Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 25

அதன் பிறகான நாட்களில் தீப்தியை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்து விளையாட தொடங்கினான் வாத்சல்யன்.

தூரத்தில் அமர்ந்து பார்வையாளராக வேடிக்கை பார்ப்பது மட்டுமே லஷ்மியின் வேலை..

குழந்தைதான் அவள் நிழல் பட்டாலே பேயை கண்டது போல் பயந்து ஒளிந்து கொள்கிறதே..!

“தீபு.. இங்க பாரு.. இங்க பாரு..! உன்னோட பொம்மை இங்கருக்கு.. அங்கிள் மறைச்சு வைச்சுட்டார்..” என வலிய வந்து பேசி விளையாட நினைத்தாலும்.. தீப்தி அவளிடம் முகம் கொடுக்காமல் ஒதுங்குவதில் லஷ்மிக்கு பெருத்த ஏமாற்றமும் வருத்தமும்.



Advertisement

“அவளுக்கு நான் வேண்டாமாம்! என்னை பாத்தாலே வில்லி மாதிரி தெரியுது போல.. பயப்படுது பாப்பா..!” என ஒரு முறை விசும்பலுடன் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியதில்.. லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் வாத்சல்யன்

“டேய்.. கண்ணம்மா..! குழந்தைதானடி.. அவளுக்கு என்ன தெரியும்.. போக போக சரியாகிடுவா..! “என்றபடி அவள் கழுத்தில் ஒரு முத்தத்தை பதித்தான். அப்போதும் லஷ்மி சமாதானமடையவில்லை.

“வர வர யாரு சின்ன குழந்தைன்னு தெரியாம போயிடுது..!”

Advertisement

“ஏன்..?”

Advertisement

“பின்ன..? இதையெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணுவாங்களா..? நீ இப்படி வருத்தப்படுறதா இருந்தா இனி நான் தீப்தியை இங்க கூட்டிட்டு வரல போதுமா..?”

“வேண்டாம்.. எனக்காக உங்க சந்தோஷத்தை தியாகம் பண்ண வேண்டாம்.. நீங்க எப்பவும் போல அவளை கூட்டிட்டு வந்து விளையாடுங்க..!” முகம் கனியாமல் சொன்னாள் லஷ்மி..

“இல்லைனா இப்படி பண்ணலாம்.. ஆன்ட்டியோட பேசினாத்தான் சாக்லேட் வாங்கி தருவேன்னு சொல்லி அவளை உன்கிட்ட பேச வைக்கட்டுமா..?”

Advertisement

“அப்படி நீங்க வற்புறுத்தி ஆசை காட்டி, அவ ஒன்னும் என்கிட்ட வந்து பேச தேவையில்லை..! எல்லாம் நடக்கும் போது நடக்கட்டும்.. ஆனா அவ பேசாம இருக்கறதும் ஒரு நல்லதுக்குதான்னு தோணுது..!” என்றாள் லஷ்மி.

“ஏன் அப்படி சொல்ற..?”

“ஆறு மாசம் கழிச்சு வரப்போற இழப்பு பெருசா என்னை பாதிக்காது இல்லையா..?” சொல்லும்போதே உதடு கடித்து அழும் நிலைக்கு சென்று விட்டாள் லஷ்மி..

இப்படி ஒரு பொய்யைச் சொல்லி லஷ்மி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறாள் என வாத்சல்யனுக்கு புரியாமல் இல்லை..

தன்னோடு ஒட்டுறவு இல்லை என்ற காரணத்திற்காக குழந்தையின் இழப்பை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுமளவிற்கு லஷ்மி ஒன்றும் கல்நெஞ்சம் படைத்தவள் இல்லை.

ஆனால் இதில் ஒரே நிஜம் என்னவென்றால்.. தன்னை விட்டு விலகி.. பயந்து ஒதுங்கும் சிறு பெண்ணவளை.. தன்னோடு சேர்த்துக் கொண்டே ஆக வேண்டும்.. அவளாகவே தன்னை நெருங்க வேண்டும்.. வலிய வந்து கொஞ்ச வேண்டும் விளையாட வேண்டும் அம்மா என அழைக்க வேண்டுமென்ற ஏகப்பட்ட ஆசைகள் ஒன்று சேர்ந்து பேராசையாக உருவெடுத்து ஆழ்கடலுக்குள் மையம் கொண்டிருக்கும் புயலாக நெஞ்சுக்குள் தீவிரமாக உரு கொண்டிருக்கிறது.‌. இதெல்லாம் நடக்க ஒரே வழி தீப்தி மகளாக தன் வயிற்றில் பிறக்க வேண்டும். அது நடக்கும்.. நடக்க வேண்டும்.. எதிர்பார்ப்போடு காத்திருக்கிறாள்.

