Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 12.2

 

கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து அவரவர் இயல்பு வாழ்க்கையில் தம் பயணம் தொடர, பாண்டியனும் தன் பூமியினுள் இறங்கி வேலை பார்க்கத் துவங்கினான்.

 

தன் ஒரு ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்யத் திட்டமிட்ட குலசேகரன், முதலில் மண் அமைப்பை மேம்படுத்த ஒரு மாதத்திற்கு முன்னரே பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டிருந்தான். அவை இப்போது போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணோடு சேர்த்து உழுது கொண்டிருந்தான்.



Advertisement

 

உழவனின் நண்பனாம் மண்புழு ஆனால் நவீன விவசாயத்தில் விவசாயிகளுக்கு உற்ற தோழனாய் இருப்பது என்னவோ ட்ராக்டர் தான். அந்த நண்பன் துணைகொண்டு தன் நிலத்தை தனியாளாய் உழுதுகொண்டிருக்க, அவனைத் தேடியபடி வயல் வாய்கால் மேடெல்லாம் கடந்து அவ்விடம் வந்து சேர்ந்தாள் அரும்பு.

 

Advertisement

“மாமோய்!” என்று குரல் கொடுக்க, அவள் குரலுக்கு அருகிலிருந்த சோளக் கொள்ளையில் திரிந்து கொண்டிருந்த அழகு மயில்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்த்து அகவியது.

Advertisement

 

“குலசேகரன் மாமாஆஆ..” என்று குரல் கொடுக்க, அவன் செவிகளை சிறிதும் சென்றடையவில்லை.

 

Advertisement

நேராக சென்று கொண்டிருந்தவன் டிராக்டரை வளைக்க அவன் பார்வை வட்டத்தில் அரும்பு விழவும், 

 

“டேய் மாமாஆஆ…” என்று அவள் பெருங்குரலெடுத்து கத்தவும் சரியாய் இருந்தது.

 

உடனே வண்டியை நிறுத்தியவன்,

 

“என்னடி சொன்ன?” என்று குரல் கொடுக்க, திருதிருத்தவள் பின் புன்னகையை வரவழைத்துக் கொண்டு,

 

“ஏய் மாமான்னு சொன்னேன்” என்றாள்.

 

“ஏய் மாமனா சொன்ன?” என சந்தேகமாய் பார்த்துவிட்டு,

 

“இங்க எதுக்கு வந்த?” என்று கேட்க

 

“உனக்கு இன்னைக்கு பொறந்த நாளாம்ல எங்கம்மா சொல்லுச்சு. அப்படியே இந்த ரவா லட்டையும் கொடுத்துட்டு வரச் சொல்லுச்சு” என்றபடி புடவையை தூக்கி இடையில் சொருகிக் கொண்டு உள்ளே இறங்கி நடக்கத் துவங்கினாள்.

 

குலசேகரனுக்கு அவன் பிறந்த நாள் எப்போது என்று நினைவில் கூட இல்லை. தன் அக்காவை எண்ணி சிறு புன்னகை வந்து அதரங்களில் அமர்ந்துகொண்டது.

 

அவனுக்கென்று இருப்பவர்களை விரல் விட்டு சொல்லிவிடலாமே. அதில் முதல் இரு இடங்களைப் பிடிப்பது என்னவோ அவன் அக்காவும் அக்கா மகளும் தான். குடும்ப பிரச்சனை காரணமாய் அரும்பை தன்னருகில் வரவிடாது தள்ளி நிறுத்தவேண்டும் என்று எண்ணினாலும் அவள் ‘மாமா’ என்று அழைத்தாலே அவன் போட்டு வைத்திருக்கும் இரும்பு வேலியானது இலவம் பஞ்சை காற்றில் பறந்து காணமல் போய் விடுகிறது.

 

மனம் திரண்டுவரும் பாச வெள்ளத்தை மடைபோட்டு தடுக்க நினைத்தால் முடியுமா? அவன் அலாதி அன்பிற்கு திரையிட்டு அவளை விலக்கி வைக்க முடிவதில்லை. அவள் அருகாமையை தான் அவன் மனமும் விரும்பியது.

