Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நாம் கேட்ட காலங்கள் – 17

அந்த மருத்துவமனையில் இருந்த தனிப்பிரிவில் மிகுதியான பதற்றம் தென்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் மனைவிக்குக் கத்திக்குத்து என்ற செய்தி மாநிலத்தின் பாதுகாப்பைக் குறித்த கேள்விகளை முன்வைக்க, அரசியல் வட்டாரங்களில் அதுதான் பேசுபொருளாக இருந்தது. 

கேரளாவிற்கு செல்ல விமான நிலையத்தில் காத்திருந்த ராஜமகேந்திரனுக்கு ஸ்ரீதரன் விஷயத்தை சொல்ல, அந்த நொடி மகேந்திரன் மனம் உணர்ந்த அதிர்வினை வார்த்தைகளால் சொல்ல முடியாது.



Advertisement

ஸ்ரீதரன் விஷயத்தை சொன்ன கணம் யாரோ நெஞ்சில் கல் வைத்த உணர்வு. சட்டென்று மூச்சடைத்தது. நிதானமில்லாத ஒரு நிலை.  

“மகி! பயப்படாதடா, ஒன்னுமிருக்காது” என்ற ஸ்ரீதரனுக்குமே பயமிருந்தது. ஒன்று மாற்றி ஒன்று அவர்கள் குடும்பத்திற்கு வர உண்மையில் அவன் பதறினான். 

Advertisement

Advertisement

அதுவும் திலக் உடல் நிலைத் தேறி வரும் நிலையில் மீண்டும் ஒரு கொலை முயற்சி. அவன் தப்பித்தான் என்று மகிழ்வதா இல்லை பிரசன்னாவிற்கு எதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுவதா என்று தடுமாறினான். அதைவிட அவனின் மகி. அவன் நண்பன்?! 

விஷயம் சொன்னதும் அதிர்ந்து அமர்ந்தவனிடம் அசைவில்லை. ஸ்ரீதரன் பதற்றத்தோடு உலுக்கினான். 

Advertisement

மகேந்திரன் அப்போதுதான் உணர்விற்கு வந்தான். உடலில் என்னவோ மாற்றங்கள் நிகழ, கண்களில் கலங்கியது கூட உணர்வில்லை. 

“என்ன டேஷுக்கு அங்க செக்யூரிட்டிக்கு இருக்கானுங்க? ச்ச, நான் தப்புப் பண்ணிட்டேன் அவளை அங்க விட்டிருக்கக் கூடாது” என்றவன் விறுவிறுவென்று செக்யூரிட்டி செக் பகுதியைத் தாண்டி வெளியே சென்றான். அவன் பின்னாடியே ஓடி வந்த ஸ்ரீதரன் விஷயத்தை காவலுக்கு நின்றவர்களிடம் துரித கதியில் சொன்னான்.

அவர்களின் காரை அனுப்பி இருந்ததால், சட்டென்று விமான நிலையத்தில் இருந்த டாக்சி பிடித்து மருத்துவமனை விரைந்தனர். 

இதுவரை வாழ்க்கையில் இப்படியொரு நொடி வந்ததாக நினைவில் இல்லை. என்ன செய்வதென்று தெரியாத கையறு நிலை. அவனைப் பொருத்தவரையில் இதுதான் வழி என்று இருக்க மாட்டான். இருக்கும் வழியெல்லாம் சென்று பார்க்கும் ரகம். அப்படியிருக்க இப்போது மனைவியின் நிலை என்னவென்று தெரியாத ஒரு அச்சம். அதே சமயம் அகத்தை சுற்றி முள்வேலியாக அச்சுறுத்தல். 

என்னவும் ஆகிவிட்டால்? 

எது எதோ பயம் தரும் என்று அறிந்தவன். நிச்சயம் கற்பனை இப்படி பயம் தரும் என்று எதிர்ப்பார்த்ததில்லை. 

