” பாட்டிமா வந்து நாளை தாலி எடுத்துத் தந்தால், நம்ம குழந்தை தீர்க்க சுமங்கலியா இருப்பா…”
Advertisement
நிச்சயதார்த்த மேடையின் ஓரத்தில் நின்றிருந்த அந்தப் பெரியம்மா சொன்ன வார்த்தைகள், அன்று இரவு முழுக்கவும் மீராவின் சிந்தையை கலைத்துக் கொண்டிருந்தன.
Advertisement
அவளும் ரஞ்சனாவும் ஏதேதோ கதைத்தபடி உறங்கத்துவங்கியபோதும் உள்ளே ஏதோ ஒன்று பதைபதைத்தது.
அன்றைய இரவின் நிசப்தம் மெல்லக் கரைந்து, கூடல் நகரின் அதிகாலைப் பொழுது நாதஸ்வர இசையோடு விடிந்தது.
விடியல் வெறும் வெளிச்சத்தை மட்டும் கொண்டு வரவில்லை.கூடல் நகரின் அந்தப் பாரம்பரிய அரண்மனை மகாலுக்குள் ஒரு புதிய அழகியல் காவியத்தையே அள்ளித் தெளித்திருந்தது.
Advertisement
மதுரையின் அந்தப் பிரம்மாண்ட மகால், திருமண நாளான இன்று ஒரு புதிய தேவலோகமாக உருமாறியிருந்தது. வாசலில் இருந்து மணமேடை வரை பன்னீர் தெளிக்கப்பட்டு, பசுமையான தென்னம்பாளைகளும், மாவிலைத் தோரணங்களும், நறுமணம் வீசும் காம்புகள் பழுத்த மல்லிகைச் சரங்களும் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன. மேடையின் மையத்தில், பெரிய அரச நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மண்டபம் முழுவதிலும் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், மற்றும் சுத்தமான நெய்யின் வாசனை கலந்து, ஒரு புதிய நறுமணப் பேரரசை உருவாக்கியிருந்தது.
இந்த அழகிய பின்னணியில், நம் கதையின் நாயக நாயகியர் ஒவ்வொருவரும் தங்களின் ஆடைத் தேர்வாலும், தோரணையாலும் அந்த ராஜரீக விழாவிற்குத் தனிப் பொலிவைக் கூட்டினர்
மணமகன் அர்ஜுன், அவன் அணிந்திருந்த தூய பட்டு வேட்டி, சாதாரண வெண்மை நிறத்தில் இல்லாமல், லேசான தந்த நிறத்தில் நெய்யப்பட்டு, அதன் கரைகளில் மூன்று அங்குலத் தடிமனுக்குத் தூய தங்கக் கைத்தறி ஜரிகை மின்னியது. அதற்கு இணையாக, இளஞ்சிவப்பு மற்றும் தங்க நூலிழைகள் கலந்த பட்டுச் சட்டையை அவன் அணிந்திருந்தான்.
அவனுக்கு நிகராக, மணமகள் கௌதமி ஒரு உறைந்த ஓவியமாக மேடையில் அமர்ந்திருந்தாள். அவளது புடவை, காஞ்சிபுரத்தின் நெசவாளர்களால் பிரத்யேகமாக நெய்யப்பட்ட அடர் குங்குமச் சிவப்பு நிறப் பட்டுப்புடவை. அதன் உடல் முழுவதும் ‘வாடாமல்லி’ பூக்களின் வடிவங்கள் தங்க நூலால் அலாதியாக வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தன. அவளது கழுத்தை அலங்கரித்த பழங்காலக் ‘காசுமாலை’ மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட ‘வங்கி’ தோள்வளையம், அவளது மாநிற மேனிக்கு ஒரு தனித்துவமான பேரழகைக் கொடுத்தன. நெற்றியில் துலங்கிய சிறிய சுட்டியும், கூந்தல் முழுவதையும் ஆக்கிரமித்திருந்த அடர்ந்த மல்லிகைப் பந்தும் அவளை அந்த விநாடியின் பேரரசியாகக் காட்டின.
“என்ன அழகா இருக்காங்கள்ள ? ” என கண் நிறையப்பார்த்தபடி அந்தப் பிரம்மாண்ட மேடையின் கீழே, ஒட்டுமொத்த விழாவின் ஆகச்சிறந்த ஈர்ப்புகளாக நின்றிருந்தனர் நம் தோழர்கள்.
