பாட்டிமாவின் அறையிலிருந்து வெளியேறிய மீராவின் கால்கள் தரையில் பாவினவோ இல்லை காற்றில் மிதந்தனவோ அவளுக்கே தெரியவில்லை.
கண்கள் மாரியெனப் பொழிய, நெஞ்சில் வர்மனின் முகம் மட்டுமே விஸ்வரூபமெடுத்து நின்றது.
Advertisement
முசோரியின் பனிச்சாரலில் தன் கரம் பற்றிய அதே வர்மன்… தன் உயிரைக் காக்க பதினாறு வருடங்களுக்கு முன்பு சிங்கம் போலப் பாய்ந்த அதே வீரன்….
Advertisement
வீர ராஜ வர்மன்!
வீர ராஜ வர்மன் சேதுபதி!
Advertisement
தட்டுத்தடுமாறி தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டாள்.
அங்கே அவளுக்காகவே காத்திருந்த ரஞ்சனா, மீராவின் கலைந்திருந்த கோலத்தையும், கரகரவென வழிந்து கொண்டிருந்த கண்ணீரையும் கண்டதும் பதறிப்போய் எழுந்தாள்.
“மீரா! என்னடி ஆச்சு? ஏன் இப்படி அழற? பாட்டிமா ஏதாச்சும் சொன்னாங்களா? என்னடி சொல்லு…. என்ன?” என ரஞ்சனா அவளது தோள்களைப் பற்றி உலுக்கினாள்.
மீரா அப்படியே ரஞ்சனாவின் கைகளைப் பற்றிக்கொண்டு தரையில் அமர்ந்தாள். அவளது அழுகை இப்போது இன்னும் அதிகமானது.
“ரஞ்சு… நான் தேடின உண்மை கிடைச்சிருச்சுடி… நான் தேடித்திரிந்த அந்த முகம்…அத கண்டுபிடிச்சிட்டேன்டி…….
ஆனா அது இவ்வளவு பெரிய அதிர்ச்சியை எனக்குக் கொடுக்கும்னு நான் நினைக்கல,” என்று விம்மியபடியே இன்று பாட்டிமா சொன்னவற்றை அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.
இப்பொழுது இருக்கும் இந்த பாட்டி யின் இரட்டை சதோதரி பாட்டி ராஜேஸ்வரியைத்தான், தான் அன்று சிறுமியாக மதுரை சித்திரை அழகர் திருவிழாவில் கண்டதையும் ….
அந்த பதினாறு வருடங்களுக்கு முன்னால் தன்னை காப்பாற்றப் போராடிய அந்த ‘வீரன்’ தான், தன் உயிர்க் காதலனான ஐபிஎஸ் அதிகாரி வர்மன் என்ற உண்மையையும் அவள் சொல்லி முடிக்கையில், ரஞ்சனா அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.
அறையில் சில நொடிகள் நிசப்தம் நிலவியது. ரஞ்சனா எல்லாவற்றையும் கோர்த்துப் பார்த்தாள். சட்டென்று அவளது மனதில் ஒரு பொறி தட்டியது. மீராவின் முகத்தை நேராக நிமிர்த்தி, தன் கண்களில் தேங்கிய வியப்போடும் சற்றே ஏமாற்றத்தோடும் கேட்டாள்:
“மீரா… அப்போ, அன்னிக்கு அர்ஜுன் கல்யாணத்தப்போ இந்த பாட்டிமா வ பார்த்துட்டு…. செம்பியன் வீரன் பேரையும் கேட்டுட்டு தான் அவ்வளவு அதிர்ந்து . . . . சோர்ந்தது… மயங்கி விழுந்தது… எல்லாம்! வர்மன் தான் நீ உயிர உருகிக் காதலிச்ச வீரன்னு உனக்கு அப்போ வரை தெரியாது. ஆனா இங்க இருக்குற ‘செம்பியன் வீரன்’ தான் உன்னோட வீரன்னு நீ தப்பா நினைச்சுக்கிட்ட, அப்படித்தானே?”
மீரா மெல்லத் தலையசைத்தாள்.
