Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 7

அத்தியாயம் 7

திருமணம் நடந்த அன்று…மணமகள் கோலத்தில் கோவிலில் ராஜீவனுக்காக காத்திருந்தாள் பிரியா. ஒவ்வொரு முறையும் ஒரு பைக் கோவில் வாசலை கடக்கும்போது ,”ராஜூ  வந்துட்டானா…?” என ஆர்வமாக எட்டிப் பார்த்தாள்.

ஆனால்… ஏமாற்றம்தான் மிஞ்சியது.
நேரம் ஆக ஆக பிரியாவின் கண்களில் பதற்றம் அதிகரித்தது.”ராஜூ வந்துருவான்… இன்னும் கொஞ்ச நேரம்தான்…” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

மணி மதியம் இரண்டை கடந்தும் ராஜீவன் வரவில்லை.அவளது முகத்தில் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டே போனது.



Advertisement

இறுதியில் அவன் ரஞ்சிதாவை திருமணம் செய்து கொண்டான் என்ற திருமணச் செய்தி மட்டுமே வந்தது.
கோபம்…அவமானம்…ஏமாற்றம்…
மூன்றும் ஒன்றாக சேர்ந்து அவளுக்குள் வெறியாக மாறியது.

“என்னை விட்டுட்டு அவன் வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானா…?”என்று பற்களைக் கடித்தாள்.

அப்போது…அருகில் நின்ற கந்தசாமியின் முகத்திலும் கோபம் தெரிந்தது.”அழாதே…”என்று மகளை சமாதானப்படுத்தியவர், சில நொடிகள் யோசித்துவிட்டு ஒரு திட்டம் போட்டார்.

Advertisement

“இப்போ அவன் மனசு நொந்து இருக்கும்.எப்படியும் விருப்பம் இல்லாமதான் அவன் தாலியே கட்டிருப்பான்.ஏனா நேத்து நாம பேசும் போது அவன் கண்ணுல அவ்வளவு வலி தெரிஞ்சுது.அதையே நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கலாம்.”என்று மெதுவாக சொன்னான்.

Advertisement

பிரியா உடனே புரிந்து கொண்டாள்.
தன் கையில் ஏற்கனவே இருந்த சிறிய கீறலுக்கு கொஞ்சம் சிவப்பு நிற சாயத்தை தடவி, பெரிய காயம் போல கட்டுப் போட்டுக் கொண்டாள்.

கந்தசாமி தனக்குத் தெரிந்த ஒரு பெரிய மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்று, அங்கிருந்த நர்ஸிடம் பணம் கொடுத்து, “சும்மா ஒரு பெட் கொடுங்க…” என்று பேசி ஏற்பாடு செய்து விட்டான்.

அனைத்தும் தயார் ஆனதும்… ராஜீவனின் எண்ணுக்கு அழைக்க.. முதல் அழைப்பை அவன் எடுக்கவில்லை.மீண்டும் மீண்டும் அழைக்க…மூன்றாவது முறையில்தான்…அழைப்பை ஏற்றான்.

Advertisement

“மாப்ளே…பிரியா… கையை அறுத்துக்கிட்டா மாப்ளே… ரொம்ப ரத்தம் போயிடுச்சு… ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்… சீக்கிரம் வா…”என்று அழுதபடியே பேசினான்.

அந்த ஒரு செய்தி…ராஜீவனின் இதயத்தில் இடி போல இறங்கியது.

“என்ன சொல்றீங்க மாமா…?”என்று அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.

உன்ன விட்டுக் கொடுக்க முடியாம எம்பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணிட்டா.நாங்க அவளே காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்திருக்கோம் என்றான்.

திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்தவன், நேராக வண்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி புறப்பட்டான்.பிரியாவை அட்மிட் செய்திருக்கும் அறைக்குள் வேகமாக நுழைந்தான்.

அங்கே பிரியா கட்டிலில் படுத்திருந்தாள்.கையில் பெரிய கட்டு.
குளுக்கோஸ் இறங்க…கண்கள் மூடியபடி இருந்தாள்.அவளை அந்த நிலையில் பார்த்ததும்…ராஜீவனின் கண்கள் கலங்கின.

“பிரியா…”என்று மெதுவாக அழைத்தான்.

அவள் கண்களைத் திறந்து அவனைப் பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தாள்.

ஏன் இப்படிச் செஞ்ச…?