தேனி மாவட்ட கலெக்டர் மீரா, இன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு தேவதையாக வலம் வந்தாள். மாம்பழ மஞ்சள் நிறக் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்திருந்தாள். அதன் பார்டர்கள் அடர் பச்சை நிறத்தில் அமைய, பிளவுஸின் கைகளில் நுட்பமான ஆரி ஒர்க் மூலம் பாரம்பரிய அன்னப் பறவைகளின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. கூந்தல் அலை அலையாகப் பின்னி, அதில் மல்லிகைப் பூக்கள் அழகாகச் சூடப்பட்டிருந்தன. காதுகளில் நேற்று வர்மன் உற்றுப் பார்த்த அதே அடுக்குக் கேரளா ஜிமிக்கிகள் லேசாக அசைந்து அவளது பேரழகைக் கூட்டின. அவளது ஒளிரும் கண்களும், கூர்மையான பார்வையும் அவளது ஐஏஎஸ் அதிகாரத்தை மென்மையாக மறைத்துக் காட்டின.
அழகன் வர்மன் அடர் தங்க ஜரிகை வேட்டியைக் கால்களின் கணுக்கால் வரை கச்சிதமாக மடித்துக் கட்டி அடர்பச்சை சட்டையணிந்து இன்னும் பேரழகனாய் மிளிர்ந்தான்.
அவனது கூர்மையான மீசையும், வலது மணிக்கட்டில் மின்னிய காப்பும், அவனைப் பார்க்கும் எவரையும் ஒரு நொடி மிரள வைக்கும் தோரணையில் இருந்தன.
மீராவுக்கு அருகில் லாவண்டர் நிறப் பட்டுப்புடவையில், மெல்லிய வைர நகைகளோடு பளபளத்தாள் ரஞ்சனா. அவளது புடவையின் மென்மையான நிறம், அவளது மாநிற மேனிக்கு ஒரு அலாதியான வசீகரத்தைத் தந்தது. காடுகளில் துப்பாக்கியோடும் கம்பீரத்தோடும் வலம் வரும் இந்த வன அதிகாரி, இன்று மெல்லிய மேக்கப்பில், தன் கூந்தலை ஒருபுறமாக ஒதுக்கி, கழுத்தில் ஒற்றைக்கல் வைர மாலையோடு நின்றிருந்த தோற்றம், அங்கிருந்த பலரது விழிகளைத் தன்வசம் இழுத்தது—குறிப்பாக அந்த லண்டன் அழகனின் விழிகளை!
மங்கல நாதஸ்வர இசை மண்டபத்தின் சுவர்களில் மோதி எதிரொலித்துக் கொண்டிருக்க, இவர்களின் அழகியல் தோற்றமும், அவர்களுக்குள் இருந்த மறைமுகமான காதல் தவிப்புகளும் அந்தத் திருமணப் பொழுதை இன்னும் சுவாரஸ்யமான ஒரு காவியமாக மாற்றிக் கொண்டிருந்தன.
காலைச் சடங்குகள் துவங்குவதற்கு முன், முதல் வரிசையின் ஓரத்தில் ரஞ்சனா தன் புடவையின் முந்தானையைச் சரிசெய்து கொண்டு நின்றிருந்தாள். அப்போது அவளுக்குப் பின்னால் மெதுவாக வந்த கௌதமியின் அண்ணன், யாரும் பார்க்காத வண்ணம் தன் கையில் இருந்த நறுமணம் மிக்க ஒரு ரோஜாப்பூவை அவளது கைகளுக்குள் திணித்தான்.
ரஞ்சனா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவளது இதயம் ‘டக்’கென்று ஒரு நொடி நின்று பின் வேகமாக அடிக்கத் தொடங்கியது.
“இந்த ரோஸ் உங்க சாரிக்கு மாட்ச் ஆகும்னு தோனுச்சு” என்றான் .
அது ஒரு லைட் வேலன்டர் ரேர் கலர் ரோஜாப்பூ!
” தாங்க்யூ” என கன்னங்கள் சிவந்து ரஞ்சனா அதை வாங்கி கொண்டாள்.
“இந்த ரோஜாப்பூவை விட உங்க கன்னங்கள் இப்போ ரொம்ப அழகா சிவக்குது ரஞ்சனா,” என்று அவன் ரகசியமாய் உரைக்க, ரஞ்சனா இன்னும் நாண, திடுமென விழிகளில் விழி கோர்த்து ” வீட்ல பேசிரவா?” என்றான்.
