சீதா – ரகுவரன் இருவரின் வாழ்க்கையும் இப்படித்தான் சென்று கொண்டிருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் பார்த்து சிரித்துக் கொள்வதுதான். அதற்குப் பிறகு அவரவர் வேலை. வீட்டில் ஏதாவது சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்தால் சீதா குழந்தைக்கும் சேர்த்து செய்துவிடுவாள் .மறந்தும் ரகுவரனுக்காக ஆர்டர் செய்வது இல்லை.வீட்டில் ஏதாவது ஸ்பெஷலாக சமைத்தால் ஒரு பாத்திரத்தில் அப்பா -மகள் இருவருக்காகவும் படி தாண்டி உணவு உள்ளெ செல்லும்.
ஒருமுறை ரகுவரன் கேட்டேவிட்டான்,”குழந்தைக்கு மட்டும் புட் ஆர்டர் செஞ்சா சேர்த்து செஞ்சிடுற. என்னை பத்தியும் யோசிக்கலாம்ல…”
அவனுக்கு ஒரு புன்னகையை பதிலாக தந்துவிட்டு,”நிச்சயமா.. கல்யாணம் ஆகட்டும். செய்யுறேன்.” அவளது பதிலில் இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
நடுவில் இரண்டுமுறை இருவருக்கும் சண்டையும் வந்தது. பேசாமல் பத்து நாட்கள் வரை இருந்தார்கள். வெளியே ஒருவருக்கும் இவர்களுக்குள் நடப்பது தெரியாது. வெளியே இருவருவரும் சந்தித்தது,பார்வை பரிமாற்றம் , பரிசுப் பொருட்கள் பரிமாற்றம் என்று ஒன்றும் இல்லை.ஆனாலும்,தினமும் காலையிலும்,மாலையிலும் பார்க்கும் பொழுது பேசிக்கொள்ளும் பேச்சுக்கள் அதுவே அவர்கள் காதலை வளர்க்க போதுமென்று இருத்தது.
இரண்டு முறை சண்டை என்றேனே ,அது வேறு ஒன்றும் இல்லை. முதல்முறை ,” மைதிலியின் நினைவாக வைத்திருக்கும் சில புடவைகளையும் ,பொருட்களையும் ஆஸ்ரமத்திற்கு கொடுக்கப் போவதாக ரகுவரன் சொல்ல, மைதிலி அவன் வாழ்வில் எவ்வளவுக்கு நிறைந்திருக்கிறாள் என்று புரிந்ததால்,சீதா ‘அப்படி எல்லாம் கொடுக்காதீங்க. அது அவங்களோட உங்க வாழ்க்கை இணைந்த ஞாபகங்கள்”என்றுவிட்டாள் .
ரகு வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல்,”ஆமா ,நா கூட அவ…”இன்னும் என்ன சொல்லி இருப்பானோ அதற்குள் அவனது வாயில் கைவைத்து சீதா தடுத்துவிட்டாள் . அதற்குப்பிறகு மைதிலியின் ஞாபகமாக ஒரு புடவையையும், அவளது தங்க குங்கும சிமிழையும் வைத்துக்கொண்டு மற்றவைகளை ஆஸ்ரமத்திற்கு கொடுத்துவிட்டான் ரகு .இதில் சீதாவுக்கு கோவம்.’ அவ்வளவுக்கென்ன…பிடிவாதம்’என்று.அதற்குப்பிறகு அவனுடன் பத்து நாட்கள் பேசவே இல்லை.
ரகுவின் மனதிலோ, “ஏற்கனவே சீதாவின் அம்மா மனதில் மகளை இரண்டாவது மனைவியாக அனுப்புவதில் அவ்வளவுக்கு உடன்பாடு இல்லை. ஏற்கனவே என்னைவிட்டு போனவளை பற்றி மீண்டும் பேசியோ,அவளது பொருட்களை வைத்துக்கொண்டு எனது தெய்வீக காதலை பார் என்று பறைசாற்றியோ என்னை திருமணம் செய்துகொண்டு தனது வாழ்வை,வாழ்நாள் முழுவதுமாக பகிர்ந்து கொள்ள வரும் பெண்ணின் மனதில் எந்த ஒரு தாக்கமும் வந்துவிடவே கூடாது.என்னால் நான் திருமணம் ஆனவன் என்பதையோ,ஒரு மகளுக்கு தகப்பன் என்பதையோ மாற்ற முடியாது. செய்ய முடிந்தவரை செய்கிறேன்” என்ற எண்ணம்.இதையெல்லாம் சீதாவிடம் விவரணம் செய்ய ரகுவிற்கு உடன்பாடு இல்லை. ரகுவின் படுக்கையறையில் இருந்த மைதிலியின் படத்தை கழற்றிவிட்டு சிறியதாக ஒரு போட்டோவை தனது துணிகள் வைக்கும் அலமாரியில் கண்ணில் படும்படிக்கு வைத்துக் கொண்டான்.முழுவதுமாக மைதிலியை அவனால் இந்த ஜென்மத்தில் விலக்கவே முடியாது. அதே சமயம் தன்னை நம்பி வரும் பெண்ணின் மனதை காய படுத்தவும் முடியாது.
