Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 8.1

அத்தியாயம் 8

வீட்டினுள் வந்த தேவராஜ், பொற்செல்வனின் அறை லேசாய் திறந்திருப்பதை பார்த்து, அருகே சென்று, “செல்வா” என்றான்.

“டென் மினிட்ஸ் கழிச்சு பேசலாம்ண்ணா” என்று பொற்செல்வன் சொல்ல, “இல்ல, இப்போவே பேசனும்” என்று உள்ளே சென்றான் தேவராஜ்.

இதனைப் பார்த்திருந்த அமிர்தவள்ளிக்கு எண்ணிலடங்கா சந்தோசம். தேவராஜ் தனது அறையை தவிர்த்து இவ்வீட்டின் எந்த அறைக்கும் சென்றதில்லை. வீட்டில் யாரேனும் எதாவது கேட்டால் மட்டுமே பதிலளிப்பான்.



Advertisement

அதிலும் முக்கியமான விசயங்களுக்குத்தான் வார்த்தையாக பதில் வரும். இல்லையெனில் தலையசைப்பிலும் முக பாவனையிலுமே பதில் கொடுத்து கிளம்பிடுவான்.

நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு தம்பி அறைக்குள் செல்கிறான். அதுவும் இயல்பான முகத்தோடு சென்றிருக்கிறான். அப்படியானால் நவீனா தேவராஜ் விவாகரத்து விசயமாக எதோ பேசியிருக்கிறான் பொற்செல்வன்.

இறைவா… எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும். வாழ வந்த பெண்ணை துரத்திவிடும் பாவத்தை இக்குடும்பம் சுமக்கக்கூடாது. என்று மனமாற வேண்டிக்கொண்டு மகன்கள் பேசுவதை கவனிக்க ஆயத்தமாக, கதவை சாற்றினான் தேவராஜ்.

Advertisement

செந்தமிழ்செல்வியின் வீட்டினில் நடந்த விசயத்தை பொற்செல்வனிடம் சொல்லியிருந்தான் ராகுல். திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாளா? என்ற நினைவிலேயே உழன்றுகொண்டிருந்த பொற்செல்வன் “அண்ணா நான் அப்புறம் பேசுறேன்” என்றான்.

Advertisement

“எனக்கு இப்போவே பேசனும், வெளில போனேன்னா வர இரண்டு நாள் ஆகும்” என்றான் தேவராஜ்.

அண்ணனின் விசயமும் கேட்டறிந்தாக வேண்டிய சூழல் இருக்கவே, செந்தமிழ்செல்வியின் நினைவை முயன்று ஒதுக்கி வைத்து, “ஹம்… சொல்லுங்க” என்றான்.

“உனக்கென்ன டென்ஷன்?”

Advertisement

“எனக்கு பல டென்ஷன், அதை விடுங்க, நீங்க சொல்லுங்க. எதுக்காக இந்த தொழிலுக்கு போனிங்க? எந்த வயசுல ஆரம்பிச்சிங்க, அந்த மார்ட்டின்லூர்தோட பவர் என்ன? அவனால உங்களை சுத்தியிருக்க பிரச்சனைகள் என்னென்ன?”

“ஸ்கூல் டைம்ல தியேட்டருக்கு போய் படம் பார்க்குறதுல அவ்வளோ ஆசை. செலவுக்கு அப்பா பணம் தரமாட்டார், தாத்தா கொடுக்க நினைச்சாலும் அப்பா விடமாட்டார். அது கரெக்ட்தான், ஆனா அந்த வயசுல எனக்கு அது புரியல.

வீட்டுல கட்டு கட்டா பணமிருந்தும் எனக்கு தர மாட்டேங்குறாங்களேன்ற கோபம். நீங்க தரலைனா என்ன? நாமளே சம்பாதிப்போம்னு எனக்குள்ள சவால் விட்டுக்கிட்டேன்.

அடுத்த நாள் தோப்புக்கு வேலைக்கு போனேன், விசயம் அப்பாக்கு போய்டுச்சு. தோப்புக்கு வந்து ஸ்கூல் போகலையானு கேட்டார், போகமாட்டேன், பணம் சம்பாதிக்கப்போறேனு சொன்னேன்.

என்கிட்ட சரினு சொல்லிட்டார், திட்டாம விட்டுட்டாரேனு எனக்கு ஆச்சர்யம். உற்சாகத்தோட வேலை செய்ய ஆரம்பிச்சேன், கால் மணி நேரத்துக்கு மேல என்னால காட்டுல நிக்க முடியல, நிழலுக்கு வந்தேன்.

