பணிக்குத் திரும்ப எண்ணிய மனையாளின் ஆசையை அன்று மாலையே சாருலதாவிடம் எடுத்துச்சொல்லி அவர் மனத்தையும் வென்றிருந்தான் ஷ்ரவன்.
தன் கெஞ்சல்கள், பிடிவாதங்கள், சண்டைகள் என எதற்கும் மசியாமல், இத்தனை நாளாகப் பிடிவாதமாய் மறுப்புச் சொல்லிக்கொண்டிருந்த அன்னை, ஷ்ரவனுக்கு மட்டும் நொடிகளில் சம்மதித்துவிட்டாரே என யோசித்துக் கொண்டிருந்த ரம்யாவுக்கு, சற்று பொறாமையாகவே இருந்தது.
“அப்படியென்ன சொல்லி அம்மாவைச் சம்மதிக்க வச்சீங்க ஷ்ரவன்,” இரவுநேர காணொளி அழைப்பில் வினவினாள்.
Advertisement
ஆம்! அலைபேசி அழைப்புகள் அன்று காலையிலிருந்துதான் காணொளி அழைப்புகளாகப் பதவி உயர்வு பெற்றிருந்தன.
மனவுளைச்சலில் பரிதவித்துக்கொண்டிருக்கும் மனையாளைத் தனியே விட்டு வந்த கவலையிலிருந்த கணவன் கண்ட வழி அது.
அலுவலகம் வந்தவன், முகத்தைக் காட்டினால்தான் நம்புவேன் என ஸ்கைப் கால் செய்திருந்தான். நாள்முழுவதும் மணிக்கொருமுறை அழைத்து உறுதி செய்துகொண்டவன் இரவும் அப்படியே அழைத்திருக்கிறான்.
Advertisement
“நீங்க சொல்லியும் நான் அவளை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலன்னு ரொம்ப வருத்தமா இருக்குறா சாரும்மா.
Advertisement
மனசுக்குப் பிடிச்ச விஷயங்களில் கவனத்தைத் திருப்பினால் டோபமைன் அளவு சீராகி சந்தோஷமா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு அடுத்ததா அவ நேசிக்குற விஷயம் அவளோட வேலைதான். அதனால அவளை காலேஜ் போயிட்டு வரச்சொல்லலாம்னு இருக்கேன்,” என மாமியாரிடம் பேசியதை காணொளி அழைப்பில் நடித்தே காட்டினான்.
அதைக்கேட்டு வாயைப்பிளந்தவள், “பிஸினஸ்லயும் சரி; வீட்டுலயும் சரி; எதை யார்கிட்ட எப்படி எடுத்துச்சொன்னா அவங்கள வழிக்குக் கொண்டுவரலாம்னு நல்லா தெரிஞ்சுவச்சிருக்கீங்க ஷ்ரவன்,” என மெச்சினாள்.
“எங்கத்த.. மத்தவங்கள ஈசியா வழிக்கு கொண்டுவர முடியுற எனக்கு, கட்டிய மனைவியை எப்படி என்பக்கம் ஈர்க்கணும்னு வழி தெரியலையே,” முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு புலம்பினான்.
Advertisement
“நீங்க ரம்யாதாசனா உங்க மனைவி எதிரில்போய் நின்னா போதும். ஓடிவந்து ஒட்டிப்பா; அப்புறம் நீங்களே நெனச்சாலும் அவளை உங்ககிட்டேந்து பிரிக்கமுடியாது,” ஜாடை பேசினாள்.
மறுகும் பாவையின் ஏக்கம் அவள் முகத்தில் தெறித்தது.
“அந்த நாளுக்காகத்தான் நானும் காத்துட்டு இருக்கேன் ரம்யா. மனசுக்குப் புரியறது ஏன் இந்த மண்டையில் உரைக்கலன்னு தெரியமாட்டேங்குதே,” இயலாமையில் தன் உச்சந்தலையில் அடித்துக்கொண்டான்.
