Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 16

கணவனை நிறுத்திய அன்பரசி, “தங்கச்சி மேல நம்பிக்கை இருக்குன்னு சொன்னீங்க?” அவனைப் பார்த்துக்கேட்க, அசையவில்லை வீரா.

அவளை முறைத்தவன், “ஆமா இருக்கு. அதுக்குன்னு நடுராத்திரி தனியா விடச் சொல்றியா?” என்றவன் பார்வையெல்லாம் சகோதரி மேல் தான்.

சக்தி ஒரு வாகனத்தைத் தானே எடுத்து வெளியில் செல்ல, இவனால் அப்படியே நிற்க முடியவில்லை. மனைவி கையைப் பிடிவாதமாய் விட்டுத் தானும் அவளைப் பின்தொடர, பயத்தில் அன்பரசியும் அவன் முறைப்பையும் மீறி உடன் ஏறிக்கொண்டாள்.

வாகனம் வேகமாகச் சீறிப் பாய்ந்தது; அவன் மனக் குதிரை எத்தனையோ எண்ணங்களைத் தேவையில்லாமல் கற்பனை செய்தது. சகோதரி தவறாய் முடிவெடுக்கப் போகிறாளோ என்றெல்லாம் யோசித்தான்.



Advertisement

“எதுக்கு இவ்ளோ வேகமா போறீங்க?” அன்பரசி கேட்க, அவளிடம் கோவமாக, “எப்பவும் அவகூடத்தானே இருப்ப, இப்ப ஏன் அவளை விட்டு என் கையைப் புடிச்சிட்டு நின்ன?” என்று காட்டமாக எறிந்தவன், “ஏதாச்சும் உன்கிட்ட சொன்னாளா? எனக்குப் பயமா இருக்கு,” என்றான் உண்மையாய்.

“ஏன் பயப்படணும்? அவங்க தமிழ் அண்ணாவைத்தானே பார்க்கப் போறாங்க?”

அன்பரசி எளிதாய் கூறிவிட, அதனைக் கேள்விப்பட்ட வீராந்தகன் வாகனத்தின் வேகத்தைச் சட்டெனக் குறைத்துவிட்டான். அவனால் என்ன செய்வதெனச் சட்டென முடிவெடுக்க முடியவில்லை. தமிழ்ச்செல்வனைச் சுத்தமாக அவனுக்குப் பிடிக்காதுதான், ஆனால் சகோதரியை அதிகம் பிடிக்குமே! ஒரு மனம் அவள் விருப்பத்தின்படி விடக் கூட, மறு மனமோ தமிழோடு அவள் வாழ்க்கையா என்கிற பெரிய கேள்வியோடு நின்றது.

Advertisement

“காரை இங்கேயே நிறுத்துங்க,” என்றாள் அன்பரசி ஆணையாக.

Advertisement

இவனோ தாடை இறுக, “முடியாது. அவனை நம்பி என் தங்கச்சியை நான் அனுப்பவா? திருடன், அவளைக் கையோட இழுத்துட்டுப் போனாலும் போவான்.”

அன்பரசிக்கு வந்ததே கோபம். “நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா? இப்போ காரை நிறுத்தலை, கியரை மாத்தி விட்டுடுவேன்,” என மிரட்டினாள்.

அவனோ அவள் செய்ய மாட்டாள் என்கிற நம்பிக்கையில் அவள் பேச்சை உதாசீனப்படுத்தினான். அவன் உதாசீனத்தில் தூண்டப்பட்டவள், யோசிக்காமல் கியரை மாற்றிவிட, இதனை எதிர்பாராதவன் சுதாரித்து வண்டியை நிறுத்தினான். நல்ல வேலை, இவர்களுக்குப் பின் எந்த வாகனமும் சாலையில் இல்லை.

Advertisement

“பைத்தியமாடி நீ?”

அடித்தொண்டையிலிருந்து கத்தியவனைச் சிறிதும் பொருட்படுத்தாத அன்பரசி, “அண்ணி ரிட்டர்ன் இந்த ரோடுலதான் வருவாங்க. அரை மணி நேரம் ஆகியும் வரலைன்னா, நானே அவங்க எங்க இருக்காங்கன்னு கூட்டிட்டுப் போறேன்.” அதுவரை அமைதியாக இரு என வாகனத்தின் சாவியையும் தன் வசப்படுத்திக்கொண்டவள், அமைதியாக அமர்ந்தாள்.

