Skip to content
Post Views: 145
அத்தியாயம்: 26
மண் தரையில் சாணி மொழுகி புள்ளி வைத்து போட்டாலும் கோலம் தான். டயில்ஸ் ஒட்டிய வாசலில் ஸ்டிக்கர் ஒட்டுவதும் கோலம் தான்.
Advertisement
அந்த வகையில், சல்லடை போல் உள்ள தட்டில் டிசைன்கள் வரையப்பட்டிருக்க, அதில் மாவைக் கொண்டு அச்சு எடுத்தாலும் கோலம் என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் இவர்கள் வரைந்து வைத்திருப்பதை எந்த வகையிலும் கோலம் என்று சொல்ல முடியாது. கொட்டி வைத்திருக்கின்றனர் கோலமாவை என்று வேண்டுமானால் சொல்லலால். அப்படித்தான் இருந்தது சரிகாவும் அதிதியும் போட்டு வைத்த கோலம்.
Advertisement
Advertisement
“ம்மா… இது ஓகே வா?” என்றது சரிகாவின் குரல்.
“செல்லாது செல்லாது. மறுபடியும் போடு.” என்றாள் ரிதன்யா.
Advertisement
“ஆன்டி இது?”
“ம்… பெயிலு. பாஸ் ஆகுற வரைக்கும் போடணும்.” என்ற பெண்களின் பேச்சுச் சத்தத்தில் வீட்டைப் பூட்டியவன் மாடி ஏறினான். படியெங்கும் கொட்டிய கோலமாவு தான்.
“ரிதும்மா… இதுக்கு என்ன குறை? நல்லாத்தான வந்திருக்கு.” என்று சண்டைக்கு வந்தாள் சரிகா.
“குறைன்னு ஒன்னு சொல்ல, நீ கோலம்ல போட்டிருக்கணும். அது கோலமே இல்ல. ஜீரோ மார்க் தருவேன் அதுக்கு.” என்க, தன் ஆச்சியைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“பிள்ளைங்க மெனக்கெடுதுக. அதுகள போய் குறை சொல்லிட்டு. கூட கொஞ்சம் போட்டுக்குடேன்.” என்று சப்போட்டிற்கு வர,
“என்னம்மா நீ பேரம் பேசி மார்க் வாங்குற?” என்றதும், முத்துலெட்சுமி கண்காட்டினார்.
“சரி போனாப் போது இருபது தர்றேன்.” என்றதும் புசுபுசுவென மூச்சு வாங்கியது சரிகாவிற்கு.
“எனக்கு அந்த மார்க் வேண்டாம்.”
“இட்ஸ் ஓகே… எதிர்பார்க்குற மார்க்கு வேணும்னா எதிர்பாக்குற அளவுக்கு கோலம் இருக்கணுமே.”
“இது சூப்பரா வந்திருக்கா ஆன்டி. இதுக்கு எவ்ளோ மார்க்?”
“நல்லாத்தான் இருக்கு. அறுபது மார்க் தாறேன்.” என்றதும் கோபம் வரப்பெற்ற சரிகா,
“இதுல என்ன இருக்குன்னு இதுக்கு 60 மார்க்.” என்றபடி அதிதி வரைந்து வைத்திருந்த கோலத்தைக் கலைத்து விட்டாள்.
“என்னித ஏன்டி கலைச்ச?” என்று அதிதி கத்த,
“வேணும்னா என்னித கலைச்சுகக்கா.” என்று பவ்வியமாகச் சொன்னாள் சரிகா.
“நான் கலைக்க வேண்டியதே இல்லை. அதுவே கலைச்சா மாதிரி தான் இருக்கு.” என்று சரிகாவின் கோலத்தைக் காட்டிச் சிரித்தாள் அதிதி.
“அச்செடுத்துக் கூட கோலம் போடத் தெரியல… நீங்களலாம் என்ன பிள்ளைங்க…” என்றபடி திரும்பியவள் கண்டது மருமகளின் சிரிப்பில் மெய்மறந்து நின்ற கொண்டிருந்த பத்ரியைத் தான்.
