Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 9

அத்தியாயம் 9

மணிமேகலை சொன்னது போலவே சுந்தர்ராஜன் மனைவிக்கு அழைத்து திருமணத்தை சீக்கிரமாகவே நடத்திடலாம் என்று பேசினார்.



Advertisement

“நீங்க எப்ப வர்றீங்க? நீங்க வந்ததும் தான் பேசணும்”

“நான் எதுக்கு? நீயும் உன் செல்ல மகனும் ஏற்பாடுகளை எல்லாம் பாருங்க.. “

Advertisement

Advertisement

“இப்படி யாருக்கோ கல்யாணம்ன்னு இருந்தா எப்படி? நம்ம புள்ள கல்யாணம்னு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா?”

“மணி படிப்பை நிறுத்த என்ன காரணம்?”

Advertisement

“அது எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு கேட்கறீங்க? இப்ப அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம். மணிக்கும் தான் மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கோம்ல? கொஞ்சம் சீர் அதிகமா செய்றோம்னு சொன்னா கண்டிப்பா வரன் அமையும். எங்க அப்பா கூட ஒரு மாப்பிள்ளை பத்தி சொல்றதா சொல்லி இருக்காங்க”

“இனிமேல் என் பொண்ணு விஷயத்தை நானே பார்த்துகிறேன். நீ ஒன்னும் செய்ய வேண்டாம். உன் பேச்சை நம்பி என் பொண்ணோட எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கி வச்சிருக்கேன். எங்க போய் அந்த பாவத்தை கரைக்கிறதோ?”

“அன்னிக்கு சூழ்நிலையில எது சரியோ அதை தான் நான் செஞ்சேன்..”

“இப்ப கூட உன் தப்பு உனக்கு புரியலையா? எனக்கு உன் மூஞ்சியை பார்க்கவே பிடிக்கலை. கல்யாண ஏற்பாடு எல்லாம் நீயே பார்த்துக்கோ” என்று கூறி போனை வைத்துவிட்டார்.

ஹரிக்கு அப்பா வராதது எல்லாம் கவலையாக இல்லை.

“விடும்மா எப்படியோ கல்யாணத்தை சீக்கிரம் வச்சுக்க சொல்லிட்டாரு இல்ல?” என்றான் குஷியாக.

திருமண தேதி குறித்ததுமே பரிமளா சுந்தர்ராஜனிடம் வருமாறு பலவிதமாக கூறியும் மனிதர் அசையவே இல்லை. பின்னரே மகளிடம் பேசினார்.

“சொல்லுங்க ம்மா.. நான் சென்னை வந்து ஒரு மாசம் மேலே ஆகுது.. இப்ப தான் என் நியாபகம் வந்துச்சா” என்றார் மணிமேகலை.

“நீயும் உன் பங்குக்கு என்னை கஷ்டப்படுத்தாத மணி” என கூறி ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார்.

அம்மா சாதுர்யமாக பேசுபவர் தான். தவறே செய்தாலும் தன் பக்கம் நியாயம் இருப்பது போலவே தான் அவர் பேச்சு இருக்கும். ஆனால் ஒருபோதும் அவர் கலங்கியது இல்லை. ‘என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்’ என்று நிமிர்ந்து நிற்பவர் இன்று இப்படி குழந்தைபோல அழுகவும் மணிமேகலைக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“என்னம்மா என்னாச்சு. அழாதீங்க..”

“நீ இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கு மணி.. எனக்கும் மனசுக்குள்ள உனக்கு நியாயமா நடந்துக்கலன்னு உறுத்தல் இருந்துட்டே தான் இருக்கு.. அதுவே எனக்கு பாதி உடம்புக்கு முடியலை. இப்ப அப்பாவும் அங்க வந்துட்டாங்க..

கல்யாணத்தை பக்கத்துல வச்சுக்கிட்டு வரவே முடியாதுன்னு சொல்றாரு. நான் ஒரு ஆளா எப்படி கல்யாண வேலை எல்லாம் பார்க்க முடியும்? நீயே சொல்லு” என்றார் தேம்பிக்கொண்டே.

