Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அகம் கொய்த அனலி -08

    இலக்கியா இந்த திடீர் திருப்பத்தை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

    பெருமாளோடு கலைச்செல்வன் வந்ததும் தன்னை தனியே அழைத்துப் பேசவும் தன்னையறியாமல் திருமணத்திற்கு அவன் பேச்சிற்கு இணங்க ஒப்புதல் கொடுத்ததும் எப்படி என்று அவளால் இன்னுமே நம்ப இயலவில்லை.



Advertisement

    இதோ இப்போது அவனறையில் அவனின் மனைவியாக அமர்ந்திருக்க சந்தியாவின் நினைவு தன்னை மீறி எழுந்ததில் “சாண்டி நான் என்ன பண்ணி இருக்கேன்”என்று வாய் விட்டே சொல்லி விட்டாள்.

Advertisement

Advertisement

    நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவள்”ஷிட் எல்லாருடைய நம்பிக்கைக்கும் துரோகம் பண்ணி இருக்கேன்”என்று புலம்ப கதவுத் திறக்கும் சத்தம் கேட்டது. கலைச்செல்வன் தான் உள்ளே வந்தான். அதுவரைக்கும் அவள் கட்டிக் காத்திருந்த பொறுமை எல்லாம் நொடியில் பறந்து விட்டது.

Advertisement

    “ஆர் யூ அவுட் ஆஃப் மைன்ட் செல்வா. நீ என்ன செஞ்சிருக்கத் தெரியுமா…?”தன் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிறை தூக்கி காண்பித்தபடி அவள் கேட்க

“தாலி கட்டியிருக்கேன். இது தெரியாம இருக்க நான் என்ன சின்னத்தம்பி பிரபுவா?” என்று நக்கலாய் அவன் கேட்க

“திஸ் இஸ் க்ரைம். என் அனுமதி இல்லாம தாலி கட்டினது தப்பு.”அனலாய் தகித்தவளை ஆழ்ந்து பார்த்தவன்

“அனுமதி இல்லாமல் கட்டினேனா?”என்றான் புருவமுயர்த்தி

“எல்லாரும் சேர்ந்து என்னை குழப்பி ரஷ் பண்ணிட்டீங்க” என்றாள் மீண்டும் குற்றம்சாட்டி.

“இலா… சண்டை போடுற மனநிலையில நான் சுத்தமா இல்லை. தயவு செஞ்சு லைட் ஆஃப் பண்ணிட்டு வா” என்றான்.

“எங்கே வர்றது?” என்று விழி விரித்து பார்த்தவளை சீண்டிப் பார்க்கும் எண்ணம் கலைச்செல்வனுக்கு.

“கலைஇலக்கிய விழாவுக்குத்தான்”என்றவனை மூக்கு நுனி சிவக்க முறைத்தவள்,” ஹோ டு ஹெல் மேன்” என்று கத்தி விட்டு விளக்கை அணைத்தாள்.

“அதுக்குத்தான் காலையிலேயே என்ட்ரி டிக்கெட் வாங்கிட்டேனே?!” என்று அதற்கும் உல்லாசமாய் கிண்டலடித்தான். இருந்த மனநிலையில் அவன் கிண்டல் செய்வது கூட தன்னை இகழ்ச்சியாக பார்த்து பேசுவது போலவே அவளுக்குத் தோன்ற சுள்ளென ஏறிய கோபத்தில் சுயகழிவிரக்கமும் சேர்ந்து கொள்ள கத்தி விட்டாள்.

“ஓஓஓ… அப்போ நான் ராசியில்லாதவ ‘ன்னு தெரியுது தானே ?”என்று குரல் கரகரக்க கேட்டவளின் பரிமாணம் அவனை திகைக்க வைத்தது.

“இலா…?!”

“ப்ளீஸ்… இதுவரை நான் கலங்கியது என்னோட நெருக்கமானவங்களின் மரணத்துக்கு தான். அழ வச்சுடாதீங்க” என்று கீழேயே படுத்து விட்டாள்.

கலைச்செல்வனுக்கு அவளைக் கண்டு பரிதாபமாக தான் இருந்தது. ஆனால் பரிதாபம் காட்டும் இடத்தில் காலையில் அவன் சுத்தமாக இல்லை.