“அப்போ… செம்பியன் தான் வீரன்னு உனக்குத் தப்பாத் தெரிஞ்சப்பவும், அவன் என்மேல வச்சிருக்க காதலுக்காகவும், நம்ம நட்புகாகவும்… உன்னோட அத்தனை வருஷ தவத்தை எனக்காக விட்டுக் கொடுத்துட்டுப் போகத் துணிஞ்சியா மீரா? உன்னோட வீரனை எனக்காக நீ தியாகம் செய்ய நினைச்சியா?!” ரஞ்சனாவின் குரல் தழுதழுத்தது. அதில் கோபத்தை விட, தன் தோழியின் தியாகத்தைக் கண்ட பெருஞ்சிலிர்ப்பே அதிகமாக இருந்தது.
மீரா அவளது கைகளை இறுக்கமாகப் பற்றினாள். “எனக்கு நீதான்டி முக்கியம் ரஞ்சு. செம்பியன் உன்னை எவ்வளவு விரும்பறார்ன்னு நான் கண்ணாரப் பார்த்தேன். உனக்கும் அவர அவ்வளவு பிடிச்சிருந்தது. ஒருவேளை அவர் தான் என் வீரனாவே இருந்தாலும், அவர் மனசுல இப்போ நீதான் இருக்கேங்கும்போது, நடுவுல வந்து நான் எப்படிடி உங்க வாழ்க்கையைக் கலைக்க முடியும்? என் காதலை விட உன் சந்தோஷம் தான் எனக்குப் பெருசுன்னு நினைச்சேன்…”
சற்று இடைவெளிவிட்டு, நெஞ்சடைக்க விம்மியவள், “அதையெல்லாம் விட… செம்பியன் தான் அந்த வீரன்னு விதி என் முன்னாடி கூட்டி வந்து நின்னப்பவும், என் வர்மன்… என் வர்மன் தான்டி என் மனசுக்குள்ள துடிச்சுட்டே இருந்தான்!
” இப்போ தோனுது…
நீ சீன்ல யே இல்லன்னாலும்.. வீரனா ?? வர்மனா ?? ன்னு கேள்வி வந்தா வீரனுக்கு என் உயிரக் கூட நன்றி யா கொடுப்பேன்……. பட் என் காதல் …வர்மனுக்கு தான்டி… ! என்றாள்.
“அடிப் பாவி!” என்று கத்தியபடியே ரஞ்சனா மீராவை இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ரஞ்சனாவின் கண்களிலிருந்தும் இப்போது கண்ணீர் அருவியாய்க் கொட்டியது.
“பார்த்தியாடி…. நம்ம உண்மை காதலுக்கும் நட்புக்கும் அந்தப் பரம்பொருளே கொடுத்த பரிசுதான் இது. செம்பியன் என்னோடவன்… உன் வர்மன் உன்னோடவன் மட்டும்தான்!” என்று ரஞ்சனா நெகிழ்ச்சியோடு கூறினாள்.
அந்த விஸ்தாரமான அரண்மனை அறையின் நடுவே, இரு தோழிகளும் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டு அழுதனர். அந்த அழுகையில் இத்தனை காலமாய் இருந்த தவிப்போ, வலியோ இல்லை… மாறாக, அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்து, தங்களின் தூய்மையான நட்பும் காதலும் வென்றெடுத்த பரம திருப்தியே நிறைந்திருந்தது. அதன் பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றனர்.
மறுநாள் காலை, விடியல் அத்தனை அழகாக, ஒரு புதிய வாழ்வின் பேரொளியோடு அரண்மனைக்குள் நுழைந்தது.
இராமநாதபுரத்தின் வறண்ட காற்றில், வழக்கத்திற்கு மாறாக ஒரு மெல்லிய குளிர்ச்சியும், அரண்மனை நந்தவனத்து மல்லிகையின் நறுமணமும் கலந்திருந்தன. விடிவெள்ளி முளைக்கும் அதிகாலைப் பொழுதே, இராமலிங்க விலாசமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அரச குடும்பத்து மங்கல வாத்தியங்களின் நாதஸ்வர இசை, அந்தப் பழம்பெரும் சுவர்களில் மோதி, அரண்மனை முழுக்க ஒரு தெய்வீக அதிர்வை எழுப்பிக் கொண்டிருந்தது.
