Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 33

ரிதம் 33

“உன் தங்கச்சி எங்கடி?” என்று புஷ்பவல்லி கேட்கும் வரையில் அவள் நிதானத்திற்கு வரவில்லை.



Advertisement

கேட்ட பிறகுதான் அவள் வராததை உணர்ந்தவள், கதவைத் திறந்துகொண்டு பார்த்தாள். அந்த வராண்டா காலியாக இருந்தது.. இவளை எங்கே காணவில்லை? உள்ளே வந்தவள் தாயிடம், “என் கூடவேதான்மா வந்தா, நான் போய் பாத்துட்டு வரேன். நீங்க எங்கேயும் போகாதீங்க, இங்கேயே இருங்க” என்று போகத் துடித்த அவளின் கையைப் பற்றிக்கொண்டவர்,

“தொலைஞ்சிடப் போறாடி. தெரியாத இடம் வேற, எனக்குப் பயமா இருக்கு” என்றார்.

Advertisement

Advertisement

“அம்மா! அவள் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை தொலையுறதுக்கு” என்றாள் நத்தாஷா.

“இல்லை, யாராவது கடத்திட்டாங்கன்னா? அதோ, அந்த ஹீரோவோட ஆளுங்க யாராவது?”

Advertisement

“அப்படியே அவங்க கடத்தணும்னா என்னை தான்மா கடத்துவாங்க, அவளை ஏன்மா கடத்தப் போறாங்க?”

“கடத்தி வச்சு உன்னை பயமுறுத்துனா?” என்றார் புஷ்பவல்லி.

“அம்மா அம்மா, இந்த ரிசார்ட் எவ்வளவு பெரிய ஏக்கரால இருக்கு தெரியுமா? அப்படியே போயிருந்தாலும் இங்க எங்கேயாவதுதான் இருப்பாள். கையில போன் வச்சிருக்கா, நான் கால் பண்ணிட்டே அவளைத் தேடி போறேன். நீங்க எங்கேயும் போயிடாதீங்க. எங்கேயாவது போனா உங்களுக்குத்தான் வர்றதுக்கு வழி தெரியாது, அவளுக்குத் தெரியும்” என்று ஆயிரம் அறிவுரைகளையும் ஆறுதலையும் கொடுத்துவிட்டுத் தங்கையைத் தேடி வந்த வழியே திரும்பினாள்.

அவள் லிஃப்ட்டை விட்டு வெளியில் வரும்போது, தங்கை லிஃப்ட்டை நோக்கி வருவது தெரிந்தது. அவளோடு அவனும் வருவது தெரிந்தது. கௌதமைப் பார்த்ததும் லிஃப்ட்டிலிருந்து வெளியில் வராமல் அங்கேயே தயங்கி நின்றாள்.

கதவைத் திறக்கும் போது அதற்குள் இருக்கும் தமக்கையைப் பார்த்தவள், லிஃப்ட் மூடுவதற்கு முன்பாக வேகமாக ஓடி வந்து அதற்குள் புகுந்து கொண்டவள். மீண்டும் மூடாமல் இருக்க பட்டன்களைத் தட்டிக்கொண்டிருந்தாள் ராகினி. அதற்குள் கௌதமும் வந்து லிஃப்ட்டினுள் நுழைந்துவிட்டான்.

அவள் அமைதியாகத் தலைகவிழ்ந்து கொண்டாள். “என்னைத் தேடித்தான் வந்தீங்களா அக்கா?”

“ஆமா, நீ என் கூடதானே வந்த? திடீர்னு எங்க போன? அம்மா உன்னைக் காணாம பயந்துட்டாங்க, உன்னை யாராவது கடத்திட்டுப் போய் இருப்பாங்களோனு ரொம்ப பதறிட்டாங்க. அவங்களைச் சமாதானப்படுத்திட்டு வர்றதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆயிடுச்சு. இது நம்ம இடம் கிடையாது, கொஞ்சம் கவனமா நடந்துக்கோ ராகினி. உன்னுடைய செயல் அம்மாவைப் பாதிக்கக் கூடாது” என்றாள் படபடப்பாக.

