ரீங்காரம் – 7.1
வாகனத்தில் ஏறி அமர்ந்த வீராந்தங்கன் தன் மனைவி அன்பரசியை திரும்பி பார்த்து, “சீட் பெல்ட் போட தெரியுமா தெரியாதா?” என்றான்.
“வண்டிய சரியா ஓட்டுனா எதுக்கு உயிர் மேல பயம் வரணும்” இவளும் இடக்காக பதில் கூற, “தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தான?” கேலியாக பார்த்தவன் தன்னுடைய முழுக்கை சட்டையை மணிக்கட்டு வரை முடித்துவிட்டு அவளை நோக்கி நீண்ட கையில் பட்டென தட்டினாள்.
“அது கூட தெரியாத மக்கா இருக்கமாட்டேன். படம் பாத்துருக்கேன்” என்றவள் சிரமமே இல்லாமல் அதனை போட்டு நிமிர அவளை பார்த்தவன் வாகனத்தை உயிர்பித்தான்.
நேராக வாகனம் நின்றது ஒரு உணவகத்தில். இவளுக்கு கோவமாக தான் வந்தது.
Advertisement
‘இப்போ தானே சாப்பிட்டார், அதுக்குள்ள என்னவாம். நான் இறங்க மாட்டேன்’ என்கிற அடத்தோடு உள்ளேயே இருக்க அவள் பக்கம் வந்து வெளியே வருமாறு சைகை செய்தான்.
‘என்ன பேச்சு வராதா? அது என்ன சைகை?’ நா வரை வந்த வார்த்தை அதற்கு மேல் வரவில்லை, இவனிடம் தான் கோவப்பட என்ன உரிமை உள்ளதென்கிற கோவம்.
அடமாக அமர்ந்திருந்தாள்.
Advertisement
“வா வெளிய” என்றான் சாந்தமான குரலில்.
Advertisement
இவள் நகராமல் இருக்க கதவை திறந்து அவள் கையை பிடிக்க, “என்னங்க கையெல்லாம் பிடிக்கிறிங்க” ஒரு வேகத்தில் அவள் சற்று சத்தமிட்டிருக்க அவன் அசரவில்லை, அவள் தான் அவனை கூட்டம் தவறாக எண்ணியிருக்குமோ என அஞ்சி சுற்றம் பார்த்து அவன் விழி நோக்கி, “சாரி” என்றாள் வேகமாக.
அவளது சத்தத்தில் ஓரிருவர் போகிற போக்கில் இவர்களை ஒரு நொடி நோக்கி பின் நடக்க சங்கடமான நிலை தான்.
“போலாமா?” என்றான் மீண்டும் அவனே. அவனின் அந்த உதாசீனத்திற்காகவே அவள் அவனோடு சென்றாள்.
Advertisement
உள்ளே வந்ததுமே அவளையே அவளுக்கு தேவையானதை வாங்க வைத்துவிட்டான். உணவை முடித்து வீட்டிற்கு செல்வான் என பார்த்திருக்க வாகனம் வேறு திசைக்கு சென்றது.
“பாட்டி உங்ககிட்ட ஏதாவது சொன்னாங்களா?”
“என்ன சொன்னாங்க?” அவள் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டான்.
“அதை தான் கேக்குறேன். எதுக்கு இந்த லஞ்ச், ட்ராவல், கார் டிரைவிங்? உங்களோட… ப்ச் என்னோட புருஷன் கூட நான் போற முதல் டிரைவ் இப்டி வெறுமையா இருக்குறது எனக்கு பிடிக்கலங்க” என்றவளுக்கு மனம் பிசைந்தது.
“என்ன மிஸ் ஆகுது?” கேள்வி கேட்டவனின் நிதானம் இவளை நிதானமிழக்க செய்தது.
தன்னை முறைத்து பார்த்தவளிடம் திரும்பி புருவத்தை உயர்த்தி அவன் கேட்டதில் சட்டென முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
வீராந்தகனின் அந்த மௌன கேள்வி அவளை என்னென்னவோ செய்தது, கீழ் உதட்டை கடித்து கையிலிருந்த கைக்குட்டையை முடிந்த அளவு கசக்கினாள்.
“படிக்க பிடிக்குமா?”
“அன்னைக்கே சொன்னேனே என்னோட பதிலை”
“அன்னைக்கு தாத்தா கேக்க சொன்னார், இன்னைக்கு நான் கேக்குறேன். ஆளுங்கள பொருத்தும் நம்மளோட பதில்கள் மாறும்” இப்பொழுது நீ பதில் கூறு என நின்றது அவன் வார்த்தைகள்.
பொய்யும் உரைக்க முடியவில்லை. அவளுக்கு படிப்பு மிகவும் பிடித்தமான ஒன்று.
இது தான் என என்றும் நினைத்தது இல்லை, கையில் சிறு துண்டு காகிதம் கிடைத்தாலும் பிடித்துவிடும் ரகம்.