அறைக்குள், சூரியனின் இளங்கதிர்கள் அந்த விஸ்தாரமான தேக்குமர ஜன்னல் வழியே தங்கம் உருக்கி வார்த்தது போல வந்து விழுந்தன.
மீரா ஏற்கனவே குளித்து முடித்து கூந்தலை உலர விட்டு கொண்டிருந்தாள் . படுக்கையில் படுத்திருந்த ரஞ்சனா மெல்லப் புரண்டு, கண்களைக் கசக்கியபடி விழித்தாள்.
பளபளக்கும் தேவதையாய் ப்ரெஷ்ஷாக நின்ற தன் தோழியை அத்தனை மகிழ்வாய் நிறைவாய் பார்த்ததும் அவளுக்குள் அத்தனை நிம்மதி.
மீரா குறும்புப் புன்னகையோடு ரஞ்சனாவின் அருகில் வந்து, அவளது போர்வையை இழுத்து, கன்னத்தைக் கிள்ளி உலுக்கினாள்.
“ஹே ரஞ்சு… கிளம்புடி சீக்கிரம்! இன்னைக்கு உனக்கு நிச்சயம்டி! மணமகள் இன்னும் இப்படியா தூங்குவாங்க?” என்று இழுத்தாள்.
ரஞ்சனா அப்படியே தலையணையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டு, உதட்டைப் பிதுக்கினாள்.
“ஆமாடி… ஆமாடி… மணமகளுக்கு தான் இங்க அவசரம்! ஆனா நேத்து ஃபுல்லா இந்த செம்ப் என் கண்ணுக்கே தெரியல. எங்க போய் ஒளிஞ்சுகிட்டாரோ தெரியலையே…”
“ஏண்டி , நீ ரெண்டு நாளா அவர்ட்ட போட்ட கடலைல ஒரு வேள பயந்து
ஓடிட்டாரோ?” என்று கண்ணைச் சிமிட்டி மீரா வம்பளந்தாள்.
ரஞ்சனா தலையணையால் மீராவை லேசாக அடித்துவிட்டு, “அடி போடி! சரி… உன் வர்மன விட என் செம்ப் க்ரேட் தெரியுமா? இத்தன நாளா உங்க லவ் ட்ராமாவ உருட்டு உருட்டுன்னு உருட்ட னத பார்த்தேல்ல… பெரிய ஐபிஎஸ் ஸாம்… வரட்டும் இரு கலாய்க்கறேன்” என்று வால்தனமாகச் சிரித்தாள்.
“ஹலோ , என் வர்மன பத்தி பேசின… அவர் ரேஞ்ச் என்ன தெரியுமா? அவர் லாம் பதிமூணு வயசிலயே …!” என்று மீரா துவங்க, “ஐயோ… இந்த வர்மன் ஆர்மி தாங்கலப்பா!” என்று கத்திக் கொண்டே ரஞ்சனா பாத்ரூமிற்குள் ஓடினாள்.
இரு தோழிகளின் சிரிப்பொலி அந்த அதிகாலை அறையை இன்னும் அழகாக்கியது.
சிறிது நேரத்தில் இருவரும் தயாராகி நின்றனர்.
கலெக்டர் மீரா, தன் கம்பீரத்திற்கு இன்னும் ஒரு மெருகூட்டுவது போல வெங்காயத்தாள் நிற காஞ்சிப் பட்டுப் புடவையில தேவதையாய் நின்றாள். அந்தப் புடவையின் பார்டர், பளபளக்கும் அதீத ஜரிகை இல்லாமல், பழங்காலக் கோவில்களின் சிற்ப வேலைப்பாடுகளை நினைவூட்டும் வகையில் ஆன்டிக் கோல்ட் நளினத்தோடு நெய்யப்பட்டிருந்தது. அந்த மென்மையான வெங்காயத்தாள் நிறத்திற்கும், கம்பீரமான தங்க பார்டருக்கும் இடையே மீராவின் முகம் பேரழகோடு சுடர்விட்டது.