கையில் காயம் முற்றிலும் குணமாகிவிட்ட நிலையில்.. மீண்டும் அலுவலகத்திற்கு செல்ல தொடங்கியிருந்தாள் லஷ்மி.

தினமும் காரில் ஏறுவதற்கு முன் எதிர் வீட்டுக்கு போய் தீப்தியை பார்த்து அவளை தூக்கி கொஞ்சி முத்தமிட்டு.. டாட்டா பை பை சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்படுவது இருவரது வழக்கமாய் இருந்தது..

பாச நேசமெல்லாம் தீபியோடு மட்டுமே.. மற்ற இரண்டு குழந்தைகளை பெரிதாக கண்டு கொள்வதில்லை அவர்கள். சுயநலம்தான்.. ஆனாலும் இந்த காலை நேரத்து சொற்ப நேரம் தீப்திக்கே போதவில்லையே..!

“என்னவோ எங்களால தீப்தியை பாக்காம இருக்கவே முடியல..!” வாத்சல்யன் தீப்தியை மடியில் அமர்த்தி கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு சொன்னபோது..

“அதென்ன தீப்தி மேல மட்டும் தனி பாசம்..?” விளையாட்டாக கேட்டாள் மீனாட்சி..

இருவரும் ஒருகணம் தடுமாறினாலும்.. “தீப்தி எங்களோட லக்கி சார்ம்..! காலையில வந்து அவளை பாத்துட்டு போனா அன்னிக்கு கண்டிப்பா ஏதாவது நன்மை நடக்கும்.. நாள் முழுக்க நல்லபடியா போகும்..!” தீப்தியின் தலையோடு தலை சாய்த்து அவளை கொஞ்சும் ராகத்தோடு இழுத்துச் சொல்லி ஒரு வழியாக சமாளித்தான் வாத்சல்யன்.

“என்னடா சொல்றாங்க..?” புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்த நந்தினி வினோத்திடம் கேட்க..

“தீப்திதான் அதிர்ஷ்டக்கார குழந்தையாம்..!” என்றான் அவன்.

“அப்ப நாம..?”

“நாம ரெண்டு பேரும் எல்லாருக்குமே வேண்டாதவங்கதா போல..!” விளையாட்டுப் போக்கில் வினோத் சொன்னாலும் அந்த வார்த்தையின் கனத்தை லஷ்மியால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“வாத்சா..! தீப்தி மேல மட்டும் தனியாக கவனம் செலுத்தறது சரின்னு படலை.. மத்த ரெண்டு குழந்தைகளும் நாம சின்னவளை தூக்கி வச்சு கொஞ்சறதை பார்த்து ஏக்க படறாங்கன்னு தோணுது.. என காரில் போகும்போது பேச்சை ஆரம்பித்தாள் லஷ்மி.

“அப்பா அம்மாவை விட்டுட்டு நம்மள பார்த்து ஏன் ஏக்கப்பட போறாங்க..?”

“அப்பா அம்மாவோட அன்பும் அரவணைப்பும் அந்த குழந்தைகளுக்கு சரியா கிடைக்கலையே.. மீனாட்சியும் வேணுவும் குடும்பத்தை காப்பாத்தறதுக்காக இந்த பக்கம் வேலை வேலைன்னு ஓடறாங்க அந்த பக்கம் மூணு பேரும் பெத்தவங்களோட கவனிப்பு இல்லாம கைவிடப்பட்ட நிலையில் வளர்றாங்கன்னு தோணுது.. இதுல நாம தீப்தி மேல மட்டும் கேர் எடுத்துக்கிட்டா மத்த ரெண்டு பேரும் ஏங்கி போக மாட்டாங்களா..?”

