Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 29

ரிதம் 29

அந்த நாளிலிருந்து அவள் வாழ்க்கை நேர்க்கோட்டில் சீராகச் சென்றது. அவனும் அவளை வந்து பார்க்கவில்லை. அவளும் அவனைப் பார்க்க நினைக்கவில்லை.



Advertisement

தூரத்தில் அவன் போகும்போது கண்களால் தரிசிப்பதோடு சரி, அந்த நிலையில் நின்று கொண்டான். அவனை மனதில் ஆராதனை செய்தாள். ஒரு பக்தனைப் போலத் தன்னை நினைத்துக் கொண்டாள்.

வீட்டில் இப்போது கௌதம் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. முன்பே இருந்ததுதான், ஆனால் இப்பொழுது அதைவிடவும் அதிகமாக இருந்தது. அந்த வீட்டில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது ராகினி மட்டும்தான். அவள் இப்போது கௌதமைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், நிலை என்னவாக இருக்கும்???

Advertisement

Advertisement

“ஹீரோன்னு நினைக்கிறவங்க எல்லாம் ஹீரோ கிடையாது. நான் என்னோட ஃபேவரிட் ஹீரோ லிஸ்ட்ல கௌதம் சாரை முன்னாடி தூக்கி வச்சுட்டேன். அவருக்கு என்ன?? அழகு இல்லையா?? டேலண்ட் இல்லையா?? பாடும்போதே அத்தனை உணர்ச்சி ததும்பப் பாடுறாரு. அவரெல்லாம் நடிக்க வந்தாருன்னா இந்த ராகவ், சோகவ் எல்லாரையும் ஓரம் நிறுத்திடுவார்.” இப்படி அவன் புராணமே பாடிக்கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டாள்.

ஒரு நாள் அவளிடம் வந்து ஒன்று கேட்டாள். “அக்கா, நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அது உண்மையா?? ஏதோ ஒரு டைரக்டர் அவரோட படத்துல கெளதம் சாரை நடிக்கச் சொல்லி கேட்டாங்களாமே?? ஆனா இவர்தான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாராமே, அது உண்மையா??” என்று கேட்டாள்.

Advertisement

“தெரியலை” என்று உதடு பிதுக்கினாள் நத்தாஷா.

“அது எப்படி தெரியாம இருக்கும்?? அரசல் புரசலா பேசிப்பாங்கல்ல??” என்று விடாது கேட்டாள்.

“அப்படிப் பேசிக்கிட்டாங்கதான். ஆனா அது உண்மையான்னு எனக்குத் தெரியல”?

“அப்படி மட்டும் நடிச்சா?? ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ நான் போய் நின்னுடுவேன். அது மட்டுமா?? கௌதம் ரசிகர் மன்றம்னு நானே முதல் ஆளா தொடங்கி வச்சு அதுக்குத் தலைவியாகிடுவேன்” என்று புகழாரம் சூட்ட ஆரம்பித்தாள்.

அதையே அவனுக்குத் தட்டச்சு மூலமாக அனுப்பியும் இருந்தாள்.

அதைப் பார்த்ததும் அவன் இதழ்களில் மெல்லிய புன்னகைக்கீற்று.

அன்றைய நாளுக்குப் பிறகு அவ்வப்போது மிகவும் அரிதாக ஏதாவது ஒன்றை குறுஞ்செய்தியாக அனுப்புவாள் ராகினி. இவன் அதற்குப் பதில் அளிக்க மாட்டான். ஆனால் பார்த்ததற்கு ஏதுவாக ஏதாவது ஒரு ஸ்மைலி போட்டு விடுவான்.

ஆனால், மிகக் கவனமாகத்தான் அந்த ஸ்மைலியையும் தேர்ந்தெடுப்பான். ஒரு எல்லையில் அவன் நிற்பதாகக் காட்டிக்கொள்வான். அவளுக்கும் அது புரிந்தது.

அவன் வழவழவென்று பேசி இருந்தால், இவளும் ஆதி அந்தம் என்று உளறி இருப்பாள். ஆனால் அவன் அடக்கி வாசித்ததால், இவளுமே அடக்கி வாசிக்க வேண்டிய நிலையானது.