விழிகள் அதிதியின் மீதே இருந்தன. அவன் நின்ற கோலமே சொல்லும் பல நிமிடங்களாக நிற்கிறான் என்று. சிறு ஏக்கப் பெருமூச்சு ஒன்று விட்டவனை,
“மதினி எத்தன மணிக்கு தம்பி டிஸ்சார்ஜ் பண்றாங்க?” என்று கேட்ட தன் பக்கம் திருப்பினார் முத்து லெட்சுமி.
“ஆப்ட்நூன் டயம் சொல்லிருக்காங்க ஆன்டி. ஆனா ஈவ்னிங் ஆகுடும்னு நினைக்கிறேன்.”
“மாமா… நல்லா இருக்கா?” என்று தான் வரைந்ததைக் காட்ட, மெல்லிய புன்னகை மட்டும் தான் அவனிடம். மாமன் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்றதும் மலுக்கென்று கண்ணில் நீர் எட்டிப்பார்த்தது அதிதிக்கு.
“கோயில்ல ஆன்டி பேருக்கு அபிசேகத்துக்குச் சொல்லிருக்கேன். உங்களுக்கு நேரமிருந்தா வாங்க.” என்று ரிதன்யா அவனிடம் தனித்து பேச வேண்டி சொல்ல, ம் என்று மட்டும் தலையசைத்தான்.
“இவளையும் கூட்டீட்டு போங்க தம்பி. மதினிக்கு உதவியா இருக்கும்.”
ரிதன்யா வேண்டாம் என்று வாய் எடுப்பதற்குள்,
“கண்டிப்பா ஆன்டி. கோயிலுக்கு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் தன்யா.” என்க, அவள் தயக்கத்துடன் தலையசைத்தாள்.
“நான் வரவா மாமா?” என்றாள் அதிதி சின்னக் குரலில்.
“வேண்டாம்.” என்றவன், ரிதன்யாவைத் தயாராக இருக்கச் சொல்லி விட்டு சென்றான்.
சுதாவின் இரத்த நாளத்தில் இரண்டு அடைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆஞ்சியோ மூலம் ஸ்டென்ட் வைக்கப்பட்டு ஒரு வார காலமாயிற்று. வேலைக்கு விடுப்புச் சொல்லியிருந்தவன், காலை உணவை முடித்து விட்டு தாயின் அண்மையில் சென்று அமர்ந்து கொள்வான். ரிதன்யா அவருக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, அதிதியுடனும் சரிகாவுடனும் மாலையில் சென்று பார்த்து விட்டு வருவாள். அது அவருக்கு மட்டுமல்ல பத்ரிக்கும் நிம்மதியைத் தந்தது.
ஆனால் தனியாக அவனுடன் சென்றது இன்று தான் செல்ல உள்ளாள்.
ஏனோ அவனுடனான தனிமை அவளுக்குள் சிறு சஞ்சலத்தைத் தந்திருந்தது. விடியாத அன்ற பொழுதிலிருந்து அவனுடனான தனிமையை தவிர்த்தே வந்தாள்.
இன்று அவருக்கு டிஸ்சார்ஜ்.
அவரின் உடல் நலனுக்காக இறைவனை மனமார வேண்டியவள், தன் பிரார்த்தனையை முடித்து விட்டு, அடிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தாள். அவளை அழைத்துச் செல்ல வந்த பத்ரி, இறை வழிபாடு முடித்து விட்டு, ஒரு தூணில் சாய்ந்து கொண்டு, கோயிலை வளம் வந்த ரிதன்யாவின் மீது பார்வையைப் பதித்தான்.
