Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்Uncategorized

நிழலாடும் நின் நினைவில் – 20

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஷ்ரவன் தனியாக வந்திருப்பதைக் கண்டதுமே இருவருக்கு இடையிலும் பெரும் மனத்தாங்கல் ஏற்பட்டிருக்கிறது எனப் புரிந்துகொண்டனர் தருணும் உத்ராவும்.

முகத்தில் சுரத்தே இல்லாமல் டயாப்பர் பேகை நீட்டினான். இந்த லட்சணத்தில் எங்கே சாப்பிட்டிருக்கப் போகிறார் என யோசித்த உத்ரா,

“சூடா தோசை செய்யறேன் ‘ண்ணா. ட்ரெஸ் மாத்திட்டு வாங்க,” என்றாள்.



Advertisement

“சாப்பிட்டுத்தான் வந்திருக்கேன்மா,” என்றவன், “ரொம்ப டைர்டா இருக்கு. குட் நைட்,” எனக் குனிந்த தலை நிமிராமல் மாடியேறினான்.

விசாரிப்பதற்கு இது நேரமில்லை என உணர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதிகாத்தனர்.

தோழியின் பிடிவாதத்தில் அதிருப்தி கொண்ட தருண், ரம்யாவின் எண்ணுக்கு அழைக்கப் போக,

Advertisement

“அக்காவையும் எதுவும் கேட்காதடா. எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்,” எனத் தடுத்தாள்.

Advertisement

மனையாள் சொல்வதும் சரிதான் எனத் தலையசைத்தவன், அரை நொடியில், “தனியா உட்கார்ந்து கண்டதையும் யோசிச்சுக் குழம்பிட்டிருப்பாடி,” என்றான் கவலையுடன்.

அழைக்காமலே ரம்யாவின் மனநிலையைத் தெரிந்துகொள்ள தன்னிடம் வழி உள்ளது எனக் கண்சிமிட்டியவள், ‘டயாப்பர் வாங்கி அனுப்பினதுக்கு தாங்க்ஸ் ‘க்கா,’ எனக் குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்.

மறுமுனையில் அதைப் படித்தவளோ, தன்னவன் பத்திரமாக வீட்டிற்குச் சென்றுவிட்டான் என்ற மறைமுக செய்தியை உணர, பனித்த கண்களுடன் கடவுளுக்கு நன்றி உரைத்து, உத்ராவிற்குப் பதில் அனுப்பினாள்.

Advertisement

நொடிகளில் வந்த பதிலில் நிம்மதியுற்ற ஜோடியும் லேசான மனத்துடன் உறங்கச் சென்றனர்.


கனமழையும் மின்வெட்டும் இரவு முழுவதும் நீடிக்க, வசிப்பறையின் சோஃபாவிலேயே படுத்துக்கொண்ட ரம்யா உறக்கம் இல்லாமல் தவித்தாள்.

இப்படியும் அப்படியும் புரண்டு தவித்தவள் அதிகாலை நான்கு மணியளவில் கண்ணசரவும், மின்சாரம் மீண்டு அவள் துயிலைக் கலைக்கவும் சரியாக இருந்தது.

ஷ்ரவனிடமிருந்து அழைப்போ குறுஞ்செய்தியோ வந்திருக்கிறாதா என்ற நப்பாசையில் அலைபேசியை உயிர்ப்பித்தாள். வெற்றுத்திரை அவளைப் பார்த்து இளித்தது.

கனத்த மனத்தோடு குளித்து முடித்து வந்தவள், பூஜை அறையைச் சுத்தம் செய்து சோமவார விரதத்திற்கான நிவேதனங்களைச் செய்ய அடுப்படிக்குள் நுழைந்தாள்.

பழங்களை வெட்டியபடி பால் காய்ச்சிக் கொண்டிருந்தவளின் சிந்தனை மட்டும் தன்னவனையே தழுவி இருந்தது.

கல்லூரியில் சேர்ந்த அன்று எதிர்பாராத விதமாக கணவன் கைகோத்து ஈஸ்வரனை தரிசித்ததில் துளிர்விட்ட அவா. பார்வதி தேவி சிவபெருமானை மணக்க வேண்டி கடைப்பிடித்த விரதம் என விரதத்தின் மகிமையை அறிந்திருந்தவள், தன்னுடைய ஷ்ரவனும் நினைவுகள் திரும்பி தன்னிடம் வந்துவிட வேண்டுமென்ற பிரார்த்தனைகளுடன் அடுத்து வந்த திங்கட்கிழமை அன்றே பூஜையைத் துவங்கியிருந்தாள்.

முன்தினம் தன்னைத் தேடி திரையரங்கத்திற்கு ஓடிவந்தவன், குணமாகிவிட்டான் என்றே ஒரு கணம் நம்பிவிட்டாள். இல்லை என்ற நிதர்சனம் மண்டையில் உரைக்க, ஏமாற்றம் கோபமாய் உருமாறியிருந்தது.