இப்படியே அவர்களின் நாட்கள் செல்ல, ஒரு நாள் அவள் அகாடமி வந்துவிட்டுச் செல்லும்போது கௌதமுடைய காரியதரிசி லதா அவள் வழியை மறித்தபடி நின்றாள்.

“ஹாய் லதா, இப்பல்லாம் என்ன ஆபீஸ்க்கு வர்றதில்லையா?? என்ன இங்க வெளியே நிக்குறீங்க?? அகாடமி வரலாமில்ல??” என்று கேட்டாள்.

“அது வந்து இனிமே அந்தப் பக்கம் கால் வைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. நீ கொஞ்சம் எனக்காகப் பேசுறியா”?? என்று கேட்டாள் லதா.

“அப்படியா?? ஏன்?? என்னாச்சு”?? அவள் தடுமாற்றத்தோடு கேட்டாள்.

“அது… அது வந்து நீ தப்பா எடுத்துக்காத” என்று அவள் தயக்கத்தோடு நிறுத்தினாள் லதா.

அவள் கையைப் பற்றியபடி, “நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். சொல்லு, என்ன ஆச்சு??” என்று கேட்டாள் நத்தாஷா.

“ரா… ராகவ் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கௌதம் சாரையும் பிடிக்கும் தான். ஆனா ராகவ் என்னோட சைல்ட்ஹுட் க்ரஷ். அவர் உன் நம்பர் கேட்கும்போது என்னால தராம இருக்க முடியல. உன்னோட நம்பரைக் கொடுத்துட்டேன்” என்று கூறிவிட்டுத் தலைகவிழ்ந்தாள்.

“என் நம்பரைக் கொடுத்தது நீயா?? ஆனா, அந்த ராகவ் நல்லவன் இல்லை லதா” என்றாள் நத்தாஷா.

“ஐ நோ. அது, அவர் மேல இருந்த க்ரஷ்ல நானும் தப்பு பண்ணிட்டேன். இப்பத்தான் அது தப்புன்னு புரியுது. வீட்ல பொண்ணு பார்க்குறாங்க. ரொம்பக் குற்ற உணர்ச்சியா இருக்கு. ஆனா தெரிஞ்சு பண்ண தப்பை வருங்கால கணவர்கிட்ட சொல்ல முடியுமா?? நான் இப்ப திருத்திட்டேன். ஆனா என்ன பயன்?? வேலை போயிடுச்சு, வந்த வரன்களும் போயிடுச்சு” என்றாள் லதா.

“என்னால என்ன பண்ண முடியும்னு நீ நினைக்கிற??” சிறு தடுமாற்றம் நத்தாஷாவிடம். தவறு என்று தெரிந்தே செய்திருக்கிறாள், தன்னையும் அதில் மாட்டிவிட நினைத்திருக்கிறாள், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.

“கௌதம் சார் நீ சொன்னா கேட்பாரு. நீ ஒரு வார்த்தை எனக்காகச் சொல்றியா??”

“என்னன்னு சொல்றது?? நான் சொல்றதை அவர் எப்படி கேட்பாரு?? நீ அவங்க அம்மாகிட்ட கேளு லதா. அவருக்கு அவங்க அம்மானா ரொம்பப் பிடிக்கும். அவங்க சொன்னா அவர் கண்டிப்பா கேக்குறதுக்கு வாய்ப்பிருக்கு.”

“இல்ல நத்தாஷா. எனக்காக நீ ஒரு வாட்டி பேசிப் பாரு. அப்படி இல்லைன்னா நான் அவங்க அம்மாகிட்ட போய்க் கேட்கிறேன். இங்கன்னு இல்ல, வேற எங்கேயாவது வேலை கிடைச்சா கூடப் பரவால்ல” என்றாள்.

“சரி, நான் பேசிப் பார்க்கிறேன்” என்று கூறியவள் சென்றுவிட்டாள். ஆனால், ‘எப்படிக் கேட்க முடியும்??’ என்ற சிந்தனை அன்று முழுவதும் அவளைச் சுற்றிக் கொண்டே இருந்தது.

