Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 27

அத்தியாயம்: 27

“தேடி தேடி நம்ம சாதிக்காரன்னு ஒருத்தனைத்தான் பிடிச்சிக் கட்டி வச்சோம். என்ன நடந்ததுன்னு ஊருக்கே தெரியும். யார் பேச்சையும் கேக்காம நம்மள போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய் நிறுத்திட்டான். 



Advertisement

இந்தக் குணம் இந்தச் சாதிக்காரனுக்குத் தான் இருக்கும்னு முத்திர குத்தினதெல்லாம் அந்தக் காலம். இப்ப எல்லா குணமும் எல்லா சாதிக்காரனுக்கும் இருக்குங்கிறப்ப எதுக்கு அந்தக் கழுதைய பாத்திட்டு. குணத்த மட்டும் பாருங்க. 

அந்த வகையில அந்தத் தம்பி ரொம்ப நல்லவரு. நான் இங்க இருந்த ஒரு மாசமும் அந்தத் தம்பியத்தான் கவனிச்சிட்டு இருந்தேன். குடும்பத்தத் தாங்குறவன் தான் உண்மையான ஆம்பள. எனக்குப்‌ பூரண திருப்தி. நீங்க என்ன சொல்றீங்க?” என்று முத்து லெட்சுமி கணவனிடம் அதட்டிப் பேசும் போது அண்ணாமலையார் மறுப்பாரா என்ன!

Advertisement

Advertisement

தனபாலனுக்கும் தாய் சொன்னது போல் பத்ரியின் குணத்திலும் பழகும் பண்பிலும் முழு திருப்தி. விக்ரம் நிமிர்ந்து கூட பேசமாட்டான். ஆனால் பத்ரி, சுருதி விசேஷத்தின் போதே அவனையும் ஒரு ஆள் என மதித்து பேசியதும், சிரித்து பழகியதும் பத்ரியை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தது. 

ஆனாலும் தங்கள் இனம் இல்லை என்பதால் தயக்கம் இருந்தது. விக்ரமால் பட்ட அவமானங்கள் கண் முன் வந்து நிற்க, இனி ரிதன்யாவும் சரிகாவும் கௌரவமாக வாழ்ந்தால் போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து அமைதியாகி விட்டான். பத்ரி அவளுக்கு நல்ல தேர்வாகவே பட்டது.

Advertisement

மாரி என்றுமே ரிதன்யாவின் நலன் விரும்பி. மைதிலிக்கு ஏகோபித்த மகிழ்ச்சி. தங்கையின் வாழ்க்கை தளிர்விடப் போகிறதென்று. 

“ம்மா… அவங்க சொல்றதும் சரி தான். நாள வேணும்னே இழுத்திட்டே இருக்காம வெரசா முடிச்சா நல்லது தான். பரீட்சை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வச்சிடுவோம். நம்ம மீனாட்சி அம்மன் கோயில்ல வச்சே செய்வோம்.” என்று வேகவேகமாக ஃபோனிலேயே திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.‌

அது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளுக்குள் சுறுசுறுவென ஆத்திரம் ஏறியது. 

“ஒரு வாரத்துக்கு முன்னாடி எங்கிட்ட என்னமோ! நல்லவன் மாதிரி பேசிட்டு, அவன் அம்மாட்ட வேற மாதிரி பேசிருக்கான். ரெண்டு நாக்கு அவனுக்கு.” என்று கறுவினாள்.

அன்று, கார் சாலையோரம் நிறுத்தப்பட்டதும், வேகவேகமாக ரிதன்யா இறங்க, அவளைத் தடுக்காது அமைதியாக வேடிக்கைப் பார்த்தான் பத்ரி. அவனைத் திரும்பிப் பார்க்காது எட்டுகளை விரைந்து போட்டாள்.

எதைக் கண்டு ஓடுகிறாள் என்று தெரியாது. ஆனால் ஓட வேண்டும் போல் இருந்தது. அவளைக் கண்டு அவளுக்கே பயமா! இல்லை அவனைக் கண்டா! இல்லை திருமணம் என்ற பேச்சைக் கேட்டா! எதுவோ ஒன்று அவளை அச்சுறுத்தியது. சாலையில் இறங்கி அவள் நடக்கும் வேகத்திற்கு போட்டியாக கண்ணீர் இறங்கி கன்னங்களில் நடைபோட்டது. 

