Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-13(1)

அத்தியாயம்  – 13 (1)
எழிலனுக்கு அன்றைய நாள் சற்று டென்ஷனாக கடந்திருந்தது. நிலவன் மற்றும் எழிலனின் நண்பர்கள் பிரச்சினை மதிய இடைவேளையில் நடந்திருந்தது. அதைச் சரிக்கட்டி, மீண்டும் நிலவனைச் சந்தித்துப் பேசியது எல்லாம் அப்போதே நடந்தது தான். நிலாவிற்கு அட்வைஸ் செய்து விட்டு வந்தாலும், அவள் கேட்பது சந்தேகம் தான் என்றே எழிலனுக்குத் தோன்றியது. அதற்கு ஏற்றார் போல மாலை வகுப்புகள் முடிந்ததும், டிபார்ட்மெண்ட் விட்டு வெளியே வரும் வேளை நிலாவைப் பார்த்தான் எழிலன். எப்போதும் அப்படி சந்திக்க நேர்கையில் சின்னதாக ஒரு சிரிப்பும், அழகான தலையசைப்பும் கொடுப்பாள் நிலா. இன்றைக்கு தலைக் குனிந்தபடிச் சென்று விட்டாள்.
எழிலன் ஓரளவு இதை எதிர்பார்த்தான் தான். அதனால் நிலாவின் செயல் அவனைப் பாதிக்கவில்லை. ஆனால் அவளின் அந்தச் சின்ன சிரிப்பு காணாமல் அவன் தவிப்பான் என எழிலனே எதிர்பார்க்கவில்லை. நிலா அவனைக் கடந்து சென்ற பின்பும் எழிலனின் பார்வை அவளையேத் தொடர்ந்தது. இது அவனுக்குப் புதிது. அந்த நேரத்தில் மற்றவர்கள் கவனிக்கும் முன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான். ஆனால் உள்ளூர நிலாவின் சிரிப்பைக் காண ஏக்கம் வந்தது.
இந்த மனநிலையில் வீட்டிற்கு வந்தவனுக்கு மாற்றம் தேவைப்பட எஸ்பிபி அவர்களின் பிளேலிஸ்ட் போட்டு விட்டான். எப்போதும் ஷஃபில் செய்து தான் இருக்கும். எதிர்பார்க்காமல் கிடைக்கும் நல்ல பாட்டில் நமது மனதும் தானாகவே குதூகலிக்கும் தானே. அந்த உணர்வு எழிலனுக்கும் மிகவும் பிடிக்கும்.


Advertisement

அப்படி இன்றைக்கு அவனின் பிளேலிஸ்ட்டில் வந்த பாட்டு ‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று’ பாடல். எழிலன் கண்கள் மூடிக்கொண்டு அந்தப் பாடலை ரசித்து உடன் பாட, கண்களுக்குள் நிலாவின் முகம்.
அதிலும் ‘சிரிக்கும்போது கண்ணில் மின்னல் தெறித்து ஓடுதே அதுவா’ என்ற வரிகளில் நிலாவின் சிரிப்பு தெரிய, சட்டென்று கண்களைத் திறந்து விட்டான் எழிலன்.
எழிலனும் அந்த வரிகளில் சிரித்து விட்டான். பின் தன்னைச் சுற்றிப் பார்க்க, நல்லவேளையாக அவன் அறையில் இருந்ததால், யாரும் கவனிக்கவில்லை.

Advertisement

பிரேஷர்ஸ் பார்ட்டியில் நிலாவின் நடனம் பார்த்தத்திலிருந்தே உள்ளூர ஒரு மயக்கம் தான். ஆனால் அதை பாசிங் கிளவுட்ஸ் என்று தான் நினைத்தான் எழிலன். இப்போது அப்படி இல்லையோ எனத் தோன்றியது. அத்தோடு இதை எந்த விதத்திலும் வெளிக் காட்டவும் யோசனையாக இருந்தது.

