Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 19 1

அத்தியாயம் 19

நேற்று தான் தங்கள் மகனுக்கு ப்ரிகேஜியில் அட்மிஷன் போட்டுவிட்டு வந்தனர் ராஜியும், செந்திலும். இன்று மகனை மட்டும் கடைக்கு அழைத்து சென்றுவிட்டான் செந்தில்.

சென்று ஒரு மணிநேரமாகிவிட்டது, இன்னும் ஆளை காணோம் என நினைத்த நேரம் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, வேகமாய் வந்து கதவை திறந்தாள் ராஜி.

மகன் பிரணவ்வை முன்னால் விட்டு, இரண்டு மூன்று கேரிபேக்குகளோடு பின்னால் நின்றிருந்தான் செந்தில்.



Advertisement

இருவருக்கும் இவள் வழிவிட்டு நிற்க, மகன் மட்டும் செந்திலின் கை பிடித்துகொண்டு, “உள்ள வாப்பா” என இழுத்து சென்றான்.

ஹாலில் கிடந்த சேர் ஒன்றை எடுத்து வந்து போட்டு, “உட்காருங்க.. டீ கொண்டு வாரேன்” என செல்ல இருந்தவளை  “ராஜி” என தடுத்து நிறுத்தினான்.

என்ன என்பது போல் இவள் பார்க்க? “இது உனக்கு” என ஒரு கேரிபையை அவளிடம் கொடுத்தான்.

Advertisement

அவனையே சில நொடிகள் பார்க்க, “அது நீ பழைய புடவையா, பழைய சுடிதாரா போடுற.. அதான்” என இவன் இழுக்க, கை நீட்டி வாங்கி கொண்டாள். அதில் என்ன இருக்கிறது என்று கூட பாராமால் ஸ்லாப்பில் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றாள் ராஜி.

Advertisement

பெருமூச்சுவிட்டவன் சுற்றும் முற்றும் பார்த்தான். மகள் தொட்டிலில் தூங்கி கொண்டிருக்க, வசந்தா அங்கிருப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியாததால், மகனை நோட்டம் விட்டான்.

அவனோ கேரிபைகளில் உள்ள பொருட்களை எல்லாம் தலைகீழாய் கவிழ்த்து, அதிலிருந்த, ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், ஸ்டேஷனரி ஐட்டம் என அதனாடு ஐய்க்கியம் ஆகிவிட, செந்தில் சேரை விட்டு கீழிறிங்கி வந்து மகனோடு ஐய்க்கியம் ஆகிவிட்டான்.

சில நிமிடங்களில் இவளும் டீ எடுத்து வந்து இவனிடம் கொடுக்க, “உனக்கு?” என கேட்க

Advertisement

“நான் இப்போ தான் குடிச்சேன்.. நீங்க குடிங்க!” என்றாள்.

குடித்தான், பின் மகன் மகளை கொஞ்சிவிட்டு, “ஸ்கூலில் சேர்க்குறப்போ, வரேன்” என சொல்லிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தவன், அதை விட இரு மடங்கு வேகத்தில் வந்து, ராஜியை இடையூடு கைவிட்டு இழுத்து இறுக அணைத்து நின்றவன், இவள் சுதாரிக்கும் முன்பே, அதை விட வேகமாய் விட்டுவிட்டு வாசலை கடந்து சென்றுவிட்டான்.

திடுக்கிட்டு நின்றுவிட்டாள் ராஜி. கூடவே வெகு மாதங்களுக்கு பின் கணவனின் நெருக்கத்தை உணர்ந்து முகம் கூட சிவந்து போனது.

மற்றைய நேரமாக இருந்தால் இடம், பொருள், இஷ்டம் என பாராமல் எந்த கட்டிலாக இருந்தலும் தள்ளி கொண்டு சென்றுவிடுவான். ஆனால் இன்றைய அவன் தயக்கம், பொறுமை, நிதானம் என அனைத்தும் ராஜியை அவனிடம் இறுக்கமாய் கட்டிபோட வைத்துவிட்டது.

முகம் சந்தோஷத்தில் மிளிர, சுவரோரமாய் சாய்ந்து நின்றுவிட்டாள்.

இருவருக்கும் பிரச்சனை சரியாகவில்லை தான், ஆனால் அதோடு பெரிதாகவும் இல்லை. அதற்காக செந்திலை இவள் அடியோடு விலக்கி வைக்கவும் இல்லை.

அவன் நடவடிக்கை எல்லாமே மனைவி, குழந்தைகள் தான் முக்கியம் என்பது போல இருந்தது. இது இப்படியே தொடர்ந்தால் செந்திலோடு வாழலாம். வாழ்வதை பற்றி யோசிக்கலாம்

இல்லை “சீர், வீடு” என மீண்டும் ஆரம்பித்தால், ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடும் நிலையில் தான் இருந்தாள்.

