பெண்கள் இருவரும் மட்டும் தனியாகச் செல்லவிருந்ததால், இருவர் மட்டும் அமரக்கூடிய இருக்கைகளை முன்பதிவு செய்திருந்தான் தருண். அதனால் ரம்யாவைக் கண்டுகொள்ளும் சிரமம் அவனுக்கு இருக்கவில்லை.
திரையிலிருந்து வீசிய ஒளிவெளிச்சத்தில் அவளை நோக்கி நடந்தான். விடிய விடிய பேசிக்கொண்டிருந்த போதும் எதையுமே கூறவில்லையே என்ற மலையளவு கோபத்துடன் வந்தவன், மங்கை அவளின் பளிங்கு முகத்தைப் பார்த்ததும்,
“ஹாய் ரம்யா,” எனக் காதல் வழிய அந்தர்பல்டி அடித்தான்.
Advertisement
மூவருமாகச் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டார்களே எனக் கோபம் தலைக்கேறிய பாவை, வெட்டும் பார்வையுடன் வெடுக்கென்று எழுந்துகொள்ள,
“உட்காரு!” என அதட்டினான்.
கணவனின் கைச்சிறையிலிருந்து விடுபட அக்கப்போர் செய்துகொண்டிருந்த பெண் திரையை மறைக்கவும், பின்னாலிருந்த பார்வையாளர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
“நீ மட்டும் அன்னைக்குக் கல்யாணத்துக்குச் சொல்லிட்டா வந்த. மூணு பேரும் சேர்ந்துதானே பிளான் பண்ணீங்க. அப்படியிருந்தும் நான் கோபப்பட்டேனா என்ன? சந்தோஷமா தானே ஏத்துக்கிட்டேன்,” அவன் குத்திக்காட்ட, சுருக்கென்று குத்தியது அவளுக்கு.
மௌனம் சாதித்த பெண்னை மேலும் உசுப்பேற்றாமல் திரைப்படத்தில் கவனம் செலுத்தினான்.
அவர்களின் போதாத நேரம், திரைப்படத்திலும் சோகம் அடைமழையாய் பொழிந்தது. சுனாமி அலையில் அடித்துச் செல்லப்படும் கணவன். அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா எனத் தெரியாமல் ஊர் ஊராய் தேடி அலையும் மனைவி.
கணவனை உயிருடன் மீட்டெடுத்தால் போதுமென்ற நாயகியின் குமுறல்களில் தன்னையே பார்ப்பதுபோல இருந்தது ரம்யாவிற்கு. சில மாதங்களுக்கு முன் உணர்வற்று கிடந்த கணவன் முன் தானும் அப்படித்தானே அழுது தீர்த்தாள் என ஒப்பிட்டவளுக்கு, திடகாத்திரமாய் பக்கதில் அமர்ந்திருக்கும் கணவனின் தோள் சாய வேண்டும்போல இருந்தது.
கைக்கெட்டும் தூரத்தில் கணவன் இருந்தும் அவனைக் கவனிக்காமல், நாயகி மறுதிசையில் நகர, ‘தேடல்கள் தொடரும்’ என இடைவேளை அறிவிப்புடன் மின்விளக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டன.
கற்பனை கதை என்றாலும் நாயகி முயற்சிகளைத் தொடர்வாளா; சலித்துப்போய் கைவிட்டுவிடுவாளா; என்ற தவிப்புடன் தன் வாழ்க்கை எந்த திசையில் போகிறது என ஏக்கமாய் தன்னவளைப் பார்த்தான் ஷ்ரவன்.
கணவனின் வாடிய முகத்தைக் கண்டவளுக்கு, உயிர் பிழைத்து வந்த அவன் போராட்டம் நினைவில் வர, “திரும்பி வந்துடுவேன் ஷ்ரவன்,” எனத் தோள்பையை அவனிடம் தந்துவிட்டு நகர்ந்தாள்.
தன் மனத்தில் ஊசலாடிக்கொண்டிருந்த கேள்விக்குப் பதில் கிட்டியதுபோல பனித்த இமைகளைச் சிமிட்டிக்கொண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
அரங்கத்திலிருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக தருணை அழைத்தாள்.
“கூல் கூல் ரம்யா! நீ கொடுத்த சாபம் ஏற்கனவே எங்கமேல சூப்பரா வர்கவுட் ஆயிடுத்து,” என்றான் அலட்டலே இல்லாமல்.
