ரீங்காரம் – 11
“வாழ்க்கையில பிரச்சனைன்னா என்னன்னே தெரியாம வளர்த்துட்டாங்கல்ல வீரா நம்மள?”
முன் நெற்றி முடி கடல் காற்றில் அசைந்தாட, இரவின் ஒளியில் கடலின் அழகை ரசித்தவண்ணம் இருந்த சஞ்சீவ் மனதில் நேற்றிலிருந்து இதே கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது.
“இப்போ உனக்கு என்ன பிரச்சனை?”
“பிரச்சனை இல்லை வீரா, இது ஒரு விஷயம். இந்த விஷயத்தை எப்படி வெளிய சொல்றதுன்னு தெரியலை. கண்டிப்பா என்னால இதுல ஒரு வழி செய்ய முடியாது, பெரியவங்க தலையிடுறதுதான் சரின்னு தெரியுது. ஆனா அவங்களுக்குத் தெரிஞ்சா, அதை எந்த வகையில புரிஞ்சுப்பாங்கன்னு சந்தேகமா இருக்கு.”
Advertisement
“ஓவரா பில்டப் கொடுக்காத சஞ்சீவ். பெரியவங்களுக்குத்தான் தெரியணும்னா ஊருக்குப் போனதும் பேசலாம்ல? வீட்டுல ரெண்டு பொம்பள புள்ளைங்களை விட்டுட்டு வந்துருக்கேன். செக்யூரிட்டி வேற இன்னைக்கு லீவு.”
“அவங்ககிட்ட போகுறதுக்கு முன்னாடி உன்கிட்ட பேசணும்னு தோணுச்சுடா.”
பொறுமையை இழந்த வீராந்தகன், “சரி சொல்லு” என்றான் சற்று நிதானமாக.
Advertisement
“தமிழ் பற்றி என்ன நினைக்கிற?”
Advertisement
புரியாமல் பார்த்தவன், “எந்த தமிழு?” என்றான்.
“அதான்டா… தமிழ், டைரக்டர் தமிழ்ச்செல்வன்.”
அதற்கு மேல் பொறுமையை வீராவால் பொறுக்க முடியாமல் போக, எழுந்து தன் வாகனத்தை நோக்கி நடக்கத் துவங்கினான். “நான் வண்டிய ஸ்டார்ட் பண்றதுக்குள்ள வர்றியா, இல்லையா நடந்து வீட்டுக்கு…”
Advertisement
வீரா முடிக்கும் முன்பு, “அவனைத்தான் சக்தி லவ் பண்றா!” என உண்மையைப் போட்டுடைத்தான் சஞ்சீவ்.
நடந்த வேகத்தில் திரும்பி சஞ்சீவை நோக்கி வந்தவன், “என் தங்கச்சிய கட்டிக்க மாட்டேன்னா கிளம்பிப் போய்கிட்டே இரு. அதை விட்டுட்டு கண்ட நாயோட சேர்த்து வச்சுப் பேசுன… ஃப்ரெண்டுன்னு பார்க்க மாட்டேன், அத்தை பையன்னு பார்க்க மாட்டேன், சங்க அறுத்துடுவேன்!” என்றான் வீராந்தகன்.
“வீரா புரிஞ்சுக்கோடா, நான் இல்லை, உலகத்துல நீ யாரைக் கூட்டிட்டு வந்து நிறுத்தினாலும் சக்தி வேண்டாம்னுதான் சொல்லுவா. அவ உனக்கு மட்டும் தங்கச்சி இல்லை, என் மாமன் மகள். அவளோட லைஃப் பற்றி எனக்கு அக்கறை இருக்கு.”
“ரொம்பத்தான் அக்கறை! உன் அக்கறை மண்ணைத்தான் நான் பார்க்குறேனே… அபாண்டமா பேசாத சஞ்சீவ்!”
சஞ்சீவ், “நான் ஏன்டா தேவையல்லாம உன்கிட்ட வந்து இப்படிச் சொல்லப் போறேன்? சொல்லப்போனா, நான் தான்டா ‘சக்தி எனக்குக் கிடைச்சா நல்லா இருக்கும்’னு அம்மாட்ட சொல்லிருக்கேன்…”
“சரி, இப்போ என்ன உனக்கு என் தங்கச்சிய காரணம் காட்டணும், அவ்வளவுதானே?” அவனைப் பேச விடாமல் தன் சகோதரிக்கு அழைத்திருந்தான் வீரா.
“இப்போ ஏன்டா அவளுக்குக் கால் பண்ணிருக்க?” சஞ்சீவ் கேட்க, அவனைத் தீயாய் முறைத்தவன் சகோதரியிடம், “நீ அந்தத் தமிழை லவ் பண்றியா சக்தி?” என்றான் நேரடியாக.
