Skip to content
Post Views: 62
ரிதம் 32
கொடைக்கானல் அவர்களை அன்புடன் வரவேற்று இயற்கையின் மடியில் அரவணைத்துக் கொண்டது.
Advertisement
குடும்பமாக வந்தவர்களுக்கும் தனித்தனி அறைதான். எத்தனை பேர் என்பதைப் பொறுத்து அவர்களுக்கான வசதி வாய்ப்புகளை அந்த அறையிலேயே இருப்பது போலப் பார்த்துக்கொண்டான் கௌதம். குறைந்த நேரத்தில் இத்தனை நுணுக்கமாக அவனால் எப்படித் தேர்வு செய்ய முடிந்தது என்று தெரியவில்லை? வழக்கம் போல ராகினி அதை மனமாரப் பாராட்ட ஆரம்பித்துவிட்டாள்.
அந்தப் பெரிய ரிசார்ட்டையே புக் செய்திருந்ததால், உணவுகள் எல்லாம் அவர்களே ஏற்பாடு செய்திருந்தனர். அதுவும் ஃப்ரீ ஆஃப் காஸ்ட்டில். சைவம் தான் அங்கு உணவாகப் பரிமாறப்பட்டது. ஆனால், அற்புதமான சுவையில் இருந்தது.
Advertisement
Advertisement
கௌதமும் அவன் தாயும் கூட இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரே அறையில்தான் தங்கியிருந்தார்கள். அதற்கு அடுத்த அறையைப் புஷ்பவல்லி குடும்பத்திற்கு அவன் ஒதுக்கியிருந்தான்.
பெரும்பாலான பாடகர்களுக்கு அந்த ஃப்ளோரில்தான் அறை கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களெல்லாம் தங்கள் துணையோடு, தமக்கை தம்பிகளோடு வந்திருந்தார்கள். திவ்யாவும் அதே ஃப்ளோரில்தான் அவள் தம்பியோடு வந்திருந்தாள்.
Advertisement
பிரயாணம் செய்த களைப்பில் அன்று யாரும் சுற்றிப் பார்க்கச் செல்லவில்லை. அன்று இரவு தோட்டம் போல அமைக்கப்பட்ட இடத்தில் கேம்ப்ஃபயர் ஏற்பாடு செய்திருந்தனர். உணவுகள் எல்லாம் அங்கேயேதான். அதை முடித்துவிட்டு எல்லோரும் மொத்தமாகச் சுற்றி அமர்ந்து ஆட்டம் பாட்டம் என்று அந்த இடமே களைகட்டியது. அதற்காகத்தானே அவர்கள் சுற்றுலாவிற்கு வருவது?
பெரியவர்கள் எல்லாம் சற்று ஒதுங்கித்தான் அமர்ந்தார்கள். பிள்ளைகளின் அலப்பறைகளையும், சந்தோஷத்தையும் பார்த்து மகிழ்ந்தபடி புதிதாக ஒரு தோழமையை உருவாக்கியபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், இளையவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். கடைநிலை ஊழியர்கள் எல்லாம் தனிக் குழுமமாகச் சேர்ந்து அவர்கள் தங்கள் நேரத்தைச் செலவழித்தார்கள்.
எல்லாவற்றையும் எல்லோரையும் பார்வையிட்டுவிட்டு வந்தவன், ஸ்ரீதரின் அருகில் அமர்ந்துகொண்டான். சரியாக அவனுக்கு நேர் எதிராக ராகினியும் நத்தாஷாவும் அமர்ந்திருந்தார்கள்.
ராகினியின் கணக்குப்படி அவன் வந்து நத்தாஷாவின் அருகில் அமர்வான் என்றுதான் எதிர்பார்த்தாள். ஆனால், ஏமாற்றம்தான் கிடைத்தது.
அந்தாக்ஷரி போட்டி நடந்துகொண்டிருக்க, அவனுமே அதில் பங்கேற்றுக்கொண்டான். அங்கிருப்பவர்கள் அனைவருமே பாடகர்கள், மியூசிஷியன்கள். அதனால் கேட்கவும் வேண்டுமா? ராகம் தாளம், இனிமையான குரல் என்று எல்லாமே களைகட்டியது. மிக அற்புதமாகப் பாடினார்கள். நேரம் போவதே தெரியாமல் அமர்ந்திருந்தார்கள்.
