காதலும் கடத்தப்படும் – 37

காதலும் கடத்தப்படும் – 37
Advertisement
அஞ்சலிக்கு ஏற்பாடாகியிருக்கும் மாப்பிள்ளை ஒரு மாதத்திற்குள் ஊருக்கு திரும்ப வேண்டிய நிலையில், திருமணம் அதற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் வற்புறுத்தினர். சம்மதம் தெரிவித்த பிறகு எதற்கு அவகாசம் என்று யோசித்தபடியால், வேதநாயகமும் அதற்கு இணங்கினார். உற்சாகமின்றி இருக்கும் மகளை எண்ணி கவலை கொள்வதா, இல்லை கடல் கடந்து வெகு தூரம் அவள் செல்லப்போவதை எண்ணி வருந்துவதா, மேலும் எவ்வித இடையூறுமின்றி திருமணம் முடிய வேண்டுமென்று பதற்றப்படுவதா என்று புரியாமல், பலவித உணர்வுகளின் கலவையில் வேதநாயகம் தவித்துக் கொண்டிருந்தார்.
அர்ஜுன், சிங்கப்பூர் செல்ல தேவையான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினான். மதனுக்கு அவன் மீது மலையளவு கோபம் இருந்தாலும், அண்ணனுக்கு துணை நின்றான். வேதநாயகத்தோடு மருதநாயகமும், அஞ்சலியின் திருமணத்திற்கு சகல ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.
Advertisement
Advertisement
திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன், அர்ஜுனின் இல்லத்திற்கு வருகை தந்திருந்தாள், அஞ்சலி. அவள் முன்கூட்டியே மதனிடம் தெரிவித்திருந்ததனால், அவனும் காத்திருந்தான். அறைக்குள் அர்ஜுன் ரணமாகிய இதயத்தோடு காத்திருந்தான். அன்று ஸ்டூடியோவில் அவளைக் கண்ட பிறகு மறுமுறை அவளைக் காணும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவில்லை. மதன் அடிக்கடி அவளோடு உரையாடிக்கொண்டிருந்தான். அவளைப்பற்றி அவன் ஏதேனும் கூறமாட்டானா என்று அர்ஜுன் ஏங்கியதுண்டு. இருப்பினும் மதன் எதையும் அர்ஜுனோடு பகிர்ந்து கொள்ளவில்லை. இன்று அவளது வருகையின் காரணம் அறியாமல் தவித்திருந்தான்.
அஞ்சலி வந்து சேர, வாயிலில் காத்திருந்த மதன், “வா அஞ்சலி…” என்று அன்போடு அழைத்தான்.
Advertisement
“எப்படி இருக்க மதனா?”
அஞ்சலியின் குரல் கேட்டு, வரவேற்பறைக்கு விரைந்தான், அர்ஜுன்.
அர்ஜுனைக் கண்ட அஞ்சலி, உயிரற்ற புன்னகையை சிந்தினாள். கண்கள் ஈரம் கொள்ள,
“எப்படி இருக்க அஞ்சலி?” என்றான் அர்ஜுன்.
“ம்ம்…” அதற்கு மேல் அவளால் அவனது முகத்தினைக் காண முடியாமல் தலை கவிழ்ந்துகொண்டாள்.
“உட்காரு அஞ்சலி” என்று மதன் கூற,
“இருக்கட்டும் மதனா, கல்யாண…” என்றவள், திக்கித் திணறி, “பத்திரிக்கை கொடுக்க வந்தேன்” என்றாள்.
மதன் அர்ஜுனைக் காண, அர்ஜுன் சற்று நகர்ந்து சென்று சாளரத்தின் அருகே நின்றுகொண்டான்.
பத்திரிக்கையை பெற்றுக்கொண்ட மதன்,
“அஞ்சலி நீ சந்தோஷமா இருக்கல்ல?” என்றான்.
மெலிதாய் சிரித்தவள், “உனக்கு இதுக்கு பதில் தெரியாதா?” என்றுவிட்டு, தான் வாங்கிவந்திருந்த உடைகளையும், இனிப்புகளையும் கொடுத்தாள்.