சோதனைகளும் கஷ்டங்களும் நம் மனவுறுதிக்கான பரிட்சை என்ற தத்துவத்தை நினைவுகூர்ந்தவளுக்குக் கண்ணெதிரே பொங்கி வரும் பாலின் வெளுமையான தோற்றத்தைக் கண்டதும் தீர்வு கிடைத்தது போல மனம் நிறைந்தது.

தன்னவனுக்கு மிகவும் பிடித்த பால்பாயசத்தையே அன்றைய பூஜைக்கு நிவேதனம் செய்யத் தீர்மானித்தவள், அகம் மகிழ்ந்து ஈஸ்வரனை வழிபட்டாள்.


விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வாசலில் வந்து நிற்கும் ரம்யாவைக் கண்ட உத்ரா பேரதிர்வில் உறைந்து நின்றாள். அசடுவழிய வீட்டிற்குள் நுழைந்தவளின் முகம் நொடியில் மாறியது. வெகுநாட்களுக்குப் பிறகுக் கண்களுக்கும் நாசிகளுக்கும் விருந்தான புகுந்த வீட்டின் காட்சியும் வாசமும் அவளை இனம்புரியாத உணர்வுகளில் கட்டிப்போட்டன.

நடு ஹாலில் சிலையாக நிற்கும் ரம்யாவிடம், “நேத்து ராத்திரியே வந்திருக்கலாம்ல,” கேட்டு அவள் தோளினை உலுக்கினாள் உத்ரா.

மென்சிரிப்புடன், வைர் கூடையை மேஜை மேல் வைத்தவளின் விழிகள், தன்னவனைத் தேடி அலைபாய்ந்தது.

பெண்களின் பேச்சு சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்தது என்னமோ தருணும் அவன் செல்ல மகளும்தான்.

தோழியின் தரிசனத்தில் குளிர்ந்தவன், அவளருகே வேகநடையிட்டான்.

புன்னகை முகமாய் விரூபாவின் தலைகோதி முத்தமிட்ட ரம்யா, குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசி, அவள் கண்களில் விழாதவாறு கைவிரல்களை குழந்தையின் புருவங்கள் மேல் பரப்பி ஊதிவிட்டாள்.

பெரியம்மா ஏதோ விளையாட்டுக் காட்டுவதுபோல பொக்கை வாய் விரிய கிளுகிளுத்தாள் விரூபா.

தனக்கும் அதேமாதிரி திருநீறு இட்டுவிடச் சொல்லி தலைசாய்த்தான் தருண்.

“முதல்ல குளிச்சிட்டு வாடா,” ரம்யா அவனை விரட்ட, கூடையிலிருந்த பூஜைப் பொருட்களை ஆராய்ந்த உத்ரா, வெண்கல தூக்கில் ஏலக்காய் மணக்கும் பால் பாயசத்தைக் கண்டதும்,

“வாவ்! இன்னைக்கு என்ன ஸ்பெஷல் அக்கா?” எனத் துள்ளினாள்.

பதில்சொல்ல முடியாமல் ரம்யா திருதிருவென முழிக்க, “வேண்டுதலா?” எனத் தோழியை ஏறிட்டான் தருண்.

அவளும் ஆம் என்று மட்டும் தலையசைக்க, அவள் வழக்கத்தை நினைவுகூர்ந்த உத்ரா, “சரி! சரி! வேண்டுதல் முடிஞ்சதுமே பதில் சொல்லுங்க. ஆனால் பூஜைக்கு என்ன ஸ்வீட் பண்ணாலும் கொண்டு வந்துடணும்,” என்றாள்.

தருணின் கை வளைவிலிருந்த விரூபா திடீரென இறங்கிக்கொள்ள பரபரத்ததும், குழந்தை பார்க்கும் திசையில் கணவனின் தரிசனத்தைப் பெற்றாள் மங்கை.

சந்தோஷம், பயம், தயக்கம் என உணர்ச்சிகளின் பிடியில் அவள் தத்தளிக்க,

“பக்திப்பழம் பொண்டாட்டி வரது தெரிஞ்சு சீக்கிரமே குளிச்சிட்டியா டா,” நீல நிற முழுக்கைச் சட்டையும் அடர்சாம்பல் நிற பேன்டுமெனத் தயாராகி வந்து நிற்பவனைக் கண்டதும் கலாய்த்தான் தருண்.

ஷ்ரவன் முறைக்கும் விதத்திலேயே அவன் கோபம் துளியும் குறையவில்லை எனப் புரிந்துகொண்டாள் ரம்யா.

“இதுதான் நீ சொன்ன முக்கிய காரணமா?” அழுத்தமான குரலில் கேட்டான்.