மறுபுறம் நம் ரஞ்சனா, பார்ப்பவர்களின் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும் பிஸ்தா பச்சை நிறப் பட்டுப்புடவையில் மங்களகரமாய் ஆயத்தமாகியிருந்தாள். அவளது புடவையின் பார்டர் செம்மஞ்சள் நிறத்தில் தாமரை மலர்களின் வடிவங்கள் கொண்ட நூல் வேலைப்பாடுகளால் செதுக்கப்பட்டிருந்தது. ஆரவாரமில்லாத, ஆனால் அசாத்தியமான அந்த அழகியல் பார்டர், ரஞ்சனாவின் துள்ளலான குணத்திற்கும், முகத்து வெட்கத்திற்கும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.
இரு தோழிகளையும் அழைக்க பெரியம்மாக்கள் வாசலில் வந்து நின்றனர்.
பாரம்பரிய முறைப்படி இராமநாதபுரம் சேதுபதி ராஜவம்சத்தினரின் குடும்பத் திருமணங்கள் மற்றும் முக்கிய மங்கலச் சடங்குகள் அனைத்தும் இராமநாதபுரம் அரண்மனை வளாகத்திற்குள்ளேயே இருக்கும் அவர்களின் குலதெய்வக் கோவிலான “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்” தான் நடைபெறும்.
அந்த கோவிலின் வளாகத்திலேயே
நிச்சயதார்த்த மண்டபம், சிறு மேடையாக பாரம்பரிய முறைப்படி பன்னீர் இலைகளாலும், ராமநாதபுரத்துக்கே உரிய அடர் நந்தியாவட்டை மற்றும் கனகாம்பரம் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
செம்பியன், அரண்மனைக்கே உரிய கம்பீரத்தோடு, தூய பட்டு வேட்டி-சட்டையில் வந்து அமர்ந்திருந்தான்.
அவனுக்கு கண்களெல்லாம் ரஞ்சனா எங்கே எங்கே என கேட்டபடி இருந்தது.
மங்கலப் பெண்கள் தட்டுகளோடு முன்னால் வர, ரஞ்சனா தலைகுனிந்த வெட்கத்தோடு அந்த சிறு மேடை நோக்கி அழைத்து வரப்பட்டாள். அவளுக்குப் பின்னால் அவளது நிழலாக மீராவும் நடந்து வந்தாள்.
சடங்குகள் தொடங்கவிருந்த வேளையில், திடீரென நாதஸ்வரத்தின் வேகம் கூடியது. மேடையின் வலதுபுறப் படிக்கட்டுகளில் இருந்து அந்த கம்பீர உருவம் ஏறி வந்தது. கச்சிதமாக வெட்டப்பட்ட தலைமுடி, ஐபிஎஸ் அதிகாரிக்கே உரிய மிடுக்கான தோற்றம், பட்டு வேட்டி-சட்டையில் தேவதூதனாய் வர்மன்! மீராவின் வீரன்….வி.ஆர். வர்மன் ஐபிஎஸ்!
அந்த நொடியில், மண்டபத்தின் ஆரவாரங்கள் அனைத்தும் மீராவின் காதுகளுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
வர்மன் மேடையில் ஏறிவந்து நேராக மீராவின் எதிரே நின்றான்.
அங்கே, வார்த்தைகளுக்கு வேலை இல்லாமல் இரு ஜோடிக் கண்கள் மௌனமாக, அதீத காதலோடு பேசத் தொடங்கின.