வரும்வழியெல்லாம் ஸ்ரீதரன் ரஞ்சனிடம் பேசிக்கொண்டே இருந்தான். ரஞ்சனிடம் பேசிவிட்டு ஸ்ரீதரன் மகேந்திரனைப் பார்த்து, 

“டிரிட்மெண்ட் போயிட்டு இருக்கு, அம்மா அப்பா எல்லாரும் அங்கதான் இருக்காங்க. நீ பதட்டப்படாதடா” என்று ஆறுதலாக சொல்ல, 

“இதான் இவங்க பாதுகாப்புக் கொடுத்த லட்சணமா, சேத்தன் சாருக்குக் கூப்பிடு” என்று கத்த, 

“ஷ், டேக்ஸி மகி. அமைதியா இரு. ரஞ்சன்..” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, 

“ஷட் அப் ஸ்ரீ, அவன் பெயரை எடுக்காத! ஒழுங்கா ப்ரோடக்ஷன் கொடுக்க வக்கு இல்லை. அவ வலி தாங்க மாட்டா டா..” என்றவனுக்குக் குரல் அடைத்தது. 

யாருக்கு மகேந்திரனின் காதல் தெரியுமோ இல்லை, ஸ்ரீதரனுக்குத் தெரியும். காதல் என்று அவன் பிதற்றிக்கொள்ளாவிட்டாலும், காதல் கொண்டுதான் அவன் பிரசன்னாவை மணந்தான் என்று தெரியும். ஈகோ, திமிர், இல்லை பிரியத்தைக் காட்டத் தெரியவில்லை என்று காரணங்கள் என்னவாக இருந்தாலும், பிரசன்னவர்த்தினியைக் காதலிக்கும் மகேந்திரன் தனி! 

மகேந்திரனுக்கு அடுத்துப் பேச வார்த்தைகள் பஞ்சமாகிவிட்டன. எதையும் பேச பிடிக்காமல், யோசிக்க பிடிக்காமல், கண்களை இறுக மூடிக்கொண்டான். 

‘நானாவது அவளுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்’ என்று தன்னையே நிந்தித்தான். 

“மகி! இன்னும் கொஞ்ச நேரம் போயிடலாம். திலக்கை கொலை பண்ண வந்திருக்கான், நம்ம பிரசன்னா அந்த நேரம் பார்க்கவும், அவளை அட்டாக் பண்ணிட்டான்.” 

மகேந்திரனுக்கு இதனைக் கேட்கவும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திலக்கிற்கு வெங்கட கிருஷ்ணன் கொடுத்திருந்த பாதுகாப்பைத் தாண்டி வேறெதுவும் யோசிக்கவே இல்லை. அதுவும் இத்தனை மாதங்கள் கழித்து இப்படியொரு கொலை முயற்சி. எப்போதும் அண்ணன் என்று தன்னை உதறுபவள், இன்று அண்ணனுக்காக.. நோ! என்று தன் உணர்வுகளை அடக்கியவன் வலியோடு உதடுகளைக் கடித்துத் தன்னை சமன்படுத்தப் பார்த்தான். 

தனக்குள் மகேந்திரன் போராடிக்கொண்டிருக்கையிலே மருத்துவமனை வந்துவிட்டனர். வேகமாக இருவரும் அந்த பகுதி செல்ல, மொத்த குடும்பமும் அங்கிருந்தனர். 

முதலில் காஃபி குடிக்க சென்றிருந்த காவலர் வந்துவிட அவரை மீறி திலக்கின் அறைக்குச் செல்ல முயன்றவனை அவர் தனது பலத்தால் அடித்துச் சாய்த்தார். அதற்குள் அவர் தன்னிடமிருந்த வயர்லெஸ் மூலம் கீழ் தளத்தில் இருக்கும் நபர்களுக்குத் தகவல் கொடுத்தார். அவரிடமிருக்கும் கருவியில் சொடுக்கினால் அவர்கள் எல்லாருக்கும் அலாரம் அடிக்கும். அதனைக் கொண்டு அவர்களும் மேலே வர, தப்பியோட முயன்றவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். 