ஓரிரு நிமிடங்களில் நிதானத்திற்கு வந்தவன், மென்னகையுடன் கண்ணைக் கட்டுகிறது என நழுவினான்.
தூக்கம் வருகிறது என்றவனுக்கும் சரி; இரவு வணக்கும் சொன்னவளுக்கும் சரி; விழிகளின் வழியே நீர்த்துளிகளாய் வழிந்தோடிய உள்ளத்தின் ஏக்கங்களில், நித்திராதேவியும் கரைந்தாள்.
கல்லூரியில் செமஸ்டர் விடுமுறை என்பதால், ரம்யா பணியில் சேர இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருந்தது.
“நாளைக்கு எத்தனை மணிக்குக் கிளம்பப்போகுற ரம்யா,” வழக்கமான அவர்கள் இரவுநேர காணொளி அழைப்பில் விசாரித்தான்.
“அதை ஏன் கேக்குறீங்க ஷ்ரவன். காலேஜ்ல எட்டு மணிக்குள்ள இருந்தால் போதும். ஆனால் நாளைக்கு ஆறுலேந்து ஏழரை வரைக்கும் ராகுகாலம்ன்றதுனால அம்மா என்னை அஞ்சே முக்காலுக்கு எல்லாம் கிளம்பச்சொல்றாங்க. அவ்வளவு சீக்கிரம் போய் நான் என்ன முறைவாசல்லா செய்யப்போறேன்,” ஒரு குரல் அழுதாள்.
அவள் முகபாவனைகளை ரசித்துச் சிரித்தவன், “நேர காலேஜுக்கு ஏன் போகுற; நீதான் பக்திப்பழமாச்சே. வழில ஏதாவது கோவிலுக்குப் போ; இல்ல ஒரு நல்ல ஹோட்டல மூக்குப்பிடிக்க சாப்பிட்டு தெம்பா போய் பாடம் எடு,” யோசனைகளை வாரியிரைத்தான்.
“நீங்க நினைக்குற அளவுக்கு அத்தனை ரிலாக்ஸ்டான ஆளில்ல நான். செம்ம டென்ஷன் பார்ட்டி. காலேஜ் கேட்டுல நுழையுற வரைக்கும் வேறெந்த சிந்தனையும் இருக்காது,” தன் சுபாவத்தை எடுத்துரைத்தாள்.
“நாளைக்கு ஒருநாள் நான் உன்னை டிராப் பண்ணட்டுமா,” அவன் தொடங்கியதும்,
“நாளைக்கே ஒரு எமர்ஜென்சின்னு நீ என்னை வந்து அழைச்சிட்டுப் போகச்சொன்னா, உன் காலேஜ் பேரு கூட எனக்குத் தெரியாது ரம்யா,” சொல்லவும், குற்றவுணர்ச்சியில் கரைந்தவள் உடனே சம்மதித்திருந்தாள்.
சாருலதாவின் அன்றைய பொழுது மாப்பிள்ளையின் முகத்தில்தான் விடிந்தது.
ஐந்தரை மணியளவில் வந்தவனுக்கு ஆவி பறக்கும் ஃபில்டர் காபியுடன் அன்புத்தொல்லை தந்த பிறகே ஜோடிப்புறாக்கள் புறப்பட வழிவிட்டார்.
அந்த ஏகாந்த வேளையின் செம்மஞ்சள் நிற வானில் சிறகுகள் விரித்துப் பறக்கும் குருவிகளை அண்ணாந்து பார்த்தபடி, கணவன் கைகோத்து சிவா விஷ்ணு கோவிலின் பிரகாரத்தை வலம்வந்த பெண்ணவள் பரவசத்தில் மிதந்தாள்.
“என்னது! இன்னும் ஏழு ரவுண்டா,” அப்படியே நின்றவன், “காலையிலேந்து பேக் டு பேக் ரெண்டுமுறை காபி குடிச்சதுல வயத்தைப் பிரட்டுறது ரம்யா. போகுற வழில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு உன்னை டிராப் பண்ணலாம்னு நெனச்சா, காலேஜ்ல ஃப்ர்ஸ்ட் பெல் அடிக்குற வரைக்கும் நீ இங்கேயே சுத்திட்டு இருப்பப்போல,” சலித்துக்கொண்டான்.
