Skip to content
Post Views: 116
விடியலைத் தொடங்கி வைத்தான் ஆதவன். இருவருக்குமே இன்று டப்பிங் இருந்ததால் நேரத்திற்குப் புறப்பட்டு வந்தனர்.
“மதியூரன், என்ன சாப்பிடுறீங்க?” என இவள் கேட்டிட, அவனோ,
“எ… எ… எதுவும் எ… எனக்குனு செ… செய்ய வே… வேண்டாம் துரா! உ… உ… உனக்கு நீ… நீ… நீயே பார்த்துக்கோ,” என்று முகம் பார்க்காமலே வெளியேறியவன், வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
அவனது இந்த அந்நியமான பேச்சும் ஒதுக்கமும் உள்ளுக்குள் வலித்தது. தனக்கு மட்டும் உணவு செய்து, பிடிக்காமலே உண்டுவிட்டு வெளியேறினாள்.
Advertisement
அவன் சீக்கிரமாகவே ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டான். இவள் நேரத்திற்கு வந்து அவனைத் தேட, மேனேஜரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அவர்கள் அருகே வந்து நின்றாள். அவளை வரவேற்ற மேனேஜர் ஏதோ வேலை என்று செல்ல, இவளோ மதியூரனிடம் திரும்பி, “சாப்பிட்டீங்களா யூரன்?” என்று கேட்டிட, “ம்ம்” என்றதோடு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
“யூரன்…” என்று ஏதோ பேச எத்தனிக்க, அதற்குள் மேனேஜர் அழைக்க, இருவருமே அவரவர் அறைக்குள் நுழைந்து, திரையில் ஓடிய காட்சிகளுக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
Advertisement
கதாநாயகன் நாயகியிடம் ஒதுக்கம் காண்பிப்பது போன்றதொரு காட்சி! நாயகிவ்ஒதுக்கத்திற்கு விளக்கம் கேட்கும் காட்சி… இருவரின் திரையிலும் அதுதான் ஓடியது. ஒரு நொடி கண்ணாடி வழியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
Advertisement
“ஆகாஷ்! ஏன் விலகி விலகிப் போறீங்க? நான் விலகிப் போனப்போ நெருங்கின நீங்க, இப்போ நான் நெருங்கி வந்ததும் தயங்குறது ஏன்? என்னோட வார்த்தைகள் உங்களைக் காயப்படுத்தியிருக்கும்னு எனக்குத் தெரியும். அதுக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்… ஆனா இப்படி விலகிப் போய் என்னைக் கொல்லாதீங்க!” அவள் உணர்வுப்பூர்வமாகப் பேசிவிட்டு அவனைப் பார்த்தாள்.
அவனோ, “உன்னை நெருங்க நினைச்சதற்குக் காரணம் காதல்னா, உன்னை விட்டு விலக நினைக்கிறதுக்குப் பின்னால இருக்கிறதும் இந்தக் காதல்தான் விழி! நீ என்னை பேசின வார்த்தைகள் எல்லாம், ரோஜாச் செடியைப் பறிக்கும்போது குத்துற முட்களா நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்போதான் புரியுது, தன்னோட ஆசைக்காக அந்த ரோஜாவை ஏன் பறிக்கணும்னு தோணுச்சு. அதனோட அழகே அது செடியில இருக்கிறதுதானே விழி?” என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.
அத்தோடு அந்தக் காட்சி முடிந்திருக்க, மீண்டும் ஒரு முறை பார்த்துக்கொண்டனர். அதன் பின் மதியம் வரை குரல் கொடுப்பதும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்வதுமாக, அன்று முடிக்க வேண்டிய காட்சிகளுக்குக் குரல் கொடுத்துவிட்டு இருவரும் வெளியேறிய நேரம்…
Advertisement
“ஏதாவது ஹோட்டல்ல சாப்பிடுவோமா யூரன்?” எனக் கேட்டாள்.