வாய்விட்டுச் சொன்னால் வேண்டுதல் பலிக்காதே எனத் தயங்கியவளுக்கு வாய்திறந்து பேசாவிட்டாலும் பிரச்சனை எனத் தோன்ற, “அது… அது…” எனத் தடுமாறினாள்.

“பூஜையை இந்த வீட்டுல செஞ்சா உன் சாமி ஏத்துக்காதா?” நாத்திகன் கணக்காய் அவன் பேச, வெகுநேரமாக இங்குதான் நின்றிருக்கிறான் என உணர்ந்தாள்.

“உங்களுக்காகத் தான் விரதம் இருப்பாங்க ‘ண்ணா,” உத்ரா எடுத்துச்சொல்ல,

“அப்படிப்பட்ட விரதமே எனக்கு வேண்டாம்;” கர்ஜித்தவன் வந்த வழியே மாடியேறினான்.

‘நீயும் எனக்கு வேண்டாம்!’ என்றும் கூடவே சொல்லத் தோன்றியது அவனுக்கு. ஆனால் ஏதோவொரு சக்தி அவனைக் கட்டிப்போட்டது.

திருமணமான இந்த எட்டு வருடங்களில் ஒருநாளும் தங்கள் மனஸ்தாபங்களை மற்றவர்கள் முன் காட்டியதே இல்லையே என வருந்தியவள், ஷ்ரவனின் இந்தப் புது அவதாரத்தில் கூனிக்குறுகிப் போனாள். எத்தனை முயன்றும் குபுகுபுவென்று வழிந்தோடிய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாசலை நோக்கி நடந்தாள்.

தோழியின் முடிவில் அதிருப்தி கொண்ட தருண், “மாடிக்குப்போய் அவன்கிட்ட தனியா மனசவிட்டுப் பேசு ரம்யா,” தீர்மானக் குரலில் உரைத்தான்.

மனையாளின் உருவத்தைக் கண்டதுமே, “உன்னுடைய எந்த விளக்கத்தையும் கேட்க நான் தயாரா இல்ல,” என விரட்டினான்.

“நானும் எந்த விளக்கமும் கொடுக்க வரல ஷ்ரவன், ” என்றபடி அவனருகே நெருங்கி வந்தவள், “நீங்க கேட்டது நியாம்தான்னு உங்க கேள்விக்குப் பதில்சொல்லிட்டுப் போக வந்தேன்,” என்றாள் மனம் தெளிந்து.

மன்னிக்கச் சொல்லி அவன் மனம் தூண்ட, நாள்முழுக்க அலையவிட்டதை அதற்குள் மறந்துவிட்டாயா எனப் புத்தி உசுப்பேற்ற சிலையாக நின்றான்.

விட்டுப்பிடிக்க விழைந்தவள், அவன் முகவாயைக் குவித்து, “என்மேல கோபமா இருங்க ஷ்ரவன்… ஆனால் கோபமாவே இருந்துடாதீங்க ப்ளீஸ்…” பனித்த கண்களுடன் கெஞ்சிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மேஜையைக் கடந்து வந்தவளின் கவனத்தை ஈர்த்தன இரண்டு 5ஸ்டார் சாக்லேட் பார்கள்.

‘பை டுகெட் ஒன் ஃப்ரீ ஆஃபர் போட்டதே எனக்காகத்தான் போல,’ விரக்திப் புன்னகை உதிர்த்து, தோள்பையில் வைத்திருந்த மூன்றாவது சாக்லேட்டையும் அதன் பக்கத்தில் வைத்து நகர்ந்தாள்.

அவள் சைககளில் அவனுக்கு எரிச்சல் கூடியதுதான் மிச்சம்.

‘சரியான லூஸா இருப்பாப்போல! இன்ஸ்டால்மென்ட்ல இத்தனை சாக்லேட் தந்துட்டு இருக்குறா. இவ சாக்லேட் தந்ததும், ‘ஐ லவ் யூ ரம்யா மிஸ்ன்னு’ பல் இளிச்சிட்டு அவ பின்னாடியே வால் மாதிரி போக நான் என்ன சின்ன குழந்தையா,’ திட்டியபடி அலுவலகம் புறப்பட தயாரானான்.

போன வேகத்தில் திரும்பிய தோழியைக் கண்ட தருண், “இவனுக்கு என்ன அத்தனை கோபம்,” ஆவேசம் பொங்க மாடியேறினான்.

“நில்லுடா!” என அவன் கையைப் பிடித்துத் தடுத்த ரம்யா, “சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். யோசிக்க கொஞ்சம் டைம் கொடுக்கலாம்,” என்றாள்.

கலங்கிய நீர் தெளிவடைய காத்திருக்கத்தானே வேண்டுமென அவனும் அமைதியானான்.

