Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 12

கவிக்கு அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அவள் மனம் முழுவதும், ‘மஞ்சுவின் போனை ஆன் செய்து பார்த்தால், என்ன தகவல்கள் கிடைக்க கூடும்!

அதை வைத்து எவ்வளவு சீக்கிரம் அவளைக் கண்டுபிடிக்க முடியும்?

அவள் போன் இங்கே இருக்கிறதே?

அப்படி ஆனால் அவள் எங்கே?



Advertisement

போனைக் கூட இப்படி வீட்டில் விட்டு விட்டு எங்கோ செல்ல வேண்டியதேன்?

அதுவும் இப்படி யார் கண்ணிலும் அவ்வளவு சீக்கிரம் படாத இடத்தில், கிட்ட தட்ட ஒளித்து வைத்து விட்டு!

முதலில் இது அவளது போன் தானா?

Advertisement

மஞ்சுவோடது தான் என்கிறாளே நந்தினி!

Advertisement

மீனுக் குட்டிக் கூட அம்மாவோட போன் என்று கத்திக் கொண்டு தானே போனை வேகமாக எடுத்தது!

ஒரு வேளை மஞ்சுவை எதாவது செய்து விட்டு, அவளது போனை இப்படி மறைத்து வைத்து இருக்கிறார்களோ?

அவளை யார் என்ன செய்துருப்பாங்க?

Advertisement

ஒரு வேளை அவள் புருஷனே அப்படி எதாவது செய்து விட்டு நாடகமாடுகிறானோ!’ நினைத்துக் கொண்டே கட்டிலில் திரும்பிப் படுத்தாள்.

விலகிப் போய் இருந்த மீனுவின் போர்வையை சரி செய்ய எண்ணி வேகமாக இழுத்தாள்.

அப்படி இழுத்த போது சுவரோரம்  கை இடிப்பட்டது!

“ஷ்.. அம்மா..” என்று மெல்லிய குரலில் முனகியவாறு, கையை உதறிக் கொண்டு, தலையணையை விட்டு கீழே இறங்கிய மீனுவின் தலையை அவள் தூக்கம் கலையா வண்ணம் நேராக போட்டு விட்டு, தன் தலையணையை நிமிர்த்தி வைத்துக் கொண்டு மீண்டும் யோசனையை தொடர்ந்தாள் கவி!

‘இல்ல.. இருக்காது. அவன் கண்ணில் சதா ஒரு வலி தெரிகிறது!

நிச்சயம் அவனாக இருக்காது!

அப்போ ஒரு வேளை அந்த ரஞ்சிதாவா?

இல்ல அவள் புருசனா?

இருந்தாலும் இருக்கும்! அவனும் அவன் மூஞ்சியும் அதில் இருக்கும் கொடூரமான பார்வையும்!

இவங்களும் இல்லைனா வேற யாரா இருக்கும்?

ஊருக்குள்ள நிறைய பேர் பகையைத் தேடி வச்சுருக்கும் பொண்ணாமே அவ?

எல்லாம் கடைசியில இந்த மீனு தலையில வந்து விடிஞ்சிருக்கு. பாவம்!’ என்று மீனுவின் தலையை ஒரு முறை கோதி விட்டாள் கவி.

ஐந்தாம் முறையாக எழுந்து போய், அந்த போனில் சார்ஜ் ஏறி விட்டதா என்று பார்த்து விட்டு வந்தாள்.

‘ச்சே. என்ன இது? இவ்வளவு நேரமா ஆகும்?

பழைய டைப் சார்ஜர் போல!

டவுனில் இருந்தாவது இன்ஸ்டண்டா சார்ஜ் ஆகுற கேபிள் இருக்கும் சார்ஜரை வாங்கி இருக்கலாம்!

இங்க இந்த கிராமத்தில் இருந்துட்டு அதுக்கு எங்க போறது?

அந்த ரமேஷ் கிட்ட இருக்கும்!

அவன் கிட்ட கேக்குறதும் ஒண்ணு!

தெருவில போற பிரச்சினையை வீட்டுக்குள்ள  வாயேன் என்று கூப்பிடுவதும் ஒன்று!

ம்ம். ஏறட்டும். கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும்!

