Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 10

மொட்டை மாடி விளிம்பில் நின்று கொண்டிருந்தாள் ரஞ்சிதா.

அவள் முன்னே கடுங்கோபம் முகத்தில் தாண்டவமாட ரவுத்திர காளியாய் நின்று கொண்டிருந்தாள் மஞ்சு!

“சொல்லு.. நான் தப்பானவளா? என் மாமாவை விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போறவளா?

அப்புறம் நாங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?



Advertisement

அவர துரத்தி துரத்தி லவ் பண்ணி ஆசை ஆசையா கல்யாணம் பண்ணி, ஆசை ஆசையா பிள்ளைய பெத்து அத ரசிச்சு ரசிச்சு அனுபவிச்சு வளர்த்திட்டு இருந்த நான் என் மீனுக் குட்டிய விட்டுட்டு இன்னொருத்தன் கூட போவேனா?

எப்படி உன்னால இப்படி எல்லாம் சொல்ல முடியுது? என் மாமா கிட்ட போய்!

ஏங்க்கா.. நானும் அவரும் உன்னை எப்படி வச்சுருந்தோம்!

Advertisement

அம்மா இல்லாத எனக்கு நீ தானே எல்லாம் சொல்லிக் கொடுத்த!

Advertisement

இன்னிக்கு நேத்தா?

சின்னப் பிள்ளையில் இருந்து, நான் ஸ்கூல் போகும்போது உன் கிட்ட வந்து தான் இரட்டை ஜடைப் பின்னிப்பேன்.

நான் பெரியவள் ஆனப்போ பார்த்து சொன்னது நீ தானே!

Advertisement

எனக்கு தாவணி கட்ட, புடவைக் கட்ட ஏன் தானே பிரேசியர் போட்டுக்க கூட சொல்லிக் கொடுத்தது நீ தானேக்கா!

எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்த.. டெலிவரி அப்ப கூட நின்னு பார்த்துகிட்ட..

பத்திய சமையல் செஞ்சுப் போட்ட!

ஏன் மீனுக் குட்டிய முதல் முதலா கையில் வாங்கினது கூட நீ தானேக்கா!

ஆனா இப்ப நீ அவளை எப்படி நடத்துற? ம்ம்.. அதுவும்  இன்னிக்கு உன் புருஷன் அவள அப்படி அடிக்கிறான்! நீ பார்த்துட்டு இருக்க!

அதான் அவன் கையை உடைச்சேன்!

ஆனா உன்னை உன்னை..”  மஞ்சு கோரமான முகத்தோடு ரஞ்சிதாவை நெருங்கி வந்தாள்.

“இல்ல மஞ்சு..  என்னை விட்டுடு.. என்னை மன்னிச்சிக்கோ! ஆமா.. ஆமா.. நான் அப்படி சொல்லி இருக்க கூடாது தான்!

ஆனா அந்த பரமசிவம் தான் உன்னைப் பத்தி ரொம்ப  தப்பா பேசிட்டு இருக்காரு!” ரஞ்சிதா பயத்தோடு அப்படியே பின்னாடியே சென்றவள் அங்கிருந்து அப்படியே பின் பக்கமாக கீழே விழுந்து விட்டாள்!

“ஆ..” என்று கத்தியவாறு எழுந்து உட்கார்ந்தாள் ரஞ்சிதா!

அவள் முகம் முழுக்க பயத்தில் வியர்த்து இருந்தது!

முகம் கழுத்து என்று வியர்த்து காதோரம் இருந்து வியர்வை வழிந்தோடியது!

பக்கத்தில் படுத்து இருந்த ரத்தினம் “என்னடி.. என்ன ஆச்சு?” என்றவாறு எழுந்து உட்கார்ந்தான்.

“கனவு.. பயங்கர கெட்ட கனவு! கனவில் மஞ்சு!” என்றாள் திக்கியபடி!