“வே… வேணாம் துரா! எ… எனக்கு நே… நேரமில்லை. எ… எனக்காக வீ… வீட்டுப் புரோக்கர் கா… காத்துட்டு இருக்கார். அ… அவர் இ… இரண்டு மூ… மூணு வீ… வீடு இ… இருக்கு, பார்க்க வா… வாங்கன்னு சொ… சொல்லி இருக்கார். வீ… வீட்டுக்கு வர லேட்டாகும்! நீ… நீ சா… சாப்பிட்டுத் தூங்கு துரா,” என்றவன் அவளது பதிலை எதிர்பாராது சென்றுவிட்டான்.
அவனது பேச்சு அவளது இதயத்தைக் கீறிச் சென்றது. மரகதம் மறைந்த பின் ஆறுதலாக ரம்யாவும் கதிரும் இருந்தாலும், அவர்கள் எந்நேரமும் உடன் இருப்பதில்லையே! ஒரு வாரமாக அவன் தானே உடன் இருந்தான்.
திக்கித் திக்கிப் பேசினாலும் தாயின் பிரிவு அவளை அதிகம் பாதிக்காமல் பார்த்துக்கொண்டான். அவனது சமையலும் சிரிப்பும் தாய் அருகே இருப்பது போலவே உணர்த்தின.
ஒரு வாரம் அவன் உடன் இருந்ததாலேயே முகம் தெளிந்து, தாயின் இழப்பிலிருந்து தேறி வந்திருந்தாள். அவன் மீது கோபம் இருந்தாலும் அவன் உடன் இருப்பது பாதுகாப்பாகவும் இதமாகவும் இருந்தது.
அவன் மீதிருக்கும் கோபம்தான் அவனிடம் பேச விடவில்லை. அவன் சொல்லும் காரணங்கள் மட்டும் அவளையோ அவளது அன்னையையோ மீட்டுக் கொடுத்துவிடுமா? அவனால் உண்டான காயத்தை அவனது விளக்கங்கள் சரிபடுத்திவிடுமா?
‘ஏதோ என் மேல் உண்டான பரிதாபத்தாலும் குற்ற உணர்வினாலும் மட்டுமே இங்கிருக்கிறான்’ என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லைதான். ஆனாலும் கதிர், ரம்யா, சித்தி, மதியூரன் ஆகிய நால்வருக்கும் தன்னால் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதென்று இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.
கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தால் சித்தியால் எந்த நல்ல காரியத்திற்கும் செல்ல முடியாதே!
உடன் பிறந்த சகோதரியைப் போலத் தன்னைப் பாதுகாத்து, தனக்காக வரன் வேண்டி அலைகிற ரம்யாவும் கதிரும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்க்க வேண்டுமே!
கோபம் இருந்தாலும் மதியூரன் அருகே இருக்கும்போது மனம் கட்டுப்பாட்டிலிருந்து நழுவத்தான் செய்கிறது. அவளுக்காக அவன் செய்யும் சிறு சிறு செயல்களும் அவன் மீது இன்னும் காதல் கொள்ளச் செய்கிறது. எவ்வளவு முயன்றும் கட்டுப்பாட்டை மீறி ‘அவன் வேண்டும்’ என்று அடம்பிடிக்கிற மனதை அடக்க, இதைவிட வேறு வழி தெரியவில்லை.
அவள் மனதில் பதிந்ததெல்லாம் அவனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்பதுதான். அவன் மீது காதல் கூடும் பொழுதெல்லாம் அவன் சொன்ன வார்த்தைகள் ஊசியாய்க் குத்தும்… காதலைத் தட்டி உள்ளே அழுத்தினாள். அவனது விருப்பப்படி ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ளட்டும்; இப்போது குற்ற உணர்வால் உடன் இருக்கிறான். அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், இந்தத் திருமணத்தைச் செய்து அவர்கள் கண்ணில் படாத இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் இந்த முடிவை எடுத்தாள்.
ஆனாலும் உள்ளுக்குள் வலித்தது, அதிகம் வலித்தது. அவன் வேண்டும் என்று மனம் அழுதது. வேண்டாம் என்று மறுத்தவனை மீண்டும் மீண்டும் கேட்கும் மனதிற்கு என்ன வார்த்தைகள் சொல்லிப் புரிய வைக்கப் போகிறாள் என்று தெரியவில்லை. அங்கிருந்து கிளம்பியவள் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றே தெரியாது. உடையைக் கூட மாற்றாமல் மெத்தையில் விழுந்தாள். கண்ணீரை வடித்துக்கொண்டு படுத்தவள், அழைப்பு மணி ஓசை கேட்டு விழித்திறந்தாள்.