விழிகளிலும் உள்ளத்திலும் அவன் அசைவுகளை நிரப்பிக்கொண்டவள், “சரி! வாங்க ஹோட்டலுக்குப் போகலாம்,” என்றாள்.
இத்தனை சுலபத்தில் தழைந்துபோவாள் என எதிர்பாராதவன், “உன் வேண்டுதல்,” எனக் கவலைக்கொண்டான்.
“புருஷன் வயத்தைக் காயப்போட்டு செய்யற வேண்டுதல எந்த கடவுளும் ஏத்துக்கமாட்டாங்க,” கண்சிமிட்டியவள், உறைந்து நின்ற தன்னவனின் புஜத்தைப் பிடித்து வாசலுக்கு இழுத்துச்சென்றாள்.
வந்திருப்பது உணவகத்திற்கு என்பதையே மறந்து, பணியாளர் கொண்டுவந்து வைத்த இட்லி, வடை, பொங்கலில் தன்னவனுக்கு இரண்டு இட்லிகளை பரிமாறியவள், அவன் விரும்பிச் சாப்பிடும் விதத்தில் சட்னியை அதன்மேல் படாமல் ஊற்றி,
“சரி! சரி! நீயும் சாப்பிடு,” என்றவனின் உள்ளம் சந்தோஷத்தில் நிறைய, வெகுநாட்களாகத் தன் மனத்தில் ஏங்கிய ஒன்றை கேட்கவேண்டுமென்று தோன்றியது.
“ரம்யா! காலேஜுக்குப் போனதும் நீ ரொம்ப பிஸியாகிடுவல. அதனால சண்டேஸ்ல மட்டும் எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாமா?” அவன் கேட்கவும், பெண்மானின் கருவிழிகள் விரிந்து அவனைச் சுட்டெரித்தது.
“ஊர் சுத்தணும்னு கூட இல்ல ரம்யா. இன்னைக்கு மாறி வாரவாரம் கோவிலை சுத்தி வந்தா கூடப்போதும்,” அவன் பம்ம,
“அதோ அங்க பின்னாடி ஒரு புதர் இருக்குப் பாருங்க,” என வலப்பக்கம் சுட்டிக்காட்டியவள், “கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்டுக்கு அங்க தனியொரு பிள்டிங்க் கட்ட அப்ரூவல் கிடைச்சிருக்காம். அதைப்பற்றி பேசத்தான் உங்கள வரச்சொல்லிருக்காங்க,” என அறிவித்தாள்.
அவன் தகவலை உள்வாங்குவதற்குள், அவர்களைத் தேடி வந்த பியூன், நிர்வாக உறுப்பினர்கள் அவனுக்காகக் காத்திருப்பதாக அறிவிக்க,
“சரி! நான் பாத்துக்குறேன்,” என நகர்ந்தான்.
ஒருமணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தை நீள, கணவன் பணித்திட்டத்திற்குச் சம்மதம் சொல்லியிருப்பான் என்ற பூரிப்பில் அவனருகே ஓடிவந்து விசாரித்தாள் ரம்யா.
“இன்னும் அக்செப்ட் பண்ணல. யோசிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு,” அவன் பதில்கூறவும், பெண்ணின் முகம் சுருங்கியது.
“என்னைச் சந்திக்கணும்னு நீங்க ஒண்ணும் வேணும்னே வரப்போகுறது இல்லையே; அவசியம் இருக்குறதுனால தானே ஷ்ரவன் இங்க வரப்போறீங்க. நான் காலையில் சொன்னதுக்கும் இதுக்கும் முடிச்சுப் போடாதீங்க,” அவள் பேசிக்கொண்டே போக,
மனையாளின் குழப்பத்தை கண்டுகொண்டான் ஷ்ரவன்.