“யூ ஹேவ் எ பாயின்ட்..! நாம இதைப் பத்தி யோசிப்போம்..” என்றான் வாத்சல்யன்.

மறுநாள்.. காலையில் அரக்க பறக்க சமைத்து கையோடு கொண்டு வந்திருந்த சீஸ் பாஸ்தா நிரம்பிய கேசிரோலை குழந்தைகளுக்கு கொடுக்கும்படி மீனாட்சியிடம் ஒப்படைத்துவிட்டு தீப்தியோடு சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்தார்கள் வாத்சா லஷ்மி தம்பதி இருவரும்..

குழந்தைகள் உண்டு முடித்து பள்ளிக்கு புறப்படும் போது.. “ஸ்கூல் வேன் வர லேட் ஆகும் போலிருக்கே..! போற வழிதானே.. பேசாம வினோத்தையும் நந்தினியையும் நாங்களே ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு போகட்டுமா..?” என வாத்சல்யன் பெற்றவர்களின் உத்தரவுக்காக காத்திருக்க.. கரும்பு தின்ன கசக்குமா என்ன..!

“உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?” என வாய் வார்த்தைக்கு சொன்னாலும்.. இந்த தகர டப்பா ஸ்கூல் வேனுக்காக காத்திருப்பதற்கு பதில்.. பாதுகாப்பாக இரு பிள்ளைகளும் காரில் போனால் நன்றாகத்தான் இருக்கும் என்ற நப்பாசை அவளுக்கும்.

“இதுல என்ன சிரமம்..! போற வழிதானே..! பிள்ளைகளா.. நீங்க கார்ல ஏறுங்க..!” வாத்சல்யன் சொன்ன அடுத்த கணம் இரண்டு பேரும் உற்சாகத்தோடு வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள்.

சின்ன சின்ன கேள்விகளும் பதில்களுமாய் சிறியவர்களை இயல்பாக்கி.. அவர்களோடு ஒரு ஆரோக்கியமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர் வாத்சா லஷ்மி இருவரும்.

அடிக்கடி வீட்டுக்கு வந்து போகும் இந்த வாத்சல்யன் அங்கிள்.. லஷ்மி ஆன்ட்டி மீது பிள்ளைகள் இருவருக்கும் நல்ல மதிப்பும் உயர்வான எண்ணமும் உண்டு. நல்லா படிக்கிறீங்களா..! ஹோம் ஒர்க் செய்யலையா..! என்ன ஆளையே காணோம்.. என ஒரு சில வார்த்தைகளோடு எப்போதும் உரையாடல் நின்று போகும். தீப்தியோடு கலகலப்பாக உரையாடுவதை போல் தங்களோடும் பேச மாட்டார்களா, பழக மாட்டார்களா? என பிள்ளைகள் எதிர்பார்த்திருந்த நிலையில்.. அவர்களாகவே முன்வந்து இந்த அருமையான ஆரம்பத்தை தொடங்கி வைக்க.. இரண்டு குழந்தைகளும் அல்வா சாப்பிட்டதை போல் சகஜ நிலைக்கு வந்து கலகலப்பாக உரையாடத் தொடங்கியிருந்தனர்.

அன்றிலிருந்து காலையில் வாத்சல்யன் சந்தான லஷ்மியோடு.. வினோத் நந்தினி காரில் செல்வது வழக்கமாகி இருந்தது.. மாலையில் மட்டும் பள்ளி பேருந்தில் வீடு திருப்பிக் கொண்டிருந்தனர்.

இப்போதெல்லாம் எதிர் வீட்டில் எப்போதும் ஆன்ட்டி அங்கிள் புராணம்தான்.

“அக்கா ஒரு நிமிஷம்..!” அன்று தீப்தியோடு நேரம் செலவிட்டு அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும் நேரம் அவசரமாக பின்னால் ஓடி வந்து அழைத்தாள் மீனாட்சி..

“என்ன மீனா..?”

கையை பிசைவதும் தயங்குவதுமாக நின்றவள் பிறகு “ஒன்னுமில்லக்கா..!” என்று சிரித்து மழுப்ப.. அவள் முகத்தை கூர்ந்து பார்த்தாள் லஷ்மி..

