Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-21

இரண்டு நாட்களுக்கு முன்பு….

     பருவதம்மாவை அழைத்துக்கொண்டு விஜய சிவமாறனும் ஆழினியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். அவரின் உடல் நிலையையும், அறுவை சிகிச்சை செய்த கால்களையும் பரிசோதித்தவர்



Advertisement

     “எதிர்பார்த்ததை விட காயம் நல்லாவே ஆரிடுச்சு அண்ணி, தினமும் பிசியோ கம்பெல்சரி பண்ணனும்…. அடுத்த வாரத்திலிருந்து வாக்கிங் ஸ்டிக் வச்சு கொஞ்சம் கொஞ்சமா நடக்க பழகுங்க, போக போக நல்லாவே நடக்க ஆரம்பிச்சிடுவீங்க….” என்று ராஜவேல் கூறிவிட்டு ஆழினியிடம் மற்ற அறிவுரைகளையும் வழங்க, அவர் கூறியதை கேட்ட ஆழினியும் சரியென்பதை போல் தலையசைத்து வைத்தாள்.

     பருவதம்மாவும் ஆழினியும் மருத்துவரிடமிருந்து விடைப்பெற்று செல்ல, விஜய சிவமாறனை தனியே அழைத்தவர்

Advertisement

Advertisement

     “அண்ணி என் கிட்ட ஃபோன்ல எல்லாத்தையும் சொன்னாங்க சிவா…. மனசுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு, ஆழினி தான் உனக்கு பொருத்தமான பொண்ணு…. அதுசரி, எப்போ கல்யாணம்? தேதி குறிச்சாச்சா?” என்று விஜய ராஜவேல் மகிழ்ச்சியாக வினவ

     “ஐயோ சித்தப்பா, இன்னும் ஆழினியோட சம்மதமே எனக்கு கிடைக்கல…. இதுல எங்கிருந்து கல்யாண தேதியை குறிக்கிறது?”

Advertisement

     “நான் வேணும்னா ஆழினி கிட்ட பேசட்டுமா?”

     “இல்ல வேண்டாம் சித்தப்பா, நானே பார்த்துக்குறேன்….”

     “சிவா, ஆழினி கிட்ட உன் பாஸ்ட் லைஃப் பத்தி சொல்லிட்டியா?” என்று விஜய ராஜவேல் வினவ, அவரிடம் இல்லை என்பதை போல் தலையசைத்தவனிடம்

     “சீக்கிரமே சொல்லிடு சிவா…. அதான் உனக்கும் நல்லது, ஆழினிக்கும் நல்லது….” என்று தீர்க்கமாக கூறிய விஜய ராஜவேலிடம் சரியென்று கூறி தலையசைத்தவன் அவரிடமிருந்து விடைப்பெற்று சென்றிருந்தான்.

     மறுநாள் காலை பொழுதும் அழகாக புலர ஆரம்பிக்க ஆனால் ஆழினிக்கு மட்டும் அது சோதனை நாளாக மட்டுமல்லாது அவளது வாழ்வையே திசைத்திருப்பும் நாளாய் மாறப்போவதை அறியாமல் பருவதம்மாவின் கால்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சைகளை  மேற்கொள்வதற்கு உதவி புரிந்து கொண்டிருந்தாள்.

     காலையிலிருந்து ஆழினியின் மனதில் ஒரேயொரு கேள்வி மட்டும் தான் எழுந்து கொண்டிருந்தது. அது என்னவென்றால், இல்லத்திலிருந்த இன்பன் மட்டுமல்லாது பருவதம்மா மற்றும் செல்வி அக்கா என மூவரும் நேற்று வரை விஜய சிவமாறனை திருமணம் செய்ய கோரி தன்னிடம் வாதிட்டவர்கள் இன்று எதுவும் நடவாதது போல் சாதரணமாக இருப்பது ஆழினியின் மனதிற்கு சற்று யோசனையாகவே இருந்தது. குறிப்பாக ‘இரண்டு நாட்களில் உன்னை திருமணம் செய்து கொள்வேன்’ என்று சபதமெடுத்த விஜய சிவமாறனும் காலையிலிருந்து அவள் கண்களில் தென்படவில்லை.

