கனவுகள் கவிதைகள் ரகசியம் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
Advertisement
நாளும் படித்தேன் 🎼
ஆட்களின் வரவு அதிகமிருந்தது அந்த டீ கடையில். ஒரு காரணம் அதனைச் சுற்றியிருக்கும் விசாலமான இடமாக இருந்தாலும் மற்றொரு காரணம் நிச்சயம் அதன் சுவைதான்.
“இருந்தாலும் இந்த ஆளு இந்த வருக்கி மட்டும் போடலைன்னா, ஒரு ஈ காக்கா கூட இந்த கடை பக்கம் சீண்டாது” என்றான் நிமலன்.
“மாடு மாதிரி நாலு டீய ஒத்த ஆளா குடிச்சப்ப இனிச்சதோ?” பேரழகன் அவனைப் பார்த்துப் புருவத்தை உயர்த்த, “பெருசு, அவன் ஓசில கிடைக்கவும் அள்ளித் தட்டுறான்” என மேஜையில் இருந்த காகிதங்களைச் சரியாக அடுக்கியபடியே கூறினான் சுசிகரன்.
“இன்னைக்கு யார்டா பணம் கொடுக்கப் போறீங்க?” தமிழ்ச்செல்வன் கேட்க, மொத்த தலையும் அவனைத் திரும்பிப் பார்த்தது. அதில் அனைவரையும் பார்த்தவன், “என்ன பார்வை இங்கிட்டு திரும்புடுது? சல்லி பைசா இல்லை. படம் ரிலீஸ் ஆனதும் தான் சோத்துக்கே எனக்குக் காசு” என்றான்.
நிமலன், “உனக்கு நாங்க பண்ண மாட்டோமா தல? இவனுங்க யார் கொடுக்கலைனாலும் நான் உன் செலவைப் பார்த்துக்கிறேன்” என்றான்.
பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்து இதழ் விரித்தவன், வசனங்களில் சில திருத்தங்களைச் செய்தபடியே, “பதிலுக்கு என்ன வேணும் சாருக்கு?” என்றான் தமிழ்.
“இந்த வாரம் என்னோட டியூட்டி பாத்ரூம் கழுவுறது…”
“நிமலா…” பேரழகன் அவனுக்கு எச்சரிக்கை விடுக்க, அதற்குள் தமிழ், “பண்ணிடுறேன்டா” என்றவன் மேலும், “ஷார்ட் ஃபிலிம் ஒன்னு பண்ணணும்னு சொன்னியே, ஒரு வாரம் லீவு தர்றேன், போயிட்டு வா” என்றான்.
பேரழகன் மற்றும் சுசிகரனுக்குத் தமிழ்ச்செல்வனைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஆனால் அவனோ மேஜையில் பரவியிருந்த பாதி காலியான குழம்பியை ஓரம் வைத்து, சரிபார்த்து வைத்திருந்த படத்தின் நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்தபடியே, “அந்த எண்ணெய் ஏதாவது பேப்பர்ல படட்டும், அப்புறம் இருக்குடா உங்களுக்கு” எனப் பேச்சை அழகாய் மாற்றியவனை, ‘என்ன மனிதன் இவன்!’ என்றுதான் பார்க்கத் தோன்றியது பேரழகனுக்கு.
சுசிகரன், “என்ன கதைடா, என்கிட்ட சொல்லவே இல்லையே?” என, நிமலன் பார்வை நக்கலாய் தமிழ்ச்செல்வன் மேல் பட, “சவுண்ட் என்ஜினீயர் ஹீரோ, ஹீரோயின் ஜவுளிக்கடை ஓனர்” என்றான்.
அவனது பதிலில் தமிழ்ச்செல்வன் சத்தமாகச் சிரித்துவிட, இதற்கொன்றும் குறைச்சலில்லை என்னும் விதமாகப் பார்த்து வைத்தனர் மற்ற மூவரும்.
“வர வர நீ ரொம்ப பர்சனலா அடிக்கிறடா. சரி தல, நீ பாட்டுக்குக் கதையைச் சொல்லிட்டு வந்துட்ட, எந்த ஸ்கிரிப்ட் தான் முடிவாகியிருக்கு?”
“அந்த லவ் ஸ்டோரி தான்.”
பேரழகன், “டேய், நீ இன்னும் அந்த கதையை விடலையா?” என்ன, சுசிகரன், “பாவா, தல இருக்கிற ஃபார்ம்க்கு இப்போ இந்த படம் தான் ஹிட் அடிக்கும்” என்றான்.