ஒரு வயலுக்கு களையெடுக்கலைனா கூலி தரமாட்டாங்கனு அங்கிருந்தவங்க சொன்னாங்க. கால் மணி நேரம் வேலை செய்ததுக்கு பணம் வேணும், முதலாளி யாருனு சொல்லுங்க, நானே கேட்டுக்கிறேனு சொன்னேன். இது உங்க தோப்புதான் தம்பினு அங்க வேலை செய்தவர் சொன்ன பின்னாடிதான், வேலையோட கஷ்டம் தெரியட்டும்னுதான் அப்பா விட்டுட்டுப் போயிருக்கார்னு புரிஞ்சது.

வேற இடத்துல வேலை கேட்டா, அழகேசனோட பேரன்தான? புருஷோத்தமன் மகனுக்கு நாங்க வேலை கொடுக்குறதா? உங்க குடும்பத்தாலதான் நாங்க நல்லா பொழைக்கிறோம், அப்படியிப்படினு நம்ம குடும்ப பெருமையை பேசுவாங்க. எனக்கு வெறுப்பாகிடுச்சு.

நம்ம ஊருக்குள்ளயே வேலைக்கு போனாத்தான பிரச்சனை? ப்ரண்ட்ஸ்கிட்ட கேட்டு வேற எங்கையாவது ட்ரை பண்ணுவோம்னு ஸ்கூலுக்கு கிளம்பினேன்.

ஆனா ஸ்கூல் போனதுக்கப்புறம் ஃப்ரண்ட்ஸ்கிட்ட வேலை கேட்க தயக்கம். கேவலமா நினைப்பானுங்களோனு யோசிச்சிட்டு விட்டுட்டேன். என்னால படிப்பு, விளையாட்டுனு எதுலயும் கான்ஸன்ட்ரேட் பண்ண முடியல. எல்லா மிஸ்கிட்டயும் திட்டு வாங்கினேன். இப்படியே ஒரு மாசம் போனது.

இந்த மன்ந்த் எக்ஸாம் ஒழுங்கா எழுதலைனா பேரண்ட்ஸ்க்கு கால் பண்ணுவேனு சொன்னாங்க. சரி நம்மளால இப்போதைக்கு பணம் சம்பாதிக்க முடியாது போலனு நினைச்சு சோர்வாகிட்டேன்.

ஏண்டா இப்படி இருக்க? நீ இப்படி இருக்க ஆளில்லையேனு என் ஃப்ரண்ட் கேட்டான். நம்ம பேமலி பத்தி தெரிஞ்சவன். உங்கப்பா உனக்கு பாக்கட்மணி எவ்வளோ தருவார்னு கேட்டேன், ஒரு ரூபாய் கூட தரமாட்டார்னு சொன்னான், அப்புறம் எப்படி கேண்டீன்ல வாங்கி சாப்பிடற? அதுக்கு ஏது பணம்னு கேட்டேன்.

தப்பு பண்ணித்தான் சம்பாதிக்கிறேனு சொன்னான். என்ன தப்பு? திருடுவியானு கேட்டேன், திருடறதுக்கு வீட்டுல பணம் வைக்கனும்ல? எங்கம்மாப்பா எங்க பணம் வைக்கிறாங்கனு கண்டே பிடிக்க முடியாது. பணம் சம்பாதிக்க வேற வழி இருக்கு. ஆனா அதெல்லாம் உன்கிட்ட சொல்லமாட்டேன்னு சொன்னான்.

ஏன்னு கேட்டேன், யாராயாவது வேலை வேணும்னு கேட்டா என்கிட்டதான் கூட்டிட்டு வரனும், எப்படி சம்பாதிக்கிறேனு வெளில சொன்னா கை, காலை உடைச்சிடுவேனு என் முதலாளி சொல்லியிருக்காங்க.

அது மாதிரி இரண்டு பேர் கையை என் கண் முன்னாடியே உடைச்சும் விட்டுருக்காங்க. எனக்கு என் கை கால் முக்கியம். உனக்கு சாம்பாதிக்கனும்னா அவங்ககிட்ட கூட்டிட்டு போறேன், எதுவானாலும் அவங்ககிட்ட கேட்டுக்கோ, நான் ஏதும் சொல்லமாட்டேனு சொன்னான்.