“என்னடா உளறுர,” அதட்டியவளுக்கு உள்ளுக்குள் பதறவே செய்தது.
“நீ எங்களை இத்தனை நேரம் திட்டித்தீர்த்திருப்பன்னு தெரியும் ரம்யா. உன் சாபம் பலிச்சதுல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி, கரென்ட் போய், இப்போ மேட்சும் பார்க்க முடியாம ரெண்டுபேரும் இத்துப்போன ப்ரெட் பட்டர் ஜாம்மோட கேண்டல் லைட் டின்னர் சாப்டுட்டு இருக்கோம்,” அவன் உச்சுக்கொட்ட, பக்கென்று சிரித்துவிட்டாள்.
எந்தச் சூழ்நிலையிலும் அவளைச் சிரிக்கவைக்கும் சக்தி, தருணுக்கு மட்டும்தான் இருக்கிறது எனப் பெருமிதம் பொங்க தன்னவன் கன்னத்தில் முத்தமிட்ட உத்ரா,
“வீட்டுக்கு வரும்போது அப்படியே விரூகுட்டிக்கு டயாப்பர் வாங்கிட்டு வாங்களேன் ப்ளீஸ். சைஸ்ஸும் பிராண்டும் மெசேஜ் பண்ணறேன்,” எனச் சந்தடிசாக்கில் வேலை வாங்கினாள்.
“நான் எதுக்கு அங்க வரப்போகுறேன்,” ரம்யா கேள்வி எழுப்ப,
ஊடல் கொண்ட ஜோடிகள் அதைப்பற்றி இன்னும் பேசிக்கொள்ளவில்லை என உணர்ந்த உத்ரா, சமாளிக்க முடியாமல் திணறினாள்.
மின்வெட்டு என்றதும், உத்ரா அன்று அரங்கேற்றிய நாடகம் கண்முன் வர,
“ஏய் உத்ரா! அவர் முன்னாடி கால் பண்ணி ஏதாவது கதை சுத்தி என்னை காரனர் பண்ணீன்னா, அவ்வளவுதான் சொல்லிட்டேன்,” எச்சரித்தாள் ரம்யா.
மறுபடியும் உத்ரா நடுக்கத்துடன் கணவனை ஏறிட்டாள்.
“வீட்டுல ஜெனரேட்டர் இருக்குன்னு தெரிஞ்சும் உன் புருஷனை உன்கூடவே தங்க வச்சுகிட்டது நீ; எங்கள ஏன் கத்திட்டு இருக்குற,” மடக்கினான் தருண்.
இதற்கிடையில், விலகவும் முடியாமல் ஒன்றிப் பழகவும் முடியாமல் குழப்பத்தில் தத்தளித்தபடி இருக்கைக்குத் திரும்பிய ரம்யா, கணவனின் காதல் பார்வையில் கலவரமாகி, வெடுக்கென்று தன் தோள்பையை வாங்கியபடி பொத்தென்று அமர்ந்துகொண்டாள்.
‘மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டாளா!’ சலிப்புடன் படம் பார்ப்பதில் கவனம் செலுத்தினான் ஷ்ரவன்.
இடைவேளைக்கு முன் மிகைப்படுத்திய அளவிற்கு சோக கீதம் வாசிக்காமல் மிருதுவாக நகர்ந்த கதை சுபத்தில் முடியவும் இருவரின் மனமும் லேசானது.
திரைப்படங்கள் போல, வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் மூன்று மணி நேரத்தில் தீர்வு கிடைத்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்குமென விரக்தியில் சிரித்துக்கொண்டான் ஷ்ரவன்.
கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
“மணி எட்டாகப் போகுது. இன்னைக்கு ஒருநாள் என்னோட வீட்டுக்கு வா ரம்யா,” ஷ்ரவனே முன்வந்து அழைத்தான்.
உத்ராவும் தருணும் சற்றுமுன் பேசியதை நினைவுகூர்ந்தவளோ, ‘கேஸுலா கேக்குறா மாதிரி நடிக்கிறத பாரு,’ என உதட்டுக்குள் திட்டியபடி,
“எட்டுத்தானே ஆகுது. நான் பாத்துக்கிறேன்,” வார்த்தைகளால் துளைத்தாள்.