 

அவன் மனம் இப்படி எண்ணிக் கொண்டிருக்க, அவனருகில் வந்த அரும்பு தன் கையில் இருந்த தூக்குப்போசியை அவனிடம் கொடுத்துவிட்டு,

 

“ஒரு கை புடி நானும் மேல ஏறுறேன்” என்று கையை நீட்ட, அவளை முறைத்து வைத்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

“நீ புடிக்கலைனா நாங்க ஏற மாட்டமாக்கும்” என்று சிலுப்பிக் கொண்டு  ஏறி தட்டுத்தடுமாறி பின்னால் விழச்செல்ல, நொடியில் அவள் இடையை சுற்றி கையை வளைத்து தாங்கிப் பிடித்திருந்தான்.

 

“அடங்கவே மாட்டடி நீ” என பல்லைக் கடித்தவன் அவள் மேலே ஏற உதவி செய்ய, அவனருகில் அமர்ந்தவளுக்கு தான் மனம் படபடவென அடித்துக் கொண்டது. அவன் எப்போதும் போல் இயல்பாய் இருக்க, அவளால் தான் அப்படி இருக்க முடியவில்லை.

 

வண்டியை ஓட்டியபடி அவளைப் பார்த்தவன்,

 

“என்னாச்சு எங்காவது அடிகிடி பட்டிருச்சா?” என அக்கறையாய் வினவ,

 

“அ.. அதெல்லாம் இல்ல மாமா” என்று வாய் தந்தியடிக்க, அதை மறைக்க  தூக்குவாளியில் இருந்து ஒரு ரவா லட்டை எடுத்து அவனுக்கு கொடுத்தாள். அதை வாங்கி வாயில் போட்டுக்கொண்டே வண்டியை வளைத்தான்.

 

அவளும் ஒன்றை எடுத்து சுவைத்துக் கொண்டே,

 

“ஏன் மாமா பசுந்தாள் உரம் தானே போட்டுட்டு இருக்கீங்க?” என்று வினவ,

 

“பாத்தா எப்படி தெரியுது?” என்றான்.

 

“அதோட்டம் தான் தெரியுது. ஆமா இதெல்லாம் என்ன பயிறு? எதுக்காக போடுறீங்க?” என்றாள்.

 

வேளாண்மை படித்திருக்கிறாளாம். அவனை சோதித்துப் பார்க்கிறாளாம். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை செலுத்தியபடியே,

 

“சணப்பை, கொள்ளு, நரிப்பயிறு, தட்டப்பயிறு, கொத்தவரை, தக்கைபூண்டு. இதெல்லாம் வெதச்சு அது வளந்து பூ பூக்குற நேரத்துல மண்ணோட சேத்து உழுதா அடுத்து பயிரடற செடிக்கு நைட்ரஜன் சத்து நல்லா கெடைக்கும். மண்ணுக்கு தழைச்சத்து கெடைக்குறதால தனியா ஒரமும் போட வேண்டியதில்ல மண்ணரிப்பும் வராம இருக்கும். போதுமா” என்றான்.

 

“நீ ஒரு படிக்காத மேதை மாமா” என்றவள்,

 

“இதெல்லாம் தெரிஞ்சு விவசாயம் பண்ணுனாலே போதும். மண்ணும் கெட்டுப் போகாது. மனுஷனும் கெட்டுப் போக மாட்டான். அதைய விட்டுப்புட்டு புல்லு மொளைக்கல பூண்டு மொளைக்கலைன்னு பொன்னு விளையுற பூமிய குத்தம் சொல்லுறது. படிச்சவங்களுக்கு அறிவு வேண்டாம், விவசாய சங்கமெல்லாம் எதுக்கு இருக்குது அங்க போய் பிரச்சனைய சொல்லி உதவி கேக்குறதுக்கு என்ன தயக்கம்” என்று சுற்றிலும் இருப்போரை எண்ணி பொங்க,

 

“படிச்சவங்க எதுக்குடி விவசாயம் பாக்க வர்றாங்க. அங்கராக்கு கூட அழுக்காகக் கூடாதுன்னு நெனைக்குற ஆளுக தான் இன்னைக்கு நாட்டுல அதிகம். சேத்து வயல்ல இறங்கி உழுது, ஒடம்பு பூரா கறைபடுத்தி அந்தக் கறைய வேர்வையில சுத்தப்படுத்துறதெல்லாம் என்னையோட்டம் படிக்காதவனுக்கு மட்டுமே கெடச்ச வரம்” என்றான் அந்த வரம் பெற்றவன்.