“மதனா…”
“சொல்லு அஞ்சலி…”
“நான் போன பிறகு சேனல பார்த்துக்கோங்க…”
“அஞ்சலி, ‘கல்யாணமாகி போன பிறகு’னு சொல்லு, இப்படி மொட்டையா சொல்லாத…”
“ரெண்டும் ஒன்னு தான்… நான் கிளம்பறேன்”
“இரு, ஏதாவது சாப்டுட்டு போகலாம்” என்று அவன் கூற,
“எதுவும் வேண்டாம் மதனா…” என்றவள், அர்ஜுனைக் கண்டாள். அவளை பார்த்திருந்த கண்களில், அவனது ஏக்கமும், வருத்தமும் தெரிந்தன.
வெளியே சென்றவள், காரில் ஏறிக்கொள்ள, வண்டி புறப்பட்டது. வாயிலில் வந்து நின்ற அர்ஜுன், அவள் சென்ற திசையை நோக்கி, தனது கைகளை இதய வடிவாக்கி நோக்கினான். பிறகு அறைக்குள் விருட்டென சென்று, அவளது புடவையை நெஞ்சின் மீது போர்த்திக்கொண்டு கலங்கியபடி படுத்துக்கிடந்தான். அவனுக்கு ஆறுதல் சொல்ல, சாளரக் கம்பிகளின் வழியே நிலா எட்டிப்பார்த்தது.
சிங்கப்பூர் செல்வதற்கான விமான சீட்டினை சரி பார்த்தபடி அர்ஜுன் அமர்ந்திருந்தான். நாளை மறுநாள் விடியற்காலையில் பயணிக்க ஏற்பாடாகியிருந்தது. பெட்டிகளில் மதன் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான். சாமிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.
“அர்ஜுன், நாளன்னைக்கு அஞ்சலி கல்யாணம். அன்னைக்குன்னு நாம வேற ஊருக்கு போயிடுவோம். அதனால நாளைக்கு காலைல நீ வந்தா, அஞ்சலி வீட்டுக்கு போய் பார்த்து வாழ்த்து சொல்லிட்டு, பரிசு கொடுத்துட்டு வருவோமா?”
“நாளைக்கா?” – அர்ஜுனின் மனம் படபடத்தது.
“ஆமா அர்ஜுன். நாம ஊருக்கு திரும்ப ரெண்டு வாரம் ஆகிடும். அதுக்குள்ள அஞ்சலி கல்யாணமான பிஸில இருப்பா. பார்க்க முடியுமான்னு தெரியல…”
அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும், அர்ஜுனுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. திருமணம் முடிந்து, வேறொருவரின் மனைவியாக அவளை சந்திப்பதைக் காட்டிலும், நாளை சந்திப்பதே மேல் என்று எண்ணியவனாய், உடன் வர சம்மதித்தான்.
மறுநாள் காலை, அர்ஜுன், மதன் மற்றும் சாம் ஆகிய மூவரும் அஞ்சலியின் இல்லத்திற்கு வருகை தந்தனர். வீடு, கல்யாண கலை கொண்டிருந்தது. தோரணங்களும், அலங்காரங்களும் சிறப்பாக இருந்தது. அர்ஜுனுக்கு அவற்றை கண்கொண்டு காண முடியவில்லை. மனிதர்களிடமிருந்து ஓடி ஒளிய முடியும். மனதிடமிருந்து ஒளிய முடியுமா?!! அவனது ஈரம் கொண்ட விழிகளை பெருமூச்செடுத்து அடக்கினான்.
“வாங்க பா, எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று வரவேற்றார், வேதநாயகம்.
“நல்லா இருக்கோம் சார்” என்றான் அர்ஜுன், விட்டேத்தியாக.
“உட்காருங்க” என்றார். அர்ஜுனும் மதனும் தயங்கியபடி நிற்க,
“அட உட்காருங்க பா” என்றவர், மூவரும் அமர்ந்தபின் அர்ஜுன் அருகே சென்று அமர்ந்தார். அர்ஜுன் தயங்கியபடி இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்க,
“என்னப்பா இது நல்லா உட்காரு” என்று கூற, அவன் புன்னகைத்தபடியே அவரைக் கண்டான்.
“நீ என்கிட்ட வேலை செஞ்சிருக்கலாம், ஆனா இப்போ நீ என்னோட விருந்தாளி. நல்லா உட்காரு” என்று அவர் வலியுறுத்த, சற்றே வசதியாக அமர்ந்தான்.