அடுத்த விஷயம்,ரகுவரனின் பெற்றவர்கள் சீதாவின் பெற்றவர்களிடம்,”நாங்க வரும் வரை காத்திருக்க வேண்டாம்.ஒரு நல்ல நாள் பார்த்து மணமக்களுக்கு தேவையானவற்றை வாங்கி விடுங்கள்”என்று சொல்லிவிட மற்ற அனைத்தையும் வாங்கிவிட்டாலும் முஹூர்த்த கூரையும், திருமாங்கல்யமும் ரகுவரனின் பெற்றவர்கள் வந்த பிறகுதான் என்று நின்றுவிட்டாள் . அதில் ஏற்பட்ட சிறு கோவத்தில் இருவரும் ஒரு வாரம் பேசவே இல்லை. ஒருவழியாக ரகுவரனின் பெற்றவர்கள் சீதாவுக்காக ஒருவாரம் முன்பே தங்களது பிரயாணத்தை உறுதி செய்து கொண்டார்கள். சீதா முன்னெச்சரிக்கையாக தங்க நிறத்தில் பட்டு பிளவுஸ் தைத்து வைத்துக்கொண்டாள் .
தனது சம்பளத்தில் சீதாவுக்காக திருமாங்கல்யம் கோர்ப்பதற்கு ஐந்து பவுனில் ஒரு செயினும், நவரத்தின கற்கள் பதித்த ஒரு நெக்லெஸும், வாங்கினான் ரகுவரன்.அவனது பெற்றவர்கள் சீதாவுக்காக ஒரு வைர ஆரமும், வைரத்தில் காதுக்கு தோடும் வாங்கி இருந்தார்கள். முகுர்த்த பட்டு அரக்கு நிறத்தில் உடம்பு முழுவதும் தங்க இழையில் கட்டங்கள் போட்டு, முந்தானை பச்சையும் மெல்லிய பிங்க் நிறமும் சேர்ந்தாற்போல் ஆளை அசரடித்தது. திருமாங்கல்யம் ரகுவரனின் பெற்றவர்கள் வாங்கினார்கள்.
கிருஷ்னன் தனது மகளுக்காக தனது சம்பளத்தில் முப்பது சவரன்கள் நகை சேர்த்து வைத்திருந்தார். இரண்டு பெண்களுக்கும் ஆளுக்கு முப்பது சவரன் நகை சேர்த்தது எல்லாம் ராதாதான். அவ்வளவுக்கு சிக்கனம் பார்ப்பாள். மகள் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் கொஞ்சம் ஆடம்பரம் பழகினாள் .அதுவரை கிருஷ்னனின் சம்பள பணத்தில் தான் குடும்பம் ஓடியது.தனக்கென்று அப்போதெல்லாம் ராதா புடவை எடுத்துக்கொண்டால் கூட விலை அதிகமெல்லாம் இருக்காது. அவள் வேலைக்கு சென்று சம்பளம் வாங்கிய பொழுதும் கூட தனக்கென்று எதுவும் செய்து கொண்டதில்லை. சீதாவின் திருமண விஷயத்தில் ஏன் இப்படி நடந்துகொண்டாள் மனைவி என்று கிருஷ்ணனுக்கு இன்னமும் புரியவில்லை.
சீதா ரகுவரனுக்காக திருமணம் அன்று உடுத்த வெள்ளி சரிகை வைத்த பட்டு வேட்டி சட்டையும், மெல்லிய தங்க கடாவும், மகள் பூமாவுக்காக பூ வேலைப்பாடுகள் செய்த மெல்லிய கழுத்து ஆரமும், கைக்கு வளையலும் தனது சம்பளத்தில் வாங்கியிருந்தாள் .அதோடு பூமாவுக்கான ஆடைகளை அம்மாவும் மகளுமாக ஷாப்பிங் செய்ய,ரகுவரனின் வேலை அவர்கள் வாங்கியவற்றை தூக்கிக்கொண்டு அலைவதும், காரில் அவர்களை கூட்டிக்கொண்டு செல்வதும் என்று ஆனது. வார இறுதி நாட்களில் மட்டும் தான் ஷாப்பிங் செல்வது.மற்ற நாட்களில் ரகு- சீதா இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். பெண்ணும் பள்ளிக்கு சென்று விடுவாள். ரகுவரனின் பெற்றவர்கள் தில்லிக்கு செல்லவே இல்லை.நேராக சென்னை வந்துவிட்டார்கள்.