விடாமல் அடித்துக்கொண்டிருக்க, கதவைத் திறந்தாள். ரம்யாதான் நின்றிருந்தாள்.
“என்ன அண்ணி, என்ன விஷயம்? ஏன் படபடப்பா இருக்கீங்க, என்னாச்சு?”
“மதி தம்பியோட அம்மா வந்து வாசல்ல நின்னு கத்திட்டு இருக்காங்க. தெருவுல இருக்கிற எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க! நீ வந்து உள்ள கூப்பிட்டு வச்சுப் பேசு,” என்றாள்.
“சரி,” என்றவள் பதற்றத்துடன் வெளியே வந்தாள்.
அவளைக் கண்டதுமே முகம் சுழித்தவர், “ஓ…! இந்த மூஞ்சிக்காகத்தான் நான் பார்த்த பொண்ணை வேணாம்னு சொல்லிட்டு இங்க வந்து தங்கியிருக்கானாக்கும்!” என்றிட, இவளுக்குக் கோபம் வந்து, “அம்மா…! இப்போ உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு இங்க வந்து கத்தி, தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க?”
“யாருடி தேவையில்லாம பேசுறா? என் பிள்ளை அழகா, கலரா இருக்கான்னு அவன்கிட்ட ஏதேதோ பேசி வளைச்சுப் போட்டு, அவனையும் அவன் சொத்தையும் ஆட்டையப் போடத்தானேடி அவனை வீட்டை விட்டு வரச் சொல்லி உன் வீட்டுல தங்க வச்சிருக்க? கல்யாணமே பண்ணிக்காம என் பையனோட ஒண்ணா இருக்கியே, வெட்கமா இல்லை உனக்கு! ச்சீ, தூ…” எனக் காறித் துப்ப, அங்கிருந்த அனைவரும் அவளையே பார்த்தனர்.
“இங்க பாருங்க, எதுவாக இருந்தாலும் உள்ள உட்கார்ந்து பேசலாம், உள்ள வாங்க,” என்றாள்.
“எனக்கும் எதையாவது கொடுத்து மயக்கிச் சொத்தை எழுதி வாங்கவா? ச்சீ, உன் முகத்தைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு! நீயெல்லாம் பொண்ணாடி? உன் முகத்துக்கு வரன் எதுவும் அமையாதுன்னு இப்படி அழகா, சொத்து நிறைய இருக்கிறவனை வளைச்சுப் போடுனு உன் ஆத்தாகாரி சொல்லிக் கொடுத்துட்டுச் செத்துப் போயிட்டாளா? என் மகனைத் திக்குவாயா இருக்கிறதுனால, அவனுக்கு உதவி செய்றது போல செஞ்சு அவனை வளைச்சுப் போட்டியேடி! என் புள்ளை அப்பாவிடி, அதான் உன் பேச்சுக்கு மயங்கி இங்க வந்து கிடக்கிறான். என் குடும்பத்தைப் பிரிச்சுட்டியே, நீ நல்லா இருப்பியா? நாசமாப் போவடி!”
“ஓ… என் புள்ளை என் புள்ளைன்னு சொல்றீங்க? எப்பலிருந்து அவர் உங்க புள்ளையானார்? சொத்துக்கு ஆசைப்பட்டு நான் மயக்கிட்டதா சொன்னீங்களே… நீங்க மட்டும் சொத்துக்கு ஆசைப்பட்டு உங்க மகனை உங்க அண்ணனுக்கு விற்க நினைக்கலையா? திக்குவாய்னு அவரை அசிங்கப்படுத்தலையா? வேலைக்குப் போகலைன்னு எப்படி அசிங்கப்படுத்திட்டு, இப்போ என்னமோ ‘என் புள்ளை’ன்னு வந்து வாய் கிழிய பேசுறீங்க! இப்பக்கூட நீங்க சொன்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்காம வீட்டை விட்டு வந்த கோபத்துலதானே பேசுறீங்க! ஒரு வாரமாச்சு இங்க வந்து, அப்போ வராத நீங்க இப்போ வந்து கத்துறீங்க, அதுவும் அவர் இல்லாத நேரத்துல! ஏன், அவர் இருக்கும்போது வர வேண்டியதுதானே? நான் இப்போ பேசினதெல்லாம் உங்க புள்ளை பேசிடக் கூடாதுன்னுதானே!