அவனைக் கண்டதும் வந்து விடுவதாக தலையசைக்க, பூமிக்கு நோகாமல் நடந்து செல்பவளின் பாதத்தில் நிலைத்து நின்றது அவனின் கவனம். காலைச் சுற்றியிருந்த மெல்லிய சங்கிலியில் கூடுதலாக முத்துக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
“போகலாமா?” என்று கேட்டு தன் முன் வந்தளிடம், கேட்டும் விட்டான்.
“சலங்கை வச்ச கொலுசு வாங்கிருக்கலாமே தன்யா. சத்தம் நல்லா கேக்கும். அது தான் உன்னோட காலுக்கு அழகாவும் இருக்கும். ஏன் சத்தமே இல்லாம? ஸ்டெயில்லா… இல்ல பேசனேட்டா இருக்கியா?” என்க, அவனின் முகத்தை ஒரு நொடி ஏறிட்டுவிட்டு சின்னச் சிரிப்பு சிரித்தாள்.
அவளுக்குப் பல சலங்கைகள் வைத்த சால்ரா கொலுசு என்றால் மிகவும் பிடிக்கும். அதன் சத்தத்தில் அலாவதியதி சுகம். திருமணத்தின் போது முத்துலட்சுமி அதைத்தான் மகளுக்கு வாங்கி அணிவித்திருந்தார்.
தங்கம், வெள்ளி போன்ற எந்த பொருளாக இருந்தாலும் இத்தனை காலம் தான் உழைக்கும் என்ற காலவரையறை உண்டு. அந்தக் கொலுசும் அந்து போய் தன் ஸ்திரத்தை இழந்து விட்டது. ரிப்பளேஸ்மெண்ட் செய்ய வேண்டிய கணவன் அதைத் தண்டச் செலவு என்று கருதி வாங்கித் தரவே இல்லை.
கால் மட்டுமல்ல, கழுத்திற்கும் அதே கதி தான்.
தாய் வீட்டில் இளவரசியாக வாழ்ந்த பெண்களை இளவரசியாகவே வாழ வைக்க வேண்டாம். அனைத்திற்கும் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரியாக மாற்றக் கூடாது அல்லவா!
அதைப் பகிர விரும்பாது, பேசாது உடன் நடந்தாள்.
அவளின் மனம், “திடீரென ஏன் இப்படிப் பேசுகிறான்?” என்றதிலேயே நின்றது.
‘அழகாக இருக்கிறது. உனக்கு பொருத்தமாருக்கு!’ போன்ற ரசனைமிகு பதில்களை, ஏன் பார்வையைக் கூட வீசும் ரகமல்ல அவன். நான் பார்க்காததா என்று அலட்சியமாகவே கடந்து சென்று விடுவான்.
ஆனால் இப்பொழுது ஏன் அப்படி என்னைப் பார்த்துக் கேட்டான்? என்ற யோசனையிலேயே அவள் அமர்ந்திருக்க, ரிவர்வியூ மிரர் வழியே தெரிந்த அவனின் விழிகளில் எதோ இருப்பது போன்று தோன்றியது.
தன் எண்ணங்களுக்கு கடிவாளமிட, “அதிதி மேல இருக்குற கோபம் குறையலயா?” என்றாள்.
அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“கோபமெல்லாம் இல்ல. எப்பவும் அவ மேல எனக்கு வரவும் செய்யாது.”
“பின்ன ஏன் அவ வர்றேன்னு சொன்னப்ப வேண்டாம்னு சொன்னிங்க? முகமே கூம்பிப் போச்சி.”
“எனக்கு உங்கூட பேச வேண்டி இருக்கு தன்யா.” என்றதும் அவளுக்குள் ஓர் இனம் புரியாத படபடப்பு தெற்றிக் கொண்டது.
என்ன பேசப் போகிறான் என்று.
சுதா மருத்துவமனையில் இருக்கும் இந்த ஒரு வாரமும் இருவரும் புலனத்தில் பேசித் தொடங்கியிருந்தனர். பெரிதாக எதுவும் இருக்காது. சுதாவைப் பற்றி அவள் கேட்டால், அதிதி பற்றி அவன் கேட்டிருப்பான். ஆனால் அந்தக் கேள்விகள் எல்லாம் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் கேட்கப்படும்.