வர்மனின் காந்த விழிகள் அவளது அழகிலும், அவளது மார்பின் ஏறி இறங்கும் தவிப்பிலும் தஞ்சம் புகுந்து, மென்மையாகக் கவிதை பேசின. ” என் இதயத்தை அள்ளிக்கொண்டவளே… எப்படி என் சர்ப்ரைஸ் ?? வந்துட்டேன் பார்த்தியா…? நான் யாரு .??.என வர்மன் கெத்தாக பார்க்கு
அவனது அந்தத் தீர்க்கமான, காதலே உருவான பார்வையில் மீராவின் இதயம் விர்ரென்று சுழன்றது. அவளது உடம்பில் ஒரு மின்னல் பாய்ந்தது போல ஒரு சிலிர்ப்பு ஏறியது. அவளது பளபளக்கும் விழிகள்,
” நீ யாரு?? நீ தான் என் வீரன் தெரிய வந்த போதே என் ஆன்மா உனக்கு முழுமையாக அடிமையாகிவிட்டது வர்மன். இனி நான் உன்னவள் மட்டுமே!” என்று காதலின் உச்சமாய் அவனுக்குப் பதில் உரைத்தன.
வார்த்தைகளை விட அதிதீவிரமான அந்த மௌனப் பார்வையில், இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடொன்று மோதி, அங்கிருந்த வெப்பத்தை இன்னும் கூட்டியது.
அப்போது, மைக் பிடித்த சொக்கலிங்கம் ஐயா, “நம்ம சமஸ்தானத்தோட இந்த மங்கல நன்னாள்ல, இன்னும் ஒரு சந்தோஷமான அறிவிப்பு. செம்பியன் தம்பியோட நிச்சயதார்த்தத்தோடு சேர்த்து, நம்ம வர்மன் தம்பிக்கும் இன்னைக்கே நிச்சயம் நடக்கப்போகுது! மணமகள், நம்ம கலெக்டர் மீரா அம்மா அவங்களை மேடைக்கு அன்போடு அழைக்கிறோம்!” என்றார்.
மீரா இதயம் அதிர, ‘என்ன நடக்கிறது இங்கே?’ என்று வியந்தபடி வர்மனைப் பார்க்க, அவனோ இதழோரம் ஒரு குறும்புப் புன்னகையை ஏந்தி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ரஞ்சனா அவளது கையைப் பற்றிச் சிரித்தபடியே மேடையின் மையப்பகுதிக்கு இழுத்து வந்தாள்.
சடங்குகள் தொடங்குவதற்கு சற்று முன்பாக, சுற்றிலும் இருந்த மங்கல ஒலிகளுக்கு நடுவே, வர்மன் சட்டென்று மீராவின் மிக அருகில் நெருங்கி வந்தான். அவளது புடவைத் தலைப்பை ஒட்டி அவனது கைகள் லேசாகத் உரசிச் செல்ல, அவளது காதோரம் அவனது உஷ்ணமான மூச்சுக்காற்று சுடச்சுடப் பட்டது. தன் காந்தக் குரலில் மிக ரகசியமாக, “என்ன… கட்டிக்கிறியாடி?” என்று குறும்புடனும் பேரன்புடனும் கேட்டான்.
அவனது அந்தத் திடுதிடுப்பான கேள்வியில் மீராவின் உடல் சிலிர்த்தது. நெஞ்சுக்குள் காதல் வெள்ளமாய் உருகி வழிய, அவனது மார்போடு ஒட்டிவிடுவது போல மிக அருகில் சென்று, அவனது கண்களை ஆழமாக நோக்கி, தன் இதழ்களில் ஒரு கள்ளப் புன்னகையை ஏந்திக் கொண்டு, “உன்னக் கட்டிக்க எனக்குக் கசக்குமா மாமா?!” என்று தன் நெஞ்சின் ஆழத்திலிருந்து உருகிக் கூறினாள்.
நாகேஸ்வரி பாட்டிமாவின் முன்னிலையில், ஒரே மேடையில், ஒரே சுபமுகூர்த்தத்தில் அந்த இரட்டை நிச்சயதார்த்தம் அரங்கேறியது. மங்கல நாதம் விண்ணைத் தொட… ரஞ்சனாவின் தாய் தந்தையர் ஒரு புறமாய் இருந்து மீராவுக்கும் ரஞ்சனாவு க்குமாக இரு தட்டுகளை த்தர மறுபுறம் பாட்டிமா வும் பெரியம்மாக்களும் செம்பியன் வர்மனுக்கு தர, இரு ஜோடி களும் மாலை மாற்றினர். மோதிரங்களை அணிவித்துக் கொண்டனர். வர்மன் மீராவின் விரலில் மோதிரத்தை மாட்டியபோது, அவளது கைகளில் ஏற்பட்ட நடுக்கத்தை அவனது விரல்கள் மென்மையாக
அழுத்தி விட்டான்.