“சும்மா பயந்து கிட்டே இருந்தா இப்படி தான் கனவு வரும்! போய் படு போ” கடுப்படித்தான் ரத்தினம்!

“எனக்கு.. மீனுவைப் பார்த்தா கூட சமயத்தில் பயம் வருதுங்க.

அதனால தான் அவ கிட்ட நானுமே கோபப் படுறேன்!

 சில சமயம் பாவமாவும் இருக்கு அத பார்த்தா!

இப்ப கூட தனியா படுத்து இருக்கா. என்ன பண்றாளோ தெரியல!” என்றபடி தன் தலை முடியை அவிழ்த்து கொண்டை போட்டுக் கொண்டு எழுந்து போய் மீனு தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்குப் போய்  அவளைப் பார்த்தாள்.

மீனு தூங்கிக் கொண்டிருந்தது மஞ்சுவின் ஒரு பழைய நைட்டி ஒன்றை கையில் வைத்தபடி!

பார்க்கையிலேயே கஷ்டமாக தான் இருந்தது ரஞ்சிதாவுக்கும்!

மீனுவுக்குப் போர்வையை நன்றாக போர்த்தி விட்டு வெளியே போனாள் ரஞ்சிதா!

அறை வாயிலில் நின்று ஒரு முறை மீண்டும் மீனுவைப் பார்த்தாள்.

அவள் கண்ணுக்கு மீனு ஒரு முறை மஞ்சுவாக தெரிந்தாள்!

மீண்டும் பயந்து கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள் ரஞ்சிதா!

—-

“ டேய்..உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? இப்படியா ஒரு மனுசன் இருப்பான்?

நிஜமா எனக்கு ரொம்ப ஷாக்கிங் ஆக இருக்குடா! நீ இப்படி இருக்கிறத பார்த்தா!

இவ்வளவு முட்டாளா நீ? ஒருத்தன் ஒய்ஃபை காணோம்னா இப்படியா தேடாம இருப்பான்?

எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணினவங்க நீங்க!

உனக்காக அந்த பொண்ணு எத்தனை வருஷம் காத்திருந்து கல்யாணம் பண்ணினா, அவங்கப்பா கிட்ட போராடி, பிடிவாதமா இருந்து!

அது மட்டுமா அவளுக்கு இருந்த வசதிக்கு உன்னை விட நல்ல மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி இருக்கலாம்!

அத விட்டு உன்னை படிக்க வைக்க அவ வேலைக்கு போய் உனக்கு கை செலவுக்கு பணம் அனுப்பி, நீ வேலைக்கு போய்  கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வந்தவுடன்,  அவ அப்பா கிட்ட வாதாடி, கெஞ்சி, உண்ணாவிரதம் இருந்து உன்னை கல்யாணம் பண்ணினவ!

அப்படி இருந்தவ எப்படிடா உன்னை விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போவா?

நீ அதை எப்படி நம்பலாம்?

உடனே தேடி இருக்கணும்! இல்ல போலீஸ்ல சொல்லி தேடிப் பார்த்து இருக்கணும்!

அத விட்டுட்டு ஊரை விட்டு வந்து இப்படி வீட்டுக்கே போகாம இருந்தா எல்லாம் சரியாகிடுமா?

இல்ல எனக்கு புரியல.. அப்போ உன்னோட பொண்ணு.. அவள கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்த்தியாடா!”

சகட்டுமேனிக்கு விட்டு வெளுத்துக் கொண்டிருந்தான் சீனு!

ரகுவின் காலேஜ் சீனியர்! உற்ற நண்பன். நலம் விரும்பி!

அவன் மூலம் கிடைத்தது தான் இப்போது ரகு எடுத்து செய்து கொண்டிருக்கும் ஷாப்பிங் மால் காண்ட்ராக்ட்!