 

“அப்போ உங்க உயிர் நண்பன் விக்ரமன் மாமா என்னவாம்? படிச்சவரு தானே! அவரு நெனச்சிருந்தா நீங்க சொன்னதோட்டம் கறை படாத வைட் காலர் ஜாப்க்கு போயிருக்கலாமே. பி.டெக் பயோடெக்னாலாஜி முடிச்சிட்டு அவரும் விவசாயம் தானே பாக்குறாரு?”

 

“அவன் ஒரு அதிசயப் பிறவி”

 

“விவசாயம் பாக்க படிச்சவங்க படிக்காதவங்கனு பாகுபாடெல்லாம் இல்ல மாமா. என்னையவே எடுத்துக்க நான் மட்டும் என்ன படிச்சிருக்கேன் விவசாயம் தானே?”

 

“நீ ஒரு அரியவகை பிறவி”

 

“மாமாஆஆ” என்று சிணுங்க,

 

“தப்பா சொல்லிட்டேன் ம்மா. நீ எல்லாம் பிறவியே கிடையாது” என்றதும் அவள் முறைக்க,

 

“என்னடி முறைக்குற நீ விவசாயம் படிச்சு என்ன பிரயோசனம்? உன்ர அப்பன் பேச்சை கேட்டுட்டு பரிச்சை எழுதமாட்டேன்னு போனவ தானே. நான் அந்தப் பாடுபட்டு சொன்னேன் கேட்டயா? இந்நேரம் அந்த பரிச்சையை எழுதி இருந்தா விவசாய சங்கத்துல வேலைக்கு சேந்து இங்க இருக்குற ஆளுகளுக்கு உதவி செஞ்சிருக்கலாம்” என்றான் ஆற்றாமையில்.

 

அதில் அரும்புக்கு தானாய் கண்களில் நீர் சுரந்தது.

 

அரும்பு பத்தாவது முடித்த போதே அவளது படிப்பிற்கு பால் ஊற்ற முயற்சித்தார் வேலாத்தாள். ஆனால் அவரது முயற்சியையும் மீறி குலசேகரனின் துணையோடு அடுத்த இரண்டு வருடப்படிப்பையும் முடித்துக் கொண்டாள். பின் கல்லூரி வாசம் என்ற பேச்சு துவங்குகையில், முத்துச்சாமிக்கும் குலசேகரனுக்கும் பிரச்சனையும் துவங்கியது.

 

அரும்பு தேவராஜனை விட அதிகம் படிக்கக் கூடாது, அப்படி படித்தால் தன் மகனை திருமணம் செய்துகொள்ள மாட்டாள் என்ற எண்ணத்தில் அவள் விரும்பும் வேளாண்மை படிப்பை படிக்கவிடாது தன் அண்ணனிடம் அதையும் இதையும் சொல்லி அவர் மனதையும் மாற்றிவிட்டார் சரோஜினி.

 

ஆனால் குலசேகரனோ அரும்பாடுபட்டு வேளாண் பல்கலை கழகத்தில் அனைவரையும் மீறி அரும்பை சேர்த்துவிட்டான். அன்றிலிருந்தே மாமன் மச்சானுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டிருக்க, சரோஜினியும் வேலாத்தாளும் கிடைந்த சந்தர்ப்பத்தை எல்லாம் பயன்படுத்தி அதை பெரிதாக்கிக்கொண்டே இருந்தனர்.

 

முத்துச்சாமி இருக்கும் போது ஒரு மாதிரியும் அவர் இல்லாதபோது மரகதத்திடமும் குலசேகரனிடமும் வேறு மாதிரியும் நடந்து கொள்ளவது அவர்கள் வழக்கம். அவர்களுக்கு முடிந்தமட்டில் குலசேகரனை அவமானப் படுத்திப் பார்க்கவேண்டும். அதைக் கண்டு மரகதம் வேதனைப் படுவதை ரசிக்க வேண்டும். அனைத்தையும் அக்காவிற்காக குலசேகரன் பொறுத்துப் போக, இன்னும் வசதியாய் போய்விட்டது அவர்களுக்கு.