எதார்த்தமாக அழைப்பை ஏற்ற பெண்ணுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. “வீரா, கால் கட் பண்ணு” சஞ்சீவின் குரல் மறுமுனையில் கேட்க, கண்மூடி நின்றவளிடம் பயம் குடியேறியது.
இதற்குப்பிறகு நடக்கவிருக்கும் பிரச்சனைகள் எந்தெந்தக் கோணங்களில் தன்னை நெருங்கும் என யோசிக்கவே மலைப்பாக இருந்தது. கோபம், பரிதாபம், பாசம் என அனைத்தும் அவளை வந்து தாக்கும் என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் மனம் எதிலிருந்தும் பின்வாங்க நினைக்கவில்லை.
அதிலும் வீரா பேசுவதிலிருந்தே அவன் கோபம் புரிந்தது.
“பதில் பேசு சக்தி…” அவன் குரல் உயர, “லவ் எல்லாம் பண்ணலைண்ணா” என்றாள்.
சஞ்சீவைப் பார்த்து ஒரு பக்கமாக இதழ் வளைத்து வீரா சிரித்த அடுத்த நொடி, “ஆனா, அவனைத் தவிர வேற ஒருத்தர் என் வாழ்க்கையில இல்லை” எனக் கூறி அவனது நம்பிக்கையைச் சுக்குநூறாக்கியிருந்தாள் சக்தி.
“சக்தி…” கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீரா அவள் பெயரை அழுத்தி அழைக்க, “அண்ணா ப்ளீஸ், உங்க முகத்தைப் பார்த்து நான் இதைப் பேசணும். உங்ககிட்ட மட்டும் இல்லை, நம்ம வீட்டுல…” அவள் பேசிக்கொண்டிருக்க, அந்தப் பக்கம் அமைதி நிலவவும் தான் தொடுதிரையைப் பார்த்தாள். சகோதரன் எப்பொழுதோ அழைப்பைத் துண்டித்திருப்பது புரிந்தது.
பதற்றம் உடலில் தொற்றிக்கொள்ள, கை கால்கள் நடுங்க வேகமாக அன்பரசி இருக்கும் அறையை நோக்கி விரைந்தவள், கதவைத் திறந்த நொடி, “அண்ணி, அண்ணனுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு. நான் சஞ்சீவ் அத்தான்கிட்ட கல்யாணத்தை நிறுத்த சொன்னதும் தெரிஞ்சிடுச்சு. பயமா இருக்கு அண்ணி. அண்ணனே இவ்வளவு கோவப்படுறான்னா, அப்போ வீட்டுல மத்தவங்க? அப்பா என்ன சொல்லுவார்? தாத்தா? பாட்டி?” என்றாள்.
பெண்ணின் பதற்றத்தை உணர்ந்த அன்பரசி அவள் கையைப் பிடித்து, “நிதானமா இருங்க அண்ணி” என அவள் தோளில் அழுத்தம் கொடுத்து வருடினாள்.
“இல்லை, அண்ணன் இந்நேரம் வீட்டுல சொல்லிருப்பார்ல?”
“சொல்லிருக்கட்டும் அண்ணி, இதெல்லாம் என்னைக்காக இருந்தாலும் தெரியத்தானே போகுது. பதட்டப்படாமல் நிதானமா வீட்டுல இருக்கிற எல்லாத்தையும் சமாளிக்கிற நிலைமைக்கு வாங்க.”
கண்ணீரோடு எச்சில் விழுங்கியவள் உள்ளம், சகோதரனை நினைத்துப் பதற்றத்தில் இன்னும் சற்றுகூட மட்டுப்படவில்லை.
அவள் எண்ணியது போலவே, அவளது சகோதரன் எல்லையில்லாச் சினத்தோடுதான் வாகனத்தை நிறுத்தினான்.
“இங்க எதுக்கு வீரா வந்துருக்க?” என்ற சஞ்சீவின் கேள்விக்கு, ‘உனக்கு நான் பதில் கூற மாட்டேன்’ என்கிற உறுதி அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. யோசிக்காமல் அந்த அரங்கினுள் நுழைந்தவன், “தமிழ்ச்செல்வன்!” எனக் கர்ஜித்தான்.
“வீரா டேய், இங்க வச்சுப் பேச வேண்டிய விஷயம் இல்லை…” சஞ்சீவ் வீராந்தகனைப் பின்தொடர்ந்து தடுக்கப் பார்க்க, சத்தம் கேட்டு ஒரு அறையிலிருந்து வந்த தமிழைக் கண்ட வீராந்தகன், சஞ்சீவிடம் திரும்பி, “பேச வந்தேன்னு உன்கிட்ட நான் சொன்னேனா?” என்றான்.