ஹரி பத்தி தான் உனக்கு தெரியும் இல்லை.. அவன் மாமானார் அவனுக்கு மேலே இருக்காரு. ஒன்னொன்னுக்கும் புதுசா ஒரு கண்டிஷன் சொல்றாரு.. உங்க அப்பாவால மட்டும் தான் சமாளிக்க முடியும்.. தயவுசெஞ்சு அப்பாவை வர சொல்லு மணி ப்ளீஸ்” என்று கெஞ்சி கேட்கவும், மணிமேகலை தான் அப்பாவை பலதும் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தார்.

 இப்பொழுது அடுத்ததாக ஹரியிடம்,

“கல்யாணத்துக்கு உங்க அண்ணா அக்கா எல்லாரும் கண்டிப்பா வரணும் மாப்பிள்ளை. ஏற்கனவே ஊருக்குள்ள எங்களால தான் உங்க அக்கா வீட்டை விட்டு போயிட்டாங்கன்னு ஒரு பேச்சு அடிப்படுது. அதனால அவங்க வரலைன்னா தப்பா போயிடும்” என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார் சடகோபன்.

அவர் மிகவும் அழுத்தி கூறவே அம்மாவிடம் வந்து கூறிவிட்டான்.

உடனே அவர் ராமிற்கு அழைத்து கண்டிப்பாக இரண்டு நாளேனும் வந்து செல்ல வேண்டும் என்று கூறி விட்டார். ஹரியும் ப்ளீஸ் அண்ணா என்று அழைக்கவே ராம் வருவதாக ஒப்புக்கொண்டார்.

மணிமேகலையை மட்டும் ஹரியும் அழைக்கவில்லை பரிமளாவும் அழைக்கவில்லை.

அன்று சாப்பிடும்பொழுது சுந்தர்ராஜனிடம் ராம் வருகிறான் என்று தகவலை மகிழ்ச்சியாக கூறினார் பரிமளா.

ஓ என்று முடித்துக்கொண்டார் சுந்தர்ராஜன்.

ராம் அவருக்கு அழைத்து ஏற்கனவே தான் வருவதை கூறியிருந்தார். ‘பிள்ளைகளையும் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்துடுங்க ப்பா.. எனக்கு ஒரு வாரம் தான் லீவ். நான் பிள்ளைகளையும் பார்க்கணும்’ என்று ஏக்கமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

“நீங்க மணிக்கும் பிள்ளைகளுக்கும் டிக்கெட் போட்டுடுங்க.. போய் கூட்டிட்டு வர நேரம் இருக்காது..” என்று பேச்சு வாக்கில் கூறினார்.

“அவங்களுக்கு எதுக்கு டிக்கெட்?”

“இது என்ன கேள்வி? கல்யாணத்துதுக்கு அவங்க வரணும் இல்ல?”

“மணி இந்த வீட்ல இருந்தா கல்யாணமே நடக்காதுன்னு தானே அம்மாவும் பையனும் அவளை ஹாஸ்டல்ல சேர்க்க சொன்னீங்க? இப்ப என்ன புதுசா?”

“நாங்க கொடுமைக்காரங்கன்னு விட்டா போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவீங்க போலயே.. நாங்க ஒரு பேச்சுக்கு சொன்னதை பிடிச்சிக்கிட்டு இப்படி பேயாய் எங்களை ஆட்டி படைக்கிறீங்க” என்றார் பரிமளா கடுப்பாக.

“நல்லா கேளுங்க ம்மா.. எங்க மாமா கண்டிப்பா மணி அக்கா கல்யாணத்துக்கு வரணும்னு சொல்லிட்டாங்க ப்பா” என்றான் ஹரி உர்ரென்று.

“அதானே பார்த்தேன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?”

“என்னப்பா நீங்க?”

“அப்ப நீ கூப்பிடு ‘அக்கா என் கல்யாணத்துக்கு வான்னு’..”

“நான் கூப்பிட்டா தான் அவ வருவாளா?”