    காலையில் திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையை பார்த்து விட்டு வருகிறேன் என்றவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. கிட்டத்தட்ட மாப்பிள்ளை என்று அறிமுகம் செய்து கொண்டவனுக்கு ஐம்பது வயதிருக்கும்.

    விறுவிறுவென வெளியே வந்தவன் இலக்கியாவின் பெரியப்பாவை பிடிபிடியென பிடித்து விட்டான்.

    ‘இவனா மாப்பிள்ளை’என வாய்விட்டே கேட்க

    “ஏன் கலை தம்பி என்னாச்சு”என்று புரியாமல் வினவினார் இலக்கியாவின் பெரியப்பா.

    “என்னாச்சா…. மனசாட்சி இருக்கா ஒங்களுக்கு ஒங்க மவளா இருந்தா இப்படி கெழவனுக்கு கெட்டி வைப்பீகளா”என்று வினவ

    ” கெழவனா….தம்பி”என்று அதிர்ந்தவர் “மாப்பிள்ளை க்கு ரெண்டாங் கல்யாணம் னு ஆத்தா சொல்லுச்சு தம்பி ஆனா “என்று தயங்கி “நீங்க வேற ஆரையும் பாத்து இருப்பீங்க”என்று சொல்லும் போதே கலை பார்த்து விட்டு வந்த நபர் கழுத்தில் மாலை போட்டபடி வெளியே வர பெருமாளே அதிர்ந்து நின்று விட்டார்.

    “இவனா மாப்ள”என்று அவரும் கேட்க

    “அப்போ ஒங்களுக்கும் விஷயம் தெரியாதா”என்றான் கோபத்துடன்.

    “எங்கிட்ட வேற ஃபோட்டோ ல்ல காட்டினாக”என்று பரிதாபமாக கூறியவர் “எம்பொண்ணு வாழ்க்கை”என்று நெஞ்சில் கைவைத்து விட்டார். அதற்குள் கலையின் தந்தை கணேசன் வந்து விடவே அவருக்குமே விஷயத்தை கேட்டு அதிர்ச்சி தான்.

    “ஆளை விசாரிக்க மாட்டியளா”என்று கடிந்து கொண்டவர் காத்தமுத்துவை அழைத்து பின் நடந்தது எல்லாம் அதிரடி தான். சத்தம் இல்லாமல் இங்கே காரியத்தை சாதிக்க பெருமாளோ இந்த திருமணம் நின்று விட்டால் இலக்கியா நிச்சயம் இனி ஒரு முறை திருமணம் வரை வர மாட்டாளே என்று நினைக்க நினைக்க வேதனை பெருகியது அவருக்கு.

    எல்லாம் யோசிக்க யோசிக்க நேரம் கடந்ததே தவிர வழி கிடைத்தபாடில்லை.

    “ஏ பெருமாள் வருத்தம் அதெல்லாம் காத்தமுத்து அந்த பயல மணவறைக்கு வர விட மாட்டான் பயப்படாத”என்று கணேசன் ஆறுதல் கூற

    “அவன் வர மாட்டான் சரி மாமா. எம்மவ இனி மணவறைக்கு வருவாளானு தெரியலியே இதுக்கே வம்பாடு பட்டுக்கிட்டு கெடந்தோம். இப்ப வேற மாப்புளைக்கும் நான் எங்கே போவேன். இதான் சாக்குனு ஊர விட்டு போயிட்டா ஒத்தையில எம்மவ நின்றும் மாமா. அத்த நெனைச்சா தான் நெஞ்சு வேவுது எனக்கு”என்றார் ஆற்றாமையாக.

    அதற்குள் காத்தமுத்து அங்கே வந்து விட்டான்.

    “பெரியப்போய் அந்தாளை கெட்டி வச்சிட்டேம். நம்ம பயலுவளை வரச் சொல்லி இருக்கேம் சத்தங்காட்டாம தூக்கிட்டு போயிருவானுவ. மாப்ள ஓடிட்டான்னு கலியாணத்த நிறுத்திபுடலாம்னு அண்ணே சொல்லுச்சு”என்றான் அவன்.

    கணேசன் பெருமாள் பேசியதை அவனிடம் பகிர காத்தமுத்து சில நிமிடங்கள் யோசித்தவன் “பெரியப்பா எனக்கு ஒரு ரோசனை”என்று தனது எண்ணத்தை வெளிக்காட்ட

    “இவன் ஒத்துக்குவானாடா”கணேசனுக்கு அந்த கவலை.