மைதிலியின் பெற்றவர்கள் திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு வருவதாக சொல்லிவிட்டார்கள். என்னதான் சொன்னாலும் மகள் நிறைவாய் வாழ்ந்து, சென்ற வாழ்க்கை.இத்தனை காலமாக ரகுவரனை மருமகனாகவும்,மகனுமாகவும் பார்த்துவிட்டு இப்போது அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் எனும் பொழுது இவர்களின் இத்தனை கால உறவு சற்றே பின் சென்று விடுகிறது.இனி நமக்கு உரிமை இல்லை என்பதன் தாக்கம். மகளை நினைத்து வருத்தம். வாழ கொடுப்பினை இல்லாமல் அற்பாயுசில் சென்றுவிட்டாளே! என்று கண்ணீர். அவர்களுக்கு சுதாரித்துக் கொள்ள நேரம் தேவைப்படுகிறது. அது இங்கே எல்லோருக்குமே புரிகிறது. ரகுவுக்கு அவர்கள் வருத்தப்படுவது பிடிக்கவில்லைதான்.என்னவென்று அவர்களுக்கு சமாதானம் சொல்வது?
மகளை இழந்தவர்களுக்கு அரணாக அவர்களை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆசைதான்.அதை சீதாவின் மீது திணிக்க முடியாது என்று அமைதியாக இருக்கிறான்.
பெண்ணின் திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு ராதா தனது இரண்டு நாத்தனார்களையும் கூப்பிட்டு சுமங்கலி பிரார்த்தனை நடத்தினாள் . மூத்த நாத்தனார் ரமணி இப்போதெல்லாம் அண்ணன் அண்ணியிடம் ஒழுங்காக பேசுகிறாள். முன்புபோல் பணத்திற்கு அதிகம் மதிப்பு தருவது இல்லை. இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள்.முதலில் ரமணிக்கு அவ்வளவு பெருமை. ஆனால்,காலம் செல்லும் பொழுது மகன்கள் இங்கே வருவது இல்லை.அதிகமாக போன் செய்து பேசுவதும் இல்லை. எப்போது அழைத்தாலும் பிசியாக இருப்பதாக சொல்வதால் ரமணி அவர்களுக்கு அழைப்பதையே குறைத்துக்கொண்டாள்.இன்னமும் அவளது கணவரும் பணிஓய்வில் வீட்டில் இருக்கிறார்.அவராவது வெளியே கிளப்புகளுக்கு, நண்பர்களை சந்திக்கவென்று கிளம்பி வெளியே சென்று விடுகிறார்.ரமணிக்கு தான் மனம் ஒரு நிலையில் இல்லை.கோவில்களுக்கு சென்று அதிகம் பழக்கமும் இல்லை. வெறும் பணத்தை வச்சிட்டு என்ன செய்யுறது கிருஷ்னா ..என்று ரமணி கிருஷ்ணனிடம் சொல்ல சுதாவும் கிருஷ்னனும் ஒருவரை ஒருவர் பாத்துக்கொள்கிறார்கள்.
இதோ சுமங்கலி பிரார்த்தனைக்கு ராதாவின் வீடு நிரம்பி வழிகிறது. ஜானகி தனது குடும்பத்துடன் வந்திருக்கிறாள்.அவளது கண்களில் தங்கைக்கான உண்மையான மகிழ்ச்சி தெரிகிறது.ஜானகியின் மாமியாரும் நாத்தனாரும் திருமணத்திற்கு வருவதாக சொல்லிவிட்டார்கள். ஏற்கனவே சீதாவின் மாடி போர்ஷன் காலியாகத்தான் இருக்கிறது .இன்னும் யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. அதற்க்கு பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். அங்கேயே திருமணத்தையும் நடத்திக் கொள்ளலாம். மொட்டை மாடியில் ஷாமியானா போட்டு உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றுவிட்டான் ரகுவரன்.