லதா செய்தது தவறு என்றாலும் அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.

அடுத்த நாள் அவளுக்கு ரிகர்சல் இல்லை என்றாலும், இதற்காகவே சென்றாள்.

அங்கு வேறு ஒரு செயலாளர் இருந்தார். ஆண் செக்ரட்டரி. “வந்து நான் கௌதம் சாரைப் பார்க்கணும்” என்றாள்.

“ஒரு நிமிஷம் மேடம்” என்று கூறியவன், அலைபேசியில் தொடர்பு கொண்டுவிட்டு, அடுத்த நொடி அவளை உள்ளே அனுப்பியிருந்தான்.

இம்முறை கௌதம் கேபினில் அமர்ந்திருக்கவில்லை. அவன் ஸ்டுடியோவில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தான்.

அதை ரசித்துக்கொண்டே உள்ளே வந்தவள், தயங்கியபடி அங்கேயே நிற்க, அவன் அந்தப் பாடலை முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டு, கடைசியில் ஓங்கி அதைத் தட்டிவிட்டு ஆழ்ந்த பெருமூச்சோடு எழுந்து நின்றான்.

“மேடம்க்கு இன்னைக்குத்தான் என்னைப் பார்க்கத் தோணியிருக்கு. அதுவும் லதா சொல்லிப் பார்க்க வந்திருக்காங்க” என்றபடி அவளை நோக்கி நடந்து வந்தான்.

அவள் அதிர்ந்துவிட்டாள். அவன் கோபத்தில் இருப்பது தெரியும். ஆனால், லதாவிடம் பேசியது எப்படித் தெரிந்தது???

 அவளின் அதிர்வையும் முகபாவனையையும் வைத்து அவள் என்ன சிந்திக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன்,

“எப்போ உனக்குத் பிரச்சினை வர ஆரம்பிச்சிடுச்சோ, அப்பவே உன்னைக் கண்காணிக்க ஆரம்பிச்சுட்டேன் நத்தாஷா. நானே இறங்கிக் கண்காணிச்சேன்னு சொல்ல முடியாது, அதுக்காக ஆட்கள் வச்சிருக்கேன். உன் பாதுகாப்புக்காக உன்னைப் பின்தொடருவாங்க. உனக்கு ஏதாவது பிரச்சினைன்னா பாதுகாப்பா இருப்பாங்க” என்றான்.

அவள் இன்னும் அதிர்ந்தாள். தனக்குத் தெரியாமல் தன்னைப் பின்தொடர்கிறார்களா?? அதுவும் தன் பாதுகாப்பிற்காக?? இது தவறா, சரியா?? அவளால் அதைக் கணிக்க முடியவில்லை.

“துரோகிகளுக்கு எப்பயும் நான் இன்னொரு சான்ஸ் கொடுக்கறதில்ல நத்தாஷா. அவங்களோட தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதெல்லாம் அவங்க எப்படி வேணாலும் இருந்துக்கட்டும். ஆனா என்னோட நம்பிக்கையை உடைச்சிட்டா, திரும்பி ஒட்ட வைக்க முடியாது. அவங்களுக்காகத்தான் பேச வந்திருக்கேன்னா?? ப்ளீஸ் வேண்டாம். உன் அப்பா பாவம் பார்க்குற மாதிரி, நீயும் இதுபோல பச்சோந்திகளுக்குப் பாவம் பார்க்காத” என்று அழுத்தமாகக் கூறினான்.

அவள் மனம் உடைந்துவிட்டது. சடாரென்று கண்களிலிருந்து கண்ணீரும் வந்துவிட்டது. அதைப் பார்த்ததும் அவன் மனதிலும் தள்ளாட்டம் ஏற்பட்டது. அவளை நோக்கி நடந்து வந்தான். குரலைச் சற்றுத் தாழ்த்தினான். அவளுக்காகவே தளர்த்தினான்.

