இறுக்கம் கூடியதே தவிர தளரவே இல்லை. அவனது சூடான காற்று கழுத்தடியையும் தாண்டி சென்று அவளை சோதித்து கொண்டிருந்தது.
கிரிக்கோ கனவெல்லாம் நினைத்து நினைத்து கொண்ட ஏக்கங்கள் யாவும் கை கால் முளைத்து அவன் கைக்குள் இருப்பது போல் ஓர் மாயை அவனை ஆட்டிபடைத்தது. ஓர் அணைப்பிற்கே அவன் பாடு திண்டாட்டமானது.
இங்கேயே இப்போதே அவளை கைகளில் அள்ளிக்கொள்ளும் ஆவல்? ‘என்ன? மொட்டை மாடியிலா? அது அநாகரீகம்’ ஓங்கி அவன் தலையில் கொட்டு வைத்தது அவன் மனசாட்சி.
Advertisement
அப்படியானால் இப்போது முடியாதா?ஏற்கனவே அவள் நெஞ்சிற்குள் புதைந்திருந்தவனுக்கு ‘முடியாதே’ என நிதர்சனத்தை உணர்த்தியது. இன்னும் புதைத்து கொண்டான் தன் முகத்தை.
இவளோ அவனது நெருக்கத்தையும் இறுக்கத்தையும் உணர்ந்தாளே தவிர, அவனை அணைக்கவும் இல்லை விலக்கவும் இல்லை. அவன் கைகளுக்குள்ளே அடங்கி கிடந்தாள். படபடவென துடிக்கவேண்டிய இதயம் நின்று நிதானமாய் துடித்து கொண்டிருக்க, வார்த்தைகளும் மிக பொறுமையாய் வந்தது. “ஏன் கிரி என்னை தனியா விட்டு போனீங்க..!” அசரீரியாய் ஒலித்தது இவள் குரல்.
அன்று கோபமாய் கேட்ட பல கேள்விகள் இன்று பொறுமையாய் ஒரே ஒரு கேள்வியில் கேட்கப்பட்டது.
Advertisement
அந்த குரல், அந்த வலி நிறைந்த வார்த்தைகள், வார்த்தைகள் கொடுத்த உடல் மாறுதல்கள் என ஒவ்வொன்றாய் உணர்ந்து அவன் புதைந்திருத்த முகமும், இடை இறுக்கிய கைகளும் தானாகவே தளர்ந்தது. அவள் விலகவில்லை. ஆனால் விலக வைத்தாள்.
Advertisement
அவளில் இருந்து பிரிந்து நிமிர்ந்து அவளை பார்த்தான். ஆனால் அவள் பார்வையோ இவனை விட்டு வேறெங்கோ பதிந்திருந்தது.
‘திருமணமான புதிதில் தான் அவனை இப்படி தானே தேடினோம்’ ‘தேடிய போது கிடைக்காதவனை, கிடைத்தபோது அவள் மனம் கிரியை தேடவில்லை’
அவள் விழிகள் அதை பிரதிபலித்ததோ என்னவோ! அவள் கண்களில் தனக்கான தேடலை தேடிய கிரிக்கு பலத்த தோல்வி தான்.
Advertisement
ஆக மொத்தம் அவனது நெருக்கம் இப்போது அவளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்பது தெள்ள தெளிவாய் தெரிந்து போனது கிரிக்கு. காரணம் கேட்கும் நிலையில் அவனோ, சொல்லும் நிலையில் அவளோ இல்லை.
அவளை அரையும் குறையுமாய் ஒட்டிக்கொண்டிருந்தவன் முழுதாய் விட்டு பிரிந்து எழுந்தமர்ந்தான். மெதுவாய் நகர்ந்து, மாடி சுவற்றில் சாய்ந்து, ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி அமர்ந்தான்.
அவளோ இவன் விட்டு சென்ற அதே இடத்தில், விட்டு சென்ற அதே நிலையில் கிடந்தாள்.