என்ன பண்றது?’ என்று தனக்குள் பேசியபடி கொஞ்ச நேரம் காத்திருந்தவள் தன்னை அறியாமல் ஒரு கட்டத்தில் தூங்கியும் விட்டிருந்தாள்.

—-

அதே நேரம் தன் வீட்டுக்கு வந்து விட்ட நந்தினியின் நிலையம் அதே தான்!

இருப்பு கொள்ள வில்லை அவளுக்கும்!

‘பேசாமல் நாமளும் அங்கேயே இருந்திருக்கலாம்!

டீச்சர் அத்தனை வாட்டி சொன்னாங்க தானே!

கேக்காம பெரிசா துணி துவைக்கிறேன்னு வந்துட்டு, கடைசில அதையும் செய்யவே இல்லை!

இப்ப கூட கிளம்பி அங்க போயிடலாமா?

இப்ப மணி எத்தனை?

அய்யோ! சரியா பனிரெண்டு! இப்ப தெருவில் நடந்து போக முடியுமா?

நாய்ங்க குலைக்கும். துரத்தும்!

கரண்ட் வேற பாதி தான் வந்துருக்கு!

வீடுகளுக்கு மட்டும் தான் வந்திருக்கு! தெரு லைட்கள் எதுவும் எரியவில்லை!

ஒரே இருட்டா வேற இருக்கு!

மழை பேஞ்சு தெருவே சத சதன்னு இருக்கு!

விடியட்டும். போகலாம்!’

நந்தினி தூக்கம் வராமல் எழுந்து வீட்டில் இருந்த படியே அங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

திரும்ப திரும்ப, அவளுக்கு தான் ஏன் அவ்வளவு மறுத்தோம் டீச்சர் அங்கேயே இருக்க சொன்னதுக்கு என்ற கேள்வி வந்து கொண்டே இருந்தது!

ஆனால் எவ்வளவு யோசித்தும் விடை தான் கிடைக்க வில்லை!

‘ச்சே. அப்ப மாட்டேன்னு சொல்லி வீட்டுக்கு வந்திட்டு, இப்போ இவ்வளவு அவஸ்தை பட வேண்டி இருக்கு!’ அலுத்துக்கொண்டாள்.

எப்படா விடியும்? ஓடிப் போய் அந்த போனை ஆன் செய்து பார்த்து விடலாம் என்று நந்தினி தவியாக தவித்துக் கொண்டிருந்தாள்!

அதே நேரம் பக்கத்துக்கு டவுனில் நண்பன் அறையில் தங்கி இருந்த ரகுவின் நிலையும் மிக மோசம்!

முழு போதையில் இருந்தான் அவன்!

அவன் நிலைக் கண்டு தான்,  தன் அறையில் தங்க வைத்துக் கொண்டிருந்தான் அவனது நண்பனும்!

அவனும் போதையில் தான் இருந்தான் என்றாலும் ரகுவின் அளவிற்கு மோசமில்லை!

எனவே தான் இவ்வளவு போதையில் பைக்  ஓட்டிக் கொண்டு ஊர் திரும்ப அவன் ரகுவை அனுமதிக்க வில்லை!

ரகு இப்படி நிலை குலைந்து கிடக்க காரணம் இருந்தது!

வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்பி வந்த போது, இனி குடிக்க கூடாது! மீனுவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்! மஞ்சு திரும்பி வந்து மீனுவை இப்படி பார்த்தால் அவ்வளவு தான் உண்டு இல்லை என்று விடுவாள் என்றெல்லாம் கூட நினைத்து இருந்தான்!

அப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு இங்கே வந்தவன், அதே போல தான் இருந்தான் கடந்த சில நாட்களாக!

ஆனால் இன்று?

மஞ்சுவின் போன் நம்பரை வைத்து டவர் கண்டு பிடித்து அவள் இருக்கும் இடம் அறிய வேண்டி, அவன் தன் நண்பர்கள் வட்டாரத்தில் மிகவும் முயன்று, ஒருவனின் உதவியைப் பெற்று, மஞ்சுவின் நம்பரைக் கொடுத்து கண்டுபிடிக்க சொல்ல, அவன் செக் செய்து விட்டு சொன்னான்.