“உன்னை ஹர்ட் பண்ணனுன்றதுக்காகச் சொல்லல. நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு நாம கண்டறியலைன்னா, நம்ம முதுகில் தான் குத்துவாங்க நத்தாஷா. நீ ரொம்ப நல்லவள், எல்லாருக்காகவும் பார்க்குறவள். அதனாலதான் உனக்குத் துரோகம் பண்ண அந்தப் பொண்ணுக்கும் பேச வந்திருக்க. ஆனா அது சரி கிடையாது நத்தாஷா. அந்தப் பொண்ணைத் திரும்பவும் வச்சுக்கிட்டா எனக்கு அந்தப் பொண்ணு மேல சந்தேகம் வந்துட்டேயிருக்கும். அந்தப் பொண்ணு தயக்கமா என்கிட்ட வேலை செஞ்சுட்டிருப்பாள். இது ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. எல்லாத்துக்கும் மேல நான் அந்த இடத்துக்கு வேற ஒருத்தரை அப்பாயின்மென்ட் பண்ணிட்டேன். சோ, இந்த விஷயத்தை இத்தோடவே விட்டுடு. நீ கேட்டு நான் மறுத்ததா இருக்க வேண்டாம்” என்று அவன் கூறிவிட்ட பிறகு, அவளுக்கு மறுமொழி சொல்ல முடியவில்லை. அவன் சொல்லும் காரணங்களும் சரியாகத்தான் இருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

“அவ்வளவுதானா?? இதுக்காக வந்ததாகக் கூட இருக்கட்டும், ஆனால் மத்தபடி நம்ம ரெண்டு பேருக்குள்ள பேசுறதுக்கு எதுவுமே இல்லையா??” என்று ஆழ்ந்த குரலில் சற்றுச் சத்தமாகக் கேட்டான்.

‘அவன் என்ன கேட்க வருகிறான்??’ என்று அவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.

“இல்ல சார், இதுக்கு மேல என்ன பேசுறதுன்னு தெரியல?? நீங்க சொல்லிட்ட பிறகு, அதை நான் கேட்குறதும் தப்புதானே?? அன்னைக்கு நீங்க எனக்கு உதவி பண்ணலைன்னா இன்னைக்கு நான் இல்ல. திரும்பவும் எங்கேயாவது மூலையில போய் அடங்கி, யாரோவா இருந்திருப்பேன். அன்னைக்கு உங்களுக்கு நன்றிகூடச் சொல்லல. ரொம்ப ரொம்ப நன்றி. அன்னைக்குக் கோவமா போயிட்டீங்க, திரும்பவும் பேசலாம்னு நினைச்சேன். ஆனா உங்க கோபத்தைக் கிளற வேண்டாம்னு தோணுச்சு. ஆனா என் மனசுக்குள்ள ஒராயிரம் நன்றிகளைத் தினமும் சொல்லிட்டிருக்கேன்” என்றாள் நத்தாஷா.

“அவ்வளவுதானா??” திரும்பவும் அதே வார்த்தையைக் கேட்டான்.

அவள் எச்சிலை உள்கூட்டி விழுங்கினாள். ஆனால் பதில் சொல்லவில்லை.

“சரி போ” என்று கூறிவிட்டான்.

அவளும் நடக்க ஆரம்பித்துவிட்டாள். கதவைத் திறக்கச் சென்ற நேரத்தில் நின்று, அங்கிருந்தபடி திரும்பிப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்தபடி நின்றிருந்தான்.

“கடவுளை யாரும் நேர்ல பார்த்ததில்லை. ஆனா நான் பார்த்துட்டிருக்கேன் சார். எனக்குக் கடவுளா தெரியுற நீங்க, மத்தவங்களுக்கு வேறயா தெரிய வேண்டாம். லதாவோட குடும்பம் அவங்களோட சேலரியில தான் ரன் ஆகுது. அவங்க செஞ்ச தப்புக்குக் குடும்பத்தையே தண்டிக்க வேண்டாமே. ஆனா வேற யார்கிட்டயாவது ரெகமெண்ட் பண்ணலாமே??”

