்நியன் மாதிரி மாறிடுறார். அவரோட அந்த இரும்புத் திரை மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல.”

“ஒருவேளை அவருக்கு ஏதாவது பிரச்சனை இருக்கலாம்.”

“அப்படி இருந்தா அதை என்கிட்ட ஓப்பனா பேச வேண்டியது தானே? அதுதான் எனக்கு இன்னும் எரிச்சலா இருக்கு.”

“ஆம்பளைங்க அவ்வளவு சீக்கிரம் தங்களோட பலவீனத்தையோ, காயங்களையோ காட்டிக்கமாட்டாங்க. அவங்களோட கஷ்டத்தை தங்களுக்குள்ளேயே வச்சுக்கத் தான் விரும்புவாங்க. சொல்லப்போனால், உணர்வுகளை வார்த்தைகளால வெளிப்படுத்துறதுல ஆண்கள் ரொம்ப வீக்.”

“அப்போ நீங்க உங்க மனசுக்குள்ளேயே எல்லாத்தையும் வச்சுட்டு எங்களை  சாவடிப்பீங்க அப்படித்தானே.. இதத்தானே காலங்காலமா எல்லா ஆம்பளைங்களும் பெண்களுக்கு செய்றீங்க?” என்று ஆவேசமாகக் கேட்டாள் மதி.

“ஹலோ.. உன் கோபத்தை ஏன்மா என்கிட்ட காட்டுற?”

“ஓ.. ஸாரி விக்கி.. இப்பலாம் நான் நானாவே இல்ல, யாருன்னே தெரியாத ஒருத்தியா மாறிட்டேன்.”

“கவலைப்படாதே, எல்லாம் சீக்கிரம் சரியாகும்.”

“தேங்க்ஸ் விக்கி, உன்கிட்ட பேசினது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு..”

“நமக்குள்ள என்ன தேங்க்ஸ்லாம்.. ஆனா உனக்கு அவ்வளவு நன்றியுணர்ச்சியா இருந்தா, இந்த வீக் எண்ட்குள்ள எனக்கு ஒரு சூப்பர் லஞ்ச் ட்ரீட் கொடு.”

“ஏன் இந்த வீக் எண்ட்குள்ள? அடுத்த வாரம் கொடுத்தா சாப்டமாட்டியா?”

“அடுத்த வாரம் நான் இங்க இருக்க மாட்டேனே .”

“என்ன சொல்ற? ஏதோ ஊரை விட்டே போற மாதிரி பேசுற?”

“ஆமா, ஊரை விட்டுத் தான் போறேன். நான் இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டேன். ஹைதராபாத் போறேன்.”

 “ஏய் விக்கி..என்ன திடீர்னு?”

“திடீர்னு இல்ல, ரொம்ப நாளா ட்ரை பண்ணிட்டு இருந்தேன். இப்போ ஒரு நல்ல ஆஃபர் வந்திருக்கு. அதை மிஸ் பண்ண விரும்பல. எனக்கும் ஒரு சேஞ்ச் வேணும். ஒரே ஆபீஸ், ஒரே முஞ்சிகள பார்த்து போர் அடிச்சுடுச்சு.”

“ஏய், என்னையும் சேர்த்துத் தான் சொல்றியா?”

“நிச்சயமா உன்னையும் சேர்த்துத் தான்.”

“அவ்ளோ ஆயிடுச்சா  உனக்கு?” என்று தனது பேக் கொண்டு அவனை அடித்தாள்.

“ஐயோ வலிக்குது மதி..  லேடி டானா இருப்பபோல.”

“விக்கி.. நீ போறேன்னு சொல்றது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் நீதான்.”

“இந்த ஆறுதலே உனக்கு அவஸ்தையா மாறிடக்கூடாதுன்னு தான் நான் போறேன்.”

“புரியல…”

“இதை உன்கிட்ட கேட்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா நீ சொன்ன மாதிரி நானும் ஒரு மனுஷன்தானே, கேட்காம இருக்க முடியல. ஆதியை நீ பார்க்குறதுக்கு முன்னாடி என்னைப் பார்த்திருந்தா.. அவனுக்குப் பதிலா நான் உன் மனசுல இருந்திருப்பேனா?”

“இப்படி லூசு மாதிரி காமெடி பண்ணாத விக்கி..” என்று அவனது சூசகமான பேச்சைத் தவிர்க்க முயன்றாள் மதி.

