Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

முள் மீது தூங்கினேனே 20 3

கிரியின் அந்த பதிலில் செல்வத்தின் முகத்தில் லேசாய் புன்னகை படர்ந்திட “சரி மாப்ள கூட்டிட்டு வாங்க, நான் வார்டன் போன் நம்பரை உங்களுக்கு அனுப்புறேன். கமலிட்ட ஏதாவது பேசனும்னா பேசிக்கோங்க” என்றார் இதற்கு முன் இருந்த சோர்வு நீங்கியவராய்.

இவர் பேசுவதை தான் குடும்பமே கவனித்து கொண்டிருந்ததே, என்ன ஏது என கேள்விகள் எதுவும் கேட்காமால், மல்லிகா மருமகனுக்காக விருந்தை தயாரிக்க சென்றுவிட, “மாப்பிள்ளை வந்ததும் எழுப்பி விடு மல்லி, கொஞ்சம் தூங்கி எழுந்துகிறேன்” என மல்லியின் காதில் சற்று சத்தமாய் விழும்படி சொல்லிவிட்டு சந்தோஷமாய் தங்கள் அறைக்கு சென்றுவிட்டார் செல்வம்.

இருவரும் சென்றதும், “உங்க வீட்டில் இருந்து எல்லாரும் நாளைக்கு மறு நாள் தானே வாரதா சொன்ன? இப்போ இன்னைக்கே வந்திடுவாங்கன்னு ரீல் விடற? இன்னைக்கு மட்டும் உங்க வீட்டில் இருந்து யாரும் வராமல் போகட்டும், இருக்கு உனக்கு கச்சேரி. அப்படி என்ன தான் கோபமோ கமலி மேல.. ச்சை” என இவன் பார்வையை திருப்பி கொள்ள

“கால் பிடிச்சு விடுங்க.. வலிக்கு” என கால்களை அவன் முன்பாகவே சோபாவில் தூக்கி வைத்தாள் பிரபா.



Advertisement

“ம்.. உங்க வீட்டு ஆளுங்க தான் வரிசையா வரப்போறாங்களே.. அவங்களை பிடுச்சு விட சொல்லு” என்றவன், சோபாவின் கீழே அதில் சாய்ந்து போன் பார்த்து கொண்டிருந்த சந்தோஷிடமிருந்து போனை பறித்துவிட்டு “வாடா, கொஞ்சம் நேரம் தூங்கலாம்” என அவனை தோளில் போட்டு கொண்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டான் கர்ணா. எரிச்சலானாள் பிரபா.

அனைத்தையும் கேட்காத தூரத்தில் இருந்த மல்லியோ சமையலில் இறங்கிவிட்டார்.

*********

Advertisement

போகும் வழியில் கமலியை அழைத்து செல்ல வேண்டும் என கிரி ராமிடமும் கூற, “போற வழி தானடா.. கூட்டிட்டு போயிடலாம்” என சிரிப்போடு சொல்ல, ராமை முறைத்த படியே, டிரைவரிடமும் கூறினான் கிரி.

Advertisement

டிரைவரோ.. “அந்த காலேஜ்க்கு ரொம்ப சுத்து ஆச்சே சார்.. எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகும் பரவாயில்லையா” என நேரம் பார்த்து பேரம் பேசினார் டிரைவர்.

“அது பார்த்துக்கலாம்.. நீங்க காலேஜ் போயிடுங்க” என கிரி சொன்ன பிறகு, காலேஜிற்கு விரட்டினார் வண்டியை. ஒரு வழியாய் இவர்கள் இவளது கல்லூரிக்கு வந்துவிட்டனர்.

செக்யூரிட்டியிடம் விபரங்களை கூற,  நேராய் ஹாஸ்டலுக்கே வழி காட்டி, “விசிட்டர் மட்டும் தான் உள்ளே போகனும், அதுவும் வெயிட்டிங் ஹால் வரை தான் அலவ் பண்ணுவாங்க, காரை ஹாஸ்டலுக்கு வெளியவே நிறுத்திடுங்க” என கூறி அனுப்பி வைத்தார்.

Advertisement

அதே போல, கல்லூரி வளாகத்தை கடந்து ஹாஸ்டலுக்கும் வந்தனர், ஹாஸ்டலின் வெளியே காரை நிறுத்த சொல்லிவிட்டு இறங்கி கொண்டான் கிரி.