வீராவால் அவளைப் போல் நிதானமாக இருக்க முடியவில்லை; கோபம்தான். தன்னை அடக்கி வைத்திருப்பது ஒரு கோபம், அழையாமல் வந்தது இன்னொரு கோபம், அனைத்திற்கும் மேல் இவளுக்குச் சகோதரியின் அனைத்தும் தெரிந்திருப்பது இன்னொரு கோபம்.

“அறிவில்ல? இப்படியா கியர் மாத்துவ? பின்னாடி வண்டி வந்துருந்தா? உன்னை மொத யார் என்கூட வரச் சொன்னது? எப்பவும் அழையா விருந்தாளி மாதிரியே வா என்கூட!” வழக்கம் போல் வார்த்தையால் அவள் இதயத்தில் ஈட்டியை இறக்கிவிட்டு அவன் முடிக்க, அதன் பிறகு பேச வாய் திறக்கவில்லை அன்பரசி.

சேலம் வந்த தமிழ்ச்செல்வன், அந்தத் திரையரங்கின் முன்பு மூடப்பட்டிருந்த ஒரு கடையின் வாயிலில் அமர்ந்திருந்தான். நள்ளிரவு ஒரு மணி இருக்கும். மனம் அதிகம் கணக்கும் நேரமெல்லாம் ஆறுதல் தேடி, உத்வேகத்தைத் திரட்ட வந்து அமரும் இடம் இது.

அந்த மாநகரத்தின் பெரிய திரையரங்கு அதுதான். அவன் தந்தையிடம் அடிக்கடி கூறுவான், “பாருங்க, இங்க என் படம் ஒரு நாள் ஓடும்; அதை நாம சேர்ந்து பார்க்கிறோம்,” என்பான் அடிக்கடி.

அவன் தந்தையோ மகன் தோளில் கை போட்டு, “நீ ஜெயிப்ப செல்வா. அப்பா படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ வந்து பார்ப்பேன், சரியா?” அவர் கூறியது நேற்று கூறியது போலக் காதில் இப்பொழுதும் ஒலிக்கிறது தமிழுக்கு. அந்த நினைவில் இப்பொழுதும் சிரித்தான். முன்பெல்லாம் அது ஒரு நாள் நிறைவேறும் என்கிற நம்பிக்கை இருக்கும், இன்று அது இல்லை என்பதே அவன் கவலை. இதுவரை அவனது படம் இந்தத் திரையரங்கில் வெளியானதே இல்லை. இந்தப் படம் அவன் ஆசையைப் பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்திருந்தான்.

“செல்வா…” அந்தக்குரலில் தமிழ் திடுக்கிட்டுத் திரும்ப, அவள் அவன் முன் நின்றாள்.

“ஹே சக்தி, என்ன இந்நேரத்துல இங்க வந்துருக்க, அதுவும் தனியா?” வாகனத்தில் உடன் யாராவது இருப்பார்களா எனத் தேடியவன், “வீட்டுல தேடப் போறாங்க, கிளம்பு மொத,” வந்த வேகத்தில் அவளை விரட்டப் பார்த்தான்.

அவளோ நகர மாட்டேன் என நின்றாள். “நீ இங்க என்ன பண்றன்னு கேட்க மாட்டேன்டா. எனக்கு உன்னைப்பத்தித் தெரியும். உன்கூட நான் இருக்கணும்னு தோணுச்சு, வந்தேன். போகச் சொல்லாத செல்வா,” அவன் அருகே தானும் வந்து அமர்ந்தாள்.

“உன் வீட்டு ஆளுங்களுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுறது?” அவளைப் பார்த்துத் திரும்பி அமர்ந்து கேட்டான்.

ஓரிரு நிமிடம் அமைதி காத்தவள், எட்டிப்பார்த்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை; அழுதுவிட்டாள்.

“அட சக்தி, என்ன இது?” இவன் பதறிப்போனான். “என்னம்மா, ஏன் இப்படி அழுகுற?” அவளுக்கு எதுவும் பிரச்சனயோ, வீட்டில் எதுவும் கூறினார்களோ என ஒரே நொடியில் பல யோசனைகள். “உன் வீட்டுல எதுவும் சொன்னாங்களா? இல்ல வர்ற வழியில எதுவும் பிரச்சனையா?”