வேலை நடக்கும் இடத்திற்கு பார்க்க வந்த  சீனு, ரகுவின் தாடி தம்பட்டையுமான ஓய்ந்த கோலம் கண்டு திகைத்து, அன்று வேலை முடிந்ததும் அவனை தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

சீனு கேட்டதுக்கு எல்லாம் ஒன்றும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து அமர்ந்து இருந்தான் ரகு!

அவன் கண்கள் கலங்கி கொண்டிருந்தன!

“இப்படி வாயையே திறக்காம இருந்தா என்ன அர்த்தம்? பேசுடா!

கூடப் போனதா சொன்னியே அந்த பையன் தானே உன் பொண்ணு காது குத்தும் போது தாய் மாமன் இடத்தில் இருந்து எல்லாம் செஞ்சது!

அவன் கூட எப்படி லிங்க் பண்ணி பேசலாம் நீங்க!

கேட்டா அவ ஹேன்ட் ரைட்டிங்ல ஏதோ லெட்டர் கிடைச்சுதாம்! அதனால இவன் பேசாம எங்கிருந்தாலும் வாழ்கன்னு விட்டுட்டானாம்!

லூசாடா நீ! என்னவா இருந்தாலும் தீர விசாரிக்க வேணாமா?”

“அது மட்டுமில்லைங்க. மஞ்சு ஒரு சோசியல் ஆக்டிவிஸ்ட்ன்னு சொல்லி இருக்கீங்க. அப்போ நிறைய எதிரிங்க இருக்க சான்ஸ் இருக்கு!

அவங்கள்ள யாராவது அவள என்னமும் செஞ்சுருந்தா?

அய்யோ நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு!

என்ன ரகு நீங்க இப்படி விட்டுட்டு இருந்திருக்கீங்க!” சீனுவின் மனைவி சசியும் திட்டினாள்.

“அது மட்டுமில்ல பாப்பாவை வேற ஊரிலேயே விட்டுட்டு வந்துருக்கீங்க? யார் கிட்ட இருக்கா அவ?” என்று கேட்டாள் மேலும்.

“என்னோட அக்கா ரஞ்சு கிட்ட!”

“அவங்க உங்க சொந்த அக்கா ஒண்ணும் இல்ல தானே! சொந்தக்காரங்க அவ்வளவு தானே!”

“ம்ம்.” என்றான் ரகு மெல்ல தலையசைத்து!

“ நம்பிக்கையானவங்க தான்! நல்லா பார்த்துப்பாங்க!” என்றான் கூடுதலாக!

“அவங்க சரி. அவங்க ஹஸ்பன்ட்? அவன் சரியில்லைன்னு நீ கூட சொல்லி இருக்க ஏற்கனவே!

டேய்.. என்னடா இப்படி இருக்க? ஊருக்குள்ள என்னென்னமோ க்ரைம் நடக்குதுடா சின்னக் குழந்தைகளுக்கு! அதுவும் பெண் குழந்தைகளுக்கு அம்மா அப்பா கூட இருக்கும் போதே!

நீ உன் பொண்ணை எப்படிடா இப்படி விட்டு வச்சுருக்க?” சீனு ஆத்திரப்பட,

“இல்ல.. எனக்கு மீனுக் குட்டிய பார்த்தா மஞ்சு நினைவு ரொம்ப வருது! என்னால தாங்க முடியல! அதான் ஊருக்கே போகாம இருக்கேன்!”

“இவ்வளவு செல்ஃபிஷா  இருக்க கூடாதுடா நீ!

உனக்கே இப்படி இருக்கே! அந்த பச்ச மண்ணு. இப்போ அம்மாவும் இல்லாம, அப்பன் நீயும் கூட இல்லாம எவ்வளவு தவிச்சுக்கிட்டு இருக்கும்!

அய்யோ.. நினைக்கவே பாவமா இருக்குடா. ஆறு வயசு குழந்தைக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ் மன அழுத்தம் கொடுக்கவே கூடாது! நீ முதல்ல கிளம்புடா!