அவள் அத்தனை நீண்ட வார்த்தைகளை, அதுவும் படபடப்பாகப் பேசி அவன் முதல் முறையாகப் பார்க்கிறான். இதழில் ஒட்டவைத்த புன்னகையோடு அவளைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.

“அக்கா, நான் என்ன சின்ன குழந்தையா? அதுவும் கௌதம் சார் இருக்கும்போது? யாருக்காவது என்னையும் உன்னையும் கடத்துறதுக்குத் தைரியம் வருமா?” என்று தங்கை கேட்டு வைக்க, அவள் பார்வை அவனைப் பார்த்துவிட்டு மீண்டது.

அவள் பார்வையை எதிர்கொண்டவன், “விடுங்க ராகினி. உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை எப்பயுமே நத்தாஷாவுக்கு என் மேல இல்லை. அதைச் சம்பாதிக்கிறதுக்கு இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியல”? என்றான்.

“ஏன் சார் திரும்பவும் இதே போலப் பேசுறீங்க? நான் தான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிட்டேனே? எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு. உங்க மேல இருக்கிற நம்பிக்கையால் மட்டும்தான் நாங்க இங்க வந்ததே. எனக்குன்னு மட்டும் இல்லை, என்னைச் சார்ந்தவர்களுக்கும் உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு, என் தோழி குடும்பம் உட்பட” என்றாள்.

அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. அவர்கள் வரவேண்டிய தளமும் வந்திருந்தது.

‘குட் நைட்’ சொல்லிவிட்டு அவன் புறப்பட்டுவிட, இவர்களும் பதிலுரைத்துவிட்டுத் தங்கள் அறையை அடைந்தார்கள்.

………

அடுத்த நாள் குளிரோடு ஆரம்பித்தது அவர்களின் காலைப் பொழுது. பத்து மணி போலக் காலை உணவையும் முடித்துக்கொண்டு, லாபியில் எல்லோரையும் அஸெம்பிள் ஆகச் சொல்லியிருந்தான் கௌதம்.

எல்லோருமே குறிப்பிட்ட நேரத்திற்கு வந்திருக்க, வராமல் இருந்த ஓரிருவரைப் பார்க்கச் சொல்லி இரண்டு பேரை அனுப்பி வைத்துவிட்டு, மற்றவர்களை அழைத்துக் கொண்டு வாசலை அடையும்போது அங்கு இரண்டு பேருந்துகள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தன.

ஏர்போர்ட்டிலிருந்து அந்த ரிசார்ட்டுக்கு எப்படி வந்தார்களோ அதே போல, அதே இடத்தில் அமர்ந்தபடி மீண்டும் பிரயாணம் மேற்கொண்டார்கள்.

கோடை லேக் (Kodai Lake) என்று சொல்லப்படும் கொடைக்கானல் ஏரிக்கு அவர்கள் வரும் பாதை எங்கும், இயற்கை அள்ளி வழங்கிய அற்புதமான காட்சிகளைத் தங்கள் மனதிற்குள் பொக்கிஷமாகச் சேமித்துக்கொண்டே வந்தார்கள். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான செயற்கை ஏரிதான் இது. இங்குப் படகு சவாரி மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் பலர் ஏறி சவாரி செய்ய, சிலர் பயந்து வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டனர். இன்னும் சிலர் சுற்றியுள்ள பூங்காக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்ல, சிலர் குதிரை சவாரியை மேற்கொண்டனர்.

புஷ்பவல்லி படகு சவாரி வேண்டாம் என்று ஒதுங்கிவிட, தாயையும் இரண்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு அவன் ஒரு படகில் ஏறினான். மோட்டார் வகைப் படகுதான் அது, அதனால் அதை அவன் லாவகமாக ஓட்ட ஆரம்பித்துவிட, இயற்கை அன்னையை ரசித்தபடி வந்தனர் மற்ற மூன்று பெண்களும்.

ஏரிக்கு மிக அருகிலேயே, கோக்கர்ஸ் வாக் (Coaker’s Walk) என்று அழைக்கப்படும் நடைபாதை முழுவதும் வண்ண மலர்களால் நிரம்பியிருக்க, அதில் நடந்து செல்பவர்கள் அந்த கொடைக்கானலின் மலை அழகை ரசித்தபடிதான் சென்றனர்.