“நீ கூப்பிட்டாலுமே அவ வருவாளான்னு தெரியலை. அது அவ விருப்பம்.”

“அவ என்ன வேற வீட்டு பொண்ணா தனியா அழைப்பு வைக்க? கல்யாணம் ஆகுற வரைக்கும் அவ இந்த வீட்டு பெண் தானே.. நம்ம தம்பி கல்யாணம்னு அவ இல்ல முன்ன நிக்கணும்” என்றார் பரிமளா.

“நாய் வாலை எல்லாம் நிமிர்த்த முடியுமா? உங்க ரெண்டு பேரையும் மாத்தவே முடியாது.. நான் கூப்பிட மாட்டேன்.. உங்களுக்கு அவ வரணும்னா நீங்க தான் அவ கிட்ட பேசணும்” என்று முடிவாக கூறி எழுந்து சென்றுவிட்டார்.

“அம்மா நீ பேசும்மா” என்று ஹரி அம்மாவிடம் பொறுப்பை தள்ளிவிட்டான்.

வேறு வழியின்றி பரிமளாவே மீண்டும் மணிமேகலைக்கு அழைத்து அவரது பேச்சு சாமர்த்தியத்தை எடுத்து விட்டார்.

“நான் ஹரின்னு அவன்கிட்ட பேசி பதினேழு வருஷம் ஆச்சு.. அது உனக்கு தெரியுமா ம்மா?”

“மணி….”

“இதை நீயோ அவனோ கவனிச்சீங்களான்னு எனக்கு தெரியாது. எப்ப என் படிப்பை குழிதோண்டி அவன் புதைச்சானோ அப்பவே அவன் என் தம்பிங்கிற நினைப்ப நான் தொலைச்சிட்டேன்”

“——————”

“என்னம்மா இத்தனை வருஷமா அவன் என்னை ஒதுக்கி வச்சிருக்கான்னு இல்லை நீ நினைச்சிட்டு இருக்க.. ஆனா உண்மையில அவனை விலக்கி வச்சிட்டு நான் தள்ளி நின்னுட்டேன்..”

“ஊருக்கு முன்னாடி நம்ம குடும்ப விவாகாரம் கடை பரப்பனுமா.. நீ வந்து தலை காட்டிட்டு போறதால என்ன ஆக போகுது?”

“அக்கா நீ வான்னு ஹரி வந்து நேர்ல என் முகத்தை பார்த்து கூப்பிட்டா நான் வர்றேன். அவ்வளவு தான் என்னால் இறங்கி வர முடியும்” என்று முடித்துக்கொண்டார்.

இந்த மணிமேகலை முற்றிலும் புதிதாக தோன்றினார் பரிமளாவிற்கு..

ஹரியிடம் மணி பேசியதை எல்லாம் ஒன்றுவிடாமல் கூறிவிட்டார்.

“இனி நீயாச்சு அவளாச்சு.. இல்ல உன் மாமனாரை சமாளிச்சுக்கோ.. என்னை இதுல கொண்டுவராதே” என்று ஒதுங்கிவிட்டார்.

ஹரிக்கு மணிமேகலையை அழைக்க மனசு உடம்பு எல்லாம் கூசியது.. பதினாலுவயதில் உடன் இருக்கும் மாணவர்களின் கேலியை பெரிதாக கருதி விவரம் இல்லாமல் செய்ததாக கூட கூறிவிடலாம். ஆனால் அதற்கு பிறகு எத்தனை வருடங்கள். மணிமேகலை நன்றாக படிக்கக்கூடியவர். தன்னால் அல்லவா அவரது எதிர்காலம் இப்படி ஆனது.

மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் ஹரிக்கு தெரியுமே, அந்த சம்பவத்திற்கு பிறகு ‘ஹரி கண்ணா’ என்று மணிமேகலை இவனை அழைக்கவே இல்லையே. சிறியவயதில் ‘ஹரி கண்ணா ஹரி கண்ணா’ என்று மூன்றாம் வகுப்பு வரையிலும் தூக்க முடியாமல் ஹரியை தூக்கிக்கொண்டு சுற்றுவார் மணிமேகலை. மங்கலாக அந்த காட்சி கண் முன்னே தோன்றியது.