Advertisement

நிலவனின் கெடுபிடி பார்த்தப் பின், நிலா அவனை மீறி தன் மேல் நேசம் கொள்வாளா என்ற சந்தேகம் வந்தது. அத்தோடு அவனின் ஆசையான பேராசிரியர் வேலை இவர்கள் கல்லூரியிலே கிடைக்கும் வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஏற்கனவே ஒரு முதுகலைப் படிப்பு இருக்கவே, அதை வைத்து எழிலனுக்கு அசிஸ்டண்ட் புரொஃபசர் போஸ்ட் தரத் தயாராக இருந்தார்கள்.
தற்போது படித்துக் கொண்டிருக்கும் எம்ஃபில் கோர்ஸ் முடிந்ததும், பேராசிரியர் தகுதித் தேர்வும் எழுதப் போகிறான். நிலாவின் மீது ஏற்படும் அன்பு மற்றவர்கள் கண்களை உறுத்தக் கூடாது என்றும் நினைத்தான் எழிலன்.
அதனால் நிலாவின் மேல் தோன்றிய பிரியத்தை அப்படியே மறைக்க முடிவு செய்தான். முதலில் தினமும் அனுப்பும் காலை வணக்கம் செய்தியை நிறுத்தினான் எழிலன். அவளுக்கு மட்டும் நிறுத்தினால் சந்தேகம் தோன்றும் என்பதால், ஃபோன் மெமரி ஜாம் ஆவதால் காலை வணக்கம் ஸ்டேட்டஸ் வைப்பதாகவும், முக்கியமான விஷயங்கள் மட்டும் வாட்ஸ்அப்பில் பேசிக் கொள்ளலாம் என்றும் எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பினான். மற்றவர்கள் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள நிலாவிற்கு தன்னால் தானோ எனச் சங்கடம் உண்டானது.