அதுவரை அவனுக்குப் பாடல் பாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. சரியாக அவன் இடத்தில் வந்து முடியும் போது ம, மா, மி, மீ என்ற எழுத்துகளில் முடிய, அவன் அதில் தொடங்க வேண்டும்.
அவனும் தன் இனிமையான குரலில், அவனுக்கு விருதை வாங்கிக் கொடுத்த, அவன் இதயத்திற்கு நெருக்கமான அந்தப் பாடலைப் பாட ஆரம்பித்தான். கண்களை மூடி ஆரம்பித்தவன், கண்களைத் திறந்து நேர் எதிராக அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.
“மின்னல் போல என் வாழ்வில் வந்தவளே
மின்னலாக மின்னிச் சென்றவளே…
என்னுள் உன்னை விதைத்தவளே உன்னுள் என்னை நிறைத்தவளே…….”
அந்த வரிகளை முடிக்கும் வரை அவள் மீது இருந்த பார்வையை அவன் எடுக்கவே இல்லை.
விதிர்விதிர்த்துப் போய்விட்டாள் நத்தாஷா.
அவன் செய்து கொண்டிருப்பதைச் சடாரென்று உணர்ந்தவன், அடுத்த வரிகளுக்கு அப்படியே தன் பார்வையைச் சுழலவிட்டு, ஒவ்வொருவராகப் பார்வையிட்டபடியே வந்தான். மற்றவர்கள் அதைக் கவனித்தார்களோ, என்னவோ? நேர் எதிராக இருந்ததனால் அப்படிப் பார்த்ததாகக் கூட நினைக்கலாம். அவன் குறிப்பிட்டு எங்குப் பார்க்கிறான் என்று வெவ்வேறு திசையில் இருந்தவர்களுக்கு புரியவில்லை. அதைச் சாதாரணமாகத்தான் நினைத்தார்கள். ஆனால், அவள் அருகில் அமர்ந்திருந்த ராகினிக்கும், அவனையே கவனித்துக்கொண்டிருந்த திவ்யாவிற்கும் அது புரிந்தது. நத்தாஷாவிற்கு மறுபுறம் அமர்ந்திருந்த ஹேமந்தும் அதைக் கவனித்துவிட்டான்.
இமைக்காமல் சற்று நேரம் இருந்தவன், ‘தன்னைப் பார்க்கிறானா, அல்லது தன் அருகில் இருக்கும் நத்தாஷாவைப் பார்க்கிறானா?’ என்று ஒரு நொடி திகைத்துவிட்டான். ‘தன்னைப் பார்த்துப் பாட வேண்டிய அவசியம் இல்லைதான்? ஆனாலும் சந்தேகம் எழுந்தது’. அதன் பிறகு கௌதம் பார்வையையும், உடல் மொழியையும் மாற்றிக்கொண்டான்.
“என்ன இவரு இப்படிப் பாக்குறாரு”? இதே கேள்விதான் அந்த நான்கு பேரின் மனதிலும் ஓடியது. ஆனால், அதன் மாடுலேஷன்தான் வெவ்வேறாக இருந்தது.
அவர்கள் திகைத்து விழிப்பதற்கு முன்பாக, இவன் தன் பார்வையை மாற்றியிருக்க, தாங்கள் பார்த்தது உண்மையா அல்லது கற்பனையா என்ற சந்தேகம் எழுந்தது அவர்களுக்கு.
நத்தாஷாவைப் பொறுத்தவரை அவ்வப்போது அவளை ஆட்டிவைக்கும் அதே பார்வைதான். அவனாகத் தேடி வந்து பார்க்க மாட்டான், பேச மாட்டான். ஆனால், அவர்களாகச் சந்தித்துக்கொள்ளும்போது பேச்சுக்களும் மாறுபடும், பார்வைகளும் மாறுபடும். அதுவும் முக்கியமாகத் தனிமையில். மற்றவர்களுடன் இருக்கும் போது அவன் சாதாரணமாகத்தான் பேச விளைவான். முதலில் அதை ஊன்றிக் கவனிக்கவில்லை. ஆனால், இப்பொழுது சில நாட்களாக அதைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள். அவன் மீது நன்மதிப்பு வைத்திருந்தவளால் அவனைத் தவறாக நினைக்கவும் முடியவில்லை. அதே சமயத்தில் அவன் பார்வைக்கு அர்த்தம் புரியாமலும் விழித்தாள்.