தமிழ்ச்செல்வன், “பரவாயில்லைடா, உங்களுக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு. எனக்கு இது பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னேன். இந்த சரத் என்ன பில்டப் கொடுத்தாரோ தெரியலை, நீ சொன்னா சரியாத்தான் இருக்கும், ஷூட்டுக்குத் தேதி சொல்லுன்னு சொல்றார்” என்றான்.
பேரழகன், “பாரு, சொதப்பப் போற தமிழு” என அவனது சிரிப்பில் கடுப்பானவன், “யோவ் யோவ், பெரிய மனுஷன் மாதிரி ஒரு நாளாவது பேசுறியா?” என்றான்.
தமிழ்ச்செல்வனின் அமைதியான சிரிப்பின் பின்னால் ஒரு அமைதியான துணிச்சல் தெரிந்தது. “ஹீரோ டம் பேர்சன்.”
அதிர்ந்த நிமலன், “மியூசிக் டைரக்டர்னு சொன்ன தல?”
“ஆமா” என்றவன் பார்வை அவனுக்கு எதிரே காலியாக இருந்த நாற்காலியில் படிந்தது. மெல்லிய சிரிப்பு. பிறகொரு சலிப்பு, அமைதியின் சலிப்பு.
“உனக்கு என்னமோ ஆயிடுச்சு தமிழு. ஹீரோ வாய்ஸ் இல்லாம எப்படிப் படம் ஓடும்? அதுவும் எவ்வளவு பெரிய ஆளை வச்சு எடுக்கப் போற, மனுஷன் ஆக்ஷன் டயலாக்ஸ் பேசி பேசியேதான் இன்னைக்கு ஒரு பெரிய கூட்டத்தையே பிடிச்சு வச்சிருக்கான்” என எச்சரிக்கையாய்ப் பேரழகன் கூற, அவன் கண்ணும் கருத்தும் அங்கில்லை. பார்வை எல்லாம் அந்த ஆள் இல்லாத நாற்காலி மேல் தான். அவளுக்கான காத்திருப்பு அவனிடம் இல்லை, அவள் வருகையை எதிர்பார்த்தும் நிற்கவில்லை. ஆனால், அவள் இடம் எப்பொழுதும் போல் காத்திருந்தது, அவன் காதலைப் போல்.
“நூறு பேர் இருக்கிற ரூம்ல ஒருத்தன் மட்டும் யார் கண்ணுக்கும் தெரியறது இல்லை. அந்த ஒரு நாள் எல்லாம் மாறும், அன்னைக்கு அவனோட குரல் மத்த எல்லாரையும் விடப் பெருசா கேட்கும். இதுதான் ஒன் லைன். சைலன்ஸ்க்கு இருக்கிற பவர் என்னன்னு சைலன்ஸ வச்சே காட்டணும்னு தோணுதுடா.”
“நீ ரொம்ப டீப்பா யோசிக்கிற தல, அவ்வளவு ஈஸி இல்லை, சேலஞ்சிங் ப்லாட் தான்” சுசிகரனின் கூற்றில் சிரித்த தமிழ், தலையை அசைத்தபடியே தன்னுடைய சட்டையிலிருந்த பேனாவை எடுத்து டம்ளர் அருகே வைத்து, அதில் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெயரைப் பார்வையாலே வருடினான்.
‘சக்தி’
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனது படத்தில் அவள் பணியாற்றிய காரணத்தால், அவளது பெயர் திரையில் வந்த முதல் முறை அது. அந்தச் சந்தோஷத்தில் அவள் விளையாட்டாக அவனிடம் கொடுத்த அவளுடைய பேனா அது. புதுக் கதை அவன் எழுதும் பொழுதெல்லாம் அவனோடு அது இருக்கும்.
“என் வாழ்க்கையையே பார்த்துட்டேன், இதைவிட ஒரு சேலஞ்சிங் ப்லாட் வந்தா பயப்படுறேன்” என்றவனின் பதிலில் அனைவருக்கும் மென்சிரிப்புதான் வந்தது.
“சரிடா கிளம்புங்க, போய் சமைங்க, பசிக்க ஆரம்பிச்சிடுச்சு.”
“தல, இங்க இருக்கிற கப்ல அஞ்சு நீ குடிச்சது, அதையும் மீறி பசிக்குதா உனக்கு?” – நிமலன்.