நீங்களெல்லாம் தாய்தானா? குறையா இருந்தாலும் அரவணைக்கிறவள்தான் தாய். நீங்க தாயே இல்லை, ஏன், மனுஷியே இல்லை! அவரை எந்த அளவுக்கு வார்த்தைகளால குத்திப் பேசியிருக்கீங்க! அப்போவெல்லாம் உங்களோடுதானே உங்க புள்ளை இருந்தார். அவரைப் போய் சொத்துக்காகவும், இப்போ உங்க மகளுக்காகவும் விற்கத்தானே நினைச்சீங்க? அது முடியலையேன்னு இங்க வந்து என்னை அவமானப்படுத்துறீங்களா? மரியாதையா இங்கிருந்து போயிடுங்க! இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது,” என்றாள்.
வீட்டில் நடந்ததை நேரில் பார்த்தது போல அப்படியே அவள் பேச, ஒரு கணம் ஆடித்தான் போனார் கற்பகம். சுற்றிப் பார்த்தார். அனைவரும் அவரையே கேவலமாகப் பார்ப்பது போல இருந்தது. எச்சிலை விழுங்கிக்கொண்டவர், இன்னும் தன் மேல் தவறு இல்லை என்பது போலக் காட்ட முனைந்தார்.
“ஐயோ! ஐயோ! வாய்கூசாம எப்படிடி உன்னால என் மேல் பழி போட முடியுது! நீ நல்லா இருப்பியா? உன் அம்மா மாதிரி நீயும் நோய் வந்துதாண்டி சாவ! என் மகன் இல்லைன்னு நீ உன் இஷ்டத்துக்குப் பேசுற வாயில கட்டை முளைக்க… என் மேல பழியைப் போட்டு நீ நல்லவளாகிடலாம்னு பார்க்கிறீயா? ஒழுங்கா என் புள்ளையை என் வீட்டுக்கு அனுப்பி வைக்கிற, இல்லை நடக்கிறதே வேற!” என மிரட்டி, மண்ணை வாரித் தூற்றிவிட்டுச் சென்றார்.
அனைவரும் அவளையே பார்த்து அவர்களுக்குள் கிசுகிசுவெனப் பேசிக்கொண்டனர்.
ரம்யா அவளை உள்ளே அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்கக் கொடுத்தாள். அதை வாங்கிப் பருகவே கைகள் நடுங்கின.
“மது! ஒண்ணுமில்லை, குடிடி.”
“இப்படி ஒருத்தி இங்க இருக்கிறதே தெரியாதபடி சத்தமில்லாம வாழ்ந்தவ அண்ணி நான். என்னைப்போய் எப்படி பேசிட்டாங்க பாருங்க! நான் என்ன பாவம் பண்ணேன்? ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனை? செத்துப்போனவங்களையும் இழுத்துப் பேசுறாங்களே, இவங்களுக்கு மனசாட்சியே இல்லையா? உண்மை என்னன்னு தெரிஞ்சும் அவங்க பேசுறதைப் பார்த்தீங்களா அண்ணி! அவங்க புள்ளையை நான் மயக்கிட்டேனாம்! எப்படியெல்லாம் வாய்கூசாம பேசுறாங்க? எல்லாம் என் தப்புதான். மதியூரனை வீட்டுல சேர்த்ததுதான் தப்பு. அப்பவே அவரைச் சேர்க்காம விட்டிருக்கணும், என்னோட தப்புதான். அதுக்குத்தான் எல்லாரும் முன்னாடியும் அனுபவிக்கிறேன்…!” எனத் தலையில் அடித்து அழ,
“அவங்க அம்மா பேசினதுக்கு மதி தம்பி என்ன பண்ணுவான் சொல்லு? அவங்க வந்து பேசுவாங்கன்னு அந்தத் தம்பிக்குத் தெரியுமா? ஒரு நாள் அவங்க உன்னைப்பேசினதுக்கே இவ்வளவு அழுகுறயே… தினமும் எவ்வளவு ஏச்சுகளும் பேச்சுகளும் வாங்கின மதி தம்பியை நினைச்சுப் பாரு! நீ இங்க ஆதரவு தரலையின்னா யார் தருவா?”