Advertisement

அதைத் தனியாக எழிலனுக்கு மெசேஜ் அனுப்பிக் கேட்டாள் நிலா.
அதற்குப் பதிலாக “உன்னால் மட்டுமில்லை. ஆனால் உன் அண்ணன் கூறியது போல கல்லூரி சம்பந்தமாக மட்டுமே பேசுவது தான் எல்லோருக்கும் நல்லது என்று தோணியது. நான் பேச ஆரம்பித்தால், மற்றவர்களும் அதில் கலந்து கொள்வார்கள். உன் அண்ணன் பார்த்துவிட்டு மறுபடி பிரச்சினை வருவதில் எனக்கு இஷ்டம் இல்லை. அதான் எல்லோருக்கும் பொதுவா இப்படி மெசேஜ் போட்டேன்” எனக் கூறினான் எழிலன்.
இது நிலாவிற்கு வருத்தம் கொடுக்கும் என எழிலன் அறிவான் தான். அவனுக்கும் வலித்தது. ஆனால் நிலவன் மீண்டும் தன்னிடம் இப்படிக் கூற வழி கொடுக்கக் கூடாது என்பதில் திடமாக இருந்தான். இருவருக்கும் ஒருவகையில் நல்லது என்றும் நினைத்தான் எழிலன்.
அடுத்து இருவரும் அதிகம் சந்திப்பது கல்சுரல் நிகழ்ச்சி ஏற்பாடுகளின் போது தான். அதைத் தவிர்த்தாலே போதும் என நினைத்தான் எழிலன்.
இவர்கள் கல்லூரியில் கல்சுரல் முக்கியமான அம்சம். நூற்றாண்டுகளைக் கடந்த கல்லூரி என்பதால், அந்த மாவட்டத்தில் முக்கியமான பல நிகழ்வுகளுக்கு இவர்கள் கல்லூரி மாணவர்கள் தான் பொறுப்பு ஏற்று இருப்பார்கள். வாரம் ஒருமுறை ஏதோ ஒரு விழா நடக்கும். அதனால் எழிலனுக்கும் தொடர்ந்து வேலை இருக்கும்.
மறுநாளில் இருந்து எழிலனும் கல்சுரல் அகட்டிவிட்டீஸ் நடக்கும் பக்கம் செல்லாமல் பார்த்துக் கொண்டான். அப்படியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும். நிலா இல்லாத நேரம் பார்த்துச் சென்றான்.
நிலா ஹாஸ்டலில் இருப்பதால் அவர்களுக்கு ஆறு முப்பது மணிக்கு மேல் கேம்பஸ் உள்ளே இருக்க அனுமதி கிடையாது. எழிலன் அதைக் கணித்து, ஆறு மணிக்கு மேல் தன்னுடைய கல்சுரல் சம்பந்தமான வேலைகளை வைத்துக் கொண்டான்.
நிலாவும் நிலவன் பேச்சை உடனடியாக மீற விரும்பவில்லை. தற்போது கலந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பிராக்டிஸ் செய்து விட்டு, அடுத்த அடுத்த விழாக்களுக்கு பெயர் கொடுக்காமல் தவிர்த்தாள். பேராசிரியர்களும், தோழிகளும் ஏன் எனக் கேட்ட போது உடல்நலம் மற்றும் படிப்பைக் காரணமாகக் கூறினாள்.
எழிலன் நினைத்ததை விட, நிலா அதிகமாகவே காயம் பட்டுப் போனாள். நிலா இந்தக் கல்லூரி வந்த பின் தான் தன்னுடைய குடும்பத்தினர் விட்டு மற்றவரைப் பற்றி அதிகம் சிந்திக்கிறாள். அதில் எழிலன் தான் முக்கியமான ஒருவன். அவனே விலகியதில் நிலாவின் உள்ளம் வலித்தது.
அண்ணனின் தடையை மீறி அவளால் ஒன்றும் செய்ய முடியாது தான். ஆனால் மனதில் வருத்தம் ஏற்படுவதையும் மறைக்க முடியவில்லை. அதுவே அவளின் முகம் களையிழந்து காணப்பட்டது.
நிலவன், எழிலன் இருவருமே அதைக் கவனித்தனர். நிலவனுக்கும் எழிலன் நிலாவைத் தவிர்ப்பது நன்றாகவேத் தெரிந்தது. அந்த குரூப் மெசேஜ் பற்றி இவனின் கல்சுரல் நண்பர்கள் சிலர் கூறினர். நல்லது தான் என்றும் நினைத்தான். நிலாவின் முகவாட்டத்திற்கு காரணம்  கல்சுரல்களில் கலந்து கொள்ள முடியதது தான் என எண்ணினான் நிலவன்.
நிலவனுக்குத் தங்கையின் மேல் இன்னும் பாசம் அதிகமாகியது. தன் வார்த்தைக்காக நிலா விட்டுக் கொடுத்திருக்கிறாள் என எண்ணினான். அவளை உற்சாகமாக்க அவளின் விடுமுறை பொழுதுகளை அருகில் இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று, நிலாவோடு நேரமும் செலவு செய்தான் நிலவன். அதில் நிலவழகி முகமும் கொஞ்சம் தெளிந்தது.
இப்படியே நாட்கள் சில மாதங்களைத் தொட்டிருக்க, அந்த வருடத்தின் முதல் செமெஸ்டெர் தேர்வுகள் வந்தன. எல்லோருமே அதில் பிசி ஆகினர். நிலவன், எழிலன் இருவருக்குமே இந்த தேர்வுகள் முடிந்ததும், ப்ராஜக்ட், பேப்பர் பிரசன்டேஷன் என கல்லூரி வருவதற்கே வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அதனால் நண்பர்களோடு வேறு நேரம் செலவிட வேண்டியிருந்தது.
இந்த நேரத்தில் நிலாவிற்கு மீண்டும் எழிலன் நினைவுகளின் தாக்கம் வந்தது. படிப்பில் கெட்டியாக இருந்தாலும், மற்ற நேரங்களில் அவனின் நினைவு தான் அவளுக்குள்ளே.
எழிலனோடு பழகியதில், எஸ்பிபி பாடல்கள் தவிர்த்து வேறு பாடல்களைத் தேர்வு செய்யுமாறு நிறைய பேர் கேட்டனர். ஆனால் அவனின் பதில் நோ தான். அதை எல்லாம் நினைத்துப் பார்த்த நிலா, மனதிற்கு மாற்றம் தேவைப் படும்போது எஸ்பிபி அவர்களின் பாடல்கள் கேட்க ஆரம்பித்தாள். அவரின் உணரவுப்பூர்வமான குரலில் தன்னையறியாமல் மூழ்க ஆரம்பித்தாள்.
இன்றைக்கு நிலா கேட்ட பாடல் ‘வனக்குயிலே குயில் தரும் கவியே’ பாடல்.  தன் நாயகியைத் தேடும் நாயகன் தான் பாடுகிறான். ஆனால் இந்த பாடல் நாயகிக்கும் பொருந்தும் அளவிற்கு இருந்தது. அதிலும் நிலாவின் தற்போதைய மனநிலை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக ‘படித்தால் இனித்திடும் புதினம். உனை நான் மறப்பது கடினம்’ வரிகள் அப்படியே நிலாவின் எண்ணங்களை வெளிப்படுத்தியது.
இதற்கு முன்னும் கேட்டிருக்கிறாள் தான்.  ஆனால் இந்த உணர்வு புதிது. இப்போது கேட்கும்போது எஸ்பிபி அவர்களின் குரலில் எழிலனின் உருவம் மனதிற்குள் தோன்றியது. திருமதி பாரதி பாஸ்கர், எஸ்பிபி அவர்கள் சம்பந்தபட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெண்களின் உள் மனதின் ஆதர்ச நாயகனின் குரல் எஸ்பிபி என்று கூறினார். அது மெய் என உணர்ந்துக் கொண்டாள் நிலவழகி. அவளின் ஆழ் மனதின் நாயகன் எழிலன் எஸ்பிபி அவர்களின் குரலில் தான் தோன்றினான்.
இதை எல்லாம் நிலா யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தனக்குள்ளே வைத்துத் தானே அனுபவித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!