திருமணம் என்ற வார்த்தை அவளை அச்சக் குழிக்குள் தள்ளியிருந்தது.‌ அதன் தாக்கம் அந்தப் பெயரைக் கேட்டாலே பூச்சாண்டிக்குப் பயப்படும் சிறு பிள்ளையின் மனநிலைக்குக் கொண்டு சென்றது அவளை. 

நெருஞ்சி முள்ளாய்க் குத்திக் கொண்டே இருக்கும் திருமணத்தை மீண்டும் செய்து கொள்ள வேண்டுமா? அந்த எண்ணமே அவளுக்குள் விவரிக்க இயலாத நடுக்கத்தைத் தர, அவளின் பாதையை மறித்தார் போல் காரை நிறுத்தினான் பத்ரி.

இறங்கி வரவில்லை. அவளை ஏறு என்றும் சொல்லவில்லை.

அவனை அவளும், அவளை அவனும் உக்கிரப் பார்வை பார்த்தபடி இருக்க,

“அன்னைக்கி அதிதி விசயத்த உங்கிட்டச் சொன்னதுக்கு அப்றம் ஒரு க்ளாரிபிகேஷன் கிடைச்சது. இப்பவும் அது கிடைக்கும்னு நம்பித் தான் உங்கிட்ட ஷேர் பண்ணேன். ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்டா… அதிதியோட வெல்விஷர்ட்ட.” என்றவனுக்குத் தன் தனிப்பட்ட விடயங்களை,

முக்கியமாக அவனின் குடும்ப விடயத்தை யாரிடமும் பகிர்ந்து யோசனைகள் கேட்கும் பழக்கம் இல்லை. 

அன்றே அவளிடம் சொன்னது நல்லதொரு தெளிவைத் தந்திருந்தது. அதேபோன்றதொன்றை எதிர்பார்த்து மட்டும் தான் ரிதன்யாவிடம் கூறினான். ஆனால் அவளோ! திருமணம் என்ற பேச்சைக் கேட்டதும் அவனை வெறுத்துப் பார்வை பார்க்கவும் அவனுக்குள்ளும் சிறு கோபம் கன்றியது. 

கிட்டத்தட்ட ஒரு வருடங்களாகப் போகிறது. ரிதன்யாவை அவனுக்குத் தெரியும். அதே போல் அவளுக்கும் பத்ரியைத் தெரியுமே… நெருங்கி பழகிக் கொள்ளவில்லை என்றாலும் பக்கத்தில் இருப்பவனின் குணம் தெரியாதா? 

ஏன் அப்படி பார்ப்பானே!

“நான் உங்கிட்ட, அவளோட விருப்பத்த அப்படியே சொன்னேனே தவிர, அது என்னோட முடிவுன்னு சொல்லல. நீ இவ்ளோ தூரம் ரியாக்ட் பண்றதுக்கு இதுல ஒன்னுமே இல்ல.” என்று சிடுசிடுத்து விட்டு காரை ஓட்டிச் செல்ல, ஆட்டோ ஒன்று வந்து நின்றது அவளின் முன். 

எங்கே செல்லவேண்டும் என்று சொல்லும் மனநிலையை முற்றிலும் இழந்தவள்,‌ அரும்பிய வியர்வை முந்தானையில் துடைத்துக் கொண்டு, இருக்கையில் ஆயாசமாக சாய்ந்து விழி மூடிக் கொண்டாள். உள்ளுக்குள் எதேதோ நினைவுகள்… 

திருமணம் என்பது உடல் உள்ளம் என்று இரண்டுமே இரண்டறக் கலந்த உறவு. நாணயத்தின் பக்கங்கள் போல், இரண்டும் இருந்தாக வேண்டும். 

விக்ரம், ரிதன்யாவின் உள்ளத்தைச் சிதைத்து விட்டான். அது தெரியும் பலருக்கு. ஆனால் அவன் சிதைத்த உடலை யாரிடம் காட்டி அழுவாள். 