“அவசரமா ஆபீஸ் கிளம்பி போறவளை விஷயமில்லாம கூப்பிட்டு நிறுத்தி வைச்சு பேசமாட்ட நீ..! என்கிட்ட என்ன தயக்கம்..? என்ன விஷயம் சொல்லு..!”

“அ.. அது..! ஒரு பத்தாயிரம் கிடைக்குமாக்கா..? வாடகை கொடுக்கணும்..! சம்பளம் எப்போ வருமோ தெரியல..! வர வர இந்த கம்பெனியில ரொம்ப இழுத்தடிக்கிறாங்க.. என்ன பண்றதுன்னே தெரியலக்கா!’ கையை பிசைந்து கொண்டு தர்ம சங்கடத்துடன் நின்றவளை ஆதுரமாக பார்த்தாள் லஷ்மி..

“இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா..! கைல அவ்வளவு கேஷ் இல்ல! ஜிபே பண்றேன்.. உனக்கு ஓகேதானே..?”

“தாங்க்ஸ் அக்கா..!” மீனாட்சி உணர்ச்சிவசப்பட்டாள்‌.

“எதுக்கு தேங்க்ஸ்..! அதையும் சேர்த்து நீயே வச்சுக்கோ..!”

“இல்லக்கா எனக்கே தெரியுது அடிக்கடி கடன் வாங்கறேன்.. எப்ப கேட்டாலும் மறுக்காம கொடுக்கறதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு இந்த பொண்ணு பெரிய தொகையாக கேட்குதேன்னு..” அவள் இழுக்க..

“நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லையே!” என தோள் குலுக்கினாள் இவள்.

“இல்லாத கொடுமைக்கு அப்பப்ப தெய்வம் மாதிரி நீங்கதாக்கா உதவுறீங்க.. சம்பளம் வந்த உடனே திருப்பி கொடுத்துடுவேன்..!”

“ஏன் இவ்வளவு படபடப்பா பேசற..! நீ திருப்பி கொடுப்பேன்னு எனக்கு தெரியும்.. நான் எதுவும் நினைச்சுக்கல.. மனச போட்டு அலட்டிக்காம.. போய் வேலையை பாரு” என.. அவள் முதுகில் தட்டி அனுப்பி வைத்தாள் லஷ்மி.

இப்படி மீனாட்சி அடிக்கடி கடன் கேட்பதும் பணம் வரும்போது போது அதை திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையாகி போனது.

“என்னடா கண்ணம்மா.. ஏன் மறுபடி முகம் சுருங்குது..!” உணவு உண்ணும் நேரத்தில் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தவளை தனது தோளால் இடித்தான் வாத்சல்யன்.

“அவங்க பலவீனத்தை நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கறோமோன்னு தோணுது வாத்சா..!”

“என்னடி சொல்ற..? எனக்கு புரியலையே..?”

“அவங்களுக்கு உதவிகள் செஞ்சு நம்ம கைக்குள்ள வச்சிக்கறோமா வாத்சா..? அதாவது ஒன்னு கொடுத்து இன்னொன்னை எதிர்பார்க்கறது..?”

“என்னடி உளர்ற..? சாதாரணமா செய்யற உதவிக்கெல்லாம் இப்படி ஒரு அர்த்தம் கற்பிக்க நினைச்சா எப்படி..? குழந்தை மேட்டர் நடுவுல வராம போயிருந்தாலும்.. நாம இப்படித்தான் இருந்திருப்போம்.”

“இல்ல வாத்சா..! அந்த குடும்பத்து மேல அதீத உரிமை எடுத்துக்கறோம்னு தோணுது..”

“ரொம்ப யோசிக்கற..! அவங்களும் சந்தோஷமா இருக்காங்க.. நாமளும் நிம்மதியா இருக்கோம்.. வேற எதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காம ஒழுங்கா சாப்பிடு..!” காலியான அவள் தட்டில் அடுத்த இரண்டு இட்லிகளை வைத்தான் வாத்சல்யன்.

பால்கனி பக்கத்தில் மேசை நாற்காலிகளை போட்டு வைத்திருப்பதால் காலையும் இரவும் உணவு சமாச்சாரத்தை இங்கேயே முடித்துக் கொள்கிறார்கள்.