இவள் “இவர் என்ன ? இவர் பெயர் கூடத்தெரியாது இன்னும்… இவ்வளவு வேகமா வா…”என பார்க்க…
” யோசிச்சு சொல்லுங்க ஐ ஷல் கெட் பேக் ” என நகர்ந்தான்.
மறுபுறம், மீரா மேடைக்குச் செல்வதற்காகத் தூணைச் சுற்றி நகர்ந்த போது, திடீரென்று எதுவோ பட்டுப்புடவையின் முந்தானையைப் பற்றி இழுக்க மீரா நிலைதடுமாறினாள். அந்தப் பெரிய தூணை பற்றி ….
” இந்த வர்மன் இருக்கானே….” என முணுமுணுத்து திரும்பி பார்க்க அங்கே அந்த தூணில் இருந்த ஆணி இவளை பார்த்து சிரித்தது.
“அடச்சே…. என்பதாக அவளது விழிகள் வர்மனை தேடிப் பிடிக்க மிகச்சரியாய் இருவரது விழிகளும் லாக் ஆனது.
“ஆஹா பார்த்துட்டானே என இவளும் …
“என்னடி, மஞ்சக்காட்டு மைனா இப்படி குறு குறுனு பார்க்க மட்டும் செஞ்சிரு”…. என இவனும் மனதுள் நினைத்து கொண்டனர்.
” என்னால பார்க்க மட்டும் தானே வர்மன் முடியும் …”
” ஏண்டி, நீ மட்டும் “ம்” னு சொல்லு மாமன் மத்ததெல்லாம் பார்த்துக்கிறேன்”
இப்படியாக அவர்களது விழிமொழி இருந்தது.
அப்போது மண்டபத்தின் பிரதான வாசலில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. நாதஸ்வரக் கலைஞர்கள் தங்களது இசையின் வேகத்தைக் கூட்டி, ஒரு ராஜ வரவேற்புக்கான மங்கல இசையை இசைக்கத் தொடங்கினர்.
“பாட்டிமா வந்துட்டாங்க! ஆச்சி வந்துட்டாங்க!” என்று குடும்பத்து ஆட்கள் அனைவரும் வாசலை நோக்கி ஓடினர்.
அர்ஜுனின் பெற்றோர், கௌதமியின் குடும்பத்தினர், மற்றும் வர்மன் என அனைவரும் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் வாசலுக்குச் சென்று எதிர்சென்று வரவேற்றனர்.
பாட்டிமா எண்பது வயதைத் தாண்டியிருந்தாலும், நிமிர்ந்த கம்பீரமான நடை. தூய வெள்ளை நிறக் காஞ்சிபுரம் பருத்திப் புடவை அணிந்து, கழுத்தில் ஒரு பெரிய பழங்கால உருத்திராக்க மாலையும், கைகளில் தங்கக் காப்புகளும் அணிந்திருந்தார்.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த மீராவும் ரஞ்சனாவும் அந்தப் பாட்டிமாவை ஆவலோடு பார்த்தனர்.
இதயமே நின்றது போல மீராவுக்கு தூக்கி வாரிப்போட்டது! இந்த முகம்…..அன்று… அந்த அழகர் திருவிழாவில், அந்த வீரன் தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய போது “வீரா….” என்று அழைத்து வந்த அதே பாட்டியின் முகம்… இதோ, இன்று தன் கண் முன்னால் நிற்கும் பாட்டியின் முகத்தோடு எண்பது சதவீதம் அச்சு அசலாகப் பொருந்திப் போகிறதே!
அதே தீர்க்கமான கண்கள், அதே கம்பீரமான முகம்! கொஞ்சம் மாறுபாடுகள் இருக்கிறது… இத்தனை வருடத் தொய்வாக இருக்குமோ? இவள் அந்த பாட்டியையே உறுத்துப்பார்க்க….
இப்போது பதினாறு வருடங்கள் முந்தைய அந்த நாளில் நின்றிருந்தாள் மீரா. வெலவெலத்து, விதிர்விதிர்த்து!
பாட்டி தன் கரகரப்பான, கம்பீரமான குரலில் வாசலை நோக்கி உரக்க அழைத்தார்:
“செம்பியா…!”