மதியம் திருச்சியிலிருந்து திரும்பியிருந்தனர் திலகாவும் தாமோதரனும். பால்பாயசத்தைக் கண்டதுமே மூத்த மருமகளின் வருகையைக் கண்டுகொண்டிருந்தார் திலகா.

ஆனால் அது சீண்டுவார் இல்லாமல் இருந்ததில், தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் என்றும் உணர்ந்துகொண்டார். உத்ராவை மடக்கி அனைத்தையும் அறிந்துகொண்டவர்,

“சரி விடு! நான் பார்த்துக்கிறேன்,” எனக் கூறி ஷ்ரவன் வீட்டிற்கு வர காத்திருந்தார்.

மாலையில் வீடு திரும்பியவன் நேராகத் தன் அறைக்குச் சென்றான். வழக்கமான் தினப்படி உடைகளை அணியாமல், பிஸ்தா நிற டீஷர்ட்டும் ஜீன்ஸுமாகத் தயாராகி வர, ரம்யாவைச் சந்திக்கப் புறப்படுகிறான் என மகிழ்ந்தார் அன்னை.

ஆனால் அவனோ, பொம்மைகளுடன் பொம்மையாக பாயில் ஐக்கியமாகிருந்த விரூபா அருகில் அமர்ந்து விளையாடத் தொடங்கவும், யோசனையாக நின்றார் திலகா.

“மழை வரமாதிரி இருக்கு ‘ண்ணா; நான் மாடிக்குப் போய் துணி எடுத்துட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன்,” உத்ரா எழுந்துகொள்ள,

“வேற ஏதாவது வேலை இருந்தாலும் முடிச்சிட்டு வா. நான் இந்த ரவுடியோட விளையாடிட்டு இருக்கேன்,” சொல்லிக்கொண்டே கண்ணாலேயே சிரித்து மயக்கும் தாரகையைத் தூக்கி அவள் கழுத்தில் முகம் புதைத்து கிச்சுகிக்சு மூட்டினான்.

கலகலத்துச் சிரித்த குழந்தையும் அவன் தலைமுடியைக் கொத்தாய்ப் பிடித்து விளையாட, மென்னகையுடன் மாடியேறினாள் உத்ரா.

வசிப்பறைக்கு யோசனயாக நடந்தார் திலகா. அன்னையைக் கண்டதும் அவர்கள் பயணத்தைப் பற்றி விசாரித்த ஷ்ரவன்,

“நம்ம மேனேஜர் ரகுநாதன் அவர் பையன் காலேஜ் விஷயமா பேச ஆறு மணியளவில் வரேன்னு சொல்லிருக்காரு ‘ம்மா,” பேச்சோடு பேச்சாகக் கூறினான்.

‘இதுதான் இவன் டிப்டாப்பாகத் தயாராகி வந்ததற்குக் காரணமா,’ கணக்கிட்டவர், சரியென்று தலையசைத்து சமையலறைக்குள் சென்றார்.

ஐந்து நிமிடங்களில் சுடச்சுட பால்பாயசம் எடுத்துவந்தவர், “இதை முதல்ல குடி. அவங்க வந்ததும் எல்லாருக்கும் சேர்த்து காபி போடுறேன்,” என்றார்.

அம்மா தங்கள் சண்டையைப் பற்றி எந்தளவிற்கு அறிந்திருப்பார் எனத் தெரியாத நிலையில், பாயசம் வேண்டாமென மட்டும் மறுத்தான்.

“ரம்யா உனக்காக விரதமிருந்து பூஜை செய்யறாடா. அடம்பிடிக்காம குடி,” திலகா கூற, அன்னைக்குச் சாவி கொடுப்பது யார் எனப் புரிந்துகொண்டான்.

“முதல்ல அவகிட்ட என்னை ஒரு மனுஷனா மதிச்சு என் மனச நோகடிக்காம இருக்கச்சொல்லு; அப்புறம் எனக்காக விரதம் இருக்கட்டும்,” அவன் ஏளனமாகப் பேச,

“உன்னோட வரக்கூடாதுன்னு இல்லடா. எந்த வீட்டுல விரதத்தைத் தொடங்குறாளோ அங்கேயே தொடர்ந்து செய்யறதுதான் அவ வழக்கம்,” விளக்கினார் திலகா.

“அதை என்கிட்ட வாய்திறந்து சொல்லிருக்கலாம்ல. முக்கியமான வேலைன்னு ஏன் பூசிமெழுகணும். என்னோட வர அவளுக்கு இஷ்டமில்ல ‘ம்மா,” சுட்டிக்காட்டினான்.

