Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 28

“அக்கா..‌! ஒரே அதிசயமா இருக்கு..! ரெண்டு நாளா என்னென்னவோ நடக்குது.. எனக்கு இதை அனுபவிக்கிறதா வேண்டாமான்னு ஒன்னும் புரியல..!” தலைகால் புரியாத சந்தோஷத்துடன் தோள்களை ஏற்றி இறக்கி குதூகலித்த மீனாட்சியை வினோதமாக பார்த்தாள் லஷ்மி..!

“என்ன ஆச்சு உனக்கு..! பாட்டு பாடறதும் டான்ஸ் ஆடுறதுமா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு மட்டும் புரியுது..!” சமையலறையில் இருவரும் பேசிக் கொண்டிருக்க.. காய்கறி கூடையிலிருந்த கேரட்டை எடுத்து கழுவி ஒரு துண்டு கடித்தாள் லஷ்மி.

“பசங்க அவங்களாகவே வந்து கூடமாட உதவி செய்யறாங்க.. என் புருஷன் ரெண்டு நாளா குடிக்கல..! ஆபீஸ் வந்து பிக்கப் பண்ணிட்டு போறார். எரிஞ்சு விழல.. சண்டை போடல..! என்னக்கா நடக்குது.. அண்ணா அன்னைக்கு தனியா கூட்டிட்டு போயிட்டு ஏதாவது மந்திரிச்சு விட்டுட்டாரா என்ன..? பசங்களும் மாறி போயிருக்காங்க.. நீங்க ஏதாவது அட்வைஸ் பண்ணுனீங்களா..?”

“அதெல்லாம் விடு.. நீ சந்தோஷமா இருக்கியா..?” லஷ்மி அவள் கண்களை பார்த்தாள்.



Advertisement

லஷ்மியின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் மீனாட்சி..!

“இது இப்படியே தொடரனும்னு ஆசையா இருக்குக்கா..! மறுபடி வேதாளம் முருங்க மரம் ஏறிட்டா.. நான் என்ன பண்ணுவேன்..!” அவள் கண்களில் நீங்காத ஏக்கமும் கலக்கமும் தெரிந்தது..

“அதுக்கு நீயும் கொஞ்சம் முயற்சி பண்ணனும் மீனாட்சி.. குழந்தைங்க மேல எப்பவும் எரிஞ்சு விழாம அவங்களை உட்கார வச்சு ஸ்கூல்ல என்ன நடந்ததுன்னு கேளு.. பிள்ளைகளோட சிரிச்சு பேசி விளையாடு..! உன் டென்ஷனை அவங்க மேல காமிச்சா.. உன் பிரச்சனை அவங்களுக்கு புரியும்னு நினைக்கறியா..? இன்னும் வெறுப்பு தான் வரும்.”

Advertisement

மீனாட்சி தலை கவிழ்ந்தாள்.

Advertisement

“புருஷன் பொண்டாட்டி விஷயத்துல நான் தலையிடறதா தப்பா நினைக்க வேண்டாம். உன் ஹஸ்பண்ட் ஏதாவது கஷ்டம்னு வந்து உன்கிட்ட சொன்னா.. ரெண்டு பேருமா உட்கார்ந்து அதை பேசி சால்வ் பண்ணுங்க..! உன்னோட டென்ஷனை அவர் மேல ஏத்தாதே.. இதனால பிரச்சனை தீர போறதில்ல..!”

“புரியுதுக்கா..! இனி நானும் கோபத்தை விட்டுட்டு கொஞ்சம் நிதானமா நடக்க முயற்சி பண்றேன்.”

“முயற்சி எல்லாம் இல்ல உன் குழந்தைகளுக்காக இந்த குடும்பத்துக்காக நீ அதை செஞ்சுதான் ஆகணும்.! அவங்க இறங்கி வந்துட்டாங்க நீயும் உன்னை மாத்திக்கோ மீனாட்சி..!”

Advertisement

“செய்யறேன்க்கா..! குழந்தைகளுக்கு என் மேல இவ்வளவு பாசம் இருக்கும்ன்னு எதிர்பார்க்கல.. மனசெல்லாம் நிறைஞ்சு போயிருக்கு.. காபி குடிக்கறீங்களா..?”

“ம்ம்.. போடேன்..!” லஷ்மி சொன்னதும் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்தாள் மீனாட்சி.

விடுமுறை நாட்களில் வாத்சல்யன் வினோத்தை கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு அழைத்து சென்றான்.. சில சமயங்களில் வேணுவும் இவர்களோடு சேர்ந்து கொள்ள.. இவர்கள் மூன்று பேரின் ஞாயிற்றுக் கிழமைகளின் காலை வேலைகள் கிரிக்கெட் விளையாட்டிற்காக ஒதுக்கப்பட்டது.

வாத்சல்யனும்.. சந்தான லஷ்மியும் எதிர் வீட்டு குடும்பத்தோடு அளவுக்கதிகமாக இழைவதை மங்கையும் செல்வவிநாயகமும் வித்தியாசமாக உணர்ந்தாலும் வெளிப்படையாக எதுவும் கேட்டுக் கொள்வதில்லை..

“மனசு கஷ்டத்திலிருந்து வெளியே வர என்னமோ பண்ணிட்டு போறாங்க விடு..! தேவையில்லாம ஏதாவது கேள்வி கேட்டு அவங்களை நோகடிக்காத!” என்றார் செல்வ விநாயகம்.

ஆனால் புவனாவால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை..! நீருக்குள் பொத்தி வைத்த பூப்பந்து போல் அவள் வாய் திறக்கும் நேரமும் வந்தது.

அடிக்கடி நந்தினியையும் தீப்தியையும் அழைத்து வந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தாள் லஷ்மி..

இப்போதும் லஷ்மியிடம் தீப்தி பாராமுகந்தான்.. சாக்லேட் கொடுத்து பிள்ளையை தூக்கி போகும் ஒரு கடத்தல் காரியை போலத்தான் அவளை மருட்சியுடன் பார்க்கிறது சின்னது. கட்டாயப்படுத்தி தூக்கி விளையாட முயன்றால் நகத்தால் கீறி முகத்தில் அடித்து.. அவளிடமிருந்து திமிறி கொண்டு ஓடுவதில்.. லஷ்மியின் உடம்பை விட மனதுதான் அதிகமாக காயப்படுகிறது.

தீப்தி விலகிப் போக.. போக.. அவளை மகளாக அடைந்தே தீர வேண்டுமென்ற வைராக்கியமும் தெரியும் அதிகமாகிறது இவளிடம்..

“எங்கடி போக போற! என்னைக்கா இருந்தாலும் என்கிட்டதான் நீ வரணும்.. இந்த வயித்துலதான் வந்து பிறக்கணும்..!” என விலகிச் செல்லும் பிள்ளையிடம் சவால் விடுகிறாள்.

தற்போதைய தீப்தி மீதான பரிவும் .. அவளை இழக்கப் போகிறோமே என்ற குற்ற உணர்ச்சியும் இரக்கமும் மறைந்து.. வயிற்றில் வந்து பிறக்கப் போகும் புத்தம் புது குழந்தையை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறாள் அவள்.

பறந்தோடும் காலங்கள் மனிதர்களின் மனதை தலைகீழாக மாற்றி விடுகின்றன.

நந்தினி வரும்போது தீப்தியும் ஒட்டிக்கொண்டு வரும்..

அன்றும் லஷ்மியைத் தேடி மாடிக்கு ஏறின பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடும் ஆசையோடு வந்து நின்ற அரவிந்தன் மித்ராவை கண்டு.. இவர்களின் கண்களும் மின்னலாய் பூத்தன.

முதல் அரை மணி நேரம் குழந்தைகள் அமைதியாகத்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. நந்தினிக்கு இருந்த பக்குவம் மித்ராவுக்கும் அரவிந்தனுக்கும் இல்லை.