அரண்மனை முழுக்க அட்சதை தூவப்பட்டது, மங்கல ஒலிகள் முழங்கின.
சடங்குகள் முடிந்து அனைவரும் நெகிழ்ச்சியில் திளைத்திருக்க, பாட்டிமா நாகேஸ்வரி எழுந்து நின்றார்.
“நிச்சயம் நல்லபடியா முடிஞ்சிருச்சு. ஆனா, இந்தச் சமஸ்தானத்து வாரிசுகளை இன்னும் காக்க வைக்க நேரமில்லை. அதவிட எனக்கே காத்திருக்க வயசு இல்ல… என் மனசு சொல்லுது… இன்னைக்கு ராத்திரியே எல்லாரும் ராமேஸ்வரம் கிளம்புறோம். நாளைக்குக் காலைல பிரம்ம முகூர்த்தத்துல, அந்த ராமநாதசுவாமி கோவில்ல வச்சு செம்பியன்-ரஞ்சனா, வர்மன்-மீரா ரெண்டு ஜோடிக்கும் கல்யாணம் நடக்குது! இது இந்த பாட்டிமாவின் ஆசை!” என்று அதிரடியாக கண் கலங்கி உடைத்தார்.
அந்த அறிவிப்பைக் கேட்டு மீராவும் ரஞ்சனாவும் ஒருவரையொருவர் பார்த்து வியப்பில் வாயடைத்துப் போயினர். ரஞ்சனாவின் தாய் தந்தை விவாதித்தனர்… வர்மனுக்கும் செம்பியனுக்கும் துள்ளல் கூடிற்று .
பாட்டிமாவின் அதிரடி கல்யாண அறிவிப்பு வெளியாகி மண்டபமே பரபரப்பாக மாற, வாழ்த்துச் சொல்ல வந்த கூட்டத்திற்கு நடுவே இரு ஜோடிகளும் தங்களுக்குள் பேசி க்கொண்டனர்.
வர்மன் யாரும் பார்க்காத வண்ணம் மீராவின் இடுப்பு வளைவில் தன் பலமான கரங்களை இறக்கி, அவளைத் தன் பக்கமாக இறுக்கி இழுத்தான். அவனது விரல்களின் தீண்டல் பட்டுப் புடவையையும் தாண்டி அவளை சுட்டெரிக்க, மீரா அதிர்ச்சியில் மூச்சடைத்து வர்மனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது காதோரம் குனிந்த வர்மனின் இதழ்கள், அவளது காது மடலை உரசியபடி” இனி ஒரு நிமிஷம் கூட உன்னை என்னால தள்ளி வைக்க முடியாது. கட்டிக்கலாம் டி…”
அப்போது அவன் அவளது கீழ் உதட்டைத் தன் பார்வையாலேயே கவ்வி இழுக்க, மீராவின் முகம் தக்காளிப் பழமாய் சிவந்தது.
மறுபுறம், செம்பியன் மின்னிக் கொண்டிருந்த ரஞ்சனாவைத் தன் பார்வையாலேயே விழுங்கி ” ஓகேயா??” எனும்படி கண்சிமிட்ட…
“… என்னல்லாம் நீங்க இப்போ வே தாலி கட்டிக்கோன்னு சொன்னாலும் நான் ரெடிப்பா ” என்று சுற்றிலும் பார்த்துவிட்டு, அவனது நெஞ்சில் தன் கைகளால் மெல்ல முட்டினாள்.
மண்ணின் பாரம்பரியமும், இரு ஜோடிகளின் அசாத்தியமான அந்தரங்கக் காதலும் வென்றெடுத்த அந்தப் பேரழகான காலைப் பொழுது, அடுத்த நாள் விடியப்போகும் அந்த பிரம்ம முகூர்த்தக் கல்யாணத்தின் தீராத தவிப்புகளோடும் மங்கல வாழ்த்துகளோடு நிறைவடைந்தது!