அம்மாவையும் கூட்டி கொண்டு சென்னை வந்து இறங்கினான் ஹரி.

மணிமேகலை இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே நிஜம். அவள் இதுதான் என் முடிவு என்று அடித்து கூறியதும் அம்மாவும் தம்பியும் வந்துவிட்டார்களே! அன்றும் நான் படிக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்திருக்கவேண்டுமா? என்று ஆயிரமாவது முறையாக வருந்தினார். அதை காட்டிக்கொள்ளாமல் வந்தவர்களுக்கு வாய்க்கு ருசியாக அவர் அவருக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறினார்.

அதிலே இருவர் மனதும் வயிறும் நிறைந்து தான் போனது. இருவரும் மணிமேகலையையும் அவர் சமையலையும் மிஸ் செய்தார்கள் என்பது தான் நிஜம்.

வாராஹியும் வல்லபனும் கூட பாட்டி சித்தப்பா என்று அன்பாக பழகினார்கள்.

“எங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் முதல் விருந்தினர் நீங்க தான்” என்றாள் வராஹி.

“அத்தை நான் கொண்டு போய் கொடுக்கிறேன், நீங்க உட்காருங்க” என்று காஃபி கோப்பைகளை கொண்டுவந்து கொடுத்தான் வல்லபன்.

“அத்தை நீங்க சாப்பிடுங்க நேரமாச்சு” என்று அவருக்கு உணவை பரிமாறினாள் வராஹி.

மணிமேகலையை இருவரும் அப்படி பார்த்து கொண்டார்கள். பார்ப்பதற்கே கவிதையாக இருந்தது.

ஹரி அலட்டிக்கொள்ளாமல் “கண்டிப்பா நீங்க மூனு பேரும் என் கல்யாணத்துக்கு வந்திடனும். நேஷனல் ஹாலிடே சமயத்துல தான் கல்யாணம் வருது. அடுத்து சனி ஞாயிறு, அதனால காரணம் எதுவும் சொல்லாம வந்திடனும்” என்று உரிமையாக அழைத்தான்.

இம்முறை மணிமேகலை மறுப்பாக எதுவும் கூறவில்லை. நீரடித்து நீர் விலகுமா என்ன?

மகிழ்ச்சியாகவே அவர்களை அனுப்பி வைத்தனர் மூவரும்.

ராமையும் பார்க்கலாம் அல்லவா? பிள்ளைகளுக்கும் அதனால் ஆசையாக தான் இருந்தது. ராமாவது வாரம் ஒருமுறை பிள்ளைகளிடம் பேசிவிடுவார், வினோதா தான் பேசுவதே கிடையாது. பிள்ளைகள் வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் அன்னையின் நினைப்பு அவர்களை வாட்டத்தான் செய்தது. அவரது நிலைமையை நிவேதா பக்குவமாய் பிள்ளைகளிடம் எடுத்து கூறியிருந்தார். அம்மா ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று தினமும் மனதார பிரார்த்தித்து கொள்கிறார்கள் சிறுவர்கள்.

அவர்கள் சென்ற பிறகே அத்தையுடன் சேர்ந்து திருமண அழைப்பிதழை பார்த்தனர் பிள்ளைகள்.

கும்பகோணத்திற்கு அருகே உள்ள அவர்கள் சொந்த கிராமத்தில் இருந்த வராஹி அம்மன் கோவிலில் தான் திருமணம் நடக்கவிருந்தது.

“என்ன அத்தை வராஹி அம்மன் கோவில் போட்டிருக்கு.. என் பெயர் தான் அந்த சாமிக்கா?” என்றாள் வராஹி உற்சாகமாக.

“ஹா ஹா.. சாமி பெயர் தான் உனக்கு வச்சது.. உனக்கு இது தெரியாதா?”