மாறி மாறிக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தவன் கையிலே பலமாய் இரண்டு மூன்று அடியை வைத்தவள், “என்னடா உனக்கு இப்போ? எப்பப் பாரு நான், நான் மட்டும்தானா? என்னை விட்டு உன்னைப்பத்தி யோசிக்கவே மாட்டியா? எனக்காகத்தான் இப்போ உன் படத்தை விட்டுட்டு இப்படி உட்கார்ந்துருக்க,” வார்த்தையெல்லாம் கோபமாய் உரியவனிடமே கொட்டிவிட்டாள்.

தமிழிடம் வார்த்தைகள் இல்லை; அவளை மட்டுமே தன்னுடைய அழகிய ஓவியமாய்ப் பார்த்துப் பிரமித்து நின்றான்.

“நான் சைக்கோ ஆயிட்டேனா சக்தி?” சக்தி புரியாமல் முறைக்க, “எனக்காக ரொம்ப வருஷம் கழிச்சு ஒருத்தர் அழுகுறதைப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கு. அப்போ நான் சைக்கோதானே?” கேட்டான் சிரிப்போடு.

அன்பிற்காக ஏங்கும் அவன் ஏக்கம் அவளை இன்னும் உருக்கியது; அவனை அவள் அறிந்து வைத்துள்ள மமதை பொய்யோ என்று. கை நீட்டி அவன் ஆள்காட்டி விரலை மட்டும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டவள், “என்னால உனக்கு இவ்ளோ கஷ்டம் இருந்தும் எப்படி செல்வா எதுவும் நடக்காத மாதிரி சிரிக்கிற? உன்னோட கஷ்டம் என்னன்னு கூடச் சொல்லத் தோணலல?”

அவள் கேள்வியில் தோளைக் குலுக்கினான்; உண்மையில் அவள் அவன் விரல் பிடித்திருக்க, அவள் கேள்வி எதுவுமே அவன் செவிகளைச் சரியாகச் சென்றடையவில்லை, பேச்சும் வரவில்லை.

“சிரிச்சு சிரிச்சே சமாளிக்காம பதில் சொல்லுடா,” அவனை வற்புறுத்தினாள்.

“தெரியல சக்தி, பழகிருச்சு போல,” என்றான் மிக எளிதாக.

“என் வீட்டுல இருக்கவங்க பண்ணதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன் செல்வா,” மீண்டும் பெண்ணுக்குக் கண்ணீர் பெருகியது. “உன்னோட உழைப்பை நாங்கள் இவ்ளோ ஈஸியா அழிச்சிட்டோம்ல.”

“அட லூசு,” அவளை வேகமாகத் தடுக்கும் சாக்கில் கையை உருவிக்கொண்டான். பேச வரமாட்டேன் என்கிறதே; அவனுக்கும் பிடிக்க ஆசைதான். “முடிஞ்சு போச்சு, இனி அதைப்பத்திப் பேச வேண்டாம். அவங்களுக்கும் வரப்போற மாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு ஆசை இருந்துருக்கும்ல, அந்தக்கோபம்தான்.”

சக்தி, “அதுக்குன்னு ஒருத்தரோட எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்குறதா?”

தமிழ், “நான் இப்படியே நின்னுட மாட்டேன் சக்தி. எப்படியாவது ஓடி ஜெயிச்சிடுவேன், நீ வருத்தப்படாத,” அவனுக்குள் இல்லாத ஒரு நம்பிக்கையை அவளுக்கு அவன் கொடுத்தான்.

சக்தி, “என்னால வருத்தப்படாமல் இருக்க முடியல செல்வா. உன்னோட ரெண்டு வருஷ உழைப்பு இது. நீ இதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கன்னு பக்கத்துல இருந்து பார்த்த என்னால அமைதியா இருக்க முடியல,” என்றாள் ஆதங்கமாய்.

“நாம நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்துட்டா வாழ்க்கைல சுவாரஸ்யமே இருக்காது. என்னோட வளர்ச்சியில நான் ரெண்டு வருஷம் பின்னாடி போயிருக்கேன், அவ்வளவுதான்.” அவளுக்கு ஆறுதல் தரும் சாக்கில் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல இருந்தது தமிழுக்கு.