“தனித்தனியா சமைக்க வேண்டாம்.. எல்லாருக்கும் சேர்த்துதான் சமைக்கறோம்.. இருக்கறதை பகிர்ந்து சாப்பிடுவோம்.. இப்படி குடும்பத்தை விட்டு ஒதுங்கி.. எங்க மனசை கஷ்டப்படுத்தாதீங்க..! எங்களோட வந்து உட்காரலைன்னாலும் பரவாயில்லை.. சாப்பாடு கொண்டு போய் மேலே உட்கார்ந்து சாப்பிடுங்க..! தனி சமையல் தனி சாப்பாடுன்னு உங்களை நீங்களே வருத்திகிட்டு எங்களையும் கஷ்டப்படுத்த வேண்டாம்..” என மங்கை கேட்டுக் கொண்டதற்கு இணங்க.. சமையல் மட்டும் அவர்களுடையதாய் இருக்க வேளாவேளைக்கு உணவு மேலே வந்து விடுகிறது.

வீட்டை சுத்தம் செய்வதோ சமையலறையை சுத்தம் செய்வதோ.. அவசியமற்ற சச்சரவை தடுக்க யாருடனும் பேசாமல் தன் வேலையை மட்டும் முடித்துக் கொண்டு மாடிக்கு வந்து விடுகிறாள் லஷ்மி.

புவனா வாய் திறந்து துடுக்குத்தனமாய் பேச மங்கை அனுமதிப்பதில்லை. முன்பாவது முதுகுக்கு பின்னால் புறணி பேசும் சுதந்திரம் இருந்தது.. இப்போது அதுவும் பறிபோனதில் புவனாவுக்கு ஏமாற்றமும் எரிச்சலும்.

எதிர் வீட்டோடு வாத்சல்யன் சந்தான லஷ்மி இணக்கமாக இருப்பதிலும்.. அந்த வீட்டு குட்டி பெண்ணை அடிக்கடி இங்கே அழைத்து வந்து விளையாடுவதிலும் புவனாவிற்கு உள்ளூர புகைச்சல்தான்.

தன் பிள்ளைகளை விட்டு விட்டு எதிர் வீட்டு பிள்ளைகளை எப்படி தூக்கி வைத்து கொண்டாடலாம் என்ற பொறாமை..

ஆனால் அந்த குழந்தைகளின் மீது வாத்சாவும் லஷ்மியும் சர்வ சகஜமாக எடுத்துக் கொள்ளும் உரிமையை இவள் பிள்ளைகளின் மீது காட்ட முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான்.

அப்போதும் கூட அதென்ன எதிர்வீட்டோடு அவ்வளவு நெருக்கம் என்ற கேள்வி அடிக்கடி அவள் மனதுக்குள் முளைத்து எழுகிறது.

உள்ளே வைத்துக் கொள்ள முடியாமல் மாமியாரிடமும் ஒருநாள் இதைப்பற்றி கேட்டு விட்டாள்.

“அதென்ன.. எதிர் வீட்டு குட்டி மேல அவ்வளவு பாசம்..! இங்க ரெண்டு பிள்ளைங்க இருக்காங்கன்னு அவங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..?”

“குழந்தை ஆசைக்கு என்னமோ பண்ணிட்டு போறாங்க..! நம்ம பிள்ளைகளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடத்தான் வீட்ல இத்தனை பேர் இருக்கோமே.. அவங்க விஷயத்துல தலையிட்டு மறுபடி பிரச்சனையை இழுத்து விட்டுடாத.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.!” மங்கையின் ஆங்காரத்தில் வாயை மூடிக் கொண்டாள் புவனா.

தொடரும்.

3 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 25

  • Divyalakshmi Sugumar

    Yenna nadakumo nu bakku bakkunu dhan irukku idhulla indha bhuvana vera vai vechitu 😡😡😡😡😡

    Reply
  • Krishnaveni

    நடுவுல எதுக்கு இந்த புவனா நுழையுறா எதுவும் ஏடாகூடமாக பண்ணாம இருந்தா சரிதான் 🙄🙄🙄
    ஆசை குற்ற உணர்ச்சி என ரெண்டுக்கும் இடையே மாட்டிட்டு பாவம் சாந்தா வாத்சா 😔😔😔

    Reply
  • Super super super super super super super super ❤️

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!