யாருக்குடா இப்படி ஓடி ஓடி சம்பாரிக்கிற? உன்னோட பொண்டாட்டிக்கும் பொண்ணுக்கும் தானே!

மஞ்சு என்னா ஆனான்னு தெரியல. உன் பொண்ணு அங்க பாவம் தனியா இருக்கா! இவன் இங்க என்ன பண்ணிட்டு இருக்கான்!

முதல்ல கிளம்பு இங்கே இருந்து” என்றான் சீனு பயங்கர கோபத்துடன்!

“ஆமா.. முதல்ல போய் போலிஸ் கம்ப்ளைன்ட் பண்ணுங்க. ஏன் இன்னமும் பண்ணாம இருக்கீங்க?” என்றாள் சசி.

“இல்ல.. அக்கா தான் போலிசுக்கு போக வேண்டாம் குடும்ப மானம் போய்டும்னு சொல்லுச்சு அப்போ. அதான் பண்ணல!

“இப்போ மட்டும் என்ன? ஊருக்குள்ள தப்பா தானே பேசிட்டு இருக்காங்க. அப்புறம் என்ன? ஆனது ஆயிடுச்சுன்னு நீ எதைப் பத்தியும் கவலைப்படாம போய் முதல்ல ஆக வேண்டியத பாரு.

உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் வேணுமின்னா தயங்காம கேளு! அண்ணன் நான் இருக்கேன். கிளம்புடா” என்றான் சீனு.

“ஏண்டி.. உனக்கு எத்தனை வாட்டி சொல்றது? தலைப் பின்னிக்க வரும்போது, தலையை நல்லா பிரிச்சு வச்சுகிட்டு, ரிப்பனை எல்லாம் ரெடியா வச்சுகிட்டு வரணும்னு!” என்று சொல்லி மீனுவின் தலையில் குட்டினாள் ரஞ்சிதா!

மீனு ஒரு ரிப்பனை எங்கோ தவற விட்டு விட்டு ஒரு ஜடை பின்னிய பின் ரஞ்சிதாவை காக்க வைத்து விட்டு உள்ளே போய் தேடிக் கொண்டு வந்ததால் அந்த குட்டு!

மளுக்கென்று கண்களில் தண்ணீர் வந்தது மீனுவுக்கு!

ஒன்றும் சொல்லாமல் சத்தம் இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தது!

“அதுக்கு ஏன்க்கா தலையில் அடிக்கிற? தாயில்லாப் பிள்ளையாட்டம்” என்ற ரகுவின் குரல் கேட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் ரஞ்சிதா!

“டேய்.. ரகு  வாடா..

ஹேய்.. இது ஒண்ணுமில்ல. இவ டெய்லி ரிப்பனை தொலைச்சுட்டு வந்திடறா! அதான் சொல்லிக் கிட்டு இருந்தேன்!

ஏன் எனக்கு இவள கண்டிக்கிற உரிமை இல்லியா?”

“ம்ம். என்றவன், “ சரி. மீனும்மா சீக்கிரம் ரெடி ஆகு. அப்பா கொண்டு போய் ஸ்கூலில் விடறேன்” என்றபடி உள்ளே சென்றான் ரகு.

‘இவன் ஏன் இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறான்!

யாரும் ஏதாச்சும் இவன் கிட்ட சொல்லி இருப்பாங்களோ!

குறிப்பா, அந்த ஆள் மீனுவ அடிச்சத!

யார் சொல்லி இருப்பா? அந்த அன்னமா? இல்ல நந்தினியா?

அன்னம் நேரில் பார்த்தா சொல்லுவா! போனில் எல்லாம் பேச மாட்டா!

அப்போ நந்தினியா? ம்ம் அவ சொன்னாலும் சொல்லி இருப்பா! வரட்டும் அவ! இருக்கு இன்னிக்கு அவளுக்கு’ என்று மனதுள் திட்டியபடி உள்ளே சென்றாள்.