     தன் மனதை புரிந்துகொண்டுதான் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் போலும் என்று ஆழினி தனக்குத்தானே நினைத்து கொண்டாள். ஆனால், புயலுக்கு பின் மட்டுமல்ல, முன்பும் அமைதி நிலவும் என்பதை பேதை பெண்ணவள் அறியவில்லை.

     தன் சிந்தனையில் சிக்கியிருந்த ஆழினியின் அலைபேசி அழைப்பு வந்துள்ளதாக கூறி அலறி கொண்டிருக்க, அதில் ஆதவ் கிருஷ்ணனின் வகுப்பு ஆசிரியரின் எண்ணானது மின்னி கொண்டிருந்தது. அதை கண்டு சற்று பயந்தவள் தன் மகனுக்கு என்னானதோ என்று எண்ணி அழைப்பை ஏற்றிய நிமிடம்

     “ஹலோ, ஆதவ் கிருஷ்ணன் பேரண்டா? நான் அவனோட கிளாஸ் டீச்சர் பேசுறேன்….”

     “சொல்லுங்க மேடம், என்ன விஷயம்?”

     “ஏன் இன்னிக்கு ஆதவ் கிருஷ்ணன் ஸ்கூலுக்கு வரல மேடம்? இன்ஃபர்மேஷன் கூட கொடுக்கலையே? அவன் லீவ் போட்டா நீங்களோ இல்ல நீலவேணி மேடமோ எனக்கு சொல்லிடுவீங்க ஆனா இன்னிக்கு யாரும் எதுவும் சொல்லல…. நீலவேணி மேடமும் இன்னிக்கு ஸ்கூலுக்கு வரல, அதான் என்னாச்சுன்னு கேட்க ஃபோன் பண்ணேன்….” என்று ஆசிரியர் கூறியதை கேட்ட ஆழினி அதிர்ச்சி அடைந்திருந்தாள்.

     “இன்பாவும் நீலாவும் காலையில ஆதவ் கூட்டிட்டு ஸ்கூலுக்கு போனாங்களே? அதுக்குள்ள என்னாச்சு?” என்று தன் மனதில் நினைத்து பயந்தவள் தன்னை ஒருவாறு மீட்டெடுத்து மறுமுனையிலிருந்தவரிடம் ஏதேதோ காரணங்கள் கூறிவிட்டு இன்பனின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, ஆனால் பதில் எண்ணவோ பூஜ்ஜியம் தான்.

     நீலவேணி மட்டுமல்லாது ஆறுமுகம் மற்றும் ராணியின் அலைபேசிக்கு அழைத்தப்போதும் இதே பதில் தான் ஆழினிக்கு கிடைத்தது. அதில் மேலும் பயந்தவள் பருவதம்மாவிடம் வாய்க்கு வந்த காரணங்களை கூறிவிட்டு‌ தன் இல்லத்தை நோக்கி செல்லும் ஆழினியை கண்ட பருவதம்மாவும் செல்வி அக்காவும் அனைத்தும் சரியாக நடக்கவேண்டுமென்று இறைவனிடம் வேண்டி கொண்டிருந்தனர்.

     மூன்று சக்கர வாகனத்தை பிடித்து தன் இல்லத்திற்குள் நுழைந்த ஆழினியின் வருகைக்காக காத்திருந்தான் விஜய சிவமாறன். இல்லத்தின் கூடத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்தவனை புரியாமல் பார்த்தவள்

     “நீங்க…. இங்க எப்படி?” என்று குழப்பமாக வினவியவளின் செவிகளில் ஆதவ் கிருஷ்ணனின் குரல் அறையிலிருந்து ஒலிக்க, அவளது அறைக்குள் வேகமாக செல்ல எத்தனிக்கும் ஆழினியின் வலது கரத்தினை இறுக்கமாக பிடித்திருந்தான் விஜய சிவமாறன்.