இரவு நேர இருட்டில் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் தாம்பத்தியம் மனம் ஒத்து தான் நடக்கிறதா?

இன்றளவும் பல பெண்களுக்கு அது அப்படி இருப்பதில்லை. நரகமாகத்தான் இருக்கிறது. கணவன் என்ற போர்வைக்குள் கற்பழிப்புகளைச் சகித்துக் கொண்டு தான் வாழ்கின்றனர் பலர்.

அந்தப் பல பெண்களில் ரிதன்யாவும் ஒன்று. 

ஒவ்வொரு பஞ்சாயத்தும் விக்ரம் பக்கமே தீர்ப்பு வரவும் அவனுக்குள் இளக்காரமாகிப் போனது. இவளை என்ன செய்தாலும் கேட்க எவனும் வரப் போவதில்லை என்று.

அம்மாவும் மகளும் கூடத்தில் படுக்க, விக்ரமிற்கு மட்டும் தனி அறை இருந்தது அந்த வீட்டில்.

வா என்று உறவுக்கு அழைத்தவனின் பின்னால் செல்ல மறுத்துப் பின்னிக் கொள்ளும் கால்கள். ஆனால் அவனோ அவளின் எண்ணங்களுக்கு சரிகாவைப் பகடைக் காயாக்கி மிரட்டி, தாம்பத்தியத்திற்கு அழைப்பான்.

அவளும் எதிர்க்க முடியாது, உடைகளைக் கலைத்துவிட்டு, கண்களை மூடிக் கொள்வாள், இருபது நிமிடங்களுக்கு‌. 

மறுநாள் நீர் படும் போது தான் உடலில் என்னென்ன இடங்களில் காயங்கள் உள்ளது என்றே தெரியும். இது தொடர்கதையாகிப் போனது.

திருமணம் என்ற பெயரில் பத்தாண்டுகள் அவனால் சிதைக்கப்பட்ட மனத்தையும் உடலையும் தேற்றும் வழி தெரியாது,‌ மகளுக்காக என்று உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜீவனைப் பிடித்துக் கொண்டு உயிர் வாழ்பவளிடம் திருமணம் என்றால் வேறு எப்படி இருக்கும்.

இமை மூடிய விழிகளுக்குள் பரிதவித்த கருமணிகள் கண்ணீரைக்கூட சுதந்திரமாகக் கொட்ட முடியாது, மூடி வைத்தது. மடை மாற்றாது அடக்கி வைக்கப்பட்ட கண்ணீருடன், கண் திறக்கும் போது வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது ஆட்டோ. கூடவே அவளை வரவேற்க சுருதியும் வந்திருந்தாள். 

அவள் இறங்கியதும் ஓட்டுநர் பத்ரிக்கு ஃபோன் செய்து பத்திரமாக இறக்கி விட்டதைக் கூறினார்.‌

அவனின் ஏற்பாடு தான் அது. அவன் தான் அவளின் நிலை கண்டு, வீட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டி, ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு வந்தான். அவரின் அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டவன், சுருதிக்கும் வீடு வரும் படி சொல்லி இருந்தான்.

கூடவே அந்த ஆட்டோவைப் பின் தொடரச் சொல்ல உந்திய மனத்தில் ரிதன்யாவிற்கென ஓர் இடம் தானாவே உறுதி செய்யப்பட்டது.

அடுத்து வந்த நாள்களில் திருமணம் பற்றியப் பேச்சு யாரிடமும் இல்லை. முத்துலட்சுமி தன் பேத்தியுடன் பொழுதைக் கழித்தார். வழக்கம் போல் அதிதி வந்தாள். அவளிடம் பாடம் பயின்று விட்டு, சரிகாவுடன் விளையாடிவிட்டுச் சென்றாள். 

சுதாவின் நலத்தை வீடு தேடி விசாரித்தாள் ரிதன்யா. அவரும் எதுவும் நடந்தார் போல் காட்டிக் கொள்ளவில்லல. 