ஜீவபிரகாஷிற்கு அந்த நேரம் தகவல் தரப்பட, உடனே அந்த நபரைக் கைது செய்தான். இப்போது அவனது பாதுகாப்பில் விசாரணை துரித கதியில் நடக்க, மருத்துவமனையில் மகனைக் கண்டதும் வைதேகி மருத்துவர் என்பதையும் மீறி அழுதுவிட, வித்யாதரன் மகனின் தோளில் ஆறுதலாகத் தட்டினார். 

“அப்பா, அவளுக்கு எப்படியிருக்கு?” என்று மகேந்திரன் கேட்க, 

“காயம் ரொம்ப ஆழம், டாக்டர்ஸ் பார்த்திட்டு இருக்காங்க ராஜா” என்றார். 

அறுவை சிகிச்சை அறையில் பிரசன்னாவிற்கு சிகிச்சை நடக்க, மகேந்திரன் இருகைகளாலும் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான். 

உட்கார்ந்தவன் கண்களில் இருந்து அதோ இதோ என்று இருந்த கண்ணீர் வந்துவிட்டது. 

சில கேள்விகள் விடை கொடுக்கும், சில கேள்விகள் இன்னொரு வினா தொடுக்கும். சில கேள்விகள் பாதை அமைக்கும், சில கேள்விகள் பயம் தொடுக்கும். அப்படித்தான் பிரசன்னாவிற்கு என்னவாகும் என்ற கேள்வி மகேந்திரனை அதீத அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. 

அவன் கண்ணீர் விட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருந்தன. சிறு பிள்ளையில் விவரமில்லாத போது அழுதது. என்று தாத்தாவோ அரசியல் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தானோ, அன்றிலிருந்து அவனறியாது ஒரு முதிர்ச்சி அவனிடம். கூடவே அழுதால் மரியாதையில்லை என்ற எண்ணம். 

இப்போது மகன் சோர்ந்து, உடைந்து உட்கார வைதேகியால் தாங்க முடியவில்லை. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தெரியாத நிலை. 

வைதேகி மகன் அருகில் உட்கார, அமராவதிக்கு மயக்கம் தெளிந்திருந்தது. தன் மகனைக் காப்பாற்றப்போய்தான் பிரசன்னாவிற்கு இப்படியான வருத்தம் அவரிடம். இத்தனை நாட்கள் கழித்து இன்றுதான் துணைக்கு என்று வந்த மகள். 

இன்று அண்ணன் உடல் நிலையில் முன்னேற்றம் என்றதும் எப்படி புன்னகைத்தாள். தனக்கு எவ்வளவு நம்பிக்கைக் கொடுத்தாள். 

‘அண்ணா வந்ததும் சீக்கிரம் பொண்ணுப் பார்த்துக் கட்டி வச்சு ஜாலியா இருக்கலாம் பெரியம்மா. நம்ம வீட்ல விசேஷம் நடந்து ரொம்ப நாளாச்சு.” என்று அவளின் கனவுகளை எல்லாம் அழகாக விவரித்திருந்தாள். 

மகேந்திரன் கையில் இருந்த கடிகாரம் மனைவியை, அவளின் அன்பை உணர்த்த அதனை இறுக்கமாக பற்றியபடி அமைதியாக இருந்தான். 

“ராஜா” என்று அமராவதி அழைக்க, நிமிர்ந்தவன் கண்களில் கலக்கம். 

வாழ்க்கைத் துணையை இழந்துவிடுவோமோ என்ற பரிதவிப்பை அனுபவித்தவர் ஆகிற்றே அமராவதி. கணவனை மனத்தில் நினைத்துக் கொண்டவர், 

“இங்க பாரு ராஜா, அவ நல்லபடியா வந்துடுவா. வந்துடுவா.. நீ இப்படி இருக்காத. அவ தாங்க மாட்டா” என்றவருக்கும் அழுகை வந்துவிட்டது. 