விளையாட்டு சண்டையாகி.. விளையாட்டில் கூட தோற்க விரும்பாத அரவிந்த்.. நந்தினி மீதான கோபத்தில் குதித்துக் கொண்டே பக்கத்தில் வந்த தீப்தியை அடித்து விட்டான்.

அடுத்தென்ன வீல்லென ஒரே அலறல். சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்தாள் சந்தான லஷ்மி..!

பிள்ளைகள் தன்னை தேடி வந்த விஷயமே அவளுக்கு தெரியாது..

வலது கண்ணை இளங்கையால் மூடிக்கொண்டு.. “இவன் என்னை அடிச்சுட்டான்..” என அரவிந்தை தீப்தி கைகாட்டியதும் வந்ததே ஆத்திரம்.

என் குழந்தையை எப்படி அடிக்கலாம் என்று கோபம்.. அவன் கையைப் பிடித்து தன் பக்கமாக இழுத்து.. “எதுக்குடா குழந்தையை அடிச்ச..?” என மிரட்டலான தொனியில் கேட்க.. காற்றை விட வேகமாக அங்கு வந்து சேர்ந்திருந்தாள் புவனா.

“அக்கா..! குழந்தையை ஏன் மிரட்டறீங்க..? முதல்ல கைய விடுங்க..!” என பிள்ளையை அவளிடமிருந்து விடுவித்தாள்.

“உன் பையன்.. எதுக்கு தீப்தியை அடிச்சான்னு கேளு..! கை நீட்டி அடிக்கிறது என்ன பழக்கம்..?”

“இந்த பிள்ளைங்களும் சும்மா இருந்திருக்காது.. இவங்க ஏதாவது பண்ணாம அவன் அடிச்சிருக்க மாட்டான்.”

“என்ன வேணாலும் பண்ணியிருக்கட்டும் பெரியவங்ககிட்ட சொல்லணும்.. சின்ன குழந்தையை கண்ணுல அடிச்சிருக்கான்.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா என்ன பண்றது..! பெண் பிள்ளைகளை கை நீட்டி அடிக்க கூடாதுன்னு உன் பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்து வளருன்னு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். நீதான் அவனை செல்லங்கொடுத்து கெடுக்கற..!” கடுங்கோவத்தில் சிவந்திருந்த அவள் கண்கள் அரவிந்தனை மட்டுமல்ல புவனாவையும் கூட மருட்டியது.

“அய்யோ..! பக்கத்து வீட்டு பிள்ளைங்க இங்கே ஏன் வந்து விளையாடனும்.. அப்படி என்ன அவங்க அக்கறை உங்களுக்கு..? என்னவோ நீங்க பெத்த குழந்தையாட்டம் அப்படியே துடிக்கிறீங்க..?”

இந்த முறை திடமாக நிமிர்ந்து நின்றாள் லஷ்மி..!

“ஆமா.. என் குழந்தைதான்..!” உரிமையாக சொல்லிவிட்டு இருவரையும் அழைத்துக் கொண்டு மாடியேறி சென்று விட.. வழக்கம்போல அழுவாள்.. முடங்குவாள், கலங்குவாள் என எதிர்பார்த்திருந்த புவனா லஷ்மியின் புதிய அவதாரத்தில் திறந்த வாய் மூடாமல் அவர்கள் போன திசையை பார்த்துக் கொண்டிருந்தாள்..!

வாத்சல்யன் தனது செல்வாக்கை பயன்படுத்தி வேணுவுக்கு லோன் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டான். இதோ அடுத்த சில வாரங்களிலேயே புத்தம் புது இன்னோவா அவர்கள் வீட்டு வாசலில் நிற்கிறது.

வாத்சல்யன் நினைத்திருந்தால் கார் வாங்குவதற்கான மொத்த தொகையை தன் கையிலிருந்து கடனாக கூட கொடுத்திருக்க முடியும். ஆனால் வெளியிலிருந்து கடன் வாங்கி கொடுத்தால்தான்.. உழைத்து கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற அக்கறை வரும்.. என்பதற்காக இந்த ஏற்பாடு.