அப்போதும் சரி அதன் பின் வந்த நாள்களிலும் சரி, பத்ரி அவளின்‌ கண்களிலேயே படவில்லை. அது ஒரு வித ஆசுவாசத்தைத் தந்தது அவளுக்கு. கூடவே தன்னை நிதானப்படுத்திக் கொள்ள அவளுக்கும் நேரம் தேவைப்பட்டது.

நேற்று சுதா மாடி ஏறி வந்தார். அவருக்கு இருக்கும் மூட்டு வலிக்கு நடப்பதே பெரும் பாடு. இதில் முப்பது படிகள் ஏறி வருகிறார் என்றால் அவரின் உள்ளத்து மகிழ்ச்சி அவருக்கு அளித்த சிறப்பு பலம் என்று சொல்ல வேண்டும்.  

அதை உறுதிபடுத்துவது போல் கையில் இனிப்புடன் தான் வந்திருந்தார். 

மூச்சு வாங்க வந்து நின்றவர், “என் மகெ… எ‌ன் மகெ…” என்று இழுத்து, 

“கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டான் லெட்சுமி.” என்றார் சந்தோஷமாக. 

முத்துலெட்சுமி ரிதன்யாவைப் பார்த்தபடி இனிப்பை எடுத்துக் கொண்டு வாழ்த்துக்களைச் சொல்ல, “நான் எதிர்பாக்கவே இல்லை. கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்வான்னு.” என்றபடி ரிதன்யாவிற்கு இனிப்பை ஊட்டி விட்டவர், மகனின் வார்த்தைகளைக் கொட்ட, இனிப்பு கசக்கத் தொடங்கியது ரிதன்யாவிற்கு.

“எனக்கு தன்யாவ கல்யாணம் பண்ணிக்கிறதுல சம்மதம். அவங்க வீட்டுல பேசுங்க.” என்றிருந்தானாம் பத்ரி.

ஜெயசுதா உணர்ச்சிப் பெருக்கில் இருக்க, முத்துலெட்சுமியும் அவரின்‌ கரங்களைக் காட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தினார். அவ்வளவு தானா என்று நினைத்த தன் மகளின் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சக் கீற்று கிடைத்துள்ளது என்ற நிம்மதி களிப்பு அவருக்கு. 

இரு தாயும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒளி கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் கூத்தாடினர்.

முத்துலட்சுமி, உடனே கணவனுக்கும் மகனுக்கும் ஃபோனைப் போட்டு விடயத்தைச் சொல்லி நாள் குறிக்க ஏற்பாடு செய்து விட்டார். 

மகளை எளிதில் வளைத்து விடலாம் என்று அசால்ட்டாக நினைத்துவிட்டார் போலும்.

அதை மகள் அறியாமல் இருப்பாளா என்ன! 

நான் வளைந்து கொடுக்க மாட்டேன் என்ற உறுதியுடன் பத்ரிக்கு அழைத்தாள். அது செல்லவே இல்லை. சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. 

குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, அது எப்பொழுது நிறம் மாறும் என்று புதையலைப் பூதம் காத்தது போல் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரு நிமிடங்களுக்கு ஒரு முறை என்று புலனத்தைக் கண்காணித்துக் கொண்டே இருக்க, நிறம் மாறியது நள்ளிரவு பன்னிரண்டுக்கு மேல்.

மாறிய மறுநிமிடமே அவனுக்கு அழைத்து விட்டாள். 

“கார்ல வச்சி, ஃப்ரெண்ட்ஸ், வெல்விசர்…. இது என்னோட முடிவு கிடையாது… அது இதுன்னு சொல்லிட்டு, சுதா ஆன்டிட்ட கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிருக்கீங்க. யாரக் கேட்டு அப்படி சொன்னீங்க.” என்று படபடவென்று பொரிந்தவள், பதில் வரவில்லை என்றதும், 

“ஹலோ… ஹலோ…” என்றாள் காதில் இருந்ததை எடுத்து பார்த்தபடி. 

இணைப்பில் இருக்கிறான் தான். ஆனால் அவன் பேசுவது கேட்கவில்லை என்று எழுந்து வெளியே சென்றாள்.