“ண்ணே, நீ வர்றியா..” என ராமிடம் கூற

“நான் இங்கேயே இருக்கேன்டா.. நீ போய் கமலியை அழைச்சிட்டு வா” என்றவன் “வந்திடுவியா.. இல்லை..“ என சிரித்தபடியே ராம் வம்பிழுக்க

“வந்திடுவேன்” என இவனும்  ராமை முறைத்து கொண்டே தான் சென்றான். அவன் சென்றபின், காரின் கதவை திறந்து வைத்தபடி, ராமும் டிரைவரும் போனுடன் அமர்ந்துவிட்டனர்.

கல்லூரியை, அதன் அமைப்பை, அதன் பசுமையை ரசித்தபடி ஹாஸ்டல் ஆபீஸை நோக்கி சென்றான்.

அங்கே இவள் பெயர், வேலை என சொன்னதுமே, “ஏற்கனவே கமலி சொன்னா, அழைச்சிட்டு போக ஆள் வர்றதா.. நீங்க அங்க வெயிட்டிங் ஹாலில் உக்காருங்க, நான் கமலிக்கு இன்பார்ம் பண்ணிடுறேன்” என ஆபீஸில் இருந்த ஒரு பெண் சொல்லிட இவனும் எதிரிலேயே இருந்த வெயிட்டிங் ஹாலுக்கு சென்றுவிட்டான்.

வரிசை கட்டியிருந்த இரும்பு சேர்கள் ஒரு பக்கம், சுவரோடு சுவராய் கிடந்த நாலைந்து சோபாக்கள் ஒரு பக்கம் என பெரிய பெரிய ஜன்னலோடு கூடிய பெரிய இடமாக இருந்தது அந்த ஹால்.

பிள்ளைகளை பார்க்க வந்தனரோ சில பெற்றோர்கள், கூட்டமாக இல்லாமல், ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி போய், ஒட்டி போடப்பட்டிருந்த இரும்பு சேரில் அமர்ந்து கொண்டான்.

ஆபீஸ் பெண்ணோ, வார்டனிடம் சொல்லி இருக்க, அவர் கமலிக்கு போன் செய்து, அழைத்து போக ஆள் வந்துவிட்டதாக கூற, இவளோ வந்திருப்பது கர்ணா என நினைத்து கொண்டு “இதோ வந்திடுறேன் மேடம்” என இரண்டு சிறிய பேக்குக்கள், ஒரு டிராலி பேக் என எல்லாவற்றையும் இழுத்து கொண்டு வந்தாள்.

வரும் வழியிலேயே, பல மாணவிகள், சக சப் வார்டன்கள் அனைவரும் பிரியாவிடை கொடுத்திட, அனைவருக்கும் “போயிட்டு வாரேன்.. பாய்” என தலையசைத்தபடியே வந்தாள், டெப்யூட்டி வார்டன் அறைக்கு சென்று அவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பி விட்டாள் கமலி.

ஏற்கனவே வெக்கேட் பிரசீஜரை முடித்திருக்க, நேரடியாக வெயிட்டிங் ஹாலுக்கு வந்திருந்தாள்.

அது பெரிய ஹால். பெற்றவர்கள் அமர்வதற்கும், பிள்ளைகளோடு சுதந்திரமாக பேசுவதற்கும் தகுந்தார்ப்போல் மிக பெரிதாய் கட்டி வைத்திருந்தனர்.

அங்கே இரண்டு மூன்று பெற்றோர் அவர்களது மகள்களோடு பேசிக்கொண்டிருக்க ‘இந்த அண்ணே எங்க போனான்’ என தேடியது இவள் பார்வை, சேரில் காதில் போனை வைத்தபடி, இவளுக்கு முதுகு காட்டி பேசிக்கொண்டிருந்தவனின் தலையும் ஷோல்டரும் மட்டுமே தெரிய, மீத உருவம் இரும்பு சேரினுள் மறைந்து போனது.

கிரியை கர்ணா என நினைத்து ‘எரும எங்க போய் உக்கார்ந்திருக்கு பாரு’ என திட்டிக்கொண்டே, லக்கேஜ்களை இழுத்துக்கொண்டு அவன் பின்னால் போய் நின்றாள். “டேய், அண்ணா வர இவ்வளவு நேரமா.. எவ்வளவு நேரம் தாண்டா வெயிட் பண்றது” என இவள் கத்த, இவள் குரல் கேட்டு, காதில் போன் இருப்பதையும், தான் இன்னொருவருடன் போனில் பேசி கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து பட்டென்று திரும்பி எழுந்து நின்றான் கிரி.

குரலை எளிதில் உள்வாங்கியவனுக்கு, அவள் உருவத்தை அவ்வளவு எளிதில்  உள் வாங்கி கொள்ள முடியவில்லை. காதில் இருந்த  போன் நழுவி தரையில் தொப் என விழ, இவளை பார்த்தவனின் கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடும் அளவிற்கு, இதுவரை இப்படி ஒரு அதிர்வை இவன் உடல் உணர்ந்ததே இல்லை என்பது போல அதிர்ச்சியின் உச்சத்திற்கு இழுத்து சென்றது அவனை.