ஒரு நாள் ரோட்டில் பார்த்தான், அதற்கடுத்த சில நாட்களில் “கோவிலுக்கு வா” என்றான், அதற்கடுத்த வாரத்தில் “பையனுக்கு ப்ரிகேஜி அட்மிஷன் போடலாம் வா” என்றான், இதோ இன்று மகனை அழைத்து சென்று ஷாப்பிங்கை முடித்து கொண்டு வந்திருக்கிறான். கூடவே இரண்டு பார்சல்களையும் அவள் கைகளில் திணித்திருக்கிறான்.

இடையிடையே ராஜியின் கைகளில் செலவுக்கு வச்சிக்க என சில ஐந்நூறு ரூபாய் தாள்களை திணித்துவிட்டும் செல்கிறான்.

நல்ல மாற்றம் தான். ஆனால் எத்தனை நாளுக்கே? எதற்கான அடித்தளமோ? என்று திக் திக்கென தான் நாட்களை கடந்து கொண்டிருந்தாள் ராஜி.

செந்தில் சென்று வெகு நேரம் கழித்து தான் வந்தார் வசந்தா. “வட்டிக்கு வாங்கும் போது ஈன்னு பல்லை காட்டி வாங்கிட்டு போயிடுறானுக. திரும்பி கொடுக்கும் போது வலிக்குது. இன்னைக்கு வா.. நாளைக்கு வான்னு அலைய விடுறானுக” புலம்பியபடியே வீட்டினுள் வந்தார் வசந்தா.

செந்திலோடு கழிந்த அந்த அழகிய நிமிடங்கள் காற்றோடு கலந்து பறந்தது, வசந்தாவின் தொடர்ந்த புலம்பல்களால்.

அந்த புலம்பலில், ராஜியின் மூளையை ஆக்ரமித்திருந்த செந்தில், அப்போதைக்கு விலகிட, அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். இன்னுமே புலம்பி கொண்டிருந்தார் வசந்தா.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க மாட்டாமல் “புலம்பிட்டே இருக்காதம்மா.. காது வலிக்குது” என ராஜி கூறிட

“இதுக்கே வலிக்குதா.. நான் இன்னொரு விசயம் சொல்றேன், வலிக்காது.. எரியும்டி” என்றார் ஆங்காரமாய்.

“அப்படி என்ன விசயம்?” என இவள் ஏனோ தானோ என கேட்க

“நம்ப வீட்டை நமக்கே தெரியாமல் வித்து, நம்மை இந்த வாடகை வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டு, அந்த மோகன் மட்டும் அவன் மகனுக்காக சூப்பர்மார்க்கெட் கட்டிட்டு இருக்கான்.. அவ்வளவு பெரிய கடை, எத்தனை லட்சமோ.. கடவுளுக்கு தான் வெளிச்சம்” என சொல்லி முடித்தார் வசந்தா.

மற்ற நேரமாக இருந்திருந்தால்.. ‘சூப்பர் மார்க்கெட்டா? எங்கே? எப்படி?’ என ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டு, மேலும் வாய் வளர்த்திருப்பாள்.

ஆனால் இன்றோ “அதுக்கு நான் என்ன பண்ண முடியும்” என்றாள் ராஜி முகத்தை தூக்கியபடி.

“பண்ணதே நீ தானடி.. மோகன் ஒரு காரணம்னா.. நீ ஒரு காரணம். கிரியோட பணமெல்லாம் உனக்கு தாரை வார்த்து, வீட்டை யாருக்கோ தாரை வார்த்து.. எல்லாம் போச்சு” கடை எடுக்கிறார்களே என்ற கடுப்பில் இவர் பேசிட

அவ்வளவு தான் போனது பொறுமை.. எப்போதுமே குத்தி குத்தி பேசும் அதே வார்த்தைகளை, இவளும் எத்தனை நாள் தான் கேட்டு கொண்டிருப்பாள், அதன் பின் சிறிதும் யோசிக்காதவளாய் கழுத்தில் கிடந்த தாலியை குனிந்து பார்த்தவள், கொஞ்சமும் தயக்கமின்றி கழற்றி தாயின் கையில் வைத்துவிட்டாள்.