    “முயற்சி பண்ணலாம் பெரியப்பா”என்றவன் நிற்கவில்லை.

    கலையிடம் நேரே சென்றவன் பெருமாள் கூறியதை சொல்லி வருத்தமாக பேசி “ஏற்கனவே அந்தக்கா கலியாணம் வேணாமின்னு சொல்லிட்டு கெடக்கு இதுல மாப்ள பாத்த லட்சணம் இப்புடி. பாவம் சீக்காளிபையனை வச்சுக்கிட்டு சொத்தை காபந்து பண்ணி என்னனு இருக்குமோ”என்றான் காத்தமுத்து.

    “சொன்னாலும் சொல்லும்டா அந்த புள்ள‌. இவேன் வேற மொடாகுணிகாரன் போலருக்கு. கூட வந்தவன் எல்லாம் மட்டையாயி கெடக்கறதை பாரு. நல்லா மாப்பிள்ளை பாத்தானுவ. நல்ல அண்ணங்காரன்”என்று சலித்தான் கலை.

    “எண்ணே நான் ஒரு யோசனை சொல்லுவேன்”என்று கன்னத்தை பிடித்தபடி காத்தமுத்து பேச

    “என்னடே”என்றதில் இன்னும் தயங்கி தயங்கி ஒருவாறாக விஷயத்தை கூறிவிட அவன் நினைத்தது போலவே கலைச்செல்வன் கையை ஓங்கி இருந்தான்.

    “தம்பி தம்பி”என்று பெருமாள் பதறிக் கொண்டு வந்தவர் இலக்கியா எடுக்கும் முடிவைப் பற்றி தெளிவாக கூறி செந்தில் இலக்கியாவின் மகனை ஏதேனும் செய்து விட்டால் அவள் தாங்க மாட்டாள் என்று அவனிடம் பேசி புரிய வைத்து கெஞ்ச கலை தலையைப் பிடித்தபடி அங்குமிங்கும் நடந்தான். செந்தில் மீதும் செல்வத்தின் மீதும் அத்தனை ஆத்திரம் பொங்கி வந்தது அவனுக்கு.

    எப்பேற்பட்ட பெண் அவள் அவளுக்கு போய் இப்படி அநீதி இழைக்கிறார்களே என்று நினைத்தபடி அவன் நிற்க

    “ஐயா யோசிக்க நேரம் இது இல்லய்யா இப்பவே வெளியே முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மாப்ளைய தேடி அவேன் அக்கா வந்திடுச்சு சீக்கிரம் முடிவு சொல்லு கலை”என்று கணேசன் அவசரப்படுத்த இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தவன் சந்தியாவை எண்ணிக் கொண்டான்.

    நிச்சயம் புரிந்தது இலக்கியா தனியாக நின்று விடுவாள் என்று. ஆனால் அவள் தன்னையும் ஏற்பாளா என்று தெரியாதே… திருமணம் பிடிக்காத பெண்ணோடு எப்படி வாழ…ஒருத்தியை இழந்தது போதாதா என்று அவன் தவிக்க

    “யோசிக்காதண்ணே அவக வாழ்க்கை இவகளோட சீப்பட்டு நிக்கும். நீயி அவகளை செரிகட்டிருவண்ணே. ஒத்துக்கண்ணே”என்று காத்தமுத்து அவனைக் கரைத்துக் கொண்டு நிற்க கலை யோசித்தவன் என்ன நினைத்தானோ “வாங்க போவோம்”என்று இலக்கியாவிடம் பேச தான் வந்தான்.

    வரும் போதே தனம் வேறு உன் மகனை பார்க்கவும் சொத்துக்களை பராமரித்து உன் லட்சியத்தை அடையவும் உதவ தானே வேண்டும் என் மகனை விட்டு பேசச் சொல்கிறேன் என்று கூற அதில் காதில் வாங்கியவன் சட்டென்று உள்ளே நுழையவும் இலக்கியா அவனைக் கேள்வியாக பார்க்கவும் திருமணத்திற்கு கேட்டு மாப்பிள்ளை சரி இல்லை. இவர்களை இப்படியே விட்டால் உனக்கு ஆகாத செயல்களை மீண்டும் மீண்டும் செய்வார்கள் என்று சொல்லி அவளை குழப்பமான மனநிலையில் இருக்கும் போதே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்திருந்தான்.