“ஹலோ… பத்ரி… பத்ரி… இருக்கீங்களா… ஹலோ…” என்று தணிந்த குரலில் பேசிக் கொண்டே இருக்க, 

ஃபோனை சற்று தூரம் வைத்து விட்டு, படுக்கையில் மல்லாந்து கிடந்து அவளின் குரலில் இருந்த மயக்கதை அனுபவித்துக் கொண்டிருந்தவனை யார் தான் எழுப்பி விடப் போகின்றனரோ… 

கடைசியாக கேட்ட ஹலோ சத்தத்தில் அவளின் கோபத்தைத் துணுக்குற்று, “ம்…” என்றான் ஒற்றை வரியில். 

“ம்…மா!! லைன்ல தான் இருக்கீங்கன்னா ஏன் பேசாம இருந்தீங்க.” என்று கடிய,

“உங்குரல்ல இருந்த வசியம் என்னை மயக்கிடுச்சின்னு சொன்னா நம்புவியா?” என்றதும் அமைதியாகி விட்டாள்.

“பாத்தியா நான் பேச ஆரம்பிச்சதும் சைலன்ட் ஆகிட்ட… அதுக்கு தான் நான் பேசல.”

மௌனம் கலையவே இல்லை. 

“சரி… பேச எதுவும் இல்லன்னா நான் வைச்சிடட்டுமா?”

“இல்ல… பேசணும்… அது… சுதா ஆன்டி நேத்து சொன்ன விசயமா…” என்று இழுக்க, 

“தன்யா… நான் இப்ப எங்க இருக்கேன்னு தெரியுமா?”

“இல்ல.”

“துபாய்ல. எர்லி மானிங் ஃபோர் ஓ க்ளாக் ஃப்ளைட். குறைஞ்சது டூ ஹவர்ஸாது நான் தூங்கி எழணும். சோ…”

“ஆனா நான் பேசணுமே…”

“ஓகே… நான் குவார்ட்டர்ஸ் லொகேஷன் வாட்ஸ்அப் பண்றேன். நீ மார்னிங் குவாட்டர்ஸ் வந்திடு. அங்க வச்சி பேசலாம்.”

குவாட்டர்ஸ் என்றால் அவனது வசிப்பிடத்திற்கா? 

“இல்ல… அங்கலாம் என்னால வரமுடியாது. பாக்குறவங்க என்ன நினைப்பாங்க. வேண்டாம். நான் ஏர்போர்ட் வந்தா உங்கள பாக்க முடியுமா?”

“ம்… முடியுமே… வா…” என்றவன், 

“குட் நைட் தன்யா.” என்று விட்டு வைக்க, அவனின் குரலில் இருந்த உற்சாகம் அவளுக்கு இடித்தது. 

ஆனாலும் இது நடக்காது.‌ நான் ஏற்கனவே திருமணமானவள். விவாகரத்தும் ஆனவள். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. ஏற்கனவே ஒருவனோடு வாழ்ந்து முடித்தவளை மணம் செய்து கொண்டு என்ன சுகப்படப் போகிறான் இவன். எதற்கு இந்த வீண் புரட்சி. என்றெல்லாம் ஓடினாலும், காலையில் அவனைச் சந்தித்து என்ன பேச! எப்படி பேச என்ற ஒத்திகையும் ஓடியது. 

மறுநாள்‌ விடிந்ததும், சரிகாவைப் பள்ளி அனுப்பி விட்டு, ரயில் ஏறி அமர்ந்தாள். கிண்டியில் தன் பயணத்தை முடித்துக்‌ கொண்டவள், தலைநகரின் பிரம்மாண்டமான பொது‌ச்சேவை நிலையத்தின் பிரமிப்பில் சொக்கித் தான் போனாள்.

அதே கண்டு மட்டுமல்ல, விமானச் சிருடையான  வெள்ளை உடையில், வசீகரச் சிரிப்புடன், கம்பீரமாக நடையுடன் அவளை நோக்கி வந்த பத்ரி நாராயணனின் கவர்ச்சியிலும் தான். 

கானம் இசைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!