Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 10

அத்தியாயம் 10

“அத்தை உங்க கிளாஸ்சுக்கு டைம் ஆச்சு.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று குரல் கொடுத்தாள் வராஹி.



Advertisement

“நீ வேற என்னை டென்ஷன் படுத்தாத வரா.. ஹோம் ஒர்க் பண்ண மறந்துட்டேன்.. இன்னும் ரெண்டு சம் போடணும்”

“நீங்களும் அண்ணாவும் ஒரே மாதிரி.. லாஸ்ட் மினிட் வரை ஹோம் ஒர்க் முடிக்காம அப்புறம் லபோ திபோன்னு கத்த வேண்டியது..”

Advertisement

Advertisement

“————-”

“டென்ஷன் ஆகாம போடுங்க அப்ப தான் சரியா வரும். நான் உங்களுக்கு லாகின் பண்ணி வைக்கிறேன்” என்று லாப்டாப்பில் மணிமேகலையின் ஆன்லைன் கிளாஸ்ஸிற்கு அனைத்தையும் தயார் செய்து கொடுத்தாள்.

Advertisement

“அப்பாடா முடிச்சிட்டேன்.. இதை போட்டோ வேற பிடிச்சு அனுப்பனுமே?”

“கொடுங்க, நான் அப்லோட் பண்றேன், நீங்க ஜாயின் பண்ணுங்க” என்று வராஹி தான் அதை போனில் ஸ்கேன் செய்து அப்லோட் செய்து வைத்தாள்.

மணிமேகலை அவசர அவசரமாக லாப்டாப் முன் அமரவும் அன்றைய ஆன்லைன் வகுப்பு தொடங்கவும் சரியாக இருந்தது.

மணிமேகலையின் புக்ஸ் பேனா என்று அனைத்தையும் ஏதுவாக அவருக்கு இடப்பக்கத்தில் வைத்து, அதோடு வாட்டர் பாட்டிலும் வைத்தாள் வராஹி.

பின் சத்தமின்றி அவள் ஒரு பக்கம் அமர்ந்து படிக்க தொடங்கினாள்.

வழக்கம் போல வல்லபன் கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டான். என்னதான் நன்றாக விளையாடினாலும் ஓரளவிற்கு படித்தால் தானே பாஸாவது ஆக முடியும். வராஹி தான் அவனையும் விரட்டி படிக்க வைப்பாள்.

ஆயிற்று ஹரியின் கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. மணிமேகலை என்ன செய்வது என்று யோசிக்கையில் நிவேதா தான் முதலில் பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்குமாறு கூறினார். அவர் தான் தனியாக பரீட்சை எழுதுவதற்கான வழிமுறைகளை எல்லாம் விசாரித்து கூறினார்.

அதற்கு பிறகு ஆன்லைன் வகுப்புகளிலும் சேர்த்துவிட்டிருந்தார். அதற்காக தான் வராஹி அவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறாள்.

காலையில் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி வாலிபால் என்று சொல்லிக்கொடுப்பார் மணிமேகலை. அதன் பிறகு அவர்கள் பள்ளிக்கு சென்றதும் இவர் படிப்பில் கவனம் செலுத்துவார். பின் கொஞ்சம் வீட்டு வேலைகள், கொஞ்சம் தொலைக்காட்சி, கொஞ்சம் சமையல் என்று அவரது பொழுதுகள் செல்லும். இரவு உணவையும் அப்பொழுதே தயார் செய்து வைத்துவிடுவார்.

மாலை பிள்ளைகள் வந்தபிறகு இவருக்கு வகுப்புகள் இருக்கும். அத்தைக்கும் மருமகனுக்கும் விளையாட்டில் அதிக ஆர்வம்.. கொஞ்சம் கண்டிப்பு காட்டாவிட்டால் இருவரும் டிமிக்கி கொடுத்துவிடுகிறார்கள். பொறுப்பான மணிமேகலை காணாமல் போயிருந்தார். இப்பொழுது விளையாட்டுத்தனம் துடுக்குத்தனம் என்று இயல்பான மணிமேகலை மீண்டும் பதின்பருவத்தில் இருந்து வளர்கிறார் என்று சொல்லலாம்.

வராஹிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் கனவு. அவளது கவனம் அதிகம் படிப்பில் தான். குடும்பத்தை தாங்கும் பொறுப்பு தானாக அவளுக்கு வந்தது. பேத்தியை நினைத்து சுந்தர்ராஜனுக்கு அவ்வளவு பெருமை.