கூட்டிட்டு போக சொன்னேன். அவங்களை மீட் பண்ணினேன், நிறைய கேள்வி கேட்டாங்க, அவங்க கண்டிஷனை சொன்னாங்க. நான் சம்மதிச்சேன். இந்த பொருளை ஒருத்தர்கிட்ட கொடுக்கனும். கூட என் ஆளுங்க கண்காணிப்பாங்கனு சொல்லி சின்ன பாக்ஸ் கொடுத்தாங்க.

ஈஸியா பண்ணிட்டேன். நான் எதிர்பார்த்ததை விட அமௌண்ட் அதிகமா கொடுத்தாங்க. எப்போ வேலை வரும்னு காத்திட்டிருப்பேன், போலீசை ஏமாத்தி செய்யிறதை கெத்தா நினைச்சேன். ஒரு டைம் எப்படியோ விசயம் லீக் ஆகிடுச்சு போல, சேர வேண்டிய இடத்துல பொருளை சேர்க்க முடியலைனாலும், நானும் போலீஸ்கிட்ட மாட்டிக்காம பொருளையும் பத்திரமா கொண்டு வந்துட்டேன்.

ரொம்ப பாராட்டி அதுக்கும் பணம் கொடுத்தாங்க. உனக்கு இருக்க டேலண்ட்டுக்கு இனி சிடி கொடுக்க வேண்டாம். தங்கம் கடத்தலாம், இப்போ கொடுக்குற பணத்தை விட பல மடங்கு அதிகமா தருவோம்னு சொன்னாங்க.

மாட்டிக்கிட்டா என்ன ஆகும்னும் சொன்னாங்க. பயம் வந்ததுதான், ஆனா சுலபமா பணம் சம்பாதிக்க கத்துக்கிட்டேன்ல? விட மனசு வரல, நம்ம அப்பா, தாத்தாக்கு இல்லாத செல்வாக்கா? மாட்டிக்கிட்டா அவங்க காப்பாத்திடுவாங்கனு துணிஞ்சு செய்தேன்.

காலேஜ் ஜாயின் பண்ணினதுக்கு அப்புறம் லிங்க் பெருசாகிடுச்சு. நாலஞ்சு வருசம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது. தேவேந்திரன் கல்யாணத்தப்போ டெல்லி போக கேட்டாங்க, முடியாதுனு சொன்னேன், அப்படிலாம் சொல்ல முடியாது. போய்த்தான் ஆகனும்னு கட்டாயப்படுத்தினாங்க. அப்போ நடந்த ஆர்கியுமண்ட்லதான் திரும்பி போக முடியாத தூரத்துக்கு வந்துட்டேனு புரிஞ்சது.

தேவேந்திரன் கல்யாணம் முடிஞ்சி அரைமணி நேரத்துலயே வீட்டுல சொல்லாம கிளம்பிட்டேன், அதுக்கப்புறம் தாலி பிரிச்சு கோர்க்குறது, வளைகாப்புனு எந்த விஷேசத்துலயும் நான் கலந்துக்கல.

ஆரம்பத்துல போகக்கூடாதுனு அதட்டின அம்மா, கடைசியா கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க. மனசு உறுத்தும். ஆனா என்னால போகாம இருக்க முடியல. நான் போன பாதையோட வீரியம் புரிஞ்சுச்சு. அதனாலதான் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். கேட்டாங்களா?” என்று ஆற்றாமையோடு முடித்தான் தேவராஜ்.

“இதனாலதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றிங்கனு தெரிஞ்சிருந்தா நீங்க என்ன வேண்டாம்னு சொல்றது? அம்மாப்பாவே பண்ணி வச்சிருக்கமாட்டாங்க” என்றான் பொற்செல்வன்.

தேவராஜ் தலை தாழ்ந்திட, “அப்பாம்மா கண்டிக்கிறது எல்லார் வீட்டுலயும் நடக்குறதுதான், அதுக்கு இவ்வளோ பெரிய பாதாளத்துல விழுந்துட்டு, வீட்டுல இருக்கவங்க மேல கோபத்தை காட்டிக்கிட்டு இருந்திருக்கிங்க. இப்போ வரை இருக்கிங்க” என்றான் குறையாத கோபத்தோடு.