நிச்சயம் ஏதோ விபரீதமான செயலைத்தான் செய்யப் போகிறான் எனச் சஞ்சீவ் உணர்ந்து வீராவைத் தடுக்கும் முன், அவன் பயந்த அந்த விபரீதம் நடந்தேறியிருந்தது. மின்னல் வேகத்தில் சென்றிருந்த வீரா, தமிழின் சட்டையைப் பிடித்து அவன் முகத்தில் சரமாரியாகத் தாக்கினான். நடப்பதைப் பலர் நின்று வேடிக்கை பார்த்தாலும் எவரும் தடுக்க முன்வரவில்லை.
சஞ்சீவ் மட்டுமே வீராவைத் தடுக்கப் பார்க்க, தமிழ்ச்செல்வன் கூடக் காரணம் புரியாமல் சுதாரிக்கும் முன்பு, அவன் கன்னம் வீங்கி ஒரு பக்கம் ரத்தமே வந்திருந்தது. தன்னைத் தாக்கும் வீராந்தகன் கண்ணில் தெரிந்த கோபம், வன்மம் எதற்கும் தான் காரணமில்லையே என உணர்ந்த நொடி, தன்னைத் தாக்க வந்த அவனது முஷ்டியைக் கைகொண்டு பிடித்திருந்தான் தமிழ்ச்செல்வன்.
“அயோக்கிய ராஸ்கல், எவ்வளவு தைரியம்டா உனக்கு!” மறுகை கொண்டு மீண்டும் வீராந்தகன் அடிக்க முயல, இம்முறை பேரழகனும் நிமலனும் வந்து தமிழுக்குத் தூணாக நின்றனர்.
சலசலப்பு அடங்காமல் இருக்க, “பொறுக்கி நாயே, எவ்வளவு தைரியம்டா உனக்கு?” என்றான் வீரா.
“சார், எதுக்கு இப்போ அவன் மேல கை வைக்கிறீங்க?” வீராவின் உயரம் அறிந்து கோபத்தைக் கூடக் காட்ட முடியவில்லை பேரழகனால். அதே நேரம் தமிழ் அடி வாங்குவதையும் பார்க்க முடியவில்லையே!
“யோவ், உனக்கெல்லாம் நான் எதுக்கு பதில் சொல்லணும்?” அவரைப் பொருட்டாகக் கூட மதிக்காதவன் தமிழியிடம், “அங்க சுத்தி இங்க சுத்தி என் வீட்டுலேயே கை வச்சுட்டல்ல… ப்ளடி பாஸ்டர்ட்!” என்றான் ஆத்திரத்துடன்.
அடுத்த நொடி யோசிக்காமல் தமிழ்ச்செல்வன் வீரா மேல் பாய, இம்முறை தமிழைத் துணையாகக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது.
“போனா போகட்டும்னு சும்மா இருந்தா, வாய்க்கு வந்தது எல்லாம் பேசுற!” கண்கள் சிவந்து தீயாய்ச் சண்டைக்கு நின்ற தமிழை, அவ்விடத்தில் இருந்த அத்தனை மக்களும் அன்றுதான் பார்த்தனர்.
தமிழின் சீற்றம் புரிந்தவன், அடி வாங்காமல் தடுத்து நின்று சிரிக்க, அந்தச் சிரிப்பின் அர்த்தம் அங்கிருந்த ஒரு சிலருக்கு மட்டும் நன்கு புரிந்தது. பேரழகன் தமிழின் தோள் தொட்டு அவனை அமைதியாக்க முயல, வீராவோ, “பேசுவேன்டா! இதுவும் பேசுவேன், இதுக்கு மேலேயும் பேசுவேன். என்ன குத்துதா? நாத்தம் புடிச்ச குடும்பத்துல இருந்து வந்த உனக்கே ஏறுதோ? இதுல உன்னை நடு வீட்டுல வச்சு நான் அழகு பார்க்கவா? வெட்டிப் போட்டா கூடக் கேட்க நாதி இல்லாதவன் நீ! படம் எடுத்தோமா, ரோட்டுல பொறுக்குனோமான்னு இருக்கணும். மீறி நல்ல குடும்பத்துல வந்து உட்காரணும்னு நினைச்சா கூட, கதை எழுத கையும் கண்ணும் இருக்காது, சொல்லிட்டேன்!” என்று அடிக்குரலில் தமிழிடம் சீறினான்.