தந்தையுடன் பேசி, தொழில் ரீதியாக சில முடிவுகளை எடுப்பத்தற்கே காலவகாசம் கேட்டிருந்தான் அவன். தொழில்முறை அனுபவம் அத்தனை இருந்தும் வெள்ளந்தியாகப் புலம்பும் அவள் சுபாவத்தில் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“எனக்கு நிஜமாவே சண்டேல எங்கேயும் வெளியப்போகப் பிடிக்காது ஷ்ர்வன். இந்த வேலைக்கு ஓகே சொன்னீங்கனா, சூபர்வைஸ் பண்ண அடிக்கடி வருவீங்க. நீங்க இங்க சைட்டுக்கு வரும் போதெல்லாம் நாம ஒண்ணா லன்ச் சாப்பிடலாமே,” அவள் தழைந்துபோக,
இன்னும் குதூகலமானான் அவன்.
“நான் கேட்கும்போது மாட்டேன்னு சொல்லிட்டு, இப்போ மத்தவங்களுக்காக உன் வீணாப்போன ரூல்ஸ் எல்லாத்தையும் தளர்த்திக்குற. சரியான காரியவாதி ரம்யா நீ,” குற்றம் சாட்டினான்.
பெண்ணவளுக்குக் கண்ணில் நீர் கோத்துக்கொள்ள,
“இதை இத்தோட விட்டுடு ரம்யா. நைட் கால் பண்ணறேன்,” எனக் கூறி புறப்பட்டான்.
தான் அந்தப் பணிதிட்டத்தை எடுத்துக் கொள்வதற்காகவாவது தன் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவிப்பாள் என நப்பாசையில் மிதந்தான். ஆனால் அவளோ, மருந்துக்கும் கட்டிடம் எழுப்பும் பணித் திட்டத்தைப் பற்றியோ, வாரயிறுதிகளில் சந்திப்பதைப் பற்றியோ வாய்திறக்கவில்லை.
இரண்டு வாரங்கள் இப்படியே நகர, ஞாயிற்றுக்கிழமையும் மலர்ந்தது. அதுவும் திலகாவும் தாமோதரனும் மூன்று நாள் தீர்த்த யாத்திரையாக ஸ்ரீரங்கம் சென்றிருக்க, சீக்கிரம் எழுந்துக்கொள்ளச் சொல்லி அதட்டவும் ஆளில்லாமல் எட்டுமணி வரை உறங்கினான்.
அதற்கு பின்னும் அலுவல் வேலைகள், மணிக்கணக்காய் மதியத் தூக்கம் எனப் பொழுதை ஓட்டிவிட்டு மாலை நான்கு மணியளவில் வசிப்பறைக்கு வந்தான்.
அவன் உருவத்தைக் கண்டதும் அவனை நோக்கி தவழ்ந்தாள் விரூபா.
குழந்தை நகர்வது கூடத் தெரியாமல் விளம்பர ஏடு ஒன்றினை அலசிக்கொண்டிருந்தனர் தருணும் உத்ராவும்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அருகில் வந்தமர்ந்தான் ஷ்ரவன்.
“உனக்கு இதுல எந்த வெரைட்டி பிட்சா வேணும்னு சொல்லுடா?”
வகைவகையான ஊத்தப்பங்களை ஏதோ அன்னிய மொழியில் குறிப்பிடுகிறானே என முழித்தவன், தனக்கு வேண்டாமென மறுத்தான்.
“இதுதான் இன்னக்கு நமக்கு டின்னர்,” தருண் திடமாய் உரைக்க,
மேஜையில் வைத்திருந்த இரண்டு தாள்களை அசைத்துக்காட்டிய உத்ரா, “இன்னைக்கு லேடீஸ் நைட் அவுட் அண்ணா. நானும் ரம்யா அக்காவும் ஈவினிங்க் ஷோக்குப் போகப்போறோம்,” என இளித்தாள்.