அவளது அமைதியின் அவனுக்கு வந்த சிரிப்பும் இதழ்களுக்குள் மறைந்து போனது. அவளது எண்ணத்தை அறிவதற்காக தான் முக்கியமாக அழைத்து வந்ததே.
தொலைதூர கல்வியில் அவளை படிக்க வைக்கும் முடிவிற்கு வந்திருந்தான். வந்த வேலை கச்சிதமாக முடிந்திருக்க ஒரு பெரிய துணிக்கடையில் அமைதியாக நின்றே அவளுக்கு தேவையானதை வாங்க வைத்திருந்தான்.
வீட்டிற்கு வந்து அன்பரசிக்கு இறங்க பெரும் தயக்கம் மனதில் தோன்றிய கேள்விகள் அவளை மேலும் நகரவிடவில்லை.
“கேளு” என்றான் அவனே.
“என்னாச்சு உங்களுக்கு?”
“என்ன ஆகணும்?”
“இப்டி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா நான் என்னனு நினைக்க?”
“என்ன வேணாலும் நினைச்சுக்கோ”
நெற்றியை நீவிக்கொண்டாள், “ரொம்ப குழப்புறீங்க. நிறைய யோசிக்க வைக்கிறிங்க. சுத்தி யாரும் இல்லனாலும் எதுக்கு இவ்ளோ கேர்? நடிக்கிற மாதிரியும் இல்ல, அக்கறை காட்டுற மாதிரியும் இல்லை. கடமைக்கு செய்ற மாதிரியும் இல்ல. அத்தைங்க பேசுனதை கேட்டீங்க தான? அதுக்கு காம்பன்சேஷன் பண்ண நினைக்கிறிங்களா?”
“வேற குவஸ்டின்ஸ்?” அவன் கேட்க இவள் தலையை ஆட்டி அதிருப்தியை காட்டினாள்.
“உன் குவஸ்டின்ஸ்க்கும் மேல எனக்கு இருக்கு, என்னோட ஆக்ஷன்ஸ்க்கு பதிலும் என்கிட்ட இப்போ இல்ல. தோணுது செய்றேன். இதுக்கும் மேலயும் செய்வேன்” சட்டையில் மாட்டியிருந்த கருப்பு கண்ணாடியை எடுத்து அணிந்தவன் கிளம்ப தயாராக,
“நீங்க எடுக்க வந்ததை எடுத்துட்டீங்களா?” அவனை நினைவூட்ட இவள் கேட்ட கேள்வியில் தான் அதுவே நினைவிற்கு வந்தது.
“மறந்துட்டேன், ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல ஒரு பென்டிரைவ் வச்சிருக்கேன்…”
“சாரி என்னால எடுத்துட்டு வர முடியாது. உங்க திங்ஸ் அப்றம் மாறிருக்குன்னு அஞ்சு நிமிஷம் குறுகுறுன்னு பாத்துட்டே இருப்பிங்க” வேண்டும் என்றால் வந்து எடுத்துக்கொள் என அவள் நகர்ந்திருக்க வீராந்தகன் பார்வை அவளை விட்டு அகலவில்லை.
*******
“இல்ல சக்தி எனக்கு இது திருப்தியா இல்ல, டைமிங் சரியில்ல ம்மா” தான் கொடுத்த ஒலியினை கேட்டு அந்த மூத்த சவுண்ட் என்ஜினீயர் முகத்தில் வந்து போன பாவனையில் அவ்விடத்தில் நிற்கவே சக்திக்கு அவமானமாக இருந்தது.
“என்ன மிஸ்டேக்ஸ் இருக்குன்னு சொன்னிங்கன்னா…”
“எதுவுமே சரியில்ல சக்தி, உனக்கு வேலை பாக்குற எண்ணம் இல்லனா வீட்டுக்கு போய்ட்டு வா. ஒரு சீக்வன்ஸ் உன் கைல ரெண்டு நாளா இருக்கு. ப்ரோடக்ஷன் யூனிட்க்கு என்னால பதில் சொல்ல முடியல” என்றார் அவரும் பொறுமையாக தான்.
“இல்ல சார், இன்னைக்கு முடிச்சிடுவேன்” என்றவளுக்கு கண்ணீர் ஆறாய் பெரியது. சிரமப்பட்டு அடக்கி நின்றாள்.
“ம்ம்” அவளை பார்த்து கூறவும் வேகமாக நகரப்போனவளை, “அப்றம் சக்தி…” அவள் நின்று, “சார்?” என கேட்கவும்,
“கல்யாணம் முடிவாகிருச்சாமே… ரொம்ப சந்தோசம்” அவரது இதழ்கள் சிரித்தாலும் கண்கள் காட்டிய அந்த எகத்தாளம் அவருக்கு நன்றி கூட கூற விடவில்லை. திருமண கனவில் மிதக்கிறாயோ, வீட்டிற்கு சென்று கனவு கான் என கூறியது அந்த சிரிப்பு.