“நீங்க சொல்றது ரொம்பச் சரி, என் அப்பாவைப் போல, என்னைப் போல ஏமாறுற நிலையில இருக்கக் கூடாதுதான், ஆனா அதைவிட மோசமா ஏமாத்துற நிலையில இருக்கக் கூடாது. நம்மளால நிறைய பேர் வாழ்ந்தாங்கன்னு தான் இருக்கணும். நீங்க கண்ணுக்கே தெரியாமல் நிறைய பேரை வாழ வச்சுக்கிட்டிருக்கீங்க. துவண்டு போறவங்களை எல்லாம் தூக்கி விட்டுகிட்டிருக்கீங்க. கண்ணுக்குத் தெரிஞ்சு இவங்களைத் தள்ளிவிட வேண்டாம். நாம முன்னேறும்போது கால்ல மிதிபட்டு எறும்புகள் நிறைய சாகும். அதுக்குக்கூட எமதர்மன் நம்மகிட்ட கணக்கு கேட்பாராம். நீங்க என்னைப்பொறுத்தவரைக்கும் தெய்வம், தண்டிக்கக் கூடாது. என்னைத் தண்டிச்ச தெய்வத்தை நான் மறந்துட்டேன், உங்களைத் தான் அந்த ஸ்தானத்துல பார்க்குறேன்” என்றவள், என் பேச்சு முடிந்தது என்பது போலத் திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

‘நீ மட்டும்தான் பேச்சில் கவிழ்ப்பாயா?? நான் கூடக் கவிழ்ப்பேன்’ என்று பூடகமாக உரைத்துவிட்டுச் செல்கிறாள். அவள் சொன்ன தோரணையில், பேசிய வார்த்தைகளில் அவனுக்கு லதாவை மன்னிக்கக்கூடத் தோன்றியது.

 அதே சமயத்தில் அவள் பேச்சு அவனுக்கு நெகிழ்வை கொடுத்திருந்தது.

பியானோவிடம் சென்று அமர்ந்தவன், மீண்டும் விட்ட ராகத்தை அதில் இசைக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால், இதழ்களில் மெல்லிய புன்னகை. சிந்தனை முழுவதும் நத்தாஷாவின் மீது இருந்தது.

…….

அவன் பேச்சை ஆழமாக யோசித்துக் கொண்டே சென்றாள்.

‘தன்னைப் பேசும்போது ஒருமையில் பேசுபவன், எல்லோரிடத்திலும் பன்மையில் தான் பேசுகிறான். நான் கூறி அவன் மறுக்கக்கூடாது என்கிறான். இதையேதான் லதாவும் கூறினாள், நான் கூறினால் அவன் ஏற்பான் என்று. அதற்கு அர்த்தம் என்ன?? நான் யார்?? நான் கூறினால் அவன் ஏன் கேட்க வேண்டும்??’ என்று சிந்தித்தவளுக்கு எதுவும் பிடிப்படவில்லை.

அவன் ராகினியிடம், பிரீத்தியிடம், ஏன் மற்ற பாடகர்களிடம் சென்று பேசும்போது எப்போதும் மரியாதை கொடுத்துப் பன்மையில் பேசுபவன், தன்னிடம் மட்டும் ஒருமையில், உரிமையில் ஏன் பேசுகிறான்??? அன்று கூட ஏதோ சொன்னானே?? ‘எல்லோரின் பாதுகாப்பும் என் பொறுப்பு, ஆனால் நீ எல்லோரையும் போல அல்ல’ என்று. அதற்கு என்ன அர்த்தம்?? அவன் பார்வைக்கு என்ன அர்த்தம்?? அவன் பேச்சிற்கு என்ன அர்த்தம்?? தனக்காகப் பாதுகாப்புச் செய்ததற்கு என்ன அர்த்தம்??

இப்படிப் பல குழப்பங்கள் அவளை அன்று சூழ்ந்து கொண்டது. ஆனால், அந்தக் குழப்பங்களுக்கான தெளிவு அவளுக்குக் கிடைக்கவில்லை.

‘இப்படி எதையாவது சிந்தித்து உன் மனதை அலையவிடாதே’ என்று அவளை அவளே கண்டித்துக்கொண்டு அதைத் கடக்க முயன்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!