புவனா எதிர்வீட்டு வாசலில் நிற்கும் புத்தம் புது கார் குறித்து வாத்சல்யன் உதவி இருப்பாரோ என்ற சந்தேகப் பட்டாள்.

அந்த குடும்பத்தின் பொருளாதார நிலை அவளுக்கும் லேசுமாசாக தெரியும்.. பழைய பைக்கை கூட ரிப்பேர் பண்ண வக்கில்லாதவர்கள் இந்த குடும்பத்தின் நெருங்கிய பழக்கத்திற்கு பிறகுதானே கார் வாங்கியிருக்கிறார்கள்.! ஆறு மாதத்திற்கு முன்பு தன் கணவன் தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட இலட்சக்கணக்கில் பணம் கேட்டபோது, இப்போது கையிருப்பு ஏதுமில்லை என கை விரித்த வாத்சல்யன் கொஞ்ச நாட்கள் மட்டுமே பழகின யாரோ ஒரு எதிர் வீட்டுக்காரருக்கு வலிய போய் உதவி செய்து கார் வாங்கி தந்திருப்பதாக புவனாவுக்கு வயித்தெரிச்சல்.

இந்த புகைச்சல் தாங்காமல் மாமியாரிடம் புலம்பித் தள்ள.. அவரோ.. “பாத்துப்பா.. இந்த காலத்துல யாரையும் நம்ப முடியல.. உதவி வாங்கற வரைக்கும் நல்லவங்களாத்தான் இருப்பாங்க.. அப்புறந்தான் அவங்க சுயரூபம் தெரியும்.! அண்ணந்தம்பிக்கு உதவி செஞ்சாலும் அது கடமைன்னு போயிடும். மத்தவங்களுக்கு எதுக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு உதவி செய்யணும்.! சூதானமா இரு” என சாடைமாடையாக மகனிடம் சொல்லிப் பார்த்தார்.

“நான் பாத்துக்கறேன்மா.. இனியும் ஏமாற மாட்டேன்.. மனுஷங்கள பத்தி இப்பதான் கொஞ்ச நாளா சரியா புரிஞ்சுகிட்டு வரேன்.!” குத்தலான வார்த்தையோடு பேச்சை முடித்து விட்டான் அவன்.

மங்கைக்கு ஏன்டா சொன்னோம் என ஆகிவிட்டது.

இதோ புது காருக்கு சந்தனம் குங்குமம் வைத்து ஆரத்தி காட்டி பூசணிக்காய் உடைத்து.. பூஜை முடித்தாயிற்று.!

கோவிலுக்கு போய் புது காருக்கும்.. குடும்பத்துக்கும் சேர்த்து ஒரு அர்ச்சனை பண்ணிவிட்டு அப்படியே ஊர் சுற்றி வரலாமென அனைவரும் சேர்ந்து புறப்பட்டு விட்டார்கள்.

வாத்சல்யனையும் லஷ்மியையும் அழைக்கத்தான் செய்தார்கள்.. “குடும்பமா போகும்போது நாங்க எதுக்கு..! சந்தோஷமா போயிட்டு வாங்க இன்னொரு நாள் எங்கேயாவது வெளியே போகலாம்..!” என நாசுக்காக மறுத்துவிட்டார்கள் அவர்கள்.

அவர்களின் கார் புறப்பட்ட நேரத்தில் துள்ளி குதித்து வீட்டுக்குள் ஓடி வந்தவளை பின்தொடர்ந்து மாடிப்படி ஏறினான் வாத்சா..!

ஓடி வந்து ஜன்னல் வழியே தெரிந்த இன்னும் புறப்படாமல் நின்றிருந்த காரின் மீது கண்களை பதித்தாள்.

காருக்குள் ஒட்டுமொத்த குடும்பமும் சிரித்துக் கொண்டிருப்பதை கண் குளிர பார்க்க முடிந்தது..