சக்திக்கு அவனிடம் எப்படி மேலும் பேசுவதென்று புரியவில்லை; அவன் வேதனை அவன் தோற்றத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. செய்வதறியாமல் கையிலிருந்த சாவியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தவள் அதனை கீழே தவறவிட, ஒரே சமயத்தில் அதனை இருவரும் எடுக்கும் முனைப்பில் ஈடுபட, இருவரது சிரமும் மோதிக்கொண்டது.

“அப்பா…” சக்தி நெற்றி தேய்த்து நிமிர, தமிழ் சிரிப்போடு எழுந்தான்.

“இது என்ன மண்டைடா?” வலியால் நெற்றியை இன்னும் தேய்த்தாள். “மண்டையில ஆயிரம் யோசனையை வச்சு வச்சு கல்லு மாதிரி கனத்துப்போச்சு போல,” என்றவள் அவன் நெற்றியையும் தேய்த்துவிட, “உனக்கும் வலிச்சிருக்கும்ல?” மிகச் சாதாரணமாகச் சக்தி கேட்க, அவள் கை பட்டு மீண்டும் உறைநிலையில் தமிழ் விழுந்தான்.

மேலும் அவளே, “இதுக்குத்தான் டைரக்டர்கிட்ட நெருங்கி வரக் கூடாதுன்னு சொல்லுவாங்க போல,” என்றாள் கையை எடுத்து.

“நீ வீக்கா இருந்துட்டு என்ன சொல்ற? ஆனா இருந்தாலும் மலையைத் தூக்கச் சொன்னா கூடத் தூக்குவான் இந்தத் தமிழ்!” காலரைத் தூக்கிவிட்டு அவன் சிரித்த சிரிப்பில், ‘ஏன் இவ்வளவு வேதனையை வலுக்கட்டாயமாக மறைக்கிறான்?’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

“பயமா இல்லையா செல்வா உனக்கு?”

தலை அசைத்தான் உண்மையாக, “இருக்குதான். இருந்தாலும் யோசிச்சுப் பாரு, இதுனால என்ன ஆகப்போகுது நமக்கு? மனசும் கெட்டு, உடம்பும் கெட்டு ஒரே சோகம்தான் மிஞ்சும். படத்துக்குன்னு எண்டுகார்டு வர்றப்போ நம்ம கஷ்டத்துக்கும் ஒரு முடிவு இருக்கும். என்னோட வளர்ச்சி தடைப்படுது, அதை யோசிக்கிறப்போதான் என்னடான்னு இருக்கு.”

அவளோ திடீரென முகம் பிரகாசிக்க, “எனக்கு ஒரு கனவு செல்வா. அதுல உன்னைச் சுத்தி ஒரே கூட்டம், செல்ஃபி எடுக்க, ஆட்டோகிராஃப் வாங்கன்னு உன்னை நகர விடாம அப்படி ஒரு கூட்டம்! ஒருத்தர் குடை பிடிச்சுட்டே இருக்கார், உன்னைச் சுத்தி செக்யூரிட்டின்னு பெரிய ஆளா இருக்க நீ.”

அவள் தீவிரமாகக் கூற, இவனோ வாய் விட்டுச் சிரித்தான். “உன் கனவுக்குன்னு ஒரு அளவு வேணாம்? ஆட்டோகிராஃப், செக்யூரிட்டின்னு…”

ஆணித்தரமாக அவன் பேச்சை மறுத்தாள், “நடக்கும்! நடக்கலைன்னா என்னை என்னன்னு கேளு. எல்லாத்துக்கும் ஒரு ஆல்டர்நேட் தீர்வுன்னு ஒன்னு இருக்கும்,” என்றவளுக்குத் திடீரெனச் சிந்தையில் ஒரு பொறி தட்டியது.

“செல்வா…” உல்லாசமாக அவனை அழைத்தவள், “எனக்கு ஒரு ஐடியா. ஆனால் இதுக்கு நீ சரத் சார்கிட்ட மொத பேசணும்,” என்றவள் தனது யோசனையை அவனிடம் கூற, ‘அது சரிவருமா?’ என்கிற யோசனை அவனுள்.

அவள் கூறிய யோசனையைச் செயல்படுத்த நேரம் காலம் பார்க்காமல் சரத்சந்திரனுக்கு அந்த நள்ளிரவில் அழைத்து, சக்தி கூறிய யோசனையைக் கூற, பல நிமிடங்கள் யோசனை அவரிடம். பிறகு தன்னுடைய முடிவைக் கூறி வைத்தார்.