     தன் கரத்தினை விஜய சிவமாறன் இறுக்கமாக பிடித்தவுடன் முதலில் அதிர்ந்தவள் பின் தன்னை சுதாரித்து கொண்டு

     “கையை…. கையை விடுங்க சார்….” என்று ஆழினி கோபமாக கூற, அவளது கரத்தினை விடுவித்தவன் ஆழினி செல்வதற்கு முன்பே அவளது அறைக்குள் சென்று ஆதவ் கிருஷ்ணனுடன் வெளியில் வந்திருந்தான்.

     ஆதவ் கிருஷ்ணனை கைகளில் ஏந்தியவாறு இல்லத்தின் கூடத்திற்கு விஜய சிவமாறன் வரவும் இன்பன இல்லத்திற்குள் வரவும் சரியாக இருந்தது.

     இன்பனின் அருகில் வேகமாக சென்றவள்

      “இன்பா, எங்கடா போன? உனக்கு எத்தனை தடவை ஃபோன் பண்றது? ஏன் எடுக்கல? நீலா, மாமா, அத்தை யாருமே ஃபோன் எடுக்கல? ஆதவும் நீலாவும் எதுக்கு ஸ்கூலுக்கு லீவ் போட்டாங்க? என்னாச்சுடா?” என்று கோபமும் பதட்டமுமாக ஆழினி வினவ, அவளை சிறிதும் கண்டு கொள்ளாதவன் விஜய சிவமாறனின் அருகில் சென்று

     “நீங்க ஆதவ் கூட்டிட்டு கிளம்புங்க சார்….” என்று கூறிய இன்பனின் கூற்றை கேட்டு அதிர்ச்சியில் சிலையென உறைந்திருந்தாள் ஆழினி.

     இன்பனின் கூற்றை கேட்டவள் தான் காண்பது கனவாக இருக்கவேண்டும் என்று நினைத்திருக்க, அதை நிஜமாக்கும் விதமாய் ஆதவ் கிருஷ்ணனுடன் இல்லத்திலிருந்து வெளியில் செல்ல எத்தனித்த விஜய சிவமாறனை கண்டு திடுக்கிட்டவள் அவனது வழியை மறைத்து நின்றிருந்தாள்.

     ஆழினியின் முகத்திலிருந்த கோபத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்தவன் தனது கைகளில் தவழ்ந்திருந்தவனிடம்

     “ஆது கண்ணா, நீலவேணி அத்தை கீழ இருக்காங்க நீங்க அவங்க கூட இருக்கீங்களா? நான் வந்ததும் உங்களை பரு பாட்டி கிட்ட கூட்டிட்டு போறேன் என்ன?” என்று வினவிய விஜய சிவமாறனின் கேள்வியில் குழம்பியவன்

     “அப்போ அம்மா? நீ வரலையாம்மா?” என்று ஆதவ் கிருஷ்ணன் வினவ

     “அம்மா ஹாஸ்பிடல் போயிட்டு நைட் வருவாங்க, நீங்க கீழ போங்க நான் வரேன்….” என்று கூறிய விஜய சிவமாறனிடம் சரியென்று கூறி தலையசைத்த ஆதவ் கிருஷ்ணன் அவ்விடத்திலிருந்து சிட்டாக பறந்துவிட்டான்.

      அவ்விருவர்களின் உரையாடல்களை இத்தனை நேரம் பார்த்திருந்தவளின் மனமானது ஏதோ சரியில்லை என்பதை மட்டும் அவளிடம் உரக்க உரைத்தது. தன்னெதிரில் நின்றிருந்த விஜய சிவமாறனை கோபமாக பார்த்தவள்

     “என் பையன எங்க கூட்டிட்டு போறீங்க? முதல நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? என் பையன….” என்று ஆழினி முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்

     “உன் பையனா? யாரு உன் பையன்? ஆதவ் கிருஷ்ணன் என் பையன்…. அவன் எனக்கு பிறந்தவன்….” என்று தீர்க்கமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் கூறிய விஜய சிவமாறனின் கூற்றை கேட்டு அதிர்ந்தவளின் இதயமோ ஒருநொடி நின்று துடித்தது.