தேவராஜ் முகம் வேதனையை காண்பிக்க, பொற்செல்வனுக்கு பாவமாகவெல்லாம் இல்லை. “கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அதுல ஸ்ட்ராங்கா இருந்திருக்கனும், அப்படி இல்லாம கல்யாணமும் செய்துக்கிட்டு அண்ணியோட சந்தோசத்தை பத்தி யோசிக்கல. டிவோர்ஸ் பண்ண நினைக்கிறவருக்கு கல்யாணம் எதுக்கு? அண்ணி வாயாலயே டிவோர்ஸ் கேட்க சொல்லி ப்ளாக்மெயில் பண்ணியிருக்கிங்க” என்றான்.

“எல்லாம் என் தப்புதான், விடு”

“அப்படிலாம் விட முடியாது. என்ன சொல்லி ப்ளாக்மெயில் பண்ணுனிங்கனு எனக்கு தெரிஞ்சாகனும். இந்த வீட்டுல இரண்டு வருசம் பக்கமா நிம்மதியில்லாம வாழ்ந்துட்டிருக்காங்க. அவங்களை அப்படியேலாம் அனுப்பமாட்டேன். இன்னொரு கல்யாணம் செய்து வைப்பேன்” என்றதும், முதலில் அதிர்ந்தாலும் சில நொடிகளிலேயே நிறைவாய் பார்த்தான் பொற்செல்வனை.

“பொண்டாட்டிக்கு கல்யாணம் செய்து வைப்பேனு சொல்றேன், கோபப்படாம எதோ சாதனை செய்து முடிச்ச மாதிரி பெருமையா பார்க்குறிங்க, இதுக்கான அர்த்தம் தெரியாத அளவுக்கு நான் முட்டாளில்ல. உங்களை விட்டு பிரிஞ்ச பின்னாடி அண்ணி வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிறிங்க” என்றான் சரியாக கணித்து.

தேவராஜ் அமைதியாக இருக்க, “மார்ட்டின்லூர்துக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? என்ன செய்தா உங்களை விடுவான்?” என்றான்.

“தொழில் செய்ய வேண்டாம்னு நான் நினைச்சதுலயிருந்து ஒரு இன்ஃபர்மேஷனும் வரல. எனக்கே ஆச்சர்யமா இருந்தது. வழக்கமா எனக்கு ஒருத்தன்கிட்டயிருந்து இன்ஃபர்மேஷன் வரும். ஒரு வருசம் கழிச்சு இன்ஃபர்மேஷன் வந்தது. அவன்கிட்ட இனி தொழில் செய்யமாட்டேனு சொன்னேன், ஒரு வருசம் கழிச்சு ஆரம்பிச்சிருக்காங்க. பண்ணலைனு சொன்னா  கொன்னுடுவாங்கனு சொன்னான்.

உங்களால ஆனதை பார்த்துக்கோங்கனு சொல்லிட்டேன். யார் அந்த தேவராஜ்னு மார்ட்டின் கேட்குறார்னு எனக்கு இன்ஃபர்மேஷன் கொடுக்கிறவன் சொன்னான். அவன் உண்மையை சொன்னானா? இல்ல என்னை தொடர்ந்து தொழில் பண்ண வைக்க பயமுறுத்த சொன்னானானு எனக்கு சந்தேகம். என்னால யாரையும் சந்திக்க முடியாது, அதனால வரும் ப்ரச்சனையை நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்”

“ஓ… அதனாலதான் இப்போ எங்கேயும் வெளில போறதில்லையா? ஆக ஒளிஞ்சு வாழ்ந்திட்டிருக்கிங்க”

“ஆமாம், ஒத்துக்கறேன், இப்போதைக்கு ஒளிஞ்சுதான் வாழ்ந்துட்டிருக்கேன். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். இதுலயிருந்து விடுபடுவேனா இல்லையானு இரண்டு மூணு மாசத்துக்குள்ள தெரிஞ்சிடும்.

தயவு செய்து என் விசயத்துல இனி தலையிடாத செல்வா. அவனுங்க போக்கெல்லாம் உனக்கு தெரியாது. என் பிரச்சனை என்னோடவே போகட்டும். அவங்க தொழில்ல யாராவது குறுக்க வந்தா நேச்சுரல் டெத் போலவே முடிச்சிடுவானுங்க” என்றான் கவலையோடு.

“அப்படிலாம் விட முடியாது. நீங்க இன்னும் முழுசா எதையும் சொல்லல”

“இன்னும் என்ன சொல்றது?”