“நீ இல்லாம என்னால வாழ முடியல ராஜூ… நீ என்னை விட்டுட்டு போயிட்டியே…”என்று விம்மினாள்.

அவளது கண்ணீரைப் பார்த்த ராஜீவனின் குற்ற உணர்வு இன்னும் அதிகமானது.அது நாடகம் என்பதை அவன் அறியவில்லை. உண்மையாகவே…தன்னால்தான் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று நம்பினான்.

அந்த நேரத்தில் கந்தசாமி ரெடி செய்த நர்ஸ்  மருத்துவர் வேடத்தில் உள்ளே வந்து…”பேஷண்ட் கொஞ்சம் வீக்கா இருக்காங்க. சில டெஸ்ட் எடுக்கணும்.” என்றாள்.

“டாக்டர்… எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கொடுங்க.” என்று தன் சட்டை பாக்கெட்டில் இருந்த  பணத்தை எடுத்துக் கொடுத்தான் ராஜீவன்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது…மாலை இருளாகி இருந்தது.வானத்தை வெறித்துப் பார்த்தான்.

ஒரு பக்கம்…பிரியாவின் கண்ணீர்.
மறுபக்கம்…ரஞ்சிதாவின் கழுத்தில் தன் கையால் கட்டப்பட்ட தாலி.இரண்டிற்கும் நடுவில்…தன் வாழ்க்கை சிக்கிக் கொண்டதை நினைத்து அவனுக்கு மூச்சே முட்டியது.

“ஏன் என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு…?”என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.அந்த வேதனையை யாரிடமும் சொல்ல முடியவில்லை.அந்த வலியை மறக்க… அவன் தேர்ந்தெடுத்த ஒரே வழி மது.

அன்றிரவு…பார் ஒன்றுக்குள் நுழைந்தான்.”ஒன் லார்ஜ்…”என்று ஆரம்பித்தவன்…எத்தனை பாட்டிலை  குடித்தான் என்பதே அவனுக்கு நினைவில்லை.

ஒவ்வொரு க்ளாஸ் குடிக்கும் போது… பிரியாவின் காதலும்…ரஞ்சிதாவின் கழுத்தில் அவன் கட்டிய தாலியும்…
ராமமூர்த்தியின் கண்டிப்பும்…மாறி மாறி அவன் கண்முன் தோன்றின.

கடைசியில்…தன்னை மறக்கும் அளவிற்கு குடித்துவிட்டு…தள்ளாடியபடி  வீட்டிற்கு வந்தான்.

திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.நாட்காட்டியில் அது வெறும் பதினான்கு நாட்கள்தான்.
ஆனால்…ரஞ்சிதாவிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மாதமாகவே கடந்தது.

வீட்டில்…மருமகளாக வந்த மிகக் குறுகிய காலத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருந்தாள்.

அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை யாரையும் எதிர்பார்க்காமல் இழுத்துப் போட்டுச் செய்வது என அந்த வீட்டுப் பெண்ணாகவே மாறியிருந்தாள்.

தீபா, ஆர்த்தி, பார்வதி, பத்மாவதி என அனைவரும்,”ரஞ்சிதா வந்ததுல இருந்து இந்த வீடே வேற மாதிரி இருக்கு…” என்று மனம் திறந்து பாராட்டினார்கள்.

குழந்தைகளோ…”பெரியம்மா… சித்தி…”
என்று அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தனர்.

ராமமூர்த்திக்கு…அவள் மருமகள் இல்லை.மகளாகவே மாறிவிட்டாள்.

ஆனால்…அந்த வீட்டில் ஒருவன் மட்டும்…
அவளை ஒரு மனிதராகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.திருமணமான நாளிலிருந்து…ரஞ்சிதாவின் முகத்தை நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை.

காலையில் அவள் எழுவதற்கு முன்பே வேலைக்குச் சென்று விடுவான்.
இரவு…அனைவரும் தூங்கிய பிறகுதான் வீட்டிற்கு வருவான்.சில நாட்களில்…” சைட்ல வேலை இருக்கு…”என்று சொல்லிவிட்டு வரவே மாட்டான். நண்பன் வீட்டிலோ…கட்டுமான தளத்திலோ தங்கிவிடுவான்.

வீட்டிற்கு வந்தாலும்… அமைதியாக இரவு உணவை சாப்பிட்டு…நேராக அறைக்குள் சென்று விடுவான்.