“வாய்விட்டுச் சொன்னால் விரதம் பலிக்காதுன்றது அவ நம்பிக்கை,” திலகா பதிலுக்குப் பதில் பேச,

எதையும் கேட்கும் மனநிலையில் இல்லாதவன், “ம்ம்ம்…. அவ செய்யற எல்லாத்துக்கும் நீ இப்படிச் சப்பைக்கட்டு கட்டுறதுனால தான் அவ இஷ்டப்படி ஆடுறா. என் ஃபீல்ங்க்ஸ்க்கு கொஞ்சம் கூட மதிப்புக் கொடுக்கிறதில்ல,” நொந்து பேசினான்.

“பால்பாயசத்தைக் குடிச்சுப் பார்த்தா தானே அவ உன் ஃபீலிங்க்ஸ்க்கு எந்தளவுக்கு மதிப்பு கொடுக்குறான்னு தெரியும்,” மகனுக்கு இணையாக எகிறினார் திலகா.

“அவசியமில்ல! அதை என் கண்ணு முன்னாடி வச்சு எரிச்சலைக் கிளப்பாதே!” அவன் தீர்க்கமாக மறுக்கவும், தருண் அலுவலகத்தில் இருந்து வரவும் சரியாக இருந்தது.

தூக்கிக்கொள்ளச் சொல்லி தவழ்ந்து வந்த மகளிடன், “அப்பா குளிச்சிட்டு வந்துடறேன் பாப்பு. அதுவரைக்கும் பெரியப்பாவோட விளையாடு,” என சைகை காட்ட, உறுமிக்கொண்டிருந்த ஷ்ரவனை ஏற இறக்க பார்த்தாள் குழந்தை.

உதட்டில் ஒட்டிக்கொண்ட புன்னகையுடன் குழந்தையிடம் வரச் சொல்லி கை நீட்டினான் ஷ்ரவன்.

“ஏன்டா அவ்வளவு ஹார்ஷா பேசுற. அம்மா சொல்றத கேட்டாதான் என்ன?” அண்ணனிடம் பரிவுடன் வினவினான் தருண்.

“இப்போ உன் பிரச்சனை என்ன? பாயசம் குடிக்காததா? இல்ல உன் ப்ரெண்ட திட்டினதா?” கேள்வியைத் திருப்பினான்.

“ரெண்டுமேதான்,” தருண், தெளிந்த குரலில் பதில்கூற,

“உங்களுக்கெல்லாம் அவதான் ஒசத்தி. இப்படி நீங்க எல்லாரும் அவளைத் தலையில் தூக்கி வச்சு கொண்டாடுறதுனால தான் அவளோட திமிரும் தலைக்கனமும் நாளுக்கு நாள் ஏறிகிட்டே போகுது,” உறுமிக்கொண்டே குழந்தையுடன் மாடியேறினான்.

திடீரென மாடிப்படியில் உத்ராவைக் கண்டதும் திடுக்கிட்டான்.

விரூபா அன்னையிடம் தாவிக்கொள்ள, “நீ மட்டும்தான் பாக்கி… உன் பங்குக்கு அவள நல்லவ வல்லவன்னு ஏதாவது சொல்லி என் எரிச்சலைக் கிளப்பப்போறியா?” கடுகடுத்தான் ஷ்ரவன்.

சொல்வதற்கு எதுவுமில்லை எனத் தலையாட்டினாளே ஒழிய, அவள் கண்களிலும் உதடுகளிலும் கள்ளத்தனம் தொக்கி நின்றது.

பின்னால் ஒளித்துவைத்திருந்த 5ஸ்டார் சாக்லேட்டுகளை விசிறி போலப் பரப்பி, “என்ன இது?’ எனப் புருவங்களை மேலும் கீழும் வளைத்தாள்.

மடித்த துணிகளை ஷ்ரவனின் அறையில் வைக்கச் சென்றபோது பாவையின் கண்களுக்குத் தென்பட்டிருந்தன, சீண்டுவார இல்லாமல் கிடந்த அந்த 5ஸ்டார்கள்.

“5ஸ்டார்!” அவன் உணர்ச்சியே இல்லாமல் கூற,

“அது எங்களுக்கும் தெரியும். இது எப்படி இங்கே வந்துதுன்னு சொல்லுடா,” பின்னாலிருந்து அண்ணனைச் சிறைசெய்த தருண் குரல் கொடுத்தான்.

“இதுல என்ன ரகசியமிருக்கு! அவதான் தந்தா,” ஷ்ரவன் அலட்சியமாகப் பதிலுரைக்க,

அதைக்கேட்ட கணவனும் மனைவியும் வெடித்துச் சிரித்ததில், நடுவில் அகப்பட்டுக் கொண்டவனுக்குத்தான் செவிகள் கிழிந்தன.