தன் சட்டையை உதறி, தீப் பார்வையோடு தமிழைப் பார்த்தவண்ணம் நின்ற வீராவை, சஞ்சீவ்தான் வலுக்கட்டாயமாக அவ்விடத்தை விட்டு அகற்றி அழைத்துச் சென்றான்.
புயலடித்து ஓய்ந்த அவ்விடத்தில், அனைவரின் பார்வையும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீரா சென்ற வழியையே பார்த்து நின்ற தமிழ்ச்செல்வன் மேல் தான் இருந்தது.
சுற்றியிருப்பவர்களின் பார்வை தன் மேல் உள்ளதெனத் தெரிந்தும், தமிழின் கவனம் முழுதும் வீராவின் குத்தும் வார்த்தைகளில்தான் இருந்தது. பேரழகன்தான், “டேய், போய் வேலையைப் பாருங்கப்பா” எனக் கூட்டத்தைக் கலைத்துவிட்டு, தமிழை வெளியே அழைத்துச் சென்றிருந்தார்.
நடந்தது என்னவோ அரங்கத்தினுள் தான், ஆனால் அதற்குள் செய்தி தீயாய் ஊடகங்களில் பரவியிருந்தது. “அதுக்குள்ள இவனுங்களுக்கு எவன்தான் தகவல் சொல்றானோ? புரொடியூசர் வேற கால் பண்ணிட்டே இருக்கார் பெருசு” எனத் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருக்க, தமிழின் கைபேசியை வாங்கி வைத்திருந்த நிமலன் தகவல் கொடுத்தான்.
நெற்றியை நீவிய தமிழ்ச்செல்வன் கை நீட்டி அதனை வாங்க முயல, தர மறுத்தான் நிமலன். “அதெல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம் தல, மொத அந்த ஆளு எதுக்கு உன்னை வந்து அடிச்சான்?”
சுசிகரன், “அது தெரியாமத்தானேடா முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கார். தல, பேசாமல் சக்திக்கு கால் பண்ணிக் கேளு” என்றான்.
பேரழகன் குறுக்கிட்டு, “அந்தப் பொண்ணு சங்காத்தமே வேண்டாம். தமிழு, நீ அமைதியாகு. அவன் பேசுவதையெல்லாம் மண்டைக்குள்ள ஏத்தாதே. அந்தப் குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு அந்தப் புள்ள உன்கிட்ட பேசுறதே பிடிக்காதுல்ல, அந்தக்கோபத்துல எதுவோ…” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, தமிழின் மூளையில் சட்டெனப் பொறி ஒன்று தட்டியது.
வேகமாக எழுந்தவன் நிமலன் கையிலிருந்த கைபேசியை வாங்கப் பார்க்க, சுதாரித்தவன் கொடுக்காமல் பின்வாங்கினான். நிமலன் முகத்தைப் பார்த்த தமிழுக்கு இதழ்களில் சட்டெனப் புன்னகை பூத்தது.
அவன் நினைத்தது சரியென மனதில் இன்னும் ஆனந்தம் வர, “நான் நினைச்சது மட்டும் உண்மைன்னா, என் வாழ்க்கையோட அர்த்தமே கிடைச்ச மாதிரிடா… கொடு!” என்றான்.
கண்களில் அத்தனை ஆசை மிதக்க, தன்னிடம் கை நீட்டி நின்றவனைப் பார்த்து நிமலனின் கைகள் தன்னாலே அவன் கைபேசியை ஒப்படைத்தன.
தொடுதிரையைப் பார்த்த தமிழின் விரல்கள் நடுங்கினாலும், இதழில் வற்றாச் சிரிப்பு குடியேறியது; சக்தியிடமிருந்து அத்தனை அழைப்புகள் வந்திருந்தன. யோசிக்காமல் சக்திக்கு அவன் அழைக்க, சில நொடிக் காதிலேயே அழைப்பை ஏற்றவளிடமிருந்து நில்லாத மன்னிப்புக் குரல்தான் வந்தது.
“சாரி செல்வா, ரொம்ப சாரி! என்னால உனக்கு எப்பவுமே பிரச்சனைதான். மன்னிச்சிடுடா. அண்ணன் பண்ணதுக்கு பதிலா நான் உன்கிட்ட சாரி கேட்டுக்கிறேன்.”
“சரி சரி, பொறுமை பொறுமை. நான் நல்லாத்தான் இருக்கேன், எனக்கு ஒன்னும் இல்லை” என்று இவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவள் குரல் கமர, அவளுக்காகப் பேசினான்.
