அடுத்தடுத்த வாரங்களின் சீதா ரகுவரன் இருவருக்குமே அலுவலகத்தில் வேலை கழுத்துவரை பிடித்தது. வேறு ஒன்றையும் யோசிக்கும் நிலையில் இருவருமே இல்லை. அன்று பேசியதற்கு பிறகு வீட்டுப் பெரியவர்களும் இது சம்மந்தமாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கிருஷ்ணனும் ரகுவின் அப்பாவும்,மாமனாரும் சேர்ந்தாற்போல அருகில் இருக்கும் பூங்காவிற்கு நாள் தவறாமல் வாக்கிங் செல்கிறார்கள். பேசுவதற்கு அவர்கள் மூவருக்கும் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. மறந்தும் தங்கள் பிள்ளைகளின் திருமண உறவு பற்றி பேசுவதில்லை என்ற பக்குவம் அவர்களின் வார்த்தைகளை கட்டிப் போட்டிருந்தது.
Advertisement
நாற்பதை கடக்கும் இருவரின் திருமண உறவு என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. இருவருக்குமான புரிதல் சரியாக இருந்து, விருப்பங்கள் ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம். சாதாரணமாக பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை ஆணாகட்டும்,பெண்ணாகட்டும் மனம் லேசாக இருக்கும். இன்னும் முதிர்ச்சி நிலைக்கு முழுமையாக வராத நிலையில் உனது வாழ்க்கை துணை இவள்/இவன் தான் என்று இணை சேர்க்கும்பொழுது இருவருக்குமான புரிதல்,சண்டைகள் ,கோவங்கள் எல்லாவற்றையும் தாண்டி ஒருவருக்கொருவர் என்பது ஆழ்மனதில் எளிதாக பதிந்துவிடும். மாமனார்-மாமியார் உறவும் அதிக சிக்கலை கொண்டதாக இருக்காது. அவர்களுக்குமே மருமகள்’மருமகனை தங்கள் வீட்டின் ஒருவராக ஏற்றுக்கொள்வது சுலபம்.
வயது ஏறும்பொழுது வளையும் தன்மை குறைந்து விடுகிறது. எனக்கு தெரியாததா..பெரியதாக சொல்ல வந்து விட்டார்கள் என்ற ஈகோவும், உறவுகளை ஏற்றுக்கொள்ளும்,விட்டுக்கொடுக்கும் தன்மையும் குறைந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் இருபாலரும் நிறைய படிக்கிறார்கள். முன்பு போல் இல்லாமல் பணம் தாராளமாக புரளுகிறது. பெரிய எதிரிபார்ப்புகளும்,ஆடம்பரங்களையும் கொண்டதாக இல்லாத வாழ்க்கை அவ்வளவு மோசமாக இல்லை.
Advertisement
Advertisement
இதே சமயத்தில் பெண்ணை பெற்றவர்கள்,”இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.இப்போதான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கா. கொஞ்சம் கால் ஊனட்டும் “என்று சொல்லிக்கொண்டு வருஷன்களை கடத்த,பெண்ணுக்கு சம்பளம் ஏறுகிறது.அதற்குத் தகுந்தாற்போல மாப்பிள்ளை அமைவதில் கஷ்டம். பெண் திருமணத்தில் என்ன இருக்கிறது என்று தனது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாள். இதுவரை சரிதான். அதற்குப் பிறகு, ..
Advertisement
வயதாகும் பொழுது தனிமை தாக்குகியது. முன்பெல்லாம் வீட்டில் உடன்பிறந்தவர்கள் என்று இருப்பார்கள்.இப்போது ஒற்றை பிள்ளைகள். தனிமைக்கு துணை. இன்னொருபுறம் பணம்,வேலை,சம்பளம்,சொந்த வீடு,கார் என்று ஆயிரம் விஷயங்கள் பார்த்து திருமணம் செய்து கொள்ளும் பொழுது மனம்? ஒருவருக்கொருவர் மனம் பொருந்தாமல் ஒரு திருமண உறவு.அதில் சலிப்பு, ஈகோ ,விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவு, ஒற்றை பிள்ளைகளுக்கு இன்னமும் கடினம். சகிப்புத்தன்மை குறைகிறது. இன்றைய கால கட்டத்தில் அதிகமாக விவாகரத்துகள் நிகழ்கிறது.