ஏரிக்கு மறுபக்கம் இருந்த பிரையன்ட் பூங்காவில் (Bryant Park) பலவகையான பூக்களும் மரங்களும் அவர்களை வரவேற்றன. தன்னை மறந்து அதைச் சுற்றித் திரிந்தாள் நத்தாஷா.

இம்முறை கௌதமோடு ஸ்ரீதர் இணைந்து கொள்ள, அவர்கள் இருவரும் எதையோ பேசிக்கொண்டு நடந்தனர். மகாலட்சுமியும் புஷ்பவல்லியும் நடக்க, அக்கா தங்கை இருவரும் கைகோர்த்தபடி இயற்கையை ரசித்தனர்.

சுற்றுலாவிற்கு வந்தவர்களை மட்டும் ஒரு டீமாக வாட்ஸப்பில் இணைத்திருந்ததால், அந்த குரூப்பில் எல்லோரும் எங்கு வந்து சேர வேண்டும் என்று ஒரு பதிவைப் போட்டுவிட்டான். அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் அந்த இடத்தை அடைந்திருந்தார்கள்.

மதிய உணவை அங்கிருக்கும் ஃபேமஸான ரெஸ்டாரண்ட்டில் முடித்துக்கொண்டு, அடுத்ததாக அவர்கள் சென்ற இடம், டால்பின் நோஸ் (Dolphin’s Nose).

டால்பின் மீனின் மூக்கு வடிவில் இருப்பதால் தான் அந்தப் பாறைக்கு அப்படி ஒரு பேர் அமைந்தது. அங்கிருந்து பார்த்தால் மொத்த மலையும் அழகாகக் காட்சியளிக்கும். அங்கிருந்தபடி பள்ளத்தாக்குகளின் அழகையும் முழுவதுமாகக் காணலாம்.

மாலை மங்கும் நேரத்தில், குணா குகை என்று அழைக்கப்படும் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்ற குகையை அடைந்திருந்தார்கள். அந்தக் குகைக்குச் சென்று பார்ப்பதற்குத் தடை விதித்திருக்க, அது இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு அங்குச் சூழ்ந்திருந்த அடர்ந்த மரங்களை ரசித்தார்கள். அங்கே இருந்த மரங்கள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தவை.

பைன் மரங்கள் மட்டுமல்லாமல், சோலா (Shola) என்ற மரங்களும் அங்குப் பிரசித்தி பெற்றவை. அதன் வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விசித்திரமாக காட்சியளிக்கக் கூடியவை. எல்லா இடத்திலும் மற்றவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள, இவனும் தன் அலைபேசியில் சில புகைப்படங்களைச் சேமித்துக் கொண்டிருந்தான். தாயுடையது மட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் சேர்ந்த படங்களும் இருக்க, யாரும் அறியாமல் நத்தாஷாவின் புகைப்படங்களையும் சேமித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு அருகிலேயே இருந்த தாய் அதைக் கண்டும் காணாமல் இருக்க, அதை அறிந்தபோதும் ராகினி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

அன்றைய நாளில் சுற்றிப் பார்த்த இடங்கள் எல்லாம் சந்தோஷத்தை மட்டுமல்லாமல் சோர்வையும் கொடுத்திருந்தன. இரவு ரிசார்ட்டை நெருங்கியவர்கள் உணவைக் கூடத் தவிர்த்துவிட்டு உறங்கச் சென்றார்கள். அத்தனை சோர்வு இருந்தது, சிலர் மட்டும்தான் உணவை உட்கொண்டார்கள்.

உணவைத் தவிர்த்தவர்களில் நம் நாயகியும் ஒருத்தி. ஆனால், தாய்க்கு மாத்திரை போட வேண்டும் என்று தங்கையை அவரோடு அனுப்பி வைத்துவிட்டாள். பிறகு என்ன, ஒரே இடத்தில் நத்தாஷாவைத் தவிர நான்கு பேரும் அமர்ந்து பேசியபடியே சாப்பிட்டார்கள்.