இன்று நேற்று அல்ல, அவள் சென்னை வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியது. இந்த ஒரு வார நாட்களில் அவளிடம் நிதானம் சுத்தமாக தப்பியிருப்பது அவளுக்கே அப்பட்டமாக தெரிந்தது.
தன்னுடைய இருக்கைக்கு வந்தவள் கண்ணில்பட்ட தன்னுடைய அத்தனை பொருட்களையும் அள்ளி பையில் போட்டு ஸ்டூடியோவை விட்டு வெளியேறியிருந்தாள். அவளுக்காக வளமை மாறாமல் எந்நேரமும் காத்திருக்கும் அவர்களது வாகனத்தை முற்றிலும் தவிர்த்து விறுவிறுவென நடந்தவள் இரண்டு வீதி தள்ளியிருக்கும் முருகன் கோவில் ஒன்றிற்கு வந்து அமர்ந்தாள்.
கைகள் தன்னை போல் தன்னுடைய கைபேசியை எடுத்து தமிழ்செல்வன் எண்ணிற்கு அழைத்தது. அழைப்பு சென்றுக்கொண்டே இருக்க, அழைப்பை தவறவிடும் நேரத்தில் டிங் என்னும் சத்தத்தோடு அந்த பக்கம் அழைப்பை ஏற்றதற்கான சத்தம்.
நீண்ட நேரம் மூச்சிற்கு சிரமப்பட்டு சீரானது போல் நெஞ்சில் பாரம் இறங்கியிருந்தது, “செல்வா நீ… என…” அழுதுவிடும் நிலை தான் அவளுக்கு.
“சக்தி கேக்குதா ம்மா?” சத்தமாக கத்தி சுசிகரன் கேட்க, இவளுக்கு பேச்சே வரவில்லை.
“தமிழு ஷூட்டிங் பண்ணிட்டு இருக்கான்ம்மா. எதுவும் அவசரமா?” நிறுத்தி வைத்திருந்த கண்ணீர் மடமடவென கன்னத்தை நனைத்தது.
பதில் கூறாமல் தலையை இல்லை என ஆட்டியவள் இணைப்பை துண்டித்து கண் மூடி பின்னிருந்த தூணில் சாய்ந்துக்கொண்டாள். கண்களை மூடவும் இன்னும் கண்ணீர் வர, புறங்கை வைத்து அதனை துடைப்பதற்குள்ளே கன்னம் நனைந்து போனது. இது தான் அவளது பல நாட்கள் வழக்கம்.
என்ன, இன்று அதிகப்படியாக கண்ணீர் சிந்தும் நிலை. அன்று படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பும் பொழுது வழக்கமாய் வந்து நின்று வழியனுப்பும் தமிழ்ச்செல்வனை தேடி அவன் வராததால் அடைந்த ஏமாற்றம், அதன் பிறகு அழைப்பையே ஏற்காமல் கன்னாமூச்சி ஆட்டம் காட்டிய தமிழ்ச்செல்வனின் செயலில் இதயம் அடைந்த வேதனை என பெண்ணவளை மொத்தமாய் நிதானமிழக்க செய்திருந்தது.
தமிழ்ச்செல்வனோ அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை அருகே உள்ளே ஒரு இடத்திற்கு சென்றிருந்தான். வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகுமாம். இவை யாவும் அவன் அவளிடம் கூறியதல்ல, மற்றவர் கூற காதில் விழுந்த செய்தி. செய்யும் செயல் யாவிலும் முன்னே வந்து நிற்பவன், நடக்கப்போவதை அனைத்தையும் அவளிடம் ஒப்புவிப்பவன் நீ யாரோ என்னும் போக்கில் நடந்துகொள்ளவது தான் சக்தியின் இந்த நிலைக்கு காரணமாகி போனது.
தன் மேல் அவன் வைத்திருந்த காதலை தெரிந்த பிறகு எதிர்பார்த்த அன்பு அல்ல இது, ஒரு நண்பனாய் அவனிடம் அவள் தினமும் எதிர்பார்த்தது தான். காலை வரும் காலை வணக்கங்கள் மட்டும் நாள் தவறாமல் வந்துவிடுகிறது. அதற்கும் இவன் முற்றுப்புள்ளி வைப்பான் தானே என யோசித்தவள் கண்கள் பட்டென திறந்துகொள்ள, நிதர்சனமாய் தன்னுடைய வீட்டினரும் தனக்கான நிச்சயித்திருந்த தன்னுடைய முறைமாமன் சஞ்சீவும் கண் முன் வந்து போயினர். எண்ணங்களின் பிரதிபலிப்பாய் அவளுடைய பெரியப்பா அழைத்துவிட்டிருந்தார்.