“அதுவும் ஒண்ணில்ல தருண். அக்கா மூணு தந்துட்டுப் போயிருக்காங்க பாருடா,” உத்ரா அவற்றை உயர்த்திக்காட்ட,

“மேடம் இப்பலாம் மன்னிப்புக் கேட்க முன்ஜாமின் வாங்குறாங்க போல,” அண்ணனைக் கேலி செய்து மனையாளுக்கு ஹைஃபை தந்து வயிறு குலுங்க சிரித்தான் தருண்.

“ஏதாவது புரியுற மாதிரி பேசுறீங்களா?” இரு காதுகளையும் பொத்திக்கொண்டு உச்சஸ்தாயில் கத்தினான் ஷ்ரவன்.

விரூகுட்டிக் கூட அந்தக் கர்ஜனைக்கு அசரவில்லை. அவளும் பெரியப்பாவுக்கு இணையாக ஆ ஊ எனத் தன் பிஞ்சுக்கரங்களைத் தட்டி இசைத்தாள்.

“நீங்களும் உங்க பொண்டாட்டியும் நல்லா ரொமான்ஸ் பண்ணிட்டு, எங்க முன்னாடி எலியும் பூனையுமா சண்டை போட்டுக்குற மாதிரி நடிக்கிறீங்களா அண்ணா?” கண்களை உருட்டினாள் உத்ரா.

“புரியாத விஷயங்களைப் பேசி ஏன் என்னைச் சித்திரவதை செய்யறீங்க,” ஷ்ரவன் நொந்துபேச,

உண்மையிலேயே அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை என உணர்ந்து அமைதிகாத்தனர் தருணும் உத்ராவும்.

இளையவர்களின் அலப்பறையில் வசிப்பறைக்கு வந்திருந்த திலகா அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் நின்றிருந்தார். மகனை வழிக்குக் கொண்டுவர இதுதான் தக்க சமயம் என யூகித்தவர்,

“என் மருமகள் 5ஸ்டார் எதுக்குத் தந்திருக்கான்னு தெரியணும்னா, முதல்ல அவ செஞ்ச பால்பாயசத்தைக் குடி,” என மடக்கினார்.

“சூப்பர் ‘ம்மா! எனக்கும் ஒரு டம்ளர் கொண்டு வா,” தருண் குதிக்க,

“அம்மா எனக்கும் எனக்கும்,” போட்டிப்போட்டாள் உத்ரா.

நால்வருமாக மகிழ்ந்து புசித்தனர். கண்ணால் பார்த்ததிலேயே மனையாளின் நேசத்தை உணர்ந்தவன், அதை சுவைத்ததும் அவளது அளவுகடந்த காதலை உணர்ந்தான்.

“பூஜைக்குப் பாசுமதி அரிசில செஞ்சிருக்கா,” மெல்லிய குரலில் அன்னையிடம் வினவினான்.

வழிபடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என திலகா விதிக்கும் நூற்றுக்கணக்கான தடைகளில் ஒன்று, விசேஷ நாட்களில் பச்சரிசி தவிர வேறெதையும் உபயோகிக்கக்கூடாது என்பது. மற்றொன்று,

செயல்முறைக்குள்ளாக்கப் பட்டிருக்கும் உணவுப் பொருட்களை அரவே தொடக்கூடாது என்பதும்.

வீட்டில், அதுவும் சாதாரண நாட்களில் பாசுமதி அரிசியும், கண்டென்ஸ்ட் மில்க்கும் சேர்த்து பால்பாயசம் செய்து வந்தது ஷ்ரவன் மட்டும்தான்.

அன்னையின் கண்டிப்புகளை மீறி, அதுவும் தன்னைப்போலவே செய்திருக்கிறாளே என வியந்தவன் அன்னையை நோக்க,

“இப்ப புரியுதா! என் மருமகளுக்கு இந்த உலகத்திலேயே புருஷனான உன் விருப்பம்தான் ஃப்ர்ஸ்ட்ன்னு,” எனச் சுட்டிக்காட்டினார்.

புரிகிறது என்றவன், 5ஸ்டாருக்குப் பின்னால் இருக்கும் காதலைப்பற்றி கேட்க,

“மேடம் வாய்விட்டு சாரி கேட்கமாட்டாங்க. சமாதான கொடி நடும் யுக்தி இது,” கலகலத்தான் தருண்.

சாக்லேட்டுகளை ரம்யா தந்த சூழ்நிலைகளை நினைவுகூர்ந்தவனின் முகம் புன்னகையில் விரிந்தது.

“சரி! இப்போ நான் அவள மன்னிச்சிட்டேன்னு வாய்விட்டுச் சொல்லணுமா, பிரிச்சுச் சாப்பிடணுமா இல்ல இதை அவகிட்டயே திருப்பித் தந்துடணுமா,” நமுட்டுச் சிரிப்புடன் வினவினான்.