“பார்த்தியா.. இப்போ உனக்கு என் மனசு தெரியாத மாதிரி நடிக்கிற. ஆதி உன்கிட்ட எப்படி நடந்துக்கிறானோ அதே மாதிரிதான் நீயும் இப்போ நடந்துக்கிற.”

“விக்கி, உனக்கே தெரியும்.. உன் மேல எனக்கு அந்த மாதிரி எந்த ஃபீலிங்ஸும் இல்லன்னு..”

“அது எனக்கு நல்லாவேத் தெரியும். இதை உன்கிட்ட சொல்லாமலே நான் போயிருக்கலாம், ஆனா எதிர்காலத்துல  சொல்லாம விட்டுட்டோமேன்னு நான் வருத்தப்படக் கூடாது பாரு. அதான் எல்லாத்தையும் சொல்லிடலாம்னு முடிவெடுத்தேன். மதி, நான் பார்த்த பொண்ணுங்கள்லயே என் ஹார்ட் பீட்டை எகிற வச்ச ஒரே பொண்ணு நீதான். இது ஒருதலைக் காதல் தான்னு தெரிஞ்சாலும், இந்த உணர்வு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உன்கிட்ட இருந்து நான் எதையும் எதிர்பார்க்கல. உன் மனசு வேறொருத்தருக்குச் சொந்தமானதுன்னு எனக்குத் தெரியும். ஆனா உன் பக்கத்துல இருக்குறது, உன் சிரிப்பைப் பார்க்குறது, உன்னைச் சிரிக்க வைக்கிறது – இதெல்லாமே எனக்குப் போதுமானதா இருந்தது. இது கேக்குறதுக்கு அபத்தமா இருக்கலாம், ஆனா நிஜமாவே இந்த உணர்வை நான் நேசிக்கிறேன்.நீ நம்புவியான்னு கூட தெரியலை ஆனா சீரியஸா சொல்றேன், நீ தான் என்னோட பர்ஸ்ட் லவ் மதி.”

“விக்கி ப்ளீஸ் நிறுத்து.. என்னால இதைத் தாங்கமுடியல. இதெல்லாம் பொய்ன்னு சொல்லு, சும்மா கிண்டல் பண்றேன்னு சொல்லு. உன்னை மாதிரி ஒரு நல்ல நண்பனை நான் இழக்க விரும்பல”

“சாரி நான் சொன்னதெல்லாம் உண்மைதான். என் மனசுல இருந்ததை உன்கிட்டசொல்லிட்டேன் அவ்ளோதான் இப்ப எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உன் நண்பனை இழக்கப் போறேன்னு யார் சொன்னது? அதை இன்னொரு முறை சொல்லிப்பாரு… நான் எப்பவும் உன்னோட அதே சேட்டபுடிச்ச விக்கியா தான் இருப்பேன்.”

“விக்கி ஐ அம் ஸாரி.. உனக்கு எப்படி என் மேல இப்படி ஒரு ஃபீலிங் வந்ததுன்னு தெரியல. நான் உன்கிட்ட பேசும் போது கூட ரொம்ப ஜாக்கிரதையா தான் பேசுவேன், நீ தப்பா புரிஞ்சுக்கக் கூடாதுன்னு.”

“எனக்குத் தெரியும்.. நீதான் நமக்கு நடுவுல  தெளிவா ஒரு கோடு போட்டிருந்தியே. அத்துமீறினா தண்டனை கிடைக்கும்னு சொல்ற மாதிரி இருக்கும் உன் பேச்சு.”

“அப்புறம் ஏன்?” என்றாள் ஆற்றாமையில்

“எனக்கும் தெரியல.. மே பீ யு ஆர் இம்பாஸிபில் டு ரெஸிஸ்ட்ன்னு நெனைக்கிறேன்.”

“விக்கி ப்ளீஸ்..”

“ஹே கவலைப்படாதே. நான் உன்னை என்னைக்கும் சங்கடப்படுத்த மாட்டேன். உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம். இது உன் தப்பு இல்ல. நான் நிஜமாவே சந்தோஷமாத்தான் இருக்கேன்,  கண்டிப்பா நான் எனக்குப் பிடிச்ச ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி ஹாப்பியா இருப்பேன். என் வெட்டிங் கார்டு அனுப்புறேன், கண்டிப்பா வரணும் ஓகேவா?”