நம் கண்களுகளுக்குள் விழும் பிம்பம் கிரியுடையது தானா? நிஜமாகவே அவன் தான் தன்முன் நிற்கிறானா? என இமை தட்டாது நின்றுவிட்டாள்.

எங்கே இமை தட்டி விழிக்கும் அந்த இடைவெளியில் மறைந்து போய் விடுவானோ என  அவனை தான் பார்த்தாள், பார்த்தாள் பார்த்து கொண்டே இருக்கிறாள்.

கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகிறது கிரியை நேரில் பார்த்து..

இமைதட்டாது பார்த்த பார்வையில் கண்ணீரால் நிறைய தயாரானது கமலியின் விழிகள்.

தன் முன் நிற்பது கமலி தானா? இல்லை வெறெதுவும் கனவா என நொடிக்கு இரு முறை இமை தட்டி தட்டி விழித்து கொண்டிருந்தது கிரியின் விழிகள்.

கிரி தானா என இவளும், கமலி தானா என இவனும் இமை சிமிட்டாமல் பார்த்திருந்தனர்.

இவள் கமலி தான் என இவன் தெளியவில்லை. ஆனால் கிரி தான் என இவள் தெளிந்த அந்த நொடி, இமைகள் ஒரே முறை தட்டி பின் விழித்திட, தேங்கி நின்ற கண்ணீர் கன்னங்களில் கரகரவென வழிந்தோடியது.

இவள் அசைவுகள் அவனுக்கும் நிதர்சனத்தை உணர்த்திட தன்னாலேயே “கமலி” என இவன் அழைத்து வைக்க, அவன் அழைப்பில் இருந்து வழிந்து ஓடியது சந்தேகம். வழிந்த கண்ணீரை பட்டென துடைத்து, வேகமாய் நிமிர்ந்து சிவந்த கண்களோடு இவனை பார்த்தாள்.

“கமலி தான், கமலியே தான்.. எந்த சந்தேகமும் வேணாம்” துடைத்தாலும் வடிந்தது கண்ணீர்.

இவள் சொல்லிய கனம், இரண்டடி பின் நகர்ந்து சேரில் இடித்து தட்டி விழ இருந்தவன், நொடியில் சுதாரித்து நிதானித்து நின்றான்.

அவன் பார்வை அவள் தலை முதல் கால் வரை இன்ச் பை இன்ச்சாக பதிந்து இறங்கி ஆராய்ந்தது இவளை.

பழைய கமலியின் அளவில் பாதியாக, அழகில் முழுமதியாக அவதரித்திருந்தாள்  இந்த புது கமலி.

கடவுள் அவதாரம் கேள்வி பட்டிருக்கிறான், இதென்ன மனித அவதாரம் என அவளை பார்த்த கிரிக்கு பேச்சே வரவில்லை.

அந்நேரம் தரையில் கிடந்த கிரியின் போன் “என்னப்பனல்லவா.. என் தாயும் அல்லவா..” என பாட்டிசைத்து இருவரையுமே திசை திருப்பியது.

கமலி பார்வையை வேறு பக்கம் திருப்பிட, அவளை பார்த்தபடியே போனை எடுத்து அட்டெண்ட் செய்தான் கிரி.

மனுபக்கம் “நேரமாகுமாடா..” என கேட்ட ராமிற்கு “இ.. இதோ.. வந்துட்டோம்னா, இரண்டே நிமிஷம்” என தடுமாறி பதில் சொல்லி இவன் வைக்க

இருவருக்குமே உணர்வுகளால் பிடித்து வைக்க பட்டிருந்த மாயவலை ஒன்று அவிழ்ந்து வீழ்ந்தது.

‘ஆக மொத்தம் இப்போதைக்கு இடத்தை காலி செய்ய வேண்டும்’ என்பது வரை இவளுக்கு புரிந்தது.

பின் விழிகளை அழுந்த துடைத்தபடி டிராலி லக்கேஜ்களை இவள் எடுக்க எத்தனிக்க, போனை பாக்கெட்டில் போட்டுவிட்டு, வேகமாய் அவளருகே நகர்ந்தவன், லக்கேஜ்களில் இரண்டை தன் கைக்கு மாற்றி கொண்டு “வா” என ஒரு தலையைசத்து இவன் முன்னே நடக்க, டிராலியை இழுத்து கொண்டு இவள் பின்னே வந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!