“மூணு ஆப்ஷனுமே தப்பு ‘ண்ணா,” கிளுகிளுத்த உத்ரா, “நீ பாதி நான் பாதின்னு டூயட் பாடிட்டே சாப்பிடுவீங்க,” எனப் பாடியே காட்டினாள்.

குடும்பத்தினர் முன் இத்தனை வெளிப்படையாகவா பழகியிருக்கிறோம் என மலைப்பாய் இருந்தது அவனுக்கு.

கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தவன், ரகுநாதனும் அவர் மகனும் வர கால்மணி நேரம் இருக்கிறது எனக் கவனித்து விறுவிறுவென மாடியேறினான்.

“வாசலுக்கு வழி இந்தப் பக்கம்,” உத்ராவின் கிண்டல் எல்லாம் அவன் செவிகளில் விழவே இல்லை.

மூன்றுமுறை அழைத்தும் பெண் எடுத்தபாடில்லை. கிடைத்த கால்மணி நேரமும் காத்திருப்பதற்கே சரியாகிப் போனது. அலைபேசியின் ஒலியை மொத்தமாய் குறைத்து அதை சார்ஜில் போட்டு மனமில்லாமல் கீழே இறங்கினான்.

விருந்தாளிகளுடன் இன்னொரு டம்ளர் பால்பாயசத்தை சலிக்காமல் பருகும் ஷ்ரவனின் போக்கில் வாயைப்பிளந்தாள் உத்ரா.

பாயசம் மிகவும் ருசியாக இருக்கிறது என ரகுநாதன் பாராட்டியது தான் மிகப்பெரிய தவறு.

கட்டிடக்கலை பொறியியல் கல்லூரியில் மேற்கொண்டு படிக்க வேண்டிய பாடங்கள் பற்றி கொஞ்சமும், கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து பால்பாயசம் செய்வது எப்படி எனச் சொற்பொழிவும் ஆற்றிய ஷ்ரவனை ஏற இறக்கப் பார்த்தான் அவர் மகன்.

“ஆபீஸுக்கு வா தம்பி. தியரிடிகலா எக்ஸ்ப்லைன் பண்ணறதவிட பிராக்டிகலா டெமோ கொடுக்கிறதுல தான் என் அண்ணன் எக்ஸ்பர்ட்,” என இடைபுகுந்து அண்ணனின் மானத்தைக் காப்பாற்றினான் தருண்.

அவர்கள் வாசற்படியைத் தாண்டியதும் மாடிக்கு ஓடியவன் அலைபேசியை எடுக்க,

‘ஸாரி! ஸாரி! ஸாரி! நான் ஃபோன் எடுக்காததுக்கு!’

‘ப்ளீஸ் எடுத்துப் பேசுங்க!’

‘இன்னும் என்மேல கோபமா ஷ்ரவன்!’

‘நீங்க ஃபோன் செஞ்சப்ப நான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன். ஸாரி ஷ்ரவன்!’

“ப்ளீச் எனக்காக ஒரெவொரு முறை ஃபோன் எடுத்துப் பேசுங்களேன்!’

என எண்ணிலடங்கா குறுஞ்செய்திகளும் தவரிப்போன அழைப்புகளையும் கண்டவனின் முகம் பரவசத்தில் நிறைந்தது.

அவன் அழைப்பதற்குள் அவனே அழைத்திருந்தாள். அழைப்பு இணைந்த மறுகணமே, “ஸாரி ஸாரி ஸாரி ஷ்ரவன். வேணும்னே செய்யல. வண்டி ஓட்டிட்டு இருந்தேன்,” மூச்சுவிடாமல் படபடத்தான்.

“5ஸ்டார் தந்து மன்னிப்புக் கேட்டாதான் உன் சாரியை அக்செப்ட் பண்ணிப்பேன்,” அவன் அலட்டலே இல்லாமல் குறுக்கிட,

“ஷ்ரவன்…” அவள் வியக்கவும், அந்தப் பக்கம் நிசப்தமானது.

“ம்ம்!”

“எல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்களா?”

“ம்ம்ம்!”

அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் குரலில் அழுத்தம் கூடியது.

“மூணு 5ஸ்டாரையும் சாப்பிட்டாச்சா?” வியந்தாள் பெண்.

“அது எப்படி பாதியை உனக்குத் தராம சாப்பிடுவேன்,” அவளைக் காதல் மழையில் நனைத்தான்.

இவர்களா சண்டையிட்டார்கள் என வியக்கும் அளவிற்கு ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிய,

“இப்பவே கிளம்பி வரட்டுமா,” விட்டால் அலைபேசி வழியாகவே குதித்திருப்பாள் பெண்.

“ஐயோ வேண்டாம்,” ஷ்ரவன் ஒரு வேகத்தில் சொல்லவும்,

“ஏன் ஷ்ரவன்! இன்னும் கோபம் குறையலையா?” கசந்த குரலில் கேட்டாள்.