“ம்ம்ம் இருக்கும்ல… ரெண்டு நாள் முந்தி சாம்பார் சாப்பிட்டு வயிறு சரியில்லைன்னு பாத்ரூம்ல இருந்தியே தல, அது இவன் போட்ட எக்ஸ்பயர் ஆன சிக்கன் மசாலாவோட தாக்கம் தான்!”
‘கடவுள் செஞ்ச புண்ணியம், உங்க கூட நான் இல்லாதது’ மனதில் பேரழகன் தன் மனைவிக்கு அத்தனை நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
தமிழ் நெஞ்சில் கையே வைத்துவிட்டான், “சாம்பார்ல சிக்கன் மசாலாவா? டேய் கொலைகாரா!”
சுசிகரன், “சரிதான் தல, இவனுக்கு உன் போஸ்ட்க்கு வரணும்னு ஆசை, அடிக்கடி சொல்லுவான்” என்ன, நிமலன், “அடேயப்பா, இவரு பெரிய அமைச்சர், இவரு போஸ்ட்டுக்கு வர சதி பண்றோம்!” என்றான்.
“தொண்ணூறுக்கும் தொளாயிரத்துக்கும் வித்தியாசம் தெரியாத உனக்கு அமைச்சர் பதவி கேக்குதாக்கும்!” அவனைக் கேலி பேசிய பேரழகன் அதற்கும் ஒரு கதையை எடுத்துவிட, அர்த்தமற்ற பேச்சுகளும் அரட்டைகளும் பாகுபாடு பார்க்காமல் அவ்விடத்தை நிறைத்தன.
அன்பரசிக்குக் காலையிலிருந்து திடீரெனக் காய்ச்சல் வந்திருக்க, மருத்துவரிடம் சென்று வந்தனர். உண்பதற்கு எதுவும் பிடிக்கவில்லை என அவள் கூற, இந்த வருக்கி நினைவில் வந்தது. அதனால் இரவுக்கு இங்கிருக்கும் வருகையை வாங்கலாம் என வந்தவள், அவ்விடம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அவர்கள் வழக்கமாய் அமரும் இடத்தைப் பார்க்கும் ஆர்வத்தோடு நோக்கினாள்.
அவள் எண்ணங்களின் நாயகனே அங்கு அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றி இருக்கும் அவன் கூட்டம் இல்லை, இரவின் காற்றில் அழகாய் ஆடிய சிகையை ஒரு மென்சிரிப்போடு ஒதுக்கிவிட்டுத் திரையைக் கண்மூடி ரசனையாய் கவனித்தான். மெல்ல அவனுக்குத் தெரியாமல் நெருங்கியவள் அவன் மடிக்கணினித் திரையைப் பார்க்க, அவனது முதல் குறும்படம் ஓடிக்கொண்டிருந்தது.
பார்த்தவளுக்குத் திக்கென்று இருந்தது. அந்தத் திரைக்காட்சி அவளுக்கு மறக்குமா, அவள் குரல் கொடுத்த முதல் காட்சியாச்சே! அதில் ஒரு வியாபாரியிடம் இவள் சண்டையிடுவது போல் வசனங்கள் இருக்கும். அதனை எதார்த்தமாக அவளைப் பேச வைக்க அவன் பட்ட பாடு இப்பொழுதும் நினைத்தால் சிரிப்பு வரும். அதே சிரிப்புதான் போல அவனிடத்திலும் இருந்தது.
அந்தச் சிரிப்பின் அர்த்தம் நினைவுகளாக ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அவன் காதலின் ஆழத்தை அவள் கொடுத்த பேனாவின் மூலம் அவன் கிறுக்கிக்கொண்டிருந்தான். அவள் பெயரைப் பூஜிக்கப்பட வேண்டிய மந்திரம் போல் அத்தனை ரசிப்போடு வரைந்தன அவன் விரல்கள். அவனது மென்மையான செயலில் இவளுள் பெரும் பூகம்பம்.
அந்தக் காட்சி முடிய மெல்ல அசைந்தவன் செயலில் இவள் வேகமாகப் பின்வாங்கினாள். தமிழ்ச்செல்வன் தன்னுடைய உடைமைகளையெல்லாம் பையில் அடைத்துக்காகிதங்களை அடுக்க, அவன் பார்வை மொத்தமும் சக்தியின் பெயர் சரமாரியாகத் தீட்டப்பட்டிருந்த காகிதத்தில் நிலைத்திருந்தது.