மணிமேகலை அடுத்து என்ன என்று இன்னும் யோசிக்கவில்லை, வழக்கம் போல இவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க ஆரம்பித்ததை கிண்டல் செய்தனர் அம்மாவும் தம்பியும். ராமிடம் மட்டும் நல்ல மாற்றம் இருந்தது. தங்கைக்கென லாப்டாப் அவர் தான் வாங்கி கொடுத்திருந்தார். பிள்ளைகளிடம் பேசும்பொழுது தங்கையிடமும் பிரியமாக பேசுகிறார்.

வினோதா தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் மட்டும் அனுப்பி இருந்தார். சிக்கலான பிரசவம். குழந்தையும் ப்ரிமெச்சூர் என்பதால் அவரால் இங்கே பிள்ளைகளிடம் பேச முடியவில்லை. ஒருவித சுழலுக்குள் மாட்டிக்கொண்டார். நிவேதா தான் அவரது நிலைமையை பக்குவமாய் பிள்ளைகளுக்கு விளக்கி கூறினார்.

‘டேக் கேர் ஆப் யூ அன்ட்டு தி பேபி அம்மா. வீ ஆர் பிக் எனாஃப் நவ் அண்ட் வி வில் டேக் கேர் ஆப் அஸ்’ என்று வராஹியும் வல்லவனும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு அதன் பிறகு முற்றும் முழுவதுமாக அம்மாவிடம் இருந்து ஒதுங்கி கொண்டனர்.

 அன்று அம்மாவிற்கு செய்தி அனுப்பிய பின் வராஹி வல்லபனிடமும் மணிமேகலையிடம் ஒன்று கூறினாள்.

“அத்தை, அண்ணா இது நம்ம சேர்ந்து உருவாக்குன குடும்பம். மூனு பேர் மட்டும் உள்ள சின்ன குடும்பம். நாம மூனு பேரும் எந்த சூழ்நிலையிலும் நம்ம குடும்பத்தை மட்டும் உடையாம பார்த்துக்கணும். இதில இன்னும் ஆட்கள் சேரலாம். ஆனா யாரும் இதுல இருந்து விலக கூடாது.. அன்பால உருவான இந்த குடும்பத்தை இப்படியே பத்திரமா நாம வைச்சிக்கணும்” என்று..

இருவருமே வராஹி சொன்னதை ஆமோதித்தனர். சுந்தர்ராஜன் இங்கே ஒருவாரம் அங்கே ஒருவாரம் என்று அலைந்து கொண்டிருந்தார், பரிமளாவால் அவரில்லாமல் இருக்க முடியவில்லை. அதை புரிந்து கொண்ட இவர்கள் தான் ‘அடிக்கடி நீங்க வரணும்னு அவசியம் இல்லை. தேவைன்னா சொல்றோம்’ என்று அவரை ஊரிலே இருக்க சொல்லிவிட்டார்கள். ஆனாலும் மாதம் ஒரு முறை அவர் வந்துவிடுவார்.

மிலிட்டரி கதை தெரிந்து வராஹி வீர்யாவுடன் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தாள். பொய் சொல்வது அவளுக்கு எப்பொழுதுமே பிடிக்காத ஒன்று.

சம்பவ்வால் தான் விஷயம் வெளியே தெரிந்தது என்று வீர்யா சம்பவ்வுடன் பேசாமல் சுற்றி கொண்டிருந்தாள்.

இவர்கள் மூவரையும் சமாதானம் செய்து சேர்த்துவைப்பதற்குள் போதும்போதும் என்றானது நிவேதாவுக்கும் மணிமேகலைக்கும்.

அனைவரும் பிரீயாக இருந்த ஒரு சனிக்கிழமை, எல்லோரும் சேர்ந்து பீச் சென்று வரலாம் என்று புறப்பட்டனர். பிள்ளைகள் மணிமேகலை நிவேதா நிரஞ்சன் என்று அனைவரும் சேர்ந்து சென்றார்கள்.

மணிமேகலை இப்படி ஜாலியாக பீச்சிற்கு எல்லாம் வந்ததே இல்லை. பிள்ளைகளுடன் அவரும் பிள்ளையாகவே மாறி இருந்தார். நிரஞ்சனும் நிவேதாவும் அவரை தங்கள் சகோதரியாகவே ஏற்றுக்கொண்டனர்.

பீச்சில் நன்றாக விளையாடிவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார்கள்.

மணிமேகலை அப்பாவிற்கு அழைத்து பேசினார். அம்மாவிடமும் பீச்சிற்கு சென்று வந்ததை எல்லாம் கூறினார். மகளின் குரலில் இருந்த உற்சாகம் பெற்றோர்களுக்கு நிம்மதியை கொடுத்தது.