—–

மறுநாள் சனிகிழமை. பள்ளி விடுமுறை.

கவியும் வீட்டில் தான் இருந்தாள்.

அப்போது அங்கு வந்த நந்தினி தோட்ட வேலைகள் பார்க்க தொடங்கினாள்.

உள்ளே கிச்சனில் அவளுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள் கவி.

“நந்தினி.. வாங்க. டீ குடிச்சிட்டு வேலையைப் பாருங்க” என்று குரல் கொடுக்க அங்கு வந்தாள் நந்தினி.

கவியின் கழுத்தில் இருந்த டாலர் செயின் அவள் நைட்டிக்கு வெளியே வந்து இருந்தது.

அதைக்  கண்ட நந்தினி முன்பு ஒரு நாள் கவிக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டு அவர்கள் பேசியது நினைவுக்கு வந்து மீண்டும் கேட்டாள்.

“டீச்சர். இப்பவாச்சும் சொல்லுங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா?

ஒருவேளை அலைப் பாயுதே ஸ்டைல் கல்யாணமா?” என்று அவள் சொன்னவுடன் சிரிப்பு வந்து விட்டது கவிக்கு!

“”ரொம்ப கற்பனை தான் உங்களுக்கு!” என்றவள் தன் திருமண வாழ்க்கையைப்பற்றி அது ஒரே நாளில் முடிந்து விட்டதைப் பற்றியும் சொன்னாள்!

“ச்சே. கடவுள் இருக்காரா இல்லையான்னு இது மாதிரி கேக்கும் போது தான் கேக்க தோணுது!

எந்த தப்பும் செய்யாம உங்களுக்கு டைவோர்சி பட்டம்! இனி அடுத்த மாப்பிள்ளை பார்க்கனும்னா இத ஒண்ணு சொல்லிடுவாங்க இல்ல.

ஆனா கவலைப்படாதீங்க டீச்சர். உங்க நல்ல மனசுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பாங்க” என்றாள் நந்தினி!

“ஓ. அருள் வாக்கு! அப்ப நந்தினி அருள்வாக்கு மையம்னு போர்ட் போட்டுட்டு உக்காந்திடலாமா!

செமையா கல்லா கட்டிடலாம்! நான் கூட வேலையை விட்டுட்டு வந்திடறேன்” என்றாள் கவி கிண்டலாக!

“கிண்டல் பண்ணாதீங்க டீச்சர்! ஆனா இப்பவும் சொல்றேன். உங்க நல்ல மனசுக்கு நல்லா சூப்பர் மாப்பிள்ளை வருவார் பாருங்க” என்று நந்தினி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவள் போன் அடித்தது.

“ஹலோ..சொல்லுங்க அண்ணே.. எப்ப வந்தீங்க? ஓ. சூப்பர்.  இப்பவாச்சும் வந்தீங்களே! ம்ம். நல்லா இருக்கேன். நீங்க?

ம்ம்.. சொல்லுங்க அண்ணே என்ன ஹெல்ப்?

பாப்பாவை கூட்டிட்டு போய் ஹேர் கட் பண்ணி கூட்டிட்டு வரணுமா? பாப் கட்டிங்கா? ம்ம் சரி.. நான் ரெடியா இருக்கேன். போயிட்டு வந்திடலாம்!” என்று சொல்லி போனை வைத்தாள்.

“மீனுவோட அப்பா தான் டீச்சர். ஊரில் இருந்து வந்திருக்கார். அப்பாடா.. இனி மீனு கொஞ்சம் சந்தோசமா இருப்பா!” என்றபடி கவியிடம் விடைப் பெற்று சென்றாள் நந்தினி.

——

சப் இன்ஸ்பெக்டர் முன் அமர்ந்திருந்தான் ரகு.

“என்ன சார் இது? உங்க ஒய்ஃப் தொலைஞ்சு போய் நாலு மாசம் கழிச்சு வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க? இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்றார் அவர் சலிப்பாக!