“இந்த நம்பர் கடைசியா கேரளா கேலிகட் பக்கம் ஏதோ வில்லேஜ காட்டுது!”

“கேலிகட்டுன்னா..எங்க?”

“நார்த் கேரளா! அங்க உங்க சொந்தக்காரங்க யாராச்சும் இருக்காங்களா?”

“ம்ஹும்.. இல்ல. அப்படியே இந்த நம்பரைக் கொஞ்சம் பாருங்க!”

வடிவேல் நம்பரைக் கொடுத்தான் ரகு.

“ம். இந்த நம்பரும் அதே வில்லேஜில் தான் கடைசியா ஆஃப் ஆகி இருக்கு!” என்று சொல்லவும்,

ரகுவிற்கு அதிர்ச்சி!

‘அப்போ.. எல்லோரும் சொல்வது போல மஞ்சுவும் வடிவேலும் தான் ஓடிப் போய்ட்டாங்களா? இல்ல.. இல்ல இருக்காது. நான் நம்ப மாட்டேன்!

என் மஞ்சு எனக்கு ஒரு நாளும் துரோகம் பண்ணவே மாட்டா!

அப்ப அவ எங்க போனா?

அந்த வடிவேலு? அவன எங்க காணோம்?

மஞ்சுவோட போன் எப்படி கேரளா கிராமத்து டவரைக் காட்டுது!

அய்யோ!’ என்று தலையைப் பிடித்துக் கொண்டான் ரகு!

“மஞ்சுவின் ஏடிஎம் கார்டை வீடு முழுவதும் தேடியும் காணோம்” என்று ரஞ்சிதா சொல்ல, ரகு அவள் பேங்க் பாஸ் புக்கை தேடி எடுத்தான்.

அதை என்ட்ரி போட்டுப் பார்த்தால், போன மாதம், அதில் ஒரு பத்தாயிரம் ரூபாய் ஒரு ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டது தெரிந்தது!

அவள் காணமல் போய் சில மாதங்கள் கழித்து!

அதுவும் ஒரு கேரளா ஏடிஎமில் இருந்து தான்!

ஆனால் இம்முறை பாலக்காட்டில் இருந்து!

ரகுவிற்கு எதுவும் புரிப் படாமல் பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது!

தாங்க முடியாமல் தான் அவன் நண்பனை சரக்கு வாங்கி வர சொல்லி அடித்தது!

பின்னிரவு வரை தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் அப்படியே மடிந்து சரிந்து உட்கார்ந்த வாறே தூங்கியும் விட்டிருந்தான்!

——

அதி காலை மணி நான்கு!

கவிக்கு விழிப்பு தட்டியது!

கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தவள், நேராக சென்றது சார்ஜ் போட்டிருந்த மஞ்சுவின் போன் அருகில் தான்!

இப்போது அது சார்ஜ் ஏறி ஆன் ஆகியது!

அதன் திரையில் மஞ்சுவின் படத்தை எதிர்பார்த்தவள் அதிர்ந்தாள்.

காரணம் அதில் மஞ்சுவின் படமோ இல்லை ரகுவின் படமோ இல்லை மீனுக் குட்டியின் படமோ இல்லை!

சாமி படமும் இல்லை!

அதில் இருந்தது யாரோ ஒரு இளம்பெண்ணும் ஒரு இளைஞனும்!

அந்த பெண்ணின் தோள் மீது தன் தாடையை வைத்துக் கொண்டு பின்னால் இருந்து அவளை லேசாக அணைத்த வண்ணம் இருந்தான் அவன்!

அந்த பெண்ணின் முகத்தில் கொஞ்சம் வடக்கத்திய சாயல்! நிறம்!

நம்ம ஊர்ப் பெண்ணைப் போல இல்லை அவள்!

ஆனால் அந்த இளைஞனைப் பார்த்தால் தமிழ் நாட்டுப் பையன் போல தான் இருந்தான்!

‘யாரோட போன் இது?

அது ஏன் இங்க ஒளிச்சு வைச்சுருக்காங்க?

யார் வச்சாங்க?

எதுக்கு?

எப்படி இது ஒரு பாஸ்வேர்ட் கூட இல்லாமல் திறந்து இருக்கு!