    இலக்கியாவிற்கோ இனி வீட்டார் தொல்லை இல்லை. கலை தானே பேசிப் புரிய வைத்து தனித்து சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்க தனம் திருமணம் முடிந்த கையோடு நடத்திய சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் அவளை அச்சுறுத்த கலை தன்னிடம் இயல்பான குடும்ப வாழ்வை எதிர்பார்ப்பாரோ அப்படி எதிர்பார்த்தால் என்ன செய்ய என்று தான் இப்போது சண்டை இட்டு விட்டு படுத்தாள்.

    கலைக்கு அந்த எண்ணம் எல்லாம் இல்லை. தனக்கு தெரிந்த பெண் தைரியமானவள் நல்ல விஷயத்திற்காக போராடுகிறாள் அவளுக்கு உதவியாக தான் இந்த திருமணம் என்று எண்ணி இருந்தான். இப்போது கூட தன் சம்மதத்தை கேட்காமலேயே இவன் வலுக்கட்டாயமாக தாலி கட்டியது போல பேசவும் தான் சீண்டி இருந்தான். மற்றபடி பெரிதான எண்ணங்கள் எதுவும் இல்லை அவனுக்கு.

    வெளியில் தனத்திற்கு சந்தோஷ மனநிலையில் உறக்கம் வருவேனா என்றிருந்தது.

    “ஏங்க நாளைக்கு முத்து கிட்ட சொல்லி பத்து கெடா புடிக்க சொல்லுங்க. அப்படியே சமையக்காரன் பந்தக்காரன் எல்லாத்தையும் வரச் சொல்லணும் காலையில எம்மவன் எழுந்துக்கும் போதே கலியாண களை வீட்டுல இருக்கணும். “என்று பூரிப்பாய் பேச கணேசன் சிரிப்புடன் “செரித்தா செத்த ஒறங்கி ஏந்திரி. காலையில் நீ கேட்ட அம்புட்டும் வரிசை கட்டி நிக்கும் செரித்தான”என்றார்.

    “இல்லாட்டி அந்த முத்து பயல வெளுத்துப்புட மாட்டேன்”என்று மிதப்பாய் சொல்லி விட்டு படுக்க கணேசன் உறங்கிப் போனார்.

    காலையில் எழுந்து வேக வேகமாக வீட்டை சுத்தம் செய்து பந்தல் கட்ட சமையலுக்கு இடம் ஒதுக்க என்று பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார் தனம்.

    “ஏத்தா…மளியசாமான் லிஸ்ட் எங்க…காசக்குடு சமையக்காரனோட போய் ஒரேட்டு வாங்கியாரேன்”என காத்தமுத்து வந்து நிற்க

    “அட ஆமாடா. செரி நீயி வா. எங்க உன் பொண்டாட்டி எழும்பினாளா இல்லையா. ஒரு ஆளு போடணும் அவளை உசுப்ப”என்று சொல்லிக் கொண்டே பணத்தை எடுத்தார்.

    “அவ எந்திரிச்சிட்டா வாச தெளிச்சுட்டு வாரேமின்னா… நா தான் காலையில சோலிய பாக்கணுமின்னு கெளம்பி ஓடியாந்தேன். காப்பித்தண்ணி குடு பெரியாத்தா நா வரளுது”என்று பின் பக்கம் போய் அமர்ந்து கொண்டான்.

    “கொதிச்சிட்டு இருக்கு கொண்டாரேன். ***** கடையில வாங்குடா அப்பத்தேன் அவன் வண்டி கட்டி அனுப்புவான்”என்று முத்துவிற்கு தேநீரைக் கொடுக்க அவன் வாங்கிக் கொண்டான்.

    இங்கே இலக்கியாவோ காலையில் எழுந்ததுமே தயாராகி வெளியே வந்தவள் நேரே தனத்திடம் சென்று “என் பையனை பார்க்க போறேன். வர நைட் ஆகிடும். கிளம்பறேன்”என்று தகவல் சொல்லி விட்டு அவர் பதில் பேசும் முன்பே கிளம்பி இருந்தாள்.

    தனத்தின் முகம் கோபத்தை தத்தெடுத்தது.

    …. தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!