இறுதியாக அந்தக் காகிதத்திற்கு வந்தவன் அதனை மடிக்கும்பொழுதே அவனின் யோசனை தெரிந்தது. சக்தியின் பார்வை கூர்மையானது அவன் மேல். மடித்த காகிதத்தைக் கையில் எடுத்தவன், கண்மூடி அதனை நெற்றியில் வைத்து கண்ணோடு சேர்த்து அழுத்தினான்.
மனதில் அப்படி ஒரு வலி. அந்தப் பெயருக்குக் கூடத் தான் சொந்தமில்லை என்கிற உண்மை நிறையவே சுட்டது. எப்பொழுதும் நெஞ்சோடு அணைத்து இதம் கொள்பவன், இன்று கண்ணில் வைத்துப் பெயரை நெஞ்செல்லாம் நிறைத்தான். அவளைக் கண்டதும் படையெடுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கு இனி அணைகட்டி நிறுத்த வேண்டும். அவள் எண்ணங்களில் மிளிரும் இதயத்திற்கு இனி இருளே துணை. எல்லாவற்றுக்கும் தடைதானே இனி!
இரவு படுக்கையை ஆக்கிரமித்திருந்தவளின் எண்ணத்தை மொத்தமும், இரவு அவள் அன்னை கூறிய செய்தி ஆக்கிரமித்திருந்தது. நாளை வேலை நிமித்தமாகச் சஞ்சீவ் சென்னை வருவதாகவும், செல்லும் வழியில் இவளைப் பார்த்துவிட்டுப் போவதாகவும் தகவல்.
சஞ்சீவை அவளுக்கு இன்று நேற்றல்ல, பிறந்ததிலிருந்தே நன்கு பழக்கம். அவளைக் கேலி செய்து சுற்றும் நவிரனிடமிருந்து காப்பாற்றுவதெல்லாம் அவன்தான். அழகாய் அவளைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தைத் தன் சிரிப்பாலேயே வரைந்து வைத்திருப்பவன். அவனோடுதான் திருமணம் என ஓரளவு யூகிக்க வைத்திருந்தது வீட்டினரின் நடவடிக்கை. திடீரெனத் திருமணம் எனப் பேச்சு எழுந்தபோதும் கூட ஒரு தயக்கமும் இருக்கவில்லை. சஞ்சீவோடு கனவுலகில் உலா வர வேண்டியவள், அவன் வருகையை எண்ணித் தயங்கி நிற்க வேண்டிய சங்கடமான சூழல்.
உறங்கா இரவாகிப் போன அந்த நாளில், வேலையில்தான் சக்தியின் முழு கவனமும் இருந்தது. இயல்பாய் நாளை நகர்த்தியவள் சஞ்சீவ் வருகைக்காகக் காத்திருக்க, அவன் வந்தவுடன் இரவு உணவை முடித்து, இருவரையும் மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்திருந்தாள் அன்பரசி, அவர்களுக்குத் தனிமை கொடுத்து.
“எப்படி இருக்க சக்தி?” நிலவை வெறித்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் மௌனமாக நிற்கும் பெண்ணைப் பார்த்து நின்ற சஞ்சீவ் கேட்க, “நல்லா இருக்கேன் அத்தான்” என்றாள் நிலாவிடமிருந்து பார்வையை அகற்றாமல்.
“வேலை ரொம்ப இருக்கா? ஆள் ரொம்ப டல்லா இருக்க…”
“இல்லை, அப்படியெல்லாம் இல்லை” என்றாள்.
“கை காயம் எப்படி இருக்கு, ஆறிடுச்சா?” கேள்வியோடு இயல்பாக அவள் கையைப் பற்றி அவன் பார்க்க, இதயத்தில் பூகம்பமே வெடித்தது போலப் பதற்றம் வர, கையைச் சட்டென உருவிய பிறகுதான் தன் செயலின் வீரியம் புரிந்தது அவளுக்கு. பயத்தோடு சஞ்சீவைச் சிரம் உயர்த்திப் பார்த்தவள் கண்ணில் சட்டென நீர் திரண்டது.
“ஹே சக்தி, என்னாச்சு? வலி இன்னும் இருக்கா?” அவனின் இனிப்பான அக்கறை அவளை இன்னும் கலங்கச் செய்தது. பதற்றம் நிறைந்த அவன் முகத்தை, முத்துக் கண்ணீர் சிந்தப் பார்த்தவளின் பால் முகம் வேதனையில் சிவந்து போனது. இல்லை எனத் தலையசைத்தவளை நம்ப இடம் கொடுக்கவில்லை அவள் முகம்; வேதனையின் சாயல் அப்பிக்கிடந்தது.