“இல்லையே.. “

“அவங்க ரொம்ப சக்தி வாய்ந்த சாமி வரா”

“அப்படியா அத்தை? எங்களுக்கு அந்த சாமி பத்தி சொல்லுங்களேன்”

“வராஹி அம்மன் சப்த மாதர்களில் ஒருத்தவங்க. அவங்க திருமாலின் வராக அவதாரத்தின் சக்தி வடிவமாகக் கருதப்படறாங்க. வராஹி அம்மன் வீரத் தாயாகவும், தீய சக்திகளை அழித்து நன்மையை நிலைநாட்டும் தெய்வமாகவும் வணங்கப்படறாங்க.

அம்மன் பொதுவாகப் பன்றியின் முகமும், மனித உடலும் கொண்ட தெய்வீக வடிவில் காட்சி அளிப்பாங்க. அதுவும் நம்ம கோவில்ல இருக்கிற அம்மன் சிலையை நாளெல்லாம் பார்த்திட்டே இருக்கலாம் .

அன்பும், ஆற்றலும், அச்சமற்ற பாதுகாப்பும் ஒன்றிணைந்த சக்தியின் வடிவமாக விளங்கும் வராஹி அம்மன், தன்னை முழு நம்பிக்கையுடன் சரணடைபவர்களின் வாழ்க்கையில் தடைகளை அகற்றி நல்ல வழியைக் காட்டுவாங்கன்னு சொல்லுவாங்க”

என்று சுருக்கமாகவும் அழகாகவும் விளக்கம் அளித்தார் மணிமேகலை. பிள்ளைகளும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டார்கள்.

உற்சாகமாகவே திருமணத்திற்கு புறப்பட்டு சென்றனர் மூவரும். திருமணத்தன்று முன்தினம் தான் அங்கே சென்றார்கள்.

ராமும் அன்று காலையில் தான் வந்து இருந்தார். பிள்ளைகளை ஆசையாக கட்டி தழுவிக்கொண்டார். கண்கள் குளமானது அவருக்கு. ஆனால் பிள்ளைகள் திடமாகவே இருந்தார்கள். ஒரு வருடம் முன்பு விட்டு சென்ற குழந்தைகள்தானா இது என்று இருந்தது ராமிற்கு. மனதளவில் பல ஆண்டுகள் பெரியவர்களாய் வளர்ந்திருந்தார்கள்.

தங்கையின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். வார்த்தைகள் எதுவுமில்லை. ஆனால் அவர் கைகளின் இறுக்கமே பல செய்திகளை சொன்னது. ராமின் கண்ணீர் துளிகள் மணிமேகலையின் கையில் பட்டு தெறித்தது.

மணிமேகலை அவரது மற்றொரு கையால் ராமின் கைகளை மெல்ல தட்டி கொடுத்தார், வார்த்தைகள் இன்றி அந்த ஒரு செய்கையாலே ஆறுதல் கூறினார் பதிலுக்கு.

சடகோபனும் சுந்தராஜனும் சரிக்கு சரி நின்றனர். இருவரும் என்ன கலாட்டா செய்வார்களோ என்று ஹரிக்கும் சாம்பவிக்கும் தான் பக் பக் என்றே இருந்தது.

 சாம்பவி மிகவும் நல்ல பெண்ணாக தான் இருந்தாள். மணிமேகலையிடம் அவளாகவே வந்து பேசினாள். சம்பாவியுடன் அவள் அம்மாவும் உடன் வந்திருந்தார்.

“என் அப்பாவும் உங்க தம்பியும் சேர்ந்து பேசி தான் உங்களை இங்க இருந்து அனுப்பி இருக்காங்க. இந்த அம்மன் சத்தியமா எனக்கு தெரியாது அண்ணி” என்றாள் கண்கள் கலங்க.

“யாராலயும் இங்கே எதுவும் நடக்கிறது இல்ல சாம்பவி.. கல்யாண நாள் அதுவுமா எதுக்கு கண் கலங்குறீங்க? எனக்கு மனசுல எந்த வருத்தமும் இல்லை” என்றார் மணிமேகலை சிரித்த முகமாகவே.