சரத்சந்திரனிடம் பேசிவிட்டு வந்த தமிழின் முகம் மீண்டும் பழைய நிலைக்கு ஓரளவிற்குத் திரும்பியிருந்தது. கண்களில் தெளிவான மகிழ்ச்சி தெரிய, “ஓகே சொல்லிட்டார் சக்தி.”

சக்திக்கு மகிழ்ச்சி தாளவில்லை; சந்தோஷத்தில் குதித்தாள். “இரு, இன்னும் இருக்கு. பணத்துக்கு அவரால ஏற்பாடு பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார். வேற படம் போய்கிட்டு இருக்கு,” என்றான் சற்று யோசனையாக.

“யோசிக்க நேரம் இல்ல செல்வா, செயல்படுத்து!” தன்னுடைய கை மற்றும் கழுத்திலிருந்த நகையை அவள் அவிழ்க்க, “உன் குடும்பத்துல இருக்கவங்க நினைக்கிறதுதான் உண்மைன்னு நீயே நிரூபிக்காத சக்தி,” என்றான் அவளை முறைத்து.

“பணத்துக்கு என்ன பண்ணுவ?”

“ஏதாவது பண்றேன்,” என்றவன் எழுந்து நின்றான். “வா, உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறேன்,” என்றான்.

அவளோ, “கிளம்பலாம். அதுக்கு முன்னாடி சாப்பிடலாம்.”

“ஏன், உனக்கு பசிக்குதா?”

“எனக்கில்லைடா, உனக்கு!” தானும் எழுந்து வாகனத்தை நோக்கி நகர, “எத்தனை நாள் நீ சாப்பிடாம இருக்கன்னு தெரியல. வீட்டுக்குப்போற வழியில ஒரு கடை இருக்குப் பார்த்தேன், சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்.” அவனுக்கும் பசித்தது; பிரச்சினைக்குத் தீர்வு என ஒன்று கிட்டியதும்தான் அடுத்த தேவை எதுவெனப் புரிந்து, அதனை மறுக்காமல் கவனிக்கச் சென்றான்.

வீராவின் கால்கள் நிலையில்லாமல் ஆடிக்கொண்டே இருந்தது. நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க, அவன் சகோதரி வாகனம் ஒரு வழியாகக் கண்ணில் பட்டது. அவளுக்குப் பின்னே தமிழ் ஒரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தான்.

வீராவின் இறுகிய பார்வையிலே வாகனத்தின் ஓட்டமும் நிகழ, அவர்களைப் பின்தொடர்ந்தான். வீட்டை நோக்கித்தான் அவர்கள் பயணம் என நினைத்திருக்க, ஒரு சிறு தள்ளுவண்டிக் கடையில் வாகனம் நிற்க, இவன் வாகனமும் நின்றது.

“துணைக்கு வரான்னு பார்த்தா சாப்பிட வந்துருக்கான். ஏன், இவன் வீட்டுல போய் சாப்பிட மாட்டானா?” எரிச்சலாகப் புலம்பினான்.

“அவருக்குன்னு ஒரு குடும்பம் இருந்தா உங்களை இவ்ளோ தூரம் பேச விட்டுருக்கவே மாட்டாரே,” நொடியில் வீராவின் வாயை அடைத்தவள், “எதுக்கு உங்களுக்கு இவ்ளோ கோவம்?”

அன்பரசியின் கேள்விக்கு மீண்டும் வீராவிடமிருந்து கோபம் மட்டுமே கிடைத்தது. “கோவம் வராம? நேரத்தைப் பாரு. ஒரு பொம்பளப் புள்ளையை இந்த நேரத்துல எங்க கூட்டிட்டுப் போறோம்னு ஒரு அறிவு வேணாம்?”

சகோதரி தமிழோடு இருப்பதைப் பார்க்காமல் வீரா முகத்தைத் திருப்பிக்கொள்ள, அன்பரசி பார்வையெல்லாம் அவர்கள் மேல் தான் இருந்தது.

“மனுஷங்க திருந்தவே மாட்டாங்கள்ள?” வீரா அவளை முறைக்க, அசரவில்லை பெண்.

“அவரைப் பாருங்க, எந்த ஒரு தப்பான எண்ணமும் இல்லை. அவரு சாப்பிடுற வேகத்துல அவரோட பசிதான் தெரியுது.” உண்மையிலேயே தமிழ்ச்செல்வன் அத்தனை வேகமாய்த்தான் உண்டான்.