அப்போ மஞ்சுவோட போன் எங்க?

இதை ஓபன் பண்ணிப் பார்க்கலாமா?

அடுத்தவங்க போனை இப்படி பார்க்கலாமா?’

கவி குழம்பினாள்.

உடனே அவள் நந்தினியை போனில் அழைத்து விஷயத்தை சொல்லி விட்டாள்.

“அப்ப.. அது அந்த அஸ்வினியா இருக்கும்!” என்றாள் நந்தினி.

“ஓ.. அவ யாரையோ லவ் பண்ணி இருக்கா போல! அது தான் அவ மஞ்சுகிட்ட பேசிட்டு இருந்த சீக்ரெட்டா? அந்த பையன் யாரா இருக்கும்? பார்க்க நம்ம ஊர் பையன் மாதிரி இருக்கான்னு வேற சொல்றீங்க!

டீச்சர்.. கொஞ்சம் இருங்க. நான் உடனே அங்க வந்திடறேன். பார்ப்போம். நைட் பூரா நான் தூங்கவே இல்லை! நானே உங்களுக்கு போன் பண்ணலாமா நினைச்சுட்டு தான் இருந்தேன்.

அப்புறம் நீங்க தூங்கிட்டு இருப்பீங்க டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் பொறுமையா இருந்தேன்.

இதோ நான் வந்திடறேன்.  நீங்க உள்ள வேற என்ன போட்டோ இருக்குன்னு பார்த்திட்டு இருங்க. வந்திடறேன்”. என்று போனைக் கட் செய்து விட்டு கிளம்பினாள் நந்தினி.

அவள் போனைக் கட் செய்தவுடன், கவி முன் வாசலில் இருக்கும் மெயின் கேட்டின் பூட்டை திறந்து விட்டாள்.

பின்,  தோட்டத்தைத் தாண்டி உள்ளே வந்தவள், வீட்டுக் கதவையும் திறந்தே வைத்தாள்.

தூரத்தில் தெய்வானை வாசல் தெளிக்கவும் கழுநீர் எடுக்கவும் அவள் வீடு நோக்கி வந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு!

இப்படி இரு வாசல்களையும் திறந்து வைத்து விட்டு, உள்ளே போய் அந்த போனை எடுத்து, அதன் கேலரியை திறந்தவள் மீண்டும் அதிர்ந்தாள்!

அதில் இருந்த போட்டோக்களை வேகமாக தள்ளிக் கொண்டு வந்தவள் கண்களில் மீனுக் குட்டியின் காது குத்து விழாவின் போட்டோ!

மஞ்சுவும் அந்த வடிவேலும் அண்ணன் தங்கச்சி மாதிரி பழகுனாங்க என்று தானே நந்தினி சொல்வாள்!

‘அப்போ மீனுக் குட்டி உட்கார்ந்திருப்பது அந்த வடிவேலுவின் மடியில் தானா?

அப்போ..அப்போ.. வடிவேலுவும் அஸ்வினியும் லவ்வர்ஸா?

அது தான் அவளும் மஞ்சுவும் அடிக்கடி ஹிந்தியில்  பேசிக் கொண்ட நந்தினிக்கு தெரியாத சீக்ரெட்டா!’

கவி அதிர்ந்தாள். உடனே போனை எடுத்துக் கொண்டு வெளியே போனாள். நந்தினி இன்னும் வந்திருக்க வில்லை!

அதுவரை கவிக்கு பொறுமை இல்லாததால், நந்தினியை மீண்டும் போனில் அழைத்தாள் ஒரு பரபரப்பில்!

ரிங் போய்க் கொண்டிருந்தது.

அதற்குள் அவள் போட்டு விட்டிருந்த தண்ணீர் மோட்டார் ஓடி, மேலே இருந்த தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது!

அதை அணைக்க எண்ணி, கொல்லைப் புறம் இருக்கும் அதன் சுவிட்சை தேடி பின் பக்கமாக போனாள் கவி.

மோட்டார் சுவிட்சை அணைத்து விட்டு திரும்புகையில் நந்தினி அவள் அழைப்பை ஏற்று,

“ சொல்லுங்க டீச்சர்.. அங்க தான் வந்துட்டு இருக்கேன்.

ரொம்ப வேகமாக காத்து அடிக்குது. வண்டி ஓட்டவே முடியல!” என்றாள்.

“அய்யோ நந்தினி.. இப்ப நான் சொல்றத கேட்டா, நீ வண்டியை கூட அப்படியே போட்டு விட்டு ஓடியே வந்திடுவ!”

“அய்யோ. அப்படி என்ன செய்தி?”

“போட்டோல அஸ்வினி கூட இருக்கிற அவள் லவ்வர் யார் தெரியுமா?”

“யாரு?”

“வடிவேலு!”

“என்ன?” நந்தினி அதிர்ந்தாள்!

“ஆமா.. மீனுக் குட்டியோட காது குத்து போட்டோ ஒண்ணும் பார்த்தேன் அந்த போனில்!

அதுல பாப்பாவ மடியில் வச்சுகிட்டு இருக்கிற ஆளும் அஸ்வினி கூட சேர்ந்து போட்டோல இருக்கிற ஆளும் ஒரே ஆளு தான்!” என்று கவி சொல்ல,

“அய்யோ டீச்சர்? என்ன இது குண்டுக்கு மேலே குண்டா போட்டுக்கிட்டு இருக்கீங்க! இதோ நானும் வந்திட்டேன்.”. என்று சொல்லி போனை கட் செய்த நந்தினியால் மேற்கொண்டு அவள் மொபெட்டை ஓட்டவே முடியவில்லை! மீண்டும் கவியை அழைத்து பேசிக் கொண்டே வண்டியைத் திருப்பினாள்.

அப்படி ஒரு சுழல் காற்று! சுற்றி சுற்றி அடித்தது!

கண்ணிலும் வாயிலும் மண்ணைக் கொண்டு வந்து அடித்தது!

இதில் அவள் ஷார்ட் கட்டாக குறுக்கும் மறுக்கும் சந்து பொந்துகளில் வண்டியை விட்டாலும் போக முடியாதப்படிக்கு சிலர் மாடுகளை கட்டிப் போட்டிருந்தார்கள்.

சிலர் தங்களது குட்டி யானை வண்டியை (மினி லோடு வேன்) நிறுத்தி வழியை மறித்து இருந்தனர்.

“ச்சே..இவனுங்க வேற!” என்று சலிப்புடன் மொபட்டை திருப்பி திருப்பி வேறு பாதைகளில் விட்டு ஓட்டிக் கொண்டு, போனில் பேசிக் கொண்டே  விரைந்து கொண்டிருந்தாள் நந்தினி.

—–

அதே நேரம் அந்த ஊரை நோக்கி தன் பைக்கில் வந்து கொண்டிருந்தான் இன்னமும் முழுவதும் போதை தெளியாத ரகு.

வயிறு முட்ட குடித்து விட்டு உட்கார்ந்த நிலையிலயே தூங்கி விட்டவனுக்கு அதிகாலையில் விழிப்பு தட்டியது!

கண் விழித்தவுடன், அவனுக்கு கொஞ்சம் தெளிவு வர, உடனே அவன் நினைவுக்கு வந்தது அவனின் மகள் மீனுக்குட்டி!

மஞ்சு மேல இன்னமும் அவனுக்கு சந்தேகம் இல்லை தான் என்றாலும், இப்போது அவளை விடவும் மீனுக் குட்டி பெரிதாக தெரிந்தாள்.

‘நம்ம பிரச்சினையில பாதிக்கப் படுறது என்னமோ மீனுக் குட்டி தான்!

எது எப்படியோ அவள் நலம் தான் இனி முக்கியம்’  என்று நினைத்தவனுக்கு அவளை உடனே காண வேண்டும் போல இருந்தது!

போதையில் வண்டி ஓட்டி செல்ல அவனை விடாத, அவன் நண்பனை சமாதானம் செய்து விட்டு ஊர் நோக்கி வந்தான் ரகு!

வரும் வழியில் அவனும் மஞ்சுவும் ஜோடியாக இதே பாதையில் சென்ற நினைவுகள் மீண்டும் அவனைப் பாடாய் படுத்த, தோளில் மாட்டி இருந்த அவன் பேகை திறந்து அதில் இருந்த ஒரு பாட்டிலை அப்படியே வாயில் சரித்துக் கொண்டான்.

குறைந்து இருந்த போதை மீண்டும் ஏறத் தொடங்கியது!

அப்படியே சென்றவன், நேராக தான் இப்போது இருக்கும் வீட்டிற்கு செல்லாமல், கவி தங்கியிருக்கும் அந்த புது வீட்டுக்கு வண்டியை விட்டான்! தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாதவனாக!

————–

அதே நேரம் கவியின் வீட்டுக்கு எதிர்புறம் இருந்த இரு வீட்டுப் பெண்களும் தங்கள் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு, வெளியே வந்தனர்.

அவர்கள் கைகளில் துடைப்பம்!

இரு பெண்களில் ஒருவள் அன்னம்!

இருவரும் வாசலைப் பெருக்க தொடங்கினார்கள்!

அப்போது காற்று மிகவும் வேகமாக அடித்து, அவர்கள் கூட்ட கூட்ட குப்பை எதிர்த்து கொண்டு வந்து கொண்டே இருக்க,

“ச்சே என்னடி இது? இன்னிக்கு காலங்கார்த்தாலேயே இப்படி பேய்க் காத்து அடிக்குது!” என்று முணுமுணுத்தாள் அன்னம்!

“அட ஆமாங்க்கா!” என்றாள் அடுத்த வீட்டுக்காரியும்!

“தெவ்வானைய இன்னமும் காணோம். அங்க பாரு எதிர்த்த வூட்டுல இன்னமும் சாணி தெளிக்கலய!”

“ஆமா”  என்றவள் கண்ணில் பட்டான் தன் பைக்கை வீட்டு காம்பவுண்ட் உள்ளே நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்த ஒருவன்!

அது ரகு தான்!!

அப்போது மீண்டும் ஒரு பெரிய சுழல் காற்று வேகமாக அடித்து அவர்கள் இருவர் கண்களிலும் மண்ணை வாரி இறைத்தது!

கண்களைக் கசக்கிக் கொண்டு அவர்கள் பார்த்த போது, அவர்கள் கண்களுக்கு ரகு இடத்தில் ரமேஷ் தெரிந்தான்!

கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பார்த்தாலும் அவனே தான் தெரிந்தான்!

“ஏய்..அன்னம்.. பார்த்தியா? டீச்சர் வூட்டுக்குள்ள திருட்டுப் பூனையாட்டம் யார் போறதுன்னு!

இந்த டீச்சர் வேற இப்படி விவரம் இல்லாம காலையில கதவைத் திறந்து வச்சுருக்கு! இந்த பயலுக்கு வசதியா போய்டுச்சு!”

“அவங்க தெவ்வானை வர்ற நேரம்னு திறந்து வச்சுருக்காங்க! இந்த காவலிப் பய இவ்வளவு துணிவான்னு கண்டாங்களா?” என்ற அன்னம்,

“இன்னிக்கு இருக்குடா உனக்கு இந்த அன்னம் கையால கச்சேரி!

இனி ஒரு பொம்பள பக்கமும் அந்த பய நிமிர்ந்து கூட பாக்க கூடாது” என்று கையில் இருந்த துடைப்பத்தை கையில் தட்டிக் கொண்டு எதிர் வீடு நோக்கி போனாள் அன்னம்!

“ஏய்.. நீயும் வா.. புள்ள” என்று அடுத்த வீட்டுக்காரியையும் அழைத்துக் கொண்டு!

வீடு நோக்கி இரு பெண்கள் கையில் துடைப்பக் கட்டையுடன் வந்து கொண்டிருப்பது தெரியாமல், அவனுக்கு இருந்த போதையில் கவியின் அறைக்கே சென்று, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மீனுக் குட்டியின் அருகில் படுத்துக் கொண்டு அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தான் ரகு!

கவியோ கொல்லைப் புறம் நின்று இன்னமும் நந்தினியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

வாய்ப் பேச முடியாத தெய்வானையோ, கவியின் அடுப்படியில் இருந்த பழைய மீந்து போன உணவுகளை தான் கொண்டு வந்திருந்த கழுநீர் தவலையில் ஊற்றிக் கொண்டு இருந்தாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!