“நீங்க திரும்ப நம்ப வீட்டுக்கே வந்துடுங்க அண்ணி. அப்ப தான் என் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்”

“அய்யயோ.. உன் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னு இத்தனை வருஷம் கழிச்சு நிம்மதியா இருக்கிற என் பொண்ணு நிம்மதிய அழிச்சிடாத ம்மா மருமகளே..” என்று அங்கு வந்தார் சுந்தர்ராஜன்.

அவள் தவறு செய்த சிறுமியை போல விழிக்கவும்,

“நீ இப்படி சொன்னதே என் மனசுக்கு நிறைவா இருக்கு. ஆனா இப்படி அப்பாவியா இருந்தா உன் புருஷன் உன்னை முழுங்கி ஏப்பம் விட்டுடுவான்.. கொஞ்சம் சூதனமா பிழைக்கிற வழியை பாரு” என்று மருமகளுக்கு அட்வைஸ் செய்தார் சுந்தர்ராஜன்.

எத்தனை பேருக்கு இப்படி மருமகளுக்கு அட்வைஸ் செய்ய மனசு வரும் என்று பிரமிப்பாக அவரையே பார்த்து நின்றார் சாம்பவியின் அம்மா ராஜம். அப்பொழுது தான் வந்த பரிமளா ராஜத்தின் பார்வையை பார்த்து தலையில் அடித்துக்கொண்டார்.

மகாலட்சமியிடமும் ராம் அவராக சென்று மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகிவிட்டார். இப்படி பல வருடங்கள் கழித்து அனைவரும் அவர் அவர் செய்த தவறுகளை புரிந்து ஏதோ ஒரு வகையில் சமாதானமும் ஆனார்கள். ஹரியின் திருமணத்தோட சேர்ந்து உறவுகளும் அன்று இனைந்தார்கள்.

சுந்தர்ராஜன், அம்மா தாயே வராஹி.. இனிமேல் இந்த குடும்பத்தை நீ தான் ம்மா இதே மாதிரி ஒத்துமையா வச்சுக்கணும். மணிமேகலை வாழ்க்கைக்கும் ஒரு வழி காட்டிக்கொடு ம்மா.. என்று மனமுருக அந்த தாயை வேண்டி நின்றார்.

கருணையே வடிவான அந்த அம்மன் அன்று நீல நிற பட்டுடுத்தி திருமணத்திற்காக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். பார்த்திருந்தவர் அனைவருமே இந்த அலங்காரத்துல அம்மனை பார்த்திட்டே இருக்கலாம் போல என்று கூறினார்கள்.

வல்லபன் தாத்தாவின் அருகில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்பொழுது அங்கே நீல கலர் பட்டுப்புடவையில் வளம் வந்த மணிமேகலையை பார்த்து வல்லபன் தன் தாத்தாவிடம், “தாத்தா நம்ம அத்தையும் இந்த சாமி மாதிரி தானே இருக்காங்க. அப்புறம் ஏன் எல்லாரும் சாமியை மட்டும் அழகா இருக்கிறதாகவும் அத்தையை வித்யாசமா இருக்கிறதாகவும் சொல்றாங்க”

அன்று வரை ‘யாரு மாதிரி நமக்கு பொண்ணு பொறந்திருக்கா?’ என்று பல நாள் பரிமளாவும் சுந்தர்ராஜனும் பேசி வருத்தப்பட்டது உண்டு. நம்ம குடும்பத்துலயே இப்படி யாருமே இல்லையே என்று.

பேரனின் வார்த்தை அவரை ஸ்தம்பிக்க செய்துவிட்டது..

 என் மகள் எங்கள் குலதெய்வத்தின் வடிவமா? வராஹி அம்மனின் அருட்ப்ரசாதமா?

அம்மா தாயே வராஹி.. என்று கண்களில் இருந்து நீர் கரகரவென இறங்க இருகரம் கூப்பி அம்மனை வணங்கி தன்னிலைமறந்து நின்றுவிட்டார் சுந்தர்ராஜன்

—————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!