“கல்யாண நாள் தள்ளி வச்சதை யோசிச்சு குழம்பி இருக்கியா?” அவன் கேள்வியில் அவள் இன்னும் குழம்பி நின்றாள். கண்ணில் சிறு நிம்மதி வந்ததை அவன் தன் பிரமை என நினைத்துக்கொண்டான்.
“மறந்துட்டேன் பாரு” சட்டைப்பையிலிருந்து இஞ்சி மரப்பாவை எடுத்து அவளிடம் நீட்டினான், “உனக்குத் பிடிக்கும்ல?”
அவன் நீட்டிய மிட்டாயை வாங்கியவள் கைகள் நடுங்க, “இன்னும் நீங்க மறக்கலையா?” என்றாள். சிரிப்போடு இல்லை எனத் தலையசைத்தவன், “மறக்கக் கூடிய ஆளா நீ சக்தி?” என அவள் தலை மேல் கை வைத்து மெல்ல ஆட்டினான். அவன் வழக்கமாகச் சிறுவயதிலிருந்தே செய்யும் செயல் இது.
“என் மேல கோபம் எதுவும் இல்லையே சக்திம்மா?”
வேகமாக இல்லை எனத் தலையசைத்தவள், “உங்க மேல எதுக்குக் கோபம் வரப் போகுது?” என்றாள்.
“உன் கூடப் பேச நேரம் அமையலை…”
“அதெல்லாம் நான் ஒன்னும் நினைக்கலை அத்தான்.”
“அதுதான் சக்தி எனக்கும் ஆச்சரியமா இருக்கு, நீ ஏன் எதுவும் நினைக்கிறது இல்லை?” இதயம்படபடக்கச் சஞ்சீவைப் பார்த்தவளுக்கு வார்த்தைகள் உருவாகவில்லை.
“இல்லை… அப்படி இல்லை, நீங்க எதுவும்… ப்ச், எனக்கு வேலை கொஞ்சம்…”
“எதுக்கு இப்போ இவ்வளவு பதற்றம்? எதுவும் ஆகிடலை. பொறுமையா, நிதானமா இரும்மா…” தயங்காமல் அவளது கையைப் பற்றியவன் பெருவிரலால் பெண்ணவளை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு வருடிக்கொடுக்க,
‘அட பக்கி, நீ என்ன படத்துக்கு மியூசிக்கா போடப் போற? ஒரு நிமிஷம் கன் ஷாட். இதுக்கு எதுக்கு இவ்வளவு பயம்? சரியா வரலைன்னா என் பேரைச் சொல்லு, தோட்டாவே தானா வெடிக்கும்!’ தமிழ்ச்செல்வன் அன்று கூறிய கூற்றில், அவள் மனதில் சிரித்த நினைவில் இன்றும் மெல்ல இதழ் பிரிந்தது.
“பார்றா, சிரிப்பு திடீர்னு வருது!” சஞ்சீவ் குரலில்தான் அவள் கைப்பற்றியிருக்கும் ஆண்மையின் வித்தியாசத்தை உணர்ந்தவள் உடல் தன்னாலே மீண்டும் அழுகையில் நனைந்தது. வேதனை, சிரிப்பு, அழுகை என நொடிக்கு நொடி மாறி உணர்வுகளில் தத்தளிக்கும் பெண்ணின் நிலையைக் கண்ட சஞ்சீவ் செய்வதறியாமல் தவித்து நின்றான்.
“சக்தி என்னாச்சு உனக்கு? என்னம்மா, எதுக்கு இப்படி அழுகுற? என்ன பிரச்சனையாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு, நான் பார்த்துக்கிறேன்.”
தன்னை ஆறுதல்படுத்தப் பற்றியிருந்த கையைத் தன் இரண்டு கைகள் கொண்டு பிடித்தவள் அழுகையில் அவனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எப்படி கேள்வி எழுப்பியும் பதில் வரவும் இல்லை, அவளது அழுகையும் மட்டுப்படவில்லை.
“சக்தி…” இறங்கிப் போய் வேதனையாய் அழைத்தவனை இன்னும் வதைக்க விரும்பவில்லை அவள்.