“எதுக்கு ஆதரவு தரணும்? என்னை வேணாம்னு மறுத்தவர், பணம் காசு கொஞ்சம் பார்த்ததும் எங்களைத் துச்சமா, தொந்தரவா நினைச்சவரை மறுபடியும் பாவம் பார்த்து வீட்டுல சேர்த்ததுக்குத்தான் இந்த அவமானத்தையும் அசிங்கத்தையும் கண்டேன். இனி அவன் இங்க இருக்கக் கூடாது, இருக்கவே வேணாம். போதும் சாமி நான் பட்டதெல்லாம்!” என்று அவள் பாட்டிற்குப் புலம்பிட, ரம்யாவிற்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘பேசாமல் உண்மையைச் சொல்லிவிடலாம்’ என்று எண்ணும்போதே அங்கு வந்து சேர்ந்தான் மதியூரன்.
உள்ளே வந்தவன், மதுராவின் கோலத்தைக் கண்டு பதறியபடி, “எ… என்னாச்சு துரா? ஏ… ஏன் இ… இப்படி இ… இருக்க? அ… அக்கா, துராவுக்கு எ… என்னாச்சு?”
“இன்னும் என்ன ஆகணும் யூரன் எனக்கு? சொல்லுங்க, இன்னும் என்ன ஆகணும்? செத்துப் போயிருந்தா சந்தோஷப்பட்டிருப்பீங்களா?” எனக் காளியாகக் கத்தினாள்.
“ஏ… ஏன் இ… இப்படிப் பே… பேசுற? அ… அப்படி எ… என்ன த… தப்பு ப… பண்ணினேன் நான்?”
“நீங்க தப்பு பண்ணல, நான் தான் தப்பு பண்ணிட்டேன். உங்களைப் பார்த்தது தப்பு, பேசினது தப்பு, உங்களோடு பழகினது தப்பு, காதலிச்சது தப்பு! என்னை வேணாம்னு சொன்னதுக்கு அப்புறமும் உங்களை வீட்ல சேர்த்து இருக்கேனே, அதுவும் தப்பு! எல்லாமே நான் தான் பண்ணினேன்… அதுனாலதான் அனுபவிக்கிறேன், போதுமா?” எனத் தொண்டை கிழியக் கத்தினாள்.
“அ… அக்கா! எ… எனக்குச் ச… சத்தியமா ஒ… ஒண்ணும் பு… புரியல? எ… என்னக்கா பி… பிரச்சினை?” என ரம்யாவிடம் கேட்க, அவளும் நடந்ததைச் சொல்ல, அவன் முகம் இறுக்கமடைந்தது.
“தயவுசெய்து இங்கிருந்து போயிருங்க யூரன்! இங்கிருந்து போயிடுங்க! ப்ளீஸ்… இதுக்கு மேலே அவமானப்பட ஒண்ணுமில்லை,” என்று கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டாள்.