“நீ சீரியஸா தான் சொல்றியா?” என்று இன்னும் முழுமையாக நம்பாமல் கேட்டாள்.

“நிச்சயமா. என்னை பார்த்தா லவ் ஃபெயிலியர் ஆகி தாடி வளர்த்துட்டு தேவதாஸா அலையுறவன் மாதிரியா இருக்கு?”

“கண்டிப்பா இல்ல.. புகாரில ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டுட்டு சத்யம்ல காமெடி மூவி பார்க்கப் போறவன் மாதிரி தான் இருக்க”

“ஏதோ ட்ரை பண்ற.. இருந்தாலும் என் அளவுக்கு ஜோக் அடிக்க வரல. இட்ஸ் ஓகே, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..”

இருவரும் சிரித்த போது அவர்களுக்கு இடையே இருந்த இறுக்கம் சற்று தளர்ந்தது.

“விக்கி, நீ நிஜமாவே போறியா?”

“யெஸ் மை டியர்..”

மதி முறைக்கவும், “சரி உடனே மொறைக்காத, .”

“விக்கி டேக் கேர்.. டச்ல இரு. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.”

“நானும் தான். ஆனா நீ இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே..

ஆதிக்கு முன்னாடி என்னை பார்த்திருந்தா நீ என்னைக் காதலிச்சிருப்பியா?” என்று நேரடியாகக் கேட்டான் விக்கி.

“இதுக்கு நான் கண்டிப்பா பதில் சொல்லணுமா?” என்று தயங்கினாள்.

“சொன்னா நான் எந்த ரெக்ரெட்ஸும்  இல்லாம கிளம்பிடுவேன்.”

ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு

“என் அகராதில காதல்ன்ற வார்த்தைக்கு அர்த்தம் ‘ஆதி’ மட்டும் தான். அங்க வேற பேரோ, வேற அர்த்தமோ என்னைக்குமே இருக்காது.”

உறுதியான குரலில் அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள். அவளது தீர்மானமான பதில் விக்கியை நெகிழச் செய்தது.

“அந்த ஆதி மேல எனக்குப் பொறாமையா இருக்கு..”

“பை மதி. அப்புறம் பார்க்கலாம்.”

விக்கி விடைபெற்றுச் சென்றான்.

“ஏன் விக்கி..? ஏன் என்கிட்ட இதையெல்லாம் சொன்ன? இது எனக்கு எவ்வளவு பாரமா இருக்கு தெரியுமா? ஏற்கனவே நான் படுற கஷ்டம் போதாதா? நீ ஏண்டா இவ்ளோ நல்லவனா இருக்க?என் மேல உனக்கு ஏன் இவ்வளவு பாசம்..?ஐ அம் ரியலி ஸாரி விக்கி.. காதல் நிராகரிக்கப்படும் போது அது எவ்வளவு வலிக்கும்னு எனக்குத் தெரியும். அந்த வலிய உனக்கு கொடுத்ததுக்கு என்ன மன்னிச்சுடு..”

இவ்வளவு வலியை மனசுல வச்சுட்டு உன்னால எப்படி எதுவுமே நடக்காத மாதிரி என் முகத்தைப் பார்த்துச் சிரிக்க முடியுது? அந்தச் கலையை நானும் கத்துக்கணும்னு நெனைக்கறேன். என் உணர்வுகளை மறைக்கத் தெரியாம நான் தவிக்கிறேன்.

அவன் மனசு மாறுற வரைக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பொறுமையா இருக்கச் சொன்னே.. ஆனா அன்புக்காக ஏங்குற என் பேராசை பிடிச்ச மனசால அது முடியலையே..

இனிமேல் நான் அவன்கிட்ட போய் எனக்காக அன்பைப் பிச்சை கேட்க மாட்டேன். எனக்கும் சுயமரியாதைன்னு ஒன்னு இருக்கு.என் வலியையோ, வேதனையையோ அவனிடம் காட்ட மாட்டேன். அவன் பிரச்சனையை எல்லாம் தீர்த்துக்கொண்டு அவனே என்னிடம் வரட்டும். அவனை அடைய தான் இனி எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை என மனதில் உறுதியாக முடிவெடுத்தாள்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!