“இந்த தொழில்லயிருந்து விலக எதோ ப்ளான் போட்டுருக்கிங்கனு புரியுது. என்ன ப்ளான் போட்டுருக்கிங்க? யாரை நம்பி இதை செய்றிங்க? அவன் உங்களுக்கு நம்பிக்கையா இருப்பானு என்ன நிச்சயம்? இருக்கிற பிரச்சனை பத்தாம வேற எதாவது வந்திடப்போகுது ண்ணா”

“வந்தா வரட்டும், செய்ததுக்கு அனுபவிச்சுத்தானே ஆகனும்?” என்றான் அசால்ட்டாக.

“நீங்க செய்ததுக்கு அப்பாம்மா, அண்ணி எல்லாரும் அனுபவிக்கனுமா?” என கடிந்தபோதும், “ப்ளீஸ்ண்ணா, உங்களை சுத்தியிருக்க ஆபத்தை தயவு செய்து சொல்லுங்க, முடிஞ்சவரைக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்போம், கண்டிப்பா எதாவது வழி கிடைக்கும்” என்றான்.

“சொல்லியே ஆகனுமா?” என்றான் சலிப்பாக.

பொற்செல்வன் முறைக்க, “டேய்… நான் உனக்கு அண்ணன்டா, என்னையே முறைக்கிறியா?” என்றான் இலகுவாக.

“ம்ப்ச்… டைவர்ட் பண்றதா நினைப்பா? என்னை நோட் பண்றாங்க, என்கிட்ட பேசின ஒரே காரணத்துக்காக செல்வியை பிடிக்க ட்ரை பண்றாங்க, ஆனா என்ன நடக்குதுனு நான் தெரிஞ்சிக்க கூடாதா? முன்ன சொன்னதேதான்… நீங்களா சொன்னா எனக்கு வேலை ஈஸியா முடியும், இல்ல நானே கண்டுபிடிப்பேன், நான் இதை விடறதா இல்ல” என்றான் உறுதியாக.

சொல்லாமல் விடமாட்டான் என்ற கோபத்தை விட, செல்வாவாக ஆராய்ந்து வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ன செய்வதென, “ஒவ்வொரு ஸ்டேட்டுலயும் ஒரு ஹெட் இருப்பான், அசைக்க முடியாத நம்பிக்கை வந்த பின்னாடிதான் ஹெட்க்கு அறிமுகமாக முடியும்.

மார்ட்டினோட அப்பாதான் தொழில் பார்த்துட்டிருந்தார். ஒன்றரை வருசம் முன்னாடி மார்ட்டினோட அப்பா இறந்துட்டார். ஒரு வருசம் பக்கம் தொழிலே நடக்கல. அதுக்கப்புறம்தான் மார்ட்டின் வந்தான்.

அவனுக்கு என்னை தெரியாது. நான் யாருனு மார்ட்டினுக்கு தெரியாம இருக்க, வழக்கமா எனக்கு இன்ஃபர்மேஷன் கொடுக்குறவனுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தேன். என்னைத் தெரிஞ்ச சில பேருக்கும் அமெளண்ட் கொடுத்திருக்கேன்.

ஆனாலும் மார்ட்டினை அவ்வளோ ஈஸியா ஏமாத்த முடியாது, ஜாக்கிரதையா இருனு சொன்னான். உன்னோட முகம் மார்ட்டினுக்கு தெரியுமானு கேட்டேன். தெரியாது, நாலு மாசம் கழிச்சி மீட் பண்ண டேட் கொடுத்திருக்கிறதா சொன்னான்.

உன்னையே அவனுக்கு தெரியாதுனா, கண்டிப்பா என்னை தெரிஞ்சிருக்கவும் வாய்ப்பில்ல. ஆக… என்னை பார்க்க மார்ட்டின் கேட்டதா நீ சொன்னது பொய். ஆமாம்தானனு கேட்டேன்.

தடுமாறினான். எதுக்காக பொய் சொன்னனு கேட்டேன். சாஃப்ட்டா கேட்டு சொல்லாதவன், முகரையை வீங்க வச்சதுக்கப்புறம் சொன்னான். கடந்த மூணு வருசமா நான் செய்திட்டிருந்த வேலை எல்லாமும் அவன் செய்த மாதிரி சொல்லியிருக்கான்.

நான் அதை ப்ளஸ்ஸா எடுத்துக்க முடிவெடுத்தேன். இந்த தொழிலை விட்டு வெளில வரதா ஐடியா இருக்கானு கேட்டேன். இல்லைனு சொன்னான். அப்போ நான் ஒன்னு சொல்றேன். உனக்கு ஓகேனா பண்ணுனு சொல்லி ஒரு விசயம் சொன்னேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!