அவனோ விரக்தியில் சிரிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஒ… ஒரு நாள்… ஒ… ஒரு நாள் பே… பேசினதுக்கே, ‘எ… என்னை விட்டுப் போ… போயிடுங்க யூரன், எ… என்னால இ… இதைக் கே… கேட்க மு… முடியல, அ… அசிங்கமா இ… இருக்கு’ன்னு சொ… சொல்றியே… உ… உன் கா… காதலை ஏ… ஏத்துட்டு, உ… உன்னைக் க… கல்யாணம் ப…ண்ணி வீ… வீட்டுக்குக் கூ… கூட்டிட்டுப் போ… போயிருந்தால், தி… தினம் தி… தினம் அ… அவங்க கொ… கொடுமையை உ… உன்னால அ… அனுபவிக்க முடியுமா துரா?” எனக் கேட்டதுமே அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“இ… இது மா… மாதிரி தினமும் நீ… ந… நரகத்தை அ… அனுபவிக்கக் கூ… கூடாதுன்னுதான், எ… என் கா… காதலையும் எ… எனக்குள்ள பொ… பொதைச்சுக்கிட்டேன். நீ என் மேல் கா… காதலையும் மீறி கோ… கோபமா, வெ… வெறுப்பா இருக்கணும்னுதான், ‘அ… அழகான ம… மனைவி வே… வேணும், எ… என்னைத்தொ… தொந்தரவு ப… பண்ணாதே’ன்னு அ… அன்னைக்கு போ… போன்ல கத்தினதும் அ… அதுக்காகத்தான். உ… உன்கிட்ட அ… அப்படிப் பே… பேசினேன். ஆ… ஆனா அப்படிப் பே… பேசிட்டு ஒ… ஒவ்வொரு நொ… நொடி செ… செத்து பி… பிழைச்சேன், தெ… தெரியுமாடி உனக்கு… நரகம்!” என வேதனையோடு சொல்பவனை இமை மூடாமல் பார்த்தாள். எச்சிலைப் போலத் துக்கத்தையும் விழுங்கினான்.
“நீ… நீ.. எ… என் வாழ்க்கையவே மா.. மாற்றின தே… தேவதை! உ… உன் மேலே எ… எனக்கு அ…அளவுகடந்த காதல். எ… என்னோட சிறு சிறு வெ… வெற்றிக்கு பி… பின்னாடி நீ இ… இருக்கிறது போல, எ.. எப்பவும் நீ எ… என்னோட இ… இருக்கணும்னு எ… எண்ணமெல்லாம் தோணும். த…தனிமையில இ… இருக்கிறவனுக்குக் கி.. கிடைக்கிற பொ… பொம்மை போ… போலத்தான் எ..எனக்கு நீ கிடைச்ச! என் அப்பாக்கு அ… அடுத்து எ… எனக்கு ந… நல்லது செ… செய்ய நி… நினைச்சது நீ! யா… யாருன்னு தெ… தெரியாத எ… எனக்காக எ… எவ்வளவு செ…செஞ்ச! இ.. இப்படியே எ…எப்பவும் நீ எ… என்னோட இ… இருக்கணும்னு தோ… தோணுச்சு! உ… உன் மேலே எ…எனக்குக் காதல் வ… வந்துச்சு. ஆ… ஆனா, எ..எங்க நீ… நீயும் ‘ந… நமக்குள்ள ந… நட்புதான் இ… இருக்கு’ன்னு சொ… சொல்லிடுவியோன்ற ப… பயத்துல உ… உன்கிட்ட சொ… சொல்லலை.
ஆனா ! நீ சொ… சொல்லும்போது நா… நான் அ… அந்த இ…இடத்துல இ… இல்லையே! வி… விண்ணையும் தா… தாண்டிப் போ… போயிட்டேன். அ… அப்பவே எ..என் கா… காதலைச் சொ… சொல்லணும்னு நி… நினைச்சபோதுதான் எ… என் த… தங்கச்சிகிட்டயிருந்து போ… போன் வந்தது. அவசர அவசரமாப் போ… போனேன்…
அ… அன்னைக்கு எ… என்ன ந… நடந்தது தெ… தெரியுமா?” எனக் கேட்டவன், ஒரு நொடி நிறுத்திவிட்டு அன்று நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.
மதுராவிடம் சொல்லிக்கொண்டு அவசர அவசரமாக வீடு வந்து சேர்ந்தான் மதியூரன்.
அங்கே காளியாக நடுக் கூடத்தில் அமர்ந்திருந்தார் கற்பகம்.
“எ…என்ன? எ…என்னாச்சு? எ…எதுக்கு இ.. இப்படி அவசர அவசரமா போ… போன் ப… பண்ணி வ… வரச் சொன்ன?” எனக் கடுப்பாகத் தங்கையிடம் கேட்டான்.
“என்னைக் கேட்டா! அம்மாவையே கேளு. அவர்தான் போன் போட்டு ‘உன் அண்ணனை வரச் சொல்லு’ன்னு சொன்னார், வரச் சொன்னேன்… எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைப்பா,” என்று அங்கிருந்து அறைக்குள் சென்றுவிட, அவனோ தாயைப் பார்த்தான். “எதுக்கு இப்படி இருக்கீங்க? என்ன பிரச்சினை உங்களுக்கு?”