அமர்ந்தவனின் விழிகளும், படுத்திருந்தவளின் விழிகளும் ஒருவரை விட்டு ஒருவர் மீளவில்லை. மீள முடியா ஏதோ ஒன்று பிடித்து வைத்திருக்கிறதே அவர்களை.
தனக்கு எதிரே அழகோவியமாய் கிடந்தவளின் மீது ‘வேண்டுமே’ என்பதை போல் அவன் பார்வை விரவி படர்ந்தது.
ஆனால் அவளின் விழிகளிலோ , இப்போது நீ எனக்கு ‘வேண்டாமே’ என்பதை போல் அவனில் பதிந்தது இவள் பார்வை. அதை உணர்ந்தவனின் ஆசை ஏக்கம் துளிர்த்த விழிகளில் சிந்தி சிதறியது அவன் கோபம்.
“நான் அப்போ உன்னை அலைய விட்டேன்னு, இப்போ நீ என்னை அலைய விடுறல்ல” இப்போது அசரீரியாய் கேட்டது இவன் குரல்
இவளிடம் பதிலில்லை, பதறவும் இல்லை. “ஆமாம்” என்பதை போல் அவளது மௌனமே பதிலாக இருந்தது.
அது இவனுக்கும் புரிந்திட “நானாவது உன்னைய டெம்ட் பண்ண கூடாதுன்னு வீட்டுலையே தங்கலைடி. ஆனால் நீ….” மீதத்தை நீயே நிரப்பி கொள் என கீழிருந்து மேலாக பர்த்து வைத்தான் இவளை.
‘இதென்ன புது கதை’ புருவம் சுருக்கி இவள் யோசித்தபடி எழுந்தமர்ந்துவிட “ஆமாம்.. அவன் எங்கே வீட்டிலேயே தங்கினான்.. ஒன்னு லேட்டா வருவான். இல்லை உனக்கு முன்ன தூங்கிடுவான்” என மனசாட்சி கவுண்டர் கொடுக்க
“அப்படின்னா நான் கிரியை இப்போ டெம்ட் பண்றன்னு அர்த்தமா! நான் என்ன அரையும் குறையுமா அவன் முன்னாடி சுத்திட்டா இருக்கேன்” இவள் நினைக்க
“இதுக்கு அரையும் குறையுமா சுத்தனும்னு அவசியமே இல்லை. ஆசைப்பட்ட பொண்ணு கண் முன்னாடி சுத்துனாலே பசங்கலாம் கம்ளீட் பிளாட் தான்” ‘சும்மாவே இவளை பார்த்தாலே ஓடுது, கண்ணும் காலும்.. இதில் இவள் அரையும் குறையுமாவா?’ நினைக்கையிலே கண்ணை கட்டியது கிரிக்கு.
அப்போது தான் அவளுக்கு புரிந்தது, மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக பேசவிட்டதை!
“இதுக்கு நீ எயிட்டி பிளஸ்லையே இருந்திருக்கலாம் கமலி. என்னைய உயிரோட கொல்லன்னே பிப்டி பிளஸ்ல வந்து சாவடிக்கிறடி” அழுத்தந்திருத்தமாய் வந்தது இவன் வார்த்தைகளில் இவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, அதற்காகவே காத்திருந்தார்ப்போல்
“இதுக்கு மீறி எந்த விளக்கமும் நான் கொடுக்க போறதில்லை. அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும். நம்பிக்கை இருந்தா என்கிட்ட வா.. இல்லைன்னா அப்படியே கிளம்பிடு. என்கிட்ட வராத!” சிந்தி சிதறிய கோபம், கிடுக்கு பிடி போட்டு நின்றது அவளிடம்.
தன் கேள்விக்கு தகுந்ததொரு பதிலை கூறி தன்னை சமாதானம் செய்வான் என காத்திருந்தவளுக்கு, கிரியின் பதில் செவிட்டில் அறைந்தது போல் இருக்க “நான் வரலை.. நீங்களும் வராதீங்க” என இவனுக்கு பிரஸரை ஏற்றி விட்டாள் கமலி.