அடுத்தடுத்தவர்களுக்குப் பாடல் சென்றது. மீண்டும் அவனிடமே வந்து நின்றது. இம்முறை ‘எ, ஏ’ என்ற எழுத்தில் வந்து நின்றது.
சட்டென்று பாட ஆரம்பித்துவிட்டான். ஆனால், இம்முறை மிகக் கவனமாகக் கண்களை மூடிக்கொண்டான்.
“எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ? இதயத்தைக்
கயிறு கட்டி இழுத்தவள் இவளோ?
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்.
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
ஓரப்பார்வை பார்க்கும்போது
உயிரில் பாதி இல்லை, மீதிப் பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரைக் குடிக்கும்
உரிமை உனக்கே உனக்கே……”
கடைசி வரிகளை அவன் ராகம் இழுக்க ஆரம்பித்துவிட்டான். அதில் எல்லோரும் மெய்மறந்து நின்றனர் என்றால், நத்தாஷாவும் வாயைப் பிளந்து பார்த்திருந்தாள்.
ஆனால், பாடலை முடித்துக் கண்களைத் திறக்கும் போது அவளைப் பார்த்துவிட்டு மீண்டது அவன் பார்வை. அவன் பார்வையில் அவள் மனதிற்குள் நிலநடுக்கம் ஏற்பட்டது. எச்சிலை உள் கூட்டி விழுங்கினாள்.
சில பல பாடல்களுக்குப் பிறகு பாடல் வரிகள் ‘நி’, ‘நீ’ என்ற எழுத்துகளில் நத்தாஷாவிடம் முடிந்தது.
“நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யாரோடி, தோழி….
நிலவே என்னிடம் நெருங்காதே,
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை…
மலரே என்னிடம் மயங்காதே,
நீ மயங்கும் வகையில் நான் இல்லை….”
என்று இரு வேறு குரல்களில் அவள் பாடி முடிக்க.
அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை. ஆக தான் அவளுக்காக பாடுகிறேன் என்பது அவளுக்கு புரிந்திருக்கிறது.
‘சபாஷ்! அப்படிப் போடு, இப்பதான் அந்தாக்ஷரி நல்லா களைகட்டுது’ என்று அதுவரை மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்த ராகினி.
‘என்ன இவரு சிரிக்கிறாரு? நியாயமா முகத்தைச் சோகமா தானே வச்சுக்கணும்? ஒருவேளை நாம சந்தேகப்படுறது தவறோ? அப்படியெல்லாம் எதுவுமே இல்லையோ? இல்ல இவரு ஜஸ்ட் லைக் தட் நம்ம அக்காவை யூஸ் பண்ணிக்கப் பார்க்கிறாரா?
ச்சேச்சே, அப்படி இருக்காது. இவரு நல்லவர்தான். ஆனா, இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது. எதிர்பார்க்காத உதவின்றது ரொம்ப ரேரா தான் கிடைக்கும். அப்படி இவரு உதவி செஞ்சிருக்காருனா அதுக்கு ஏதாவது காரண காரியம் இருக்குமில்ல?
இல்லல்ல, அவர் அக்காவுக்கு மட்டுமா உதவி செஞ்சிருக்காரு? இங்க சுத்தி இருக்கிற எல்லாருமே அவர் உதவியால வந்தவங்கதானே? நாம பார்த்த வரைக்கும் கூட அவர் யார்கிட்டயும் இப்படி நடந்துக்கிட்டதில்லையே? அக்காகிட்ட மட்டும்தான் இப்படி நடந்துக்கிறாரு? ஐ மீன் பாக்குறாரு? ஐயோ ராகினி மண்டை குழம்புதே? இதுக்கு ஒரு தெளிவு கிடைக்காமல் தூக்கம் வராது போலயே? இதுவரைக்கும் சந்தேகமா இருந்தது இன்னைக்கு ஊர்ஜிதமாகிடுச்சு. ஆனா, இதை எப்படித் தெளிவுபடுத்துக்குறது?
அக்காகிட்ட கேட்டா அவளுக்குத் தெரியாதுனு சொல்லுவாள், இல்லனா இல்லவே இல்லைன்னு சொல்லி முழுப் பூசணிக்காயைச் சோத்துல மறைச்சிடுவாள். ப்ரீத்தி அக்காவுக்கு எதுவுமே தெரியல, சந்தேகப்படுறது நாம மட்டும்தான். அப்ப நாமதான் இதை கிளியர் பண்ணனும், கிளியர் பண்ணிடுவோம்’ என்று மனதிற்குள் அவள் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு புன்னகைக்கும் போது அடுத்து அவளிடம் வந்து முடிந்தது.