——————

இவர்கள் குடியிருக்கும் வீட்டின் மாடி போர்ஷன் போன வாரம் தான் காலி ஆகி இருந்தது. அன்று புதிதாக ஒரு குடும்பம் அங்கே குடிவருவதாக ஹவுஸ் ஓனர் கூறி இருந்தார்.

அம்மாவும் பையனும் என்று இருவர் கொண்ட மிக சிறிய குடும்பம். காலையில் அந்த அம்மா கையில் ஒரு ட்ரேயில் சர்க்கரை பொங்கல் நிரம்பிய கிண்ணங்களுடன் வந்து இவர்கள் வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்.

வராஹி தான் சென்று கதவை திறந்தாள்.

“நாங்க மாடிக்கு குடி வந்திருக்கோம் பாப்பா. வீட்ல அம்மா இல்லையா?” என்றார் அவர் இன்முகத்துடன்.

“உள்ள வாங்க ஆன்ட்..பாட்..ஆன்ட் ..” என்று தடுமாறினாள். அவரை பாட்டி என்று அழைப்பதா ஆன்ட்டி என்று அழைப்பதா? என்று தெரியாமல்.

“என் பெயர் பத்மப்ரியா.. ஆன்ட்டியும் வேண்டாம் பாட்டியும் வேண்டாம்.. பத்துன்னு கூப்பிடேன்..” என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

வராஹி முகத்திலும் சிரிப்பு வந்தது.

“யார் வரா?” என்று அடுப்படியில் இருந்தே குரல் கொடுத்தார் மணிமேகலை.

“உங்க அம்மாவா? என்ன பண்ணிட்டு இருக்காங்க?”

“அம்மா இல்ல, எங்க அத்தை” என்றாள் வராஹி.

“அத்தை நேத்து புதுசா ஒரு ரெசிபி பார்த்தாங்க.. வாயில் போட்டதும் கல்கண்டா கரையும்னு அதுல சொல்லி இருந்தாங்க.. அதை செஞ்சு முடிச்சிட்டாங்க.. இப்ப வாயில் எப்படி போடறதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்காங்க” என்றான் வல்லபன்.

“ஏன்ப்பா.. செஞ்சாச்சுன்னா டக்குன்னு கையில எடுத்து டப்புன்னு வாயில போட வேண்டியது தானே?” என்றார் பத்மப்ரியா ஆர்வமாக.

“யார்கிட்ட வல்லபா என்ன பத்தி சொல்லிட்டு இருக்க” என்று ஒரு கையில் சட்டி ஒரு கையில் கரண்டி.. இரண்டுக்கும் இடையில் இழுபட்டுக்கொண்டிருக்கும் அல்வா என்று வெளியே வந்தார் மணிமேகலை.

“ஆஹ்ஹா.. பாருங்க..அது கரண்டியோடவும் வரமாட்டேங்குது.. சட்டியோடும் போக மாட்டேங்குது.. இது வாய்க்குள்ள எப்படி அனுப்ப?” என்றான் வல்லபன் சிரித்துக்கொண்டே.

புதிதாக ஒருவரை பார்த்து அசடு வழிய நின்றார் மணிமேகலை.

“நீ சொன்னதுக்கு அர்த்தம் இப்ப புரியுது” என்று கலகலவென சிரிக்க தொடங்கினார் பத்மப்ரியா.

“இருங்க நான் வர்றேன்” என்று மணிமேகலை வேகமாக சென்று அடுப்படியில் கையில் உள்ளதை வைத்துவிட்டு வெளிய வந்தார்.

“நாங்க புதுசா மாடிக்கு குடி வந்திருக்கோம். இந்தாம்மா ப்ரசாதம் இப்ப தான் பூஜை செஞ்சேன்..” என்று கைகளில் இருந்த ட்ரேயை மணிமேகலையிடம் கொடுத்தார்,

“என் பெயர் பத்மப்ரியா.. நானும் என் பையனும் தான் மாடிக்கு குடி வந்திருக்கோம்.”

“ஓ சந்தோசம் மா.. உட்காருங்க”

“இருக்கட்டும், வந்ததும் பூஜை மட்டும் தான் முடிச்சிருக்கேன். இனிமே தான் சாமான் எல்லாம் எடுத்து வைக்கணும். இன்னொரு நாள் சாவகாசமா வரேன்”

“ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்கம்மா”

“உங்க பேர் எல்லாம் சொல்லவே இல்ல, அப்புறம் அவசரத்துக்கு மேலே இருந்து உங்களை எப்படி கூப்பிடறது?