     தன்னை ஒருவாறு மீட்டெடுத்தவள் தன்னெதிரில் நின்றிருந்தவனை தீயாய் முறைத்தவாறு

     “யாரு…. யாரு உன் பையன்? ஆதவ்…. ஆதவ் என் பையன்…. நான்…. நான் தான் அவனை பெத்தெடுத்தேன்…. அவன் அம்மா நான் தான்….” என்று திக்கி திணறி தன் கூற்றை கூறிய ஆழினியை கண்டு ஏளனமாக சிரித்தவன்

     “உண்மை தான், நீ அவனை பெத்திருக்கலாம் ஆனா லீகலா நான் தான் அவன் அப்பா….” என்று கூறிய விஜய சிவமாறன் நேற்று மருத்துவமனையில் நிகழ்ந்ததை கூற தொடங்கியிருந்தான்.

     ஆழினியையும் பருவதம்மாவையும் மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் காத்திருக்க சொல்லிவிட்டு அதன் பக்கத்தில் அமைந்திருந்த மருந்தகம் நோக்கி சென்றிருந்தான் விஜய சிவமாறன். மருந்துகளை பெற்றுக்கொண்டு பணம் செலுத்தியவனின் செவிகளில்

     “சிவா….” என்று ஓர் பெண்ணின் குரல் கேட்டு திரும்பியவன் அங்கு நின்றிருந்தவளை கண்டு சிரித்தவாறு

     “ஹேய், ஆஷிகா…. எப்படி இருக்க? அஞ்சு வருஷமா எங்க போன? ஒரு ஃபோன் இல்ல, மெஸேஜ் இல்ல…. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உன் தம்பியை பார்த்தேன் அவன் தான் நீ கத்தார்லேயே செட்டிலாயிட்டதா சொன்னான்…. அதுசரி, கத்தார்ல இருந்து எப்போ வந்த? வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?” என்று விஜய சிவமாறன் தன் நீண்ட நாள் பள்ளி தோழியான ஆஷிகா பேகத்தை கண்ட மகிழ்ச்சியில் மூச்சுவிடாமல் வினவ, அவனை கண்டு புன்னகைத்தவள்

     “ஃபோன்ல கான்டாக்ட் டீடெயில்ஸ் எல்லாமே டெலிட் ஆகிடுச்சு சிவா, அதான் யார் கிட்டயும் பேச முடியல…. வீட்ல அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க? பார்த்து ரொம்ப நாளாச்சு…. நீ எப்படி இருக்க? நீ…. நீ ஓகே தான?” என்று விஜய சிவமாறின் கடந்த காலத்தில் நடந்தவற்றை மனதில் நினைத்து வினவிய ஆஷிகாவிடம் ஆமென்பதை போல் தலையசைத்து வலிகளுடன் சிரித்து வைத்தான் விஜய சிவமாறன்.

     “இருக்கேன், அப்பா இல்லாம நானும் அம்மாவும் ஏதோ இருக்கோம்….” என்று கூறிய விஜய சிவமாறனை அதிர்ச்சியாக பார்த்தவளிடம்

     “ஒரு வருஷத்துக்கு முன்னாடி அப்பா ஹார்ட் அட்டாக்ல தவறிட்டாரு ஆஷிகா…. சரி என்னை விடு, உன் ஹஸ்பென்ட் எப்படி இருக்காரு? பசங்க வந்துருக்காங்களா?” என்று விஜய சிவமாறன் தன் சோகத்தை மறைத்து புன்னகையுடன் வினவ, அவனது மனநிலையை அறிந்தவளும்

     “ஐயோ, அந்த அருந்த வாலுங்களை கூட்டிட்டு வந்தா என் தலை தான் உருளும்….”