ரஞ்சிதா அருகில் இருந்தாலும்…அவள் இல்லாதது போலவே நடந்துக் கொண்டான்.ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், இருவரும் இரு உலகங்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

பல முறை…”என்னங்க… சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா…?”என தயங்கியபடி கேட்டிருக்கிறாள்.

அதற்கு அவன் பதில்…ஒரு தலையசைப்பு மட்டுமே.சில நேரங்களில்…அதுவும் கூட இருக்காது. அவனது அமைதியே… அவளுக்கு பதிலாக இருந்தது.

ரஞ்சிதாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது.ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான்? என… ஆனால் எதுவும் புலப்படவில்லை.

சரி என்றாவது ஒருநாள் அனைத்தும் சரியாகும் என நம்பினாள்.ஆனால் அந்த நம்பிக்கையை சோதிக்க…விதி அடுத்த அத்தியாயத்தை ஏற்கனவே எழுதத் தொடங்கியிருந்தது.

திருமணம் முடிந்த பிறகு, புதுமண தம்பதிகள் முதன்முறையாக குலதெய்வத்தை வழிபடுவது ராம மூர்த்தியின் குடும்ப வழக்கம்.

எனவே “வரும் ஞாயிற்றுக்கிழமை குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்கணும்.”என்று முடிவு செய்தார்.
அந்த வழக்கத்தை எந்தக் காரணத்திற்காகவும் தவறவிட அவர் விரும்பவில்லை.

மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராஜீவனிடம்,”ஞாயிற்றுக்கிழமை காலையில எல்லாரும் கோவிலுக்கு போறோம்.” என்றார்.

ராஜீவன் எந்த பிடிப்பும் இல்லாதவாறு, “நான் வர மாட்டேன்.”என்று ஒரே வார்த்தையில் மறுத்தான்.

ராமமூர்த்தியின் முகம் இறுகியது.
ஏன்டா வர மாட்ட?

எனக்கு இந்த சடங்குலெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.

“உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்குதா இல்லையாகறது முக்கியமில்லை.
புதுசா கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்திருக்கற மருமகள…குலதெய்வம் கோவிலுக்கு கூட்டிட்டு போறது என் பொறுப்பு.நீ அவ கணவனா அவளோட வர்றது உன்னோட பொறுப்பு.இதுல மாற்றமே கிடையாது.”என்று குரலை அடக்கிக் கொண்டு பேசினார், ராம மூர்த்தி.

ராஜீவன் எதுவும் பேசவில்லை.
தந்தையின் குரலில் இருந்த உறுதியை புரிந்து கொண்டவன், மேலும் வாதிடாமல் அமைதியாக தன் அறைக்குள் சென்றான்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை. அனைவரும் தயாராகி விட்டனர்.

ரஞ்சிதா மஞ்சள் நிற பட்டுப்புடவையில், தலை நிறைய மல்லிகைப்பூ சூடி, கையில் பொங்கல் பொருட்களுடன் வெளியே வந்தாள்.

அவளை ஒரு கணம் பார்த்த பத்மாவதி, “அட… நம்ம மருமகளுக்கு இந்த மஞ்சள் கலர் ரொம்ப அழகா இருக்கு.”என்று திருஷ்டி கழித்தார்.

தீபாவும்,”ரஞ்சி… இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க.”என்று சிரித்தாள்.அதை கேட்ட ரஞ்சிதாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.

அந்த நேரம்…வாசலில் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்ப தயாராக நின்றிருந்தான் ராஜீவன்.

ராஜசேகர் வந்து,”என்ன ராஜீவா ரஞ்சிதாவை கூப்பிடாம கிளம்பறே?வண்டிலே கூட்டிட்டு போ”என்றார்.

எங்கோ முகத்தை தூக்கி வைத்தபடி “வா…”என்றான்.

அந்த ஒரு வார்த்தை… ரஞ்சிதாவின் இதயத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க வைத்தது.திருமணமான பிறகு, முதல் முறையாக கணவனோடு வெளியே செல்லப் போகிறாள்.சிறிது படபடப்போடு மெதுவாக பைக்கின் பின்னால் அமர்ந்தாள்.

அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சி.
ஆனால்…கையை எங்கே வைப்பது என்ற தயக்கம்.”தோளைப் பிடித்தால்…
அவருக்குப் பிடிக்குமா?கோபப்படுவாரா?”என ஒரு கணம் தடுமாறியவள்…இறுதியில் பின்புற இரும்புக் கம்பியை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

அவள் அமர்ந்ததை கூட திரும்பிப் பார்க்காமல் பைக்கை இயக்கினான். ராஜீவன்.முழு பயணத்திலும்…காற்றின் சத்தம் மட்டுமே இருவருக்கும் இடையில் பேசிக் கொண்டிருந்தது.

ஊருக்கு வெளியே பசுமையான வயல்களுக்கு நடுவே குலதெய்வ கோவில் அமைந்திருந்தது.அதிகாலை சூரிய ஒளி கோபுரத்தின் மீது விழுந்து பொன்னிறமாக மின்னியது.

கோவில் முழுவதும் கற்பூர வாசனையும்…நெய்தீபத்தின் ஒளியும்… நிறைந்திருந்தன.உறவினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மஞ்சள் கிழங்கு கட்டிய மண்பானையில்… பொங்கல் வைத்தனர்.

பொங்கல் மெதுவாக பொங்க ஆரம்பித்தது.”பொங்கலோ…
பொங்கல்…!”என்று அனைவரும் குலவையிட்டனர்.குழந்தைகள் கைதட்டி மகிழ்ந்தனர்.ரஞ்சிதா கண்களை மூடி கைகளை கூப்பி இறைவனை வேண்டினாள்.

அவளுக்கு அருகில்…விருப்பமில்லாமல் நின்றிருந்தான் ராஜீவன்.அவனது முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அந்த நேரம்…”ரஞ்சி… கொஞ்சம் இங்க வா…”என அவளை பொங்கல் பானைக்கு அருகில் நிற்க வைத்தாள், ஆர்த்தி.

“ராஜூ மாமா… நீங்களும் கொஞ்சம் இங்க நில்லுங்க.”என்று ராஜீவனையும் அழைத்தாள்.

அவன் மறுக்க மனமிருந்தாலும்… உறவினர்கள் முன்னால் அமைதியாக வந்து நின்றான்.

அந்த நொடியில்…ரஞ்சிதா ஒரு முறை அவன் முகத்தைப் பார்த்தாள். ராஜீவனோ…எங்கோ வெறுமையை பார்த்துக் கொண்டிருந்தான்.

“சிரிங்க…!”என்று ஆர்த்தி சொல்ல…
ரஞ்சிதா மட்டும் மெதுவாக புன்னகைத்தாள்.”கிளிக்…!”அந்த நொடி புகைப்படமாக உறைந்து போனது.

“செம்ம போட்டோ!”என்று மகிழ்ந்த ஆர்த்தி,உடனே தனது வாட்ஸ்அப்பில்,
“ஆர் ஆர் பர்ஸ்ட் பொங்கல்”என்ற வாசகத்துடன் ஸ்டேட்டஸாகப் பதிவிட்டாள்.

அதே நேரம்…தன் அறையில் தனியாக அமர்ந்திருந்த பிரியா…சலிப்புடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆர்த்தியின் ஸ்டேட்டஸ் அவள் திரையில் தோன்றியது.அதை சாதாரணமாக திறந்தாள்.அடுத்த நொடியே…அவளது முகம் உறைந்து போனது.

திரையில், ராஜீவனும்…ரஞ்சிதாவும்…
கணவன் மனைவியாக ஒரே பிரேமில் நின்று கொண்டிருந்தனர்.

ரஞ்சிதாவின் கழுத்தில் அவன் கட்டிய தாலி எடுப்பாக தெரிந்தது…அவள் முகத்தில் இருந்த புன்னகை… அதைப் பார்த்ததும் பிரியாவின் கண்களில் நெருப்பு மூண்டது.

மொபைலை இறுகப் பிடித்த அவளது விரல்கள் அதை தூள் தூளாக உடைக்கும் அளவிற்கு கடுமையாக மாறின.

“என்னை ஏமாத்திட்டு…இவளோட சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டானா…?”
என்று பற்களைக் கடித்தாள்.

அவளது கண்களில்… அவனை இழந்ததற்கான துக்கம் சிறிதளவும் இல்லை. கொலைவெறி மட்டுமே இருந்தது.

அடுத்த நொடியே…வேகமாக எழுந்து…
“அப்பா…!”என்று கந்தசாமியைத் தேடி உள்ளே ஓடினாள்.

அந்த ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்…
இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப் போகிறது என்பதை…அந்த நொடியில் யாருமே உணரவில்லை.

–கவிதை எழுதும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!