 

“உன்ர தகுதிக்கு என்ர ஊட்டு வாசலை மிதிக்கவே விட்டிருக்கக் கூடாது. உன்ர அக்களை பாவம் பாத்து என்ர வூட்டுக்கு கட்டிட்டு வந்ததே பெருசு. அப்போ உனக்கும் சின்ன வயசு, தாய் தகப்பனும் இல்ல. உன்னைய நடுத்தெருவுல விட்டுடோம்ங்கற பழி சொல்லு இந்த மிராசு குடும்பத்துக்கு வந்திறக் கூடாது பாரு, அதான் இத்தனை நாளா உனக்கு சோறு போட்டு வீட்டுல ஒரு சம்பளமில்லாத வேலைக்காரனா வெச்சிருந்தான் என்ர மவன்” என்று மரகதத்தின் முன்னிலையில் வேலாத்தாள் சொல்ல, அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவரால்.

 

அப்போது குலசேகரனுக்கு பதினாரு வயது தான் இருக்கும். இந்த ஏச்சு பேச்சுக்களெல்லாம் தன்னோடு போகட்டும் என அன்றிலிருந்து தன் தம்பியை அவர்களிடம் இருந்தும் தன்னிடம் இருந்தும் தள்ளியே நிறுத்தினார் மரகதம். அவனுக்கென இருக்கும் ஓட்டு வீட்டில் அவன் கௌரவமாய் வாழ்வதே போதுமென்று எண்ணினார்.

 

அவன் வளர வளர அவன் அக்காவிற்கும் அக்கா மகளிற்கும் பாதுகாவலனாய் திகழ்ந்தான். அவன் கம்பீரத்தால் வேலாத்தாவின் வாய் கொஞ்சம் ஓய்ந்திருந்தது.

 

அரும்பு அனைத்தையும் கடந்து அவள் படிப்பை முடித்திருந்தாள். அடுத்து வேளாண் துறை சார்ந்த தேர்வை எழுதி விவசாய சங்கத்தில் சேர்வது அவள் கனவாய் இருக்க, அவளுக்கு எப்படியும் தேவரஜனோடு மணம் முடித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார் வேலாத்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

அதற்கான முயற்சியிலும் அவர் இறங்க, ஜாதகத்தில் நேரம் சரியில்லாது போக அம்முறையும் தப்பித்துக் கொண்டாள் அரும்பு. வேளாண் தேர்வை எழுதவும் முத்துச்சாமி அனுமதிக்கவில்லை. படித்தது போதும் வேலைக்கு எல்லாம் வேண்டாம் என்று உறுதியாய் சொல்லிவிட்டார்.

 

அவள் அதை எண்ணி கண்ணீர் வடிக்க, குலசேகரன் அவளை அழைத்துப் போய் அத்தேர்வை எழுத வைத்தான். அன்று வெடித்தது பூதாகரமான பிரச்சனை. அவனோடு அரும்பு சென்றதை அறிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார் முத்துச்சாமி.

 

“என்ர ஊட்டு சோத்தை திண்ணுட்டு என்ர குடும்பத்துக்கே துரோகம் பண்ணுறானா உன்ர தம்பி? அக்காளுக்கும் தம்பிக்கும் எத்தன நாளத்து திட்டம் இது? என்ர சொத்தை சுருட்டிட்டு போலாம்னு பாத்தீங்களாக்கும். வகுந்து போடுவேன் வகுந்து” என வேலாத்தாளிடம் மரகதத்திற்கு விழுந்த சாடல்களுக்கு அளவே இல்லை.

 

“வரட்டும் அந்த ஓடுகாலிக் கழுத. கால ஒடச்சு அடுப்புல எரியுறேன். போகக்கூடாதுன்னு அவ்வளவு வாட்டி எடுத்துச் சொல்லியும் என்ன நெஞ்ஜெழுத்தம் இருந்திருந்தா அந்த வெறும் பயலோட போயிருப்பா. உன்ர பேச்சுக்கு அவ்வளவுதேன் மதிப்பு முத்துச்சாமி பாத்துக்கோ நல்லா” என மகனை வேறு ஏத்தி விட்டுக் கொண்டிருந்தார்.