அந்த ஒற்றைச் சொல் மண்டபத்தின் நாதஸ்வர ஒலியையும் மீறி கணீரென்று எதிரொலித்தது. பாட்டியின் அழைப்பு வந்த அடுத்த நொடி, வாசலில் நின்றிருந்த கௌதமியின் அண்ணன், “இதோ வந்துட்டேன் பாட்டிமா!” என்றபடி அவசரமாக ஓடிவந்து அந்தப் பெரியவளின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த வர்மன் சிரித்துக் கொண்டே,
“என்ன பாட்டிமா, வந்த உடனே உங்க பேரன் ‘செம்பியன் வீரனை’த்தான் தேடுவீங்களா? என்னல்லாம் தெரியலயா? என பாட்டியின் காலை தொட்டு வணங்க …
” கண்ணா , நீயும் வந்திருக்கியாடா” என வர்மனையும் வாஞ்சையுடன் அணணத்து கொண்டார்.
“செம்பியன் வீரன்…!”
“வீரன்…!”
அந்தப் பெயரைக் கேட்ட அடுத்த விநாடி! மீராவின் தலைக்குள் ஒரு பிரம்மாண்ட பூகம்பம் வெடித்தது போலிருந்தது! அவளது காதுகளுக்குள் நாதஸ்வர இசை அடியோடு நின்று, ஒரு பயங்கரமான ரீங்காரம் சூழ்ந்து கொண்டது! அவளது கைகள் நடுங்கத் தொடங்கின, கால்கள் தரையோடு தரை தட்டி அப்படியே உறைந்து போயின!
அன்று… அந்தப் பெருங்கூட்டத்தில், அந்த கொடூரன்களுடனான அந்த பெரிய விபத்து நடந்த போது… மான மரணத்தின் விளிம்பில் நின்று கதறிக்கொண்டிருந்த போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றினானே ஒரு வீரன்! அந்த வீரன்… அந்த வீரா… அவளது காத்திருப்பின் நாயகன்… அவளது ‘வீரா’!
அவன் இந்த செம்பியன் வீரனா???
அவனா? அவனா இவன்??
மீராவின் பார்வை மெதுவாக, பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கும் செம்பியன் வீரனின் மீது விழுந்தது. ஆறடி உயரம், தீர்க்கமான கண்கள், காதில் மின்னும் வைரக் கடுக்கன்… ஆமாம், அவனிடமும் அந்த அழகர் திருவிழா வீரனின் அதே அசாத்திய கம்பீரமும் மாஸும் அப்படியே இருக்கிறது!
‘” கடவுளே… நான் தேடிய என் வீரன் இவன் தானா?”
எந்த மகிழ் கணத்தை அவள் இதயம் இத்தனை வருடமாய் எதிர்நோக்கி இருந்தததோ …. எந்த நிகழ்வு அவளுள் மாயங்கள் நிகழ்த்தும் என கனவு கண்டிருந்தாளோ… அந்த கணமா இது??
மீராவின் இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது.
இப்போது பெரிய கொடுமையாக தானாக அவளது விழிகளுக்குள் வந்து நின்றது அவளது உயிர்த் தோழி ரஞ்சனா வின் முகம்!
மேடையில் செம்பியன் வீரன் நிற்பதைக் கண்டு, ரஞ்சனா தன் புடவை மடிப்பிற்குள் ஒளித்து வைத்திருந்த அந்த ரோஜாப்பூவைத் தொட்டுப் பார்த்து, தன் முகமெல்லாம் வெட்கம் பூசி நின்று கொண்டிருக்கிறாள். ரஞ்சனா அவனைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள் என்பது மீராவுக்கு நன்றாகத் தெரியும்.
‘ஒருவேளை… செம்பியன் வீரன் தான் என் அழகர் திருவிழா நாயகன் என்றால்… என் தோழி ரஞ்சனாவின் நிலைமை என்ன? அவளது காதலை நான் எப்படி எதிர்கொள்வேன்?
இதயம் வலித்தது.
எல்லாவற்றையும் விட கிணற்றில் மேலெழும்பி வரும் நிலவின் பிம்பமாய் மேலே வந்தது வர்மனின் முகம். இப்போது மீராவின் நெஞ்சுக்குள் ஒரு பயங்கரமான புயலாக வர்மனின் முகம் சுழன்றடித்தது.
சுற்றிலும் மங்கல நாதம் முழங்கிக் கொண்டிருக்க, திருமண மண்டபத்தின் அந்தப் பெருமகிழ்ச்சிக்கு நடுவே, மீரா மட்டும் விடை தெரியாத ஒரு பெரும் குழப்பத்திலும், பேரதிர்ச்சியிலும் உறைந்து போய் நின்றிருந்தாள்! அவளது உண்மையான வீரன் யார் என்ற புதிர், அவளை இப்போது ஒரு ஆபத்தான முச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது!