“சார்.. மஞ்சுவோட போன் நம்பர், அந்த வடிவேலோட போன் நம்பர் இரண்டையும் ட்ரேஸ் பண்ணிப் பார்த்தா ஏதும் கண்டுப் பிடிக்க முடியாதா?” நந்தினி இடையிட்டு கேட்க, அவளை கோபத்துடன் முறைத்துப் பார்த்த எஸ்.ஐ,
“அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க. எதாச்சும் தகவல் வந்தா சொல்றோம்” என்று கடுப்புடன் சொல்லி விட்டு கிளம்பினார்.
அவர் சென்றவுடன், “அண்ணே, எனக்கு இவர் மேல நம்பிக்கை இல்லைண்ணே. ஏதோ கண் துடைப்புக்கு விசாரிக்கிற மாதிரி இருக்கு!
அதே போல அந்த பரமசிவம் மேலயும் எனக்கு டவுட் இருக்குண்ணே.
ஏன்னா.. அந்த அஸ்வினியும் மஞ்சுவும் நல்லா பேசிக்குவாங்க. ஆனா ஹிந்தியில!
மஞ்சு, உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சேட்டோட ஜவுளிக் கடையில் வேலைப் பார்த்தா இல்ல. அதனால அவளுக்கும் ஹிந்தி நல்லாவே பேச வரும்.
அஸ்வினியும் மஞ்சுவும் அடிக்கடி ஹிந்தியில ரகசியம் பேசிக்குவாங்க. எனக்கு அது புரியாததால, நான் அவங்க கிட்ட சண்டை கூட போட்டுருக்கேன்!
அப்பவெல்லாம் மஞ்சு என்னை சமாதானம் செய்வாளே தவிர என்ன பேசிக் கிட்டாங்கன்னு மட்டும் சொல்லவே மாட்டா!
கேட்டா, அது அஸ்வினியோட பர்சனல்! அத உன்கிட்ட சொல்ல மாட்டேன்! அதே மாதிரி உன்னோட பர்சனல் விஷயத்தை அவ கிட்ட சொல்ல மாட்டேன்! இத்தோட விடேன் அப்படின்னு சொல்லிட்டா!
மஞ்சு கடைசியா அவ கிட்ட தான் ஏதோ ரகசியம் பேசிட்டு இருந்தா!
நானும் அப்ப கடையில வேலை ஜாஸ்தி இருந்ததால் பெரிசா எடுத்துக்கல!
என் போன் வேற ரிப்பேரா ஆகிடுச்சு. மஞ்சு தான் அதை சரிப் பண்ணி தரேன்னு வாங்கி வச்சுருந்தா. அதனால நான் அவ கிட்ட அவ காணாம போன சமயம் போனிலும் பேசவே இல்லை!
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! அதான் நான் பேசிட்டேனே? எல்லாம் நல்லா தான் இருக்கா! போதுமா?” கடுப்படித்தார்!
“இல்லப்பா நீங்க பொய் சொல்றீங்க!”
“ஆமாங்க எனக்கு கூட நீ எதையோ மறைக்கிற மாதிரி தான் இருக்கு!” என்று கனியின் அம்மாவும் சேர்ந்து கொண்டார் இப்போது!
“எனக்கு உங்க மேல தான் டவுட்டா இருக்கு! அன்னிக்கு அவங்க அம்மா அப்பா செத்துப் போய் அந்த பொண்ணு தனியா நின்ன போது கூட உங்களுக்கு பெரிசா அவ மேல பாசமோ இரக்கமோ வரல!
அப்ப கூட நான் தான் அவள் மேல இரக்கப்பட்டு, உங்க கிட்ட பிடிவாதம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தேன்.
நான் கூட ஆரம்பத்துல என் பிடிவாதத்தால தான் அவள இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னு நினைச்சேன்!
ஆனா நீங்க உங்க பரம்பரை சொத்தில் அவ அம்மாவுக்கு உள்ள பங்கைக் கேட்டு அவளோட சித்தப்பாக்கள் மூலம் கேஸ் போட்டுட போறான்னு பயத்துல அவள உங்க கண்ட்ரோலில் கொண்டு வச்சுருக்கீங்கன்னு அப்புறம் தான் எனக்கே புரிஞ்சது!
சொல்லுங்க.. இப்ப அவளைக் காணோம்! என்ன பண்ணிங்க அவள? கொன்னே போட்டுடீங்களா?
இந்த பாவம் எல்லாம் என் பிள்ளைங்க தலையில தானே விழும்! அடப்பாவி மனுசா!
இப்படி சொத்துக்காக சொந்த அக்கா பொண்ணையே கொல்ல துணிஞ்சுட்டிங்களா?” அவர் பரமசிவத்தின் சட்டையைப் பிடித்து உலுக்க,
“ஏய்.. நிறுத்துடி.. அந்த ஓடுகாலிய பத்தி பேசாதே!
அன்னிக்கு அவ ஆத்தா ஒரு வடக்கத்திக் காரனோட ஓடிப் போய் என் குடும்ப மானத்தை வாங்கினா!
இன்னிக்கு பொண்ணும் அதையே தான் செஞ்சுட்டுப் போய் இருக்கா!
ஊருக்குள்ள எவ்வளவு கவுரவமா இருந்த குடும்பம்!
அவ அம்மாக்காரியால அசிங்கப்பட்டு போனுச்சு!
அவளாவது நல்லா ஒரு பணக்கார வட நாட்டான் கூட ஓடிப் போனா!
ஆனா இவ.. ஒரு பரதேசிப் பன்னாடை, அனாதைப் பயக் கூட ஓடிப் போய் இருக்கா!
நினைக்கும் போதே எனக்கு அப்படியே மண்டை சூடாவுது!” கோபத்தில் கத்தினார் பரமசிவம்.
திரும்ப திரும்ப ஊருக்குள் இதே அவமானம்!
மஞ்சுவின் அப்பாவும் இந்த பரமசிவம் எல்லோரும் ஒரு வகையில் உறவினர்கள் தாம்!
ஒரே ஜாதி!
பரமசிவத்தின் அக்கா ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டதை பேச்சில் அதிகம் குத்திக் காட்டுவார் மஞ்சுவின் தந்தை! ஜாதி சங்க மீட்டிங்கில் கூட ஜாடைப் பேசுவார்!
அப்போது எல்லாம் அவமானத்தில் குறுகிப் போவார் பரமசிவம்!
ஆனால் அவர் பெண் மஞ்சுவே, காதல் திருமணம் என்று வேறு ஜாதியை சேர்ந்த ரகுவைத் திருமணம் செய்த போது, பரமசிவம் இப்போது தன்னுடைய முறை என்று, அவரைக் குத்திக் காட்ட எண்ணி பேசப் போக, “உன் அக்கா மாதிரி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கல என் பொண்ணு.
சொத்து விசயமா கூட என்னைத் தேடாதீங்க! எல்லாத்தையும் நீங்களே வச்சுக்கங்க. என்னை வடிவேல் வச்சுக் காப்பாத்துவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!
அவருக்கு வேற வேலை கிடைச்சுருக்கு! நாங்க போறோம்!
என்னைத் தேடாதீங்க” என்று வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அவருக்கு அனுப்பி இருந்தாள் அஸ்வினி!
அஸ்வினிக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது! அவள் பள்ளிக் கல்வியை எல்லாம் நாக்பூரில் படித்ததால்! தமிழில் பேச மட்டுமே தெரியும்!
அதிகாலை அம்மன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு வந்த அவளை வடிவேலுடன் மஞ்சு தான் ரயில் ஏற்றி விட்டு விட்டு வந்திருக்கிறாள் என்பது அவருக்கு அவரது ஆட்கள் மூலம் பிற்பாடு தெரிந்த செய்தி!
ஆனால் எந்த ஊருக்கு சென்றார்கள் என்பது மட்டும் அறிய முடியவில்லை!
அஸ்வினி ரூமில் ஆராய்ந்த போது அவருக்கு கிடைத்தது ஒரு லெட்டர் மட்டுமே!
“மாமா வடிவேலை எனக்குப் பிடிச்சுருக்கு. நான் அவனோட என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்க போறேன்!”
‘நிச்சயம் அது அஸ்வினி கையெழுத்து இல்லை! அவளுக்கு தமிழில் எழுத வராது!
அப்ப யார் எழுதிக் கொடுத்திருப்பா?
ஒரு வேளை அந்த வடிவேலே தானா?
இல்லையே ஒரு பெண் பிள்ளை கையெழுத்து போல தானே இருக்கு!
அப்போ இத யார் எழுதி இருப்பா?
ஒரு வேளை மஞ்சு தான் இவளுக்காக எழுதி இருப்பாளோ?’
சட்டைப்பையில் பத்திரப்படுத்தி இருந்தார் அவர்!
——–
“பாப்பா.. மீனும்மா சாவிய கொடு.. நான் வீட்டுக்குப் போகனும். நிறைய துணி சேர்ந்துடுச்சு. போய் துவைக்கணும். நான் இன்னொரு நாள் உன்கூட இங்கயே தங்கிடறேன்! இன்னிக்கு விடு”. நந்தினி மீனுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
மீனு, அன்று சனிக்கிழமை விடுமுறையாதலால், “கவி டீச்சர் கூட இருக்கேன்” என்று ரகுவிடம் பிடிவாதம் பிடித்தது.
ரகுவுக்கும் போன் நம்பர் லோகேசன் கண்டுப்படிக்கிற வேலைக்காக கொஞ்சம் அலைய வேண்டியிருந்தது!
அதனால் அவனும் அதற்கு சரியென்றே சொல்லி இருந்தான்.
மீனு விளையாட்டாக நந்தினியின் மொபெட் சாவியைத் தூக்கிப் போட்டு விளையாட, அந்த சாவியோ ஒன்று இருமுறை கீழே விழுந்து, பின் டிவி கேபினட் பின் புறம் போய் விழுந்து விட்டது!
டிவியின் பின்னால் போய் விழுந்த சாவியை அதன் பின்புறம் கையை விட்டு எடுக்க முயன்றாள் கவி!
“விடுங்க டீச்சர் கையை கிழிச்சுக்காதீங்க!” என்று சொல்லி டிவியை அப்படியே அலாக்காக தூக்கிப் பிடித்துக் கொண்டு,
“டீச்சர் சீக்கிரம் சாவியை எடுங்க” என்ற சொல்லி டிவியைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் நந்தினி!
“இருங்க எடுக்கிறேன்” என்று டிவியின் பின்புறம் சாவியை எடுக்க,
“ ஐ.. அம்மாவோட போன்” என்று துள்ளிக் கொண்டு அங்கிருந்த பிங்க் நிற கவர் கொண்ட அந்த மொபைல் போனை கையில் எடுத்தது மீனு!
“எங்க கொடு” என்று கிட்ட தட்ட டிவியை தரையில் வைத்து விட்டு அதைக் கையில் வாங்கினாள் நந்தினி!
ஆமா இது மஞ்சுவோட போன் தான்!
ஆஃப் ஆகி கிடந்தது அது!
சார்ஜரில் இணைத்து சார்ஜ் போட்டாள்.
இதுக்குள்ள சார்ஜர் இல்ல இது! சார்ஜ் ஆக லேட்டாகும் போல என்றாள் அரைமணி நேரம் சார்ஜ் போட்டும் அது ஆன் ஆகாததால்!
“சரிங்க டீச்சர் எனக்கு லேட் ஆகுது!
இது சார்ஜ் ஏறி ஆன் பண்ணின உடனே எனக்கு போன் பண்ணுங்க. நான் காலையில வர்றேன்!” என்று மனதே இல்லாமல் சென்றாள் நந்தினி!