 

“அவ ஆருகோட போயிருக்கா அவ மாமனோட தானோ. பரிச்சை எழுதி முடிச்சதும் அதெல்லாம் பத்தரமா அவன் கூட்டிட்டு வந்திருவான். நீங்க இப்படி எல்லாம் தப்பா பேசாதீங் அத்தை” என மரகதம் சொல்ல, அவர் மேல் கைநீட்டி இருந்தார் முத்துச்சாமி.

 

மரகதம் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருக்க, அரும்போடு வீடு திரும்பிய குலசேகரன் அக்காட்சியைக் கண்டு பெருங்கோபத்தில்,

 

“மாமாஆஆ” என முத்துச்சாமியின் சட்டையைப் பிடிக்க, போர்க்களமானது.

 

“என்ர மகளை கூட்டிட்டு போக நீ ஆருடா? என்ர குடும்ப விசயத்துல தலையிட நீ ஆரு? உனக்கும் என்ர குடும்பத்துக்கும் இனி ஒட்டும் இல்ல ஒறவும் இல்ல. மீறி உன்ர அக்காளை பாக்கறேன்னு இந்த வீட்டு வாசப்படிய மிதிச்சா உன்ர ஆக்காள கையோட உன்ர ஊட்டுக்கே கூட்டிட்டு போய்கோ” என்றதில் அதிர்ந்துபோய் நின்றான் குலசேகரன்.

 

மரகதம் வாயை பொத்திக்கொண்டு அழ,

 

“போடா வெளிய” என்றிருந்தார் முத்துச்சாமி.

 

யாருக்காக அனைத்தையும் பொறுத்துப் போனானோ அவர்களது வாழ்வே தன்னால் கேள்விக்குறியாவது கண்டு அன்று விலகி வந்தவன் இன்று வரை அவ்வீட்டின் வாயிலைக் கூட மிதிக்கவில்லை. அரும்பு மட்டுமே தன் வீட்டினர் அறியாமல் குலசேகரனைக் காண வந்து போவாள்.

 

வேளாண் தேர்வில் முதல் கட்டத்தில் தேர்ச்சி பெற்றிருந்துமே அரும்பால் இரண்டாம் கட்டத் தேர்வை எழுத முடியவில்லை. குலசேகரன் எடுத்துச் சொல்லியும் தன் தந்தைக்கு பயந்து, அவனுக்கும் பிரச்சனை வரும் என்று நினைத்து மறுத்துவிட்டாள். இன்று வரை கனவு கனவாய் போனதை எண்ணி வருந்துகிறாள்.

 

அனைத்தையும் எண்ணி நீண்ட பெருமூச்செரிந்தவள்,

 

“எல்லாம் என்ர கெரகம். நான் மறுபடியும் அந்த எக்ஸாம்கு அப்ளை பண்ணிட்டேன் மாமா. இந்த வாட்டி யாரு தடுத்தாலும் எழுதியே தீருவேன்” என்றாள் உறுதியாய்.

 

“உங்கப்பன் முறுக்கு மீசை பெல்டை கழட்டினா?” என குலசேகரன் தன்  புருவத்தை உயர்த்த, சில நொடிகள் ஆழ்ந்த அமைதி அவளிடம் பின் அவனைப் பார்த்துக்கொண்டே சிறு புன்னைகயுடன்,

 

“உன்ர வீட்டுக்கு ஓடி வந்திர்றேன். நீ ஒருவாய் கஞ்சி ஊத்த மாட்டியா என்ன?” என்றாள்.

 

அவளிடமிருந்த அமைதி அவனிடம் தாவியது.

 

“என்ன பதிலையே காணோம்? சரி விடு மாமா நீ ஊத்தாட்டி என்ன நானே உனக்கு கஞ்சி ஊத்துறேன்” என்று சொல்லவும்,

 

“நீ ஒரு முடிவோட தான்டி இருக்க. நீங்க தான் மிராசு குடும்பம் ஆச்சே உங்க சங்காத்தமே எனக்கு வேண்டாஞ்சாமி. உன்ர தில்லாலங்கடித்தனம் எல்லாம் என்ர கிட்ட நடக்காது நீ மொதல்ல எடத்த காலி பண்ணு” என்றான்.