சாதாரண வாக்குவாதம் கணவன் மனைவிக்குள் எழும்பொழுது பெற்றவர்களே,”சரிவரலன்னா விவாகரத்துக்கு அப்ளை பண்ணு .சகிச்சுக்க கட்டாயம் இல்லை “என்று பிரச்சனையை பெரியதாக்குகிறார்கள். இதோ இங்கே நமது சீதாவின் நிலைமையை உங்களுக்கு சொல்லிவிட்டேன். சீதாவாவது இரண்டாம் தாரமாக ,ரெடிமேடு குடும்பமாக இருந்தாலும் எனக்கு சம்மதம் தான். குடும்பம் என்று ஒன்று அமைந்தால் போதும் என்று நினைக்கிறாள். நிறைய பெண்கள் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு பெற்றவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று இருந்துவிட்டு,இதுதான் சுதந்திரம் என்று வாழ்ந்துவிட்டு,ஒருகட்டத்தில் எல்லாம் சலித்து,தாங்க முடியாத தனிமையில் மனநல மருத்துவரிடம் செல்வதை இந்த சமூகம் பார்க்கிறது.
சீதாவுக்கு வேலைபளு கொஞ்சம் குறையவும்,”அப்பா .. அவர்கிட்டேந்து எந்த அழைப்பும் வரலையே!என்கிறாள். உள்ளே வேலை செய்து கொண்டிருந்த ராதாவுக்கு மகள் சொன்னது பாதிதான் காதில் விழுந்தது.அதற்க்கே,”யாருகிட்டேந்து அழைப்பு வரலையாம்?” என்று கேட்டுக்கொண்டே ஹாலுக்கு வர தந்தை மகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.
சட்டென்று பதில் சொல்வதில் ஒரு தடை ஏற்படவே கிருஷ்னன் கோவமாக,”ஏன் எல்லாத்தையும் உன்கிட்டே சொல்லிட்டே இருக்கணுமா? மனுஷன் நிம்மதியா வாய்திறந்து பேச முடியுதா…”என்று அவசரமாக தங்களது அறைக்கு சென்றுவிட, அப்பாவை தொடர்ந்து தானும் தனது அறைக்குள்நுழைந்து கொண்டாள் சீதா. ராதா வந்ததிலிருந்து பார்க்கிறாள் .அப்பாவும் மகளும் அடிக்கடி ஏதோ மெதுவாக பேசிக் கொள்வதும் ராதா வந்தால் சாதரணமாக காட்டிக்கொள்வதுமாக ஒரு நாடகம் நடக்கிறது. உள்ளுக்குள் சந்தேகமும் பயமும் இருந்தாலும் ராதா அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்’கத்திரிக்காய் மலிந்தால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்’என்ற ரீதியில் நடப்பவற்றை பார்க்கிறாள். இன்னமும் ஜானகியிடம் சீதாவின் விஷயத்தை சொல்லவில்லை. அவளும் குழந்தைகளுக்கு பரீட்சை நேரம். என்று ஒரு மாதமாக இங்கே வரவில்லை. அவ்வப்பொழுது அழைத்து பேசிக்கொள்வதுடன் சரி. ராகவனும் ஆடிட்டிங் நேரம் என்று வீட்டுக்கு வருவதே விடியற்காலையில் தான். நிலைமை புரிந்ததால் கிருஷ்னனும் சீதாவும் அவர்களை ஒன்றும் சொல்லவில்லை. அருகில் தானே இருக்கிறீர்கள்.ஏதாவது அவசரம் என்றால் வருவார்கள் என்று அமைதியாக இருக்கிறார்கள்.
அந்த வாரம் சனிக்கிழமை அன்று மையிலாப்பூர் கபாலி கோவிலுக்கு செல்லலாம் என்று கார்பார்க்கிங்கிற்கு சீதா செல்லவும் இவளுக்காக ஏற்கனவே அங்கே ரகுவரன் நின்று கொண்டிருந்தான்.
“சீதா … உங்களுக்கு இந்த ரெண்டு நாள்ல என்னிக்கு வசதி படுமோ சொல்லுங்க. நாம பேசிடலாம். நிறையவே பேசணும் .”என்றுவிட கொஞ்சம் யோசித்தவள் ,”நா இப்போ மைலாப்பூர் கோவிலுக்கு கிளம்பறேன்.உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நீங்களும் வரலாம். முதல்லே கோவிலுக்கு போகலாம். அப்புறமா நிதானமா பேசலாம். கிண்டி பார்க் ,இல்ல செம்மொழி பூங்கா அந்த மாதிரி எங்கயாச்சும் போயி பேசிட்டு வீட்டுக்கு வரலாம்.”என்றாள் .