“பத்ரி சார் ஏன் உனக்கு நைட் மெசேஜ் பண்ணிருக்காரு?” என்று ஒருவிதமான குரலில் சுருதி கேட்டாள்.
“ம்ச்… எத்தன மணிக்கு வந்திருக்குன்னு பாக்காம என்ன வந்ததுன்னு பாரு.”
“எப்படியும் உப்பு சப்பில்லாம தான் வந்திருக்கும். அது எனக்கே தெரியுமே. அதை நான் பாத்துத் தெரிஞ்சுக்கணுமாக்கும்.” என்று முணுமுணுத்தவள்,
“என்ன இருந்தாலும் மிட் நைட்ல… மெசேஜ் பண்றது தப்பில்லயா! உங்கிட்ட உரிமை எடுத்துக்கிறாரா…” என்றவள் ரிதன்யாவின் உக்கிரப் பார்வையைக் கண்டு நிறுத்திக் கொண்டாள் பேச்சை.
ஆனாலும் சுருதி விடுவாளா என்ன?
பேசிப் பேசி அவளின் மனத்தைக் கலைத்து, குளம்பியக் குட்டைக்குள் பத்ரியை என்ற மீனை விட முயன்று கொண்டிருந்தாள்.
“ஏய்… உனக்கு ஞாபகம் இருக்கா! மேட்ரிமேனில எனக்கு இப்படிபட்ட புருஷன் தான் வேணும்னு ஆர்டர் போட்டிருந்தியே.”
“அதுக்கு இப்ப என்ன?”
“ஆர்டர் பண்ண ஹஸ்பெண்ட் மெட்டிரியல் கைக்குக் கிடைக்கப் போகுதுன்னு நினைக்கிறேன். ரிட்டன் பண்ணா அக்சப்ட் பண்ணிக்க.”
“என்ன உலறுற?”
“நீ போட்ட ஆர்டருக்கு, பத்ரி சார் பக்காவா இருப்பாருன்னு தோணுது. சுண்டி விட்டா இரத்தம். கை நிறைய சம்பளம். 33 ல இருந்து 37 க்குள்ள வயசு. மெச்சூரான பேச்சும் நடத்தையும் இருக்கு. ஆனாலும் ரெண்டு மட்டும் மிச்சிங். எத்தன பவுனு எதிர்பாக்குறாங்கங்கிறதும், தனி குடித்தனத்துக்கு ஓகே சொல்வாராங்கிறதும். இட் ஓகே… ஒரு நாள் டேடிங்க போய் எல்லாத்தையும் விசாரிச்சிடு வந்திடு.” என்க, அதிர்ந்து போனது ரிதன்யா தான்.
இப்படியெல்லாம் ஏன் சிந்திக்கிறாள்? ஏன் இவள் இப்படிப் பேசுகிறாள்? இவள் பேசும் அளவிற்கா நான் அவனை நெருங்க அனுமதிக்கிறேன்? என்று தனக்குள் உண்டான கேள்விகளைப் புதைத்து விட்டு, சுருதியின் பேச்சைத் தொடரவிடக் கூடாது, வளர விடக் கூடாது என்று, அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை மொத்தமாக அழித்து விட்டாள். அனுப்பவதையும் நிறுத்தி விட்டாள். அவனின் முகம் பார்ப்பதையும் தவிர்த்து வந்தாள்.
இரு நாள்களாக அவள் இப்படி இருக்க, விதி அவனுடனேயே பயணம் செய் என்று காரில் ஏறி விட்டு வேடிக்கைப் பார்க்கிறது.
“She confided…” என்றான். அதன்பொருள் புரிந்தவள், அகம் மகிழ்ந்து போனாள்.