அதில் அவ்வளவாகப் புஷ்பவல்லி வாயைத் திறக்கவில்லை. அவருக்கும் சேர்த்து ராகினியே சளைகாமல் பேசினாள், மகாலட்சுமியும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒன்றாக லிஃப்ட்டில் திரும்பி அவரவர் ரூமை அடைந்த பிறகும், மற்றவர்களைப் பற்றிய பேச்சுக்கள் நீண்டன.

சற்று நேரத்தில் கதவு தட்டப்பட, ராகினிதான் சென்று கதவைத் திறந்தாள். பேரர் ஒருவர் பழச்சாறைக் கையில் வைத்தபடி நின்றிருந்தார்.

அதைப் பார்த்ததுமே அவளுக்குத் தெரிந்துவிட்டது, அதை யார் அனுப்பியிருந்தார்கள், யாருக்கு அனுப்பியிருப்பார்கள் என்று.

“அக்கா உனக்குத்தான்” என்று அதைக் கையில் வாங்கிக்கொண்டு, அவரை அனுப்பி வைத்தவள், தமக்கையிடம் வந்து நீட்டினாள்.

“நான்தான் எதுவும் வேணாம்னு சொன்னேல்ல?” என்றாள் நத்தாஷா.

“ஹலோ சிஸ்டர்! இதை நான் அனுப்பலை, கௌதம் சார் அனுப்பி வச்சிருக்காரு. வெறும் வயிறா படுக்கக் கூடாதாம். அவருக்கு என்ன தெரியும், நீங்க இதுபோல நிறைய நாள் படுத்திருக்கீங்கன்னு நான் சொன்னேன். ஆனா, குடிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்புன்னு சொல்லிட்டாரு. குடிச்சிருங்க, அப்பதான் நிம்மதியா தூக்கம் வரும். அடுத்த நாள் சுத்திப் பார்க்க முடியும்.” என்றாள்.

“ஆமாம்மா குடிச்சுரு” என்று புஷ்பவல்லியும் கூற, வேறு வழி இல்லாமல் வாங்கி அதைப் பருகினாள்.

படுத்தவளுக்கு உறக்கம் வர மறுத்தது. அன்றைய நாளில் அவனின் பார்வை அதிகமாக அவளைத் தீண்டிச் சென்றதை அவளால் உணர முடிந்தது. அவனை அவள் திரும்பிப் பார்க்கவில்லை என்றாலும், யாராவது அதைக் கவனித்து விடுவார்களோ என்ற பதட்டத்தில் அவள் மற்றவர்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

மொத்தத்தில் கொடைக்கானலின் அழகை ரசித்தது ராகினிதான். அவளை ரசித்தபடியே கௌதம் இருக்க, முழுப் பதட்டத்தில் இருந்தாள் நத்தாஷா.

அடுத்த நாளும் இதே போலத்தான் சென்றது. இம்முறை தங்கையைக் கையில் பிடித்தபடியே அவள் முன்னால் நடந்தாலும், அவளுடைய தாய் கௌதம் தாயோடு நடந்து வருவதால், அவளால் அவரைத் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியவில்லை.

என்னதான் எல்லோரையும் பொறுப்பாக அவன் அழைத்து வந்திருந்தாலும், எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினாலும், சிற்றுண்டிகளைத் தத்தமது விருப்பத்திற்கேற்ப அவரவர் வாங்கிச் சாப்பிட்டார்கள். உணவு என்று வரும்போது அதை அவன்தான் கவனித்துக் கொண்டான். காலை உணவு, இரவு உணவு இரண்டுமே ரிசார்ட்டில் கொடுக்கப்பட்டது. மதிய உணவிற்குப் பெரிய ஹோட்டலில் சென்று நிறுத்திவிடுவான்.

அன்றைய நாளும் கொடைக்கானலின் அழகை ரசித்தபடி, இன்னும் போகாத பல இடங்களைச் சுற்றிப் பார்த்தனர். பில்லர் ராக்ஸ், சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி, பேரிஜம் ஏரி என்று வர்ணிக்க வார்த்தை இல்லாத பேரழகுடைய இடங்களைச் சுற்றிப் பார்த்த நிம்மதி எல்லோர் மனதிலும் ஏற்பட்டது.