“அந்த மனுஷனோட பசி உங்களுக்குத் தெரியாது, ஆனா அண்ணிக்குத் தெரிஞ்சிருக்கு; அதான் அவரைச் சாப்பிட வைக்கப் பார்த்துருக்காங்க,” என்றவள் இதழில் மெல்லிய புன்னகை அந்த ஜோடியை நினைத்து. “உங்களுக்கு ஒன்னு தெரியுமா, சக்தி அண்ணி காலையில இருந்து சாப்பிடல.”

இப்பொழுது வீராவின் பார்வை அவர்களிடம் சென்றது. சகோதரி கன்னத்தில் கை வைத்துத் தமிழைப் பார்க்க, அவனோ காணாததைக் கண்டது போல உண்பதும், அவளிடம் பேசுவதுமாய் இருந்தான். பிறகு ஏதோ வாக்குவாதம் இருவருக்கும். “பாரு, இப்போவே சண்டை போடுறான். இப்படிச் சாப்பிடுறானே, அவளை ஒரு வாய் சாப்பிட வைக்கிறானா?” வீரா குற்றம் கூறி முடிக்கவில்லை, சக்தி கையிலும் ஒரு தட்டை வாங்கி வைத்தான் தமிழ்.

அன்பரசி கேலிப் பார்வை கூட வீராவுக்குக் கொடுக்கவில்லை. தமிழ் அந்தக் கடையின் மறுமுனையில் சென்று, அந்தக் கடையை நடத்துபவரிடம் பேசியபடியே தன்னுடைய கைக் கடிகாரத்தை அவிழ்த்துக் கொடுக்க, பார்த்த அன்பரசிக்குத் தொண்டை அடைத்தது. தமிழோ எதுவும் தெரியாதது போல சக்தியோடு வந்து அமர்ந்துகொண்டான்.

ஏனோ இந்தக் காட்சியை வீராவால் கிரகிக்க முடியவில்லை. ‘ஒரு வேளை உணவிற்குக்கூட அவனிடம் பணம் இல்லையா? அப்பேர்ப்பட்ட கடின நிலையையா அவனுக்கு என்னுடைய குடும்பமும் நானும் கொடுத்தோம்?’

இருந்தும் உடனடியாக இறங்கி வராமல், “ஒரு வேளை சாப்பாட்டுக்கே இருக்குற பொருளை விக்கிறான், இவனுக்கா நீ சப்போர்ட் பண்ற? இதுல இவனை நம்பி என் தங்கச்சியை அனுப்பவா?”

“நல்லா யோசிச்சுப் பாருங்க, அவரோட நிலைமைக்கு யார் காரணம்னு. எப்படிங்க இப்படி எதுவும் தெரியாத மாதிரி பேசுறீங்க?” அன்பரசியின் கேள்விக்கு வீரா அமைதியாகிவிட, அவன் மனைவியின் கைகள் காரின் கதவை இறுக்கமாகப் பற்றியிருந்தது; எதையோ சிந்தித்துக்கொண்டிருக்கும் யோசனை.

சில நாட்களாகவே அவனிடம் கேட்கத் தோன்றிய கேள்விதான் அது. மறுயோசனையின்றி இன்று சந்தர்ப்பம் கிடைத்துவிட, “கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு அந்த அண்ணாவைப் பிடிக்கலையா, இல்ல அண்ணி லவ் பண்றது பிடிக்கலையா?”

“இது என்ன கேள்வி, ரெண்டும்தான். அவனும் அவன் மூஞ்சியும்! சஞ்சீவ் எவ்ளோ நல்ல பையன், அவனை விட எப்படி மனசு வரும்?” என்றவன், “அவ லவ் பண்றதும் கோவம்தான்,” என ஒப்புக்கொண்டான்.

“உங்களுக்கு உங்க வீட்டுல இருக்குறவங்க பண்ண அதே தப்பை நீங்களும் சேர்ந்து இப்போ உங்க தங்கச்சிக்குப்பண்றீங்க,” மனதை அறிந்ததைப் போட்டுடைத்தாள் அன்பரசி.

வீரா பார்வையை வேகமாக மனைவியிடம் திருப்பினான், என்ன பேசுகிறாள் என. கண்ணில் சற்று கோபமும் கூட, அவன் குடும்பத்தைக் குறை கூறியதற்கு.