     “அதுசரி, டாக்டர் அம்மாவே இப்படி பயப்படலாமா?”

     “நான் பெத்ததுங்க என்னை பயப்பட வச்சிட்டாங்க சிவா…. ரெண்டும் ரெண்டு தான் தெரியுமா? ஒன்னு ஈஸ்ட் பக்கம் ஓடுனா, இன்னொன்னு வெஸ்ட் பக்கம் ஓடும் நடுவுல நான் தான் மாட்டிக்கிட்டு முழிக்கனும்…. அதான் என் வாப்பா கிட்டயும் உம்மா கிட்டயும் விட்டுட்டு வந்துட்டேன்…. என் ஹஸ்பென்டோட ஃபிரெண்ட்க்கு குழந்தை பிறந்திருக்கு அவங்களை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்…. அவரும் அவரோட ஃபிரண்டும் குழந்தைக்கு சில திங்க்ஸ் வாங்க போயிருக்காங்க அதுவரை நான் இங்க வெயிட் பண்ணலாம்னு பார்த்தா நீ இங்க நின்னுட்டு இருக்க…. ஆமா, நீ இங்க என்ன பண்ற?”

     “அம்மாவுக்கு நீ-ரிப்ளேஸ்மென்ட் சர்ஜரி பண்ணியிருக்கோம் ஆஷிகா, அதான் செக்கப் வந்தோம்…. அதோ அங்கிருக்காங்க பாரு….” என்று விஜய சிவமாறன் கூறியவாறு ஓர் இடத்தை சுட்டிக்காட்ட, அங்கு பருவத்தமாவிடம் பேசிக்கொண்டிருந்த ஆழினியை கண்டு அதிர்ச்சியடைந்திருந்தாள் ஆஷிகா.

      “சிவா, அம்மா பக்கத்துல…. அவங்க ஆழினி தான?” என்று வினவிய ஆஷிகாவை குழப்பமாக பார்த்தவன்

     “ஆமா…. அவங்க தான் அம்மாவோட ஹோம் நர்ஸ்…. உனக்கு ஆழினியை தெரியுமா?”

     “தெரியும்…. அவங்களுக்கு கல்யாணமாகிடுச்சா?”

     “ம்ம், கல்யாணமாகிடுச்சு ஆனா அவங்க ஹஸ்பென்ட் இப்போ இல்ல…. அஞ்சு வயசுல ஒரு பையன் மட்டும் தான் இருக்கான்….”

     “கல்யாணமாகிடுச்சா? யார் சொன்னா? ஆழினி பையன் பெயர் ஆதவ் கிருஷ்ணன் தான?”

     “உனக்கு எப்படி?” என்று விஜய சிவமாறன் குழப்பமாக வினவ

     “ஆழினி பிரெக்னென்ட் ஆனாதிலிருந்து அஞ்சு மாசம் வரைக்கும் நான் தான் அவளோட மெட்டர்னிட்டி டாக்டர், என் ஹஸ்பென்ட் வேலை விஷயமா நான் கத்தார் போயிட்டேன்…. எனக்கு தெரிஞ்ச சிஸ்டர் ஒருத்தவங்க இருக்காங்க அவங்க பெயர் வாணி, நான் கத்தார்ல இருந்தாலும் அவங்க மூலமா அவளோட மெடிக்கல் டிடெயில்ஸ் எல்லாமே தெரிஞ்சிப்பேன்…. ஆழினிக்கு பையன் பிறந்தது, அவனுக்கு ஆதவ் கிருஷ்ணன்னு பெயர் வச்சது முதற்கொண்டு வாணி சிஸ்டர் எனக்கு சொன்னாங்க ஆனா அதுக்கு அப்புறம் ஆழினி பத்தி எனக்கு தெரியல…. இப்போத்தான் அவளை நான் பார்க்குறேன்…. அவளுக்கு கல்யாணமாகிடுச்சான்னு எனக்கு தெரியல முக்கியமா ஆழினியை பார்த்தா கல்யாணமான பொண்ணு மாதிரியும் தெரியல…. அதை விட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லனும் சிவா, அதுவும் உனக்கு சம்பந்தப்பட்டது….” என்று கூறி தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுவித்துவிட்டு