“இல்லை, அண்ணன் உன்னை ரொம்ப அடிச்சதா கேள்விப்பட்டேன்…”
தமிழ்ச்செல்வன், “எது, உன் அண்ணன் என்னை அடிக்கிறதா? என்னை அடிச்சா நான் சும்மா இருப்பேனா, சொல்லு…” என்க,
பேரழகன் பின்னால் இருந்து, “சும்மாதானேடா இருந்த!” என்றார்.
அவர் பேசியது சக்திக்குக் கூடத் தெளிவாகக் கேட்டது.
“ரொம்ப வலிக்குதா செல்வா?” மீண்டும் அவள் அழுகைக் குரலில் கேட்க, “நீ சொல்ற பதில்லதான் சக்தி எல்லாமே இருக்கு” என்றான் தமிழ்ச்செல்வன்.
அவன் குரலில் கிண்டல் இருந்தாலும், அந்த வார்த்தையில் பொதிந்திருந்த உள்ளர்த்தம் அவர்கள் இருவருக்குமே புரிந்தது.
“என்ன சொல்லணும் செல்வா?”
“உனக்குத் தோணுறதைச் சொல்லு சக்தி.”
அவளது மௌனத்தினைப் போல அந்நேரம் ஒரு கொடிய வேதனை எதுவும் இருக்காதென, அந்தப் பத்து நொடிகளில் பெண்ணவள் அவனுக்கு உணர வைத்தாள். தன்னுடைய பொறுமையை தமிழ் முற்றிலும் வெறுத்த நாள் அதுவாகியது.
“சக்…” அவன் அவள் பெயரை உச்சரிக்கும் முன், “கல்யாணத்தை நிறுத்திட்டேன் செல்வா” என்றாள் மென்குரலில்.
வார்த்தைகளில் வடிக்க முடியாத உணர்வுகளில் தத்தளித்தான் தமிழ். சத்தமில்லாமல், நாடகங்கள் அரங்கேறாமல், உருகி உருகிப் பேசாமல் நிகழ்ந்த அழகான ஒப்புதல் அது. நிச்சயம் அவளது உணர்வுகளுக்குத் ‘காதல்’ எனப் பெயர் வைக்க அவன் விரும்பவில்லை; அது காதல் இல்லை என்பதையும் அவன் உணர்ந்தே இருந்தான்.
ஆனால், அவள் தன் உலகமாகிய அந்த அழகிய குடும்பத்தை விட்டுவிட்டு அவனைக் தேர்வு செய்தது, ஏதோ பிரபஞ்சமே தன்னோடு நிற்பது போன்ற ஒரு பலமான உணர்வைத் தந்தது. அவன் மார்பு திடீரென இறகைப் போலே லேசாக மாறியது.
“சக்தி…” இருந்தாலும் அவளை எண்ணி ஒரு கலக்கம் வர, “இது ரொம்பப் பெரிய முடிவு” என்றான் மெதுவாக.
“எனக்குத் தெரியும்” எனத் தலையசைத்தவள், ஏற்கனவே அதற்கான விளைவுகளை அனுபவிக்கத் துவங்கியிருந்தாள்.
“நீ எதுவும் என்கிட்ட சொன்னது இல்லை, ஆனா எனக்கு உன்னை விட்டுப் போறது நான் என்னையே ஏமாத்திக்கிற மாதிரி இருக்கு. எனக்கு நீ என்னன்னு தெரியலை செல்வா… ஆனா நீ இல்லாம எனக்கு எதுவுமே சரியா வராது” என்றாள். அவள் குரல் உடைந்தது.
அந்த ஒரு வரி, அவனுக்குள் கண்ணீரைத் தோற்றுவித்தது. சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் நின்றான்.
“நான் இப்போ என்ன செய்யணும் சக்தி?”
“ஓடாத செல்வா…” கட்டளையாக இல்லாமல் வேண்டுதலாகக் கேட்கப்பட்டது அவளது வார்த்தை.
பல வருடங்களாக அவன் செய்து வரும் ஒரே விஷயம் அதுதானே ஓடுவது. அவளிடமிருந்தும், அவன் காதலிடமிருந்தும் ஓடிக்கொண்டிருந்தான். ஆனால் இனி நின்று போராட ஒரு காரணம் கிடைத்திருக்கிறது; அந்த இறைவனின் அசரீரி போன்ற அவளது குரல்!
இருவரும் காதலர்கள் அல்ல, அவள் மனதில் இன்னும் காதல் எழவும் இல்லை. ஆனால், அவனது காதலுக்காக, அவர்கள் இருவருக்காகவும் இனி நின்று போராடத் தோன்றியது அவளுக்கு.