“என் பெயர் மணிமேகலை. இவ வராஹி, இவன் வல்லபன்”

“அடடா! உங்க அப்பா அம்மா ரெண்டு பேர்ல யாரு பொன்னியின் செல்வன் ஃபேன்?”

மணிமேகலை அவரின் கேள்வி புரியாமே ங்கே என்று விழித்தார்.

“இல்ல ம்மா, அதுல வர மணிமேகலை எனக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம். அதை பொருத்தமா உனக்கு வச்சிருக்காங்களே அதை சொன்னேன்”

“நான் அந்த புக் படிச்சது இல்லையே..”

“நல்ல பொண்ணு போ, என்கிட்ட அந்தக்காலத்து காப்பியே இருக்கு.. நாளைக்கு கொண்டு வந்து தரேன்.படிச்சு பாரு.”

“சரிம்மா”

“அம்மா அம்மா..” மாடியில் இருந்து அவர் மகன் போல.

“நாம நாளைக்கு ப்ரியா மீட் பண்ணலாம் பாய்” என்று கிளம்பி விட்டார்.

“ஏன் மா போனா போன இடம் உனக்கு. இன்னிக்கு மட்டும் தான் எனக்கு நேரம் இருக்கும். எதை எங்கே வைக்க வேண்டும் னு சொன்னா தானே வேலை முடியும்” என்று அந்த பையன் கூறியது கீழே வரை கேட்டது.

“பையன் சொன்னாங்க ஆனால் பையன் என்ன ஸைஸ்ன்னு சொல்லாம போயிட்டாங்களே?” என்றான் வல்லபன்.

“அவர் அவங்க அம்மாவை மிரட்றதுல இருந்து தெரியல, கண்டிப்பா உன் கூட கிரிக்கெட் விளையாடற சைஸ் இல்ல” என்றாள் வராஹி.

“ஏன்டா புதுசா இங்க வந்திருக்கோம். அக்கம் பக்கம் யார் என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று கடுகடுத்தார் பத்மப்ரியா தன் ஆறடி உயர மகனிடம்.

“எல்லாம் வந்த அன்னிக்கேவா ஆரம்பிக்கணும்?”

இருவரும் அவர்கள் வீட்டின் முன்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

எதிர் வீட்டில் இருந்து வீர்யா இவர்களை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

“இருடா.. பண்ண சக்கரை பொங்கலை எல்லாம் நாம ரெண்டு பேரும் வச்சு வச்சு சாப்பிட்டாலும் மூனு நாளைக்கு வரும். அந்த எதிர்த்த வீட்டு பாப்பா நம்மளையே பார்க்குது. நான் அவங்க வீட்டுக்கும் போய் கொடுத்திட்டு வந்துடறேன்” என்றார் பரபரப்பாக.

“எதுக்கு அவ்வளவு சக்கரை பொங்கல் செய்யணும், அதை வீடு வீடா போய் கொடுக்கணும்?”

அவருக்கு பதில் சொல்ல எங்கே அவர் அங்கே நின்றுகொண்டிருந்தார். எதிர்த்த வீட்டிற்கு கிண்ணங்களில் சக்கரை பொங்கலை நிரப்பி கொண்டிருந்தார்.

“அந்த பொண்ணு ரொம்ப நேரமா இங்கே பார்த்துட்டு இருக்குன்னு சொல்றீங்களே, அது ரொம்ப நேரமா முறைச்சு முறைச்சு பார்க்குது”

“அப்படி தான் விவரமா இருக்கணும். காலம் கெட்டு கிடக்கு. அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னு சூதனமா இருக்கணும் இல்ல டா”

“நான் சொல்றதை கேட்கவா போறீங்க.. இப்ப நான் முதல்ல எதை எடுத்து வைக்க? சொல்லிட்டு போங்க..”

“பிரிட்ஜ் , டீவி ரெண்டையும் கனெக்ட் பண்ணிடு.. முடிஞ்சா வாஷிங் மெஷினையும் கனெக்ட் பண்ணிடு, அதுக்குள்ள நான் வந்துடறேன்” என்று கிளம்பிவிட்டார்.

‘ஹாய்’ என்று வீர்யாவிற்கு ஹாய் சொல்லிக்கொண்டே அவர்கள் வீட்டிற்கு சென்றார். பின் அங்கேயும் சுருக்கமாக அறிமுக படலத்தை ஆரம்பித்தார்.

“ஆமா உங்க பையன் என்ன செய்றாங்க? விறைப்பாவே இருக்கிற மாதிரி இருக்கு?” என்றாள் வீர்யா அவரிடம்.