மருதநாயகமும் அவர்களை வரவேற்றபடி அண்ணனின் அருகே வந்து அமர்ந்தார். ஒரு தட்டில் இனிப்பு வைகைகள் வைக்கப்பட்டு மேசையின் மீது பணிப்பெண் வைத்துச்செல்ல,
“அஞ்சலியை வரச்சொல்லு” என்றார், வேதநாயகம்.
கருநீல பட்டுப்புடவையில், பூச்சூடி, எளிய நகைகள் பூட்டி அவர்களின் முன்னே வந்து நின்றாள். அவளை கண்டதும், அர்ஜுனின் மனம் எம்பிக்குதித்து, ஓடிச்சென்று, அவளது கால்களைக் கட்டிக்கொண்டது.
“ஹாய் சாம்! வா மதனா! வா அஜூ…” என்றவள் அர்ஜுனை ஒரு வினாடியே பார்த்துவிட்டு, தலை கவிழ்ந்துகொண்டாள்.
“உட்காரு அஞ்சலி” என்று மருதநாயகம் கூற,
“பரவால்ல சித்தப்பா” என்றவள், அவரது இருக்கையின் அருகே நின்று கொண்டாள்.
“அஞ்சலி நாளைக்கு உனக்கு கல்யாணம்ல. எங்களால வரமுடியாதுன்னு உன்னை பார்த்து வாழ்த்து சொல்லிட்டு போக வந்தோம்” என்றான், சாம்.
குரலை செருமிக்கொண்டவள்,
“பரவால்ல சாம், இதுல என்ன இருக்கு? நீங்க ஊருக்கு போக தயாராகணும்ல?!” என்றாள்.
“ஏறக்குறைய தயார் தான்…” என்றவன், “ இது எங்களோட கல்யாண கிஃப்ட்” என்று ஒரு பையை நீட்ட, அர்ஜுனும், மதனும் எழ,
“தேங்க்ஸ்” என்றபடி பெற்றுக்கொண்டவள், மெல்லிய புன்னகையோடு நின்றுகொண்டாள்.
மறுநாள் பயண விவரங்களைப் பற்றி மருதநாயகம் வினவ, அர்ஜுனும், சாமும் பதில் கூறிக்கொண்டிருக்க, பொறுமையை இழந்தவளாய்,
“சித்தப்பா நான் ரூம்ல இருக்கேன்” என்றவள், அம்மூவரையும் கண்டு,
“ஆல் தி பெஸ்ட்” என்று பொதுவாக கூறிவிட்டு, உள்ளே சென்றாள். அவள் சென்றதைக் கண்டு அனைவருமே அமைதியாகிப் போயினர்.
தன்னைக் காண வந்திருப்போரை, உபசரித்து உரையாடாமல் அவள் சென்றது மருதநாயகத்திற்கு வருத்தம் கொடுக்க, வேதநாயகமும் கவலை கொண்டார்.
“ஏன் அண்ணே, அஞ்சலி டென்ஷனா இருக்கா?” என்று மருதநாயகம் வினவ,
“தெரியல பா. கேட்டா ஒண்ணுமில்லன்னு சொல்றா. கல்யாண கலையே முகத்துல இல்லை. சந்தோஷமா இருக்காளா இல்லையான்னு தெரியல மருது. கவலையா இருக்கு…”
“எல்லா ஏற்பாடும் அவளை கேட்டுட்டு தான செஞ்சீங்க? நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு, இன்னைக்கு இப்படி சொன்னா?”
“கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலிருந்து இப்படித்தான் இருக்கா. எல்லா விவரமும் தெரிஞ்சு தான் சம்மதம் சொன்னா. புத்தி தெளிஞ்சு இனி அவளோட சந்தோஷம் தான் முக்கியம்னு வாழ்ந்துகிட்டு இருக்கேன். அவ இந்த உலகத்துல எதை ஆசைப்பட்டாலும் அதை நிறைவேத்திக் கொடுக்கறேன்னு சொன்னேன். மனசுல உள்ளதை சொன்னாத்தானே எனக்கும் தெரியும்?” என்று கலக்கியவர்,
“ஏன்பா, நீங்க தான அவளோட ஃப்ரெண்ட்ஸ், உங்களுக்கு எதுவும் தெரியுமா?” என்றார் மூவரையம் நோக்கி. மதன் கவலையாக அர்ஜுனைக் காண, அவனோ படபடப்போடு அமர்ந்திருந்தான்.