“ஏன்டா கேட்க மாட்ட? உன்னால என் அண்ணன்கிட்ட அவமானப்பட்டு வந்ததுதான் மிச்சம்!”
“அ…அவர் எ…என்ன உ… உங்களை அ… அ… அவமானப்படுத்தினார்? மு… முதல்ல நீ… நீ.. நீங்க எ… எதுக்கு அ.. அங்க போறீங்க? நா… நான் தான் எ… எனக்கு அ… அவளைக் க… கல்யாணம் ப… பண்ணிக்க இ… இஷ்டமில்லைன்னு சொ.. சொன்னேனே! அ… அதையும் மீ… மீறிப் போய் அ… அவமானப்பட்டு வ… வந்தா நா… நான் எ… என்ன பண்ண முடியும்?”
“வாயை மூடுடா! உனக்காகத்தான் பேசப் போனேன். நீ நல்லா இருக்கணும், ராஜாவா இருக்கணும்னுதானே அண்ணன்கிட்ட பேசப் போனேன்? நீ சரின்னு சொல்லியிருந்தால், இந்நேரம் அவளோட சேர்ந்து சொத்தெல்லாம் உன் பெயருக்கு வந்திருக்கும்… ராஜாவா எல்லாரையும் வேலை ஏவிக்கிட்டு இருந்திருப்ப! இந்த பிச்சைக் காசுக்கு வேலைக்குப் போகணும்னு அவசியம் இருந்திருக்காது.”
“அ… அப்படியே உ… உன் அ… அண்ணன் ம… மவளுக்கும் அ..அவ காதலனுக்கும் வி… வி… விளக்கு பி… பிடிச்சு நி… நிக்கணும்… அ… அதையும் சே…சேர்த்துச் சொ… சொல்லேன்,” என்றதும் அவர் திணறிப் போனார். அவருக்கும் அவளைப் பற்றி அனைத்தும் தெரியும்தான். இருந்தாலும் சொத்தோடு வரும் மகாலட்சுமியை எப்படி விட முடியும்? மகனின் வாழ்க்கையை விடச் சொத்தும் பணமும்தான் முக்கியமாகப் பட்டது அந்தத் தாய்க்கு.
“கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வேணா இருக்கட்டும். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் உன் சாமர்த்தியத்துல அவளை உன் பக்கம் இழுக்கிறது உன் கையிலதான் இருக்கு,” என்றதுமே நெஞ்சே வெடித்தது அவனுக்கு.
“அ… அப்போ உ… உங்களுக்கு எ… எல்லாம் தெ… தெரிஞ்சிருக்கு… தெரிஞ்சும் எ… என் வா… வாழ்க்கையைப் ப… பத்திக் க.. கவலைப்படாம, சொத்து பணம் முக்கியம்னு அ… அவளைக் க… கல்யாணம் ப… பண்ணிக்கச் சொ… சொல்லி டா… டார்ச்சர் பண்ணியிருக்கீங்க! ச்சீ… நீ.. நீங்களாம் ஒ.. ஒரு அம்மாவா?!! உ… உங்களைப் பா… பார்க்கவே வெ… வெட்கமா இருக்கு,” என்று முகத்தைத் திருப்பினான்.
அதில் கொதித்துப் போனவர், ” இன்னொருத்தன் கூட இருந்துட்டு, புள்ளையை வாங்கி அழிச்சுட்டு வந்தா என்ன? இதெல்லாம் இப்போ சகஜமாகிட்டு இருக்கு! இதைப் போய் பெருசா சொல்லிட்டு இருக்க! பணம்தான் முக்கியம்… இவ்வளவு நடந்தது ஊருக்கே தெரிஞ்சிருந்தும், அவளை இன்னொருத்தன் கட்டிக்கச் சம்மதிச்சிருக்கான். அந்தச் சமத்து உனக்கு இருக்கா? இந்நேரம் நீ சம்மதிச்சிருந்தா நம்ம நிலைமையே மாறியிருக்கும்… உன்னோட சேர்ந்து நாங்களும் நல்லா இருந்திருப்போம்… இப்போ இன்னொருத்தன் அந்த வாழ்க்கையைத் தட்டிட்டுப் போயிட்டான், இப்போ உனக்குச் சந்தோஷம்தானே!”