     “எனக்கென்ன சொல்றதுன்னு தெரியல சிவா, ஆனா நான் சொல்றதை உண்மை…. ஆதவ் கிருஷ்ணன் உன் பையன், ஆழினி தான் அவனுக்கு சரோகேட் மதர்…. உனக்கு குழந்தை பெத்து தர நான்‌ ஏற்பாடு பண்ண வாடகை தாய் தான் ஆழினி….” என்று கூறிய ஆஷிகாவை அதிர்ச்சியாக பார்த்தவனிடம் அனைத்தையும் கூறி முடித்தவள்

     “நான் தான் உன் கிட்ட சொன்னேனே? எப்படி டா மறந்த?” என்று ஆஷிகா இயலாமையுடன் வினவ, அவள் கூறியதை கேட்டு சிலை போல் நின்றிருந்தவனின் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுக்க தொடங்கிவிட்டது.

     நீண்ட நேர அமைதிக்கு பிறகு தன்னை ஒருநிலைப்படுத்தியவன் தீர்க்கமான ஓர் முடிவுடன் தன்னெதிரில் நின்றிருந்தவளிடம்

     “ஆஷிகா, எனக்கொரு ஹெல்ப் பண்றியா?” என்று விஜய சிவமாறன் வினவ, அவனை என்ன என்பதை போல் பார்த்து கொண்டிருந்தவளிடம் ஆழினியை சந்தித்தது முதல் அவர்களின் திருமண பேச்சு வரை அனைத்தையும் கூறிவிட்டு

     “சர்ரோகேட் மதர்க்கு நான் சைன் பண்ண அக்ரிமென்ட், ஆழினி சைன் பண்ண அக்ரிமென்ட் எல்லாமே எனக்கு உடனே வேணும்…. குறிப்பா ஆழினியும் என் பையனும் எனக்கு வேணும்…. அதுக்கு நீதான் ஹெல்ப் பண்ணனும் ஆஷிகா….” என்று விஜய சிவமாறன் கூற, அவனிடம் சரியென்று கூறி தலையசைத்தவள் அடுத்த சில மணிநேரத்திலேயே அவன் கேட்ட அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்திருந்தாள்.

     இவை அனைத்தையும் ஆழினியிடம் ஒன்றுவிடாமல் கூறியவன் இத்தனை நேரம் தன்னிடம் வைத்திருந்த காகிதத்தை எடுத்து ஆழினியின் கைகளில் திணித்துவிட்டு

     “இது ஆறு வருஷத்துக்கு முன்னாடி நீ சைன் பண்ண அக்ரிமென்ட் பேப்பர்ஸ்…. ஆதவ் என் பையன், நீ அவனுக்கு வெறும் வாடகை தாய் மட்டும் தான்…. நீ எங்க போனாலும் இது தான் உண்மை, ஏனா உனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லன்னு நீயே கையெழுத்து போட்டிருக்க…. இனிமேல் ஆதவ்…. சாரி, விஜய ஆதவ் கிருஷ்ணன் என் கூட தான் இருப்பான்…. இனிமேல் அவனுக்கு நான் தான், நான் மட்டும் தான் எல்லாம்….” என்று உறுதியுடன் கூறிய விஜய சிவமாறனின் கூற்றை கேட்டு கண்கள் கலங்கியவாறு பேரதிர்ச்சியில் நின்றிருந்தவளின் மனமும் மூளையும் தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டது..

ஒளி வீசும்….

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!