சுமங்கலி பிரார்த்தனை முடிந்து பந்தக்கால் நடும் நிகழ்வு. மணமகள் வீட்டிலும்,மணமகன் வீட்டிலும் ஒரே நாளில் நடத்த சந்தோச அலை தான். அடுத்த இரண்டு நாட்களில் திருமணம். ஜானகி வீட்டிற்கு பார்லரிலிருந்து மெஹந்தி போட அழைத்திருந்தாள் . இரண்டு வீட்டிலும் இருக்கும் பெண்களுக்குமாக மெஹந்தி ஏற்பாடாகி இருந்தது. ரகுவரனின் அண்ணனும் அண்ணியும் குழந்தைகளுடன் வந்து விட்டார்கள். அண்ணியின் பெற்றவர்கள் சென்னை தான் என்பதால் அங்கேயே தங்கி கொண்டார்கள்.
சுதா ,ஜானகி ,ரமணி ,குழந்தைகள் கிருஷ்னன் வீட்டில் தங்க ஆண்கள் எல்லோரும் வீட்டுக்கு சென்று காலையில் வருவதாக ஏற்பாடு.
மைதிலியின் பெற்றவர்கள் திருமணத்திற்க்கு முதல்நாள் தான் வந்தார்கள். அவர்களும் ரகுவின் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள்.அவர்ளிடம் முன்பிருந்த கலகலப்பு இல்லை. ஒரு ஒட்டாத தன்மை தெரிந்தது.சீதா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுக்கு அவர்களது நிலை நன்றாகவே புரிகிறது. இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாதே!
சீதாவும் ரகுவரனும் எதிர்பார்த்த அந்த திருமண நாள் அவர்களுக்காகவே காத்திருக்கிறது.அழகான விடியல். காலை எட்டு மணிக்கு முஹூர்த்தம். ரகுவும் சீதாவும் இன்னமும் ஒன்றும் சாப்பிடவில்லை.பசிக்கவே இல்லை.மனதில் லேசாக ஒரு வெட்கம் கலந்த படபடப்பு பெண்ணுக்குள். தன்னால் மீண்டும் மனையில் உட்கார முடியாது என்றுவிட்டு மூன்றே மாதத்தில் புது மாப்பிள்ளையாக தயாராகி நிற்கும் தன்னை நினைத்தே கொஞ்சம் சங்கடம், இதயம் வேகமாக துடித்தது. அதே சமயம் சீதா இல்லாமல் இனி வாழ்க்கையை தனியாக செலுத்த முடியாது என்று தீர்மானமாக தெரிகிறது.
சீதா வாங்கி கொடுத்திருந்த பட்டுவேஷ்டி ,சட்டையில், பெண் வாங்கிக் கொடுத்த கடாவையும் அணிந்து கொண்டு அட்டகாசமாக தயாராகி வந்தான் ரகுவரன். மணவறையில் ரகுவரன் மாப்பிள்ளையாக அமர்ந்திருக்க அவன் அருகே அவன் அணிவிக்க காத்திருக்கும் மங்களநாணுக்காக மணப்பெண்ணாக சீதா.
முகூர்த்த நேரம் நெருங்க, மைதிலியின் அம்மா பாடினார்,
சீதாகல்யாணவைபோகமே!
ரகுவரன் கல்யாணவைபோகமே! லக்ஷ்மிகல்யாணவைபோகமே!
திருமாங்கல்யத்தை தாங்குவதற்கு காத்திருந்த சீதாபெண்ணின் கழுத்தில் தனது காதலையும் சேர்த்து மூன்று முடிச்சிட்டான் ரகுவரன். அவ்வளவு நேரம் அருகில் அமர்ந்திருந்த பூமா இப்போது உரிமையாக சீதாவின் மடியில் வந்து அமர்ந்து கொண்டாள் . அக்னியை மணமக்கள் வலம்வரும் சமயத்தில் கூட சீதா ,தனது மகள் பூமாவின் கையை விடவில்லை. அங்கே இருந்தவர்கள் எல்லோருக்குமே இது நெகிழ்ச்சியான தருணம் தான் என்றாலும்,பேத்தியை பற்றி கவலை பட்டுக்கொண்டிருக்கும் அந்த இரண்டு ஜீவன்கள், அவர்கள் தான் மைதிலியின் பெற்றவர்கள் அவர்கள் இருவருக்கும் கண்கள் கலங்கியது. இனி பேத்திக்கு அம்மாவும் கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு.
வெறும் நெருங்கிய உறவினர்களை மட்டும்தான் திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள். அந்த கூட்டமே அறுபதை தாண்டியது. யாருமே இந்த திருமணத்தை பற்றி குறைவாக பேசவில்லை.எல்லோருக்கும் சீதாவை நன்றாகவே தெரியும். ரகுவரனையும் தெரியும்.