“பால்பாயசம் குடிச்சப்பவே கோபமெல்லாம் காதலாய் மாறிடுத்து,” என்றதும், பூரித்துப்போனாள் பெண்.

“பிடிச்சிருந்துதா,” வாஞ்சையாக வினவினாள்.

“பிடிக்காமல் இருக்குமா,” என்றவன், தான் கற்றுக்கொடுத்த அதேமாதிரி அவள் செய்திருப்பதை மெச்ச, கூடவே அவனுக்கு ஒரு இனம்புரியா தயக்கமும் உதித்தது.

“ரம்யா! இந்த ரெசிபியை எனக்குக் கத்துக்கொடுத்தது யாருன்னு தெரியுமா,” தயங்கினான்.

“ஷர்மிலாதான்,” அவள் அலட்டலே இல்லாமல் கூறவும், ஆடிப்போனான் அவன்.

மறுமுனையில் மௌனம் நீடிக்க, “கடுகளவு கூட நீங்க உங்க முன்னாள் காதல்பற்றி எங்கிட்ட மறைச்சதில்ல ஷ்ரவன். அப்படியிருக்கும்போது, நீங்க விரும்பிச் சாப்பிடுற ஷீர் குருமா உட்பட மத்த ரம்ஜான் பண்டிகை இனிப்புகள் பற்றியும், அதை உங்களுக்குச் சொல்லித்தந்தது யாருன்றதும் எனக்குத் தெரியாமல் போகுமா,” அவள் கூற, அவன் இன்னும் பேச்சற்றுப் போனான்.

“வேணும்னா உங்க காதல் காவியத்தின் இரண்டாம் பாகம் எடுத்துப்பாருங்க,” அவள் மேலும் பேசிக்கொண்டே போக,

“போதும் ரம்யா. உன் அன்பு புரியாம இந்த ரெண்டு நாளா உன்னை அந்நியாயத்துக்கு டார்ச்சர் பண்ணிட்டேன்.” மனமுருகினான்.

“தப்பு என்கிட்டயும் தான் ஷ்ரவன். மறதியில் அவதிப்படுற உங்க கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டு ஓபெனா பேசியிருந்தா பிரச்சனையே வந்திருக்காதுல.

நீங்க அப்படிக் கேட்டதும்தான் என் மண்டையில் உரைச்சுது,” தன் பங்குக்கு உருகியவள், இனி அங்கேயே வந்து அவனுடன் இணைந்து விரதம் இருப்பதாகக் கூற,

“இல்ல இல்ல ரம்யா! உன் நம்பிக்கையை உடைக்க விரும்பல,” மனமுவந்து விட்டுக்கொடுத்தான்.

“சரி ஷ்ரவன். ஆனால் இப்போ அங்க வரவேண்டாம்னு சொன்னீங்க,” விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள் பாவை.

“போக வர பால்பாயசம் குடிச்சு, சுகர் ஓவர்லோட்ல மிதந்துட்டு இருக்கேன்.

இதுக்குமேல 5ஸ்டார் சாப்பிட்டா என் உடம்பு தாங்காதும்மா,” குழைந்தவன்,

“வர சன்டே மீட் பண்ணலமா,” வாஞ்சையாகக் கேட்டான்.

“வர சன்டே மட்டுமில்ல; இனி எல்லா சன்டேஸும் மீட் பண்ணப்போகுறோம்,” திருத்திச் சொன்னவள், “உங்களுக்கு ஓகேன்னா, சண்டே என்னோட ஸ்டே பண்ணிட்டு அடுத்த நாள் பூஜைல கலந்துக்குறீங்களா,” தழைந்த குரலில் கேட்டாள்.

“எனக்காக விரதமிருக்குற. வராமல் இருப்பேனா,” என்றவனின் பதிலில் உச்சிகுளிர்ந்தாள் பெண்.

கேட்டவளுக்கும் பதில்சொன்னவனுக்கும் ஆயுள்வரை சேர்ந்துவாழ வேண்டுமென ஆசைப் பல்கிப் பெருகியபோதும், அதை வாய்விட்டுச் சொல்லத் துணிவு வரவில்லை. தடைகள் நீங்கி விரைவில் ஒன்றுசேரவேண்டும் என மானசீகமாகப் பிரார்த்தித்தனர்.

காத்திருப்புகள் யாவும் கானல் நீராகிப் போனதென,
கடவுளிடம் முறையிட முடிவெடுத்தாயோ பெண்ணே!
கனவிலும் நனவிலும் நின் முகமே வேண்டுமென,
கச்சிதமாய் புரியவைக்க வழி தெரியாமல்- விடை தேடுகிறேன்
காரிகையே! நிழலாடும் நின் நினைவில்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!