‘ஙெ… என்று விழித்தவள், “எந்த எழுத்துல பாட்டு வந்திருக்கு?” என்று அவர்களிடமே கேட்டாள்.
“மா” என்ற எழுத்து வர, அவளும் எதையோ பாடி வைத்தாள் ராகினி.
ஒரு சுற்று பாடல் முடிவடைந்து, மீண்டும் அவனுக்கு ‘த’ என்ற எழுத்து வர.
தனியே
தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன்….
நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன்
புரியாதா பேரன்பே…
புரியாதா பேரன்பே…”
என்று அதையும் ராகம் இழுத்தான்.
‘இவன் குரல் இவ்வளவு இனிமையாக இருந்திருக்க வேண்டாம். இது தன்னை கட்டி போட்டு அவன் பால் இழுக்கிறது. அவனும் அதற்கேற்றார் போல பாடலை பாடிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும்’? என்று புரியாமல் விழித்தாள் நத்தாஷா.
ஒரு வழியாக அந்தப் பாடல் கச்சேரி இரவு ஒரு மணியை நெருங்கும் நிலையில்தான் முடிந்தது. அதாவது அந்த அந்தாக்ஷரியைப் பாடிக் கொண்டிருந்தவர்கள், இளைய தலைமுறைகள் மட்டும்தான் அங்கு இருந்தனர்; வெகு சிலர் உறங்குவதற்காகச் சென்றிருந்தனர்.
நேரமாவதை உணர்ந்து உடைகளைத் தட்டிக்கொண்டு எல்லோரும் எழுந்து நின்றார்கள், கலைய ஆரம்பித்தார்கள். முதல் ஆளாக நத்தாஷா நடக்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் அவனோ, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான். ராகினி நடப்பது போல நடந்துவிட்டுச் சற்றுத் தொலைவில் தேங்கி நின்றாள்.
இவனைப் பற்றிய சிந்தனையில் இருந்த நத்தாஷா, தங்கை வருகிறாள் என்று நினைத்து அறைக்கே சென்றுவிட்டாள்.
இவன் எல்லோரும் சென்றுவிட்டதை உறுதிசெய்துகொண்டு, ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியபடி நடக்க ஆரம்பிக்க, மரத்தின் பின்னாலிருந்து அவன் முன்னால் வந்து நின்றாள் ராகினி.
அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் வந்ததால், சற்று அதிர்ந்து இரண்டடி பின்னால் பாதங்களை எடுத்து வைத்தவன், பிறகு நிதானித்து அவளைக் கவனித்தான்.
“தூக்கம் வரலையா? இல்ல என்கிட்ட ஏதாவது பேசணுமா”? நேரடியாகக் கேட்டு நின்றான்.
“ஓவர் ஸ்மார்ட்தான் கௌதம் சார் நீங்க. ஆனா பாருங்க, என் அக்காவைப் பாதுகாப்பதற்குத் தம்பி அண்ணான்னு இல்லை, இந்தத் தங்கச்சிதான் இருக்கேன். உங்க பார்வை தப்பா தெரியலதான், ஆனா அதுல வேற ஏதோ இருக்கு. அன்னைக்கு நீங்க என்கிட்ட கேட்டீங்க ஞாபகம் இருக்கா?”
‘ம்ம்ம்’ இருக்கு என்ற ரீதியில் தலையாட்டினான்.
“எதுவா இருந்தாலும் என்கிட்டயே நேரடியா கேட்டுடு, மனசுக்குள்ள வச்சுக்காதன்னு சொன்னீங்க. அன்னைக்கு எனக்கு சந்தேகம் மட்டும்தான் இருந்தது. நானும் அந்தச் சந்தேகத்தைக் கிளியர் பண்ணிக்கிறதுக்கு நிறைய ட்ரை பண்ணேன். ஆனா, யாருக்கும் உங்க மேல இந்தச் சந்தேகம் இல்லை, அதனால என்னால கிளியர் பண்ணிக்க முடியல. நீங்க இன்னைக்கு அக்காவைப் பார்த்துப் பாடுன பாட்டு, அதுக்கு அவள் எதிர்பார்த்துப் பாடுனது, அதுக்கு நீங்க கோபிச்சுக்காம சிரிச்சு வச்சது இதுக்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கா”??