“எப்ப? என்ன சொன்னா?” என்று அதிதியின் மனத்தில் உள்ளதைக் கேட்க
ஆவலாக இருக்க, பத்ரியின் முகத்தில் சொல்லலாமா வேண்டாமா என்ற சிந்தனை ரேகைகள்.
நேற்று மாலை ஒரு வக்கீல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான் பத்ரி.
“இதுல ஒரு கையெழுத்து போடு.” என்றான் சில காகிதங்களைக் காட்டி.
“என்னதிது மாமா?”
“இதுல லீகல் டாக்குமெண்ட்ஸ். நான் வக்கீல் கிட்டயும் உன்னோட சித்தப்பா மார்டின் கிட்டயும் பேச்சிட்டேன். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் உன்ன அவன் டேக் ஓவர் பண்ணிப்பான்.” என்க,
அதிதி ஓடிச் சென்று அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். “கஸ்டடி மாத்த வேண்டாம் மாமா. நான் உங்க கூடவே இருக்கேன். நான் பேசுறனது தப்பு தான் மாமா. என்னை மன்னிச்சிடுங்க. அம்மம்மா கிட்டயும் நான் சாரி கேக்குறேன். இனி அப்படி நடக்காது ப்ராமிஸ்… கஸ்டடிய மாத்தாதீங்க மாமா.” என்று அழுகையோடு சொல்ல, அவன் அவளது மன்னிப்பை ஏற்றாலும், காரணம் கேட்டான்.
“தப்பு… தெரியாம செஞ்சிட்டேன்னு இதுக்கு முன்னாடியும் சொல்லிருக்க. ஆனாலும் அது ரீப்பிட் ஆகுதுன்னா உன் மனசுல எது குறையா இருக்குன்னு எனக்கு தெரியணும். அப்பத்தான் என்னால அதை சால்வ் பண்ண முடியுமா. இல்ல சால்வ் பண்ண என்ன பண்ணணும்னு யோசிக்க முடியும்.” என்றவன், அவளின் தலை கோதி, கத்தியால் கீறிய அவளின் மணிக்கட்டை நீவினான்.
“தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நாங்க உன்னைக் கொடுமை படுத்திட்டோமா அம்மாயி.” என்று கனிவுடன் கேட்க, அவளின் இறுக்கம் கூடியது.
சுதாவின் நிலைக்கு காரணம் என்று பலி போட்டுக் கொண்டு, முட்டாள் தனமாக கத்தியால் கிழித்துக் கொண்டுள்ளாள். பின் ரிதன்யாவிடம் அடிவாங்கியதெல்லாம் வேறு கதை.
சிறு குழந்தைபோல் கட்டிக் கொண்டு குளுங்கியவளை, தன்னிடம் இருந்து பிரித்தெடுத்து,
“என்ன பிரச்சனை அதி உனக்கு? உன்னையும் காயப்படுத்தி எங்களையும் ஏன் காயப்படுத்துற?” என்றபோதும் கேவல்கள் வெடித்ததே தவிர, அவளிடம் இருந்து வார்த்தைகள் வரவில்லை. நிமிடங்கள் மௌனத்தில் கழிய,
“நான் தான் உனக்கு எல்லாம்னு உன் ரிது ஆன்டிட்ட கூட கர்வமா சொன்னேன். என் அதிக்கு எங்கிட்ட எந்த சீக்ரெட்டும் கிடையாதுன்னு. நாந்தான் அவளுக்கு அப்பா அம்மான்னு.
ஆனா நான் அப்படி இல்ல போல. நிறைய விசயங்கள என்னோட பட்டன் பன் எங்கிட்ட இருந்து மறைக்கிறான்னா நான் சரியில்ல… அவள ஜான்-பவானி மகளா மட்டும் தான் வளத்திருக்கேன். பத்ரியோட பட்டர் பன்னா உன்னை உணர வைக்காது என்னோட தப்பு தான்.” என்று தன்னைத் தானே குற்றம் சொல்ல,
“இல்ல மாமா… உங்க தப்பு எதுவும் இல்லை… எல்லாமே என்னோடது தான். நான்… நான்… எனக்கு… relative deprivation…” என்க, அவன் புருவங்கள் முடிச்சிட்டன.