“ஏ…ஏன்மா எ…எ ப்பவும் கா.. காசு, ப… பணம், சொத்துன்னு அ… அலையிறீங்க? அ… அதைவிட உ…உங்க மகனோட ம… மனசும் வா…வாழ்க்கையும் மு… முக்கியம் இ… இல்லையா? உ… உங்க பு… புள்ளை ச… சந்தோஷமா வா… வாழணும்னு உ… உங்களுக்கு ஆ.. ஆசையே இ… இல்லையா?”
“பணம் இருந்தா அதெல்லாம் தானா வந்திடும்டா.”
தலையில் கை வைத்து நின்றான். அவரிடம் பேசி ஜெயிக்க அவனால் முடியவில்லை…
அறைக்குள் செல்ல நகர்ந்தவனை நிறுத்தியவர், “இந்தச் சம்பந்தம்தான் போச்சு! புரோக்கர்கிட்ட சொல்லி உனக்குப் பொண்ணு பார்க்கச் சொல்லியிருக்கேன், அதுவும் பெரிய இடமா! அப்படி அமைஞ்சா, இது மாதிரி ‘வேணாம், அது, இது’ன்னு பேசின, நானே உன்னை வெட்டிப் போட்டுடுவேன்,” என்று மிரட்ட,
“மு… முடியாதுமா! உ… உங்க இ… இஷ்டத்துக்கு எ… என்னால க… கல்யாணம் ப… பண்ணிக்க மு… முடியாது. எ… என் ம… மனசுக்கு பி… பிடிச்ச பொ… பொண்ணைத்தான் க… கல்யாணம் ப… பண்ணிப்பேன். அ… அவகிட்ட ஒ… ஒத்தப் பைசா வா… வாங்காம க… கல்யாணம் பண்ணுவேன்,” என்றான் தீர்க்கமாக.
அவனது பதிலால் அதிர்ந்து போனவர், “ஓ… அப்படி எந்த மட்டமான அன்னக்காவடியையாவது கல்யாணம் பண்ணிட்டு வந்தா, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். தினமும் அவளைச் சித்திரவதை செஞ்சு உங்களை வாழ விடாமல் செய்வேன்… என்னை விட்டுத் தனியா போகணும்னு நினைச்சாலும், அங்கேயும் வந்து உங்க நிம்மதியைக் கெடுப்பேன்… நீ ‘வேணாம்’னு சொல்லிட்டுப் போற அளவுக்கு அவளைக் கொடுமைப்படுத்திச் சாகடிப்பேன்…!”
“நீ… நீயெல்லாம் தா… தா…தாய்தானா? பெ… பெ.. பெத்த பி.. பிள்ளையோட வா… வாழ்க்கையை அ.. அழிக்க நினைக்கிற தா… தாயை இ… இங்கதான் பா… பார்க்கிறேன்.”
“நான் ஏன்டா உன் வாழ்க்கையை அழிக்கப் போறேன்? நீ நல்லா இருக்கணும்னுதானே நான் நினைக்கிறேன். வசதியான பொண்ணா வந்தா எல்லாரும் நல்லாத்தானே இருப்போம். அன்னக்காவடியைக் கூட்டிட்டு வந்து என்னத்தை அனுபவிக்கச் சொல்ற?”
“மு… முடியாது, எ… என் வாழ்க்கையை எ… என் இஷ்டப்படிதான் வா… வாழ்வேன்.”
“நீ எப்படி வாழ்வ? உனக்குக் கழுத்தை நீட்டுறவ எப்படி உன்னோட நிம்மதியா வாழ்றான்னு நானும் பார்க்கிறேன்டா. பேச்சைக் கேட்கலைன்னா என் மகன் வாழ்க்கை நாசமாகப் போனாலும் பரவாயில்லை, உன்னை அவளோட நிம்மதியா வாழ விடமாட்டேன்டா,” என்று ஆக்ரோஷமாகக் கத்திவிட்டுச் செல்ல, உள்ளுக்குள் நொடிந்து போனான் மதியூரன்.
error: Content is protected !!