“நாங்களே தேடிட்டு இருந்தோம். சொந்தக்காரங்க வீட்டில் எல்லாம் போய்!” என்றான் ரகு.

“இப்படி கேட்டா இப்படி சொல்லு” என்று சீனு சொல்லிக் கொடுத்திருந்தான்.

“உங்களுக்கு யார் மேலாச்சும் சந்தேகம் இருக்கா?”

அதற்குள் எந்த வேலையாகவோ அங்கு வந்த ரமேஷ்,

“சார்.. அது ஒருத்தன் கூட லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப் போய்டுச்சு சார். அதான் இவங்களும் தேடல!

இப்போ எதுக்கு இப்ப தேடுறாங்கன்னு தெரியல சார்.

சும்மா ஒரு எப்.ஐ. ஆர் போட்டு வச்சா, பின்னாடி இவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க எவிடென்ஸ் ஆக இருக்கும்னு நினைக்கிறார் போல!

அதுவும் இல்லாம அவங்களுக்கு கல்யாணம் ஆகி இன்னமும் ஏழு வருஷம் முடியலன்னு நினைக்கிறேன்!

தன்னை லீகலா சேஃபடி பண்ணிக்க நினைக்கிறாப்ல போல!” என்றான் ரமேஷ்!

“டேய். சும்மா இரு, உனக்கு அவ்வளவு தான் மரியாத..” பல்லைக் கடித்தான் ரகு கோபத்துடன்.

“ஏங்க நீங்க யாருங்க?  இன்னொருத்தர் கேஸ்ல இடையில வந்து கருத்து சொல்றது! போங்க வெளியில!” என்று அந்த சப் இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு ஜாடைக் காட்டி விட்டு திட்டினார்!

“சார் நீங்க போய் ரைட்டர் கிட்ட விவரம் சொல்லுங்க” என்று சொல்லி அவனை அனுப்பினார்.

ரைட்டரோ அவனிடம் டீ சொல்ல சொல்லி விட்டு கொஞ்சம் ஸ்டேசனரி வாங்கி வர சொல்ல அங்கிருந்து ரகு நகர்ந்தவுடன் சப் இன்ஸ்பெக்டர் குரு மூர்த்திக்கு போன் செய்தார்.

“சார். இங்க அந்த பொண்ணு மஞ்சுவ காணோம்னு அவ புருஷன் கம்ப்ளைன்ட் பண்ண வந்திருக்கான். என்ன பண்ணட்டும்?”

“வாங்கிக்க. வாங்கிக்க. ஆனா ஒண்ணும் செய்யாத. நாளைக் கடத்து. நீ எடுக்க மாட்டேன்னு சொன்னா அது வெளியில தெரியும்!

சோசியல் மீடியா உள்ளே வந்திடும்!

அந்த பொண்ணு நம்மள எதிர்த்து சண்டை போட்டது அவங்க கவனத்துக்கு வரும்!

நம்ம ப்ரொஜெக்ட் பேரும் உள்ளே வந்து தேவையில்லாத தொல்லை! அதனால நீ கம்ப்ளைன்ட் எடுத்துக்கோ! ஆனா ஆக்சன் எடுக்க வேண்டாம்!

சும்மா கண் துடைப்புக்கு யாரையாச்சும் விசாரிச்சு காலத்தை கடத்து! பார்த்துக்கலாம்!” என்று சொல்லி குரு மூர்த்தி போனை வைத்தான்.

———–

“சொல்லுங்க. பரமசிவம் சார். மஞ்சு காணாம போன நாளில் இருந்து உங்க தங்கச்சி பொண்ணையும் கூட காணோம்!

சொல்லுங்க இப்ப அவங்க எங்க இருக்காங்க?

அவங்களுக்கு போன் போட்டுக் கொடுங்க. நாங்க அவங்க கிட்ட பேசணும்” என்றார் எஸ்.ஐ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!