இது ஒரு மனநிலை… நமக்கு கிடைக்கவேண்டிய அன்பும் அக்கறையும் கிடைக்காமல், வேற ஒருத்தருக்கு கிடைக்கும் போது உண்டாகும் இயலாமை பொறாமை.
“என்ன?’ என்ற கேள்வி அவனின் பார்வையில் இருந்தது.
“உங்களுக்கு இன்னுமா புரியலயா? ரிது ஆன்டி ஒரு நொடில என்னைப் புரிஞ்சிக்கிட்டாங்க.”
பாவம் அவனுக்கு விளங்கவே இல்லை.
‘உங்களுக்கு அது புரியாது.’ என்று ரிதன்யாவும் அன்று சொன்னாளே…
“எனக்கு அம்மா கிடையாது. அம்மா இருந்தும் இல்லாம, எனக்கு கிடைக்கவேண்டிய பாசம் கிடைக்காம நான் வளந்திட்டேன்.” என்க,
ஆம் வளர்ந்து விட்டாள் தான். தாய் அன்பு இல்லாது வளர்ந்தே விட்டாள். வளர்த்து விட்டோம். இனி அது தேவைப்படாது என்றல்லவா அவன் நினைத்தான்.
“எனக்கு அம்மா சோறு ஊட்டுன ஞயாபகம் இல்ல. தலை வாரி விட்டது. குளிக்க ஊத்துனது. என்ன பிடிக்கும்னு கேட்டு ஆசையா சமைச்சிப் போட்டது. என்னை உரிமைய அடிக்க. அரவணைக்க. எங்கூட ஆர்கியூ பண்ணணு யாருமே இல்ல.
முக்கியமா ‘என்னம்மா செய்ய?’ன்னு என்னைப் பாத்து கேள்வி கேட்கவும் நான் ஒருத்தர் மேல உரிமையா அன்பு காட்டவும் ஆள் இல்ல.” என்று அழ,
“உனக்கு நான் இருக்கேன் அதி.” என்றபடி நெருங்கியவனைத் தள்ளி நிறுத்தியவள்,
“உங்களுக்குப் புரியாது மாமா… ஏன்னா இந்த வயசுலயும் உங்களுக்கு அம்மா இருக்காங்க. உங்களுக்கு வேண்டியது வேண்டாததுன்னு செஞ்சி, பாசத்த அள்ளி அள்ளிக் குடுக்க அம்மா இருக்கு. உங்கள கவனிக்கவும் நீங்க கவனிக்கவும் அம்மா இருக்கு. ஆனா எனக்கு?”என்றாள்.
தாயன்பை ரீப்ளேஸ் செய்ய முடியுமா? எப்படி? என்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்க,
“எனக்கு அம்மா வேணாம் மாமா… ரிது ஆன்டி வேணும்.” என்று அவனை அதிரச் செய்தாள்.
“சின்ன வயசுல இருந்து, எனக்காக நீங்க என்னென்ன செய்றீங்கன்னா நல்லாத் தெரியும் மாமா. உங்களுக்கு நான் எவ்ளோ முக்கியம்னு எனக்குத் தெரியும்.
ஆனா, நீங்க எம்மேல வச்ச பாசத்தைப் பயன்படுத்தி, ரிது ஆன்டிய கல்யாணம் பண்ணிக்கங்கன்னு என்னால கேக்க முடியல மாமா. அது தப்பு. உங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதை நான் முடிவு பண்ணக் கூடாது. எனக்காக வாழ்ற உங்க கிட்ட என்னால அதை அழுத்தி கேக்க முடியல. அதே நேரம் அம்மம்மா உங்க மேல கொட்டுற பாசத்தப் பாத்திட்டும் இருக்க முடியல. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.