“அஞ்சலி எதுவும் சொல்லல…” என்றான் சாம், தயங்கியபடி.
“உன் அண்ணி இருந்திருந்தா இந்த கவலையெல்லாம் நமக்கு வந்திருக்காது மருது” என்றார், தம்பியை நோக்கி.
“இத்தனை நாள் வெளியுலகத்தை சமாளிச்சு வாழ்ந்துட்டேன்… ஆனா வீட்டுக்குள்ள என் பொண்ணு என்ன நினைக்கறான்னு யூகிக்க முடியல”
“அண்ணே, ஏன் ஏதேதோ யோசிச்சு கவலைப்படறீங்க. எல்லாரையும் விட்டுட்டு கல்யாணமாகி இன்னொரு வீட்டுக்கு போகப்போறோம்னு புள்ளைக்கு வருத்தம் இருக்காதா? அதுவும் கடல்கடந்து போகப்போகுது. பயம் இருக்கும்ல…?”
“என்னமோ எந்த சமாதானமும் மனசு கேட்க மாட்டேங்குது… அவ சந்தோஷமா இல்லைங்கறது தான் வேதனையா இருக்கு” என்றவர், அர்ஜுனை நோக்கி, “அவ என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் நான் முடியாதுன்னா சொல்லப்போறேன்? இல்லையே… அப்புறம் ஏன்…” என்றார். அவன் என்ன கூறுவது என்று புரியாமல் உறைந்து போக, அவரோ எங்கோ பார்த்தபடி யோசனையாகிப்போனார்.
“அண்ணே…” என்று அவரது கையை மருதநாயகம் பற்றிக்கொள்ள,
“அவ நல்லா இருந்தா அதுவே போதும் மருது…” என்றார்.
“நம்ம புள்ளைக்கு எந்த குறையும் வராது. ஜாம்ஜாமுன்னு கல்யாணம் செஞ்சு, தடபுடலா சீர் செய்யப்போறோம். எதுக்கு கவலைப்படறீங்க?”
“என்ன செஞ்சு என்ன மருது, அவ முகத்துல ஒரு சிரிப்பு இல்லை… காசு பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை மருது. வாழறதுக்கு காசு தேவை, ஆனா அதுவே வாழ்க்கை இல்லை. இதோ இந்த மதன் பயலோடு அவ கிண்டல் பண்ணி பேசி சிரிக்கும்போதெல்லாம் பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதெல்லாம் காசு கொடுத்தா கிடைக்குமா? ‘அப்பா’னு கூப்பிடறதை கேட்கும்போது இப்பல்லாம் கண்ணு கலக்குது. அது காசு கொடுத்தா கிடைக்குமா? இதோ இந்த அர்ஜுன் பாடின பாட்டைக் கேட்டு விட்டுப்போன உன் உறவு திரும்பி கிடைச்சுது. அது வெறும் காசால சாதிச்சுட முடியுமா என்ன? இவ்வளவு காசு இருந்தும் அன்னைக்கு உன் அண்ணிய காப்பாத்த முடிஞ்சுதா? இல்லை இன்னைக்கு தான் அவளை உயிரோட திருப்பி கொண்டுவர முடியுமா? வாழ்க்கையே காசை மீறின ஒரு விஷயம் தான். நாம தான் எல்லாத்தையும் அதோட முடிச்சு போட்டுக்கிட்டு அவஸ்தை படறோம்” – பெருமூச்செடுத்தவர் கண்களை துடைத்துக்கொள்ள, வேதநாயகத்தின் செயலாளர் சில ஏற்பாடுகளை குறித்து அவரிடம் வினவ, பதில் கூறியவர்,
“மூணு பேரும் சாப்பிட்டுட்டு போகணும், நான் ஒரு வேலையா போயிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு கிளம்பினார்.
அவர் சென்றதும், “நாங்களும் கிளம்பறோம் சார்” என்றபடி மருதநாயகத்திடம் கூறிக்கொண்டு அவர்கள் கிளம்ப,
“நானும் இப்ப மண்டபத்துக்கு தான் போறேன், உங்களை எங்கயாவது இறக்கி விடணுமா?” என்றார்.
“இல்லை சார், என் கார்ல தான் வந்தோம், நாங்களே போயிடுவோம்” என்று சாம் கூற, மூவரும் வெளியே வந்தனர்.