அவர்களின் மகிழ்ச்சி இவளையும் தொற்றிக் கொள்ள ஆனந்தமாக சிரித்தாள்..

“அவங்க சந்தோஷமா இருக்காங்க வாத்சா..!”

“அவங்க ஹாப்பி.. என் கண்ணமா ஹாப்பி..! அதனால நானும் ஹேப்பி..” பின்னிருந்து அவளை இடையோடு அணைத்துக் கொண்டு தோள்பட்டையில் முத்தமிட்டான் வாத்சல்யன். உதடுகளை விலக்காமல் அப்படியே வைத்திருக்க.. அவள் குலுங்கி சிரிப்பதை உணர முடிந்தது..

“அன்னிக்கு விட்ட கதையை இன்னைக்கு தொடரலாமா அம்மு..!” கிறங்கி தவித்த அவன் குரலில்.. கணவனுக்கான ஆசையை உணர்ந்து கொண்டாள் லஷ்மி..!

மௌனமே சம்மதமென இடையோடு தூக்கி ஒரு சுற்று சுற்றி மெத்தையில் இருவருமாக விழுந்தார்கள்.

ஏதோ ஒன்றை சாதித்து விட்ட திருப்தி.. மனமெங்கும் நிறைந்திருந்த சந்தோஷம். இருவரையும் கட்டிப்போட்டிருந்ததில்.. அந்த நேரத்தில் துணையின் அருகாமையை தேடி.. மோக வெள்ளத்தில் உணர்ச்சிகள் அடங்காமல் ஆர்ப்பரிக்கத் தொடங்கின.. கணவனும் மனைவியுமாக போட்டி போட்டு காதல் சங்கமத்தின் மூழ்கி போக.. ஒருவரை ஒருவர் மீண்டும் மீண்டும் நாடி.. இறுதியில் களைத்து.. அணைத்தபடி உறங்க தொடங்கினர்.

ஒரே போர்வைக்குள் மனைவியை நெஞ்சில் சாய்த்து கொண்டு சுகமான உறக்கத்தில் மூழ்கியிருந்த வாத்சல்யனின் செவிகளுக்குள் ஏதோ மெல்லிய சத்தம்.

கண்களை திறந்து பார்த்தான்.

“லஷ்மி..” தூக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டிருந்தாள்.

“சந்தா..!”

“நா..ம..” என்பதில் ஆரம்பித்து அடுத்த வார்த்தைகள் தெளிவாக புரியவில்லை..

“என்னடி சொல்ற..! ஒழுங்கா தூங்கு..!”

“நா..ம அவ..ங்க..ளுக்கு து..ரோ….கம் பண்..றோம்..”

தொடரும்.

2 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 28

  • Revathy Dhanda

    Intha bhuvana ella enna jenmangalo thirunthave thirunthathungae 😡lakshmi sariyana nose cut kutha,ennatha annan thambi ku senja kadamai ah poirum ah lakshmi vaatsha manasa purinjakama kayapaduthravangalukku avan panam mattum venumo suyanala pisasungae 😡😡 . intha lakshmi ipo thirumba enna da ipdi arambikkuthu 😱

    Reply
  • Krishnaveni

    புவனா உனக்கு வேணும் டி எங்க சாந்தா திருப்பி அடிக்க ஆரம்பிச்சுட்டா இனிமே ஓவரா பேசின வை இதைவிட அதிகமாக சாந்தா பேசுவா பாத்துக்க 😏😏😏
    வாத்து பையா இப்போ தான் புருஷனும் பொண்டாட்டியும் ஒழுங்கா பேச கத்துக்கிட்டீங்க மத்தவங்களுக்கு சனியான பதிலடி கொடுக்குறீங்க 💪🏼💪🏼💪🏼
    சாந்தா ரொம்ப பாவம் பா குற்ற உணர்ச்சியில் கஷ்டபடுறா 🤧🤧🤧

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!