அதிர்ந்து விழித்த வசந்தாவிடம் “இப்போதைக்கு இதை வச்சிக்கம்மா.. பாப்பாவும் ஸ்கூல் போக ஆரம்பிச்ச பிறகு, வேலைக்கு போய் எப்படியாவது உங்கிட்ட வாங்கின கடனை எல்லாம் அடச்சிடறேன். நானே நிம்மதியில்லாமல் இங்க வந்து இருக்கேன். நீயும் இப்படியே பேசிட்டு இருந்தன்னா எங்கையாவது போயிடுவேன்” என ராஜி ஆக்ரோசமாய் பேசியதில்,

அரண்டு போனார் வசந்தா, “புருஷன் இருக்கும் போதே தாலிய கழட்டுற புது பழக்கமெல்லாம் வருது. ஆத்தா இனி நான் உன்னை எதுவும் கேட்கலைடி.. முதல்ல தாலியை போடு. எவனும் கடை எடுக்கான், வீடு எடுக்கான் இனி உன்கிட்ட எதுவுமே பேச மாட்டேன்” என பதட்டமாகி அவள் கையில் தாலியை வைத்துவிட்டு சென்றுவிட்டார் வசந்தா.

*******

இப்படியே அடுத்தடுத்த மாதங்களும் நாட்களும் யாருக்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.

கமலிக்கு இனி கிளிப் அணிய தேவையில்லை என்றுவிட்டனர். அதோடு என்பத்தெட்டு என்ற எடையில் இருந்து  அவள் எதிர்பார்த்த, ஆசைப்பட்ட ஐம்பத்தி மூன்று கிலோவிற்கு வெற்றிகரமாக வந்துவிட்டாள்.

ஜிம்மில் பிட்டான உடை அணிந்து இப்படியும் அப்படியுமாய் திரும்பி பார்த்து குதூகளித்து கொள்வாள். நானா இது..! என கண்ணாடியில் தன்னை பார்க்கும் போதெல்லாம் அகமகிழ்ந்து போவாள்.

இப்படி சிரித்தால், இல்லை அப்படி சிரித்தால், எப்படி சிரித்தால் நான் அழகாக இருக்கிறேன் என செல்பியாக எடுத்து தள்ளி தன்னை தானே ரசிக்க துவங்கினாள்.

இவளது அலம்பலை பார்த்து ‘ஓவரா போறடி.. என்னை விட வெயிட் குறைச்சிட்டனு ஆணவத்துல ஆடாதடி’ என பல்லைகடித்தபடி தர்ஷி வம்பிழுக்க

“ம்.. நல்ல ஐடியா.. அடுத்து டான்ஸ் கிளாஸ் போக வேண்டியது தான்” என கமலியும் பதிலுக்கு வம்பிழுத்தாள்.

“ஆமாடி.. உடம்பை குறைச்சு மயக்க போறது பத்தாம, டான்ஸ் ஆடி வேற மயக்க போறியா? தெளியவே மாட்டார்டி, என் மாம்ஸ் பாவம்டி.. தெளிய விடாமல் அடுத்தடுத்து அடிக்காதடி..” என்ற தர்ஷியின் வாயிலேயே இரண்டு வைத்து, “நான் ஜிம் போறேன்” என எஸ்கேப் ஆகி ஓட “நானே ஜிம் போறதில்லை.. நானில்லாமல் நீ மட்டும் எதுக்கு தான் போறியோ? இதுக்கு மேல உடம்ப குறைச்சு உலக அழகி போட்டிக்கு ஏதும் போறியாடி” குறையாத கடுப்பில் கேட்டாள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவளோ சிட்டாய் பறந்து விட்டாள் ஜிம்மிற்கு.

 “பத்து கிலோ குறஞ்சிட்டேன். இனி அவ்வளவு தான், ஜிம்முக்கெல்லாம் போக மாட்டேன்” என தர்ஷி ஜிம்மில் இருந்து விடை பெற்றிருக்க, ஐம்பத்து மூன்று கிலோவிற்கு வந்த பிறகும் இன்னும் குறைக்கலாமே என, கடந்த பதினைந்து நாட்களாக கமலி மட்டுமே ஜிம்மிற்கு சென்று கொண்டிருந்தாள்.

ஆனால் அன்று ஜிம் வந்த கமலிக்கோ மேனகாவின் பேச்சில் அதிர்வு தான் “எதிர்பார்த்த எடைக்கு வந்தாச்சு தானே, இனி எடை குறைச்சா பிரச்சனையாகிடும். இது தான் உங்க ஹயிட்டுக்கேத்த வெயிட்டு, இனி ஜிம் வர வேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்தே இனி பண்ண வேண்டிய பிராக்டிஸை மட்டும்  சொல்லி தரேன். அதை மட்டும் பாலோ பண்ணுங்க.. பாடியை இதே வெயிட்டில் மெயின்டெய்ன் பண்ணிடலாம். ஒரு வேளை கன்ட்ரோல் ஆகாமல் வெயிட் போடுதுன்னா.. மறுபடியும் ஜிம் வந்திடுங்க” என சொல்லவும், சரியென தலையசைப்பதை தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை கமலிக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!