“இப்போதைக்கு நானும் உங்கிட்ட வரமாட்டேன்” என்ற கிரியின் வார்த்தைகள் அதை விட பிரஸரை கொடுத்தது இவளுக்கு.
அவனை பார்த்தபடியே எழுந்து நின்றவளுக்கு, நிதானமும் பொறுமையும் பறந்தோடிட “வராட்டி போடா” என வார்த்தைகளை உதிர்த்துவிட்டு இவள் படியை நோக்கி விரைய, ‘என்ன போடாவா?’ அதிர்ந்தான் கிரி.
கோபத்துடனே மாடி இறங்கி சென்றவளை தடுத்து நிறுத்தியது “ஓய்.. சாம்பார்” என்ற கிரியின் குரல்.
மூன்று நான்கு படிகளை மட்டுமே கடந்தவள் அப்படியே நின்று திரும்பி நிமிர்ந்து பார்க்க, இவனும் படியில் இறங்கி இவளிடம் வந்தான்.
ஏற்கனவே இருவர் கடந்து செல்லும் அளவிற்கு தான் இருக்கும் மாடிபடி. அப்படியிருக்கையில் வெகு சிரமப்பட்டு அவளிடம் இடைவெளி விட்டு நின்றான்.
அவன் மீது பாய இருந்த விழிகளை கட்டி இழுத்து ‘வேறு பக்கம் போய் தொலை’ என கட்டளையிட்டு, இருவருக்குமிடையே இடைவெளியை அதிகப்படுத்தியபடி சுவற்றில் சாய்ந்து நின்றாள் கமலியும்.
அவள் விழிகளை சொடுக்கிட்டு தன் பக்கமாக திருப்பி “இப்போ என்ன தான் பண்ணனும் கமலி. நெருங்கி வந்தா விலகி விலகி போற, சரின்னு விலகி போனா விலகியும் இருக்க விட்மாட்ற” விழியோடு விழி கலந்தது இருவருக்கும்.
‘அது தெரிந்தால் நான் ஏண்டா இப்படி விலகி நிக்க போறேன்’ அமைதியிழந்து தத்தளித்தது இவள் மனது.
அவள் விழிகளை விட்டு இதழுக்கு வந்தது இவன் பார்வை. “இந்த வாய் தான் என்னை திட்டிட்டே இருக்கு.. தேள் மாதிரி கொட்டிட்டே இருக்கு. ஆனால் இந்த கண்ணு என்னை எப்பவுமோ தேடிட்டே இருக்கு கமலி. ஏன் உன்னை நீயே ஏன் ஏமாத்திக்கிற?” உண்மையை இவன் உடைத்து பேசிட, நிஜமாகவே உடைந்து போனாள் கமலி.
“ஏதாவது பேசுடி. நான் உன் கூட வாழ வேண்டாமா” இப்போது உடைந்தது கிரியின் குரல்.
தைரியமாய் அவன் விழிகளை சந்தித்தாள். “நீங்க என்னை நெருங்கும் போதெல்லாம், என்னை விட்டுட்டு நீங்க பாரின் போனது தான் நியாபகம் வருது. எனக்கு நானே எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் மூளைக்கு புரியது. ஆனால் மனசுக்கு புரியமாட்டுது. அனாதை மாதிரி நிக்க விட்டு போயிட்டீங்களேன்னு” பேசி முடிக்கும் முன்னே கண்கள் கலங்க தயாராகிட.
“கமலி” என்ற இவனது இறுகிய கண்டிப்பில், கண்ணீர் அப்படியே நின்றது. “அழாம பேசு.. எவ்வளவு நேரமானாலும் கேட்பேன்” “அழுதன்னு வச்சிக்க..” அவள் கண் முன் விரல் நீட்டி எச்சரித்தான் கிரி.