குற்றம் சாட்டும் விதமாக இல்லாமல் அவனிடம் கேள்வியாக நிறுத்தினாள். அவன் மெச்சுதலாக உதட்டைச் சுளித்தபடி தலையை ஒரு பக்கமாக ஆட்டினான்.
“சோ, நீ உன் அக்காவைப் பாதுகாக்க நினைக்கிறியா?” அவன் கேட்டு வைக்க, அவள் ‘ஆமாம்’ என்று தலையாட்டினாள்.
“யார்கிட்ட இருந்து? என்கிட்ட இருந்தா? நான் உன் அக்காவை என்ன பண்ணிடப் போறேன்?”
“டு பி ஃபிராங்க், உங்களைத் தப்பா நினைக்கத் தோணல. அப்படி யோசிச்சாலும் சாமி குத்தமாகிடும் போல? நான் வேற உங்களுடைய மிகப்பெரிய விசிறி ஆயிட்டேன். இருந்தாலும் அக்காவா இல்லை நம்மளோட கிரஷான்னு வரும்போது, அக்காதான்னு தோணுது. உங்ககிட்ட இருந்து பாதுகாக்கிறதுன்னு நான் சொல்லல. அக்கா ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க, இன்னொரு ஏமாற்றத்தையும் தோல்வியையும் அவங்களால ஏத்துக்க முடியாது. அவங்களோட மனசு உடையாமல் பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. எங்களை சந்தோஷமா வச்சுக்கிற அவங்களை சந்தோஷமா வச்சுக்க வேண்டியது என்னோட கடமை.”
“உங்க மனசுல என்ன இருக்குதுன்னு தெரியல, ஆனா நீங்க எட்டாத உயரத்துல மலை மேல நிக்கிறீங்க. எங்க நிலைமை அப்படி இல்லை” என்று அவள் பேசிக்கொண்டிருக்க அவன் இடைபுகுந்தான்.
“ஏன் உங்க நிலைமைக்கு என்ன குறைச்சல்? நான் விருது வாங்கி இருந்தா, உன் அக்காவும் வாங்கி இருக்காள். ஓஹோ, ஸ்டேட்டஸ் பத்தி சொல்ல வரியா? நான் சம்பாதிச்சதுன்றது அந்த அகாடமியும் அதுல இருக்குற மனுஷங்களும்தான். அதுக்கப்புறம் இந்தப் பேரும் புகழும், அதனால வந்த ஸ்டேட்டஸும். அதுக்கு முன்னாடி என்னோட ஸ்டேட்டசுன்றது எதுவுமே இல்லை. எங்க அப்பாவோட பணத்துல நான் குளிர் காய நினைக்கல.”
“சார் நீங்க நேரடியான பதில் சொல்லாம ஏதோ சுத்தி வளைச்சுப் பேசுறீங்க? எனக்கு நார்மலா ப்ரொபசரோ டீச்சரோ பாடம் நடத்துனாலே சரியா புரியாது, இதுல நீங்க இப்படி பூடகமா பேசினா எனக்குச் சத்தியமா புரியல” என்றாள் பாவனையாக.
நமட்டுச் சிரிப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டே கைகளைக் கட்டிக்கொண்டவன், “என்ன புரியல? கேளு, நான் புரிய வைக்கிறேன்” என்றான் தோரணையாக.
“அதுதான் சார் கொஞ்ச நேரம் முன்னாடி கேட்டேனே? சரி, திரும்பவும் கேட்கிறேன். நீங்க அக்காவைப் பார்க்கிற பார்வையிலும் பேசுற பேச்சிலையும், இதோ இப்ப பாடும்போது கூட அவங்களப் பார்த்துக்கிட்டே கொக்கி போட்டுப் பாடுற மாதிரி இருந்துச்சு. அதுல எனக்கு ஏதோ வித்தியாசம் தெரியுது” என்றாள்.
“என்னவா இருக்கும்னு நீ நினைக்கிற?” என்றான் கௌதம்.
“நான் என்னென்னமோ நினைக்கிறேன், அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்க நினைக்கிறதை மட்டும் சொல்லுங்க?”
எப்பொழுதும் போல அவள் பேச்சில் வரத் துடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டவன், அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் உரைக்க ஆரம்பித்தான்.
error: Content is protected !!