“நம்ம கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.” வீராந்தகன் மௌனத்தில் இருக்க, மேலும் தொடர்ந்தாள், “மனசுக்கு பிடிச்சவங்களை விட்டு வேற ஒருத்தர்கூட வாழ்க்கை அமைறது எவ்ளோ கஷ்டம்னு உங்களை விட யாருக்கும் தெரியாது.” வீராவை முற்றிலும் மௌனமாக்கிவிட்டிருந்தாள் அவன் மனைவி.

“கஷ்டம்னு சொல்றதை விட நரகம்ல?” அவள் கண்ணிலிருந்து கண்ணீர் ஒன்று உருண்டோட, அவன் பேச வருவதைப் பார்த்து, “இல்ல…” அவனை நிறுத்தி, “எனக்கு உங்களைத் தெரியாது, ஆனா உங்க தவிப்பு புரியுது. என்னை உங்க ரூம்ல பார்க்கிறப்போ எல்லாம் உங்க கனவு கலைஞ்சு போன வலி உங்க கண்ணுல தெரியும்.

ரொம்ப கஷ்டப்படுறீங்க, அந்த வலி உங்களுக்கு மட்டும் போதுமே. பிடிக்காத லைஃப் பார்ட்னரை சகிச்சிட்டு வாழுற வாழ்க்கை உங்களுக்கு மட்டும் நரகம் இல்ல, உங்களோடு இருக்குறவங்களுக்கும் சாபம்தான்.”

“என்கூட இருக்குறது உனக்குச் சாபமா?” கண்கள் சிவக்க முறைத்தான்.

“இல்லன்னு சொல்ல ஒரு காரணமும் என்கிட்ட இல்ல,” பதில் கொடுத்தாள் நொடி யோசிக்காமல்.

வீராவின் கைகள் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பற்றியது. “அவர்கிட்ட உங்க அளவு பணம் இல்லாம இருக்கலாம், ஆனா அண்ணியைப் பார்த்துக்கிற அளவு மனசுல தைரியம், அவர் திறமை மேல நம்பிக்கை அதிகமாவே இருக்கு. அவரை அவரோட வளர்ச்சியில தடுக்காம விட்டீங்கன்னாலே நல்லா இருப்பாங்க. ப்ளீஸ், உங்க தங்கச்சிக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சுன்னா தாத்தா மனசை மாத்தப் பாருங்க,” வேண்டிக்கொண்டாள்.

வீரா கவனம் எல்லாம் அவளின் வேண்டுதலில் இல்லை; மாறாக, மனைவி அதற்கு முன் கூறிய வாக்கியங்களில் தேங்கி நின்றது. சக்தி சற்று நேரத்தில் கிளம்ப, பின்னே தமிழ்ச்செல்வனும் செல்ல, வீராவும் சற்று நேரம் விட்டு வீட்டிற்கு வந்தான்.

வீட்டு வாயிலில் வந்து இவர்கள் வாகனம் நிற்க, “எனக்கு டிவோர்ஸ் தறீங்களா?” காரின் கதவைத் திறக்கப் போன வீராந்தகன் அப்படியே நின்று அவளைப் பார்த்தான். 

“என்ன கேட்ட?” மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளக் கேட்டான்.

“எனக்கு உங்க கார்ல மட்டுமில்ல, உங்க வாழ்க்கையிலயும் கூட வம்படியா வரணும்னு ஆசை இல்ல. விதி; அதையும் மாத்தலாம். என்னை விட்டுட்டா உங்களுக்குப் பிடிச்ச வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கும்.” அவன் பேசாதிருக்க, அதற்குள் தன்னுடைய எண்ணங்களைச் சிதறவிட்டாள் அவனின் அமைதியைக் கண்டு.

“ஐயோ, டிவோர்ஸ் கேட்டு உங்ககிட்ட இருந்து பணம் பறிப்பேன்னு நினைக்க வேண்டாம். எனக்கு உங்களுக்கு என்கிட்ட இருந்து விடுதலை கொடுக்கணும், அவ்வளவுதான். மத்தபடி நீங்க எப்போ கூப்பிட்டாலும் கோர்ட்டுக்கு வருவேன். தாத்தா பாட்டிகிட்ட நேரம் வரும்போது நானே பேசுறேன்,” என்றவள் வாகனத்திலிருந்து வெளியேற, வீராவினுள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!