நாளுக்கு நாள் அந்த மன நிலை மோசமாகிட்டே போது. என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ் அதுக்காக கஸ்டடிய மாத்த வேண்டாம் மாமா. என்னை ஹாஸ்டல்ல கூட சேத்து விடுங்க. உங்க அரவணைப்புல தூரமா இருந்துக்கிறேன்.” என்றவளுக்கு எதுவும் சொல்லாது, வீட்டில் இறக்கி விட்டு விட்டுச் சென்றான்.
மருத்துவமனையில் சுதாவும் அதிதியின் வார்த்தைகளைத்தான் முத்துலட்சுமியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
“எங்க குடும்பத்துகே அவன் தன் ஆணி வேர். எப்ப என்ன செய்யணும்னு அவனுக்கு நல்லாத் தெரியும். எங்க மேல அவனுக்கு அவளோ பாசம். நான் சொன்னா கண்டிப்பா கேப்பான். ஆனா அந்தப் பாசத்த ஆயுதமாக்கி குத்திக் காயப்படுத்த விரும்பாமத்தான், கல்யாணம் பண்ணிக்கன்னு அவன கட்டாயப்படுத்தாம இருக்கேன். அவனுக்கா எப்ப தோணுதோ பண்ணிக்கட்டும். இப்ப அதிக்காகன்னு காட்டுற யாரையாது கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், அவனால சந்தோஷமா வாழ முடியுமான்னு தெரியல. எனக்கு அவன் சந்தோஷம் முக்கியம்.” என்றார்.
அவனைச் சுற்றி இருக்கும் இரு பெண்களும் அவனின் மீது வைத்த பாசத்தால், அவனை மிரட்டி பணிய வைக்க முயலாது விலகி நிற்பது வேதனையாக இருந்தது.
மனம் முழுவதும் குழப்ப ரேகைகள். தனக்கென்று வருபவள், அதிதியை நன்றாக கவனித்தால் போதும். மற்றபடி அவனுக்கு என்று எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால் அது சாத்தியப்படாது
என்பதை அவனும் அறிந்ததால் தான், தன் திருமண வாழ்க்கையையே ஒதுக்கி வைத்திருக்கிறான். அப்படி இருக்க இப்பொழுது அதிதி ஒருத்தியைக் கைக் காட்டுகிறாள்.
அது எப்படிச் சாத்தியம்?
தன் குழப்பத்தை ரிதன்யாவிடம் சொல்லி எதாவது தீர்வு காணலாம் என்று அவன் நினைத்துச் சொல்ல,
“கார நிறுத்துங்க!” என்றாள் ரிதன்யா.
“ஹாஸ்பிடலுக்கு இன்னும் ரெண்டு கிலோமீட்டர் தான் இருக்கு.” என்றான் அவளைப் பார்க்காது.
“நான் கார நிறுத்தச் சொன்னேன்.” என்று கத்தியவளைக் குழப்பத்துடன் திரும்பி பார்த்துவிட்டு, ஓரங்கட்டினான்.
அவளுக்கு உடலெல்லாம் பதைபதைத்தது. அவளின் நடுக்கம் வெளிப்படையாகவே தெரிய, உடலெங்கும் பற்றி எரிந்தது போல் ஓர் உணர்வு.
சுருதியின் திருமணத்திற்கு பிறகு முத்துலெட்சுமி ஏன் ஊருக்குச் செல்லாது தன்னுடன் தங்கினார் என்று இப்பொழுது புரிந்தது. அவருக்கும் சுதாவுக்குமான பழக்கம், சுருதியின் பேச்சு எல்லாம், இதை மனத்தில் வைத்து தானா!
தன்னைச் சுற்றி கண்களுக்கே தெரியாதது போல் திருமண வலை பிண்ணப்படுவதை உணர்ந்தவளுக்கு அதை அறுத்து எறியும் ஆவேசம் வந்தது.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!