சம்மதமாக தலையை அசைத்தவன் குனிந்து தனது ஆடையை பார்த்துக்கொண்டான். ஒரு வேஷ்டியும்,டி ஷர்ட்டும் அணிந்திருந்தான். சீதா சும்மாயிராமல்,” நல்லாதான் இருக்கு.கோவிலுக்கு போக வேஷ்டிதான் சரி”என்றுவிட்டு புன்னகைக்க அவனும் சிரித்துக்கொண்டே அவளது காரில் ஏறிக்கொண்டான்.
அவர்கள் கார் வெளியேறும் சமயத்தில் வீட்டுக்கு கீரை வாங்கி கொண்டு மாடிப்படிகளில் ஏறப்போன ராதாவின் கண்களில் பட, அவளது விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.அவள் வெகு காலமாக எதிர்பார்த்த அந்த கத்திரிக்காய் இதுவென புரிய எதிலோ ஏமாந்த உணர்வில் அங்கேயே அமர்ந்துவிட்டாள் . ஏற்கனவே பயந்த விஷயம் தான். ஈரெட்டாக நினைத்தது ,இப்போது அவர்கள் இருவரும் ஜோடியாக செல்வதை பார்க்க கணவன் மனைவியை போலவே இருக்கவே தன்னையும் அறியாமல் நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள் ராதா. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவளுக்கு மூளைக்கு உறைக்கவில்லை .
இதற்கு தனது கணவரும் சம்மதித்திருக்கிறார் என்பதை ராதா புரிந்துகொண்டதில் இன்னமும் பெரியதாக தாக்கியது. தங்களது வயதான காலத்தில் யார் பார்த்துக் கொள்வார்கள்?இந்த பெண்ணாவது துணைக்கு வேண்டாமா.. என்றுதானே இவ்வளவு காலமாக சீதாவை திருமணம் செய்து அனுப்பாமல் தங்களுடனேயே வைத்துக் கொண்டது.இந்த மனிதர் இதையெல்லாம் உணராமல், சற்றும் யோசிக்காமல் என்ன செய்து வைத்திருக்கிறார்? என்னிடமாவது கேட்டிருக்கலாமே! என் பெண் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைக்க நான் என்ன அவளது விரோதியா? எனது சாமர்த்தியத்தில், சம்பாத்தியத்தில் தானே பிரச்சனை நேரத்தில் இந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தினேன். என்னிடம் சொல்லாமல் இது என்ன?என்று கோவமும்,ஆற்றாமையுமாக வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள். போவோரும் வருவோரும் இவளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு சென்றதை உணரும் நிலையில்கூட ராதா இல்லை.
சற்று நேரத்தில் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவள்,’என்னை மீறி இந்த திருமணம் எப்படி நடக்கும்’என்று பார்க்கிறேன் என நினைத்தவாறே தங்களது வீட்டை நோக்கி சென்றாள் . சோர்ந்திருந்த இவளது முகத்தை பார்த்த கிருஷ்ணன் ராதாவிடம் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை.ஏனோ அவருக்கு மனம் படபடப்பாக இருந்தது.சீதா தானும் ரகுவும் கோவிலுக்கு வந்திருப்பதாகவும், பிறகு செம்மொழி பூங்காவுக்கு செல்லப் போவதாகவும் அப்பாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்க அவரது மனம் அதில்தான் நின்றது.
கணவரின் இந்தப் போக்கு மனைவிக்கு எரிச்சல் ஊட்டுவதற்கு போதுமானதாக இருக்க அவரை முறைத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள் ராதா. மனைவி தன்னை ஒருவிதமாக பார்ப்பது சற்று தாமதம் ஆனாலும் கிருஷ்னனுக்கு புரிந்துவிட்டது. சட்டையை மாட்டிக்கொண்டு தப்பித்தால் போதும் என்று கிருஷ்னும் வெளியே கிளம்பிவிட்டார். செருப்பை போட்டுக்கொண்டே ,”எனக்கு வெளியே வேலை இருக்கு ராதே. சாப்பிடும் வெளியே சாப்பிட்டுக்கறேன்.சீதாவும் வெளியே சாப்பிட்டு தான் வருவா. நீ உனக்கு மட்டும் பார்த்துக்கோ “என்று சொல்லிவிட்டு விரைய ராதாவுக்கு இளக்காரமாக இருந்தது. ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கறது.மனைவிக்கு சொல்ல முடியவில்லை. தைரியம் இல்லை. எப்படி ஓடுகிறார்! திருமபி இங்கே இந்த வீட்டுக்குள் தானே வந்தாக வேண்டும். ஏதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்காமல்,நான் சம்மதிக்காமல் நடக்குமா..”என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவள் தனக்கு மட்டும் வத்தல் குழம்பும் சுட்ட அப்பளமுமாக செய்து கொண்டாள் .உணவுதான் வயிற்றுக்குள் இறங்குவேனா’ என்று இருந்தது.