“ஆமா, அக்கா உங்களுக்கு எதிர் பாட்டு பாடும்போது, கோவப்படாம சிரிச்சு வச்சீங்களே, அதுக்குக் காரணம் என்ன சார்?”

ஐஸ்கிரீம் வாங்குகிறேன் என்ற பெயரில் கௌதமோடு நடந்து வந்து கேட்டுக்கொண்டிருந்தாள் ராகினி.

“அதுவா? அது நான் அவளுக்காகத்தான் பாடுறேன்னு ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டாளே? அதுக்கு எதிர்பாட்டுப் பாடுற அளவுக்குத் தேறிட்டாளே, அந்தச் சந்தோஷத்துல சிரிச்சேன்” என்றான் அவன் அவளைப் பார்த்தபடி.

முதலில் வாயைப் பிளந்து அவனைப் பார்த்தவள், “காதல் முத்திடுச்சுன்னா இப்படித்தான் ஆவாங்க” என்று கிண்டலடித்தாள்.

“எப்படி? என்னை கிறுக்கன்னு சொல்ல வரியா?” பொய்க் கோபத்துடன் முறைத்தான்.

“நான் சொல்லலப்பா” என்று ஐஸ்கிரீமைச் சாப்பிட்டபடி சப்புக் கொட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்.

முதல் நாள் இரவு அவள் பதட்டமாகப் பேசியது நினைவில் நிழலாடியது.

“அக்காவைப் பத்தி உங்களுக்குத் தெரியும்ல? அவங்க வாழ்க்கையில ஒரு டிராஜடி நடந்துருச்சு” கண் கலங்கக் கூறியபடி கதையைத் தொடங்கினாள் ராகினி.

“தெரியும், அதுதான் நீயே டிராஜடின்னு சொல்லிட்டியே, அப்புறம் அதை ஏன் யோசிக்கிற?” என்றான்.

“நானும் அக்காவும் அந்தப் கல்யாணம் வேணாம்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னோம், யாரும் கேட்கலை. எங்களுக்கு முன்னாடியே தெரியும் அவன் குடிப்பான்னு. நல்லவன் இல்லைன்னு அவன் பேச்சிலேயே அக்கா கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனாலும் அப்பாவை மீறி ஒண்ணுமே பண்ண முடியலை” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

சிறு குழந்தை போல அவள் பேசிய விதமும், வரத் துடித்த கண்ணீரை அவள் அடக்குவதும் அவனுக்குப் புரிந்தது. பாசமாக அவள் தலையை வருடிக்கொடுத்தவன்,

“இனிமே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றான் திடமாக.

“பின்வாங்கிட மாட்டீங்களே?” உதடு துடித்தபடி கேட்டாள்.

“கண்டிப்பா மாட்டேன்.”

“உங்களை நம்பலாம் தானே?”

“ஹண்ட்ரட் பெர்ஸன்ட்” என்றான்.

“எனக்கு நம்பிக்கை இருக்கு, இருந்தாலும், ஒரு வார்த்தை கன்ஃபர்மேஷன் பண்ணிக்கிட்டேன். ஆனா, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்குப் பிடிச்ச ஒருத்தர்தான் என் அக்காவுக்குத் துணையா வரப்போறாரு. ‘ராகினி ஹேப்பி மச்சி’.”

சினிமா பட ஸ்டைலில் ஆனந்தமாகக் கூறிவிட்டுத்தான் அவள் முன்னால் நடந்தாள்.

அவள் முதுகைப் பார்த்தபடி, மந்தகாசப் புன்னகையுடன் இரு பக்கமும் தலையாட்டியபடி அவன் பின்னால் நடந்தான்.

இன்றும் அதை நினைத்துப் பார்த்தவனின் இதழ்களில் அதே புன்னகையும் மிளிர்ந்தது. ‘குறும்புத்தனமான மைத்துனி, அவளுக்கு நேர் எதிரான தமக்கை’ என்று நினைத்தபடி நத்தாஷாவைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!