ரஞ்சனுக்கும் கண்ணீர். ஒரு பக்கம்  நர்மதா மகளை எண்ணி கண்ணீரில் கரைய, கவியரசனும் வெங்கட கிருஷ்ணனும் வேதனையை விழுங்கி நின்றனர். 

“மாமா..” என்று ரஞ்சன் மகேந்திரனை அழைக்க, மகேந்திரன் ரஞ்சனைப் பார்த்த பார்வையில் தீ. 

கண்ணீருக்குள் கனல்! 

“இதான் நீங்க பார்த்துக்கிற லட்சணமா? இல்லை, இன்னும் பேசுவீங்களே, சொல்லுடா.. இதுக்கும் நான் காரணம்னு சொல்லு. இப்ப என்ன சொல்லப் போற.. போகாதன்னு சொன்னா அவ கேட்க மாட்டா, அவ ஆசைப்பட்டான்னு இங்க அனுப்பினேன் டா..” என்றவனுக்கு அவ்வளவு ஆத்திரம். 

அவள் கேட்டிருந்தாலும் விட்டிருக்கக் கூடாது. இப்படித்தான் மகேந்திரனுக்குத் தோன்றியது. 

இந்த நிலையில் பிரசன்னா மகேந்திரனைக் கண்டிருந்தால், 

‘அடடே! இவ்வளவு காதலா’ என்று மயங்கியே இருப்பாள். 

அப்படி அழுத்தமாக இருக்கும் தன் கணவனா இது என்று அதிசயத்தைக் கண்டிருப்பாள் பெண். 

வித்யாதரன் மகனை அமைதிப்படுத்தினார்.

“இங்க பாரு டாக்டர்ஸ் பார்க்குறாங்க. பயப்படாத” என்றவருக்கும் மருமகளின் நிலை என்னவென்று தெரியாது. அவர்கள் சிவன்தாங்கலில் இருந்து கிளம்பும்போதே இங்கே பிரசன்னாவிற்கு அறுவை சிகிச்சைத் தொடங்கியிருந்தது. 

அவள் விழுந்த கிடந்த இடத்தைப் பார்த்தவர்களுக்கு வேதனையும் தாண்டி பயம் அதிகமிருந்தது. அவ்வளவு ரத்தம். ஆனால் நல்ல நேரமாக, உடனே சிகிச்சை ஆரம்பித்திருந்தனர். 

இரண்டரை மணி நேரத்திற்கு மேலான அறுவை சிகிச்சைக்குப் பின் பிரசன்ன வர்த்தினி உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் சொல்ல, மகேந்திரனுக்கு உயிர் வந்தது. 

அந்த நிகழ்வு அவனையே அவனுக்கு உணர்த்தியது. மனைவி மீண்டுவிட்டாள் என்ற செய்திக் கேட்டவன் மருத்துவரைக் கேள்விகளால் துளைக்க, வைதேகிதான் மகனைத் தடுத்தார். 

“அவ கான்சியஸ் வர நேரமெடுக்கும் ராஜா. நம்ம வெயிட் பண்ணனும். அவளுக்கு ஆபத்தில்லை” என்று மகனிடம் அழுத்திச் சொல்ல, அப்போதுதான் அதைக் கிரகிக்க முடிந்தது. 

அடுத்த நொடி மகேந்திரன் மாறிப்போனான். அவன் வேகமாக வெளியேற, 

“என்னடா?” என்று ஸ்ரீதரன் பின்னால் வர, 

“ஜீவாவைப் பார்க்கணும் டா. எவன் இப்படி செஞ்சான்னு நான் கண்டுபிடிக்காம ஓயமாட்டேன். என்ன தைரியமிருந்தா அவ மேல கை வைப்பான், அவனை என்ன செய்றேன் பாரு” என்று வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியேறினான். 

அங்கு கொல்கத்தாவிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சந்தேஷ்காளியில் கொடியவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க போராடினாள் திலக்கின் பிரியம்வதி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!