‘ரம்யாவா? சினிமாவுக்கா? அதுவும் சண்டே ஈவினிங்கா?’ அதிர்ந்தவன், உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளாமல், பெண்மானைக் கையும் களவுமாகப் பிடிக்கும் எண்ணத்தில்,
“அன்னைக்கு மாதிரியே உன் பொண்டாட்டியை சர்ப்ரைஸ் பண்ணிட்டு, அப்படியே அங்க தங்குறதுக்கு வழிப்பண்றன்னு புரியுது பிரதர். ஆனால் இன்னைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு. அதுவும் வின் ஆர் லூஸ் சிட்டுவேஷன். நான் எங்கேயும் வரமாட்டேன்,” தருண் கிண்டல் செய்ய,
ரம்யாவைச் சந்தித்தே தீரவேண்டும் என்பதில் குறியாக இருந்தவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை.
“புருஷனும் பொண்டாட்டியும் வீட்டுல இருந்தபடி மேட்ச் பாருங்க. நான் என் வைஃபுக்கு கம்பனி தந்துக்கறேன்,” என மேஜைமேலிருந்த சினிமா டிக்கெட்டுகளை லாவகமாய் கைப்பற்றினான்.
“வேண்டாம் ‘ண்ணா. அன்னைக்கே கரண்ட் போயிடுச்சுன்னு கப்ஸா விட்டதுக்கு ரம்யா அக்கா என்னை லெஃப்ட் ஆன்ட் ரைட் வாங்கிட்டாங்க,” பின்வாங்கினாள் உத்ரா.
“இன்னைக்கு உங்க அக்காவால என்னை எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது. அவளை இங்க கையோட அழைச்சிட்டு வரேன் பாரு,” சவால் விட்டான்.
“ப்ளீஸ் ‘ண்ணா. நீங்க இப்படி ஏதாவது செய்வீங்கன்னு தெரிஞ்சதுனால தானோ என்னம்மோ, நீ மட்டும்தானே தனியா வரேன்னு அக்கா என்கிட்ட பத்துமுறை கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டாங்க,” நடுங்கும் குரலில் உத்ரா கெஞ்ச,
“ஆல் தி பெஸட் பிரதர்,” எனக் கைகுலுக்கி வாழ்த்தினான் ஷ்ரவன்.
“தாங்க்யூ தம்பி!” என இளித்தவன், “அப்படியே உன் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணி, ஏதாவது சாக்குச்சொல்லி ஆட்டோவில் வரச்சொல்லு, ” என்றான்.
“ஏன்?” தருண் முழிக்க,
“அவ டூவீலர் எடுத்துட்டு வந்தா நான் எப்படி அவளை காருல அழைச்சிட்டு வருது,” ஷ்ரவன் கேட்க, வெடுக்கென்று சிரித்தான் தருண்.
“டபுள் ஓகே!” எனத் தோழியை அழைத்தவனுக்கு, ரகசியத் திட்டத்தில் வேறொரு ஓட்டையும் இருப்பது மூளைக்கு எட்ட,
“ரம்யா! உத்ராவை அழைச்சிட்டு வர எனக்குக் கொஞ்சம் நேரமாகும். உன் டிக்கெட்ட பிரிண்ட் எடுத்துட்டு நீ உள்ளப்போய் உட்காரு. அவள விட்டுட்டு நான் ஃபோன் பண்ணறேன்,” அறிவுறுத்தினான்.
மறுக்கும் உன் முகபாவனையில், மலையளவு காதலைக் காண்கிறேன்; சண்டையிடும் உன் செவ்விதழில், சொல்லில் அடங்கா நேசத்தைக் காண்கிறேன்; கண்டிக்கும் உன் கருவிழிகளில், கண்மூடித்தனமான பாசத்தைக் காண்கிறேன்; இதுதான் நம் அன்பின் பரிபாஷையோ – விடை தேடுகிறேன் இல்லாளே! நிழலாடும் நின் நினைவில்….