 

அதில் முகம் வாடிப் போனாலும்,

 

“கெளம்பாம பின்ன உன்ர கூடயேவா இருப்பாங்க. இந்நேரம் எங்கப்பத்தா வேலாத்தா என்னைய வேவு பாக்கவே ஒரு ஒற்றர் படையை அனுப்பிருக்கும்” என்று விளையாட்டாய் சொல்ல, சரியாக தொலைவில் இருந்தபடி அவ்விருவரையும் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்துவிட்டு அமைதியாய் கடந்து சென்றது ஒரு உருவம்.

 

“சரி எனக்கு வேலை இருக்கு. நீ கெளம்பு அரும்பு” என்றான் குலசேகரன். அவளும் அதற்கு மேல் வம்பிழுக்காது மெல்ல அவன் தோள்களைப் பற்றி கீழே கால்வைத்து இறங்கிக் கொண்டாள்.

 

சிறிது தூரம் சென்றவள் அவனை திரும்பிப் பார்த்து,

 

“டேய் மாமா” என்றழைக்கத் திரும்பியவன்,

 

“ஏய் மாமான்னா சொன்ன?” என்று கேட்க

 

“இல்ல டேய் மாமான்னு தான் சொன்னேன்” என்றாள் சின்ன சிரிப்பை உதிர்த்து.

 

“வந்தேன்னு வெய்டி வாய் மேலையே ஒன்னு வெப்பேன்”

 

“வெய் வெய். அப்பறம் சொல்ல மறந்துட்டேன் மாமா. உன்ர பிறந்த நாளு அடுத்த மாசமாமா. இன்னிக்கு சும்மா ரவா லட்டு செஞ்சேன், எங்கம்மா பயந்துட்டு சாப்பிட மாட்டேன்னு சொல்லிருச்சு. அதான் உனக்கு கொண்டு வந்தேன்” என்றுவிட்டு கண்ணடிக்க,

 

“என்னடி லேசா தொண்டை கவ்வுது? ஏல வெதைக்கு பதிலா அரளி வெதையக் கீன போட்டுட்டியா. எத்தன நாளா திட்டம் போட்டீங்க எனக்கு இப்படி வெசம் வைக்க” என்ற அவனது கேலிக் குரலில்,

 

“ரொம்ப பண்ணாத மாமா. உன்கூட சேந்து நானும் தானே சாப்பிட்டேன். அப்படியே செத்தாலும் பரவாயில்லை வா ஒட்டுக்கா மேல போலாம்” என்றாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“யாரு உன்ர கூடையா?”

 

“ஆமா. ஏன் உனக்கு வேற எவ கூடயாவது போற நெனப்பு இருக்குதா?”

 

“என்னடி எவளையோ கூட்டிக்கிட்டு நான் சினிமாவுக்கு போறதோட்டம் கேக்குற”

 

“யாரு நீயா மாமா?” என்றுவிட்டு கலகலவென சிரித்தவள்,

 

“காளைய அடக்குனா மட்டும் பத்தாது மாமா. ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு சினிமாவுக்கு போற அளவுக்கெல்லாம் உனக்கு தகுரியம் இருக்குதா?” என்று புருவம் உயர்த்த,

 

“நீ சொன்னதுக்காகவே சீக்கிரம் ஒருத்திய செட் பண்ணுறேன். உனக்கு அத்தை ஆக்குறேன். அவளோட ஜோடியா சினிமாவுக்கு போறேன்” என்றான்.

 

“நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட மாமா. உனக்கு அந்த திறமை பத்தாது. நீ ஒரு ஆஞ்சநேய பக்தன்னு இந்த ஊருக்கே தெரியும். இப்படியே என்ர கூட பதிலுக்கு பதில் பேசிக்கிட்டு இருக்காம பொழப்ப பாரு மாமா” என்றுவிட்டு வரப்பின் மீதேறி நடக்க,

 

“இங்க வந்து என்ர பொழப்ப கெடுத்ததும் இல்லாம நானாடி வெட்டியா பேசிக்கிட்டு இருக்கேன்” என, அவள் வரப்பின் மீது தடுமாற

 

“ஏய் எலி! விழுந்து மண்ணக் கீன கவ்வாம பாத்து போடி” என்றான் அதரங்களில் அரும்பிய புன்னகையுடன்.

 

திரும்பி அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு சென்றுகொண்டாள், அவளுக்கெனவே வீட்டில் காத்திருக்கும் ஆபத்து பற்றி அறியாமலே.

 

வாசம் வீசும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!