“கரெக்டா சொன்ன பாப்பா, அவன் எப்பவுமே ஒரு பாட்டில் கஞ்சியை குடிச்ச மாதிரி விறைப்பா தான் சுத்திட்டு இருப்பான். மிலிட்டரி மேன் ஆச்சே”

“மிலிட்டரி யா?” என்று ஷாக் ஆகி கேட்டாள்.

நிவேதா நிரஞ்சன் ரகுநந்தன் மூவரும் கிளிக் என்று சிரித்து விட்டனர்.

“மிலிட்டரில மேஜர்.. ஆனா இப்ப ரிட்டயர்மென்ட் வாங்கிட்டு வந்திட்டான். இப்ப வேற ஜாப் தேடிட்டு இருக்கான்.”

“ஓ..”

மகன் அங்கே இருந்து இடுப்பில் கைவைத்து இவரை பார்த்து முறைப்பதை பார்த்து, “நான் நாளைக்கு ப்ரீயா வரேன் என்று விடைபெற்று அங்கு இருந்து கிளம்பிவிட்டார்.

“என்னடா நான் உனக்கு அம்மா.. அந்த மரியாதை இருக்கா.. சும்மா முறைச்சிட்டு நிக்குற? பார்க்குறவங்க என்னை பார்த்து என்ன நினைப்பாங்க?”

“மணி என்ன ஆச்சு, சாப்பிட்டு மாத்திரை போட வேண்டாமா ம்மா?”

“சரி சரி… வா” என்று அவனுடன் உள்ளே சென்று அம்மா மகன் இருவரும் சர்க்கரை பொங்கலையே சாப்பிட்டனர்.

“வந்தியதேவா, கீழ் வீட்டு பொண்ணு பேரு மணிமேகலை டா..”

“ம்ம் “

“இங்க எல்லாரும் நல்ல மனுஷங்களா இருப்பாங்க போல..பரவாயில்லை”

“உங்களுக்கு பிடிச்சா சரி தான் ம்மா. இந்தாங்க, மாத்திரை போட்டுட்டு கொஞ்ச நேரம் படுங்க,” என்று மாத்திரைகளை எடுத்து கொடுத்தார் வந்தியத்தேவன்.

பத்மப்ரியா, புத்தகப் பிரியர். அதிலும் பொன்னியின் செல்வன் அவருக்கு மிகவும் பிடித்த நாவல். எத்தனை முறை படித்திருகிக்கிறார் என்று கணக்கே இல்லை. அதன் விளைவே மகனுக்கு வந்தியத்தேவன் என்று பெயர் சூட்டி இருந்தார்.

அவருக்கு கேன்சர் செகண்ட் ஸ்டேஜ். அதற்கான வைத்தியம் செய்வதற்காக தான் சென்னை வந்திருந்தார்கள். அம்மாவை பார்த்துக்கொள்ளவே தனது வேலையே விட்டுவிட்டு அம்மாவுடன் வந்திருந்தார் வந்தியத்தேவன். நாற்பது வயது.

மிகவும் விரும்பி தான் மிலிட்டிரியில் சேர்ந்திருந்தார். நாட்டுக்காக பணி செய்வதில் ஒரு கர்வம் அவருக்கு எப்பொழுதும் இருக்கும். வேலை தான் முக்கியம் என்று இது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

போன வருடம் எதிர் பாராமல் நடந்த அப்பாவின் மரணம் அவரை மிகவும் பாதித்தது. அப்பாவுடன் கடைசி நேரத்தில் இருக்க முடியாமல் போனது அவர் மனதில் நீங்காத ரணமாகி போனது.

அதன் பிறகு அம்மாவின் உடல் நிலை பற்றி அறியவும், நாட்டுக்காக உழைத்தது போதும் இனி வீட்டுக்காக வாழ்வோம் என்று கிளம்பி வந்துவிட்டார்.

ஒற்றை பிள்ளயாக மிகவும் செல்லமாக வளர்த்தார்கள் வந்தியத்தேவனை. ‘வந்தியத்தேவன் மாதிரி கலகப்பாக இருப்பான் என்று ஆசையாக பெயர் வைச்சா இவன் எண்ணி எண்ணி பேசுறானே’ என்று புலம்புவார் கணவரிடம். ‘நீ பெயர் வச்சதுக்கு தான் சுத்த வீரனா இருக்கான் பாரு’ என்று சிரிப்பார் அவர்.

நோய் வந்துவிட்டது.. அதற்காக சோர்ந்து போகாமலே, நானா அதுவா பார்த்திடலாம் என்று திடமாக நோயுடன் போராட தயாராக மகனுடன் சென்னைக்கு குடி வந்திருக்கிறார் பத்மப்ரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!