மூன்று மணி நேரமாக அவளுடைய வெறுப்புகளை மட்டுமே அனுபவித்திருந்தவனுக்கும் உண்மை காரணத்தை சொல்ல மனமில்லை. அமைதியாகத் தலையசைத்து நகர்ந்தான்.
நண்பன் பேச்சை நம்பி இரு சக்கர வாகனத்தை எடுத்து வராததற்குத் தன்னைத்தானே கடிந்துகொண்டபடி பேருந்திற்காகக் காத்திருந்தவள், அலைபேசியின் திரையை முன்னும் பின்னுமாக நகர்த்த, உத்ராவின் குறுஞ்செய்தி தென்பட்டது.
‘இதுவும் தனக்கு விரிக்கும் வலையா,’ சந்தேகம் கொண்டவளுக்கு, குழந்தையின் விஷயத்தில் விளையாடவும் மனமில்லை.
மனையாளிடமிருந்து பத்தே நிமிடங்களில் அழைப்பு வந்ததும் சந்தோஷத்தில் மிதந்தான் ஷ்ரவன்.
“பசிக்குதுன்னு தியேட்டர் பக்கத்துல இருக்குற சரவணா பவன் வந்திருக்கேன்,” அவன் சொல்லவும், பேதையின் மனம் துடிக்க மறந்தது.
“எனக்கும் ஆர்டர் பண்ணுங்க. பத்து நிமிஷத்துல வரேன்,” என்றாள்.
பெண்ணவளின் உள்நோக்கம் புரியவில்லை என்றபோதும், சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறிதியாக இருந்தவன்,
“சரி வா! ஆனால் சாப்பிட்டு என்னோட வீட்டுக்கு வரணும்,” என்றான்.
“அதெல்லாம் முடியாது,” அவள் தீர்மானமாகக் கூற,
“அப்போ நீ வீட்டுக்குப்போய் சாப்பிட்டுக்கோ ரம்யா,” அவனும் முறுக்கிக்கொண்டான்.
கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள், அவன் சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் கடையை மூடிவிடுவார்கள் எனக் கணக்கிட்டு,
“சரி ஷ்ரவன். விரூகுட்டிக்கு டயாப்பர் வாங்கச்சொல்லி உத்ரா கேட்டுக்கிட்டா. பத்து நிமிஷத்துல அங்க வந்து டயாப்பர் மட்டும் தந்துட்டுக் கிளம்புறேன்,” என்றாள்.
‘பெண்மான் அழைத்ததற்கு இதுதான் காரணமா!’ என யோசித்தவன், சரியென்று மட்டும் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
வீட்டிற்குப் போனால் அவளும் தனியாகத்தானே உண்ண வேண்டுமெனச் சிந்தித்தவனுக்கு, சமைத்திருப்பாளா அல்லது உத்ராவுடன் வெளியில் சாப்பிடும் எண்ணத்தில் வந்தாளா எனச் சந்தேகங்கள் கிளம்ப, தன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்.
இதற்கிடையில், பேருந்து நிலையத்திற்கு எதிரிலிருந்த மருந்தகம் ஒன்றில் டயாப்பரை வாங்கிக்கொண்டவள், பணம் செலுத்தும் கவுன்டருக்கு வர, 5ஸ்டார் சாக்லேட்டைக் கண்டதும், பசுமையான காதல் பரிபாஷைகள் கண்முன் விரிந்து இதழோர புன்னகையாக உருமாறியது.
“ரெண்டு 5ஸ்டாருக்கும் சேர்த்து பில் போடுங்க,” என்றாள்.
மூன்று சாக்லேட் பார்களைத் தந்த கடைக்காரர், “ரெண்டு வாங்கினால் ஒன்று இலவசம் மேம்,” என்றார்.
ஜேஜேவென நிரம்பி வழிந்தபோதும், சரவணா பவன் உள்ளே நுழைந்தவளுக்கு அவனைக் கண்டுபிடிக்க அவ்வளவு நேரம் எடுக்கவில்லை. உணவருந்த வந்தவன் வெறும் சாத்துக்குடி பழச்சாறு பருகிக்கொண்டிருக்கிறானே என வருந்தியவள்,
அவள் பிறந்த வீட்டின் தெருக்குள் நுழையவும் பெரும் கர்ஜனையுடன் கனமழை பெய்யவும் சரியாக இருந்தது. வண்டி, வீட்டு வாசலை வந்தடைய, மின்வெட்டில் தெருவிளக்குகளும் அணைந்து கும்மிருட்டானது.