நேரே கபாலீஸ்வரர் கோவிலுக்குள் சென்ற சீதா -ரகுவரன் இருவருக்குமே மனம் தவித்தது. இதெல்லாம் சரிவராது.இந்தப்பெண்ணின் மனம் நோகாமல் எப்படி சொல்வது என்று ஆணும், இது மட்டும்தான் சரியாய் வரும். பூமிக்குட்டியையும்,அவளோட அப்பாவையும் நா நல்லா பார்த்துக்குவேன்.எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு.எனக்குன்னு குடும்பம் வேணும்.காதலிக்க ரகு வேணும்.இதை எப்படி நா இவருக்கு புரியவைப்பேன்”என்று பெண்ணும் மருகினார்கள். நேரே கற்பகத்தை பார்த்துவிட்டு அவளிடம் ஒரு அப்ளிகேஷன் போட்டாள் சீதா. ரகுவரன் கற்பகம் சந்நிதியில் அர்ச்சனை செய்தான். அவன் தனது மற்றும் பூமியின் பெயர்,நட்சத்திரம்,கோத்திரம் சொன்னவன் சீதாவை பார்த்தான். அந்த பார்வைக்கு அர்த்தம் அவளும் தனது பெயருக்கும் அர்ச்சனைக்கு சொல்ல வேண்டும் என்பது தான். அவளோ வாயை திறப்பதாக இல்லை.அவனே, குருக்களிடம் சீதாவின் பெயரை சொன்னவன் மீண்டும் அவளை பார்க்க அவள் தனது நட்சத்திரத்தையும்,ராசியையும் சொன்னாள் . ரகுவின் மனம் அதை தனது நினைவு பெட்டகத்தில் சேமித்துக் கொண்டதை அவனே அறியவில்லை.
அங்கே அர்ச்சனை பிரசாதத்தில் இருந்த மல்லிப் பூவை ரகு சீதாவிடம் கொடுக்க அவன் சந்தோஷமாக அதை வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள் . மனதுக்குள் திடம் பரவுவதை அவளால் நன்றாகவே உணர முடிந்தது. பிறகு கபாலியின் சன்னதியில் சீதா அர்ச்சனைக்கு கொடுத்துவிட்டு இம்முறை பூமா மற்றும் ரகுவின் நட்சத்திரம் ராசியை சீதாவே சொல்லிவிட ரகு அவளை ஆழ்ந்த பார்வை பார்த்தான். அங்கேயும் பூ கொடுக்க அதையும் சீதாவிடமே கொடுத்தான் ரகுவரன். அவன் பார்வையில் இருந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பெண் வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.
இந்த நிகழ்வுகளிலேயே ரகுவரனுக்கு சீதாவை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. அவனிடமும் இதற்கான பதிலும்,பிரதிபலிப்பும் இல்லை. ஒருவகையில் பயமாக இருந்தது. அவளது எதிரிபார்ப்புகள் புரிகிறது.அதை பூர்த்தி செய்யும் நிலையில் அவன் இல்லை.திருமணமே செய்து கொண்டாலும் அதற்குப் பிறகான வாழ்க்கை.அதில் சீதா ஏமாறும் வாய்ப்புகள் அதிகம்.தன்னால் மைதிலியை எப்போதும் மறக்கவே முடியாது.அதில் சீதாவின் மனம் அடிபட்டு போனால்..இன்று இருக்கும் விருப்பம் காதலாக கனிவதற்கு பதிலாக அழுகிப் போகும் அபாயம் அதிகம். கடவுளே …நீதான் வழி செய்யணும்’என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டு பிரகாரம் சுற்ற ஆரம்பித்தான் ரகுவரன்.அவனுக்கு இணையாக சீதாவும்.
சீதாவுக்கு ரகுவரன் என்ன சொல்வானோ என்றுதான் பயமாக இருந்ததே தவிர இன்னமும் அவள் அம்மா ராதா என்ன சொல்வாளோ என்று யோசிக்கவே இல்லை. மனைவியிடம் தப்பித்து கிருஷ்ணன் அமர்ந்திருப்பது தங்கை சுதாவின் வீட்டில்.பேசிவிட்டு நேரே அத்தை வீட்டுக்கு வா.முடிந்தால் மாப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு வா’ என்று குறும்செய்தி அனுப்பிவிட்டு கிருஷ்ணன் காத்திருக்க ,அதை பார்த்து சிரித்துக் கொண்ட சீதா சரி என்று பதில் அனுப்பி வைத்தாள் .